ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் நன்றாய்ச் சாப்பிடுகிறீர்களா?
“நல்ல திட்ட உணவு, மனிதருக்கு மிக அடிப்படையானத் தேவை . . . . போதிய உணவில்லையெனில், நாம் சாவோம்.” —உணவும் ஊட்டச்சத்தும் (ஆங்கிலம்).
இந்த முக்கியமான உண்மை, உணவின்றி பசிபட்டினியால் வருந்தும் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமானவர்களின் மெலிந்த, வலுக்குறைந்த உடல்களில் தெளிவாகத் தெரிகிறது; “மனிதருக்கு மிக அடிப்படையானத் தேவை” பூர்த்திச் செய்யப்படாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் இந்தத் தேவையை ஓரளவு திருப்தி செய்துகொள்ள முடிகிறவர்களாக இருக்கிறார்கள், ஆனால் கவலையோடு கவனிக்கப்பட வேண்டிய முறையில் இன்னும் ஊட்டச்சத்தில் குறைவுபடுகிறார்கள். நன்றாகச் சாப்பிடக்கூடிய இன்னும் பலர், உண்மையான ஊட்டச்சத்து அளிக்காத, வாய்க்கு மட்டுமே சுவைதரும் சத்தில்லாத உணவுகளோடு திருப்தியாக இருந்துவிடுகின்றனர். “உணவு, நாம் மிகத் தவறான வகையில் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்றாக உள்ளது” என்று உடல்நலத்துக்குகந்தவாறு சாப்பிடுதல் (ஆங்கிலம்) புத்தகம் கூறுகிறது.
ஆவிக்குரிய உணவைக்—கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகிற சத்தியத்தைக்—குறித்ததிலும் அவ்வாறே உள்ளது. மிக அடிப்படையான ஆவிக்குரிய உணவு ஊட்டத்திலுங்கூட சிலர் குறைவுபடுகின்றனர்; அவர்கள் ஆவிக்குரியப் பிரகாரமாய்ப் பட்டினியாக இருக்கிறார்கள், மற்றவர்கள், கிடைக்கக்கூடிய ஆவிக்குரிய உணவைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவோராய் அசதியாயிருக்கிறார்கள். உங்களைப் பற்றியதென்ன? ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் நன்றாய்ச் சாப்பிடுகிறீர்களா? அல்லது ஆவிக்குரிய உணவூட்டம் இல்லாமல் உங்களை வைத்துக்கொள்கிறீர்களா? இந்தக் காரியத்தில் நாம் நேர்மையாக இருப்பது முக்கியம், ஏனெனில், நமக்கு சரீரப்பிரகாரமான உணவு தேவைப்படுவதைப் பார்க்கிலுங்கூட அதிகமாய் ஆவிக்குரிய உணவு நமக்குத் தேவை.—மத்தேயு 4:4.
ஆவிக்குரிய வளர்ச்சிக்கான உணவு
சரியான திட்ட உணவைச் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை விவரித்துரைக்கும் ஒரு பாடபுத்தகமாகிய, உணவும் ஊட்டச்சத்தும் என்பது, நன்றாய்ச் சாப்பிடுவதற்கு மூன்று நல்ல காரணங்களை நமக்குக் கொடுக்கிறது. “வளர்ச்சியை முன்னேற்றுவிக்கவும், உடலின் உயிரணுக்கள் தேய்ந்தழிவதைப் பதிலீடு செய்யவும் நமக்கு உணவு தேவை என்பது ஒரு காரணம்.” நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளும் உடலில் அழியும் நூறாயிரம் கோடிக்கணக்கான உயிரணுக்களுக்குப் பதிலீடு செய்ய வேண்டியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சரியான வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்புக்கும் சத்துள்ள உணவு தேவை.
ஆவிக்குரியப் பிரகாரமாகவும் அது உண்மையாக இருக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல், எபேசுவிலிருந்த சபைக்கு எழுதினபோது, ‘பூரண புருஷனாவதற்கு’ கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு ஆவிக்குரிய நல்ல உணவு தேவை என்பதை அவர் அறிவுறுத்தினார். (எபேசியர் 4:11-13) ஊட்டச்சத்துள்ள ஆவிக்குரிய உணவை நாம் தகுந்த முறையில் உட்கொண்டு வருகையில், நாம் பலவீனக் குழந்தைகளைப்போல், நம்மையே கவனித்துக்கொள்ள முடியாதவர்களாய், எல்லா வகையான ஆபத்துக்களுக்கும் இரையாகிறவர்களாக இனிமேலும் இருப்பதில்லை. (எபேசியர் 4:14) மாறாக, ‘விசுவாசத்தின் வார்த்தைகளால் ஊட்டமளிக்கப்பட்டு’ வருவதால், விசுவாசத்துக்காக நல்ல போராட்டத்தைப் போராடக்கூடிய பலமான பெரிய ஆட்களாக நாம் வளருகிறோம்.—1 தீமோத்தேயு 4:6, NW.
