உங்கள் மனப்பூர்வமான சேவை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கட்டும்!
“[அவர்கள்] மனப்பூர்வமாகப் போனார்கள். அதனால், யெகோவாவைப் புகழுங்கள்!”—நியா. 5:2.
1, 2. (அ) யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையைப் பற்றி அவர் என்ன நினைப்பதாக எலிப்பாசும் பில்தாதும் சொன்னார்கள்? (ஆ) யெகோவா இதைப் பற்றி என்ன சொன்னார்?
பல வருஷங்களுக்கு முன்பு, கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனாகிய யோபுவிடம் பேசுவதற்கு 3 பேர் போனார்கள். அதில், தேமானியனான எலிப்பாஸ் யோபுவிடம் இந்தச் சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டார்: “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? ஒருவன் விவேகமாக இருப்பதால் அவருக்கு என்ன பயன்? நீ நீதிமானாக இருப்பதைப் பார்த்து சர்வவல்லமையுள்ளவர் சந்தோஷப்படுகிறாரா? நீ உத்தமமாக இருப்பதால் அவருக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?” (யோபு 22:1-3) எலிப்பாசைப் பொறுத்தவரைக்கும், இந்த எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்பதுதான் பதில்! மனிதர்களைக் கடவுள் நீதிமானாகக் கருதுவதற்கு வாய்ப்பே இல்லை என்று எலிப்பாசின் நண்பரான சுவாகியனான பில்தாத் சொன்னார்.—யோபு 25:4-ஐ வாசியுங்கள்.
2 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக, தான் எடுக்கும் முயற்சிகளெல்லாம் வீண் என்று யோபு நினைக்கும்படி எலிப்பாசும் பில்தாதும் பேசினார்கள். கடவுளைப் பொறுத்தவரை நாம் பூச்சி போலவும், சாதாரண புழு போலவும்தான் இருக்கிறோம் என்று யோபுவை நம்பவைக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். (யோபு 4:19; 25:6) அவர்கள் மனத்தாழ்மையாக இருந்ததால் அப்படிச் சொன்னார்களா? (யோபு 22:29) எல்லாவற்றையும்விட யெகோவாதான் மிக மிக உயர்ந்தவர் என்பதும், அவரோடு ஒப்பிடும்போது நாம் ஒன்றுமே இல்லை என்பதும் உண்மைதான்! ஒரு மலைமீது நின்றுகொண்டோ, விமானத்தின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போதோ, நம் செயல்கள் பெரிதாகத் தெரியாது. ஆனால், யெகோவாவுக்காக நாம் செய்யும் சேவையையும், அவருடைய அரசாங்கத்துக்காக நாம் எடுக்கும் கடின முயற்சியையும் யெகோவா பெரிதாக நினைக்கிறார்! எலிப்பாசும், பில்தாதும், சோப்பாரும் பொய் சொல்வதாக யெகோவா அவர்களிடம் சொன்னார். யோபுவை நினைத்து சந்தோஷப்படுவதாகவும், அவரைத் தன்னுடைய “ஊழியன்” என்றும் யெகோவா சொன்னார். (யோபு 42:7, 8) அதனால், அபூரண மனிதர்களாலும் ‘கடவுளுக்கு பிரயோஜனமாக’ இருக்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.
“அவருக்கு என்ன பிரயோஜனம்?”
3. யெகோவாவை வணங்குவதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளைப் பற்றி எலிகூ என்ன சொன்னார்? அவர் அப்படிச் சொன்னபோது, எதை அர்த்தப்படுத்தினார்?
3 யோபுவும் அந்த 3 பேரும் பேசிக்கொண்டிருந்ததை எலிகூ கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடித்ததும், “நீங்கள் நீதிமானாக இருப்பதால் அவருக்கு என்ன லாபம்? நேர்மையாக இருப்பதால் அவருக்கு என்ன பிரயோஜனம்?” என்று யோபுவிடம் கேட்டார். (யோபு 35:7) யெகோவாவுக்காக நாம் செய்யும் சேவை வீண் என்றுதான் எலிகூவும் சொன்னாரா? இல்லை. யெகோவா அவர்கள் 2 பேரையும் திருத்தியது போல, எலிகூவைத் திருத்தவில்லை. ஏனென்றால், எலிகூ அப்படிச் சொன்னதன் மூலம், வேறொரு விஷயத்தை அர்த்தப்படுத்தினார். அதாவது, யெகோவா நம் வணக்கத்தைச் சார்ந்தில்லை என்பதை அர்த்தப்படுத்தினார். யெகோவா நிறைவானவர், நம்மிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை! நம் செயல்களால், யெகோவாவை இன்னும் பணக்காரராகவோ, பலமானவராகவோ ஆக்க முடியாது. சொல்லப்போனால், நம்மிடம் இருக்கும் எந்தவொரு நல்ல குணமும், திறமையும் அவரிடமிருந்து வந்ததுதான்! அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை அவர் கவனிக்கிறார்.
