‘செம்மையானவனுடைய கூடாரம் செழிக்கும்’
அர்மகெதோன் யுத்தம் எனும் புயல் வீசி, சாத்தானின் பொல்லாத உலகிற்கு முடிவு கட்டப்படும்போது “துன்மார்க்கனுடைய வீடு அழியும்.” அப்படியானால், ‘செம்மையானவனுடைய கூடாரம்’ என்னவாகும்? கடவுள் உண்டுபண்ணப் போகிற புதிய உலகில் அது “செழிக்கும்.”—நீதிமொழிகள் 14:11.
‘துன்மார்க்கர் பூமியிலிருந்து அறுப்புண்டு, துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாகும்’ வரை அவர்களோடு சேர்ந்துதான் உத்தமர்களும் வாழ்ந்தாக வேண்டும். (நீதிமொழிகள் 2:21, 22) இப்படிப்பட்ட சூழலில் செம்மையானவர்கள் செழிப்பாக வாழ முடியுமா? பைபிளில் நீதிமொழிகள் 14-ம் அதிகாரத்தின் 1-11 வசனங்கள் காட்டுகிறபடி, நம்முடைய சொல்லும் செயலும் ஞானத்தால் வழிநடத்தப்பட்டால், இப்போதும்கூட ஓரளவு செழிப்பாகவும் ஸ்திரமாகவும் வாழ முடியும்.
ஞானம் வீட்டைக் கட்டுகையில்
குடும்ப நலனில் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி பூர்வ இஸ்ரவேலின் ராஜா சாலொமோன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “புத்தியுள்ள [“ஞானமுள்ள,” NW] ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத [“ஞானமில்லாத,” NW] ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள்.” (நீதிமொழிகள் 14:1) ஞானமுள்ள ஸ்திரீ தன் வீட்டை எப்படி கட்டுகிறாள்? எப்படியெனில், கடவுள் ஏற்படுத்தியிருக்கும் தலைமை ஸ்தானத்தை அவள் மதிக்கிறாள். (1 கொரிந்தியர் 11:3) சாத்தானிய உலகில் ஊடுருவியுள்ள சுதந்திர மனப்பான்மை தன் மீது செல்வாக்கு செலுத்தாதபடி பார்த்துக் கொள்கிறாள். (எபேசியர் 2:2) தன் கணவனுக்கு அடங்கி நடக்கிறாள்; அவரைப் பற்றி நல்ல விதமாக பிறரிடம் பேசுகிறாள்; அதன் மூலம் கணவன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மரியாதையைக் கூட்டுகிறாள். தன் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதிலும் ஆன்மீக போதனை அளிப்பதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறாள். குடும்ப நலன் கருதி கடுமையாக உழைக்கிறாள்; வீட்டிற்குத் தேவையான சௌகரியங்களைச் செய்து அதை இனிய இல்லமாக மாற்றுகிறாள். வீட்டை சாமர்த்தியமாக பராமரிக்கிறாள், சிக்கனத்தையும் கடைப்பிடிக்கிறாள். உண்மையிலேயே ஞானமுள்ள ஸ்திரீ தன் வீட்டின் செழுமையையும் ஸ்திரத்தன்மையையும் காத்திட உதவுகிறாள்.
ஞானமற்ற ஸ்திரீயோ கடவுள் ஏற்படுத்திய தலைமை ஸ்தானத்திற்கு மரியாதை காட்ட மாட்டாள். தன் கணவனைப் பற்றி குறைகூறவும் தயங்க மாட்டாள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிக்கனமாக செலவழிக்க மாட்டாள், வீணாக செலவு செய்துவிடுவாள். நேரத்தையும் வீணடிப்பதால் வீட்டை நேர்த்தியாக வைத்திருக்க மாட்டாள். இதனால் பிள்ளைகள் உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவதிப்படுவர். ஆம், ஞானமற்ற ஸ்திரீ தன்னுடைய வீட்டை இடித்துப் போடுகிறாள்.
