அதிகாரம் பதினெட்டு
தானியேலுக்கு அருமையான வெகுமதி—யெகோவா உறுதியளிக்கிறார்
அந்த ஓட்டப்பந்தய வீரன் இன்னும் சில நொடிகளில் எல்லைக்கோட்டைத் தொட்டுவிடும் தூரத்துக்கு நெருங்கிவிட்டான். ஆனால் சக்தி முழுவதும் கிட்டத்தட்ட கரைந்துவிட்டிருந்த சமயம். தன் லட்சியம் ஒருகணம் கண்முன் மின்னலென தோன்றி மறைகிறது. உடலின் ஒவ்வொரு தசையும் விண் விண்ணென்று தெறிக்க, கடைசியாக தன்னிடமிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் ஒன்றுதிரட்டி எல்லைக்கோட்டை தொட்டுவிடுகிறான்! வெற்றிப் பூரிப்பில் முகம் பூவாக மலர, நிம்மதிப்பெருமூச்சு விடுகிறான். இறுதிவரை சகித்திருந்ததற்கு பலன் கைமேல் கிடைத்துவிட்டது.
2 தானியேல் 12-ஆம் அதிகாரத்தின் முடிவில், பிரியமான தீர்க்கதரிசி தன் சொந்த “ஓட்டத்தில்”—யெகோவாவின் சேவையில் அவரது வாழ்க்கையென்ற ஓட்டத்தில்—எல்லைக்கோட்டை எட்டவிருந்தார். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு வாழ்ந்த யெகோவாவின் விசுவாசிகள் பலரை உதாரணங்களாக குறிப்பிட்ட பிற்பாடு, அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—எபிரெயர் 12:1, 2.
3 ‘மேகம்போன்ற திரளான சாட்சிகளில்’ தானியேலும் ஒருவர். அவர் நிச்சயமாகவே ‘பொறுமையோடே ஓடிய’ ஒருவர். கடவுள்மீதிருந்த அளவில்லா அன்பே இதைச்செய்ய அவரைத் தூண்டியது. யெகோவா, வரவிருந்த உலக அரசாங்கங்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை தானியேலுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இப்போதோ இப்படிப்பட்ட உற்சாகமான வார்த்தைகளை தூதன் மூலம் சொல்கிறார்: “நீயோ முடிவுமட்டும் செல்; அப்போது நீ இளைப்பாறுவாய், ஆனால் நாட்களின் முடிவிலே உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள நீ எழுந்திருப்பாய்.” (தானியேல் 12:13, NW) யெகோவாவின் தூதன் தானியேலிடம் மூன்று தெளிவான காரியங்களைச் சொன்னார்: (1) தானியேல் ‘முடிவுமட்டும் செல்ல’ வேண்டும், (2) அவர் ‘இளைப்பாறுவார்,’ (3) மறுபடியும் எதிர்காலத்தில் ‘எழுந்திருப்பார்.’ இவ்வார்த்தைகள், வாழ்க்கையென்னும் ஓட்டத்தை வெற்றிகரமாய் ஓடிமுடிக்க இன்றைய கிறிஸ்தவர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தும்?
‘முடிவுமட்டும் செல்’
4 ‘நீயோ முடிவுமட்டும் செல்’ என தானியேலிடம் சொன்னபோது தூதன் எதை அர்த்தப்படுத்தினார்? எதன் முடிவுமட்டும்? தானியேல் கிட்டத்தட்ட 100 வயதை எட்டியிருந்ததால், நெருங்கிக்கொண்டிருந்த அவரது சொந்த வாழ்க்கையின் முடிவையே இது குறித்திருக்க வேண்டும். a மரணம் வரை உண்மையுள்ளவராய் சகித்திருக்கும்படி தானியேலை தூதன் ஊக்கப்படுத்தினார். ஆனால் அது அவ்வளவு சுலபமல்லதான். பாபிலோன் வீழ்த்தப்படுவதையும் நாடுகடத்தப்பட்ட யூதரில் மீதியானோர் யூதாவிற்கும் எருசலேமுக்கும் திரும்புவதையும் தானியேல் கண்கூடாக பார்த்திருந்தார். இவை வயது முதிர்ந்த இந்தத் தீர்க்கதரிசிக்கு பெருமகிழ்ச்சி தந்திருக்கும். இருந்தாலும் இவரும் அந்தப் பிரயாணத்தில் சேர்ந்துகொண்டார் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. அச்சமயத்தில் அவர் முதுமையால் மிகவும் தளர்ந்துபோயிருப்பார். அல்லது அவர் பாபிலோனில் இருப்பதே யெகோவாவின் சித்தமாக இருந்திருக்கலாம். எதுவாயிருந்தாலும், தனது தேசத்தாரோடு தானும் யூதாவிற்கு திரும்பிச்செல்ல வேண்டுமென்ற ஏக்கம் தானியேலுக்கு இருந்திருக்குமோ என நினைக்கத் தோன்றுவது இயல்பே.
