கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்!
‘பிரியமானவர்களே, . . . நித்தியஜீவனைப் பெற தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் [“நிலைத்திருங்கள்,” NW].’—யூதா 20, 21.
1, 2. நீங்கள் எவ்வாறு கடவுளின் அன்பிலே நிலைத்திருக்கலாம்?
யெகோவா மனிதகுலத்தை மிகவும் நேசிக்கிறார். அவர்களை அந்தளவு நேசிப்பதால், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவர்கள் நித்தியஜீவனைப் பெறுவதற்காக அவரை நமக்காக அளித்தார். (யோவான் 3:16) அப்பேர்ப்பட்ட அன்பை அனுபவிப்பது எவ்வளவு அருமையாக இருக்கிறது! நீங்கள் யெகோவாவின் ஊழியர்களில் ஒருவராக இருந்தால் அந்த அன்பை என்றென்றும் அனுபவிக்க வேண்டுமென நிச்சயமாகவே விரும்புவீர்கள்.
2 கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பது எப்படி என்பதை சீஷனாகிய யூதா தெரிவித்தார். “பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.” (யூதா 20, 21) ‘மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல்,’ அதாவது கிறிஸ்தவ போதனைகளின்மேல் உங்களைக் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் உதவும். கடவுளின் அன்பில் நிலைத்திருக்க, “பரிசுத்த ஆவிக்குள்,” அதாவது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் நீங்கள் ஜெபம் செய்யவேண்டும். நித்தியஜீவன் என்ற பரிசைப் பெற விரும்பினால், இயேசு கிறிஸ்துவின் மீட்கும்பலியில் விசுவாசம் வைப்பதும் அவசியம்.—1 யோவான் 4:10.
3. சிலர் இனிமேலும் ஏன் யெகோவாவின் சாட்சிகளாக இல்லை?
3 முன்பு விசுவாசிகளாக இருந்த சிலர் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவில்லை. அவர்கள் பாவமுள்ள போக்கில் செல்ல தீர்மானித்ததால், அவர்கள் இனிமேலும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லை. அப்படிப்பட்ட நிலை ஏற்படாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்? பின்வரும் குறிப்புகளைத் தியானிப்பது, பாவம் செய்வதைத் தவிர்க்கவும் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவும் உங்களுக்கு உதவும்.
கடவுளை நேசிப்பதை வெளிக்காட்டுங்கள்
4. கடவுளுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம்?
4 கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை நேசிப்பதை வெளிக்காட்டுங்கள். (மத்தேயு 22:37) “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 5:3) கடவுளுக்குக் கீழ்ப்படிவதை பழக்கமாக்கிக் கொள்ளும்போது, சோதனைகளை எதிர்ப்பதற்கான பலத்தையும் அதோடு சந்தோஷத்தையும் பெறுவீர்கள். ‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல், . . . கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்]’ என்று சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 1:1, 2.
5. யெகோவாவின் மீதுள்ள அன்பு எதைச் செய்ய உங்களைத் தூண்டும்?
5 கடவுளுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு மோசமான பாவத்தையும் தவிர்க்க அவர் மீதுள்ள அன்பு உங்களைத் தூண்டும். “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும் தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்” என்று ஆகூர் ஜெபித்தார். (நீதிமொழிகள் 30:1, 8, 9) கடவுளுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் அவருடைய ‘நாமத்தை வீணிலே வழங்காதிருக்க’ தீர்மானமாயிருங்கள். மாறாக, அவருக்கு மகிமை சேர்க்கும் நேர்மையான காரியங்களைச் செய்யவே எப்போதும் முயலுங்கள்.—சங்கீதம் 86:12.
6. நீங்கள் வேண்டுமென்றே பாவம் செய்தால் என்ன நேரிடும்?