அப்படியானால், ஒருவர் ஞானமுள்ளவரா அல்லது ஞானமற்றவரா என்பதை எது தீர்மானிக்கிறது? நீதிமொழிகள் 14:2 சொல்கிறபடி: “நிதானமாய் [“செம்மையாய்,” NW] நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம் பண்ணுகிறான்.” செம்மையானவர்கள் உண்மைக் கடவுளான யெகோவாவுக்கு பயப்படுகிறார்கள்; இவ்வாறு ‘யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.’ (சங்கீதம் 111:10) ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்வது’ தன்னுடைய கடமை என்பதை உண்மையிலேயே ஞானமுள்ள நபர் அறிந்திருக்கிறார். (பிரசங்கி 12:13) மறுபட்சத்தில், ஞானமற்ற நபரின் போக்கு கடவுளுடைய செம்மையான தராதரங்களுக்கு இசைய இருக்காது. அவருடைய வழிகள் தாறுமாறானவையாக இருக்கும். அப்படிப்பட்டவர் “தேவன் இல்லை” என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டு அவரை மறுதலிக்கிறார்.—சங்கீதம் 14:1.
உதடுகளில் ஞானம் இருக்கையில்
யெகோவாவுக்குப் பயப்படுகிறவருடைய பேச்சும் அவரை மறுதலிப்பவருடைய பேச்சும் எப்படி இருக்கும்? “மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.” (நீதிமொழிகள் 14:3) பரத்திலிருந்து வருகிற ஞானம் இல்லாததால் மூடனுடைய பேச்சு சமாதானத்தை ஏற்படுத்துவதாகவோ நியாயமானதாகவோ இருக்காது. உலகப்பிரகாரமான, மிருகத்தனமான, பேய்த்தனமான ஞானமே அவனை வழிநடத்துகிறது. சச்சரவு ஏற்படுத்தும் வீம்புமிக்க வார்த்தைகளே அவன் வாயிலிருந்து புறப்பட்டு வரும். அப்படிப்பட்ட அகந்தையான வார்த்தைகள் அவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் பிரச்சினைகளையே உண்டுபண்ணும்.—யாக்கோபு 3:13-18.
ஞானியின் உதடுகள் அவருக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தருவதோடு அவரை பாதுகாத்திடவும் செய்கிறது. எப்படி? வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “பட்டயக்குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.” (நீதிமொழிகள் 12:18) ஞானி வெடுக் வெடுக்கென்றோ புண்படுத்தும் விதத்திலோ பேச மாட்டார். அவருடைய இருதயம் தியானித்து பதில் சொல்லும். (நீதிமொழிகள் 15:28) நன்கு யோசித்துப் பேசும் அவருடைய வார்த்தைகள் அருமருந்தாகவும் செயல்படுகின்றன; மனம் ஒடிந்து கிடப்போருக்கு அவை உற்சாகத்தையும் துவண்டு கிடப்போருக்கு புத்துணர்வையும் அளிக்கின்றன. அவருடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு எரிச்சல் மூட்டுவதற்கு பதிலாக சமாதானத்தையும் நிம்மதியையுமே தரும்.
மனித முயற்சிகளை ஞானம் வழிநடத்துகையில்
சாலொமோன் அடுத்ததாக சுவாரஸ்யமான ஒரு நீதிமொழியை சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட வேலையிலுள்ள அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதன் அவசியத்தை அதில் உணர்த்துகிறார். அவர் சொல்கிறார்: “எருதுகள் இல்லையேல் தொழுவம் சுத்தமாக இருக்கும்; ஆனால் காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த விளைச்சல் உண்டாகும்.”—நீதிமொழிகள் 14:4, NW.
இந்த நீதிமொழியின் அர்த்தத்தை ஒரு புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “தொழுவம் காலியாக இருப்பதென்பது அங்கு எருதுகள் இல்லாதிருப்பதை குறிக்கிறது. எருதுகள் இல்லாததால் அவற்றை பராமரிக்கும் தொல்லையும் இருக்காது, தொழுவத்தை சுத்தம் செய்யும் தொல்லையும் இருக்காது. அதோடு செலவுகள்கூட கம்மியாகும். ஆனால், இவையெல்லாம் உண்மையிலேயே அனுகூலங்கள் கிடையாது. ஏனெனில் 4-ம் வசனத்தின் பிற்பகுதியின்படி, எருதுகளை பயன்படுத்தாமல் விளைச்சல் மிகுதியாக இராது என்பதே அதில் உணர்த்தப்படுகிறது.” எனவே விவசாயி ஞானமாக தீர்மானிக்க வேண்டும்.
இந்த நீதிமொழியின் நியமம் நமக்கும் பல சந்தர்ப்பங்களில் பொருந்தும். வேறு வேலை தேடும்போது, வீடு மாற்ற நினைக்கும்போது, கார் வாங்க திட்டமிடும்போது, செல்லப் பிராணியை வளர்க்க தீர்மானிக்கும்போது என பல சந்தர்ப்பங்களில் அது பொருந்தும். ஞானமுள்ள மனிதன் ஒரு காரியத்தின் சாதகங்களையும் பாதகங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அதற்காக தான் செய்கிற முயற்சியும் செலவும் உண்மையிலேயே பிரயோஜனமானதா என்பதை மதிப்பிடுவார்.
