படிப்புக் கட்டுரை 8
சோதனைகள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியும்!
“என் சகோதரர்களே, உங்களுக்குப் பலவிதமான சோதனைகள் வரும்போது அதற்காகச் சந்தோஷப்படுங்கள்.”—யாக். 1:2. அடிக்குறிப்பு.
பாட்டு 75 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
இந்தக் கட்டுரையில்...a
1-2. சோதனைகள் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று மத்தேயு 5:11 சொல்கிறது?
தன்னுடைய சீஷர்களால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று இயேசு சொன்னார். அதேசமயத்தில், அவர்களுக்குச் சோதனைகள் வரும் என்றும் எச்சரித்தார். (மத். 10:22, 23; லூக். 6:20-23) அவர் சொன்னதைப் போலவே நாம் எல்லாரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். ஆனால், நம் குடும்பத்திடமிருந்து, அரசாங்கத்திடமிருந்து, நம்மோடு வேலை செய்கிறவர்கள் அல்லது நம்மோடு படிப்பவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரும்போது சந்தோஷமாக இருக்க முடியுமா? இல்லை! கவலையாகத்தான் இருக்கும்!
2 பொதுவாக, துன்புறுத்தப்படும்போது யாரும் சந்தோஷப்பட மாட்டார்கள். ஆனால், சந்தோஷப்பட சொல்லித்தான் பைபிள் சொல்கிறது. நாம் படும் கஷ்டங்களை நினைத்து சோகத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும்படி யாக்கோபு எழுதினார். (யாக். 1:2, 12) துன்புறுத்தப்படும்போது நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இயேசுவும் சொன்னார். (மத்தேயு 5:11-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நாம் எப்படிச் சந்தோஷமாக இருப்பது? இதற்கான பதிலை, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு எழுதிய கடிதத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். முதலில், அந்தக் கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன என்று பார்க்கலாம்.
முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு என்னென்ன சோதனைகள் வந்தன?
3. யாக்கோபு சீஷராக ஆன கொஞ்ச நாளில் என்ன நடந்தது?
3 இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபு சீஷராக ஆன கொஞ்ச நாளில் எருசலேமில் எதிர்ப்பு கிளம்பியது. (அப். 1:14; 5:17, 18) ஸ்தேவானின் படுகொலைக்குப் பிறகு, எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்கள் நிறைய பேர் “யூதேயா, சமாரியா பகுதிகள் முழுவதும் சிதறிப்போனார்கள்.” சொல்லப்போனால், சீப்புரு அந்தியோகியா வரையில்கூட போனார்கள். (அப். 7:58–8:1; 11:19) அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்! இருந்தாலும், போன இடங்களில் எல்லாம் பிரசங்கித்தார்கள். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் சபைகள் உருவாயின. (1 பே. 1:1) ஆனால், இதைவிட இன்னும் நிறைய கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது.
4. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வேறு என்ன சோதனைகளை அனுபவித்தார்கள்?
4 கிட்டத்தட்ட கி.பி. 50-ல், ரோமில் இருந்த யூதர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ரோம பேரரசர் கிலவுதியு கட்டளை போட்டார். அதனால், கிறிஸ்தவர்களாக மாறியிருந்த யூதர்கள் நாட்டைவிட்டு போக வேண்டிய நிலைமை வந்தது. (அப். 18:1-3) எல்லாருக்கும் முன்பாக, கிறிஸ்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவும் சிறையில் தள்ளப்பட்டதாகவும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட கி.பி. 61-ல் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 10:32-34) மற்ற ஜனங்களைப் போலவே நோயாலும் வறுமையாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். (ரோ. 15:26; பிலி. 2:25-27) இப்படி, பலவிதமான சோதனைகளை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனுபவித்தார்கள்.
5. எந்தெந்த கேள்விகளுக்கு இப்போது பதில்களைப் பார்ப்போம்?