6 பாவத்தில் ஈடுபடுவதற்கான தூண்டுதலைத் தவிர்க்க உதவும்படி உங்கள் அன்பான பரலோக தகப்பனிடம் எப்போதும் ஜெபியுங்கள். (மத்தேயு 6:13; ரோமர் 12:12) உங்கள் ஜெபங்களுக்கு தடை வராதபடிக்கு கடவுளுடைய ஆலோசனையைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். (1 பேதுரு 3:7) நீங்கள் வேண்டுமென்றே பாவம் செய்தால், படுபயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், கலகக்காரர்கள் தம்மை அணுக முடியாதபடி யெகோவா அடையாள ரீதியில் தம்மை மேகக்கூட்டத்தால் மறைத்துக்கொள்கிறார். இதனால் அவர்களுடைய ஜெபங்கள் அவரைச் சென்றெட்டுவதில்லை. (புலம்பல் 3:42-44) ஆகவே, மனத்தாழ்மையை வெளிக்காட்டுங்கள். ஜெபத்தில் கடவுளை அணுகுவதற்கு தடையாக இருக்கும் எதையும் நீங்கள் செய்துவிடாதிருக்க உங்களுக்கு உதவும்படி ஜெபியுங்கள்.—2 கொரிந்தியர் 13:7.
கடவுளுடைய மகனை நேசிப்பதைக் காட்டுங்கள்
7, 8. பாவமுள்ள போக்கைத் தவிர்க்க இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிவது எவ்வாறு ஒருவருக்கு உதவும்?
7 இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை நேசிப்பதைக் காட்டுங்கள். ஏனெனில், பாவமுள்ள போக்கைத் தவிர்க்க இது உங்களுக்கு உதவும். “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” என்று இயேசு கூறினார். (யோவான் 15:10) இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைய வாழ்வது, கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க உங்களுக்கு எப்படி உதவும்?
8 இயேசுவின் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்துவது ஒழுக்க நியமங்களைக் கடைபிடிக்க உங்களுக்கு உதவும். கடவுள் இஸ்ரவேலருக்கு கொடுத்த நியாயப்பிரமாணத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டிருந்தது: “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:14) அந்தக் கட்டளையில் உட்பட்டிருந்த நியமத்தை இயேசு வெளிப்படுத்தினார். அவர் இவ்வாறு கூறினார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:27, 28) முதல் நூற்றாண்டு சபையில் இருந்த சிலர் “விபசாரமயக்கத்தால் நிறைந்த . . . கண்களையுடையவர்கள்” என்றும் “உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப்” பிடித்தார்கள் என்றும் அப்போஸ்தலன் பேதுரு கூறினார். (2 பேதுரு 2:14) கடவுளையும் கிறிஸ்துவையும் நேசித்து, அவர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களோடு உள்ள உறவைப் பாதுகாத்துக்கொள்ள தீர்மானமாயிருந்தால் நீங்கள் அப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான பாவங்களைத் தவிர்க்கலாம்.
யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்படுங்கள்
9. ஒருவர் தொடர்ந்து பாவம் செய்தால் அவரிடமுள்ள பரிசுத்த ஆவிக்கு என்ன நேரிடும்?
9 கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்யுங்கள். அது உங்களை வழிநடத்த அனுமதியுங்கள். (லூக்கா 11:13; கலாத்தியர் 5:19-25) நீங்கள் தொடர்ந்து பாவம் செய்தால், கடவுள் தம்முடைய ஆவியை உங்களிடமிருந்து நீக்கிவிடலாம். பத்சேபாளுடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட பிறகு தாவீது பின்வருமாறு கடவுளிடம் மன்றாடினார்: “உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.” (சங்கீதம் 51:11) மறுபட்சத்தில் சவுல் ராஜாவோ, மனந்திரும்பாமல் பாவம் செய்ததால் கடவுளுடைய ஆவியை இழந்தார். தகனபலியை செலுத்தியதன் மூலமும் அமலேக்கியரின் ராஜாவையும் ஆடுமாடுகளையும் கொல்லாதிருந்ததன் மூலமும் சவுல் பாவம் செய்தார். அதன்பிறகு, யெகோவா தம் பரிசுத்த ஆவியை அவரிடமிருந்து நீக்கிவிட்டார்.—1 சாமுவேல் 13:1-14; 15:1-35; 16:14-23.
10. ஏன் பாவம் செய்வதற்கான எண்ணத்தையே நீங்கள் தவிர்க்க வேண்டும்?
10 பாவத்தில் ஈடுபடுவதற்கான எண்ணத்தையே தவிருங்கள். ‘சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராது’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 10:26-31) வேண்டுமென்றே பாவம் செய்தால் அதன் விளைவுகள் எவ்வளவு படுமோசமானதாக இருக்கும்!
பிறரிடம் உண்மையான அன்பைக் காட்டுங்கள்
11, 12. அன்பும் மரியாதையும் பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதிலிருந்து எவ்வழிகளில் ஒருவரைப் பாதுகாக்கும்?
11 சக மனிதர்கள் மீதுள்ள அன்பு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாதபடி உங்களைப் பாதுகாக்கும். (மத்தேயு 22:39) அதோடு, உங்கள் இருதயத்தை பாதுகாத்து, மற்றொருவருடைய மணத்துணையின் அன்பைத் திருடாதபடி தடுக்கும். ஏனெனில், அப்படிப்பட்ட செயல் விபசாரத்தில் முடிவடையலாம். (நீதிமொழிகள் 4:23; எரேமியா 4:14; 17:9, 10) உத்தமரான யோபு தன் மனைவியைத் தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இவ்விஷயத்தில் அவரைப் பின்பற்றுங்கள்.—யோபு 31:1.
12 திருமணத்தின் புனிதத்தன்மையை நீங்கள் மதித்தால், மோசமான பாவத்தில் ஈடுபடாதிருப்பீர்கள். மதிப்புமிக்க திருமணமும், பாலுறவும் உயிரைப் பிறப்பிப்பதற்கான வழியாக இருக்க வேண்டும் என்று கடவுள் நோக்கங்கொண்டார். (ஆதியாகமம் 1:26-28) பாலுறவு உறுப்புகள் புனிதமான உயிரைப் பிறப்பிப்பதற்கானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேசித்தனம் செய்பவர்களும், விபசாரக்காரர்களும் கடவுளுடைய சட்டத்தை அவமதிக்கிறார்கள், பாலுறவை கொச்சைப்படுத்துகிறார்கள். அதோடு, திருமணத்தின் புனிதத்தன்மைக்கு மரியாதை காட்டத் தவறுகிறார்கள், தங்கள் சரீரத்திற்கே விரோதமாக பாவம் செய்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:18) கடவுள் மற்றும் அயலார்மீது அன்பும் கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்ற மனநிலையும் இருந்தால், சபை நீக்கத்திற்கு வழிநடத்துகிற எந்தப் பாவத்தையும் ஒருவர் செய்யாதிருப்பார்.
13. ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் நபர் எவ்விதத்தில் ‘விலைமதிப்புள்ள பொருள்களை அழிக்கிறார்’?
13 பாவமுள்ள எண்ணங்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் அன்பானவர்களுக்கு வேதனை ஏற்படுத்துவதைத் தவிர்ப்போம். “விலைமகளின் உறவை விரும்புகிறவர் விலைமதிப்புள்ள பொருள்களை அழித்துவிடுவார்” என்று நீதிமொழிகள் 29:3 (NW) கூறுகிறது. ஆம், மனந்திரும்பாமல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர் கடவுளுடன் உள்ள பந்தத்தை முறித்துக்கொள்கிறார்; குடும்ப பந்தங்களையும் சேதப்படுத்துகிறார். அவருடைய மனைவி விவாகரத்து செய்ய தகுந்த காரணமாக இது அமைந்துவிடுகிறது. (மத்தேயு 19:9) கணவனோ, மனைவியோ யார் தவறு செய்திருந்தாலும், இப்படி விவாகரத்து செய்வது, தவறு செய்யாத துணைக்கும் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த துயரத்தை கொண்டுவரும். ஒழுக்கக்கேடு எந்தளவு மோசமானது என்பதை அறிந்திருப்பது, அதில் ஈடுபடுவதற்கான தூண்டுதலைத் தவிர்க்க நமக்கு உதவும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?
14. தவறுசெய்வதைக் குறித்து என்ன பாடத்தை நீதிமொழிகள் 6:30-35-லிருந்து கற்றுக்கொள்ளலாம்?
14 ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் நபர் எவ்விதத்திலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய முடியாது என்ற உண்மையை மனதில் வைத்திருப்பது இந்தப் படுசுயநலமான செயலைத் தவிர்க்கத் தூண்டும். தன் பசியை ஆற்றிக்கொள்வதற்காக திருடுபவனைக் கண்டு ஜனங்கள் பரிதாபப்படலாம்; ஆனால், ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் ஒருவனை அவர்கள் இகழுவார்கள். ஏனெனில், அவனுடைய உள்நோக்கம் தவறாக இருக்கிறது என்று நீதிமொழிகள் 6:30-35 கூறுகிறது. அப்படிப்பட்டவன் “தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்.” மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, அவன் கொல்லப்பட வேண்டும். (லேவியராகமம் 20:10) ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர் தன்னுடைய வக்கிர ஆசையை திருப்திசெய்வதற்காக மற்றவர்களுக்கு வேதனையை உண்டாக்குகிறார். மனந்திரும்பாமல் தொடர்ந்து ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுபவர் கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதில்லை; கிறிஸ்தவ சபையின் சுத்தம் கெடாமலிருக்க அவர் சபைநீக்கம் செய்யப்படுகிறார்.
சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்
15. “சூடுண்ட” மனசாட்சி என்ன நிலையில் இருக்கும்?
15 கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டுமெனில், நம்முடைய மனசாட்சி கடினப்பட்டுவிட நாம் அனுமதிக்கக்கூடாது. உலகத்தின் சீர்கெட்ட ஒழுக்கநெறிகளை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது; நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், புத்தகங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவற்றைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. பவுல் பின்வருமாறு எச்சரித்தார்: “பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1) “சூடுண்ட” மனசாட்சி என்பது தழும்பு ஏற்பட்டு மரத்துப்போன தோலைப் போன்று இருக்கிறது. அப்படிப்பட்ட மனசாட்சி, விசுவாசதுரோகிகளைக் குறித்தும் விசுவாசத்திலிருந்து நம்மை வழுவிவிடச் செய்யும் சூழ்நிலைகளைக் குறித்தும் கவனமாக இருக்கும்படி நம்மை எச்சரிக்காது.
16. சுத்தமான மனசாட்சியைக் கொண்டிருப்பது ஏன் மிக முக்கியம்?
16 சுத்தமான மனசாட்சியைக் கொண்டிருப்பதில்தான் நம்முடைய இரட்சிப்பே சார்ந்திருக்கிறது. (1 பேதுரு 3:21) இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் நம்முடைய மனசாட்சி செத்த கிரியைகளிலிருந்து சுத்திகரிக்கப்படுகிறது. இது “ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு” வழிசெய்கிறது. (எபிரெயர் 9:13, 14) நாம் வேண்டுமென்றே பாவம் செய்தால், நம்முடைய மனசாட்சி கறைப்பட்டுவிடும். அதன் விளைவாக, சுத்தமான ஜனங்களாய் கடவுளுக்கு சேவை செய்வதற்கான தகுதியை நாம் இழந்துவிடுவோம். (தீத்து 1:15) ஆனால், யெகோவாவின் உதவியோடு, நாம் சுத்தமான மனசாட்சியைக் கொண்டிருக்க முடியும்.
தவறான நடத்தையை தவிர்ப்பதற்கான மற்ற வழிகள்
17. ‘யெகோவாவை உத்தமமாய்ப் பின்பற்றுவதால்’ வரும் நன்மைகள் யாவை?
17 பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த காலேபைப் போல் ‘யெகோவாவை உத்தமமாய்ப் பின்பற்றுங்கள்.’ (உபாகமம் 1:34-36) கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பவற்றைச் செய்யுங்கள். ‘பேய்களுடைய பாத்திரத்தில்’ பானம் பண்ணுவதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்காதீர்கள். (1 கொரிந்தியர் 10:21) விசுவாசதுரோகத்தை ஒதுக்கித் தள்ளுங்கள். யெகோவாவின் மேசையிலிருந்து மட்டுமே கிடைக்கும் ஆன்மீக உணவை நன்றியோடு உட்கொள்ளுங்கள். அப்போது பொய் போதகர்களாலும், வஞ்சக ஆவி சக்திகளாலும் நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். (எபேசியர் 6:12; யூதா 3, 4) பைபிள் படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, பிரசங்க வேலையில் ஈடுபடுவது போன்ற ஆன்மீக காரியங்களிலேயே கவனத்தை ஊன்ற வையுங்கள். யெகோவாவை உத்தமமாக பின்பற்றி, அவருடைய வேலையில் மும்முரமாக ஈடுபட்டால் நீங்கள் நிச்சயமாகவே சந்தோஷமாக இருப்பீர்கள்.—1 கொரிந்தியர் 15:58.
18. யெகோவா மீதுள்ள பயம் என்ன செய்யும்படி உங்களைத் தூண்டும்?
18 ‘பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்கு . . . ஆராதனை செய்ய’ தீர்மானமாயிருங்கள். (எபிரெயர் 12:28) யெகோவா மீதுள்ள பயபக்தி, அனைத்து தவறான பாதைகளையும் தவிர்க்கும்படி உங்களைத் தூண்டும். அதுமட்டுமின்றி, அப்போஸ்தலன் பவுல் அபிஷேகம் செய்யப்பட்ட சக கிறிஸ்தவர்களுக்கு கொடுத்த பின்வரும் அறிவுரையைப் பின்பற்ற உங்களுக்கு உதவும்: “பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 1:17.
19. கடவுளுடைய வார்த்தையிலிருந்து படிப்பதைக் கடைபிடிக்க நீங்கள் ஏன் தொடர்ந்து முயற்சி எடுக்கவேண்டும்?
19 கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வதைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். அப்படிச் செய்கையில் நீங்கள் “நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்த பயிற்சி” பெற்றவர்களில் ஒருவராக இருப்பீர்கள். (எபிரெயர் 5:14, பொ.மொ) இது மோசமான பாவத்தைச் செய்யாதபடி உங்களைப் பாதுகாக்கும். பேச்சிலும் நடத்தையிலும் ஏனோதானோவென்று இருப்பதற்குப் பதிலாக, ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு கவனமாக இருங்கள். இந்தப் பொல்லாத நாட்களில் “காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” “கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்;” அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.—எபேசியர் 5:15-17; 2 பேதுரு 3:17.
20. தவறான ஆசையை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
20 பிறருக்குச் சொந்தமானதை அபகரிக்க வேண்டுமென்ற இச்சைக்கு இடமளிக்காதீர்கள். பத்துக் கட்டளைகளில் ஒன்று பின்வருமாறு கூறுகிறது: “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:17) ஒருவருடைய வீடு, மனைவி, வேலைக்காரர், மிருகங்கள் போன்றவற்றை இந்தச் சட்டம் பாதுகாத்தது. ஆனால், இப்படிப்பட்ட தவறான ஆசை ஒருவரைத் தீட்டுப்படுத்துகிறது என்று இயேசு கூறினார். இதுதான் மிக முக்கியமான குறிப்பு.—மாற்கு 7:20-23.
21, 22. பாவம் செய்வதைத் தவிர்க்க ஒரு கிறிஸ்தவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
21 தவறான ஆசை பாவத்தில் கொண்டுபோய் விடாதபடிக்கு முன்னெச்சரிக்கையாய் இருங்கள். சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு எழுதினார்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” (யாக்கோபு 1:14, 15) உதாரணமாக, ஒரு நபருக்கு கடந்தகாலத்தில் குடிப்பழக்கம் இருந்ததென்றால், அவர் வீட்டில் மதுபானங்களை வைத்திருக்க வேண்டாமென தீர்மானிக்கலாம். எதிர்பாலார் ஒருவர் சம்பந்தமான சோதனையை தவிர்க்க வேண்டுமெனில், ஒரு கிறிஸ்தவர் வேலை செய்யுமிடத்தில் தன்னுடைய இடத்தையோ, அல்லது வேலையையோ மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்.—நீதிமொழிகள் 6:23-28.