5 ‘முடிவுமட்டும் செல்’ என தூதன் பரிவோடு சொன்னது, தானியேலுக்கு சந்தேகமின்றி அதிக தெம்பளித்தது. இயேசு கிறிஸ்து சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு சொன்னதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) சந்தேகமின்றி இதைத்தான் தானியேல் செய்தார். முடிவுபரியந்தம் நிலைநின்றார். வாழ்க்கையென்னும் ஓட்டத்தை இறுதிவரை விசுவாசத்தோடு ஓடிமுடித்தார். பிற்பாடு கடவுளுடைய வார்த்தை இவரை மெச்சிப் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். (எபிரெயர் 11:32, 33) முடிவுவரை சகித்திருக்க தானியேலுக்கு உதவியது எது? அவரது வாழ்க்கைப் பதிவு இதற்கான பதிலைத் தருகிறது.
கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கராய் நிலைத்திருத்தல்
6 தானியேலுக்கு, முடிவுவரை நிலைத்திருப்பது, கடவுளது பூரிப்பளிக்கும் வாக்குறுதிகளை தவறாமல் படித்து தியானிப்பதை உட்படுத்தியது. தானியேல் கடவுளது வார்த்தையின் ஆர்வமிக்க மாணாக்கராய் இருந்தது நமக்குத் தெரியும். இல்லையென்றால், யூதர்கள் 70 வருடங்களுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என யெகோவா எரேமியாவிடம் வாக்குறுதியளித்தது தானியேலுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? தானியேலே எழுதினார்: “நான் . . . வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.” (தானியேல் 9:2; எரேமியா 25:11, 12) கேள்விக்கிடமின்றி, அப்போது புழக்கத்திலிருந்த கடவுளுடைய வார்த்தையின் புத்தகங்களை தானியேல் புரட்டிப் பார்த்தார். மோசே, தாவீது, சாலொமோன், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் எழுதியவற்றை—தன்வசம் இருந்தவற்றையெல்லாம்—தானியேல் படித்தார். அவர் மணிக்கணக்காய் இவற்றை வாசித்து தியானித்து இன்பம்கண்டிப்பார் என்பது நிச்சயம்.
7 கடவுளது வார்த்தையை முழு ஈடுபாட்டுடன் கருத்தூன்றி படிப்பது, இன்று சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள நமக்கு அத்தியாவசியமானது. (ரோமர் 15:4-6; 1 தீமோத்தேயு 4:15) நம்மிடம் முழு பைபிள் இருக்கிறது. தானியேல் தீர்க்கதரிசனங்களில் சில, எவ்வாறு பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு நிறைவேறின என்ற பதிவும் பைபிளில் உண்டு. அதுமட்டுமின்றி, தானியேல் 12:4-ல் முன்னறிவிக்கப்பட்ட ‘முடிவுகாலத்தின்போது’ வாழும் பாக்கியத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். நம் நாளில்தானே, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள். இருண்ட உலகென்னும் குன்றின் மேலிட்ட சத்திய விளக்காய் சுடர்விட்டு பிரகாசிக்கிறார்கள். இதனால், தானியேல் புத்தகத்திலுள்ள அநேக கருத்தாழமிக்க தீர்க்கதரிசனங்கள், இன்று நமக்கு மிகுந்த அர்த்தமுள்ளவையாய் இருக்கின்றன. அவற்றில் சில தானியேலுக்கே புதிராய் இருந்தன. ஆகவே கடவுளது வார்த்தையை தவறாமல் தினந்தோறும் படிப்போமாக; இவை எவற்றையும் சிறிதும் அசட்டை செய்யாதிருப்போமாக. அப்போதுதான் நம்மால் நிலைத்திருக்க முடியும்.
