கடவுளுடைய வார்த்தையை வாசித்து அவரை சத்தியத்திலே சேவியுங்கள்
“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்.” —சங்கீதம் 86:11.
1. சத்தியத்தைப் பற்றி இந்தப் பத்திரிகையின் முதல் இதழ் கூறியதன் சாராம்சம் என்ன?
யெகோவா வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்புகிறார். (சங்கீதம் 43:3) அவருடைய வார்த்தையாகிய பைபிளை வாசித்து சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கான மன ஆற்றலையும்கூட அவர் நமக்குத் தருகிறார். இந்தப் பத்திரிகையின் முதல் இதழ்—ஜூலை 1879—இவ்வாறு சொன்னது: “வாழ்க்கை என்னும் வனாந்தரத்திலே சத்தியம் என்பது ஒரு பணிவடக்கமுள்ள சிறு மலரைப் போல் உள்ளது, அதைச் சுற்றி தவறான கருத்துக்கள் என்ற களைச்செடிகள் அளவுக்கு மீறி செழிப்பாக வளர்ந்து அதை ஏறக்குறைய முழுவதுமாக நெரித்துவிட்டதைப் போல் இருக்கிறது. நீங்கள் அம்மலரை கண்டுபிடித்தீர்களென்றால், எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். அதன் அழகை நீங்கள் கண்டால், தவறான கருத்துக்கள் என்ற களைச்செடிகளையும் மூடநம்பிக்கைகள் என்ற முட்புதர்களையும் ஒதுக்கித்தள்ள வேண்டும். அம்மலரை நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்பினால், தாழப் பணிந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சத்திய மலரோடு திருப்தியடைந்து விடாதீர்கள். ஒரு சத்திய மலர் போதுமானதாய் இருந்திருந்தால் அதற்கும் மேல் அதிகமான மலர்கள் படைக்கப்பட்டிருக்க மாட்டா. விடாமல் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருங்கள், தொடர்ந்து நாடிக்கொண்டே இருங்கள்.” கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும் படிப்பதும் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் அவருடைய சத்தியத்திலே நடப்பதற்கும் நமக்கு உதவுகின்றன.—சங்கீதம் 86:11.
2. பண்டைய எருசலேமில் இருந்த யூதர்களுக்கு எஸ்றாவும் மற்றவர்களும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை வாசித்துக் காண்பித்தபோது என்ன ஏற்பட்டது?
2 எருசலேமின் சுவர்கள் பொ.ச.மு. 455-ல் மறுபடியும் கட்டப்பட்ட பிறகு, ஆசாரியனாகிய எஸ்றாவும் மற்றவர்களும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை யூதர்களுக்கு வாசித்துக் காண்பித்தனர். இதைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சிகரமான கூடாரப்பண்டிகையும், பாவ அறிக்கைகளும், “நம்பத்தக்க ஏற்பாடு” ஒன்றை முடிவு செய்வதும் இருந்தன. (நெகேமியா 8:1–9:38) நாம் வாசிக்கிறோம்: “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.” (நெகேமியா 8:8) யூதர்கள் எபிரெய மொழியை நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அரமேயிக் மொழியில் பொழிப்புரை செய்யப்பட்டது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். உரையோ எபிரெய மொழியின் பதங்களை வெறுமனே விளக்குவதாய் இருப்பதாக குறிப்பிடுவதில்லை. எஸ்றாவும் மற்றவர்களும் நியாயப்பிரமாணத்தை விவரமாக எடுத்து விளக்கிக் காண்பித்தார்கள், அப்போது ஜனங்கள் அதன் நியமங்களைக் கிரகித்துக்கொண்டு பொருத்த முடிந்தது. கிறிஸ்தவ பிரசுரங்களும் கூட்டங்களும்கூட கடவுளுடைய வார்த்தைக்கு ‘அர்த்தம் கொடுக்க’ உதவுகின்றன. அதேபோல் நியமிக்கப்பட்டிருக்கும் மூப்பர்களும் ‘போதகசமர்த்தராய்’ இருக்கின்றனர்.—1 தீமோத்தேயு 3:1, 2; 2 தீமோத்தேயு 2:24.