22 பாவம் செய்வதற்கான முதல் படியைக்கூட தவிர்த்து விடுங்கள். சரசமாடுவதோ, ஒழுக்கக்கேடான காரியங்களைக் குறித்து சிந்திப்பதோ வேசித்தனத்தில் அல்லது விபசாரத்தில் விளைவடையலாம். சின்னச் சின்ன பொய்களை சொல்ல ஆரம்பித்தால், பெரிய பொய்களைச் சொல்லக்கூட ஒருவர் துணிந்துவிடலாம்; பொய் சொல்வது அவருடைய பழக்கமாகவே ஆகிவிடலாம். சின்னதாக திருட ஆரம்பிக்கும் நபரின் மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப்போய் கடைசியில் பெரிய திருட்டைச் செய்யுமளவுக்கு துணிந்துவிடலாம். விசுவாசதுரோக கருத்துகளை லேசாக பொறுத்துக்கொள்வதுகூட முழுமையான விசுவாசதுரோகத்தில் ஒருவரை அமிழ்த்திவிடலாம்.—நீதிமொழிகள் 11:9; வெளிப்படுத்துதல் 21:8.
ஏற்கெனவே பாவம் செய்திருந்தால்?
23, 24. பின்வரும் வசனங்களிலிருந்து என்ன ஆறுதலை நாம் பெறலாம்: 2 நாளாகமம் 6:29-31, நீதிமொழிகள் 28:13.
23 மனிதர்கள் எல்லாருமே அபூரணர்கள்தான். (பிரசங்கி 7:20) ஒருவேளை நீங்கள் மோசமான பாவத்தைச் செய்திருந்தால், யெகோவாவின் ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா செய்த ஜெபத்திலிருந்து ஆறுதலடையலாம். சாலொமோன் பின்வருமாறு ஜெபித்தார்: “எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.”—2 நாளாகமம் 6:29-31.
24 ஆம், கடவுள் நம் இருதயத்தை அறிந்திருக்கிறார். அவர் மன்னிக்கிறவராகவும் இருக்கிறார். நீதிமொழிகள் 28:13 பின்வருமாறு சொல்கிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” ஒரு நபர் மனந்திரும்பி தன் பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றை விட்டுவிடுவதன்மூலம் கடவுளுடைய இரக்கத்தைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் ஆன்மீக ரீதியில் பலவீனமாக இருந்தால், கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க வேறெதுவும் உங்களுக்கு உதவும்?
எப்படி பதிலளிப்பீர்கள்?
• நாம் எவ்வாறு கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கலாம்?
• பாவமுள்ள போக்கைத் தவிர்க்க கடவுள்மீதும், கிறிஸ்துமீதும் உள்ள அன்பு எவ்வாறு நமக்கு உதவும்?
• பிறர் மீதுள்ள உண்மையான அன்பு, ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாக்கும்?
• தவறான நடத்தையைத் தவிர்க்க உதவும் சில வழிகள் யாவை?
[பக்கம் 21-ன் படம்]
கடவுளுடைய அன்பில் நாம் எவ்வாறு நிலைத்திருக்கலாம் என்பதை யூதா காட்டுகிறார்
[பக்கம் 23-ன் படம்]
விவாகரத்து செய்வது, தவறிழைக்காத மணத்துணைக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த வேதனையளிக்கும்
[பக்கம் 24-ன் படம்]
காலேபைப் போல, ‘யெகோவாவை உத்தமமாய்ப் பின்பற்ற’ தீர்மானித்திருக்கிறீர்களா?
[பக்கம் 25-ன் படம்]
சோதனையை எதிர்க்க உதவிகேட்டு தவறாமல் ஜெபியுங்கள்