யெகோவாவுடன் நெருங்கிய நட்பு மலர
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:8, NW) மேலும் சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடினார்: “யெகோவாவுடன் நெருங்கிய நட்பு அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு உரியது.” (சங்கீதம் 25:14, NW) தம்முடன் நெருங்கிய உறவை அனுபவிக்கும்படி யெகோவா தேவன் விரும்புகிறார் என்பது தெளிவாயுள்ளது. எனினும், கடவுளை வணங்கி, அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிற எல்லாருமே அவருடன் அன்னியோன்ய பந்தத்தை ருசிக்கிறார்கள் என சொல்ல முடியாது.
நீங்கள் எப்படி? கடவுளுடன் உங்களுக்கே உரிய நெருங்கிய உறவை அனுபவிக்கிறீர்களா? அவரிடம் நெருங்கிவர உங்களுக்கு விருப்பம்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கடவுளுடன் அன்னியோன்ய பந்தத்தை நாம் எவ்வாறு மலரச் செய்யலாம்? அப்படிச் செய்வதன் அர்த்தம் என்ன? அதற்கான பதில்களை பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளின் மூன்றாவது அதிகாரம் அளிக்கிறது.
அன்புள்ள-தயவும் உண்மையும் அவசியம்
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன், நீதிமொழிகளின் மூன்றாம் அதிகாரத்தை இவ்வாறு தொடங்குகிறார்: “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.” (நீதிமொழிகள் 3:1, 2) சாலொமோன் கடவுளுடைய ஏவுதலின்கீழ் இதை எழுதினார்; எனவே, தகப்பனிடமிருந்து வரும் அறிவுரையைப் போன்ற இது, உண்மையில் யெகோவா தேவனிடமிருந்தே வருகிறது; அதுமட்டுமல்ல, நமக்காகவே கொடுக்கப்படுகிறது. பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைப் பின்பற்றும்படி நமக்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. நினைப்பூட்டுதல்கள் என்பது, அவருடைய பிரமாணம், அல்லது போதகம், கட்டளைகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதை நாம் பின்பற்றுகையில், “நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும்” அதிகமாக பெறுவோம். ஏன், இப்போதேகூட சமாதான வாழ்க்கையை நாம் அனுபவிக்கலாம்; மேலும், தீமை செய்கிறவர்கள் அடிக்கடி தழுவும் அகால மரண ஆபத்திற்குள் சிக்கிக் கொள்ளும் செயல்களை நாம் தவிர்க்கலாம். இவற்றோடுகூட, சமாதான புதிய உலகில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையோடும் இருக்கலாம்.—நீதிமொழிகள் 1:24-31; 2:21, 22.
மேலும் தொடர்ந்து சாலொமோன் சொல்லுகிறார்: “கிருபையும் [“அன்புள்ள-தயவும்,” NW] சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் [“நல்ல உள்நோக்கும்,” NW] பெறுவாய்.”—நீதிமொழிகள் 3:3, 4.
‘அன்புள்ள-தயவு’ என்பதற்கான மூலச்சொல் “பற்றுமாறா அன்பு” என்பதாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; அது, உண்மைத் தன்மையையும், ஒற்றுமையையும், பற்றுறுதியையும் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது. என்ன நேரிட்டாலும் சளைக்காமல், யெகோவாவிடம் பற்றுதலுடன் நிலைத்திருக்க நாம் தயாரா? உடன்விசுவாசிகளிடம் உள்ள நம் பந்தத்தில் அன்புள்ள-தயவைக் காட்டுகிறோமா? அவர்களுடன் என்றும் அன்னியோன்ய பந்தத்தில் பழக முயலுகிறோமா? அவர்களுடன் நித்தம் நித்தம் சேர்ந்து செயல்படுகையிலும், கடும் இக்கட்டுகளிலும்கூட, ‘அன்புள்ள-தயவுக்குரிய பிரமாணம் நம் நாவில்’ இருக்கிறதா?—நீதிமொழிகள் 31:26, NW.
அன்புள்ள-தயவு என்னும் குணம் பெருத்தவரான யெகோவா, ‘மன்னிக்க தயாராயிருக்கிறார்.’ (சங்கீதம் 86:5, NW) கடந்தகால பாவங்களை விட்டு விலகி மனந்திரும்பியவர்களாய், நம் கால்கள் இப்போது செவ்வையான பாதையைத் தொடர அனுமதிக்கிறோமென்றால், யெகோவாவிடமிருந்து, “இளைப்பாறுதலின் காலங்கள்” வரும் என்று நமக்கு உறுதியளிக்கப்படுகிறது. (அப்போஸ்தலர் 3:19) மற்றவர்களுடைய குற்றங்குறைகளை மன்னிப்பதன்மூலம், கடவுளின் மாதிரியை நாம் பின்பற்றலாம் அல்லவா?—மத்தேயு 6:14, 15.