உங்களைக் குறித்ததில் இது உண்மையாக இருக்கிறதா? ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்களா? அல்லது இன்னும் ஆவிக்குரிய ஒரு குழந்தையைப்போல்—கண்டனத்துக்கு ஆளாகக்கூடியவர்களாயும், மற்றவர்களின்பேரில் முற்றிலுமாகச் சார்ந்திருக்கிறவர்களாயும், கிறிஸ்தவ பொறுப்புகளை முழுமையாக ஏற்க முடியாதவர்களாயும் இருக்கிறீர்களா? ஆவிக்குரியப் பிரகாரமாய்க் குழந்தைகளைப்போல் இருக்கிறோமென நம்மில் சிலர் உடனடியாகச் சொல்வோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால், நேர்மையான சுயபரிசோதனை செய்வது தகுந்தது. முதல் நூற்றாண்டில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் அவ்வாறு இருந்தார்கள். கடவுளுடைய வார்த்தை சொல்வதை மற்றவர்களுக்குப் போதிக்கத் திறமையுள்ளவர்களாகவும் மனமுள்ளவர்களாகவும் அவர்கள்தாமே ‘போதகர்களாக’ இருக்க வேண்டிய நிலையில் இருந்த போதிலும், அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான [“திடமான,” NW] ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.” ஆவிக்குரியப் பிரகாரமாய் வளர நீங்கள் விரும்பினால், நல்ல, திடமான ஆவிக்குரிய உணவுக்காகப் பசியார்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆவிக்குரிய குழந்தைக்கான உணவோடு திருப்தியடைந்து விடாதீர்கள்!—எபிரெயர் 5:12.
பகைமை நிறைந்த ஓர் உலகத்தில் நாம் அன்றாடம் எதிர்ப்படுகிற இக்கட்டுகளால் உண்டாக்கப்பட்ட ஏதாவது சேதத்தைச் சரிப்படுத்தவும் இந்தத் திடமான ஆவிக்குரிய உணவு நமக்குத் தேவை. இவை, நம்முடைய ஆவிக்குரிய பலத்தை உறிஞ்சிவிடலாம். ஆனால் கடவுள் அந்தப் பலத்தைப் புதுப்பிக்க முடியும். பவுல் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.” (2 கொரிந்தியர் 4:16) நாம் எவ்வாறு ‘நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறோம்’? வேதவசனங்களையும் பைபிளில் ஆதாரங்கொண்ட பிரசுரங்களையும், தனிப்பட்ட படிப்பின் மூலமும் தொகுதியாக படிப்பதன்மூலமும் தவறாமல் கடவுளுடைய வார்த்தையை உட்கொண்டு வருவதனால் ஓரளவாக புதுப்பிக்கப்பட்டுவருகிறோம்.
உணவும் ஆவிக்குரிய வெப்பமும்
‘வெப்பத்தையும் சக்தியையும் உண்டாக்கவும்’ உணவு தேவைப்படுகிறது. நம் உடல்கள் நன்றாய் இயங்குவதற்கு எரிபொருளை உணவு அளிக்கிறது. நாம் மிகக் குறைவாகச் சாப்பிட்டால், குறைந்த சக்தியே நமக்கு இருக்கும். நம் உணவு திட்டத்தில் இரும்புசத்து குறைவுபட்டால், அது நம்மைக் களைப்பாயும் ஊக்கமில்லாமலும் உணரும்படி விடலாம். ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்கு வருகையில் சிலசமயங்களில் அவ்வாறே நீங்கள் உணருகிறீர்களா? கிறிஸ்தவராக இருப்பதோடு இணைந்து வருகிற கடமைகளை நிறைவேற்றுவது உங்களுக்குக் கடினமாக உள்ளதா? இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக இருப்பதாய்ச் சொல்லிக்கொள்கிற சிலர், நன்மைசெய்வதில் சோர்ந்துபோய், கிறிஸ்தவ செயல்களுக்கு உள்ளுரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். (யாக்கோபு 2:17, 26) உங்கள் காரியத்தில் இது உண்மையாக இருப்பதாய் நீங்கள் கண்டால், உங்கள் ஆவிக்குரிய உணவு திட்டத்தை மேம்பட்டதாக்குவதில் அல்லது ஆவிக்குரிய உணவை நீங்கள் உட்கொள்ளும் அளவை அதிகரிப்பதில் பேரளவாக அதற்கான பரிகாரம் சார்ந்திருக்கலாம்.—ஏசாயா 40:29-31; கலாத்தியர் 6:9.
