வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு திறவுகோல்
“நாம் ஒரு சீர்கெட்டுக்கொண்டிருக்கும் குடும்ப அமைப்பைக் கொண்டிருக்கிறோம்,” என்று கடந்த வருடம் ஐ.மா. தலைவர் பதவி தேர்தலுக்கு நின்ற வேட்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். உண்மையில், குடும்பத்தின் சீர்கெட்டிருக்கும் அளவு, அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. “அதே காலப்பகுதியில், பொருளாதார அல்லது தொழில் சார்ந்த புள்ளிவிவரங்களில் அதைப்போன்ற அளவு மாற்றங்கள், நம்மை ஆச்சரியத்தில் வாய்பிளக்கச் செய்யும்,” என்று ஃபார்ச்யூன் பத்திரிகை அறிக்கை செய்தது.
பைபிள் நியமங்களைப் பின்பற்ற முயலும் குடும்பங்கள்கூட, அடிக்கடி கவலைக்குரியவிதத்தில் பாதிக்கப்படுகின்றன. ஒருசில வருடங்களுக்கு முன், பருவ வயதிற்குக் குறைவான வயதுள்ள ஆறு பிள்ளைகளின் தகப்பனிடம், நலன் கருதும் உடன் கிறிஸ்தவர் ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது: “நீங்கள் உங்கள் பிள்ளைகளில் நான்குபேரை உலகத்திடம் இழந்துவிடும்படி எதிர்பார்க்கலாம்.” இருந்தாலும், இது தன்னுடைய பிள்ளைகளில் ஒருவருக்குக்கூட சம்பவிக்கவேண்டும் என்று இந்தத் தகப்பன் நம்பவில்லை. அவர் ஏனென்று விவரித்தார்.
“எங்களுடைய பிள்ளைகள் உண்மையில் எங்களுடையவர்கள் அல்லர்,” என்று அவர் சொன்னார். “அவர்கள் யெகோவா தேவனால் என் மனைவியிடமும் என்னிடமும் ஒப்படைக்கப்பட்ட, அவரிடமிருந்து கிடைத்த ஒரு ‘சுதந்தரம்’ அல்லது ஒரு பரிசாக இருந்தனர். நாங்கள் அவர்களைச் சரியான வழியில் பயிற்றுவித்தால், ‘அவர்கள் அதைவிட்டு விலகிச் செல்லமாட்டார்கள்,’ என்றும் அவர் சொன்னார். ஆகவே, நாங்கள் எப்போதும், அவர்கள் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதைப்போல் அவர்களைக் கவனித்துக்கொள்ள முயன்றிருக்கிறோம்.”—சங்கீதம் 127:3; நீதிமொழிகள் 22:6.
வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கான ஒரு திறவுகோலை அந்தத் தகப்பன் இங்கு அடையாளம் காட்டினார்—கடவுளுடைய சொத்தைக் கவனிப்பதைப்போலப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கவனிக்கவேண்டும். உங்களுடைய நல்ல வழிநடத்துதலுக்குப் பிள்ளைகள் ஒவ்வொரு சமயத்திலும் செவிகொடுப்பார்கள் என்று இது அர்த்தப்படுத்தாதபோதிலும், கடவுள் உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகளைக் கவனிப்பதற்கான பொறுப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு முக்கிய பொறுப்பு
நீங்கள் இந்தக் கவனிப்பைப் பயபக்தியுடனும் ஆழ்ந்த அக்கறையுடனும் அளிக்கவேண்டும், அசட்டை மனப்பான்மையுடன் அல்லது வேண்டாவெறுப்பாக அல்ல. அவர் உங்களுக்குக் கொடுத்த சுதந்தரம் அல்லது பரிசுக்கு நீங்கள் கடவுளுக்குப் பதில் சொல்வீர்கள் என்ற உணர்வுடன் அதற்காக உழையுங்கள். குழந்தை வளர்ப்பின் பல்வேறு வழிகளை நீங்கள் சோதனைசெய்து பார்க்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் கொடுக்கப்பட்ட அவருடைய கட்டளைகள் மட்டுமே பெற்றோருக்குத் தேவை; இவற்றை அவர்கள் கவனமாகப் பின்பற்றவேண்டும்.
இது யெகோவா தேவனின் கட்டளை: “நீ [என் வார்த்தைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.” பைபிள் இவ்வாறும் உந்துவிக்கிறது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளை . . . யெகோவாவிற்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து வளர்த்து வருவீர்களாக.”—உபாகமம் 6:7-9; எபேசியர் 6:4, NW.