சாட்சிக்காரர் ஞானமாக இருக்கையில்
சாலொமோன் தொடர்ந்து சொல்கையில்: “மெய்ச் சாட்சிக்காரன் பொய் சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்” என்றார். (நீதிமொழிகள் 14:5) ஒருவன் பொய்ச் சாட்சி சொல்கையில் பெருத்த சேதம் ஏற்படலாம். ஒன்றுக்கும் உதவாத இரண்டு மனிதர்கள் யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு எதிராக பொய்ச் சாட்சி சொன்னதால் அவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான். (1 இராஜாக்கள் 21:7-13) ஏன், பொய்ச் சாட்சிகள் சொல்லப்பட்டதால் இயேசுவும்கூட கொலை செய்யப்படவில்லையா? (மத்தேயு 26:59-61) ஸ்தேவானுக்கு எதிராகவும்கூட பொய்ச் சாட்சிகள் சொல்லப்பட்டன. விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட இயேசுவின் முதல் சீஷர் அவரே.—அப்போஸ்தலர் 6:10, 11.
பொய் பேசும் மனிதன் கொஞ்ச காலம் வேண்டுமாயின் மற்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கலாம். ஆனால் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். ‘அபத்தம் பேசும் பொய்ச் சாட்சியை’ யெகோவா வெறுக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 6:16-19) அப்படிப்பட்ட மனிதன் கொலைபாதகர், விபசாரக்காரர், மற்றும் விக்கிரகாராதனைக்காரர் ஆகியோரோடு இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவான்.—வெளிப்படுத்துதல் 21:8.
மெய் சாட்சிக்காரர் பொய் ஆணையிட மாட்டார். அவருடைய சாட்சி பொய்யால் கறைபடாமல் இருக்கும். இருப்பினும், யெகோவாவின் மக்களுக்கு ஏதாவதொரு விதத்தில் தீங்கு செய்ய நினைப்பவர்களிடம் அவர் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்தாது. முற்பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் யெகோவாவை வணங்காத சிலரிடம் உண்மைகளை மறைத்தனர். (ஆதியாகமம் 12:10-19; 20:1-18; 26:1-10) எரிகோவை சேர்ந்த ராகாப் தவறான தகவலளித்து ராஜா அனுப்பின ஆட்களை வேறு திசையில் அனுப்பினாள். (யோசுவா 2:1-7) இயேசு கிறிஸ்துவும்கூட தேவையற்ற பிரச்சினை வருமென்று உணர்ந்தபோது, சில விஷயங்களை தெரிவிக்காமலே இருந்துவிட்டார். (யோவான் 7:1-10) “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்” என அவர் சொன்னார். ஏன் கொடுக்கக் கூடாது? ஏனெனில் அப்படிக் கொடுத்தால் ‘தங்கள் கால்களால் அவற்றை மிதித்து, திரும்பிக் கொண்டு உங்களைப் பீறிப்போடும்.’—மத்தேயு 7:6.
‘அறிவு எளிதில் வந்தால்’
ஞானம் எல்லோரிடத்திலும் இருக்கும் ஓர் உடைமையா? நீதிமொழிகள் 14:6 இவ்வாறு சொல்கிறது: “பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ [அதாவது, புரிந்துகொள்ளுதல் உள்ளவனுக்கோ] அறிவு லேசாய் [அதாவது, எளிதில்] வரும்.” (நீதிமொழிகள் 14:6) பரியாசக்காரன் அல்லது கேலி செய்பவன் ஞானத்தை தேடலாம், ஆனால் மெய் ஞானம் அவனுக்கு புலப்படாது. பரியாசக்காரன் அகந்தையுடன் கடவுளுடைய காரியங்களை கேலி செய்கிறான். அதனால் ஞானத்தை அடைவதற்கு முக்கியமாக தேவைப்படும் ஒன்றை, அதாவது உண்மையான கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற தவறிவிடுகிறான். அவனுடைய பெருமையும் அகந்தையும் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதிலிருந்தும் ஞானத்தை அடைவதிலிருந்தும் அவனை தடை செய்கின்றன. (நீதிமொழிகள் 11:2) அப்படியானால் அவன் ஏன் ஞானத்தைத் தேடுகிறான்? அதற்குரிய பதிலை நீதிமொழி தரவில்லை. ஒருவேளை மற்றவர்கள் அவனை ஞானவான் என்று நினைப்பதற்காக அவன் ஞானத்தைத் தேடலாம்.