ஆவிக்குரிய உணவு உண்பதில் குறைபாடுள்ள பழக்கங்களை உண்டாக்கிக்கொள்வோராய் உங்களை ஏமாற்றமடையச் செய்யாதீர்கள். தாங்கள் பைபிளை வாசித்து அதிலிருந்து திருத்தமான அறிவை பெறவேண்டிய அவசியமில்லை என்று மக்களை நம்பவைப்பது, நூற்றாண்டுகளாக சாத்தான் பயன்படுத்திவந்திருக்கிற மிகப் பெரும் சதித்திட்டங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. சத்துருவின் நகரங்களைக் கைப்பற்றும்படி படையெடுக்கும் சேனைகளால் பழங்காலம் முதற்கொண்டே மேற்கொள்ளப்பட்ட ஒரு சூழ்ச்சியை—அவர்களுக்கு உணவு இல்லாமற்போகச் செய்து, பட்டினிபோட்டு சரணடையச் செய்தலை—அவன் பயன்படுத்துகிறான். ஆனால் இந்தச் சூழ்ச்சியில் அவன் ஒரு படி அதிகமாகவே சென்றிருக்கிறான். அவன் “முற்றுகையிடும்” ஆட்கள், தங்களைச் சுற்றிலும் உண்பதற்கு ஏற்ற, மலையளவாய் மிகுந்துள்ள ஆவிக்குரிய உணவை உடையோராக இருக்கையில், தங்களைத்தாங்களே பட்டினி கிடக்கச் செய்துகொள்ளும்படி அவர்களை வஞ்சிக்கிறான். அவனுடைய தாக்குதலுக்கு மிகப் பலர் இரையாவது ஆச்சரியமாயில்லை!—எபேசியர் 6:10-18.
ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்காக உணவு
நமக்கு உணவு தேவைப்படுவதன் மூன்றாவது காரணம், “உடலின் ஆரோக்கியத்தை சீர்ப்படுத்துவதற்கு . . . மற்றும் நோயைத் தடுப்பதற்கு,” என்று உணவும் ஊட்டச்சத்தும் புத்தகம் குறிப்பிடுகிறது. நல்ல உணவினால் ஏற்படும் உடல்நல நன்மைகள் உடனடியாகத் தெரிவதில்லை. நாம் ஒரு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு முடிக்கையில், ‘அது என் இருதயத்துக்கு (அல்லது என் சிறுநீரகங்களுக்கு அல்லது தசைகளுக்கு, இன்னும் மற்றவற்றிற்கு) மிகுதியாக நன்மைசெய்திருக்கிறது,’ என்று நினைப்பது அரிது. எனினும், நீடித்த ஒரு காலப்பகுதிக்கு உணவில்லாமல் இருக்க முயற்சி செய்து பாருங்கள், உங்கள் உடல்நலத்தின் பாதிப்புகள் தெளிவாகத் தெரிகின்றன. என்ன பாதிப்புகள்? “ஊட்டக்குறைவினால் ஏற்படும் பாதிப்புகள் தீங்கானதே: ஆரோக்கியமாக வளர இயலாமை, சிறிய நோயும் தொற்றுவதைத் தடுக்க இயலாமை, சக்தி இல்லாமை அல்லது துணிந்து முயற்சி எடுக்கத் தவறுவது” என்று மருத்துவ குறிப்பு புத்தகம் ஒன்று சொல்கிறது. இதற்கு ஒப்பான ஆவிக்குரிய வகையான சுகமில்லாமை பூர்வ இஸ்ரவேலரைச் சிறிது காலம் தாக்கினது. தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை.”—ஏசாயா 1:5, 6.