5 கி.பி. 62-க்கு முன்பாக யாக்கோபு தன்னுடைய கடிதத்தை எழுதினார். அந்தச் சமயத்தில், சகோதர சகோதரிகள் என்னென்ன சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவ்வளவு சோதனைகள் இருந்தாலும், சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான அறிவுரைகளை யாக்கோபின் மூலம் யெகோவா கொடுத்தார். யாக்கோபு எழுதிய கடிதத்தை இப்போது அலசிப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடியுங்கள்: எந்தச் சந்தோஷத்தைப் பற்றி யாக்கோபு எழுதினார்? எவையெல்லாம் அந்தச் சந்தோஷத்தைத் தட்டிப் பறித்துவிடலாம்? எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் சந்தோஷமாக இருப்பதற்கு ஞானமும் விசுவாசமும் தைரியமும் எப்படி உதவும்?
நம் சந்தோஷத்துக்குக் காரணங்கள்
6. லூக்கா 6:22, 23-ன்படி, சோதனைகள் வரும்போது கிறிஸ்தவர்கள் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்?
6 நோயற்ற வாழ்வு... கைநிறைய பணம்... சண்டை சச்சரவு இல்லாத குடும்ப உறவுகள்... இவைதான் சந்தோஷத்தைத் தரும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி யாக்கோபு எழுதவில்லை. கடவுளுடைய சக்தியால் உண்டாகும் சந்தோஷத்தைப் பற்றிதான் எழுதினார். அந்தச் சந்தோஷம் நம் சூழ்நிலையைப் பொறுத்தது கிடையாது. (கலா. 5:22) “நாம யெகோவாவ பிரயப்படுத்துறோம்... இயேசு மாதிரியே நடந்துக்குறோம்...” என்ற உணர்வு இருக்கும்போது அந்தச் சந்தோஷம் கிடைக்கும். (லூக்கா 6:22, 23-ஐ வாசியுங்கள்; கொலோ. 1:10, 11) நமக்குள் இருக்கும் அந்தச் சந்தோஷம், அரிக்கன் விளக்கில் இருக்கும் சுடர் போன்றது! விளக்கைச் சுற்றி என்ன நடந்தாலும் அந்தச் சுடர் விட்டுவிட்டும் எரியாது, அணைந்தும் போகாது. அதேபோல், நோய் வந்தாலோ பணக் கஷ்டம் வந்தாலோ நமக்குள் இருக்கும் சந்தோஷம் என்ற சுடர் விட்டுவிட்டு எரியாது. மற்றவர்கள் நம்மை கேலி கிண்டல் செய்தாலோ எதிர்த்தாலோ அந்தச் சுடர் அணைந்தும் போகாது. மற்றவர்கள் அதை அணைக்க முயற்சி செய்தாலும் அது அணையாது; இன்னும் பிரகாசமாகத்தான் எரியும். ஏனென்றால், நாம் உண்மையிலேயே கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை நமக்கு வரும் சோதனைகள் நிரூபிக்கின்றன. (மத். 10:22; 24:9; யோவா. 15:20) அதனால்தான், “என் சகோதரர்களே, உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்கள் வரும்போது அதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்று யாக்கோபு எழுதினார்.—யாக். 1:2.
7-8. சோதனைகளால் நமக்கு என்ன நன்மை?
7 பயங்கரமான சோதனைகள் வந்தாலும் அதை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு யாக்கோபு இன்னொரு காரணத்தையும் சொன்னார். “இப்படிக் கஷ்டங்கள் மூலம் சோதிக்கப்பட்ட உங்கள் விசுவாசம் சகிப்புத்தன்மையை உண்டாக்கும்” என்று எழுதினார். (யாக். 1:3) பொதுவாக, ஒரு உலோகத்தை இன்னொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு அதை நெருப்பில் போட்டு பழுக்க காய்ச்சுவார்கள். பிறகு, அதைத் தண்ணீரில் போடுவார்கள். இப்படிச் செய்யும்போது அந்த உலோகம் இன்னும் வலுவடையும். சோதனைகள், அந்த நெருப்பைப் போன்றவை! சோதனைகளைச் சகித்திருக்கும்போது நம் விசுவாசம் இன்னும் பலமாக ஆகிறது. அதனால்தான், “உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையானவர்களாகவும், . . . எல்லா விதத்திலும் நிறைவானவர்களாகவும் இருப்பீர்கள்” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 1:4) சோதனைகள் நம் விசுவாசத்தைப் பலமாக்குவதைப் பார்க்க பார்க்க, அவற்றை நம்மால் சந்தோஷமாகச் சகித்துக்கொள்ள முடியும்.