தானியேல் ஜெபத்தில் தரித்திருந்தார்
8 முடிவுவரை நிலைத்திருப்பதற்கு ஜெபமும் தானியேலுக்கு உதவியது. தினந்தோறும் அவர் யெகோவா தேவனை அணுகி, விசுவாசமும் நம்பிக்கையும் பொங்க மனந்திறந்து பேசினார். யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதை அவர் அனுபவ வாயிலாக அறிந்திருந்தார். (சங்கீதம் 65:2; ஒப்பிடுக: எபிரெயர் 11:6.) இஸ்ரவேலர்களது கலகத்தனத்தால் தானியேலின் இதயம் வேதனையால் கனத்தபோது, யெகோவாவிடம் தன் பாரத்தை இறக்கிவைத்தார். (தானியேல் 9:4-19) தரியு, தன்னிடம் மாத்திரமே 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென ஆணை பிறப்பித்தபோதும் தானியேல் யெகோவா தேவனிடம் ஜெபிப்பதை நிறுத்தவில்லை. (தானியேல் 6:10) விசுவாசமுள்ள இந்த முதியவர், சிங்கங்களின் கெபியில் எறியப்படுவதற்கும் அஞ்சாமல், ஜெபத்தின் பாக்கியத்தைப் பற்றியிருந்ததை நினைக்கையில் உள்ளம் உருகுதல்லவா? தானியேல் முடிவுவரை சென்றதில், அதாவது தினந்தினம் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபித்து இறுதிவரை விசுவாசத்தோடு நிலைத்துநின்றதில் சந்தேகமேயில்லை.
9 ஜெபம் ஓர் எளிய செயல். நாம் எந்நேரத்திலும், எங்கும், சப்தமாகவோ மௌனமாகவோ ஜெபிக்கலாம். இருந்தாலும் இந்த விலைமதிக்க முடியாத பாக்கியத்தை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பைபிள், ஜெபத்தை சகிப்புத்தன்மையோடும் உறுதியோடும் ஆவிக்குரிய விழிப்போடும் சம்பந்தப்படுத்திப் பேசுகிறது. (லூக்கா 18:1; ரோமர் 12:12; எபேசியர் 6:18; கொலோசெயர் 4:2) அண்ட சராசரத்திலேயே மிக முக்கிய பிரமுகரோடு எவ்வித தடையுமின்றி எப்போது வேண்டுமானாலும் பேச முடியும் என்பது சாதாரண விஷயமா என்ன? அதுவும் அவர் கேட்கிறார் எனும்போது! யெகோவா தானியேலின் ஜெபத்தைக் கேட்டு, தூதனை அனுப்பிய அந்தச் சம்பவம் உங்களுக்கு ஞாபகமிருக்கும். தானியேல் ஜெபம்செய்து கொண்டிருக்கும்போதே தூதன் தோன்றினார்! (தானியேல் 9:20-21) நம் காலத்தில் தூதர்கள் வருவதில்லைதான், ஆனால் யெகோவா மாறவில்லையே. (மல்கியா 3:6) தானியேலுக்கு செவிகொடுத்த விதமாகவே நமக்கும் செவிகொடுப்பார். நாம் ஜெபிக்கையில் யெகோவாவிடம் நெருங்குவோம். இவ்வாறு தானியேலைப் போலவே, முடிவுவரை நிலைத்திருப்பதற்கு உதவும் நெருக்கமான பந்தத்தை அவருடன் வளர்த்துக்கொள்வோம்.
