“ஞானம் கேடகம்”
“பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!” என்று நீதிமொழிகள் 16:16 கூறுகிறது. ஞானம் ஏன் அந்தளவு மதிப்புமிக்கது? ஏனென்றால், “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” (பிரசங்கி 7:12) அப்படியென்றால், ஞானத்தை உடையவர்களுக்கு அது எவ்வாறு ஜீவனைத் தருகிறது?
தெய்வீக ஞானத்தை, அதாவது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள திருத்தமான அறிவைப் பெறுவதும் அதற்கேற்ப செயல்படுவதும் யெகோவா அங்கீகரிக்கும் வழியில் நடக்க நமக்கு உதவுகின்றன. (நீதிமொழிகள் 2:10-12) “தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்” என்று பூர்வ இஸ்ரவேலின் சாலொமோன் ராஜா கூறுகிறார். (நீதிமொழிகள் 16:17) ஆம், ஞானத்தை உடையவர்களை அது மோசமான பாதைகளில் நடக்காதபடி தடுத்து, உயிரைக் காப்பாற்றுகிறது! இரத்தினச் சுருக்கமாகச் சொன்னால், நீதிமொழிகள் 16:16-33-ல் காணப்படும் ஞானம் பொதிந்த வார்த்தைகள், நம்முடைய குணத்தில், பேச்சில், செயல்களில் தெய்வீக ஞானம் ஏற்படுத்தும் நல்ல பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.a
‘மனத்தாழ்மையாயிருங்கள்’
உருவகப்படுத்தப்பட்ட ஞானம் “பெருமையையும், அகந்தையையும், . . . நான் வெறுக்கிறேன்” என்று சொல்கிறது. (நீதிமொழிகள் 8:13) அகந்தையும் ஞானமும் எதிரும்புதிருமான இருதுருவங்கள். ஞானமாய் நடந்துகொள்வது அவசியமாய் இருக்கிறது; அதோடு, அகந்தை என்ற குணம் தலைதூக்காதபடியும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். முக்கியமாக, வாழ்க்கையின் சில அம்சங்களில் நாம் வெற்றி பெற்றிருந்தாலோ கிறிஸ்தவ சபையில் பொறுப்பைப் பெற்றிருந்தாலோ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
“அழிவுக்கு [அதாவது, வீழ்ச்சிக்கு] முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்று நீதிமொழிகள் 16:18 எச்சரிக்கிறது. கடவுளுடைய ஆவி குமாரரில் பரிபூரணமாய் இருந்த ஒருவன் பிசாசாகிய சாத்தானாக தன்னை மாற்றிக்கொண்டபோது, எவ்வளவு பெரிய வீழ்ச்சியைக் கண்டான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (ஆதியாகமம் 3:1-5; வெளிப்படுத்துதல் 12:9) இந்த வீழ்ச்சிக்கு முன்னால் அவன் மனமேட்டிமையைக் காட்டவில்லையா? கிறிஸ்தவராக மாறிய புதியவர் ஒருவரைக் கிறிஸ்தவ சபையில் கண்காணியாக நியமிக்கக்கூடாதென சொல்லும்போது பைபிள் அதைப்பற்றிக் குறிப்பிடுகிறது; அதை இவ்வாறு சொல்கிறது: அவன், “இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.” (1 தீமோத்தேயு 3:1, 2, 6) மற்றவர்கள் மனதில் அகந்தையை வளர்க்காமலும் அது நமக்குள் நுழைந்து விடாமலும் காத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம்!
“அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்” என்று நீதிமொழிகள் 16:19 கூறுகிறது. இந்த ஆலோசனை எந்தளவு நடைமுறையானது என்பது பூர்வ பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் விஷயத்தில் தெளிவாகத் தெரிந்தது. அவர் ஆணவமாக, ஒருவேளை தன்னையே அடையாளப்படுத்திய மாபெரும் ஒரு சிலையை தூரா சமவெளியில் நிறுத்தினார். அந்தச் சிலை 27 மீட்டர் உயரம் இருந்ததால் அது மிக உயரமான பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கலாம். (தானியேல் 3:1) அந்தப் பிரமாண்டமான நினைவுச் சின்னம் நேபுகாத்நேச்சாருடைய பேரரசின் கிலியூட்டும் அடையாளமாக இருந்தது. விண்ணைமுட்டும் அளவுக்குக் கம்பீரமாக நின்ற சிலையைப் போல நான்முக ஸ்தூபிகள், கோபுரங்கள், வானளாவிய கட்டடங்கள் போன்றவை ஏராளமானோரைக் கவரலாம்; ஆனால், இதுபோன்ற காரியங்கள் கடவுளைக் கவருவதில்லை. “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” என்று சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 138:6) இன்னும் சொல்லப்போனால், “மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.” (லூக்கா 16:15) நாம் ‘மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குவது’ சிறந்ததாயிருக்கும்.—ரோமர் 12:16.