யெகோவா, “சத்தியபரரான கடவுள்”; தம்முடன் நெருங்கிய உறவை அனுபவிக்க விரும்புகிறவர்களிடம் உண்மைத்தன்மையை எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 31:5) நாம் இரட்டை வாழ்க்கையை நடத்தினால், அதாவது, கிறிஸ்தவ தோழர்களுடன் இருக்கையில் ஒரு விதமாகவும், மற்றவர்களுடன் இருக்கையில் வேறு விதமாகவும் இரட்டை வேஷம் போட்டு ‘வஞ்சகரைப்போல்’ நடந்துகொண்டால், யெகோவா நண்பராய் இருப்பார் என உண்மையில் எதிர்பார்க்க முடியுமா? (சங்கீதம் 26:4) “சகலமும் அவருடைய [“யெகோவாவினுடைய,” NW] கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும்” இருப்பதால் அப்படி நடந்துகொள்வது எவ்வளவு முட்டாள்தனமாய் இருக்கும்!—எபிரெயர் 4:13.
அன்புள்ள-தயவையும் உண்மையையும், ‘கழுத்தில் பூண்டுகொள்ளும்’ மதிப்புமிக்க ஆபரணத்தைப் போல் கருத வேண்டும். ஏனெனில் அவை, ‘தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயை பெற’ நமக்குக் கைகொடுத்து உதவுகின்றன. இந்தக் குணங்களை நாம் யாவரறிய வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல், ‘இருதயமாகிய பலகையில் பதியவைத்து,’ இவற்றை நம் ஆள்தன்மையோடு இரண்டற கலக்கச் செய்ய வேண்டும்.
யெகோவாவில் முழு நம்பிக்கை மலரட்டும்
ஞானியான அரசன் தொடர்ந்து சொல்கிறதாவது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.
நாம் முழு நம்பிக்கை வைக்க நிச்சயமாகவே யெகோவா தகுந்தவர். சிருஷ்டிகராக, அவர் ‘மகா பெலம்’ படைத்தவர், ‘மகா வல்லமையின்’ பிறப்பிடமானவர். (ஏசாயா 40:26, 29) தம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடிந்தவர். “ஆகும்படி செய்பவர்” என்று அவருடைய பெயரின் அர்த்தமே அதை வெளிப்படுத்துகிறதே! இது, தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவருக்கிருக்கும் திறமையில் நம் நம்பிக்கையை நங்கூரமிடச் செய்கிறது! “கடவுள் எவ்வளவேனும் பொய்யராக முடியாதவராய்” இருக்கிறார் என்ற உண்மை, அவர் சத்தியத்தின் உருவாகவே இருப்பதைக் காட்டுகிறது. (எபிரெயர் 6:18) அன்பு, அவருடைய முதன்மையான பண்பு. (1 யோவான் 4:8) அவர் “தம் வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர் தம் கிரியைகளிலெல்லாம் பற்றுறுதியுள்ளவர்.” (சங்கீதம் 145:17, NW) கடவுளை நாம் நம்பவில்லை என்றால் வேறு யாரை நாம் நம்ப முடியும்? நிச்சயமாகவே, அவரில் நம் நம்பிக்கை வேர்விட்டு வளர, ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்தறிய’ வேண்டும். பைபிளிலிருந்து கற்பவற்றை நம் வாழ்க்கையில் பின்பற்றி, அது அள்ளித்தரும் நன்மைகளை தியானிப்பதே அவரை ருசித்தறிவதற்கான வழி.—சங்கீதம் 34:8, தி.மொ.
நாம் எவ்வாறு நம் ‘வழிகளிலெல்லாம் யெகோவாவை நினைத்துக்கொள்ளலாம்’? தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரர் சொல்கிறார்: “உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.” (சங்கீதம் 77:12) கடவுளைப் பார்க்க முடியாது; இருப்பினும், அவருடன் அன்னியோன்யமாக இருக்க, அவருடைய செயல்களையும், தம் ஜனங்களிடமான அவருடைய நடவடிக்கைகளையும் குறித்து மனதில் அசைபோடுவது மிக முக்கியம்.