8 நம் சந்தோஷத்தைத் தட்டிப் பறிக்கும் விஷயங்களைப் பற்றியும் யாக்கோபு சொன்னார். அவை என்னென்ன? சந்தோஷம் பறிபோகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
சந்தோஷம் பறிபோகாமல் இருக்க...
9. நமக்கு ஏன் ஞானம் தேவை?
9 சந்தோஷத்தைப் பறிப்பவை: என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பது. சோதனைகள் வரும்போது யெகோவாவுக்கு பிடித்தமாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதுமட்டுமல்ல, அந்த முடிவுகள் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்த வேண்டும். யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க நமக்கு உதவ வேண்டும். (எரே. 10:23) ஆனால், இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க தெரியவில்லை என்றால் நாம் குழம்பிப்போய் சந்தோஷத்தை இழந்துவிடலாம்.
10. ஞானத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாக்கோபு 1:5 சொல்கிறது?
10 தீர்வு: ஞானத்துக்காக யெகோவாவிடம் கேளுங்கள். சோதனைகள் வரும்போது சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு, ஞானத்தைக் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். (யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.) நம்முடைய ஜெபங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? “கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்” என்று யாக்கோபு சொல்கிறார். அப்படிக் கேட்டுக்கொண்டே இருந்தால் யெகோவா கோபப்பட மாட்டார், திட்டவும் மாட்டார். சோதனைகளைச் சகித்துக்கொள்வதற்குத் தேவையான ஞானத்தை ‘தாராளமாக கொடுப்பார்.’ (சங். 25:12, 13) நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் அனுதாபப்படுகிறார். நமக்கு உதவ ஆசையாக இருக்கிறார். இதை நினைக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சரி, அவர் எப்படி ஞானத்தைக் கொடுக்கிறார்?
11. ஞானத்துக்காக நாம் வேறென்ன செய்ய வேண்டும்?
11 பைபிள் வழியாக யெகோவா நமக்கு ஞானத்தைத் தருகிறார். (நீதி. 2:6) அந்த ஞானம் வேண்டுமென்றால், பைபிளையும் பிரசுரங்களையும் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால், வெறுமனே அறிவை வளர்த்துக்கொண்டால் மட்டும் போதாது. என்ன கற்றுக்கொண்டோமோ அதன்படி செய்ய வேண்டும். அதனால்தான், ‘கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைக்காதீர்கள். . . . அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்’ என்று யாக்கோபு எழுதினார். (யாக். 1:22) கடவுள் சொல்வதைப் போல் நடக்கும்போது, சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இரக்கம் காட்டுபவர்களாகவும் இருப்போம். (யாக். 3:17) சோதனைகள் வரும்போது சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க இந்தக் குணங்கள் உதவும்.
12. பைபிளை நாம் ஏன் நன்றாகப் படிக்க வேண்டும்?
12 பைபிள் கண்ணாடி போன்றது! நம்மிடம் இருக்கிற பிரச்சினைகளை அது தெளிவாக காட்டிவிடும். அதை எப்படிச் சரி செய்வது என்றும் சொல்லிவிடும். (யாக். 1:23-25) ஒருவேளை, நாம் மூக்குக்கு மேல் கோபப்படுகிற ஆட்களாக இருந்தால் பைபிள் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொண்டால் நம்மால் சாந்தமாக இருக்க முடியும். அப்போது, நம்மால் தெளிவாக சிந்திக்க முடியும். நல்ல முடிவுகளை எடுக்க முடியும். பிரச்சினைகளை சுலபமாக சமாளிக்கவும் முடியும். (யாக். 3:13) பைபிளை நன்றாகப் படிப்பது முக்கியம் என்பது தெரிகிறது, இல்லையா?
13. யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களைப் பற்றி நாம் ஏன் படிக்க வேண்டும்?