ஆகையால், பிள்ளைகளைக் கவனித்துப்பேணுவது தினசரி கவனிப்பைத் தேவைப்படுத்துகிறது; ஆம், அது உங்களுடைய நேரத்தை, முக்கியமாக உங்களுடைய அன்பையும் ஆழ்ந்த அக்கறையையும் தாராளமாகக் கொடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்த அடிப்படை தேவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பெற்றோர், ஒரு வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்ன தேவை என்று கடவுள் சொல்லுகிறாரோ அதைச் செய்கின்றனர்.
இது அதிகத்தைக் கேட்பதாக இருக்கிறதென நீங்கள் நம்புகிறீர்களா? அநேக பெற்றோர் அவ்வாறு உணருவதாகத் தங்கள் செயல்களின்மூலம் காண்பிக்கின்றனர். இருப்பினும், கடவுளிடமிருந்து வரும் இந்தப் பரிசுகள்—உங்கள் பிள்ளைகள்—உண்மையிலேயே அதிகப்படியான விசேஷித்த கவனத்தைப் பெற தகுதியுடையவர்களாய் இருக்கின்றனர்.
அவர்களை எவ்வாறு கவனித்துப்பேணுவது
ஞானமாக, பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியை அனுபவித்துக் களித்திருப்பவர்களின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு பத்திரிகை, “ஆச்சரியப்படத்தக்க குடும்பங்கள்” என்ற அதன் அட்டைப்பட கதையில், இளைஞரை வெற்றிகரமாக வளர்ப்பதில் முக்கியமாக இருக்கும் நான்கு காரியங்களைக் குறிப்பிட்டது: “[1] மனதைத் தூண்டுவிக்கக்கூடிய சாப்பாட்டு நேர சம்பாஷணை, [2] நல்ல புத்தகங்களுடைய தொடர்பு, [3] படைப்பாற்றல் திறனுடைய மாதிரிகளின் தூண்டுவிப்பு, [4] காத்துக்கொள்ளவேண்டிய ஒரு குடும்ப பாரம்பரியம் இருப்பதை அறிந்திருத்தல்.”—ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (U.S.News & World Report), டிசம்பர் 12, 1988.
“சாப்பாட்டு நேர சம்பாஷணை” என்பதைக் குறித்ததில், அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுவதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சாப்பாட்டு நேரத்தில் உங்களுடைய குடும்பம் ஒழுங்காக ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து, அதன்மூலம் தோழமைக்கும் சம்பாஷணையைத் தூண்டுவிப்பதற்கும் தினசரி வாய்ப்புகளை அளிக்கிறதா? அத்தகைய சமயங்கள் பிள்ளைகளுக்கு அத்தியாவசியமானதும் நினைவில் நிலைப்பவையுமாய் இருக்கின்றன; அவை அவர்களுக்கு ஒரு நிலைத்திருக்கும், பாதுகாப்பான உணர்ச்சியை அளிக்கின்றன. ஓர் ஆறு வயது சிறுவன் தான் சாப்பாட்டு நேரங்களை விரும்புவதாகச் சொன்னான்; “ஏனென்றால் ஒருவரைப்பற்றி ஒருவர் கவலைக்கொள்ள வேண்டியதில்லை,” எல்லாரும் ஒன்றாக இருப்பதால்.
சாப்பாட்டு நேர சம்பாஷணையின் தரத்தைப்பற்றியதென்ன? நம்முடைய கடவுளுக்கான சேவையை அல்லது கடவுளுடைய சிருஷ்டிப்பின் சம்பந்தமான காரியங்களைக் கலந்தாலோசிக்கும் பைபிள் மற்றும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களை உள்ளடக்கும் “பெரிய புத்தகங்க”ளின் பொருளடக்கத்தை மையமாகக் கொண்டு அது அடிக்கடி அமைகிறதா? இந்த வகையான சாப்பாட்டு நேர சம்பாஷணையுடன்கூட, ஓர் ஒழுங்கான படிப்புத் திட்டத்தின் மூலம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளினுள் யெகோவாவுக்கும் அவருடைய நீதியுள்ள சட்டங்களுக்கும் ஓர் அன்பை வளர்க்க வேண்டும்.