கடவுளது வார்த்தையைப் போதிப்பதில் நிலைத்திருத்தல்
10 தானியேல் மற்றொரு அர்த்தத்திலும் ‘முடிவுவரை செல்ல’ வேண்டியிருந்தது. அதாவது சத்தியத்தை போதிப்பதிலும் நிலைத்திருக்க வேண்டியிருந்தது. “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன், இது யெகோவாவின் திருவாக்கு” என வேதவாக்கியங்களில் சொல்லப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் தானும் ஒருவன் என்பதை தானியேல் ஒருபோதும் மறக்கவில்லை. (ஏசாயா 43:10, தி.மொ.) இந்த நியமிப்பை நிறைவேற்ற தானியேல் தன்னாலான எல்லாவற்றையும் செய்தார். பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்த தன் சொந்த மக்களுக்குப் போதிப்பதும் இதில் அடங்கியிருந்திருக்கலாம். அவரது ‘தோழர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ள அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைத் தவிர, மற்ற யூதர்களோடு அவருக்கிருந்த உறவைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. (தானியேல் 1:7; 2:13, 17, 18) அவர்கள் ஒவ்வொருவரும் நிலைத்திருந்ததற்கு அவர்களது தோழமையின் பிணைப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. (நீதிமொழிகள் 17:17) யெகோவா விசேஷ அறிவை தானியேலுக்கு அருளியிருந்ததால், நண்பர்களுக்குப் போதிக்க அவரிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. (தானியேல் 1:17) அதேசமயம் அவர் மற்றொரு போதிக்கும் வேலையிலும் ஈடுபட வேண்டியிருந்தது.
11 புறமத முக்கிய பிரமுகர்களுக்கு சாட்சி பகருவதில் மற்ற எந்தத் தீர்க்கதரிசியைக் காட்டிலும் தானியேலே பெரும் பங்கேற்றார். விரும்பப்படாத செய்திகளையே அவர் பெரும்பாலும் அறிவிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்த ஆட்சியாளர்களை அருவருக்கத்தக்கவர்களாய், அல்லது மட்டமானவர்களாய் அவர் கருதவில்லை. அவர்களிடம் மரியாதையோடு, அதேசமயம் சாதுரியமாக பேசினார். பொறாமைபிடித்த, சூதுநிறைந்த தேசாதிபதிகளைப் போன்ற சிலர் தானியேலைக் கொல்ல நினைத்தனர். இருந்தாலும் மற்ற பிரமுகர்கள் அவரை மதித்தனர். ராஜாக்களையும் ஞானிகளையும் திக்குமுக்காடச் செய்த ரகசியங்களை விளக்க யெகோவா தானியேலுக்கு உதவியதால், இத்தீர்க்கதரிசி உயர்ந்த பதவியைப் பெற்றார். (தானியேல் 2:47, 48; 5:29) அவருக்கு வயதாக வயதாக, இளமையில் ஓடியாடி கடவுளுக்கு உழைத்ததுபோல் உழைத்திருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவர் தனது பிரியமான தெய்வத்தைச் சேவிக்கக் கிடைத்த எவ்வித வாய்ப்பையும் தவறவிடாமல், விசுவாசத்தோடு முடிவுவரை சென்றதில் சந்தேகமேயில்லை.
12 தானியேலும் அவரது மூன்று தோழர்களும் ஒருவருக்கொருவர் உதவியதுபோலவே, இன்றும் கிறிஸ்தவ சபையிலுள்ள உண்மையான நண்பர்கள் சகித்திருப்பதற்கு நமக்கு உதவலாம். மேலும், நாம் ஒருவருக்கொருவர் போதித்து, ‘உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்கிறோம்.’ (ரோமர் 1:11, 12, NW) தானியேலைப் போலவே நம்மிடமும், அவிசுவாசிகளுக்கு சாட்சிகொடுக்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:14; 28:19, 20) ஆகவே நம் திறமைகளை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களிடம் யெகோவாவைப் பற்றி பேசுகையில் நாம் ‘சத்திய வசனத்தை சரியாக போதிப்போம்.’ (2 தீமோத்தேயு 2:15, NW) “புறம்பே இருக்கிறவர்கள் விஷயத்தில் தொடர்ந்து ஞானமாய் நடவுங்கள்” என்ற பவுலின் புத்திமதியைக் கேட்டு நடப்பதும் உதவும். (கொலோசெயர் 4:5, NW) சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் பரந்த மனப்பான்மையோடு நடந்துகொள்வதும் இந்த ஞானத்தில் உட்பட்டிருக்கிறது. நாம்தான் உசத்தி என்ற நினைப்பில் அப்படிப்பட்டவர்களை நாம் தாழ்வாக பார்ப்பதில்லை. (1 பேதுரு 3:15, NW) அதற்கு மாறாக இதயத்தை எட்டும் விதத்தில் கடவுளது வார்த்தையை சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் பயன்படுத்தி, அவர்களை சத்தியத்தினிடமாக கவர்ந்திழுக்க முயலுகிறோம். ஒருவரது இதயத்தை எட்டிவிட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளும் உண்டோ! இச்சந்தோஷம் தானியேலைப் போலவே நம்மையும் நிச்சயமாய் முடிவுவரை நிலைத்திருக்கச் செய்யும்.
