“யெகோவாவே ஞானத்தை தருகிறார்”
எந்தெந்த வேலைகள் உங்கள் நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிக்கொள்கின்றன? நல்ல பெயரெடுப்பதிலேயே எப்போதும் நீங்கள் குறியாக இருக்கிறீர்களா? பொருள் சேர்ப்பதிலேயே மூழ்கியிருக்கிறீர்களா? கடும் முயற்சி செய்து ஒரு குறிப்பிட்ட துறையில் தொழிலைத் தொடர்வதைப் பற்றி அல்லது கல்வித் துறையின் ஒரு பிரிவில் அல்லது பல பிரிவுகளில் நம்பர் 1-ஆக முயலுவதைப் பற்றி என்ன? எல்லாரிடமும் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ள முழுமூச்சாக செயல்படுகிறீர்களா? நல்ல சுகத்தோடு இருப்பதே உங்கள் உயிர் நாடியா?
மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகள் எல்லாமே ஓரளவுக்கு மதிப்புள்ளவையாக தான் தோன்றுகின்றன. ஆனால் முக்கியமானது எது? “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி” என பைபிள் பதிலளிக்கிறது. (நீதிமொழிகள் 4:7) எனவே, ஞானத்தை எப்படி பெறுவது? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? நீதிமொழிகள் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரம் அதற்கான பதிலைத் தருகிறது.
‘ஞானத்திற்கு செவிசாயுங்கள்’
பூர்வ இஸ்ரவேலில் ஞானத்தில் தலைசிறந்து விளங்கிய சாலொமோன் ராஜா, தகப்பனுக்குரிய பாசத்துடன் அன்பான வார்த்தைகளில் சொல்கிறதாவது: “என் மகனே நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்திற்கு செவிசாய்த்து, விவேகத்தின்பால் மனம் சாய்வாயாகில்; மேலும், நீ புரிந்துகொள்ளுதலை வா என கூப்பிட்டு விவேகத்தை சப்தமிட்டு அழைப்பாயாகில்; நீ வெள்ளியைப்போல் அதை நாடுவாயாகில்; புதையல்களைத் தேடுகிறதுபோல் அதை தேடுவாயாகில், அப்பொழுது யெகோவாவிற்குப் பயப்படுதல் இன்னதென்று அறிந்துகொள்வாய், கடவுளை அறியும் அறிவையும் கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:1-5, NW.
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான பொறுப்பு யாரை சார்ந்திருக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த வசனங்களில், “நீ” என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது. ஞானத்தையும் அதோடு தொடர்புடைய விவேகத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தேட வேண்டியது நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. முதலாவதாக நாம் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஞானமான வார்த்தைகளை ‘ஏற்றுக்கொண்டு’ நினைவில் ‘பத்திரப்படுத்த’ வேண்டியிருக்கிறது. இதற்கு நாம் பைபிளை படிக்க வேண்டும்.
கடவுள் கொடுத்த அறிவை சரியான விதத்தில் உபயோகிக்கும் திறமையே ஞானம். பைபிள் ஞானத்தை வாரி வழங்கும் அழகே அழகுதான்! நீதிமொழிகள், பிரசங்கி போன்ற புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டவற்றில் ஞானம் புதைந்து கிடைக்கிறது; நாம் அவ்வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்துவது அவசியம். கடவுளுடைய நியமங்களைப் பின்பற்றுவதன் பயன்களையும் அவற்றை புறக்கணிப்பதன் படுகுழிகளையும் அனுபவித்தவர்களின் அநேக உதாரணங்களை பைபிளின் ஏடுகளில் நாம் காண்கிறோம். (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11) தீர்க்கதரிசியாகிய எலிசாவின் வேலைக்காரனாகிய பேராசைபிடித்த கேயாசியைப் பற்றிய பதிவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். (2 இராஜாக்கள் 5:20-27) பேராசையை நம்மிடம் அண்டவிடாதிருப்பதன் ஞானத்தை இது நமக்கு கற்பிக்கவில்லையா? யாக்கோபின் மகளாகிய தீனாள், பாதகமில்லை என நினைத்து கானான் “தேசத்துப் பெண்களை” பார்க்கப் போய்கொண்டிருந்ததன் விபரீத விளைவைப் பற்றி என்ன சொல்லலாம்? (ஆதியாகமம் 34:1-31) கெட்ட சகவாசங்களின் மடமையை நமக்கு உடனடியாக உணர்த்துகிறதல்லவா?—நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33, NW.