4. நாம் மற்றவர்களுக்குக் கருணை காட்டும்போது, யெகோவா எப்படி உணருகிறார்?
4 யெகோவாவை வணங்குகிறவர்களிடம் நாம் மாறாத அன்பு காட்டும்போது, அதைத் தன்னிடம் காட்டியது போலவே யெகோவா உணருகிறார். “ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்” என்று நீதிமொழிகள் 19:17 சொல்கிறது. ஒவ்வொரு தடவையும் நாம் மற்றவர்களுக்குக் கருணை காட்டும்போது, யெகோவா அதைக் கவனிக்கிறார். அவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவராக இருந்தாலும், நாம் செய்கிற இந்தச் செயல்களை, தனக்கே கொடுக்கப்பட்ட கடனாக நினைக்கிறார். நமக்கு அருமையான பரிசுகளைக் கொடுப்பதன் மூலம் அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்கிறார். கடவுளுடைய மகனாகிய இயேசு இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.—லூக்கா 14:13, 14-ஐ வாசியுங்கள்.
5. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்க்கப் போகிறோம்?
5 தன் சார்பில் பேசுவதற்காகவும், விசேஷமான வழியில் தனக்குச் சேவை செய்வதற்காகவும் தீர்க்கதரிசியான ஏசாயாவுக்கு யெகோவா அழைப்பு கொடுத்தார். (ஏசா. 6:8-10) ஏசாயா அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று சொன்னார். இன்றும், தன்னுடைய வேலையைச் செய்வதற்கு யெகோவா உண்மையுள்ள ஜனங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார். சவாலான நியமிப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று ஏசாயா சொன்னது போலவே இன்றும் ஆயிரக்கணக்கான யெகோவாவின் ஊழியர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், சிலர் இப்படி நினைக்கலாம்: ‘யெகோவாவோட சேவைய மனப்பூர்வமா செய்ற வாய்ப்பு கிடைச்சதுக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். ஆனா, நான் செய்ற சேவைய யெகோவா முக்கியமா நினைப்பாரா? நான் இருந்தாலும் இல்லன்னாலும் யெகோவா அவரோட வேலைய செஞ்சு முடிச்சிட மாட்டாரா?’ நீங்கள் எப்போதாவது இப்படி யோசித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், கடந்த காலத்தில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களான தெபொராள் மற்றும் பாராக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அப்போது, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம்.
பயத்தால் நடுங்கினார்கள், கடவுளால் பலப்படுத்தப்பட்டார்கள்
6. கிராமப்புறங்களில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கும், யாபீனுடைய படைக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
6 பாராக், இஸ்ரவேலின் போர் வீரராக இருந்தார்; தெபொராள், பெண் தீர்க்கதரிசியாக இருந்தார். கானானிய ராஜாவான யாபீன், 20 வருஷங்களாக இஸ்ரவேலர்களை “ரொம்பவே அடக்கி ஒடுக்கினான்.” அவனுடைய படை பயங்கரமானதாக, கொடூரமானதாக இருந்தது. அதைப் பார்த்து கிராமப்புறங்களில் இருந்த இஸ்ரவேலர்கள் பயந்து நடுங்கினார்கள்; வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பயந்தார்கள். யாபீனுடைய படையில் இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட 900 போர் ரதங்கள் இருந்தன. ஆனால் இஸ்ரவேலர்களிடமோ, போர் செய்வதற்கும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் தேவையான ஆயுதங்கள் இருக்கவில்லை.—நியா. 4:1-3, 13; 5:6-8.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
7, 8. (அ) யெகோவா பாராக்குக்கு முதலில் என்ன கட்டளை கொடுத்தார்? (ஆ) யாபீனுடைய படையை இஸ்ரவேலர்கள் எப்படித் தோற்கடித்தார்கள்? (ஆரம்பப் படம்)
7 யாபீனுடைய படையோடு ஒப்பிடும்போது, இஸ்ரவேலர்கள் பலவீனமானவர்களைப் போல் இருந்தார்கள்; இவர்களை ஜெயிப்பதும் ரொம்ப சுலபமாகத் தோன்றியது. ஆனால், யெகோவா தெபொராள் மூலம் பாராக்கிடம், “‘நப்தலி, செபுலோன் கோத்திரங்களைச் சேர்ந்த 10,000 வீரர்களைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்கு அணிவகுத்துக்கொண்டு போ’ என்றும், யாபீனின் படைத் தளபதியாகிய சிசெராவை அவனுடைய போர் ரதங்களோடும் படைவீரர்களோடும் கீசோன் நீரோடைக்கு வரவைத்து அவனை உன் கையில் கொடுப்பேன்” என்றும் சொன்னார்.—நியா. 4:4-7.
