கோபம் கொள்ளைக் கொள்கிறது
நீங்கள் கோபப்படும்போது, உங்களுடைய இதயம் பாதிக்கப்படுகிறது. இதய நோயாளிகளிடம் தங்களை இன்னுங்கூட கோபமூட்டும் சம்பவங்களை நினைத்துப்பார்க்க சொன்னபோது, அவர்களுடைய இதயத்தின் இரத்தத்தை வெளியேற்றும் திறமை 5 சதவீதம் குறைந்தது என ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஒரு சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடித்தது. இவ்வாறு திறமை குறைவுபடுவது நிரந்தரமானது இல்லை. இருப்பினும் சமாதானத்தை நாடும் மக்களைவிட பகைமையுணர்ச்சியுள்ள மக்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் உண்டு என்பதற்கான அதிகரித்துவரும் அத்தாட்சிகளைப் பார்க்கும்போது, இந்தக் குறைவுபடுதல் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறதென்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
“கோபப்படும்போது அந்த நோயாளியின் இதயத் திறமையில் நாங்கள் கவனித்த ஐந்து சதவீத குறைவு அதிகமில்லையென்றாலும், அது குறிப்பிடத்தக்க ஒன்றாய் இருக்கிறது,” என்று அந்த ஆராய்ச்சிக்குத் தலைமைவகித்த டாக்டர் கேல் இன்ஸன் சொன்னார். “அந்தச் சம்பவங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது, சம்பவம் நடக்கும்போது இருந்ததைவிட பாதிக் கோபத்தைத்தான் அவர்கள் உணர்ந்தனர் என்பதாக நோயாளிகள் கூறினர். அப்படியானால் ஊகித்துப்பார்க்கக்கூடிய வகையில் கோபமூட்டும் சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போது இதயத்தின் ரத்த வெளியேற்றும் திறமை இன்னும் பேரளவில் குறைக்கப்பட்டிருக்கும்.”
கோபம் இதயம் இயங்குவதற்கான திறமையில் ஒரு நேரடி மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று காண்பித்த முதல் ஆராய்ச்சியாகும் இது. கோபம் இதய நோய் ஏற்படுவதற்கான ஒரே காரணமாக இல்லையென்றாலும்—உணவு, உடற்பயிற்சி, மரபியல் போன்றவையும் ஒரு பாகத்தை வகிக்கின்றன—கோபம் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கோபம் மனித சரீரத்திற்குக் கெடுதி விளைவிக்கிறது என மருத்துவர்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கின்றனர். அது இரத்த அழுத்தத்தில் ஏற்றம், தமனி மாற்றங்கள் (arterial changes), சுவாச பிரச்னை, ஈரல் கோளாறுகள், பித்தநீர் சுரப்பில் மாற்றங்கள், கணையத்தில் சிதைவு போன்றவற்றை உருவாக்க முடியும். மேலும் கோபம் ஆஸ்துமா, கண்ணோய்கள், தோல் வியாதிகள், தோல் அரிப்பு, புண்கள், பல் மற்றும் ஜீரண கோளாறு போன்ற நோய்களைத் தீவிரப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே, ‘கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிட்டு,’ ‘மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதிருப்பதற்கான’ பைபிள் அறிவுரைக்குச் செவிசாய்ப்பதில் ஆவிக்குரிய மற்றும் சமூக நன்மைகள் மட்டுமல்லாமல் சரீரப்பிரகாரமான நன்மைகளும் இருக்கின்றன. ஒருவனை ‘நீடிய சாந்தமுள்ளவனாக்குகிற பகுத்துணர்வை’ வளர்த்துக்கொள்வது எவ்வளவு விவேகமான காரியம். உண்மையிலேயே “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்.”—சங்கீதம் 37:8; பிரசங்கி 7:9; நீதிமொழிகள் 14:29, 30.
கூடுதல் விவரங்களுக்கோ அல்லது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கவோ, Watchtower, H-58 Old Khandala Road, Lonavla, 410 401 Mah., என்ற விலாசத்துக்கோ, அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கோ தயவுசெய்து எழுதுங்கள்.