நிரந்தரமான நன்மைகள்
3. பைபிள் வாசிப்பிலிருந்து சேகரிக்கப்படும் சில நன்மைகள் யாவை?
3 கிறிஸ்தவ குடும்பங்கள் பைபிளை ஒன்றுசேர்ந்து வாசிக்கையில், பெரும்பாலும் நிரந்தரமான நன்மைகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் கடவுளுடைய சட்டங்களை நன்றாக அறிய வருகின்றனர், கோட்பாடுகளைப் பற்றிய சத்தியம், தீர்க்கதரிசன விஷயங்கள், மற்ற பொருள்கள் போன்றவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். பைபிளின் ஒரு பகுதி வாசிக்கப்பட்ட பிறகு, குடும்பத் தலைவர் பின்வருமாறு கேட்கலாம்: இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? இது எந்த விதத்தில் மற்ற பைபிள் போதனைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் நாம் எவ்வாறு இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்? பைபிளை வாசிக்கையில், உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் அல்லது மற்ற இன்டெக்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் குடும்பம் மிகுதியான உட்பார்வையைப் பெற்றுக்கொள்கிறது. வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தின் இரண்டு தொகுதிகளையும் பலன்தரத்தக்க விதத்தில் கலந்தாராயலாம்.
4. யோசுவா 1:8-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் கட்டளையை யோசுவா எவ்வாறு பொருத்த வேண்டியிருந்தது?
4 வேதாகமத்திலிருந்து எடுக்கப்படும் நியமங்கள் வாழ்க்கையில் நமக்கு உதவக்கூடும். மேலும், “பரிசுத்த வேத எழுத்துக்களை” வாசிப்பதும் படிப்பதும் ‘நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாய்’ ஆக்கக்கூடும். (2 தீமோத்தேயு 3:15) கடவுளுடைய வார்த்தை நம்மை வழிநடத்தும்படி அனுமதித்தோமென்றால், நாம் அவருடைய சத்தியத்திலே தொடர்ந்து விடாமல் நடப்போம், மேலும் நம்முடைய நீதியான விருப்பங்கள் நிறைவேற்றப்படும். (சங்கீதம் 26:3; 119:130) இருப்பினும், மோசேயைப் பின்தொடர்ந்துவந்த யோசுவாவைப் போல் நாமும் புரிந்துகொள்ளுதலை நாட வேண்டும். “நியாயப்பிரமாண புஸ்தகம்” அவருடைய வாயைவிட்டுப் பிரியாமலும், அவர் அதை இரவும் பகலும் வாசிக்கவும் வேண்டியதாயிருந்தது. (யோசுவா 1:8) “நியாயப்பிரமாண புஸ்தகம்” அவருடைய வாயைவிட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம், அது கூறிய அறிவொளியூட்டும் காரியங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதை நிறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே. இரவும் பகலும் நியாயப்பிரமாணத்தை வாசிக்க வேண்டும் என்பதன் அர்த்தம், யோசுவா அதைத் தியானிக்க வேண்டும், அதைப் படிக்க வேண்டும் என்பதே. அதேபோல் அப்போஸ்தலனாகிய பவுல், நடத்தை, ஊழியம், போதனை ஆகியவற்றைக் குறித்து ‘ஆழமாய் சிந்தித்துப் பார்க்கும்படி’—தியானம் செய்யும்படி—தீமோத்தேயுவை ஊக்குவித்தார். ஒரு கிறிஸ்தவ மூப்பராக, தீமோத்தேயு விசேஷ கவனமுள்ளவராய் இருக்க வேண்டியிருந்தது, அவருடைய வாழ்க்கை பின்பற்றத்தக்கதாயும் அவர் வேதாகம சத்தியத்தைப் போதிக்க வேண்டியவராகவும் இருந்தார்.—1 தீமோத்தேயு 4:15, NW.