அத்தகைய ஆவிக்குரிய தளர்ச்சியையும் ஆவிக்குரிய தொற்றுநோயின் பாதிப்புகளையும் எதிர்த்துத் தடுக்க, ஆவிக்குரிய நல்ல உணவு நமக்குச் சக்தியைக் கொடுக்கிறது. கடவுளிடமிருந்துவரும் அறிவு—அதை நாம் சாப்பிட்டு வந்தால்,—நம்மை ஆவிக்குரியப் பிரகாரம் நல்ல நிலைமையில் வைத்துக்காப்பதற்கு உதவி செய்கிறது! எவ்வாறு தம்முடைய நாளிலிருந்த பெரும்பான்மையான மக்கள், சரியான விதத்தில் ஆவிக்குரிய உணவைச் சாப்பிடும் காரியத்தில் தங்கள் முற்பிதாக்களின் கவனக்குறைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதன்பேரில் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டு பேசினார். அவர் போதித்துக்கொண்டிருந்த சத்தியங்களை உட்கொள்ள அவர்களுங்கூட மறுத்துவிட்டனர். அதன் விளைவு என்ன? இயேசு இவ்வாறு சொன்னார்: “இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.” (மத்தேயு 13:15) கடவுளுடைய வார்த்தையின் சுகப்படுத்தும் வல்லமையிலிருந்து பெரும்பான்மையர் ஒருபோதும் நன்மையடையவில்லை. ஆவிக்குரியப் பிரகாரமாய் நோயுற்றோராகவே இருந்துவந்தனர். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலருங்கூட ‘பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயினர்.’ (1 கொரிந்தியர் 11:30) கடவுள் அருளிக்கொண்டிருக்கும் ஆவிக்குரிய உணவை நாம் ஒருபோதும் அவமதியாதிருப்போமாக.—சங்கீதம் 107:20.
ஆவிக்குரிய தூய்மைக் கேடு
ஆவிக்குரிய பட்டினியின் பயமுறுத்தல் மட்டுமல்லாமல், நாம் விழிப்புள்ளவர்களாக இருக்கத் தேவைப்படுகிற மற்றொரு ஆபத்தும் உள்ளது—நாம் சாப்பிடும் வகையான உணவுதானே தூய்மைக்கேடு செய்யப்பட்டிருக்கலாம். ஆபத்தான பேய்த்தன கருத்துக்களால் தூய்மைக் கேடு செய்யப்பட்டுள்ள போதகங்களை ஏற்பது, கிருமிகளால் அல்லது நஞ்சு பொருள்களால் களங்கப்படுத்தப்பட்டிருக்கிற சரீரப்பிரகாரமான உணவைச் சாப்பிடுவது நம்மை எளிதில் பாதிப்பதைப் போலவே இதுவும் நமக்கு நஞ்சூட்டலாம். (கொலோசெயர் 2:8) நஞ்சுள்ள உணவைக் கண்டுகொள்வது எப்போதும் எளிதாக இருக்கிறதில்லை. “உணவு, சிலசமயங்களில் மிக நலமாக இருப்பதாய்த் தோன்றலாம் எனினும் நோய் உண்டாக்குகிற கிருமிகளைக் கொண்டதாகவும் இருக்கலாம்” என்று ஓர் அதிகாரத்துவம் சொல்லுகிறது. ஆகையால், விசுவாசதுரோக எழுத்துக்களடங்கிய பிரசுரங்கள் போன்றவை, வேதவார்த்தைக்கு மாறான போதகங்களும் தத்துவ ஞானங்களும் உட்புகுத்தப்பட்டு கறைப்படுத்துபவையாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து, அடையாள அர்த்தமுடைய உணவின் ஊற்றுமூலத்தை நாம் கூர்ந்தாராய்வது நல்லது. உணவு உற்பத்தி செய்வோர் சிலர், தங்கள் உற்பத்திப்பொருட்களில் அடங்கியவற்றைக் குறித்து தங்கள் வாடிக்கைக்காரரை ஏமாற்றுவதற்குத் தவறான விவரச் சீட்டையுங்கூட பயன்படுத்துகின்றனர். மகா வஞ்சகனாகிய சாத்தான் அவ்வாறே செய்வான் என்று நாம் நிச்சயமாகவே எதிர்பார்க்கலாம். ஆகையால், நீங்கள் ‘விசுவாசத்திலே ஆரோக்கியமுள்வர்களாய்’ நிலைத்திருக்கும்படி, நம்பத்தக்க ஒரு ஊற்றுமூலத்திலிருந்து அத்தகைய அடையாள அர்த்தமுள்ள உணவைப் பெறும்படி நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.—தீத்து 1:9, 13.