“ஒழுங்காக ஒன்றுசேர்ந்து உணவைச் சாப்பிடுவது ஒரு பிரச்னையாக இருக்கவில்லை,” என்று ஏற்கெனவே குறிப்பிட்ட ஆறு பிள்ளைகளின் தகப்பன் விவரித்தார். “இது தானாகவே நிகழ்ந்தது, அது எங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கேதுவாகச் சேவித்தது. ஆனால் பைபிள் படிப்பிற்காக ஓர் ஒழுங்கான திட்டத்தைக் கொண்டிருப்பது கடினமாக இருந்தது.” ஒரு நாளின் கடின உழைப்பிற்குப்பின் முற்றிலும் சோர்ந்திருப்பதால், அவர் சில சமயங்களில் படிப்பின்போது உறங்கிவிடுவார். இருந்தாலும், அவர் ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பைத் தன் பிள்ளைகளுக்கு நடத்துவதை ஒருபோதும் விட்டுவிடவில்லை; மேலும் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் ஒழுங்காகப் பேசி, நீண்ட நேரங்கள் அவர்களுக்குச் செவிசாய்த்துக் கேட்டார்.
அர்த்தமுள்ள சாப்பாட்டு நேர சம்பாஷணையைத் துவங்கி, பெரிய புத்தகங்களின் தொடர்பைக் கொடுப்பதோடுகூட, “படைப்பாற்றல் திறனுடைய மாதிரிகளின் தூண்டுவிப்பு” உங்களுடைய பிள்ளைகளுக்குக் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறீர்களா? உண்மை என்னவென்றால், அவர்கள் வெற்றிகரமான வயதுவந்த ஆட்களாக வேண்டுமானால், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுடன் ஒழுங்காகக் கூட்டுறவுகொள்ளும்படி உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பாடு செய்வது அத்தியாவசியமானதாகும்.
கடைசியாக, “காத்துக்கொள்ளவேண்டிய ஒரு குடும்ப பாரம்பரியம் இருப்பதை அறிந்திருத்தல்” என்பதைப் பற்றியதென்ன? தாங்கள் காத்துக்கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிற குடும்ப தராதரங்கள் இருக்கின்றன—குறிப்பிட்ட நடத்தை, பேச்சு, உடுத்தும் பாணி, நடையொழுங்கு, போன்றவை, ஏற்கத்தக்கதல்ல மற்றும் குடும்ப பாரம்பரியத்தை மீறுவதாக இருக்கிறது—என்பதை உங்கள் பிள்ளைகள் புரிந்துகொள்வது அவசியமாகும். குடும்ப பாரம்பரியத்தை மீறுதல் ஒரு வினைமையான காரியமாக இருக்கிறது—பண்டைய முற்பிதாவாகிய யாக்கோபின் பையன்கள், தங்களுடைய வெட்கக்கேடான நடத்தையால் ‘தேசத்தில் அவருடைய வாசனையைக் கெடுத்தபோது’ அவர் வருத்தப்பட்டதுபோல் நீங்களும் மிகவும் வருத்தப்படுவீர்கள்—என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.—ஆதியாகமம் 34:30.
தன் பிள்ளைகளைக் கடவுளின் சொத்தாகக் கருதிய இந்த ஆறு பேரின் தகப்பன் “குடும்ப பாரம்பரியம்” என்பதைக் குறிப்பாக அழுத்தினார். உடை, சிகை அலங்காரம் மற்றும் உலகின் வழிகளிலிருந்து பிரிந்திருப்பது பற்றிய குடும்ப தராதரம் எப்படிச் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் ஆவி மற்றும் வழிநடத்துதலுக்கு இசைந்து செல்வதாய் இருக்கிறது என்பதுபற்றி அவர் தொடர்ந்து தன் பிள்ளைகளுடன் காரணங்காட்டிப் பேசினார். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிக அளவு நேரம், அன்பு மற்றும் ஆழ்ந்த அக்கறையின் பலனாக—அவர்கள் செல்லவேண்டிய வழியில் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டதால்—பிள்ளைகள் ஆறு பேரும் ‘அவர்களுக்கான வழியிலிருந்து விலகாமல்’ தக்கவாறு பிரதிபலித்திருக்கின்றனர்.—நீதிமொழிகள் 22:6.
உலகமுழுவதிலும், ஆயிரக்கணக்கான அத்தகைய பலமான குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் தங்கள் சிருஷ்டிகருக்கு என்னே ஒரு துதியாக இருக்கின்றனர், மேலும் தன்னலமற்ற, அன்பான பெற்றோருக்கு என்னே ஒரு வெகுமதி! வருடங்கள் கடந்துசெல்கையில், அத்தகைய பெற்றோர் தங்களுடைய முயற்சிகளால் பயனடைந்த பிள்ளைகளால் மேலும் மேலுமாக மதித்துணரப்படுகின்றனர். தயவுசெய்து அடுத்து, தேவபக்தியுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை ஆராய்ந்து, அதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மதிப்புவாய்ந்த பாடங்களைக் கவனியுங்கள்.