5. கடவுளுடைய சத்தியத்தை நாம் கண்டடைய வேண்டுமென்றால் எது தேவைப்படுகிறது?
5 கடவுளுடைய சத்தியம் விலைமதிப்பில்லா பொக்கிஷமாய் இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதென்பது, வேதாகமத்தை ஆழமாய் ஆராய்ந்து பார்ப்பதையும், விடாமல் தொடர்ந்து துருவிக் காண்பதையும் தேவைப்படுத்துகிறது. மகத்தான போதனையாளரின் பிள்ளைகள்போன்ற மாணவர்களாய் இருப்பதன் மூலமாய் மட்டுமே நாம் ஞானத்தைச் சம்பாதித்துக்கொண்டு யெகோவாவின் பேரில் வைத்திருக்க வேண்டிய பக்தியோடுகூடிய பயப்படுதலைப் புரிந்துகொள்வோம். (நீதிமொழிகள் 1:7; ஏசாயா 30:20, 21) நாம் வேதப்பூர்வமாக விஷயங்களை நமக்குநாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (1 பேதுரு 2:1, 2) பெரோயா பட்டணத்தில் இருந்த யூதர்கள் “மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் [பவுல் கூறியவை] இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.” அப்படி ஆராய்ந்து பார்த்ததற்காக பெரோயா பட்டணத்தார் கடிந்துகொள்ளப்படுவதற்குப் பதிலாக பாராட்டப்பட்டனர்.—அப்போஸ்தலர் 17:10, 11.
6. வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தது சில யூதர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தவில்லை என்று இயேசுவால் சுட்டிக்காண்பிக்க முடிந்தது ஏன்?
6 இயேசு சில யூதர்களிடம் கூறினார்: “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.” (யோவான் 5:39, 40) அவர்கள் சரியான குறிக்கோளோடு—அது அவர்களை ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும் என்ற குறிக்கோளோடு—வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தனர். உண்மையிலேயே, இயேசு ஜீவனுக்கு வழியாய் இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காண்பித்த மேசியானிய தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் அடங்கியிருந்தன. யூதர்களோ அவரை ஏற்க மறுத்துவிட்டனர். ஆகையால் வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தது அவர்களுக்கு எந்த நன்மையும் அளிக்கவில்லை.
7. பைபிளைப் புரிந்துகொள்வதில் வளர்ச்சியடைவதற்கு எது தேவைப்படுகிறது, ஏன்?
7 பைபிளைப் புரிந்துகொள்வதில் படிப்படியாக வளருவதற்கு, கடவுளுடைய ஆவி அல்லது செயல்நடப்பிக்கும் சக்தியின் வழிநடத்துதல் நமக்கு தேவையாயிருக்கிறது. அவற்றின் அர்த்தத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, ‘தேவனுடைய ஆழங்கள் உட்பட ஆவி எல்லா காரியங்களையும் ஆராய்ந்து பார்க்கிறது.’ (1 கொரிந்தியர் 2:10) தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் கேட்ட எந்தத் தீர்க்கதரிசனங்களிலும் உள்ள ‘எல்லா காரியங்களையும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாய்’ இருந்தனர். (1 தெசலோனிக்கேயர் 5:20, 21) பவுல் தெசலோனிக்கேயர்களுக்கு எழுதியபோது (சுமார் பொ.ச. 50), ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த கிரேக்க வேதாகமங்களின் ஒரே பகுதி, மத்தேயுவின் சுவிசேஷமாய் மட்டுமே இருந்தது. ஆகையால் தெசலோனிக்கேயா பட்டணத்தாரும் பெரோயா பட்டணத்தாரும் எல்லா காரியங்களையும் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிந்தது, எபிரெய வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுச் சரிபார்ப்பதன் மூலம் பெரும்பாலும் அவ்வாறு செய்ய முடிந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசித்து படிக்க வேண்டிய அவசியமிருந்தது, நாமும் அதைப் போலவே செய்ய வேண்டும்.
அனைவருக்கும் இன்றியமையாதது
8. நியமிக்கப்பட்ட மூப்பர்கள் பைபிள் அறிவில் ஏன் சிறந்து விளங்க வேண்டும்?