பதினேழாவது நூற்றாண்டு போதகர் ஒருவரான தாமஸ் ஆடம்ஸ், தம்முடைய காலத்திய ஜனங்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “அவர்கள் தங்கள் பற்களைக்கொண்டே தங்கள் பிரேதக் குழிகளைத் தோண்டியிருக்கிறார்கள்.” வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவர்கள் சாப்பிட்டதே அவர்களைக் கொன்றது. ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் சாப்பிடுவது உங்களைக் கொன்றுவிடாதபடி நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். ஆவிக்குரிய நல்ல உணவு பொருட்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். யெகோவாவின் ஜனங்களாக இருப்போராய் உரிமைபாராட்டினவர்கள் கள்ளப் போதகர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடுக்கத் திரும்பினபோது, “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், . . . செலவழிப்பானேன்?” என்று யெகோவா கேட்டார். “நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்,” என்றார்.—ஏசாயா 55:2, 3; எரேமியா 2:8, 13-ஐ ஒப்பிடுக.
ஆவிக்குரிய உணவு ஏராளமாக உள்ளது
ஆவிக்குரிய நல்ல உணவு நிச்சயமாகக் குறைவுபடுகிறதில்லை. இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனமுரைத்தபடி, தேவைப்படுகிற எவருக்கும், “ஏற்றவேளையிலே போஜனங்” கொடுப்பதில் சுறுசுறுப்பாய் உழைக்கிற உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் வகுப்பாரை அவர் இப்போது உடையவராக இருக்கிறார். (மத்தேயு 24:45) தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம், யெகோவா இவ்வாறு வாக்களித்தார்: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; . . . இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.” உண்மையில், சாப்பிட விரும்புவோருக்கு ஒரு பெரிய விருந்தை அவர் வாக்களிக்கிறார். “சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார்; அதிலே கொழும் பதார்த்தங்களும் பழந்திராட்சரசமும் நிறைந்திருக்கும்; கொழும் பதார்த்தங்கள் ஊன் மிகுந்தவை; பழந்திராட்சரசம் வடிகட்டப்பட்டது.”—ஏசாயா 25:6, தி.மொ.; 65:13, 14.
எனினும், இதைச் சிந்தித்துப் பாருங்கள்: ஒரு பெருவிருந்தின்போது நாம் பட்டினிக் கிடந்து சாகக்கூடும்! உணவு நம்முன் சூழ்ந்திருக்கையிலும், அதில் சிறிதைச் சாப்பிட நம்மை நாமே உண்மையில் தூண்டி எழுப்பாவிடில், வினைமையாக உணவூட்டம் குறைவுபடுகிறவர்களாய் நாம் முடிவடையக்கூடும். நீதிமொழிகள் 26:15, (தி.மொ.) இந்தச் சொல்லர்த்தமான விவரிப்பை அளிக்கிறது: “சோம்பேறி கலத்திலே கையை வைப்பான், திரும்பத் தன் வாய்க்கு அதை எடுப்பது அவனுக்குக் கஷ்டம்.” எத்தகைய விசனகரமான நிலைமை! கடவுளுடைய வார்த்தையையும், ஆவிக்குரிய உணவை உட்கொள்ளும்படி நமக்கு உதவிசெய்யத் திட்டமிடப்பட்ட பைபிள் பிரசுரங்களையும், தனிப்பட்டு படிப்பதில் நம்மை முயற்சியில் ஈடுபடுத்துவதற்கு நாமும் அதேபோல மீறிய சோம்பலுள்ளோராகக்கூடும். அல்லது கிறிஸ்தவ சபையின் கூட்டங்களுக்காக தயார் செய்வதற்கு அல்லது கூட்டங்களில் பங்குகொள்வதற்கு மீறிய சோர்வுற்றோராகக்கூடும்.
