உங்களை மகிழ்விக்கக்கூடிய வேலை
“நான் ஓர் அச்சாளனாக என்னுடைய வேலையை உண்மையிலேயே நேசித்தேன்,” என்று சொல்லுகிறார் இத்தாலியின் ஜெனோவாவைச் சேர்ந்த அன்டோனியோ. “எனக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டது, இதுதானே என்னை அநேக மணிநேரம் ஓவர்டைம் செய்ய வைத்தது. நான் வயதில் இளையவனாக இருந்த போதிலும், ஒரு சில வருடங்களில் நான் என்னுடைய முதலாளியின் வலது கரமாக ஆனேன்.” அநேகரைக் கடினமாக வேலை செய்யத் தூண்டிடும் இலக்குகளை அன்டோனியோ அடைந்துவிட்டதாகத் தெரிகிறது: செல்வம், அந்தஸ்து, மற்றும் தான் அனுபவித்த ஒரு கவர்ச்சியான வேலை.
அன்டோனியோ ‘தன்னுடைய எல்லாக் கடின உழைப்புக்கும் நன்மையையும் காண்கிறவராக’ இருந்தாரா? (பிரசங்கி 3:13) அப்படிப்பட்ட வேலை உண்மையிலேயே அவரை மகிழ்வித்ததா? “எங்களுடைய வேலை வெறிகொண்ட வாழ்க்கைப்பாணியால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணத்தால், ஒரு குடும்பமாக நாங்கள் பிரச்னைகளைக் கொண்டிருக்க ஆரம்பித்தோம். இது எங்கள் மகிழ்ச்சியை இழக்கச் செய்தது.” அன்டோனியோவும் சரி, அவருடைய மனைவியும் சரி, இருவருமே தாங்கள் நிறைவான வேலைகளைக் கொண்டிருந்தபோதிலும் மகிழ்ச்சியாயிருக்கவில்லை. உங்களைப் பற்றியதென்ன? ‘உங்களுடைய எல்லாக் கடின உழைப்புக்கும் நன்மை காண்கிறவர்களாக’ நீங்கள் இருக்கிறீர்களா? உங்களுடைய வேலை உங்களை உண்மையிலேயே மகிழ்விக்கிறதா?
சரியான உள்நோக்கங்களா?
கடினமாக வேலை செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் நோக்கமுடையது. சில நாடுகளில், ஒவ்வொரு நாளின் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் ஆட்கள் நீண்ட மணிநேரங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தங்களுடைய பிள்ளைகள் ஒரு மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருக்க சிலர் இரவும் பகலுமாகக் கடுமையாய் உழைக்க வேண்டியதாயிருக்கிறது. மற்றவர்கள் செல்வத்தைச் சேர்ப்பது ஒரு கட்டாயத் தேவை என்று வேலை செய்கிறார்கள்.
பிலிப்பீன்ஸிலுள்ள லியோனிடா இரண்டு வேலைகள் செய்துவந்தாள். அவள் பகல் நேரத்தில் ஒரு வங்கியிலும் மாலையில் மூன்று அல்லது நான்கு மணிநேரத்திற்கு ஒரு கல்லூரியில் கற்பிப்பவளாகவும் வேலை செய்துவந்தாள். அவளுக்குக் கிடைத்த அந்தக் கூடுதல் பணம் உண்மையிலேயே பிரயோஜனமாயிருந்ததா? “எந்த நேரம் பார்த்தாலும் நான் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்,” என்று விவரிக்கிறாள். “எனக்கு போர் அடித்தது. திருப்தியில்லாமல் அந்த வேலையைச் செய்துவந்தேன்.”
இல்லை, பணத்திற்காக மட்டுமே வேலை செய்வது உண்மையான திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருவதில்லை. “ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே,” என்கிறான் ஞானமுள்ள அரசன் சாலொமோன். “அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.” (நீதிமொழிகள் 23:4, 5) சில கழுகுகள் மணிக்கு 80 மைல் வேகத்தில் பறப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. கடினமாக உழைத்துப் பெறப்படும் செல்வம் எவ்வளவு வேகமாகப் பறந்துசென்றிடும் என்பதை இது காட்டுகிறது. ஒருவன் செல்வத்தைக் கூட்டினாலும், அவன் மரிக்கும்போது அதில் ஒன்றையும் எடுத்துச்செல்ல முடியாது.—பிரசங்கி 5:15; லூக்கா 12:13–21.