“நீ இளைப்பாறுவாய்”
13 அடுத்ததாக, “நீ இளைப்பாறுவாய்” என தூதன் தானியேலிடம் உறுதியளித்தார். (தானியேல் 12:13, NW) இதற்கு அர்த்தமென்ன? தானியேல் தான் சாகப்போவதை அறிந்திருந்தார். ஆதாமின் காலத்திலிருந்து இப்போதுவரை மரணத்திலிருந்து எந்த மனிதனாலும் தப்பிக்க முடியவில்லையே. ஆகவேதான் பைபிள் மரணத்தை “சத்துரு” என அழைப்பது மிகப் பொருத்தம். (1 கொரிந்தியர் 15:26) இருந்தாலும் சுற்றியிருந்த பாபிலோனியர்களோடு ஒப்பிடுகையில், மரணத்தைப் பற்றிய தானியேலின் கண்ணோட்டம் வேறாயிருந்தது. அவர்களோ கிட்டத்தட்ட 4,000 பொய்க் கடவுட்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான வணக்கத்தில் ஊறிப்போனவர்கள். அவர்களுக்கு சாவு என்பது கொடுங்கனவாய் இருந்தது. கஷ்டத்தில் வாழ்ந்த ஒருவர் அல்லது தாக்குதலுக்கு ஆளான ஒருவர் இறக்கையில், அவர் பேயாக வந்து உயிரோடு இருப்பவர்களை பழிவாங்குவார் என அவர்கள் நம்பினார்கள். கொடிய கீழுலகம் இருப்பதாகவும் பாபிலோனியர்கள் நம்பினார்கள். அங்கே மனித உருவிலும் மிருக உருவிலும் விகாரமான ராட்சதர்கள் வாழ்ந்ததாக நம்பினார்கள்.
14 தானியேலுக்கோ மரணத்தைக் குறித்து இப்படிப்பட்ட எந்தப் பயமும் இல்லை. அவர் காலத்திற்கு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என எழுதும்படி சாலொமோன் ராஜா கடவுளால் ஏவப்பட்டார். (பிரசங்கி 9:5) சாகவிருப்பவனைப் பற்றி சங்கீதக்காரனும் இப்படிப் பாடியிருந்தார்: “அவனுடைய ஆவிபிரியும், அவன்தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:4) ஆகவே தூதன் தன்னிடம் சொன்னது நிச்சயம் வாய்க்கும் என தானியேல் நம்பினார். மரணம் என்பது இளைப்பாறுதல். யோசனைகள் இல்லை, மனக்கசப்பு இல்லை, சித்திரவதை இல்லை, முக்கியமாய் ராட்சதர்கள் இல்லவே இல்லை. லாசரு இறந்தபோது இயேசு கிறிஸ்துவும் இதைத்தான் சொன்னார். “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” என்றார்.—யோவான் 11:11.
15 சாவைப் பற்றிய எண்ணம் தானியேலுக்கு கொடுங்கனவாய் இல்லாததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. “பரிமளதைலத்தைப் பார்க்கிலும் பெயரே மேல், பிறந்த நாளைவிட மரண நாளே சிறந்தது” என கடவுளது வார்த்தை சொல்கிறது. (பிரசங்கி 7:1, NW) சந்தோஷம் பொங்கும் பிறந்த நாளைவிட மரண நாள் சந்தேகமின்றி துக்கம் நிறைந்ததுதான். அப்படியிருக்கையில் அது எப்படி சிறந்ததாய் இருக்க முடியும்? இதற்கான பதில், ‘பெயரில்’ இருக்கிறது. ‘பரிமளதைலம்’ மிக விலையுயர்ந்ததாய் இருக்கலாம். லாசருவின் சகோதரி மரியாள் ஒருமுறை பரிமளத்தைலத்தை இயேசுவின் பாதத்தில் பூசினாள்; அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு வருட கூலிக்கு சமமாயிருந்தது! (யோவான் 12:1-7) ஒருவரது ‘பெயர்’ எவ்விதத்தில் அந்தளவு விலையேறப்பெற்றதாய் இருக்க முடியும்? பிரசங்கி 7:1-ல் கிரேக்க செப்டுவஜின்ட் “நற்பெயர்” என குறிப்பிடுகிறது. ஆகவே, வெறுமனே ஒருவரது பெயர் அல்ல, ஆனால் ஒருவர் எடுத்திருக்கும் நற்பெயரே அவ்வளவு விலையேறப்பெற்றது. பிறந்த குழந்தையின் பெயரைச் சொன்னவுடனே, அவன் நல்லவன், புண்ணியவான், தங்கமானவன், குணசாலி என்றெல்லாம் நினைக்கத் தோன்றுமா? இல்லை, ஆனால் அதுவே ஒருவரது மரண நாளாக இருந்தால், அந்தப் பெயர் இவை அனைத்தையும் குறிக்கும். முக்கியமாய், கடவுளது நோக்குநிலையில் அது நற்பெயராக இருந்தால், எவ்வித பொன்னோ பொருளோ அதற்கு ஈடாகாது.
16 தானியேல் தன் வாழ்நாள் முழுவதும், கடவுளிடம் நற்பெயர் எடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்; யெகோவாவும் இவை எவற்றையும் கவனியாது விட்டுவிடவில்லை. தானியேலைக் கவனித்தார், அவர் இதயத்தையும் ஆராய்ந்தார். தாவீது ராஜாவின் விஷயத்திலும் யெகோவா இதைத்தான் செய்தார், ஆகவே தாவீது இவ்வாறு பாடினார்: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.” (சங்கீதம் 139:1, 2) தானியேல் பரிபூரணமானவர் அல்லதான். அவரும் ஆதாமின் சந்ததியைச் சேர்ந்தவர்; பாவம்செய்த தேசத்தின் அங்கத்தினன். (ரோமர் 3:23) ஆனால் தானியேல் தன் பாவத்திலிருந்து மனந்திருந்தி, கடவுளோடு நேர்வழியில் நடக்க தொடர்ந்து முயற்சித்தார். யெகோவா தன் பாவங்களை மன்னிப்பார், இனி ஒருபோதும் அவற்றை நினைவுகூரமாட்டார் என இவர் முழுமையாய் நம்பினார். (சங்கீதம் 103:10-14; ஏசாயா 1:18) யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களின் நற்செயல்களை ஞாபகம் வைக்கிறார். (எபிரெயர் 6:10) ஆகவேதான் யெகோவாவின் தூதன் தானியேலை இருமுறை ‘மிகப் பிரியமானவன்’ என அழைத்தார். (தானியேல் 10:11, 19, தி.மொ.) ஆக, தானியேலை கடவுள் எந்தளவு நேசித்தார் என தெரிகிறது. யெகோவாவிடம் நற்பெயர் பெற்றுவிட்ட நிறைவோடு தானியேலால் இளைப்பாறச் செல்ல முடிந்தது.
17 ‘நான் யெகோவாவிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறேனா?’ என நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளலாம். நாம் துன்பம் நிறைந்த காலங்களில் வாழ்கிறோம். நாமும் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்பது வெகு யதார்த்தமான விஷயம்; கெட்ட நினைப்பல்ல. (பிரசங்கி 9:11, NW) ஆகவே நாம் ஒவ்வொருவரும் தாமதிக்காமல், இப்போதே கடவுளிடம் நற்பெயர் எடுக்க தீர்மானிப்பது எவ்வளவு முக்கியம். அவ்வாறு செய்தோமாகில் சாவைக் குறித்து பயப்படவேண்டியதில்லை. அது வெறுமனே இளைப்பாறுதல், தூக்கத்தைப் போன்றது. தூக்கத்திலிருந்து எழுவதைப் போலவே, மரணத்திலிருந்தும் எழுந்திருக்க முடியும்!