8 நியமிக்கப்பட்ட மூப்பர்கள் பைபிள் அறிவில் விசேஷ திறமை பெற்றிருக்க வேண்டும். அவர்கள் ‘போதகசமர்த்தராய்’ இருக்க வேண்டும், ‘உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவர்களுமாய்’ இருக்க வேண்டும். கண்காணியாயிருந்த தீமோத்தேயு ‘சத்திய வசனத்தை சரியாக கையாளுபவராய்’ இருக்க வேண்டியிருந்தது. (1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:9; 2 தீமோத்தேயு 2:15) அவருடைய தாயாகிய ஐனிக்கேயாளும் அவருடைய பாட்டியாகிய லோவிசாளும் அவருக்கு பரிசுத்த வேத எழுத்துக்களை சிசுப்பருவத்திலிருந்து கற்றுக்கொடுத்திருந்தனர், அவருடைய தகப்பன் அவிசுவாசியாக இருந்தபோதிலும் அவருக்குள் ‘மாயமற்ற விசுவாசத்தை’ அவர்கள் படிப்படியாக வளர்த்து வந்தனர். (2 தீமோத்தேயு 1:5; 3:15) விசுவாசத்தில் இருக்கும் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்’ வளர்த்துவர வேண்டும், விசேஷமாக தகப்பன்மாராய் இருக்கும் மூப்பர்கள் ‘துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை’ உடையவர்களாய் இருக்க வேண்டும். (எபேசியர் 6:4, NW; தீத்து 1:6) நம்முடைய சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும், கடவுளுடைய வார்த்தையை வாசித்து, படித்து, அதைப் பொருத்துவதற்கான அவசியத்தை நாம் மிகவும் கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
9. பைபிளை ஏன் உடன் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும்?
9 நாம் உடன்விசுவாசிகளோடுகூட சேர்ந்தும் பைபிளைப் படிக்க வேண்டும். தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் தான் எழுதிய புத்திமதியை ஒருவரோடொருவர் கலந்துபேச வேண்டும் என்று பவுல் விரும்பினார். (1 தெசலோனிக்கேயர் 4:18) நாம் சத்தியத்தை விளங்கிக்கொள்வதில் அறிவுக்கூர்மையோடு இருப்பதற்கு, மற்ற பக்தியுள்ள மாணவர்களோடு ஒன்றுசேர்ந்து வேதாகமத்தை ஆராய்வதைத் தவிர மேலான வழி எதுவும் இல்லை. “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்” என்ற நீதிமொழி உண்மையாய் இருக்கிறது. (நீதிமொழிகள் 27:17) இரும்புக் கருவி ஒன்றை உபயோகிக்காமலும் கூர்மையாக்காமலும் வைத்திருந்தால், அது துருப்பிடித்து விடக்கூடும். அதேபோல், கடவுளுடைய சத்திய வார்த்தையை வாசித்து, படித்து, தியானம் செய்வதிலிருந்து நாம் பெற்றுக்கொண்ட அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கு நாம் ஒழுங்காக ஒன்றுகூடி வந்து ஒருவரையொருவர் அறிவுக்கூர்மையில் கூர்மையாக்கிக்கொள்ள வேண்டும். (எபிரெயர் 10:24, 25) மேலும், ஆவிக்குரிய வெளிச்சத்தின் ஒளிக்கதிர்களிலிருந்து நாம் பயனடைகிறோம் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு இது ஒரு வழியாய் இருக்கிறது.—சங்கீதம் 97:11; நீதிமொழிகள் 4:18.
10. சத்தியத்திலே நடவுங்கள் என்பதன் அர்த்தம் என்ன?