ஞானத்திற்கு கவனம் செலுத்துவது விவேகத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெறுவதை இன்றியமையாததாக்குகிறது. உவெப்ஸ்டர்ஸ் ரிவைஸ்ட் அன்அப்ரிஜ்ட் டிக்ஷ்னரியின்படி விவேகம் என்பது “ஒரு காரியத்தை மற்றொரு காரியத்திலிருந்து வேறுபடுத்திக் காணும் மனதின் சக்தி அல்லது திறமை.” கடவுள் அளிக்கும் விவேகம் என்பது தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்தி அறிந்துகொள்வதோடு, நடப்பதற்கு சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதற்குரிய திறமையாகும். விவேகத்தின்பால் ‘மனம் சாய’வில்லையென்றால் அல்லது அதை பெற ஆர்வமில்லையென்றால் ‘ஜீவனுக்குப் போகிற வாசலில்’ எப்படி நிலைத்திருக்க முடியும்? (மத்தேயு 7:14; ஒப்பிடுக: உபாகமம் 30:19, 20.) கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அதன்படி நடக்கையில் விவேகத்தை பெறுகிறோம்.
ஒரு பொருளைப் பற்றிய குறிப்புகள் எப்படி ஒன்றோடு ஒன்றும் முழுமையாகவும் தொடர்புடையதாய் உள்ளன என்பதைக் காணும் திறமையே புரிந்துகொள்ளுதல். அந்தப் ‘புரிந்துகொள்ளுதலை வா என கூப்பிடுவது’ எப்படி? வயதும் அனுபவமும் புரிந்துகொள்ளுதலை அதிகரிப்பதற்கு உதவும் அம்சங்கள் என்பது உண்மைதான்; ஆனாலும் எல்லா சமயங்களிலும் அது உண்மையல்ல. (யோபு 12:12; 32:6-12) “உம்முடைய [“யெகோவாவுடைய,” NW] கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்” என சங்கீதக்காரன் சொன்னார். “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” எனவும் பாடினார். (சங்கீதம் 119:100, 130) யெகோவா “நீண்ட ஆயுசுள்ளவர்”; எந்த மனிதனைக் காட்டிலும் எல்லையற்ற புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர். (தானியேல் 7:13) பேதைக்கு புரிந்துகொள்ளுதலை அளித்து, வயது முதிர்ந்தோரைப் பார்க்கிலும் அவரை அக்குணத்தில் உயர்ந்தோங்க செய்ய கடவுளால் முடியும். எனவே, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை படித்து, அதன்படி நடப்பதில் நமக்கு வெகு கவனம் தேவை.
நீதிமொழிகள் புத்தகம் இரண்டாம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் அடிக்கடி “நீ” என குறிப்பிட்டு, அதைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொண்டு,” “பத்திரப்படுத்தி,” “வா என கூப்பிட்டு,” “நாடுவாயாகில்,” “தேடுவாயாகில்” போன்ற வார்த்தைகள் வருகின்றன. அதிக பொருள் பொதிந்த இவ்வார்த்தைகளை எழுத்தாளர் ஏன் உபயோகிக்கிறார்? “ஞானத்தை நாடித் தொடருவதில் ஆர்வம் காட்டுவதன் தேவையை ஞானி [இங்கு] வலியுறுத்துகிறார்” என்பதாக ஒரு குறிப்புரை சொல்கிறது. நாம் ஞானத்தையும் அதோடு தொடர்புடைய பண்புகளான விவேகத்தையும் புரிந்துகொள்ளுதலையும் ஆர்வத்தோடு நாடித் தொடர வேண்டும்.
நீங்கள் முயலுவீர்களா?