13 சிலசமயங்களில், தப்பு செய்ததற்குப் பிறகுதான் ‘ச்சே, இப்படி பண்ணியிருக்கவே கூடாது’ என்று நினைக்கிறோம். ஆனால், இப்படிப் பாடம் கற்றுக்கொள்வதைவிட மற்றவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வது நல்லது. அவர்கள் செய்த நல்ல விஷயங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ளலாம். அதனால்தான், ஆபிரகாம், ராகாப், யோபு மற்றும் எலியா போன்ற ஆட்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி யாக்கோபு சொல்கிறார். (யாக். 2:21-26; 5:10, 11, 17, 18) இவர்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் சோதனைகள் வந்தன. ஆனால், சந்தோஷத்தைப் பறிகொடுக்காமல் அவற்றை சகித்துக்கொண்டார்கள். யெகோவாவின் ஆதரவு இருந்தால், நம்மாலும் சோதனைகளைச் சந்தோஷத்தோடு சகித்துக்கொள்ள முடியும் என்பதை இவர்களிடமிருந்து தெரிந்துகொள்கிறோம்.
14-15. நாம் ஏன் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்?
14 சந்தோஷத்தைப் பறிப்பவை: சந்தேகங்கள். சிலசமயங்களில், பைபிளில் இருக்கிற விஷயங்கள் நமக்குப் புரியாமல் போகலாம். அல்லது நம்முடைய ஜெபங்களுக்கு நாம் எதிர்பார்த்த பதில் கிடைக்காமல் போய்விடலாம். அதனால், நம் மனதுக்குள் சந்தேகங்கள் முளைக்க ஆரம்பித்துவிடலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நம்முடைய விசுவாசம் பலவீனமாகிவிடலாம். யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தில் விரிசல் விழுந்துவிடலாம். (யாக். 1:7, 8) நம்முடைய எதிர்கால நம்பிக்கையையே நாம் இழந்துவிடலாம்.
15 நம்முடைய எதிர்கால நம்பிக்கை நமக்கு நங்கூரம் போல் இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 6:19) சூறாவளி வரும்போது கப்பல் கவிழ்ந்துவிடாமல் இருப்பதற்கும் பாறைகள்மேல் மோதிவிடாமல் இருப்பதற்கும் நங்கூரத்தைப் போடுவார்கள். ஆனால், அதன் சங்கிலி துருப்பிடித்திருந்தால் அது இருந்து என்ன பிரயோஜனம்? நமக்கு வருகிற சந்தேகங்கள் அந்தத் துரு மாதிரி! சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளாமல் இருந்தால், அவை நம்முடைய விசுவாசத்தை அரித்துவிடும். தான் சொன்னதை எல்லாம் யெகோவா செய்வாரா என்ற கேள்வி நமக்கு வந்துவிடலாம். கடைசியில், நம்முடைய எதிர்கால நம்பிக்கையையே நாம் இழந்துவிடலாம். அதனால்தான், சந்தேகப்படுகிறவன் “காற்றால் இங்குமங்கும் அடிக்கப்படுகிற கடல் அலையைப் போல் இருக்கிறான்” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 1:6) சந்தேகம் இருந்தால் சந்தோஷம் இருக்காது!
16. சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
16 தீர்வு: சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள், விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள். எலியா காலத்திலிருந்த ஜனங்கள், ‘மதில் மேல் பூனை’ போல் இருந்தார்கள். “நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இரண்டு மனதாக இருப்பீர்கள்? யெகோவாதான் உண்மையான கடவுள் என்றால் அவரை வணங்குங்கள்; பாகால்தான் உண்மையான கடவுள் என்றால் அவனை வணங்குங்கள்!” என்று எலியா சொன்னார். (1 ரா. 18:21) நாம் அவர்களைப் போல் இருக்கக் கூடாது. யெகோவாதான் கடவுள், பைபிள்தான் அவருடைய வார்த்தை, யெகோவாவின் சாட்சிகள்தான் அவருடைய மக்கள் என்பதை எல்லாம் நன்றாக ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (1 தெ. 5:21) அப்போது, சந்தேகத்துக்குச் சமாதி கட்ட முடியும். விசுவாசம் என்ற சுவரை எழுப்ப முடியும். சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது எப்படியென்று தெரியவில்லையா? மூப்பர்களிடம் கேளுங்கள்! யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்ய வேண்டுமென்றால், சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துக்கொள்ள வேண்டும்.
17. தைரியம் இல்லை என்றால் என்ன ஆகும்?