புரிந்துகொள்ளுதல் உள்ளவனுக்கு ‘அறிவு எளிதில் வரும்.’ புரிந்துகொள்ளுதல் என்பது “மனதில் கிரகித்தல், பொருள் உணர்தல்,” “திட்டவட்டமான தகவல்களுக்கும் ஒட்டுமொத்தமான காரியத்திற்கும் உள்ள தொடர்பை கூர்ந்து அறியும் திறன்” என்றெல்லாம் விளக்கப்படுகிறது. ஒரு காரியத்தின் பல்வேறு பரிமாணங்களை இணைத்து, அதை வெறுமனே தனித்தனி கோணங்களில் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக பார்க்கும் திறனையே இது குறிக்கிறது. இந்தத் திறனை உடையவர்களிடம் அறிவு எளிதில் வந்துவிடும் என இந்த நீதிமொழி சொல்கிறது.
இது சம்பந்தமாக, பைபிள் சத்தியத்தை நீங்கள் அறிந்துகொண்ட விதத்தையே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, கடவுளைப் பற்றியும் அவருடைய வாக்குறுதிகளைப் பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியும் அடிப்படை சத்தியங்களையே முதலில் படித்திருந்தீர்கள். ஆரம்பத்தில், அவை துண்டு துண்டான தகவல்களாக தோன்றியிருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து படிக்கையில், அந்தத் தகவல் துண்டுகள் ஒன்றோடொன்று இணைந்து பொருள் தர ஆரம்பித்திருக்கும். மனிதர்களுக்கும் பூமிக்குமான யெகோவாவின் ஒட்டுமொத்த நோக்கத்தோடு இந்தப் பல்வேறு தகவல்கள் எப்படி சம்பந்தப்பட்டுள்ளன என்பதை உங்களால் தெளிவாக பார்க்க முடிந்திருக்கும். பைபிளிலுள்ள சத்தியம் நியாயமானதாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் இருந்திருக்கும். புது தகவல்களைப் படிப்பதும் ஞாபகத்தில் வைப்பதும் எளிதாகி விட்டிருக்கும். ஏனெனில் ஒட்டுமொத்த பொருளோடு அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதை உங்களால் பார்க்க முடிந்திருக்கும்.
யாரிடம் அறிவைப் பெற முடியாது என்பதை ஞானமுள்ள ராஜா எச்சரிக்கிறார். “மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.” (நீதிமொழிகள் 14:7) மெய்யான அறிவு மூடனுக்கு இருக்காது. அவனுடைய உதடுகள் அறிவை உதிர்க்காது. அப்படிப்பட்ட மனிதனிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதே நமக்கு கொடுக்கப்படும் புத்திமதி. அவனிடமிருந்து ஒதுங்கியிருப்பது ஞானமான செயலாகும். எவரேனும் ‘மூடருக்குத் தோழனாகையில் நாசமடைவர்.’—நீதிமொழிகள் 13:20, பொது மொழிபெயர்ப்பு.
சாலொமோன் தொடர்கையில், “தன் வழியைச் சிந்தித்துக் கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்” என்கிறார். (நீதிமொழிகள் 14:8) ஞானமுள்ளவன் தன் செயல்களைக் குறித்து சிந்திக்கிறான். தனக்கு முன் உள்ள பல்வேறு தெரிவுகளை ஆராய்கிறான்; அவற்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாமென கவனமாக யோசித்துப் பார்க்கிறான். தன் வழியை ஞானமாக தேர்ந்தெடுக்கிறான். மூடனைப் பற்றியென்ன? தான் செய்வது என்னவென்று தனக்குத் தெரியும் என்பதாகவும் தான் செய்வதே சரி என்பதாகவும் நம்பி, முட்டாள்தனமான வழியையே தேர்ந்தெடுக்கிறான். அவனுடைய முட்டாள்தனமே அவனை வஞ்சிக்கிறது.