10 நாம் வேதாகமத்தைப் படிக்கையில், சங்கீதக்காரன் கேட்டதுபோல் பொருத்தமாகவே கடவுளிடம் இவ்வாறு ஜெபிக்கலாம்: ‘உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்துவதாக.’ (சங்கீதம் 43:3) கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று நாம் விரும்பினால், அவருடைய சத்தியத்திலே நடக்க வேண்டும். (3 யோவான் 3, 4) இது அவருடைய தேவைகளுக்கு ஒத்திசைய வாழ்வதையும் அவரை உண்மைத்தன்மையோடும் உள்ளார்ந்த தன்மையோடும் சேவிப்பதையும் உட்படுத்துகிறது. (சங்கீதம் 25:4, 5; யோவான் 4:23, 24) நாம் யெகோவாவை அவருடைய வார்த்தையில் வெளிக்காட்டியிருக்கிறபடியும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின்’ பிரசுரங்களில் தெளிவாக்கப்பட்டிருக்கிறபடியும் சத்தியத்தில் சேவிக்க வேண்டும். (மத்தேயு 24:45-47) இது வேதாகமத்தின் திருத்தமான அறிவைத் தேவைப்படுத்துகிறது. அப்படியென்றால் நாம் கடவுளுடைய வார்த்தையை எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு படிக்க வேண்டும்? நாம் ஆதியாகமம் அதிகாரம் 1, வசனம் 1-லிருந்து ஆரம்பித்து 66 புத்தகங்களையும் வாசிக்க வேண்டுமா? ஆம், முழு பைபிளையும் தன் மொழியில் வைத்திருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அதை ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை வாசிக்க வேண்டும். ‘உண்மையுள்ள அடிமையின்’ மூலம் கடவுள் மிகுதியாக கிடைக்கச் செய்திருக்கும் வேதாகம சத்தியத்தின் புரிந்துகொள்ளுதலை அதிகரிப்பதே பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பதில் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
கடவுளுடைய வார்த்தையை சப்தமாக வாசியுங்கள்
11, 12. கூட்டங்களில் பைபிளை சப்தமாக வாசிப்பது ஏன் பயனுள்ளது?
11 நாம் தனியாக இருக்கும்போது அமைதியாய் வாசிக்கலாம். இருப்பினும், பண்டைய காலங்களில் தனிப்பட்ட வாசிப்பு சப்தமாக செய்யப்பட்டது. எத்தியோப்பிய அண்ணகர் தன் இரதத்திலே ஏறிச்செல்கையில், சுவிசேஷகனாகிய பிலிப்பு ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து சப்தமாக வாசித்ததைக் கேட்டார். (அப்போஸ்தலர் 8:27-30) “வாசி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய சொல் “உரக்கப் படி” என்று முக்கியமாய் பொருள்படுகிறது. ஆகையால் ஆரம்பத்தில் அமைதியாக வாசித்து அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், ஒவ்வொரு வார்த்தையையும் சப்தமாக உச்சரிப்பதிலிருந்து உற்சாகமிழந்து விடக்கூடாது. கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை வாசிப்பதன் மூலம் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதே முக்கியமான விஷயம்.
12 கிறிஸ்தவ கூட்டங்களில் பைபிளை சப்தமாக வாசிப்பது பயனளிப்பதாய் இருக்கும். அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன்வேலையாளராயிருந்த தீமோத்தேயுவை இவ்வாறு ஊக்குவித்தார்: “அனைவர் கேட்க வாசிப்பதிலும் புத்திசொல்லுவதிலும் உபதேசிப்பதிலும் ஜாக்கிரதையாயிரு.” (1 தீமோத்தேயு 4:13, NW) பவுல் கொலோசெயர்களிடம் கூறினார்: “இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.” (கொலோசெயர் 4:16) வெளிப்படுத்துதல் 1:3 சொல்கிறது: “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.” ஆகையால், ஒரு பொதுப் பேச்சாளர், தான் சபைக்கு சொல்பவற்றை ஆதரிப்பதற்கு பைபிளிலிருந்து வசனங்களை எடுத்து வாசிக்க வேண்டும்.
பொருள்வாரியான படிப்பு
13. பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதில் எது அதிக படிப்படியாய் முன்னேறுகிற முறையாக இருக்கிறது, வேதவசனங்களைக் கண்டுபிடிப்பதற்கு எது நமக்கு உதவக்கூடும்?