நல்ல சாப்பாட்டுப் பழக்கங்கள்
அவ்வாறெனில், ஆவிக்குரியப் பிரகாரம் நன்றாய்ச் சாப்பிடும் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு எல்லாக் காரணமும் நமக்கு உள்ளது. எனினும், உண்மை என்னவெனில், பலர் தங்கள் ஆவிக்குரிய உணவை மிகச் சொற்ப அளவில் சாப்பிடுகின்றனர்; சிலர் முற்றிலுமாகத் தங்களைப் பட்டினிப் போட்டுக்கொள்கின்றனர். பிற்பட்ட வாழ்க்கையில் அதன் விளைவுகளைத் தாங்கள் அனுபவிக்கும் வரையில், சரியான உணவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் காணாத ஆட்களைப்போல் அவர்கள் இருக்கலாம். நன்றாய்ச் சாப்பிடுதல் உயிருக்கு இன்றியமையாதது என்று நாம் அறிந்திருக்கிறபோதிலும், நம்முடைய சாப்பிடும் பழக்கங்களைப் பற்றி நாம் ஏன் கவனமற்றவர்களாக இருக்கிறோம் என்பதற்கு, உடல்நலத்துக்குகந்தவாறு சாப்பிடுதல் என்ற ஆங்கில புத்தகம் இந்தக் காரணத்தைக் கொடுக்கிறது: “பிரச்சினை என்னவென்றால், [மிகக் குறைவாகச் சாப்பிடும் பழக்கங்களின் விளைவாக] உடல்நலம் சீக்கிரத்தில் கேடடைவதில்லை, கவனமற்று சாலையைக் கடக்கையில் ஏற்படும் திடீர் விளைவு போன்ற எதுவும் சம்பவிப்பதில்லை. மாறாக, ஒருவருடைய உடல்நலத்தில் வெகு தாமதமாய், உள்ளுக்குள் படிப்படியாய் சீர்கேடடைய ஆரம்பிக்கலாம் நோய் தொற்று அதிக விரைவாய் ஏற்படலாம், எலும்புகள் மேலுமதிகமாய் வலுவற்று வரலாம், காயங்கள் ஆறுவதும் நோயிலிருந்து மீண்டெழுவதும் தாமதிக்கலாம்.”
மிக மோசமான நிலையில் இருப்போரில், பசியற்ற உளநோயால் வருந்தும் இளம் பெண்ணைப்போல் ஒருவர் ஆகக்கூடும். உடல்நலம் படிப்படியாய்க் கேடடைந்துகொண்டிருக்கிறபோதிலும், தனக்குச் சிறிது உணவே தேவை என்றும், தான் முற்றிலும் நன்றாய் இருக்கிறாள் என்றும் தானாகவே நம்பிக்கொண்டிருக்கிறாள். முடிவில், சாப்பிடுவதற்கான எல்லா விருப்பத்தையும் அடியோடு இழந்துவிடுகிறாள். “இது ஆபத்தான ஒரு நிலைமை,” என்று மருத்துவ குறிப்புப் புத்தகம் சொல்லுகிறது. ஏன்? “அந்த நோயாளி சொல்லர்த்தமாய்ப் பட்டினிக் கிடந்து சாவதில்லை என்றாலும், அவள் கடுமையாய் ஊட்டச்சத்துக் குறைவுபடுபவளாகி மிகச் சாதாரண அற்ப தொற்றுநோயுக்கும் ஆளாகக்கூடும்.”
ஒரு கிறிஸ்தவப் பெண் இவ்வாறு ஒப்புக்கொண்டாள்: “கூட்டத்துக்குத் தவறாமல் தயாரிப்பதற்கும் தனிப்பட்ட படிப்புக்குமுரிய தேவையை நான் அறிந்து, எனினும் அதைச் செய்ய முடியாமல் பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருந்தேன்.” முடிவில் அவள் மாற்றங்களைச் செய்து, அவ்வாறு கடவுளுடைய வார்த்தையின் நல்ல மாணாக்கியானாள், ஆனால், தன் நிலைமையின் அவசரத்தன்மையை அவள் முற்றிலுமாக உணர்ந்தபோதுதானே அவ்வாறு செய்தாள்.
அப்படியானால், அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த அறிவுரையை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள். இரட்சிப்புக்கு “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:3) ஆம், “வாஞ்சையாயிருங்கள்”—கடவுளைப்பற்றிய அறிவைக்கொண்டு உங்கள் மனதையும் இருதயத்தையும் நிரப்புவதற்கு—திடமான வாஞ்சையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்தவர்களும்கூட அந்த வாஞ்சையைத் தொடர்ந்து வளர்த்துவருவது அவசியம். ஆவிக்குரிய உணவு, ‘உங்கள் உடைமைகளில் மிக அதிகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றாய்’ ஆகும்படி விடாதீர்கள். ஆவிக்குரியப் பிரகாரம் நன்றாய்ச் சாப்பிட்டு, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகிற ‘ஆரோக்கியமான வசனங்கள்’ எல்லாவற்றிலிருந்தும் முழுமையாகப் பயனடையுங்கள்.—2 தீமோத்தேயு 1:13, 14.
[பக்கம் 28-ன் படம்]
உங்கள் உணவு திட்டத்தில் முன்னேற்றம் செய்யவேண்டியதாக இருக்கிறதா?