உயிர்வாழ்வதற்காகச் சம்பாதிப்பதிலேயே ஆழ்ந்துவிடுவது சிலசமயங்களில் கடுமையான ஆபத்துகளை முன்வைக்கிறது. அது பண ஆசைக்கு வழிநடத்தக்கூடும். முதல் நூற்றாண்டில் பரிசேயர்கள் என்ற ஒரு மதத் தொகுதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய பண ஆசைக்குப் பேர்போனவர்கள். (லூக்கா 16:14) ஒரு சமயத்தில் பரிசேயனாக இருந்த கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல், அவர்களுடைய வாழ்க்கைப் பாணியை முற்றிலும் அறிந்தவனாக இருந்தான். (பிலிப்பியர் 3:5) “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பவுல் எச்சரிக்கிறான். (1 தீமோத்தேயு 6:9, 10) ஆம், “பண ஆசை,” அதற்காக எதையும் எல்லாவற்றையும் செய்வது, ஒருவருடைய வாழ்க்கையைப் பாழாக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு போக்கு மகிழ்ச்சியில் விளைவடைவதில்லை.
சிலர் கடினமாக உழைப்பதன் நோக்கம் ஒரு தொழில் நிறுவனத்தில் முன்னேற்றத்தின் படியில் ஏறிச்செல்வதாகவே இருக்கிறது. என்றபோதிலும், அவர்கள் கடைசியில் ஓர் உண்மையை எதிர்ப்படுகிறார்கள். “நிர்வாகத்தின் இடை ஸ்தானத்தை அடைவதற்காகத் தங்களுடைய 20-களிலும் 30-களின் ஆரம்பத்திலும் தியாகங்களைச் செய்த விரைவுச் செல்வத்தை நாடும் ஆட்கள், எல்லாருமே மேலிடத்துக்குப் போய்விடமுடியாது என்ற தங்கள் விருப்பத்துக்கு முரணான, ஆனால் தவிர்க்க முடியாத உணர்வுக்கு வருகிறார்கள். தங்களுடைய கடினமான உழைப்பின் அசதியினால், இதெல்லாம் என்ன என்று கேட்கத் தூண்டப்படுகிறார்கள். ஏன் இவ்வளவு கடினமாகப் போராட வேண்டும்? யாருக்கு அக்கறை இருக்கிறது?” என்று ஃபார்ச்சூன் (Fortune) பத்திரிகை கூறுகிறது.
அப்படிப்பட்ட மனிதரில் மிஜுமோரி என்ற பெயர்கொண்ட ஒருவருடைய வாழ்க்கை உலகில் முன்னேற வேண்டும் என்பதையே மையமாகக் கொண்டிருந்தது. ஜப்பானில் மிகப் பெரிய ஒரு வங்கி மேலாண்மைப் பதவிக்குரிய ஒரு வாழ்க்கைப் பணியைத் தொடர்ந்த அவர் தன்னுடைய குடும்பத்துக்காக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்த பின்பு, அவருடைய உடல் நலம் பாழடைந்தது, அவர் நிச்சயமாகவே மகிழ்ச்சியாக இல்லை. அவர் சொல்லுகிறார்: “பிரபலமாக இருக்க வேண்டும் என்ற மக்கள் மத்தியில் உயர்ந்த பதவிகளுக்கான போட்டி ‘மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.’”—பிரசங்கி 4:4.
ஆனால் அன்டோனியோவைப் போல தங்களுடைய வேலையை அனுபவித்து மகிழ்கிறவர்களைப் பற்றியதென்ன? தன்னுடைய வேலையில் கவர்ந்திழுக்கப்பட்டவராக, அன்டோனியோ வேலை என்ற பீடத்தில் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைப் பலி செலுத்தினார். மற்றவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் உயிரையுங்கூட தியாகம் செய்கிறார்கள் என்பதை அளவுக்கு மிஞ்சி கடினமாக வேலை செய்யும் அநேக ஜப்பானிய உயர் அதிகாரிகளின் திடீர் மரணம் வெளிப்படுத்துகிறது. துக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களுக்கு ஆலோசனை தரும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்தோடு ஒரு நாளில் மட்டும் 135 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டது வியப்பளித்தது.
சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். இயேசு இந்த ஆவியை உற்சாகப்படுத்தினார். (மத்தேயு 7:12; யோவான் 15:13) மற்றவர்களுக்கு உதவிசெய்யும் இந்தப் பிரயோஜனமான வேலையில் சுறுசுறுப்பாக இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.—நீதிமொழிகள் 11:25.
என்றபோதிலும், இப்படிப்பட்ட பெருந்தன்மை கொண்ட கடின உழைப்பு படுகுழிகளின்றி இருப்பதில்லை. உதாரணமாக, யூதேய அரசன் உசியா வனாந்தரத்தில் கிணறுகள் வெட்டும் பிரமாண்டமான பொதுப் பணியில் ஈடுபட்டான். உசியா தன்னுடைய மக்களின் நன்மையை மனதிற்கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அந்தச் சமயத்தில் அவன் “யெகோவாவைத் தேடினவனாய்” இருந்தான். ராஜாக்கள் தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற தெய்வீகக் கட்டளைக்கு அவன் செவிசாய்த்திருக்க வேண்டும். (2 நாளாகமம் 26:5, 10; உபாகமம் 17:14–20) இது அவனுடைய படைபலத்தின் வெற்றியைக் கூட்டினதுமட்டுமின்றி “அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று.” ஆனால் அவன் பலங்கொண்டபோது, மேட்டிமையடைந்தான். இது அவனுடைய வீழ்ச்சியில் விளைவடைந்தது. (2 நாளாகமம் 26:15–20; நீதிமொழிகள் 16:18) மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே தன்னை அர்ப்பணித்து, ஆனால் தன்னுடைய மன நிறைவினாலும் தற்பெருமையாலும் தூண்டப்பட்டும் ஒருவருங்கூட வீழ்ச்சியைக் காணக்கூடும். அப்படியிருக்க, ஒருவர் ஏன் கடினமாக வேலைசெய்ய விரும்பவேண்டும்?
மனிதன் வேலை செய்வதற்காக உண்டாக்கப்பட்டான்
பூமியில் வாழ்ந்த எவரைக் காட்டிலும் மேன்மையான விதத்தில் நன்மை செய்திருக்கும் ஒருவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர்தாமே இயேசு கிறிஸ்து. (மத்தேயு 20:28; யோவான் 21:25) அவர் வாதனைமரத்தில் மரித்தபோது, இப்படியாகச் சொன்னார்: “அது நிறைவேற்றப்பட்டது.” (யோவான் 19:30, NW) அவருடைய 33 1/2 ஆண்டு வாழ்க்கை நிறைவான ஒன்றாய் இருந்தது.
“எந்த வேலை உங்களை மகிழ்விக்கக்கூடும்?” என்ற இந்தக் கேள்விக்குப் பதில் காண இயேசுவின் வாழ்க்கை உதவி செய்கிறது. தம்முடைய பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே அவருக்கு ஒப்பில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதுபோல, நம்முடைய சிருஷ்டிகரின் சித்தத்தைச் செய்வதே நமக்கு சாதனையின் ஓர் உணர்வைத் தந்து, நம்மை மகிழ்விக்கக்கூடும். ஏன்? ஏனென்றால் அவர் நம்முடைய உருவையும் நம்முடைய தேவைகளையும் நம்மைவிட அதிகமாக அறிந்திருக்கிறார்.
முதல் மனிதனாகிய ஆதாமைக் கடவுள் உண்டாக்கிய போது, அவர் அவனுக்கு உடலையும் மனதையும் உட்படுத்திய வேலையைக் கொடுத்தார். (ஆதியாகமம் 2:15, 19) பூமியிலுள்ள சகல ஜீவ ஜந்துக்களையும் ‘கீழ்ப்படுத்திக் கொண்டிருந்த’ ஆதாம் மேலாளராக இருக்கும் ஒரு வேலையைக்கூடக் கொண்டிருந்தான். (ஆதியாகமம் 1:28) ஆதாம் இந்த ஏற்பாட்டுக்கு இசைவாய்த் தன்னை அமைத்துக்கொண்டிருந்தவரையில் அவனுடைய வேலை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ஒவ்வொரு சிறு சிறு வேலை உத்தரவாதமும் சர்வவல்லவரைப் பிரியப்படுத்துவதற்கு இன்னொரு வாய்ப்பாக இருந்தது.