13 வேதப்பூர்வமான சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கு பொருள்வாரியான படிப்பே அதிக படிப்படியாய் முன்னேறுகிற முறையாக இருக்கிறது. புத்தகம், அதிகாரம், வசனம் ஆகியவற்றுக்கு ஏற்றபடி அதன் சூழமைவில் பைபிள் வார்த்தைகளை அகர வரிசையில் பட்டியலிடும் கன்கார்டன்ஸ், ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு சம்பந்தப்பட்ட வசனங்களைக் கண்டுபிடிப்பதை சுலபமாக்குகிறது. அப்படிப்பட்ட வசனங்கள் ஒன்றோடொன்று பொருத்தப்படலாம், ஏனென்றால் பைபிளின் ஆசிரியர் தான் சொல்பவற்றுக்கு முரணாக எதையும் சொல்வதில்லை. பரிசுத்த ஆவியின் மூலம் அவர் சுமார் 40 மனிதர்களைக்கொண்டு பைபிளை 16 நூற்றாண்டு காலமாக எழுதும்படி ஏவினார். அதைப் பொருள்வாரியாக படிப்பது, சத்தியத்தை கற்றுக்கொள்வதற்கு காலத்தால் சோதிக்கப்பட்ட முறையாயிருக்கிறது.
14. எபிரெய வேதாகமத்தையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் ஏன் ஒன்றுசேர்ந்து படிக்க வேண்டும்?
14 பைபிள் சத்தியத்துக்கான நம்முடைய போற்றுதல், எபிரெய வேதாகமத்தோடு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் சேர்த்து வாசிக்கவும் படிக்கவும் நம்மை உந்துவிக்க வேண்டும். இது கிரேக்க வேதாகமம் எவ்வாறு கடவுளுடைய நோக்கத்தோடு இணைந்திருக்கிறது என்பதையும், எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்களின் பேரில் எவ்வாறு விளக்கமளிக்கும் என்பதையும் காண்பிக்கும். (ரோமர் 16:25-27; எபேசியர் 3:4-6; கொலோசெயர் 1:26) பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்), இந்த விதத்தில் மிகவும் பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது. பைபிள் உரையின் மூலப்படிவம், அதன் பின்னணி, தனிச்சிறப்புவாய்ந்த சொற்றொடர்கள் ஆகியவற்றைக் குறித்து கிடைக்கக்கூடிய மிகுதியான அறிவை பயன்படுத்தினவர்களாகிய கடவுளுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களால் அது தயாரிக்கப்பட்டது. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்” மூலம் யெகோவா அளித்திருக்கும் பைபிள் படிப்பு உதவிப் புத்தகங்களும்கூட மிகவும் இன்றியமையாதவை.
15. பைபிளிலிருந்து ஆங்காங்கே மேற்கோள் எடுத்துக் காண்பிப்பது பொருத்தமானது என்பதை நீங்கள் எவ்வாறு நிரூபிப்பீர்கள்?