உறவுகளை ஞானம் வழிநடத்துகையில்
ஒருவர் ஞானத்தால் வழிநடத்தப்படுகையில் பிறருடன் சமாதான உறவுகளை அனுபவிப்பர். இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு குறிப்பிட்டார்: “மூடர்கள் குற்றவுணர்வைக் குறித்து கேலி செய்கிறார்கள்; நீதிமான்களோ ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.” (நீதிமொழிகள் 14:9, NW) குற்றவுணர்வு, அதாவது குற்றம் செய்துவிட்டோமே என்று வருந்துவது மூடனுக்கு கேலிக்குரிய விஷயமாகத் தோன்றுகிறது. அவன் தன்னுடைய குடும்பத்தாரிடத்திலும் மற்றவர்களிடத்திலுமுள்ள தன் உறவைச் சேதப்படுத்திக் கொள்வான். ஏனெனில் அவன் ‘அவ்வளவு பெருமையாக இருப்பதால் தன் தவறுக்கு பிராயச்சித்தம் செய்து’ சமாதானத்தை நாட முயல மாட்டான். (த நியு இங்லிஷ் பைபிள்) நீதிமானோ மற்றவர்களுடைய குற்றங்குறைகளைப் பொறுத்துக்கொள்வார். தான் தவறு செய்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் பிராயச்சித்தம் செய்யவும் தயங்க மாட்டார். அவர் சமாதானத்தை நாடுவதால், மற்றவர்களோடு மகிழ்ச்சியான மற்றும் நிலையான உறவுகளை அனுபவிப்பார்.—எபிரெயர் 12:14.
சாலொமோன் அடுத்ததாக மனித உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு வரம்பைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் சொல்வதாவது: “இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.” (நீதிமொழிகள் 14:10) எல்லா சமயங்களிலும் நம்முடைய உள்ளார்ந்த உணர்ச்சிகளை—துக்கமானாலும் சந்தோஷமானாலும்—துல்லியமாக மற்றவர்களிடம் தெரிவிக்க முடியுமா? ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவரால் எல்லா சமயங்களிலும் முழுமையாக புரிந்துகொள்ளத்தான் முடியுமா? இரண்டுமே முடியாத காரியங்கள்.
உதாரணத்திற்கு, தற்கொலை செய்துகொள்ளும் உணர்வு ஒருவருக்கு இருக்கையில், அதனை தன் குடும்ப அங்கத்தினரிடமோ நண்பர்களிடமோ பெரும்பாலும் அவரால் தெளிவாக சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு நபருக்கு இதுபோன்ற உணர்வுகள் இருப்பதற்கான அடையாளங்களை எப்போதும் மற்றவர்களால் கண்டுகொள்ள முடியாது. ஆதலால், இந்த அடையாளங்களை கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டோமே என்ற குற்றவுணர்வு நம்மை வாட்ட வேண்டியதில்லை. இன்னொரு காரியத்தையும் இந்த நீதிமொழி போதிக்கிறது. உணர்ச்சி ரீதியான ஆதரவுக்காக அனுதாபமுள்ள ஒரு நண்பனிடம் செல்வது மனதிற்கு இதமளிக்கும் என்றாலும், மனிதர்கள் கொடுக்கக்கூடிய ஆறுதல் வரம்புக்குட்பட்டதே. சில கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதற்கு நாம் யெகோவாவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கலாம்.
“ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்”
“துன்மார்க்கனுடைய வீடு அழியும்” என இஸ்ரவேலின் ராஜா குறிப்பிடுகிறார், ஆனால் “செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.” (நீதிமொழிகள் 14:11) துன்மார்க்கன் தற்போதைய உலகில் ஓஹோவென்று வாழலாம்; ஆடம்பரமான வீட்டில் குடியிருக்கலாம். ஆனால் அவனே இருக்க மாட்டான் என்றால் இவையனைத்தும் அவனுக்கு இருந்து என்ன பயன்? (சங்கீதம் 37:10) மறுபட்சத்தில், செம்மையானவனின் வீடு எளிமையாக இருந்தாலும், “ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்” என்று சங்கீதம் 112:3 சொல்கிறது. அவை என்னென்ன?
நம்முடைய சொல்லும் செயலும் ஞானத்தால் வழிநடத்தப்படுகையில், அதனால் வரும் “ஐசுவரியமும், கனமும்” நம்மிடத்தில் இருக்கும். (நீதிமொழிகள் 8:18) கடவுளிடமும் சக மனிதனிடமும் சமாதான உறவு, உடல் ஆரோக்கியம், சந்தோஷம், வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இவையெல்லாம் அதில் உட்படும். ஆம், ‘செம்மையானவனுடைய கூடாரம்’ இப்போதும்கூட செழித்தோங்கும்.
[பக்கம் 27-ன் படம்]
ஞானமுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்
[பக்கம் 28-ன் படம்]
“ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்”