யெகோவாவை நினைக்க உதவும் மற்றொரு முக்கிய வழி ஜெபம். அரசனாகிய தாவீது, “நாளெல்லாம்” யெகோவாவை நோக்கி இடைவிடாமல் வேண்டினார். (சங்கீதம் 86:3, தி.மொ.) தாவீது, வனாந்தரத்தில் நாடோடிபோல் அலைந்து திரிந்த காலத்தில் அடிக்கடி இரவு முழுவதும் ஜெபித்தார். (சங்கீதம் 63:6, 7) “எந்தச் சமயத்திலும் . . . ஆவியினாலே ஜெபம்பண்ணி . . . விழித்துக்கொண்டிருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (எபேசியர் 6:18) நாம் எந்தளவுக்கு அடிக்கடி ஜெபிக்கிறோம்? கடவுளுடன் தனிப்பட்ட விதத்தில் இருதயப்பூர்வமாக தொடர்புகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோமா? கடும் நெருக்கடிகளை எதிர்ப்படுகையில், உதவிக்காக அவரிடம் வேண்டுகிறோமா? முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் ஜெபத்தில் அவருடைய வழிநடத்துதலை நாடுகிறோமா? இதயத்திலுள்ளதை எல்லாம் கொட்டி யெகோவாவிடம் நாம் செய்யும் ஜெபங்கள், அவரிடம் நம் அன்னியோன்யத்தை கூட்டுகின்றன. மேலும், அவர் நம் ஜெபங்களுக்குச் செவிசாய்த்து, ‘நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ என்ற உறுதியும் நமக்கு உள்ளது.
யெகோவாவை முழுமையாய் நம்ப முடிகிறபோது, ‘நம் சுயபுத்தியின்மேல்’ அல்லது இந்த உலகத்தின் ‘முக்கிய புள்ளிகளின்’ புத்தியின்மேல் சார்ந்திருப்பது எவ்வளவு மடமை! “உன்னையே புத்திமானென்று எண்ணாதே” என்று சாலொமோன் சொல்லுகிறார். அதற்கு மாறாக, இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “யெகோவாவுக்குப் பயந்து தீமைக்கு விலகு. உடலுக்கு அது ஆரோக்கியமாகும், எலும்புகளுக்கு அது ஊனுமாகும்.” (நீதிமொழிகள் 3:7, 8, தி.மொ.) கடவுளுக்குப் பிரியமில்லாததை செய்துவிடுவோமோ என்று உள்ளூர பயப்படுவது, நம் எல்லா செயல்களையும், எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வேலிகட்டி வழிநடத்த வேண்டும். இத்தகைய பக்தியோடுகூடிய பயம், தவறானதைச் செய்வதிலிருந்து நம்மை தடுக்கிறது; மேலும் ஆவிக்குரிய விதத்தில் சுகமளித்து புத்துணர்ச்சியூட்டுகிறது.
மிகச் சிறந்தது யெகோவாவுக்கே!
வேறு என்னென்ன வகையில் நாம் கடவுளிடம் நெருங்கி வரலாம்? “யெகோவாவை உன் [“மதிப்புவாய்ந்த,” NW] பொருளாலும் உன் சகல விளைச்சலின் முதற்பலனாலும் கனம்பண்ணு” என்று அறிவுரை கூறுகிறார் இந்த ராஜா. (நீதிமொழிகள் 3:9, தி.மொ.) யெகோவாவைக் கௌரவிப்பது என்பது, அவரை உயர்வாக மதித்து, அவருடைய பெயரை யாவரறிய தெரியச் செய்யும் வேலையில் பங்குகொள்வதன் மூலமும் அதை ஆதரிப்பதன் மூலமும் அவரை வெளிப்படையாய் மேன்மைப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவைக் கௌரவிப்பதற்கு நாம் பயன்படுத்தும் மதிப்புவாய்ந்த பொருட்கள், நம் நேரம், நம் திறமைகள், நம் சக்தி, நம் பொருளுடைமைகள் ஆகியவையே. இவை நம் முதற்பலன்களாக, அதாவது நாம் கொடுக்கும் மிகச் சிறந்த “காணிக்கையாக” இருக்க வேண்டும். நம் சொத்து சுகங்களைப் பயன்படுத்தும் விதம், ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடும்’ நம் தீர்மானத்தைப் படம்படித்துக் காட்ட வேண்டுமல்லவா?—மத்தேயு 6:33.
