உங்கள் வேலை சலிப்பூட்டுகிறதா?
நீங்கள் ஒரு நாளில் ஏறக்குறைய எட்டு மணிநேரம் வேலை செய்யலாம். உங்கள் வேலையில் சலிப்படைகிறீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி வீணே! ஆனாலும், இந்த 20-ம் நூற்றாண்டின் வேலையில் அதிகமானவை ஒரே மாதிரியாகவும் வேலைசெய்பவர் தனிப்பட்ட முறையில் பெருமைப்பட்டுக்கொள்ள அதிக சந்தர்ப்பம் கொடுக்காதவையாகவும் இருக்கின்றன.
ஆகவே உங்கள் வேலையை உற்சாகமுள்ளதாக ஆக்குவதனால் அதிக நன்மையடையலாம். வேலைசெய்வதிலிருந்து அதிக சந்தோஷத்தையும் நீங்கள் பெற முடியும்; எதிர்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் எந்த வேலையையும் அதிக விரும்பத்தக்கதாக ஆக்குவதன் ரகசியத்தையும் அறிந்துகொள்வீர்கள். அப்படியானால், இதை செய்வதற்கான சில வழிகளை ஆராய்வோம்.
உற்சாகமுள்ளவர்களைப் போல் நடியுங்கள்
வேலையை மகிழ்ந்து அனுபவிப்பவரைப் போல நடிக்கும்படி சில அதிகாரிகள் சிபாரிசு செய்கின்றனர். அப்படி செய்தீர்கள் என்றால், உங்கள் வேலையை உண்மையிலேயே அனுபவிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
‘ஆனால் என் வேலை படுபோர்!’ என்று நீங்கள் சொல்லலாம். உங்கள் வேலை, அசெம்பிளி லைன் (assembly-line) வேலையைப் போன்ற ஒரு கண்டிப்பான வழக்கமுறையாக இருக்கலாம். அல்லது அந்த வேலையை நீங்கள் பல வருடங்களாக செய்து வந்திருப்பதால் அதில் உற்சாகத்தை மேலும் புதுப்பிக்கவே முடியாது என்று ஒருவேளை முடிவுகட்டிவிடலாம். ஆனாலும், புன்சிரிப்பு, நேராக நிமிர்ந்து நிற்பது போன்ற எளிய வழிமுறைகள், உங்கள் வேலையில் உங்களை அதிக உற்சாகமுள்ளவராக உணரவைக்க உதவலாம்.
நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையில் உங்கள் முழு கவனத்தை ஊன்ற வைப்பதும்கூட உதவியாக இருக்கலாம். இயந்திரத்தனமாக உங்கள் வேலையில் ஈடுபடாதீர்கள்; மேலும் உணவு இடைவேளை, வார இறுதிநாட்கள் அல்லது செய்யவேண்டிய மற்றொரு வேலை போன்றவற்றைக் குறித்து சிந்தித்துக்கொண்டே உங்கள் வேலையை செய்யாதீர்கள். பொதுவாக, செய்யும் வேலையில் உங்கள் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்துவதே ஞானமானது. அதன் விளைவு? நீங்கள் வேலையை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள், அப்போது நேரம் போவதே தெரியாது.
நீங்கள் உண்மையில் அனுபவித்து செய்யும் ஒரு காரியத்தில் முழுமையாக ஈடுபட்டிருக்கும்போது இதுதான் இயல்பாகவே நடக்கிறது. பொதுவாக உங்களுக்கு மகிழ்ச்சி தராத வேலையில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்த உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்வதன் மூலமும்கூட இதே சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.
உங்களாலான மிகச் சிறந்ததை செய்யுங்கள்
உங்களாலான மிகச் சிறந்ததை செய்வது வேலையில் ஆத்ம திருப்தியை கண்டடைய உங்களுக்கு உதவலாம். நிச்சயமாகவே இப்படிப்பட்ட அறிவுரை, சலிப்பூட்டுவதாக இருக்கும் வேலையை அதிக சிரமப்படாமல் செய்யவேண்டும் என்ற பொதுவான கருத்துக்கு எதிராக இருக்கிறது. ஆனால் அசட்டை செய்தல், காலம் தாழ்த்துதல், குறைவான முயற்சி ஆகியவை உங்கள் சக்தியை இழக்க செய்து கவலையையும் சோர்வையும் அதிகரிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், ஊக்கத்துடன் வேலைசெய்ய தவறும் ஒருவர் தினமும் வேலையிலிருந்து வீடு திரும்பும்போது அழுத்தம், கவலை, சோர்வு ஆகியவற்றால் கஷ்டப்படுகிறவராக இருக்கலாம்.