ஆனால் ஆதாமைக் குறித்ததில் இந்நிலைத் தொடரவில்லை. அவன் கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள தீர்மானித்தான். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் ஆதாம் இனிமேலும் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் தான் விரும்பியதையே செய்ய விரும்பினான். அவன் சிருஷ்டிகருக்கு விரோதமாகப் பாவம் செய்தான். அவனுடைய தீர்மானத்தின் பலனாக, ஆதாமும், அவனுடைய மனைவியும் அவனுடைய சந்ததியார் யாவரும் “மாயைக்குக் கீழ்ப்படுத்தப்” பட்டார்கள். (ரோமர் 5:12; 8:21) மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக, வேலை சலிப்பை ஏற்படுத்தியது. ஆதாமுக்கு எதிராகக் கடவுள் வழங்கிய தீர்ப்பு இந்த வார்த்தைகளை உட்படுத்தியது: “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதன் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குறுக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும், உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்.” (ஆதியாகமம் 3: 17–19) மனிதனின் சிருஷ்டிகரைப் பிரியப்படுத்துவதையே அதன் மேன்மையான இறுதி இலக்காக கொண்டிருக்க வேண்டிய வேலை, இப்பொழுது தனக்கான ஆகாரத்தைக் கொள்வதற்கு வேதனையுடன்கூடிய கடுமையான உழைப்பையே குறிப்பதாயிருந்தது.
இந்த உண்மைகளிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? இந்த முடிவுக்குத்தான்: கடினமாக வேலை செய்வது, நம்முடைய வாழ்க்கை தெய்வீக சித்தத்தைச் செய்வதை மையமாகக் கொண்டிருக்கும்போதுதானே நிலையான திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் ‘நன்மையைக் காணுங்கள்’
தெய்வீக சித்தத்தைச் செய்வது இயேசு கிறிஸ்துவுக்கு உணவு போன்று இருந்தது—அனுபவித்து மகிழ்வதற்கும் தம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்குமான ஒன்றாய் இருந்தது. (யோவான் 4:34) வேலையில் அதுபோன்ற மகிழ்ச்சி எப்படி உங்களுடையதாகவும் இருக்கக்கூடும்?
உங்களுக்கான “யெகோவாவின் சித்தம் என்ன” என்பதை நீங்கள் கண்டுணர வேண்டும். (எபேசியர் 5:17) மனிதவர்க்கம் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்திற்கு” திரும்ப நிலைநாட்டப்படவேண்டும் என்பது அவருடைய சித்தம். (ரோமர் 8:20; 2 பேதுரு 3:9) இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அகில உலக கூட்டிச்சேர்க்கும் வேலை இப்பொழுது நிறைவேற்றப்பட்டுவருகிறது. மிகுந்த திருப்தியளிக்கும் இந்த வேலையில் நீங்களும் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட வேலை நிச்சயமாகவே உங்களை மகிழ்விக்கும்.
முன்னதாகக் குறிப்பிடப்பட்ட அன்டோனியோ பின்னர் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கண்டார். அவரும் அவருடைய மனைவியும் “மாயையாக” இருக்கும் தங்களுடைய உலகப்பிரகாரமான வேலைகளை வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்து அவற்றில் ஆழ்ந்துவிட்ட போது அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அப்பொழுதுதானே அவர்கள் வீட்டுப் பிரச்னைகளைக் கொண்டிருக்க ஆரம்பித்தார்கள். அந்த நிலையை உணர்ந்து, அவருடைய மனைவி தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய தீர்மானித்து, கடவுளுடைய ராஜ்யத்தை முழு நேரமாகப் பிரசங்கிக்கும் வேலையில் ‘மும்முரமாகப் பிரயாசப்பட’ ஆரம்பித்தாள்.—லூக்கா 13:24.