15 ‘உங்கள் பிரசுரங்கள் பைபிளிலிருந்து ஆயிரக்கணக்கான மேற்கோள்களை எடுத்துக் காண்பிக்கின்றன, ஆனால் அவற்றை ஏன் பைபிளின் பல்வேறு இடங்களிலிருந்து நீங்கள் எடுத்துக் காண்பிக்கிறீர்கள்?’ என்று சிலர் சொல்லலாம். பைபிளில் உள்ள 66 புத்தகங்களில் அங்கும் இங்குமிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காண்பிப்பதன் மூலம், ஒரு போதனையின் உண்மைத்தன்மையை நிரூபித்துக் காண்பிப்பதற்காக, பிரசுரங்கள் அநேக ஏவப்பட்ட அத்தாட்சிகளை எடுத்துக் காண்பிக்கின்றன. இயேசுதாமே இந்தப் போதனாமுறையைப் பயன்படுத்தினார். அவர் மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தபோது, எபிரெய வேதாகமத்திலிருந்து 21 மேற்கோள்களை எடுத்துக் காண்பித்தார். அந்தப் பிரசங்கத்தில், யாத்திராகமத்திலிருந்து மூன்று மேற்கோள்களும், லேவியராகமத்திலிருந்து இரண்டு மேற்கோள்களும், எண்ணாகமத்திலிருந்து ஒரு மேற்கோளும், உபாகமத்திலிருந்து ஆறு மேற்கோள்களும், இரண்டு இராஜாக்களிலிருந்து ஒரு மேற்கோளும், சங்கீதத்திலிருந்து நான்கு மேற்கோள்களும், ஏசாயாவிலிருந்து மூன்று மேற்கோள்களும், எரேமியாவிலிருந்து ஒரு மேற்கோளும் அடங்கியிருக்கின்றன. இவ்வாறு எடுத்துக் காண்பிப்பதன் மூலம், ‘இயேசு வெறுமனே எதை வேண்டுமானாலும் நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருந்தாரா’? இல்லை, ‘அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் போதித்தார்.’ இயேசு தம் போதனையைக் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையினுடைய அதிகாரத்தின் பேரில் ஆதாரம் வைத்து பேசியதால் அவரால் அவ்வாறு போதிக்க முடிந்தது. (மத்தேயு 7:29) அப்போஸ்தலனாகிய பவுலும் அவ்வாறே செய்தார்.
16. ரோமர் 15:7-13-ல் என்ன வேதவசன மேற்கோள்களைப் பவுல் எடுத்துக் காண்பித்தார்?
16 ரோமர் 15:7-13-ல் காணப்படும் வேதாகமப் பகுதியில், பவுல் மூன்று எபிரெய வேதாகம பகுதிகளிலிருந்து மேற்கோள் காண்பித்தார்—நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், சங்கீதங்கள். யூதர்களும் புறஜாதியாரும் கடவுளை மகிமைப்படுத்துவார்கள், ஆகையால் கிறிஸ்தவர்கள் எல்லா தேசத்து ஜனங்களையும் வரவேற்க வேண்டும் என்று அவர் காண்பித்தார். பவுல் சொன்னார்: “ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: [சங்கீதம் 18:49] இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. மேலும், [உபாகமம் 32:43-ல்] புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். [சங்கீதம் 117:1-ல்] மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா [11:1, 10] சொல்லுகிறான். பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.” இந்தத் தலைப்புமுறை வாசிப்பின் மூலம், பைபிள் சத்தியங்களை நிலைநாட்டுவதற்கு வேதவசனங்களை எவ்வாறு மேற்கோள் காண்பிக்க வேண்டும் என்று பவுல் காண்பித்தார்.
17. முன்பு செய்யப்பட்ட எதற்கு இசைவாக, கிறிஸ்தவர்கள் முழு பைபிளில் பல்வேறு இடங்களிலிருந்து மேற்கோள் எடுத்துக் காண்பிக்கின்றனர்?