பைபிளின்படி, ஒரு திட்டத்தில் பிரயாசப்பட்டு வேலைசெய்வது ஓய்வு நேரங்களை மகிழ்ந்து அனுபவிக்கவும்கூட உதவுகிறது. “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை.” (பிரசங்கி 2:24) இது சிலருக்கு பழங்காலத்து வாசகம்போல தொனிக்கலாம்; ஆனால் கால வரம்பற்ற இந்த நியமத்தை மற்றவர்கள் பொருத்துகின்றனர். தங்கள் கடின உழைப்பின் பலனை அனுபவிப்பதைக் காட்டிலும் “ஒரு நன்மையும் இல்லை” என்பதை உண்மையில் அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். “நன்றாக செய்யப்பட்ட வேலை ஆத்ம திருப்தியளிக்கிறது” என வேலை செய்வதன் மகிழ்ச்சி (ஆங்கிலம்) என்ற புத்தகம் ஒப்புக்கொள்கிறது.
ஆகவே உங்களாலான மிகச் சிறந்ததைச் செய்யுங்கள், அப்போது ஒருவேளை ஊக்கமூட்டப்பட்டவர்களாக உணருவீர்கள். வெறுமனே அடிப்படையானவற்றைவிட அதிகத்தை செய்யுங்கள், அப்போது ஒருவேளை அதிக சந்தோஷமாய் உணருவீர்கள். முக்கியமான வேலைகளை முதலாவதாக செய்யுங்கள்; அப்போது, காலம் தாழ்த்துவதன் விளைவாக களைத்துப்போகும் ஒருவரைவிட உணவு இடைவேளைகளையும் வாரயிறுதி நாட்களையும் அதிகமாக அனுபவிப்பீர்கள்.—ஒப்பிடுக: எஸ்தர் 10:2; ரோமர் 12:11; 2 தீமோத்தேயு 2:15; NW.
மற்றவர்களோடு போட்டியிடுவதற்குப் பதிலாக, உங்களை நீங்களே விஞ்சிவிடுங்கள். (கலாத்தியர் 6:4) புதிய தராதரங்களையும் இலக்குகளையும் வையுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். தைப்பதையே தொழிலாக ஒரு பெண் செய்துவந்தாள்; அது மிகவும் சலிப்பூட்டும் வேலை என்று சிலர் கருதலாம். ஆனால் அவளோ, தான் செய்யும் வேலையின் நேரத்தை கணக்கு வைப்பதையே ஒரு விளையாட்டாக செய்தாள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அவள் செய்த வேலையை கணக்கிட்டு, அதன்பிறகு அதை அதிகரிக்க முயன்றாள். தன்னாலான மிகச் சிறந்ததை செய்ய முயற்சிப்பதால் அவள் தன் வேலையை உண்மையில் அனுபவிக்கிறாள்.—நீதிமொழிகள் 31:31.
உங்கள் வேலையை “அலங்காரம்” செய்யுங்கள்
“உங்கள் வேலையை ஒரு காலியான வீடாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குடிபுகுந்து அதன் தோற்றத்தையும் வடிவமைப்பையும் கவனிக்கிறீர்கள். பிறகு உங்கள் படைப்பாற்றல் தூண்டப்படுகிறது. இருக்கும் இடத்தை எப்படி உபயோகிப்பது என்று தீர்மானித்து, அதை அலங்கரித்து அந்தக் கட்டிடத்தை உங்கள் வீடாக மாற்றுகிறீர்கள். உங்கள் முத்திரையை குத்துவதன்மூலம் அதை உங்களுக்கே உரியதாக மாற்றுகிறீர்கள்” என்று டாக்டர்களான டெனிஸ் டி. ஜாஃபி மற்றும் சிந்தியா டி. ஸ்காட் பரிந்துரை செய்கின்றனர்.
உங்களது பெரும்பாலான வேலைகளுக்கு விதிமுறைகளும் வழிகாட்டுக் குறிப்புகளும் அளிக்கப்படுகின்றன. தேவைப்படுவதை மட்டுமே செய்வது காலியான வீட்டில் குடியிருப்பதற்கு சமமாகும். அதில் தனித்தன்மையே இருக்காது. ஆனால் உங்களுடைய தனிப்பட்ட பாணியை சேர்த்தீர்களானால் உங்கள் வேலை இன்னுமதிக விரும்பத்தக்கதாக ஆகலாம். ஒரு வேலையை இரண்டு பேர் ஒரேவிதமாக “அலங்காரம்” செய்யமாட்டார்கள். அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை ஒரு வெய்டர் மனப்பாடம் செய்யலாம். மற்றொருவர் குறிப்பிடத்தக்க அளவு தயவும் மரியாதையும் காட்டலாம். அவர்கள் செய்யும் வேலையில் முழுமையாக ஈடுபட்டுவிடுவதால் இருவருமே தங்கள் வேலையை அனுபவிக்கிறார்கள்.
தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்
வேலையில் சந்தோஷத்தை காண்பதற்கான மற்றொரு வழி கற்றுக்கொள்வதாகும். நாம் வளருகையில், தகவல் பரிமாற்றம் செய்யும் திறமையை நம் மூளை அதிகரித்துக் கொள்வதாக டென்ஷன் டர்னரௌன்ட் என்ற புத்தகம் விளக்குகிறது. முன்பு நமக்கு அக்கறையூட்டுவதாக இருந்த காரியங்கள் இப்போது ஏன் சலிப்பூட்டுகின்றன என்பதை விளக்க இது உதவுகிறது. புதிய காரியங்களை கற்றுக்கொள்வதன் மூலம் மூளையின் இந்த ஆவலை, புதிய தகவலுக்கான ஆவலை, திருப்தி செய்வதே இதற்கு தீர்வாகும்.
உங்கள் வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால், அதிக ஆர்வமூட்டும் வேலை காலப்போக்கில் உங்களுக்குக் கொடுக்கப்படலாம். அவ்வாறு கொடுக்கப்படாவிட்டாலும்கூட, கற்றுக்கொள்வதுதானே உங்கள் வேலையை அதிக அக்கறையும் திருப்தியும் உள்ளதாக்கும். நூலாசிரியர்களான சார்லஸ் காமரன் மற்றும் சூசான் இலியுசர் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றனர்: “கற்றுக்கொள்ளுதல், உங்கள் திறமைகளை அதிகரிப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. அதுமட்டுமல்ல, வாழ்க்கையைப் பற்றிய உங்களுடைய பொதுவான மனப்பான்மையையும் அது பாதிக்கிறது: பிரச்சினைகளை தீர்க்கமுடியும், கஷ்டங்களை சமாளிக்க முடியும், பயங்களை குறைக்க முடியும், நீங்கள் நினைத்ததைவிட அதிகமானதை சாதிக்க முடியும் என்பதைக் கற்றுக்கொள்கிறீர்கள்.”
‘ஆனால் என் வேலையைப் பற்றிய எல்லாவற்றையும் நான் வெகு காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டு விட்டேன்!’ என்று ஒருவேளை நீங்கள் ஆட்சேபிக்கலாம். அப்படியென்றால், உங்கள் வேலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிராத மற்ற காரியங்களை உங்களால் கற்றுக்கொள்ள முடியுமா? உதாரணமாக, மனித உறவுகளைப் பற்றி அல்லது உங்களுடைய சாதனங்களைப் பற்றி அதிகத்தை கற்றுக்கொள்ள நீங்கள் நினைக்கலாம். ஆபீஸ் மெமோவை இன்னும் சிறப்பாக எழுதுவதைப் பற்றி அல்லது இன்னும் நல்லவிதமாக ஒரு கூட்டத்தை நடத்துவதைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ளலாம். சூப்பர்வைசர்களிடம் மிகச் சிறந்த விதத்தில் நடந்துகொள்வதைப் பற்றியும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
இவற்றை நீங்கள் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்? நீங்கள் பயன்படுத்த முடிந்த சில தொடர்பயிற்சிகளை உங்கள் கம்பெனி ஒருவேளை ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் ஒரு நூலகத்தில் இருக்கலாம். ஆனால் தகவல் பெறுவதற்கான, வெளிப்படையாக தெரியாத மற்ற வழிமுறைகளை அசட்டை செய்யாதீர்கள். வேலைசெய்யும் ஆட்களையும் அவர்களுடைய பலங்களையும் பலவீனங்களையும் கவனிப்பதிலிருந்தும்கூட பாடம் கற்றுக்கொள்ளலாம். உங்கள் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்; நீங்கள் சரியாக செய்தவற்றை ஆராய்வதன் மூலம் உங்கள் வெற்றிகளிலிருந்தும்கூட கற்றுக்கொள்ளலாம். உங்கள் சொந்த அனுபவங்களிலிருந்தும் மற்றவர்களை கவனிப்பதிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்பவை, ஒரு புத்தகத்தில் வாசிக்க முடியாத அல்லது ஒரு வகுப்பறையில் கேட்க முடியாத காரியங்களை உங்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
சில முடிவான ஆலோசனைகள்
உங்கள் வேலையை வேறு விதமாகவும்கூட நீங்கள் கருதலாம். இன்னும் சிறந்ததைப் பெற நீங்கள் தகுதியுள்ளவர்கள் என்றும், மற்றவர்களுக்கே எல்லா வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்றும், நீங்கள் உண்மையில் விரும்பும் வேலையை செய்ய உங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவேயில்லை என்றும் நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் கூறுவதை ஒத்துக்கொள்கிறவர்களுடன் முடிவேயில்லாமல் பேசலாம்; மேலும் இவையெல்லாமே உண்மை என்றும் நீங்கள் நம்ப ஆரம்பிக்கலாம்.