“உடனடியாகவே நாங்கள் பெரிய மாற்றத்தைக் கண்டோம்,” என்கிறார் அன்டோனியோ. “அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்ளும் காரியம் இனிமேலும் இருக்கவில்லை. எங்களுடைய குடும்பத்துக்குச் சமாதானம் திரும்பியது.” “நித்திய ஜீவனை” அர்த்தப்படுத்திடும் அறிவை எடுத்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மகிழ்ச்சியை அவருடைய மனைவி அறுவடை செய்தாள். (யோவான் 17:3) அவளுடைய மகிழ்ச்சியைக் கண்டு, எது உண்மையிலேயே பிரயோஜனமுள்ளது என்பதை மறுபரிசீலனைச் செய்வதற்கு அது அன்டோனியோவைத் தூண்டியது. கடவுளை முழு ஆத்துமாவுடன் சேவிக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை வெற்றிகண்டது. வேலையில் பதவி உயர்வை மறுத்து, தன்னுடைய உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ராஜினாமா செய்தார். அந்த மாற்றம், அவர் ஒரு தாழ்ந்த வேலையை எடுக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கின போதிலும், அன்டோனியோவும் அவருடைய மனைவியுமாகிய இருவருமே கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவர்களாக கிறிஸ்தவ ஊழியத்தில் தங்களுடைய பெரும்பகுதியான நேரத்தைச் செலவழிப்பதில் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெரிய மாற்றங்களைச் செய்யும் நிலையில் எல்லாரும் இல்லை என்பது உண்மைதான். முன்னதாகக் குறிப்பிடப்பட்ட ஜப்பானிய வங்கி ஊழியராகிய மிஜுமோரி, கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகத் தன்னுடைய ஊழியத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். அதே சமயத்தில் தன்னுடைய உலகப்பிரகாரமான வேலையாகிய மேலாண்மைப் பொறுப்புடன் தன் குடும்பத்தையும் ஆதரித்து வருகிறார். என்றபோதிலும், அவருடைய வாழ்க்கை இனிமேலும் உலகப்பிரகாரமான வேலையை மையமாகக் கொண்டு இயங்குவதில்லை, ஆனால் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே மையமாகக் கொண்டிருக்கிறது. அவருடைய உலகப்பிரகாரமான வேலை அவரைப் பராமரிக்க உதவுவதோடுகூட, அந்த நோக்கத்தை நிறைவேற்றவும் செய்கிறது. இப்பொழுது உலகப்பிரகாரமான வேலை ஒன்றைச் செய்வதும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
உங்களுடைய வேலையின் பேரில் இந்த ஒரு நோக்குநிலையை வளர்ப்பீர்களானால், “மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்”வதில் உங்களை மும்முரமாக ஈடுபடுத்துவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. (கொலோசெயர் 3:22) போட்டி மிகுந்த இந்தச் சமுதாயத்தில் அப்படிப்பட்ட நேர்மையான உழைப்பு நீடிக்காததாகத் தென்படக்கூடும், ஆனால் மிஜுமோரி ஒப்புக்கொள்வது போன்று, அப்படிப்பட்ட நியமங்களை நீங்கள் பொருத்திக்கொள்ளும்போது, நீங்கள் நம்பப்படுவீர்கள், மதிக்கப்படுவீர்கள். அவர் பதவி உயர்வுக்காக வேலை செய்வதை நிறுத்திவிட்டாலும், அது அவருக்குக் கிடைத்தது.—நீதிமொழிகள் 22:29.
ஆம், உங்களுடைய வாழ்க்கை கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை மையமாகக்கொண்டிருப்பதுதானே கடினமாக வேலை செய்வதில் மகிழ்ச்சியைக் காண்பதற்கு அடிப்படை. எனவேதான் சாலொமோன் அரசன் இப்படியாக முடிக்கிறான்: “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:12, 13. (w89 7/15)
[பக்கம் 7-ன் படம்]
உங்களுடைய குடும்ப வாழ்க்கை பைபிள் படிப்பையும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையும் மையமாகக் கொண்டிருக்கும்போது அதுவே கடினமான வேலையின் பலனை அனுபவித்து மகிழ்வதற்கு திறவுகோலாக இருக்கிறது