8 போர் செய்வதற்கு மனப்பூர்வமான ஆட்கள் தேவை என்ற அழைப்பு எல்லா இடங்களுக்கும் பரவியது. அதைக் கேட்டவுடன், தாபோர் மலையில் 10,000 ஆட்கள் கூடினார்கள். எதிரியை எதிர்த்துப் போர் செய்ய, பாராக்கும் அவருடைய ஆட்களும் தானாக் என்ற இடத்துக்குப் போனார்கள். (நியாயாதிபதிகள் 4:14-16-ஐ வாசியுங்கள்.) அப்போது, மழை பயங்கரமாகப் பெய்தது; வறண்டு கிடந்த போர்க்களம் சேறும் சகதியுமாக மாறியது. பாராக், 24 கி.மீ. (15 மைல்) தூரத்துக்கு, அதாவது அரோசேத் என்ற இடம்வரை, சிசெராவின் படையைத் துரத்திக்கொண்டு போனார். இடையில் ஏதோ ஒரு இடத்தில் சிசெராவின் ரதம் சகதியில் மாட்டிக்கொண்டது. பிறகு, அவன் ரதத்திலிருந்து இறங்கி சனானிம் என்ற இடத்துக்கு ஓடினான். யாகேல் என்ற பெண்ணுடைய கூடாரத்துக்குள் ஒளிந்துகொள்வதற்காக அவன் அங்கே போனான். அவன் ரொம்பவே களைத்துப்போயிருந்ததால், நன்றாகத் தூங்கிவிட்டான். அவன் தூங்கிக்கொண்டிருந்தபோது, யாகேல் தைரியமாக அவனைக் கொன்றுபோட்டாள். (நியா. 4:17-21) யெகோவா இஸ்ரவேலர்களுக்கு வெற்றி தேடித்தந்தார்!b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
வித்தியாசமான மனப்பான்மை
9. சிசெராவுக்கு எதிரான போரைப் பற்றி நியாயாதிபதிகள் 5:20, 21 என்ன சொல்கிறது?
9 நியாயாதிபதிகள் 5-ஆம் அதிகாரத்தைப் படிப்பதன் மூலம், 4-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்களை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். “வானத்திலிருந்து நட்சத்திரங்கள் போர் செய்தன. அவற்றின் சுற்றுப் பாதைகளிலிருந்து சிசெராவுடன் சண்டை போட்டன. கீசோன் நீரோடை எதிரிகளை அடித்துக்கொண்டு போனது” என்று நியாயாதிபதிகள் 5:20, 21 சொல்கிறது. அப்படியென்றால், போரில் தேவதூதர்கள் இஸ்ரவேலர்களுக்கு உதவினார்கள் என்றோ, விண்கற்கள் கீழே விழுந்தன என்றோ அர்த்தமா? பைபிள் அதைப் பற்றி விளக்கமாக எதுவும் சொல்வதில்லை. ஆனால், 900 போர் ரதங்களும் நகர முடியாதளவுக்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயங்கரமான மழை பெய்தது. இதிலிருந்து, யெகோவாதான் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார் என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கிறது. இஸ்ரவேலர்களுக்கு வெற்றி தேடித்தந்த புகழ், யெகோவாவுக்குத்தான் சொந்தம் என்பதை நியாயாதிபதிகள் 4:14, 15 மூன்று முறை உறுதிப்படுத்துகிறது. அதனால், அந்த வெற்றிக்கான புகழை 10,000 வீரர்களில் ஒருவர்கூட எடுத்துக்கொள்ள முடியாது.
10, 11. ‘மேரோஸ்’ எதை அர்த்தப்படுத்துகிறது, அது ஏன் சபிக்கப்பட்டது?