17 அப்போஸ்தலனாகிய பேதுருவின் முதல் ஏவப்பட்ட கடிதத்தில் 34 மேற்கோள்கள் அடங்கியிருக்கின்றன, அவை நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், சங்கீதங்கள் போன்ற பத்துப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. தன் இரண்டாவது கடிதத்தில் பேதுரு மூன்று புத்தகங்களிலிருந்து ஆறு தடவை மேற்கோள் எடுத்துக் காண்பிக்கிறார். மத்தேயுவின் சுவிசேஷத்தில் ஆதியாகமத்திலிருந்து மல்கியா வரை 122 மேற்கோள்கள் உள்ளன. கிரேக்க வேதாகமத்தின் 27 புத்தகங்களில், ஆதியாகமத்திலிருந்து மல்கியா வரை 320 நேரடியான மேற்கோள்கள் உள்ளன, அதோடுகூட எபிரெய வேதாகமத்திலிருந்து மற்ற நூற்றுக்கணக்கான குறிப்புரைகளும் உள்ளன. இயேசு வைத்த முன்மாதிரிக்கு—அவருடைய அப்போஸ்தலர்களால் பின்பற்றப்பட்ட அந்த முன்மாதிரிக்கு—இசைவாக நவீன-நாளைய கிறிஸ்தவர்கள் ஒரு வேதாகம பொருளை தலைப்புமுறையாக படிக்கையில், அவர்கள் முழு பைபிளிலிருந்தும் பல்வேறு இடங்களிலிருந்து மேற்கோள் எடுத்து காண்பிக்கின்றனர். இது இந்தக் “கடைசிநாட்களில்” விசேஷமாக பொருத்தமாய் இருக்கிறது, ஏனென்றால் எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்களின் பெரும்பாலான பகுதிகள் இப்போது நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1) ‘உண்மையுள்ள அடிமை’ அதன் பிரசுரங்களில் பைபிளை அந்த விதத்தில்தான் பயன்படுத்துகிறது, ஆனால் அந்த அடிமை கடவுளுடைய வார்த்தையோடு எதையும் ஒருபோதும் கூட்டுவதில்லை அல்லது அதிலிருந்து எதையும் எடுத்துப்போடுவதுமில்லை.—நீதிமொழிகள் 30:5, 6; வெளிப்படுத்துதல் 22:18, 19.
எப்போதும் சத்தியத்திலே நடவுங்கள்
18. நாம் ஏன் ‘சத்தியத்திலே நடக்க வேண்டும்’?
18 கடவுளுடைய வார்த்தையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ போதகங்களும் ‘சத்தியமாய்’ அல்லது “சுவிசேஷத்தின் சத்தியமாய்” இருப்பதன் காரணத்தால் நாம் பைபிளிலிருந்து எதையும் எடுத்துப்போடக்கூடாது. இந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது—அதில் “நடப்பது”—இரட்சிப்புக்கு இன்றியமையாதது. (கலாத்தியர் 2:5; 2 யோவான் 4; 1 தீமோத்தேயு 2:3, 4) கிறிஸ்தவம் “சத்தியமார்க்கமாய்” இருக்கிறபடியால், அதன் அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் ‘சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக’ ஆகிறோம்.—2 பேதுரு 2:2; 3 யோவான் 8.
19. நாம் எவ்வாறு ‘சத்தியத்திலே தொடர்ந்து நடக்கலாம்’?
19 ‘சத்தியத்திலே தொடர்ந்து நடக்க வேண்டுமென்றால்,’ நாம் பைபிளை வாசிக்க வேண்டும், கடவுள் ‘உண்மையுள்ள அடிமையின்’ மூலம் அளிக்கும் ஆவிக்குரிய உதவியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். (3 யோவான் 4) நம்முடைய சொந்த நன்மைக்கென்றும், யெகோவா தேவன், இயேசு கிறிஸ்து, தெய்வீக நோக்கம் ஆகியவற்றைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்கும் நிலையில் இருப்பதற்கென்றும் இதைச் செய்வோமாக. அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கும் அவரை சத்தியத்திலே சேவிப்பதில் வெற்றிகாண்பதற்கும் யெகோவாவின் ஆவி நமக்கு உதவி செய்வதற்காக நன்றியுடன் இருப்போமாக.
உங்கள் பதில்கள் யாவை?
◻ பைபிள் வாசிப்பின் சில நிரந்தரமான நன்மைகள் யாவை?
◻ உடன்விசுவாசிகளோடு சேர்ந்து பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
◻ பைபிள் முழுவதிலும் பல்வேறு இடங்களிலிருந்து மேற்கோள் காண்பிப்பது ஏன் பொருத்தமானது?
◻ ‘சத்தியத்திலே நடவுங்கள்’ என்பதன் அர்த்தம் என்ன, நாம் அதை எவ்வாறு செய்யலாம்?
[பக்கம் 17-ன் படம்]
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு வேதாகமத்தை கற்பியுங்கள்
[பக்கம் 18-ன் படம்]
இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில், எபிரெய வேதாகமத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து மேற்கோள் எடுத்து காண்பித்தார்