நம் மதிப்புமிக்க பொருட்களால் யெகோவாவைக் கௌரவிப்பதற்கு கைமேல் பலன் கிடைக்காமல் போவதில்லை. “அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” என்று சாலொமோன் உறுதியாக சொன்னார். (நீதிமொழிகள் 3:10) ஆவிக்குரிய ரீதியில் செழிப்பாக இருந்தால் பொருளாதார ரீதியில் செழிப்பு தானாகவே வந்துவிடும் என்று சொல்ல முடியாதுதான்; ஆனாலும், யெகோவாவைக் கௌரவிப்பதற்கு நம் சொத்து சுகங்களை தாராளமாக பயன்படுத்தினால் நிறைவான ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதே நிஜம். கடவுளுடைய சித்தத்தைச் செய்வது இயேசுவுக்கு தெம்பூட்டும் ‘போஜனமாயிருந்தது.’ (யோவான் 4:34) அவ்வாறே, பிரசங்கிப்பது, சீஷராக்குவது போன்று யெகோவாவுக்கு மகிமையைத் தேடித்தரும் ஊழியத்தில் பங்குகொள்வது நமக்கும் போஷாக்களிக்கிறது. அந்த ஊழியத்தை தொடர்ந்து செய்கையில், நம் ஆவிக்குரிய களஞ்சியங்கள் நிரம்பி வழியும். புதிய திராட்சரசத்தால் அடையாளம் காட்டப்படுகிற நம் மகிழ்ச்சி பொங்கி வடியும்.
ஒவ்வொரு நாளுக்கும் தேவையான போதிய ஆகாரத்தை யெகோவா தருவார் என நம்பி, அவரிடம் ஜெபிக்கிறோம் அல்லவா? (மத்தேயு 6:11) சொல்லப்போனால், நம்மிடமிருக்கும் எல்லாமே நம் அன்புள்ள பரலோகத் தகப்பனாகிய யெகோவா தந்தவையே. மதிப்புவாய்ந்த நம் பொருட்களை, எந்தளவுக்கு அவருக்குத் துதியுண்டாக பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு யெகோவா இன்னும் அநேக ஆசீர்வாதங்களைப் பொழிவார்.—1 கொரிந்தியர் 4:7.
யெகோவாவின் சிட்சை தேவைதான்
யெகோவாவின் நெருங்கிய நண்பராவதற்கு சிட்சை தேவைதான்; ஏனெனில் இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுபவராய், இஸ்ரவேலின் ராஜா நமக்கு அறிவுரை கூறுகிறதாவது: “மகனே, யெகோவா சிட்சையை அசட்டை செய்யாதே, அவர் கண்டிக்கும்போது வெறுப்படையாதே. நேசமகனைப் பிதா சிட்சிப்பதுபோல் யெகோவா தாம் நேசிப்பவனையும் சிட்சிப்பார்.”—நீதிமொழிகள் 3:11, 12, தி.மொ.
எனினும், சிட்சை என்றாலே எட்டிக்காயாய் கசக்கலாம். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (எபிரெயர் 12:11) கடவுளிடம் நம் அன்னியோன்யத்தை அதிகரிக்கும் பயிற்றுவிப்பில், கடிந்துகொள்ளுதலும் சிட்சையும் இன்றியமையாத பாகங்கள். யெகோவாவிடமிருந்து வரும் கடிந்துகொள்ளுதலை நாம் பல வழிகளில் பெறலாம்; அதை, நம் பெற்றோரிடமிருந்தோ, கிறிஸ்தவ சபையிலிருந்தோ, நம் தனிப்பட்ட படிப்பில் கற்றுக்கொண்ட வேதவசனங்களின்பேரில் தியானிப்பதிலிருந்தோ பெறலாம். எந்த விதத்தில் பெற்றாலும், அது நம்மீது அவருக்கு இருக்கும் அன்பின் வெளிக்காட்டாக இருக்கும். அதை ஏற்பதே புத்திசாலித்தனமான செயல்.
ஞானமும் விவேகமும் ஆன்மீக வங்கியின் சேமிப்புகள்
அடுத்து, யெகோவாவுடன் நெருங்கிய நட்பு மலருவதற்கு ஞானமும் விவேகமும் முக்கியம் என்பதை சாலொமோன் அறிவுறுத்துகிறார். அவர் சொல்லுகிறார்: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் [“விவேகத்தை,” NW] சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW]. அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. . . . அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”—நீதிமொழிகள் 3:13-18.