10 சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைத்த பிறகு, தெபொராளும் பாராக்கும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்: “யெகோவாவின் தூதர் சொன்னார்: ‘மேரோசைச் சபியுங்கள், அதன் ஜனங்களைச் சபியுங்கள். அவர்கள் யெகோவாவின் உதவிக்கு வரவில்லை. பலசாலிகளுடன் வந்து யெகோவாவுக்கு உதவி செய்யவில்லை.’”—நியா. 5:23.
11 இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற மேரோஸ் எதை அர்த்தப்படுத்துகிறது? மேரோசுக்குக் கொடுக்கப்பட்ட சாபம் முழுவதுமாகப் பலித்து, அது சுவடு தெரியாமல் அழிந்து போனதால், அதைப் பற்றி நமக்கு உறுதியாகத் தெரியாது. ஒருவேளை மேரோஸ், பாராக்கோடு போருக்குப் போகாத ஒரு நகரமாக இருந்திருக்கலாம். கானானியர்களுக்கு எதிராகப் போர் செய்ய, 10,000 பேர் மனப்பூர்வமாகப் போன விஷயத்தை இந்த மேரோஸ் நகர மக்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார்கள். அதோடு, சிசெரா பாராக்கிடமிருந்து ஒரு நகரத்தின் தெருக்கள் வழியாகத் தப்பித்து ஓடினான் என்பது நமக்குத் தெரியும்; அப்படி அவன் தப்பித்து ஓடிய அந்த நகரம் மேரோசாக இருந்திருக்கலாம். கொடூரமான அந்த வீரன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தப்பித்து ஓடுவதை அந்த நகர மக்கள் பார்த்திருக்கலாம். அவனைப் பிடித்துக் கொடுக்க வாய்ப்பிருந்தும் அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்திருந்தால், யெகோவாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவர்களுக்கும் ஒரு பங்கு இருந்திருக்கும்; யெகோவாவும் அவர்களை ஆசீர்வதித்திருப்பார். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. தைரியமாகச் செயல்பட்ட யாகேலுக்கும் மேரோஸ் நகர மக்களுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்!—நியா. 5:24-27.
12. நியாயாதிபதிகள் 5:9, 10-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற 2 விதமான மக்களுக்குள் என்ன வித்தியாசம் இருந்தது? இன்று நமக்கு அது என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது?
12 மனப்பூர்வமாகப் போருக்குப் போன அந்த 10,000 பேருடைய மனப்பான்மைக்கும், அப்படிப் போகாதவர்களுடைய மனப்பான்மைக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி நியாயாதிபதிகள் 5:9, 10 சொல்கிறது. ‘அந்த வீரர்களோடு மனப்பூர்வமாகப் போன படைத் தளபதிகளை’ தெபொராளும் பாராக்கும் புகழ்ந்தார்கள். ஏனென்றால், ‘பழுப்பு நிற கழுதைகளில் சவாரி செய்பவர்களிலிருந்து’ இவர்கள் ரொம்பவே வித்தியாசமானவர்களாக இருந்தார்கள்! ‘பழுப்பு நிற கழுதைகளில் சவாரி செய்பவர்கள்,’ மனப்பூர்வமாகச் சேவை செய்யத் தயாராக இருக்கவில்லை; அவர்கள் தங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்கள் ‘உயர்தரமான கம்பளங்களில் உட்கார்ந்திருப்பவர்களாகவும்,’ ‘வழியில் நடந்துபோகிறவர்களாகவும்’ இருந்தார்கள் என்று விவரிக்கப்படுகிறது. அவர்கள் சௌகரியமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்! ஆனால் மனப்பூர்வமாகப் போனவர்களோ, போர் செய்வதற்காக, பாறைகள் நிறைந்த தாபோர் மலைக்கும், சதுப்புநில பகுதியாகிய கீசோன் பள்ளத்தாக்குக்கும் பாராக்கோடு போனார்கள். சௌகரியமாக வாழ நினைத்தவர்களிடம், “யோசித்துப் பாருங்கள்!” என்று சொல்லப்பட்டது. அதாவது, யெகோவாவின் சேவையில் மனப்பூர்வமாக ஈடுபடுகிற வாய்ப்பை நழுவவிட்டதைப் பற்றி அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இன்றும், தங்களால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்காதவர்கள், தங்களுடைய மனப்பான்மையைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.
13. ரூபன், தாண், மற்றும் ஆசேர் கோத்திரத்தாரின் மனப்பான்மைக்கும், செபுலோன் மற்றும் நப்தலி கோத்திரத்தாரின் மனப்பான்மைக்கும் இருந்த வித்தியாசம் என்ன?