ஆனால் ஒருவேளை அது உண்மையாக இருக்காது. தங்கள் வேலையை அனுபவிக்கும் அநேகர் அவ்வாறு செய்ய கற்றிருக்கின்றனர். வீடுகள் வடிவமைப்பதை அனுபவிக்கும் ஒருவர் பஸ் ஓட்டுவதையும்கூட அனுபவிக்கலாம். ஏன்? ஏனென்றால் வேலையை படைப்பாற்றலுடன் செய்வது அவருக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது.
ஆகவே, வாரயிறுதி நாட்களுடன் ஒப்பிடுகையில் வேலை நாட்களை சலிப்பூட்டுவதாக ஆக்கும் சாதகமற்ற அந்த மனப்பான்மையை உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள். உங்கள் கடந்தகால தோல்விகளைப் பற்றி நினைத்துக்கொண்டும், அடுத்தது என்ன தவறு நடக்கப்போகிறது என்று கற்பனை செய்துகொண்டும், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று சிந்தித்துக்கொண்டும் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் முன்னாலிருக்கும் வேலையை கவனியுங்கள். உங்கள் முழு கவனத்தையும் அதனிடமாக ஒருமுகப்படுத்துங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த விருப்பார்வ வேலையில் மூழ்கிவிடுவதைப்போல அதில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். இதுவரை செய்திராத அளவுக்கு மிகச் சிறந்த முயற்சி செய்யுங்கள்; மேலும் வேலையை நன்றாக செய்து முடித்ததன் திருப்தியை அனுபவியுங்கள்.
[பக்கம் 11-ன் பெட்டி]
உங்கள் வேலையை அசட்டை செய்யாதீர்கள்
நீதிமொழிகள் 27:23, 24-ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின் மேல் கவனமாயிரு. செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?” அதன் அர்த்தம் என்ன?
அதன் அர்த்தமானது, பணமும் (செல்வம்) முக்கியமான பதவிகளும் (கிரீடம்) பெறப்பட்டாலும்கூட அடிக்கடி நிலையற்றவையாகவே நிரூபிக்கின்றன. ஆகவே, பைபிள் காலங்களில் ஒரு மேய்ப்பன் தன்னுடைய ஆட்டு மந்தையை கவனிப்பதில், அதாவது ‘தன் மந்தைகளின் மேல் கவனமாயிருப்பதில்,’ ஊக்கமாக முயற்சி செய்யும்போது ஞானமுள்ளவனாக இருந்தான். அதைப் பின்தொடரும் மூன்று வசனங்கள் காட்டுகிறபடி, அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பொருளாதார பாதுகாப்பளிப்பதில் அது விளைவடையும்.—நீதிமொழிகள் 27:25-27.
இன்றைய நாளைப் பற்றியென்ன? தாங்கள் செய்யும் தற்போதைய வேலைகளை விட்டுவிட உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பும் செல்வத்தை அல்லது முக்கியமான பதவியைப் பெறுவதிலேயே மக்கள் அடிக்கடி தங்கள் முழு கவனத்தையும் ஊன்ற வைக்கின்றனர். சிலர் நடைமுறையான திட்டங்களைக் கொண்டிருக்கின்றனர்; மற்றவர்களோ வெறுமனே பகற்கனா காண்கின்றனர். எப்படியிருந்தாலும், ஒருவருடைய தற்போதைய வேலையை இழிவாகக் கருதுவதோ அசட்டை செய்வதோ ஞானமற்றது. அதுதானே வருமானத்தின் மிகவும் நம்பகமான ஆதாரமாக இருக்கிறது; அவ்வாறே தொடர்ந்திருக்கக்கூடும். தன் “மந்தைகளின்” மேல் கவனத்தை ஒருமுகப்படுத்துவது, அதாவது அவருக்கிருக்கும் நம்பகமான வேலையின்மீது தன் முழு கவனத்தையும் ஊன்ற வைப்பது ஒருவருக்கு அதிக ஞானமானதாக இருக்கும். அவர் அவ்வாறு செய்வது, ஒருவேளை தற்காலத்திலும் எதிர்காலத்திலும் பொருளாதார பாதுகாப்பளிப்பதில் விளைவடையலாம்.