‘உட்பார்வையுடனும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும்’ பேசுங்கள்
ஞானத்தைப் பெற்றிருப்பது நம்முடைய பேச்சை எவ்வாறு பாதிக்கிறது? “விவேகத்துடன் [“உட்பார்வையுடன்,” NW] காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான் [“நன்மையைக் கண்டுபிடிப்பான்,” கத்தோலிக்க பைபிள்]; கர்த்தரை [அதாவது, யெகோவாவை] நம்புகிறவன் பாக்கியவான். இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும். [“இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்,” பொது மொழிபெயர்ப்பு] புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே. ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும் [“அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்,” பொ.மொ.]” என்று ஞானமுள்ள ராஜா சொல்கிறார்.—நீதிமொழிகள் 16:20-23.
உட்பார்வையுடனும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் பேசுவதற்கு ஞானம் நமக்கு உதவுகிறது. எப்படி உதவுகிறது? இருதயத்தில் ஞானமுடையவர் ஒரு காரியத்தில் ‘நன்மையைக் கண்டுபிடிக்கிறார்,’ ‘யெகோவாவை நம்புகிறார்.’ மற்றவர்களிடத்தில் உள்ள நல்லதைக் கண்டுபிடிக்க நாம் முயற்சி செய்யும்போது, பெரும்பாலும் அவர்களைப் பாராட்டுவோம். கடுமையாகப் பேசாமல் அல்லது வாக்குவாதம் செய்யாமல் நம்முடைய வார்த்தைகள் இனிமையாகவும் ஏற்கத்தகும் விதத்திலும் இருக்கின்றன. உட்பார்வையோடு மற்றவர்களுடைய சூழ்நிலைகளைக் கவனிப்பது அவர்கள் படுகிற கஷ்டங்களையும் அவற்றைச் சமாளிக்கிற விதத்தையும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
மேலும், ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்து, சீஷராக்கும் நம் வேலையிலும் ஞானமாகப் பேசுவது மிக முக்கியம். நாம் மற்றவர்களுக்கு கடவுளுடைய வார்த்தையைப் போதிக்கும்போது வேதப்பூர்வ தகவலைக் கொடுப்பது மட்டுமே நம்முடைய நோக்கமல்ல. அவர்களுடைய இருதயங்களை எட்ட வேண்டுமென்பதே நம்முடைய நோக்கம். இதற்கு ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பேசுவது அவசியம். தன் சக ஊழியனான தீமோத்தேயுவை “நிச்சயித்துக்கொண்டவைகளில்” தொடர்ந்து நிலைத்திருக்குமாறு அப்போஸ்தலன் பவுல் தூண்டினார்.—2 தீமோத்தேயு 3:14, 15.
‘நிச்சயித்துக்கொள்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை, “நியாயங்காட்டிப் பேசுவதன்மூலம் அல்லது தார்மீக ரீதியில் ஆய்வு செய்வதன்மூலம் மனநிலையில் மாற்றம் உண்டாக்குவது” என்ற அர்த்தத்தைத் தருவதாக டபிள்யு. ஈ. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டு வார்த்தைகளுக்குரிய எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி (ஆங்கிலம்) கூறுகிறது. இணங்க வைக்கும் விதத்தில் பேசி கேட்போரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவருடைய சிந்தனைகள், ஆசாபாசங்கள், சூழ்நிலைகள், பின்னணி ஆகியவற்றை நாம் உட்பார்வையுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதுபோன்ற உட்பார்வையை நாம் எப்படிப் பெற முடியும்? “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருங்கள் என்று சீஷராகிய யாக்கோபு இதற்குப் பதிலளிக்கிறார். (யாக்கோபு 1:19) செவிகொடுத்துக் கேட்கும் நபரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பதன் மூலமும் அவர் இருதயத்தில் உள்ளதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பேசுவதில் அப்போஸ்தலன் பவுல் அதீத திறமை பெற்றிருந்தார். (அப்போஸ்தலர் 18:4, NW) அவரை எதிர்த்தவர்களில் ஒருவனான தெமேத்திரியு என்ற தட்டான்கூட இவ்வாறு ஒத்துக்கொண்டான்: “இந்தப் பவுல் என்பவன் . . . எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து [அதாவது, ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பேசி], அவர்களை வசப்படுத்திக்கொண்டான்.” (அப்போஸ்தலர் 19:24-26) பிரசங்க வேலையில் சிறந்து விளங்குவதற்குத் தன்னுடைய திறமைதான் காரணமென பவுல் கருதினாரா? இல்லை. தன்னுடைய ஊழியம் “[கடவுளுடைய] ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று அவர் கருதினார். (1 கொரிந்தியர் 2:4, 5) நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருப்பதால் நாமும் அவருடைய பரிசுத்த ஆவியின் உதவியைப் பெற்றிருக்கிறோம். நம்முடைய ஊழியத்தில் உட்பார்வையுடனும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் பேசுவதற்கு அவர் உதவுகிறாரென உறுதியாய் நம்புகிறோம்.
‘இருதயத்தில் ஞானமுள்ளவரை,’ “விவேகி” அல்லது “பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர்” என்று சொல்வதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. (நீதிமொழிகள் 16:21, பொ.மொ.) ஆம், உட்பார்வையைப் பெற்றிருப்போருக்கு அது “ஜீவ ஊற்று.” ஆனால், மூடரைப்பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் “ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.” (நீதிமொழிகள் 1:7) யெகோவாவிடமிருந்து வரும் சிட்சையை ஒதுக்கித் தள்ளுபவர்கள் என்ன விளைவுகளை அறுவடை செய்வார்கள்? ஏற்கெனவே பார்த்தபடி, சாலொமோனும் இவ்வாறு சொல்கிறார்: “மதியீனரின் போதனை மதியீனமே.” (நீதிமொழிகள் 16:22) அவர்கள் இன்னுமதிகமான சிட்சையை பெரும்பாலும் கடும் தண்டனை வடிவில் பெறுகிறார்கள். மூடர் தங்களுக்குத் தாங்களே தீமையை வரவழைத்துக் கொள்கிறார்கள்; அவமானம், நோய், அகால மரணத்தையும்கூட சந்திக்கிறார்கள்.
ஞானம் நம்முடைய பேச்சை பயனுள்ள விதத்தில் எப்படிப் பாதிக்கும் என்பதை இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு சொல்கிறார்: “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” (நீதிமொழிகள் 16:24) தேன் இனிப்பாகவும் பசியுள்ளவர்களுக்குச் சீக்கிரத்தில் புத்துணர்ச்சி தருவதாகவும் இருப்பதுபோல இனிய சொற்கள் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் தருகின்றன. மேலும், தேன் ஆரோக்கியத்தைத் தருகிறது, மருத்துவ குணமுள்ளது, ஒருவருக்கு நல்லதும்கூட. அதேபோல, இனிய சொற்கள் ஆன்மீக ரீதியில் ஆரோக்கியம் அளிக்கின்றன.—நீதிமொழிகள் 24:13, 14.
‘செம்மையாய்த் தோன்றுகிற வழியைக்’ குறித்து ஜாக்கிரதை
“மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 16:25) தவறான நியாயவிவாதத்திற்கும் கடவுளுடைய சட்டத்திற்கு முரணான வழிகளுக்கும் எதிரான எச்சரிக்கை இது. சில வழிகள் சரியானதுபோல் மனிதருக்குத் தெரியலாம், ஆனால் அவை உண்மையில் கடவுளுடைய நீதியான நியமங்களுக்கு எதிரானவை. மேலுமாக, ஒருவர் சரியென்று நம்புகிற, ஆனால் சாவுக்கு வழிநடத்துகிற வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு இதுபோன்ற ஏமாற்று வேலையை சாத்தான் முன்னேற்றுவிக்கிறான்.
தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளாதிருக்க ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இருதயத்தையும் கடவுளுடைய வார்த்தையினால் அறிவொளியூட்டப்பட்ட மனசாட்சியையும்விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை. வாழ்க்கையில் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்திலோ வழிபாட்டிலோ அல்லது மற்றெந்த விஷயத்திலோ தீர்மானங்கள் எடுக்கும்போது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளாதிருக்க, நல்லது கெட்டது பற்றிய கடவுளுடைய தராதரங்களை வழிகாட்டியாய் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.
“உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது”
“பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்” என்று ஞானமுள்ள ராஜா கூறுகிறார். (நீதிமொழிகள் 16:26) உணவிற்கான விருப்பம் வேலை செய்பவரைப் ‘பிரயாசப்பட வைக்கிறது’; ஏனென்றால், அவருடைய பசி அவரை ‘வருத்துகிறது’ அல்லது தூண்டுகிறது. இதை பொது மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.” சாப்பிட வேண்டும் என்பதைப் போன்ற இயல்பான விருப்பம் அதைத் திருப்தி செய்துகொள்வதற்கு நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இது போன்ற விருப்பம் இருப்பது நல்லதுதான். என்றாலும், நியாயமான ஆசை அளவு கடந்த பேராசையாய் மாறினால் என்ன செய்வது? சமையலுக்கு உதவும் நெருப்பு, காடு முழுவதும் பரவினால் என்ன விளைவு ஏற்படுமோ அதேதான் இதிலும் ஏற்படும். பேராசை என்பது கட்டுக்கடங்கா ஆசை; அது அழிவுக்குத்தான் வழிநடத்தும். ஆபத்தை உணருகிற ஞானமுள்ள நபர் நியாயமான ஆசைகளைக்கூட அடக்கிக்கொள்கிறார்.
“நலமல்லாத வழியிலே நடக்க” வேண்டாம்
வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் பற்றியெரியும் நெருப்பைப்போல நாசத்தை உண்டாக்கலாம். மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பரப்புவதால் உண்டாகிற தீய விளைவுகளை சாலொமோன் இவ்வாறு விளக்குகிறார்: “பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினி போன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.”—நீதிமொழிகள் 16:27, 28.
சக மனிதருடைய நற்பெயரைக் கெடுக்க முயலும் ஒருவர் ‘பேலியாளின் மகனாக [“கயவனாக,” பொ.மொ.]’ இருக்கிறார். மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைக் காண நாம் முயற்சி செய்ய வேண்டும்; அவர்களை இன்னும் அதிக மதிப்புள்ளவர்களாய் ஆக்குகிற காரியங்களைப்பற்றிப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்கிற வதந்தியைப் பரப்புபவர்களுக்குச் செவிகொடுப்பவர்களைப்பற்றி என்ன சொல்லலாம்? அவர்களுடைய வார்த்தைகள் ஆதாரமற்ற சந்தேகங்களைச் சுலபமாக எழுப்பலாம், நண்பர்களைப் பிரித்து விடலாம், சபைக்குள் பிரிவினைக்குக் காரணமாகிவிடலாம். அப்படிப்பட்டவர்களுக்குச் செவிகொடாதபடி ஞானம் நம்மைத் தடுக்கிறது.
தவறான பாதையில் செல்ல ஒருவரைத் தூண்டும் வசீகர சக்தியைப்பற்றி எச்சரிப்பவராய் சாலொமோன் இவ்வாறு சொல்கிறார்: “கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான். அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.”—நீதிமொழிகள் 16:29, 30.
வன்முறை, உண்மை வணக்கத்தாரைக்கூட வசீகரிக்க முடியுமா? ‘தீமை செய்யும்படி’ இன்றைக்கு அநேகர் கெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் அல்லது அதை ஊக்குவிக்கிறார்கள். வன்முறையில் நேரடியாக ஈடுபடாமல் அதை நாம் எளிதில் தவிர்க்கலாம். ஆனால், அதனுடைய சூழ்ச்சிச் சுழலுக்குள் கவர்ந்து இழுக்கப்படுவதைப்பற்றி என்ன சொல்லலாம்? வன்முறையைச் சிறப்பிக்கிற விளையாட்டுகளையும் பொழுதுபோக்குகளையும் பார்ப்பதற்கு லட்சக்கணக்கானோர் வசீகரிக்கப்படவில்லையா? “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று பைபிள் தெளிவாகவே எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 13:20) தெய்வீக ஞானம் நம்மை எவ்வளவாய் பாதுகாக்கிறது!
‘நலமல்லாத வழியிலே நடக்காமல்,’ ஞானமும், புரிந்துகொள்ளுதலும் உள்ளவர்களுடன் தன் வாழ்க்கையைச் செலவிட்டிருக்கிறவரைப்பற்றி என்ன சொல்லப்படலாம்? நீதியான வழியில் செலவிட்ட வாழ்க்கை கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கது, மரியாதைக்குரியது. “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று நீதிமொழிகள் 16:31 கூறுகிறது.
மறுபட்சத்தில், கட்டுக்கடங்காத கோபத்தினால் எந்தப் பயனுமில்லை. ஆதாம் ஏவாளின் மூத்த மகனாகிய காயீன் தன் சகோதரனாகிய ஆபேலின்மீது “மிகவும் எரிச்சல் உண்டாகி” அவனுக்கு “விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.” (ஆதியாகமம் 4:1, 2, 5, 8) சில சமயங்களில், கோபப்படுவதற்கு நியாயமான காரணம் நமக்கு இருக்கலாம், ஆனால் அது கட்டுக்கடங்காமல் போகாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” என்று நீதிமொழிகள் 16:32 தெளிவாகக் கூறுகிறது. கட்டுக்கடங்காத கோபம், பலத்தின் அல்லது நற்பண்பின் அடையாளம் அல்ல. ஆனால், அது “நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிற” பலவீனத்தின் அடையாளமே.
‘காரிய சித்தியோ யெகோவாவால் வரும்’
“சீட்டு மடியிலே போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் [“யெகோவாவால்,” NW] வரும்” என்று இஸ்ரவேலின் ராஜா கூறுகிறார். (நீதிமொழிகள் 16:33) பூர்வ இஸ்ரவேலில் யெகோவாவின் சித்தத்தை அறிந்துகொள்வதற்குச் சில சமயங்களில் சீட்டுப் போட்டு பார்க்கும் முறை பின்பற்றப்பட்டது. கூழாங்கற்கள், மரப்பலகைகள் அல்லது கற்கள் சீட்டுகளைப்போல் பயன்படுத்தப்பட்டன. ஒரு காரியத்தில் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக அது முதலில் யெகோவாவிடம் அறிக்கை செய்யப்பட்டது. பிறகு, மேலங்கியின் மடிப்புகளில் சீட்டுகள் போடப்பட்டு, எடுக்கப்பட்டன. முடிவு கடவுளிடமிருந்து வந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தம்முடைய எண்ணத்தைத் தெரியப்படுத்துவதற்கு இனிமேலும் யெகோவா சீட்டுகளைப் பயன்படுத்துவதில்லை. தம்முடைய சித்தத்தை அவருடைய வார்த்தையாகிய பைபிளில் வெளிப்படுத்தியிருக்கிறார். பைபிளிலிருந்து திருத்தமான அறிவைப் பெறுவதே தெய்வீக ஞானத்தைக் கண்டடைவதற்கான அடிப்படையாகும். எனவே, கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட வேதாகமத்தை நாள் தவறாமல் படிக்க வேண்டும்.—சங்கீதம் 1:1, 2; மத்தேயு 4:4.
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 16:1-15-ன் விளக்கத்திற்கு, மே 15, 2007 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 17-20-ஐக் காண்க.
[பக்கம் 8-ன் படம்]
பொன்னைவிட ஞானம் ஏன் சிறந்தது?
[பக்கம் 9-ன் படம்]
ஊழியத்தின்போது ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பேசுவதற்கு எது உங்களுக்கு உதவுகிறது?
[பக்கம் 10-ன் படம்]
“பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்”
[பக்கம் 11-ன் படம்]
கட்டுக்கடங்காத கோபம் ‘நலமல்லாத வழியிலே நடப்பதற்குக்’ காரணமாகலாம்
[பக்கம் 12-ன் படம்]
வன்முறை வசீகரிக்கும் சக்தியுள்ளது