யெகோவாவின், அதிசயிக்க வைக்கும் படைப்பில் வெளிப்படும் ஞானத்தையும் விவேகத்தையும் நமக்கு நினைப்பூட்டி, இந்த ராஜா சொல்லுகிறதாவது: “ஞானத்தால் யெகோவா பூமிக்கு அஸ்திபாரமிட்டார், பேரறிவால் [“விவேகத்தால்,” NW] வானங்களை ஸ்தாபித்தார். . . . மகனே, விவேகம், யுக்தி இவற்றை காத்துக்கொள், இவை உன் கண்களுக்கெதிரே நீங்காதிருப்பதாக. இவை உன் ஆத்துமாவுக்கு உயிராகும், உனது கழுத்துக்கு அலங்காரமாகும்.”—நீதிமொழிகள் 3:19-22, தி.மொ.
ஞானமும் விவேகமும் கடவுளின் குணங்கள். நாம் அவற்றை அதிகமதிகமாய் நம்மில் விருத்தி செய்துகொள்ள வேண்டும். அத்துடன், வேதவசனங்களை நாம் ஊக்கமாய் படித்து அதைக் கடைப்பிடிப்பதில் ஒருபோதும் அசட்டையாய் இருந்துவிடக் கூடாது; அப்போதுதான் தேவைப்படும்போது பயன்படுத்தும் வகையில் அவற்றை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். சாலொமோன் மேலும் சொல்லுகிறார்: “அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.”—நீதிமொழிகள் 3:23, 24.
ஆம், சாத்தானின் பொல்லாத உலகத்தின்மீது, திருடனின் வருகையைப் போன்று “அழிவு சடிதியாய்” வரவிருக்கிறது; அந்த நாளுக்காக நாம் காத்திருக்கையில், பாதுகாப்பான உணர்வோடு நடக்கலாம், மன சமாதானத்துடன் தூங்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3; 1 யோவான் 5:19) வெகு சீக்கிரம் நிகழவிருக்கிற மகா உபத்திரவத்தின்போதும், இந்த உறுதியான நம்பிக்கை நமக்கிருக்கலாம்: “சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். கர்த்தர் [“யெகோவா,” தி.மொ.] உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.”—நீதிமொழிகள் 3:25, 26; மத்தேயு 24:21.
நன்மை செய்
“நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என்று சாலொமோன் அறிவுரை கூறுகிறார். (நீதிமொழிகள் 3:27) மற்றவர்களுக்கு நன்மைசெய்வது என்பது, நம் சொத்து சுகங்களை அவர்கள் நன்மைக்காக தாராளமாய் பயன்படுத்துவதை உட்படுத்துகிறது; இதற்குப் பல வழிகள் உள்ளன. ஆனால், மெய் கடவுளுடன் அன்னியோன்ய உறவை அனுபவிக்க மற்றவர்களுக்கு உதவுவது, இந்த ‘முடிவுகாலத்தின்போது’ நாம் அவர்களுக்குச் செய்ய முடிந்த மிகச் சிறந்த உதவியல்லவா? (தானியேல் 12:4) அப்படியானால் இதுவே ஆர்வத்தோடு ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் ஏற்ற காலம்.—மத்தேயு 28:19, 20.
தவிர்க்கவேண்டிய சில பழக்கவழக்கங்களையும் இந்த ஞானமுள்ள ராஜா வரிசையாக பட்டியலிட்டு குறிப்பிடுகிறதாவது: “உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே. கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.”—நீதிமொழிகள் 3:28-31.
தன் அறிவுரைக்கான காரணத்தைத் தொகுத்துரைப்பவராய், சாலொமோன் சொல்கிறதாவது: “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” தி.மொ.] அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் [“நெருங்கிய உறவு,” NW] இருக்கிறது. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் [“யெகோவாவின்,” தி.மொ.] சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.”—நீதிமொழிகள் 3:32-35.
யெகோவாவிடம் நெருங்கிய நட்பை அனுபவித்து மகிழ, தவறானவையும் தீங்கு விளைவிப்பவையுமான சதித்திட்டங்களில் நாம் ஈடுபடக்கூடாது. (நீதிமொழிகள் 6:16-19) கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்தால் மாத்திரமே, அவருடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் பெறுவோம். கடவுளுடைய ஞானத்திற்கு இசைய நாம் நடப்பதை மற்றவர்கள் காண்கையில், நாமே எதிர்பாராத விதத்தில் அவர்கள் நம்மை கௌரவிக்கலாம். ஆகையால், பொல்லாங்கும் வன்முறையுமிக்க இந்த உலகில் தவறான வழிகளை விட்டு ஒதுங்குவோமாக. நிச்சயமாகவே, நேர் வழியைப் பின்பற்றி, யெகோவாவுடன் அன்னியோன்யத்தை வளர்த்துக் கொள்வோமாக!
[பக்கம் 25-ன் படங்கள்]
‘மதிப்புவாய்ந்த உன் பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணு’