படிப்புக் கட்டுரை 21
‘உலக ஞானத்தை’ நம்பி முட்டாளாகிவிடாதீர்கள்!
“இந்த உலகத்தின் ஞானம் கடவுளுடைய பார்வையில் முட்டாள்தனமாக இருக்கிறது.”—1 கொ. 3:19.
பாட்டு 37 வேதம்—கடவுளது சக்தியால் அருளப்பட்டது
இந்தக் கட்டுரையில்...a
1. கடவுளுடைய வார்த்தை நமக்கு எப்படி உதவுகிறது?
யெகோவா நம்முடைய மகத்தான போதகர்! அதனால், எப்பேர்ப்பட்ட சவால்களையும் நம்மால் சமாளிக்க முடிகிறது. (ஏசா. 30:20, 21) ‘எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றுக்கொள்ள’ அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது. (2 தீ. 3:17) பைபிள் போதனைகளின்படி வாழும்போது, ‘உலக ஞானத்தின்படி’ வாழ்வதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற நபர்களைவிட நாம் ஞானமுள்ளவர்களாக இருப்போம்.—1 கொ. 3:19; சங். 119:97-100.
2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
2 சுயநலமான ஆசைகளின்படி வாழத்தான் இந்த உலக ஞானம் பெரும்பாலும் மற்றவர்களைத் தூண்டுகிறது. அதனால், உலகத்தின் பாகமாக இருக்கிற நபர்களைப் போலவே யோசிப்பதையும் நடந்துகொள்வதையும் தவிர்ப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். “தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவை மனித பாரம்பரியங்களை . . . சார்ந்திருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. இது எவ்வளவு நியாயமானதாக இருக்கிறது! (கொலோ. 2:8) அப்படிப்பட்ட இரண்டு வஞ்சனையான வீண் கருத்துகள், எந்தளவுக்கு பிரபலமாகியிருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்த ஒவ்வொரு கருத்தைப் பற்றிக் கலந்துபேசும்போதும், உலக ஞானம் ஏன் முட்டாள்தனமானது என்று பார்க்கலாம். அதோடு, கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற ஞானம், இந்த உலகத்தில் இருக்கிற எந்தவொரு விஷயத்தையும்விட எப்படி உயர்ந்ததாக இருக்கிறது என்றும் பார்க்கலாம்.
ஒழுக்க நெறிகளைப் பற்றிய உலக கண்ணோட்டம் எப்படி மாறியிருக்கிறது?
3-4. ஒழுக்க நெறிகளைப் பற்றிய அமெரிக்க மக்களின் கண்ணோட்டம் 1920-லிருந்து 1929-க்குள் எப்படி மாறியது?
3 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒழுக்க நெறிகளைப் பற்றிய அமெரிக்க மக்களின் கண்ணோட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம், கல்யாணமானவர்கள் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது தவறு என்றும் நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒழுக்க நெறிகளுக்கு இருந்த மதிப்பு குறைந்தது. யாரும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற எண்ணம் பிரபலமானது.
4 மக்களுடைய நடத்தையிலும் செக்ஸைப் பற்றிய அவர்களுடைய மனப்பான்மையிலும் 1920-லிருந்து 1929-க்குள் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. “செக்ஸ் விஷயங்களுக்கு இருந்த வரவேற்பு காரணமாக, இயங்கும் படங்களும் நாடகங்களும் பாடல்களும் நாவல்களும் விளம்பரங்களும் செக்ஸையே மையமாகக் கொண்டிருந்தன” என்று ஓர் ஆராய்ச்சியாளர் சொன்னார். அந்தக் காலகட்டத்தில், நடனம் ஆடும் விதமும் ஆபாசமான எண்ணங்களைத் தூண்டுவதாக இருந்தது. அநாகரிகமான உடைகளை மக்கள் உடுத்த ஆரம்பித்தார்கள். பைபிள் முன்னதாகவே சொன்னது போல, கடைசி நாட்களில் மக்கள் ரொம்பவே “சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” மாறியிருக்கிறார்கள்.—2 தீ. 3:4.
5. ஒழுக்க நெறிகள் சம்பந்தமாக இந்த உலகத்தின் கண்ணோட்டம் 1960-களிலிருந்து எப்படி மாறியிருக்கிறது?
5 கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வது... ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது... எதற்கெடுத்தாலும் விவாகரத்து செய்துகொள்வது... ஆகியவை 1960-களில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டன. நிறைய பொழுதுபோக்குகள் செக்ஸை அப்பட்டமாகக் காட்ட ஆரம்பித்தன. இதன் விளைவு என்ன? ஒரு பெண் எழுத்தாளர் இதைப் பற்றி என்ன எழுதினார்? குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், ஒற்றைப் பெற்றோராக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவதற்கும், உணர்ச்சி ரீதியிலான காயங்களுக்கும், ஆபாசத்துக்கு அடிமையாவதற்கும், மற்ற பிரச்சினைகளுக்கும் “செக்ஸ் சம்பந்தப்பட்ட நெறிகள் தளர்ந்துபோயிருக்கும் சமுதாயத்தில் வாழ்வதுதான்” காரணம் என்று அவர் எழுதினார். எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் இன்று அதிகமாக இருப்பதைப் பார்க்கும்போது, உலக ஞானம் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது தெரிகிறது. இது வெறும் ஒரு உதாரணம்தான்!—2 பே. 2:19.
6. செக்ஸைப் பற்றிய உலகத்தின் கண்ணோட்டம், சாத்தான் விரும்புவதைப் போல்தான் இருக்கிறது என்று ஏன் சொல்லலாம்?
6 செக்ஸைப் பற்றிய இந்த உலகத்தின் கண்ணோட்டம், சாத்தான் விரும்புவதைப் போல்தான் இருக்கிறது. கடவுள் கொடுத்த பாலியல் உறவு என்ற பரிசைத் தவறாகப் பயன்படுத்தும்போதும், திருமணம் என்ற கடவுளுடைய ஏற்பாட்டை மதிக்காமல் போகும்போதும் சாத்தான் சந்தோஷப்படுகிறான். (எபே. 2:2) பாலியல் முறைகேடு என்பது, பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கான அருமையான பரிசைக் கறைபடுத்துகிறது. அதில் ஈடுபடுகிறவர்களுக்கு, முடிவில்லாத வாழ்வு கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.—1 கொ. 6:9, 10.
பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
7-8. பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வது சம்பந்தமாக பைபிள் சொல்லும் கருத்து, உலக கருத்தைவிட ஏன் மிக உயர்ந்ததாக இருக்கிறது?
7 உலக ஞானத்தைப் பின்பற்றுகிறவர்கள் பைபிளின் ஒழுக்க தராதரங்களைக் கிண்டல் செய்கிறார்கள். அவை நடைமுறைக்கு ஒத்துவராது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், ‘பாலியல் ஆசைகளோட கடவுள் நம்மள படச்சிட்டு, அப்புறம் ஏன் அத அடக்கணும்னு சொல்றாரு?’ என்று கேட்கலாம். ஆசைப்பட்டதை எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பதால்தான் அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள். ஆனால், வித்தியாசமான ஒரு கருத்தை பைபிள் சொல்கிறது. அதாவது, நம்முடைய எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக, கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்தும் திறமை நமக்கு இருக்கிறது என்று சொல்வதன் மூலம் பைபிள் நம்மைக் கௌரவப்படுத்துகிறது. (கொலோ. 3:5) அதோடு, திருமணம் என்ற ஏற்பாட்டை ஒரு பரிசாக யெகோவா கொடுத்திருக்கிறார். இந்த ஏற்பாட்டின் மூலம் பாலியல் ஆசைகளைக் கண்ணியமான விதத்தில் பூர்த்தி செய்துகொள்ள முடியும். (1 கொ. 7:8, 9) ஒழுக்கக்கேட்டால் ஏற்படுகிற வருத்தங்களோ கவலைகளோ இல்லாமல், இந்த ஏற்பாட்டுக்குள் பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ளலாம்.
8 செக்ஸைப் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. உலக ஞானத்துக்கும் பைபிள் கற்றுக்கொடுக்கும் விஷயத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! பாலியல் உறவில் ஈடுபடுவது சந்தோஷத்தைத் தரும் என்று பைபிளும் ஒத்துக்கொள்கிறது. (நீதி. 5:18, 19) இருந்தாலும், “உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புள்ளதாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். கடவுளைப் பற்றித் தெரியாத உலக மக்கள் திருப்தியடையாமல் கட்டுக்கடங்காத காமப்பசிக்கு இடம்கொடுப்பது போல நாம் இடம்கொடுக்கக் கூடாது” என்றும் பைபிள் சொல்கிறது.—1 தெ. 4:4, 5.
9. (அ) கடவுளுடைய ஞானத்தைப் பின்பற்றும்படி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த யெகோவாவின் மக்கள் எப்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள்? (ஆ) 1 யோவான் 2:15, 16-லிருக்கிற ஞானமான ஆலோசனை என்ன? (இ) ரோமர் 1:24-27-ல் சொல்லப்பட்டுள்ளபடி, எப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட பழக்கவழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும்?
9 ‘ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாத’ மக்களின் வஞ்சனையான வீண் கருத்துகள் தங்களைப் பாதிக்காதபடி, 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த யெகோவாவின் மக்கள் பார்த்துக்கொண்டார்கள். (எபே. 4:19) யெகோவாவின் தராதரங்களை அப்படியே பின்பற்ற அவர்கள் முயற்சி செய்தார்கள். மே 15, 1926 காவற்கோபுரம் இப்படி உற்சாகப்படுத்தியது: “ஓர் ஆணும் சரி பெண்ணும் சரி, கற்புள்ளவர்களாகவும் தங்களுடைய யோசனைகளிலும் செயல்களிலும் தூய்மையானவர்களாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக, எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரோடு பழகும் விஷயத்தில் அப்படி இருக்க வேண்டும்.” தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற உயர்ந்த ஞானத்தைத்தான் யெகோவாவின் மக்கள் பின்பற்றினார்கள். (1 யோவான் 2:15, 16-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தைக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்த உலகம் சொல்லும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க, யெகோவா நமக்குச் சரியான சமயத்தில் ஆன்மீக உணவைத் தருகிறார். இதற்காகவும் நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்!b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—ரோமர் 1:24-27-ஐ வாசியுங்கள்.
தங்களைத் தாங்களே நேசிக்கிற விஷயத்தில் மக்களின் கண்ணோட்டம் எப்படி மாறியது?
10-11. கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்று பைபிள் எச்சரித்தது?
10 கடைசி நாட்களில் மக்கள் “சுயநலக்காரர்களாக,” அதாவது தங்களைத் தாங்களே நேசிக்கிறவர்களாக இருப்பார்கள் என்று பைபிள் எச்சரித்தது. (2 தீ. 3:1, 2) அதனால்தான், சுயநலமாக நடந்துகொள்ளும்படி இந்த உலகம் உற்சாகப்படுத்துவதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. 1970-களில் “சுய உதவி புத்தகங்கள் அதிகமாக வெளிவந்தன” என்று ஒரு என்சைக்ளோபீடியா சொல்கிறது. அவற்றில் சில புத்தகங்கள், “தங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு தங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களைப் பற்றிப் பெருமையாக நினைக்க வேண்டும் என்றும் வாசகர்களை உற்சாகப்படுத்தியது.” இன்னொரு புத்தகம், “இதுவரை வாழ்ந்தவர்களிலேயே நீங்கள்தான் ரொம்ப அழகானவர், அட்டகாசமான ஆள், உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அதனால் உங்களை நேசியுங்கள்” என்று சொன்னது. அதோடு, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாமாகவே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றும், நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, எது சௌகரியமாகப்படுகிறதோ, அதையெல்லாம் செய்யலாம் என்றும் அந்தப் புத்தகம் சொன்னது.
11 இந்தக் கருத்தை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் ஏவாளை சாத்தான் தூண்டினான்! “நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல” அவளால் ஆக முடியும் என்று சொன்னான். (ஆதி. 3:5) இன்றிருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களைப் பற்றி ரொம்பவே உயர்வாக நினைப்பதால், எது சரி எது தவறு என்பதைப் பற்றி யாரும் தங்களுக்குச் சொல்ல முடியாது என்றும், ஏன், கடவுள்கூட சொல்ல முடியாது என்றும் நினைக்கிறார்கள். குறிப்பாக, திருமணம் பற்றிய மக்களுடைய எண்ணத்தில் இது தெளிவாகத் தெரிகிறது.
