பாடம் 60
தொடர்ந்து முன்னேறுங்கள்!
இதுவரை நீங்கள் யெகோவாவைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டீர்கள். அவர்மேல் உங்களுக்கு நிறைய அன்பு வளர்ந்திருக்கும். அதனால், உங்களையே அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம்கூட எடுத்திருப்பீர்கள் அல்லது எடுக்க யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால், ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் முன்னேற்றம் செய்து முடித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. யெகோவாவிடம் இன்னும் நெருக்கமாவதற்குத் தொடர்ந்து முன்னேறுங்கள். அதை எப்படிச் செய்யலாம்?
1. யெகோவாவுடன் இருக்கும் நட்பை ஏன் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும்?
யெகோவாவோடு இருக்கும் நட்பைத் தொடர்ந்து பலப்படுத்த நாம் கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான், அவரைவிட்டு “ஒருபோதும் வழிதவறிப் போக மாட்டோம்.” (எபிரெயர் 2:1) யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையோடு சேவை செய்ய எது நமக்கு உதவும்? நாம் ஊழியத்தை மும்முரமாகச் செய்ய வேண்டும். வேறென்ன வழிகளில் யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யலாம் என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். (பிலிப்பியர் 3:16-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்குச் சேவை செய்வதைவிட ஒரு சிறந்த வாழ்க்கை வேறெதுவும் இல்லை!—சங்கீதம் 84:10.
2. வேறு எதையெல்லாம் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்?
இந்த பைபிள் படிப்பு இதோடு முடிந்தாலும் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணம் தொடரும். நாம் ‘புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:23, 24) நீங்கள் தொடர்ந்து பைபிளைப் படிக்கும்போதும் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், யெகோவாவையும் அவருடைய குணங்களையும் பற்றி புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னும் அதிகமாக யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைத் தொடர்ந்து செய்யுங்கள்.
3. தொடர்ந்து முன்னேற யெகோவா உங்களுக்கு எப்படி உதவுவார்?
‘கடவுள் . . . உங்களுடைய பயிற்சியை முடிப்பார். உங்களை உறுதிப்படுத்துவார், பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார்.’ (1 பேதுரு 5:10) தவறு செய்வதற்கான தூண்டுதல் நம் எல்லாருக்குமே வரும். ஆனால், அதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையானதைக் கொடுத்து யெகோவா உதவுகிறார். (சங்கீதம் 139:23, 24) அவருக்கு உண்மையோடு சேவை செய்வதற்குத் தேவையான ஆர்வத்தையும் வல்லமையையும் உங்களுக்குக் கொடுப்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்.—பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
நீங்கள் எப்படித் தொடர்ந்து முன்னேறலாம்? யெகோவா எப்படி உங்களை ஆசீர்வதிப்பார்? பார்க்கலாம்.
4. உங்களுடைய சிறந்த நண்பரோடு நல்ல பேச்சுத்தொடர்பில் இருங்கள்
யெகோவாவின் நண்பராவதற்கு ஜெபமும் பைபிள் படிப்பும் உங்களுக்கு உதவி செய்திருக்கிறது. அவரிடம் இன்னும் நெருக்கமாவதற்கு இந்த இரண்டு விஷயங்களும் எப்படி உங்களுக்கு உதவும்?
சங்கீதம் 62:8-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்த நீங்கள் எப்படி இன்னும் நன்றாக ஜெபம் செய்யலாம்?
சங்கீதம் 1:2-ஐயும் அடிக்குறிப்பையும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்த நீங்கள் எப்படி இன்னும் நன்றாக பைபிளைப் படிக்கலாம்?
உங்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும் விதத்தில் எப்படித் தனிப்பட்ட படிப்பைப் படிக்கலாம்? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வீடியோவில் வந்த எந்த ஆலோசனைகளை நீங்கள் கடைப்பிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
என்னென்ன விஷயங்களைப் பற்றிப் படிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?
5. குறிக்கோள்கள் வையுங்கள்
யெகோவாவின் சேவையில் குறிக்கோள்கள் வைத்து உழைப்பது, தொடர்ந்து முன்னேற உதவும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
நல்ல குறிக்கோள்களை வைத்து உழைத்தது கேமரனுக்கு எப்படி உதவியது?
நாம் எல்லாருமே வேறு நாட்டுக்குப் போய் ஊழியம் செய்ய முடியாது. ஆனால், நம்மால் முடிந்த குறிக்கோள்களை வைத்து உழைக்க முடியும். நீதிமொழிகள் 21:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
சபையில் நீங்கள் என்ன குறிக்கோள்களை வைக்க ஆசைப்படுகிறீர்கள்?
ஊழியத்தில் நீங்கள் என்ன குறிக்கோள்களை வைக்க ஆசைப்படுகிறீர்கள்?
இந்த வசனத்தில் இருக்கும் நியமம் உங்கள் குறிக்கோள்களை அடைய எப்படி உதவும்?
உங்களுக்கு சில குறிக்கோள்கள்
இன்னும் நன்றாக ஜெபம் செய்வது.
முழு பைபிளையும் வாசித்து முடிப்பது.
சபையிலுள்ள எல்லாரையும் தெரிந்துகொள்வது.
ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்து நடத்துவது.
துணைப் பயனியராக அல்லது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்வது.
நீங்கள் ஒரு சகோதரராக இருந்தால், உதவி ஊழியராக ஆவதற்கு உழைப்பது.
6. இன்றும் என்றும் சந்தோஷம்!
சங்கீதம் 22:26-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ நீங்கள் என்ன செய்யலாம்?
சுருக்கம்
யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் நட்பைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள், எப்போதும் நல்ல குறிக்கோள்களை வைத்து உழையுங்கள். அப்போதுதான், இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ்வீர்கள்!
ஞாபகம் வருகிறதா?
தொடர்ந்து உண்மையோடு சேவை செய்ய யெகோவா உதவுவார் என்று நீங்கள் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
யெகோவாவோடு இருக்கும் நட்பை நீங்கள் எப்படிப் பலப்படுத்தலாம்?
குறிக்கோள்களை வைப்பது தொடர்ந்து முன்னேற உங்களுக்கு எப்படி உதவும்?
அலசிப் பாருங்கள்
யெகோவா எதை உயர்வாக மதிப்பார்—நம் பக்தியை ஒரே தடவை பெரிய விதத்தில் காட்டுவதையா, வாழ்நாள் முழுவதும் அவருக்கு உண்மையோடு இருப்பதையா?
யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிறவர்கள்கூட சந்தோஷத்தை இழந்துவிடலாம். மறுபடியும் அந்த சந்தோஷத்தை எப்படி அடையலாம் என்று பாருங்கள்.
படிப்பு மற்றும் தியானிப்பதன் மூலம் சந்தோஷத்தை காத்துக்கொள்ளுங்கள் (5:25)
நீங்கள் எப்படி நல்ல குறிக்கோள்களை வைத்து அவற்றை அடையலாம்?
“ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்” (காவற்கோபுரம், ஜூலை 15, 2004)
கிறிஸ்தவர்கள் முதிர்ச்சி அடைவது ஏன் முக்கியம், நீங்கள் எப்படி முதிர்ச்சி அடையலாம்?
“‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபம்’—முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்” (காவற்கோபுரம், மே 15, 2009)