13 தான் உன்னதப் பேரரசர் என்பதை யெகோவா நிரூபித்தபோது, அந்த 10,000 பேரும் அதைப் பார்த்தார்கள். அதனால், “யெகோவாவின் நீதியான செயல்களைப் பற்றி” மற்றவர்களிடம் பேசுவதற்கு அவர்களுக்கு விஷயம் இருந்தது! (நியா. 5:11) ரூபன், தாண், மற்றும் ஆசேர் கோத்திரத்தார் தங்களுடைய மந்தைகள், கப்பல்கள், துறைமுகங்கள் என அவர்களுடைய சொத்துசுகங்களைப் பற்றித்தான் அதிகமாகக் கவலைப்பட்டார்கள். (நியா. 5:15-17) ஆனால், எல்லா கோத்திரத்தாரும் அவர்களைப் போல் இருக்கவில்லை. தெபொராளுக்கும் பாராக்குக்கும் உதவி செய்வதற்காக, செபுலோன் மற்றும் நப்தலி கோத்திரத்தார் தங்களுடைய “உயிரைப் பணயம் வைத்தார்கள்.” (நியா. 5:18) மனப்பூர்வமாகச் சேவை செய்வது சம்பந்தமாக இந்த 2 விதமான மக்கள் காட்டிய மனப்பான்மையிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
“யெகோவாவைப் புகழுங்கள்!”
14. நாம் யெகோவாவின் அரசாட்சியை ஆதரிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறோம்?
14 யெகோவாவின் அரசாட்சியை ஆதரிப்பதற்காக, இன்று நாம் சண்டை போடுவதில்லை. தைரியமாகவும் வைராக்கியமாகவும் பிரசங்கிப்பதன் மூலம், அவருடைய அரசாட்சியை ஆதரிக்கிறோம் என்பதை நாம் காட்டுகிறோம். யெகோவாவின் வேலையை மனப்பூர்வமாகச் செய்வதற்கு, இதுவரை இல்லாதளவுக்கு இப்போது நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகளும் இளைஞர்களும் பல விதமான முழுநேர சேவையில் மனப்பூர்வமாக ஈடுபடுகிறார்கள். உதாரணத்துக்கு, நிறைய பேர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள், பெத்தேல் சேவை செய்கிறார்கள், ராஜ்ய மன்றங்களைக் கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள். இன்னும் நிறைய பேர், மாநாடுகளில் வாலண்டியர்களாகச் சேவை செய்கிறார்கள். சில மூப்பர்கள், மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களில் சேவை செய்கிறார்கள். இன்னும் சில மூப்பர்கள், மாநாடுகளை ஒழுங்கமைக்க உதவுகிறார்கள். நாம் மனப்பூர்வமாகச் செய்யும் எந்தச் சேவையையும் யெகோவா உயர்வாக நினைக்கிறார்; அதை அவர் மறக்கவே மாட்டார்.—எபி. 6:10.
15. யெகோவாவின் சேவையில் நம் ஆர்வம் குறைந்துவிடவில்லை என்பதை நாம் எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?
15 மனப்பூர்வமாகச் சேவை செய்வது சம்பந்தமாக நமக்கு என்ன மனப்பான்மை இருக்கிறது என்று நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். அதற்கு, இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘பெரும்பாலான வேலைகளை மற்றவர்கள் செய்யட்டும் என்று சொல்லி நான் சும்மா இருந்துவிடுகிறேனா? யெகோவாவுக்குச் சேவை செய்வதைவிட பொருள்கள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறேனா? அல்லது, என்னிடம் இருக்கிற வளங்களை யெகோவாவின் சேவைக்காகப் பயன்படுத்துவதன் மூலம், தெபொராள், பாராக், யாகேல் மற்றும் அந்த 10,000 பேருடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் பின்பற்றுகிறேனா? நிறைய பணம் சம்பாதிப்பதற்காகவோ, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவோ, வேறொரு ஊருக்கு அல்லது வேறொரு நாட்டுக்குப் போவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேனா? அது என்னுடைய குடும்பத்தையும் சபையையும் எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கிறேனா?’c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
16. யெகோவாவிடம் எல்லாமே இருந்தாலும் அவருக்கு நம்மால் கொடுக்க முடிந்தது என்ன?