12. திருமணத்தைப் பற்றிய உலகத்தின் கண்ணோட்டம் என்ன?
12 கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், தங்கள் திருமண வாக்குறுதியை மதிக்க வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது. எப்போதுமே பிரிந்து போகக் கூடாது என்பதில் தம்பதிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் உற்சாகப்படுத்துகிறது. “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்று அது சொல்கிறது. (ஆதி. 2:24) இதற்கு எதிரான ஒரு கருத்தை, அதாவது கணவனும் சரி மனைவியும் சரி தங்களுடைய தேவைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கருத்தை, இந்த உலகம் சொல்கிறது. விவாகரத்தைப் பற்றிய ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “சில [திருமண] நிகழ்ச்சிகளில் . . . திருமணத்தின்போது பாரம்பரியமாகச் சொல்லப்படும் ‘பூமியில் வாழும் காலமெல்லாம்’ என்ற வாக்குறுதிக்குப் பதிலாக, ‘நாம் நேசிக்கும் காலம் வரை’ என்ற வரம்புக்குட்பட்ட வாக்குறுதிதான் கொடுக்கப்படுகிறது.” திருமண ஏற்பாட்டுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுக்காமல் அதை லேசாக எடுத்துக்கொள்வதால்தான் நிறைய குடும்பங்களில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது; பயங்கரமான மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. திருமண ஏற்பாட்டை மதிக்காத இந்த உலகத்தின் மனப்பான்மை முட்டாள்தனமானது என்பதில் சந்தேகமே இல்லை!
13. கர்வமுள்ளவர்களை யெகோவா வெறுப்பதற்கு ஒரு காரணம் என்ன?
13 “இதயத்தில் கர்வமுள்ள எவனையும் யெகோவா அருவருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 16:5) கர்வமுள்ளவர்களை யெகோவா ஏன் வெறுக்கிறார்? ஒரு காரணம்: அவர்கள் தங்களைத் தாங்களே அளவுக்கதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறார்கள்; அப்படி நடந்துகொள்ள மற்றவர்களையும் தூண்டுகிறார்கள். இதன் மூலம் சாத்தானைப் போலவே ஆகிவிடுகிறார்கள். அவன் இயேசுவிடம் என்ன எதிர்பார்த்தான் என்பதை யோசித்துப்பாருங்கள். தன்முன் விழுந்து அவர் தன்னை வணங்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். எல்லாவற்றையும் படைப்பதற்காக யெகோவாவால் பயன்படுத்தப்பட்ட இயேசுவிடமே அவன் அப்படி எதிர்பார்த்தான் என்றால், அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்க வேண்டும்! (மத். 4:8, 9; கொலோ. 1:15, 16) கர்வமுள்ளவர்கள் தங்களை ஞானிகளாக நினைத்தாலும், கடவுளுடைய பார்வையில் அவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள்!
தங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
14. நம்மைப் பற்றிச் சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள ரோமர் 12:3 எப்படி உதவுகிறது?
14 நம்மைப் பற்றிச் சரியான ஒரு கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் உதவுகிறது. நம்மை நாமே ஓரளவு நேசிப்பது சரிதான் என்று அது சொல்கிறது. “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசுவும் சொன்னார். நம்முடைய தேவைகளுக்கு நியாயமான அளவு கவனம் கொடுப்பது முக்கியம் என்பது இதிலிருந்து தெரிகிறது. (மத். 19:19) அதற்காக, மற்றவர்களைவிட நம்மை உயர்ந்தவர்களாக நினைக்க வேண்டும் என்று பைபிள் சொல்வது கிடையாது. “எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்” என்றுதான் சொல்கிறது.—பிலி. 2:3; ரோமர் 12:3-ஐ வாசியுங்கள்.
15. நமக்கு அதிக முக்கியத்துவம் தரக் கூடாது என்ற பைபிள் ஆலோசனை நடைமுறையானதுதான் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
15 நமக்கு அதிக முக்கியத்துவம் தரக் கூடாது என்ற பைபிள் ஆலோசனையை, ஞானிகளாகக் கருதப்படுகிற நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள். உங்களைவிட மற்றவர்களை உயர்ந்தவர்களாக நினைத்தால், அவர்கள் உங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று அந்த ஞானிகள் சொல்லலாம். அப்படியென்றால், ‘நான்தான் முக்கியம்’ என்ற மனப்பான்மையை வெளிக்காட்டியதால் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன? நீங்கள் என்ன கவனித்திருக்கிறீர்கள்? சுயநலமானவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? அவர்களுடைய கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கிறது? அவர்களுக்கு உண்மையான நண்பர்கள் இருக்கிறார்களா? கடவுளோடு அவர்களுக்கு நெருங்கிய பந்தம் இருக்கிறதா? இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, உலக ஞானத்தைப் பின்பற்றுவது நல்லதா கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் ஞானத்தைப் பின்பற்றுவது நல்லதா?
16-17. நாம் எதற்கு நன்றியோடு இருக்கிறோம், ஏன்?
16 ஞானிகளாகக் கருதப்படுபவர்களுடைய ஆலோசனையின்படி செய்பவர்களை ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஒப்பிடலாம். அந்தச் சுற்றுலாப் பயணி, வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது, அவரைப் போலவே வழிதெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இன்னொரு சுற்றுலாப் பயணியிடம் வழி கேட்கிறார். இப்போது என்ன நடக்கும்? இரண்டு பேருமே வழிதவறிப் போக வேண்டியதுதான்! தன்னுடைய காலத்தில் இருந்த “ஞானிகளை” பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இரண்டு பேருமே குழியில்தான் விழுவார்கள்.” (மத். 15:14) இந்த உலக ஞானம் கடவுளுக்குமுன் முட்டாள்தனமாக இருக்கிறது என்பது எவ்வளவு உண்மை!
17 பைபிளில் இருக்கும் ஞானமான ஆலோசனைகள் “கற்றுக்கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்பதை நிரூபிக்கின்றன. (2 தீ. 3:16) உலக ஞானம் நம்மைப் பாதிக்காதபடி தன்னுடைய அமைப்பின் மூலம் யெகோவா நம்மைப் பாதுகாத்திருப்பதை நினைக்கும்போது, நம் இதயம் நன்றியால் பொங்குகிறது! (எபே. 4:14) அவர் தருகிற ஆன்மீக உணவு, அவருடைய வார்த்தையில் இருக்கிற தராதரங்களின்படி வாழ்வதற்குத் தேவையான பலத்தைத் தருகிறது. பைபிளில் இருக்கிற ஞானம் நம்பகமானது! அதன்படி வழிநடத்தப்படுவது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம்!
பாட்டு 65 ‘வழி இதுவே!’
a யெகோவாவால் மட்டும்தான் நம்மைச் சரியாக வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள இந்தக் கட்டுரை உதவும். அதோடு, உலக ஞானத்தைப் பின்பற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும், கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் ஞானத்தைப் பின்பற்றுவது பிரயோஜனத்தைத் தருகிறது என்பதையும் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.
b உதாரணத்துக்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தில், தொகுதி 1-ல் அதிகாரங்கள் 24-26-ஐயும் தொகுதி 2-ல் அதிகாரங்கள் 4-5-ஐயும் பாருங்கள். அதோடு, இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும் என்ற சிற்றேட்டில், பக்கங்கள் 21-23-ல் இருக்கிற கேள்வி 7-ஐயும் பாருங்கள்.
c படங்களின் விளக்கம்: யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்.1960-களின் கடைசியில் அந்தத் தம்பதி ஊழியம் செய்கிறார்கள்.
d படங்களின் விளக்கம்: 1980-களில், உடல்நிலை சரியில்லாத தன் மனைவியை கணவர் கவனித்துக்கொள்கிறார். அவர்களுடைய மகள் இதைப் பார்க்கிறாள்.
e படங்களின் விளக்கம்: இன்று, யெகோவாவின் சேவையில் செலவிட்ட நாட்களை அந்தத் தம்பதி சந்தோஷமாக நினைத்துப்பார்க்கிறார்கள். இப்போது பெரியவளாகிவிட்ட அவர்களுடைய மகளும் தன்னுடைய குடும்பத்தோடு அந்தச் சந்தோஷத்தில் பங்குகொள்கிறாள்.