17 சந்தோஷத்தைப் பறிப்பவை: சோர்வு. “இக்கட்டில் தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால், உன் பலம் குறைந்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 24:10) “சோர்ந்துபோனால்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தைக்கு, “தைரியத்தை இழந்துவிடுதல்” என்றும் ஓர் அர்த்தம் இருக்கிறது. தைரியம் இல்லாமல் போய்விட்டால் சந்தோஷமும் இல்லாமல் போய்விடும்.
18. சகிப்புத்தன்மை என்றால் என்ன?
18 தீர்வு: தைரியத்துக்காக யெகோவாவை நம்பியிருங்கள். சோதனைகளைச் சமாளிப்பதற்கு நமக்கு தைரியம் தேவை. (யாக். 5:11) யாக்கோபு பயன்படுத்தியிருக்கிற “சகிப்புத்தன்மை” என்ற வார்த்தைக்கு, நின்ற இடத்தில் அப்படியே உறுதியாக நிற்பது என்று அர்த்தம். இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு ராணுவ வீரரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எதிரி என்னதான் பயங்கரமாகத் தாக்கினாலும் அவர் பயந்து ஓடிவிட மாட்டார். ஒரு இன்ஞ்ச் கூட நகராமல் அப்படியே உறுதியாக நிற்பார்!
19. அப்போஸ்தலன் பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
19 பவுலைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அவர் ரொம்ப தைரியசாலி, சகிப்புத்தன்மையோடு இருந்தவர்! ஆனாலும், சிலசமயங்களில் சோர்ந்துபோனார். ஆனால், பலத்துக்காக யெகோவாவை நம்பியிருந்தார். (2 கொ. 12:8-10; பிலி. 4:13) அதனால்தான் எல்லாவற்றையும் அவரால் சகிக்க முடிந்தது. நாமும் யெகோவாவை நம்பியிருந்தால் பவுலைப் போலவே பலத்தோடும் தைரியத்தோடும் இருக்க முடியும்.—யாக். 4:10.
கடவுளிடம் நெருங்கி வாருங்கள், சந்தோஷமாக இருங்கள்
20-21. எதை நீங்கள் உறுதியாக நம்பலாம்?
20 சோதனைகள் யெகோவாவிடமிருந்து வருகிற தண்டனைகளா? யாக்கோபு என்ன சொல்கிறார்? “சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது” என்று சொல்கிறார். (யாக். 1:13) இதை நாம் உறுதியாக நம்பினால், தொடர்ந்து யெகோவாவிடம் நெருங்கிவருவோம்.—யாக். 4:8.
21 யெகோவா “மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.” (யாக். 1:17) சோதனைகளைச் சகிப்பதற்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அவர் உதவினார் என்றால் இன்று நமக்கும் உதவுவார். அதனால், ஞானத்துக்காகவும் விசுவாசத்துக்காகவும் தைரியத்துக்காகவும் அவரிடம் கெஞ்சிக் கேளுங்கள். அவர் கண்டிப்பாக பதில் கொடுப்பார். சோதனைகள் வந்தாலும் சந்தோஷமாக இருப்பதற்கு உதவுவார்!
பாட்டு 135 முடிவுவரை சகித்திருப்பாயே!
a சோதனைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான நிறைய ஆலோசனைகள் யாக்கோபு புத்தகத்தில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். கஷ்டங்கள் வந்தாலும் யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்ய அவை உதவும்.
b படவிளக்கம்: ஒரு சகோதரரைக் கைது செய்து கூட்டிக்கொண்டு போகிறார்கள். அவருடைய மனைவியும் மகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் சிறையில் இருக்கும்போது, அவருடைய மனைவியோடும் மகளோடும் சகோதர சகோதரிகள் குடும்ப வழிபாடு செய்கிறார்கள். இந்தக் கஷ்டமான சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க தாயும் மகளும் அடிக்கடி ஜெபம் செய்கிறார்கள். மன அமைதியையும் தைரியத்தையும் யெகோவா கொடுக்கிறார். அதனால், அவர்களுடைய தைரியமும் விசுவாசமும் அதிகமாகிறது. இந்தச் சூழ்நிலையைச் சந்தோஷமாக சகிக்க முடிகிறது.