16 தன்னுடைய அரசாட்சியை ஆதரிக்கும் வாய்ப்பைக் கொடுப்பதன் மூலம் யெகோவா நம்மை கௌரவப்படுத்தியிருக்கிறார். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே, மனிதர்கள் எல்லாரும் யெகோவாவின் பக்கம் இல்லாமல் தன் பக்கம் இருக்க வேண்டும் என்று பிசாசு ஆசைப்படுகிறான். ஆனால், யெகோவாவின் அரசாட்சிக்கு ஆதரவு காட்டுவதன் மூலம், நாம் யெகோவாவின் பக்கம் இருக்கிறோம் என்பதை சாத்தானுக்குத் தெளிவாகக் காட்டுகிறோம். நம்மை மனப்பூர்வமாகச் சேவை செய்யத் தூண்டுகிற நம் விசுவாசத்தையும் உண்மைத்தன்மையையும் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். (நீதி. 23:15, 16) நம்முடைய உண்மையான ஆதரவை அவருக்குக் காட்டும்போதும், அவருக்குக் கீழ்ப்படியும்போதும் சாத்தானுடைய பழிப்பேச்சுக்கு அவரால் பதிலடி கொடுக்க முடியும். (நீதி. 27:11) அப்படியென்றால், யெகோவா உயர்வாக மதிக்கிற ஒன்றை நம்மால் அவருக்குக் கொடுக்க முடியும். அதுதான் நாம் காட்டும் கீழ்ப்படிதல்! நாம் அப்படிக் கீழ்ப்படியும்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
17. எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றி நியாயாதிபதிகள் 5:31 என்ன சொல்கிறது?
17 சீக்கிரத்தில், இந்தப் பூமியில் இருக்கிற எல்லாரும், வேறெந்த அரசாட்சியையும்விட யெகோவாவின் அரசாட்சியை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். அந்த நாளுக்காக நாம் ஏங்குகிறோம், இல்லையா? அப்போது, “யெகோவாவே, உங்கள் எதிரிகள் அழிந்துபோகட்டும். உங்களை நேசிக்கிறவர்கள் சூரியன்போல் பிரகாசமாக உதிக்கட்டும்” என்று பாடிய தெபொராளைப் போலவும் பாராக்கைப் போலவும் நாம் உணருவோம். (நியா. 5:31) இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது, சாத்தானுடைய பொல்லாத உலகத்தை யெகோவா அழிக்கும்போது நடக்கும். அர்மகெதோன் போர் ஆரம்பிக்கும்போது, எதிரிகளை அழிப்பதற்கு மனப்பூர்வமாகச் சேவை செய்கிற மனிதர்கள் யாரும் யெகோவாவுக்குத் தேவைப்பட மாட்டார்கள். அப்போது, நாம் ‘அசையாமல் அப்படியே நின்று யெகோவா எப்படிக் காப்பாற்றுகிறார்’ என்று பார்ப்போம். (2 நா. 20:17) அதுவரைக்கும், தைரியமாகவும் வைராக்கியமாகவும் யெகோவாவின் அரசாட்சியை ஆதரிக்க நிறைய வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன.
18. நீங்கள் மனப்பூர்வமாகச் செய்யும் சேவை மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கலாம்?
18 “[அவர்கள்] மனப்பூர்வமாகப் போனார்கள். அதனால், யெகோவாவைப் புகழுங்கள்!” என்று தெபொராளும் பாராக்கும் வெற்றிப் பாடல் பாடினார்கள். இவர்கள் மனிதர்களைப் புகழ்ந்து அல்ல, யெகோவாவைப் புகழ்ந்தே பாடினார்கள்! (நியா. 5:1, 2) அதே போல, இன்று நாம் யெகோவாவுக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்வதைப் பார்த்து மற்றவர்கள் உற்சாகமடையலாம். அப்போது, அவர்களும் ‘யெகோவாவைப் புகழ்வார்கள்!’
a இங்கே அரிவாள் என்பது, கூர்மையான, நீளமான ஆயுதத்தைக் குறிக்கிறது; சில சமயங்களில், அது வளைந்தும் இருந்தது. போர் ரதங்களில், அநேகமாக அந்த ரதங்களுடைய சக்கரத்தின் அச்சாணியில், அவை பொருத்தப்பட்டிருந்தன. அதனால், அந்தப் போர் ரதங்களைப் பார்த்து மற்றவர்கள் மிகவும் பயந்தார்கள்.
b இந்த விறுவிறுப்பான சம்பவங்களை, ஆகஸ்ட் 1, 2015 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 12-15-ல் பார்க்கலாம்.
c அக்டோபர் 1, 2015 காவற்கோபுரத்தில் வந்த “பணத்தை பற்றிய கவலையா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.