பைபிளைக் கருத்தூன்றிப் படிப்பதே ஞானத்தை நாடித் தொடருவதில் அடங்கியுள்ள முக்கிய அம்சம். எனினும், இப்படிப்பட்ட படிப்பு தகவலை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் மேலோட்டமாக வாசிப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்த வேண்டும். நாம் வாசித்தவற்றை கருத்தோடு தியானிப்பதுதான் பைபிளை படிப்பதிலேயே இன்றியமையாதது. பிரச்சினைகளைத் தீர்க்கவும், தீர்மானங்களை எடுக்கவும் நாம் கற்றுக்கொள்பவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என தியானிக்க வேண்டும்; இது, ஞானத்தையும் விவேகத்தையும் பெறுவதில் உட்பட்டிருக்கிறது. நாம் ஏற்கெனவே தெரிந்தவற்றோடு புதிய தகவல் எப்படி பொருந்துகிறது என்பதை சம்பந்தப்படுத்தி சிந்திப்பதையே புரிந்துகொள்ளுதல் தேவைப்படுத்துகிறது. இத்தகைய பைபிள் சார்ந்த கருத்தார்ந்த படிப்புக்கு, நேரமும் ஊக்கமான முயற்சியும் தேவை என்பதை யார்தான் மறுக்க முடியும்? நேரத்தையும் ஊக்கத்தையும் ‘முதலீடு’ செய்வது, ‘வெள்ளியை நாடுவதற்கும், புதையல்களைத் தேடுவதற்கும்’ செலவழித்ததற்கு சமம். தேவைப்படும் முயற்சியை நீங்கள் எடுப்பீர்களா? அதைச் செய்வதற்கு ‘வாய்ப்பான நேரத்தைக் கடன்வாங்குவீர்களா’?—எபேசியர் 5:15, 16, NW.
நேர்மை மனதோடு பைபிளை ஆழத் தோண்டுகையில் எப்பேர்ப்பட்ட பெரும் புதையல் நமக்குக் காத்திருக்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயமாகவே, ‘கடவுளை அறியும் அறிவை’ அதாவது நம் கடவுளைப் பற்றிய தெளிவான, நிலையான, ஜீவனளிக்கும் அறிவை கண்டடைவோமே! (யோவான் 17:3) ‘யெகோவாவிற்குப் பயப்படுதலும்’ பெறவேண்டிய ஒரு புதையலே. இத்தகைய பயபக்தியை அவரிடம் காட்டுவது எத்தனை மதிப்புமிக்கது! அவருக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோ என்ற நியாயமான பயம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆட்கொண்டு, நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஆவிக்குரிய முக்கியத்துவத்தைச் சேர்க்கும்.—பிரசங்கி 12:13.
ஆவிக்குரிய புதையல்களை பாடுபட்டு தேடி, தோண்டியெடுக்கும் ஆவல் நமக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். நம் தேடுதலை எளிதாக்க யெகோவா மிகச் சிறந்த தோண்டும் ‘கருவிகளை’ கொடுத்திருக்கிறார்; அவை சத்தியத்தைத் தாங்கிச் செல்லும் காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய காலத்திற்கேற்ற இதழ்களும் மற்ற பைபிள் பிரசுரங்களும். (மத்தேயு 24:45-47) அவருடைய வார்த்தையையும் வழியையும் நாம் கற்றுக்கொள்ள யெகோவா நமக்கு கிறிஸ்தவ கூட்டங்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார். இவற்றில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அங்கு சொல்லப்படுபவற்றிற்கு கூர்ந்து கவனம் செலுத்தி, மனதை அலைபாய விடாமல் கேட்டு, முக்கிய தகவல்களை மனதில் புதையல்போல் காக்க வேண்டும்; அத்துடன் யெகோவாவோடு நமக்கிருக்கும் உறவைக் குறித்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.—எபிரெயர் 10:24, 25.
நீங்கள் தவறுவதில்லை
வைரம், தங்கம் அல்லது வெள்ளி போன்ற புதையல் ‘வேட்டையில்’ அடிக்கடி மிஞ்சுவது ஏமாற்றம்தான். ஆவிக்குரிய புதையல்களைத் தேடுவதில் அத்தகைய சந்தேகமோ பயமோ துளியும் வேண்டாம். ஏன்? “யெகோவாவே ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் விவேகமும் பிறக்கும்” என சாலொமோன் நமக்கு உறுதியளிக்கிறார்.—நீதிமொழிகள் 2:6, NW.
சாலொமோன் ராஜா ஞானத்தின் மறுபெயராய் திகழ்ந்தார். (1 இராஜாக்கள் 4:30-32) தாவரங்கள், விலங்குகள், மனித சுபாவம், கடவுளுடைய வார்த்தை என எந்தத் துறையிலும் தலைசிறந்து விளங்கினார் என பைபிள் அவருக்கிருந்த அறிவை மெச்சிப்பேசுகிறது. ஒரு குழந்தையை இரு பெண்கள் தங்களுடையது என உரிமை கொண்டாடிய போது, இளம் ராஜாவாக, பிரச்சினையைத் தீர்த்து தீர்ப்பளித்த விவேகம் அவருக்கு உலகளாவிய விதத்தில் புகழ்மாலை சூட்டியது. (1 இராஜாக்கள் 3:16-28) அவர் கல்வியில் கரைகண்டவராய் இருக்க காரணம் என்ன? “ஞானத்தையும் அறிவையும்,” “நன்மைதீமை இன்னதென்று வகையறுக்”கும் திறமையையும் தரும்படி சாலொமோன் யெகோவாவிடம் ஜெபித்தார். யெகோவா இவற்றை அவருக்கு வாரிவழங்கினார்.—2 நாளாகமம் 1:10-12; 1 இராஜாக்கள் 3:9.
யெகோவாவுடைய வார்த்தையைக் கருத்தூன்றிப் படிக்கையில் அவருடைய உதவிக்காக நாமும் ஜெபிக்க வேண்டும். “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என சங்கீதக்காரன் ஜெபித்தார். (சங்கீதம் 86:11) யெகோவா அத்தகைய ஜெபத்தை ஏற்றுக்கொண்டார்; அது பைபிளில் பதிவாகும்படியும் செய்தார். பைபிளில் புதைந்திருக்கும் ஆவிக்குரிய புதையல்களைக் கண்டுபிடிப்பதற்கு அவருடைய உதவியை கேட்டு, இதயப்பூர்வமாய், அடிக்கடி ஜெபிக்கையில் அவர் பதிலளிக்காமல் போகமாட்டார் என்ற உறுதியோடு இருக்கலாம்.—லூக்கா 18:1-8.
சாலொமோன் குறிப்பிடுகிறதாவது: “அவர் நேர்மையானவர்களுக்கு நடைமுறை ஞானத்தை வைத்திருப்பார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர் நியாயம் நிறைவேறும் வழிகளைக் காத்து, தம்முடைய பற்றுமாறாதவர்களின் பாதையைப் பாதுகாப்பார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நேர்மையையும், சகல நல்வழிகளையும் நீ புரிந்துகொள்வாய்.” (நீதிமொழிகள் 2:7-9, NW) மீண்டும் மீண்டும் நம்பிக்கையூட்டும் இவ்வார்த்தைகளை என்னவென்று சொல்ல! உண்மை மனதோடு மெய் ஞானத்தைத் தேடுபவர்களுக்கு யெகோவா அதைக் கொடுப்பதோடுகூட நேர்மையானவர்களைப் பாதுகாக்கும் கேடகமும் அவரே. காரணம், அவர்கள் மெய் ஞானத்தையும் அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்குப் பற்றுறுதியையும் வெளிக்காட்டுகின்றனர். ‘சகல நல்வழிகளையும்’ புரிந்துகொள்ள யெகோவா உதவுபவர்களுக்கு மத்தியில் நாமும் இருப்போமாக.
‘அறிவு இன்பமாயிருக்கும்போது’
ஞானத்தைத் தேடுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று பைபிளைத் தனிப்பட்ட விதத்தில் படித்தல்; அநேகருக்கு இது உண்மையிலேயே இன்பம்தரும் விஷயமில்லைதான். 58 வயது லாரன்ஸை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்கிறதாவது: “ஓடியாடி வேலை செய்துதான் எனக்குப் பழக்கம். படிக்க வேண்டுமென்றால் படுகஷ்டம்.” பள்ளி படிப்பை எட்டிக்காயாக நினைத்த 24 வயது மைக்கல் சொல்கிறதாவது: “ஓர் இடத்தில் உட்கார்ந்து படிக்க என்னை நானே பலவந்தமாக கட்டுப்படுத்திக்கிட்டேன்.” ஆனாலும், படிக்க வேண்டும் என்ற ஆசையை உரமிட்டு வளர்க்க முடியும்.
மைக்கல் என்ன செய்தார் என சொல்வதைக் கவனியுங்கள்: “ஒவ்வொரு நாளும் அரை மணிநேரம் உட்கார்ந்து படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டேன். என் மனநிலையில், கிறிஸ்தவ கூட்டங்களில் சொல்லும் என் பதில்களில், மற்றவர்களிடமான என் உரையாடல்களில் அது ஏற்படுத்திய மாற்றத்தை சீக்கிரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இப்போது, படிப்புக்காக ஒதுக்கப்பட்ட அந்த நேரம் வரும்வரை எனக்கு இருப்புக்கொள்வதில்லை; அதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எதைக் கண்டாலும் எரிச்சல் வருகிறது.” விடாமுயற்சியோடு இருந்து நாம் அடையும் முன்னேற்றத்தைக் காண்கையில் தனிப்பட்ட படிப்பு நாம் அனுபவித்து மகிழும் ஒன்றாகிவிடுகிறது. லாரன்ஸும் பைபிள் படிப்பில் விடாமுயற்சியோடு தன் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்; காலப்போக்கில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராய் சேவிக்கலானார்.
தனிப்பட்ட படிப்பை மகிழ்ந்தனுபவிக்க தொடர்ந்து முயற்சிப்பது அவசியம். ஆனால் கிடைக்கும் பலன்களோ சொல்லிமுடியாது. சாலொமோன் சொல்கிறதாவது: “ஞானம் உன் இதயத்தில் புகுந்து, அறிவு உனக்கு இன்பமாயிருக்கும்போது, யோசிக்கும் திறன் உன்னைப் பாதுகாக்கும், விவேகம் உன்னைக் காத்திடும்.”—நீதிமொழிகள் 2:10, 11, NW.
‘உன்னை தீய வழியிலிருந்து தப்புவிக்க’
ஞானம், அறிவு, யோசிக்கும் திறன், விவேகம் ஆகியவை எந்த விதத்தில் நம்மை பாதுகாத்திடும்? “[அவை] உன்னை தீய வழியிலிருந்தும், மாறுபாடு பேசுகிற மனுஷனிடமிருந்தும், இருண்ட வழிகளில் நடக்க நேர்மையான பாதைகளை விட்டு விலகுகிறவர்களிடமிருந்தும், தீமைசெய்வதில் மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடான செயல்களில் சந்தோஷப்படுகிறவர்களிலிருந்தும், கோணலான வழிகளிலும் மாறுபாடான பாதைகளிலும் நடக்கிறவர்களிலிருந்தும் உன்னைத் தப்புவிக்கும்.”—நீதிமொழிகள் 2:12-15, NW.
“மாறுபாடு பேசுகிற,” அதாவது, உண்மையானதற்கும் சரியானதற்கும் எதிரானவற்றைப் பேசுகிற எவரிடமும் மெய் ஞானத்தை நெஞ்சார நேசிக்கிறவர்கள் கூட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தை உதறித்தள்ளிவிட்டு இருண்ட வழிகளில் நடக்கிறவர்கள், மாறுபாடானவர்கள், தீய செயல்களில் இன்பம் காண்கிறவர்கள் ஆகியோருக்கு எதிராக யோசிக்கும் திறனும் விவேகமும் அரண்போல் பாதுகாப்பை அளிக்கின்றன.—நீதிமொழிகள் 3:32.
மெய் ஞானமும் அதனோடு தொடர்புடைய பிற பண்புகளும் ஒழுக்கக்கேடான ஆண்கள் மற்றும் பெண்களுடைய மோசமான வழியிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு நாம் எத்தனை நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! இப்பண்புகளின் செயல்களைப் பற்றி சாலொமோன் மேலும் சொல்கிறதாவது; அவை “உன்னை அந்நிய பெண்ணினின்று, இனிய மொழிகள் உரைத்திடும் விலைமகளிடமிருந்து தப்புவிக்கும்; அவள் தன் இளவயதின் நாயகனைவிட்டுத் தன் கடவுளின் உடன்படிக்கையை மறந்தாள். அவள் வீடு மரணத்துக்கும் அவள் பாதைகள் இறந்தோரிடமும் செல்கின்றன; அவளிடம் செல்வோர் எவரும் திரும்புவதில்லை, ஜீவபாதைகளில் அவர்கள் மீண்டும் வந்து சேருவதுமில்லை.”—நீதிமொழிகள் 2:16-19, NW.
“தன் இளவயதின் நாயகனை,” ஒருவேளை இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனை கைவிட்டு வந்தவள் என ‘அந்நிய பெண்,’ அதாவது விலைமகள் விவரிக்கப்படுகிறாள். a (மல்கியா 2:14-ஐ ஒப்பிடுக.) விபசாரத்தின் மீதான நியாயப்பிரமாணத்தின் தடையை அவள் மறந்துவிட்டாள். (யாத்திராகமம் 20:14) அவளுடைய பாதைகள் மரணத்திற்கு வழிநடத்துகின்றன. அவளோடு தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் ஒருபோதும், ‘ஜீவபாதைகளில் மீண்டும் வந்து சேருவதில்லை’; காரணம் அவர்களும் இன்றோ நாளையோ திரும்பவும் எழுந்து வரமுடியாத நிலையை அல்லது மரணத்தைத் தழுவுவார்கள். விவேகத்தையும் யோசிக்கும் திறனையும் உடையவர் ஒழுக்கக்கேடு எனும் மாய வலையின் கவர்ச்சிகளை அறிந்திருக்கிறார்; புத்திசாலித்தனமாக அவற்றில் சிக்கிக்கொள்ளாமல் தப்புகிறார்.
“நேர்மையானவர்கள் பூமியிலே வசிப்பார்கள்”
ஞானத்தின் பேரிலான தன் புத்திமதியின் நோக்கத்தைத் தொகுத்துரைப்பவராய் சாலொமோன் குறிப்பிடுகிறதாவது: “நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நேர்மையானவர்களின் பாதைகளைக் காத்துக்கொள்வதே அதன் நோக்கம்.” (நீதிமொழிகள் 2:20, NW) ஞானம் எத்தகைய அற்புதமான நோக்கத்தை நிறைவேற்றுகிறது! கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறும் சந்தோஷமான, திருப்திகரமான வாழ்க்கையை அது நமக்களித்து உதவுகிறது.
‘நல்லவர்களின் வழியிலே நடக்கிறவர்களுக்கு’ காத்திருக்கும் அபரிமிதமான ஆசீர்வாதங்களையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். சாலொமோன் தொடர்ந்து சொல்கிறதாவது: “நேர்மையானவர்கள் பூமியிலே வசிப்பார்கள்; குற்றமற்றவர்கள் அதிலே மீந்திருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு பிடுங்கிப் போடப்படுவார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22, NW) கடவுளுடைய நீதி வியாபிக்கும் புதிய உலகில் வசிக்கும் குற்றமற்றவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாமே.—2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்புகள்]
a “அந்நியர்” என்ற வார்த்தை நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக நடக்காதவர்களுக்கு பொருந்தியது; இவ்வாறு அவர்கள் தங்களை யெகோவாவிடமிருந்து விலக்கி வைத்துக் கொண்டனர். எனவே, அந்நியப் பெண் என குறிப்பிடப்பட்டிருக்கும் விலைமகள் வேற்றுநாட்டை சேர்ந்தவளாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
[பக்கம் 26-ன் படம்]
ஞானத்திற்காக சாலொமோன் ஜெபித்தார்; நாமும் அவ்வாறே ஜெபிக்க வேண்டும்