“நீ எழுந்திருப்பாய்”
18 கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகளிலேயே மிக அற்புதமான ஒன்றோடு தானியேல் புத்தகம் முடிவுறுகிறது. யெகோவாவின் தூதன் தானியேலிடம் சொன்னார்: “நாட்களின் முடிவிலே உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள நீ எழுந்திருப்பாய்.” தூதன் எதை அர்த்தப்படுத்தினார்? ‘இளைப்பாறுதல்’ என அவர் குறிப்பிட்டது மரணத்தைக் குறித்ததால், பிற்பாடு தானியேல் ‘எழுந்திருப்பார்’ என்ற வாக்குறுதி, உயிர்த்தெழுதலை மட்டுமே அர்த்தப்படுத்த முடியும்! b சொல்லப்போனால், எபிரெய வேதாகமத்திலேயே தானியேல் 12-ஆம் அதிகாரத்தில்தான் உயிர்த்தெழுதலைப் பற்றி முதன்முறையாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என சில அறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர். (தானியேல் 12:2) இருந்தாலும் அவர்களது கருத்து தவறு. உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி தானியேல் நன்றாகவே அறிந்திருந்தார்.
19 உதாரணத்திற்கு, ஏசாயா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பதிவுசெய்திருந்த இவ்வார்த்தைகளை தானியேல் அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை: “மரித்துப்போன உமது ஜனங்கள் பிழைப்பார்கள், பிரேதமான என்னுடைய ஜனங்கள் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே படுத்திருக்கிறவர்களே விழித்துக் கெம்பீரியுங்கள்; . . . மரித்தோரைப் பூமி திரும்ப வரச்செய்யும்.” (ஏசாயா 26:19, தி.மொ.) அதற்கு வெகு காலத்திற்கு முன்பே, எலியாவும் எலிசாவும் யெகோவாவின் வல்லமையால் இறந்தவர்களை உயிர்த்தெழுப்பினார்கள். (1 இராஜாக்கள் 17:17-24; 2 இராஜாக்கள் 4:32-37) இதற்கும் முன்பு, தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் தாய் அன்னாள், ஷியோலிலிருந்து அதாவது பிரேதக் குழியிலிருந்து யெகோவா மனிதரை உயிர்ப்பிக்க வல்லவர் என்பதை நம்பினாள். (1 சாமுவேல் 2:6) ஏன் இதற்கும் முன்புகூட, உண்மையுள்ள யோபு தன் நம்பிக்கையை இப்படிச் சொல்லியிருந்தார்: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக [“வாஞ்சை கொள்வீர்,” NW].”—யோபு 14:14, 15.
20 யெகோவா என்றாவது ஒருநாள் தன்னை மீண்டும் உயிர்த்தெழுப்ப வாஞ்சை கொள்வார் என யோபுவைப் போலவே தானியேலும் நம்புவதற்கு காரணங்கள் இருந்தன. இருந்தாலும் அந்த நம்பிக்கையை வல்லமைமிக்க தூதன் ஊர்ஜிதப்படுத்தியபோது எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கும்! ஆம், கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியில் நடக்கவிருக்கும் “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்” தானியேலும் எழுந்திருப்பார். (லூக்கா 14:14) அப்போது தானியேலுக்கு எப்படியிருக்கும்? கடவுளுடைய வார்த்தை இதைப் பற்றி அதிக தகவலளிக்கிறது.
21 யெகோவா “ஒழுங்கின்மையின் கடவுளாயிராமல், சமாதானத்தின் கடவுளாயிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 14:33, NW) ஆகவே பரதீஸில் உயிர்த்தெழுதல் முறையாக நடைபெறும் என்பது தெளிவாயிருக்கிறது. ஒருவேளை அர்மகெதோனுக்கு பின் கொஞ்ச காலம் கழித்து இது நடைபெறலாம். (வெளிப்படுத்துதல் 16:14, 16) இப்பழைய ஒழுங்குமுறை, தடயம் ஏதுமில்லாதபடி துடைத்தழிக்கப்படும். இறந்தவர்களை மீண்டும் வரவேற்க மற்ற ஏற்பாடுகளும் நிச்சயமாய் செய்யப்படும். “அவனவன் தன்தன் வரிசையிலே” எழுப்பப்படுவான் என பைபிள் சொல்கையில், உயிர்த்தெழுதல் நடைபெறவிருக்கும் வரிசைக்கிரமம் தெளிவாகிறது. (1 கொரிந்தியர் 15:23) ஆகவே ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோரின் உயிர்த்தெழுதலை’ குறித்ததில், நீதிமான்களே முதலில் வருவார்கள்போல் தெரிகிறது. (அப்போஸ்தலன் 24:15) இவ்வாறு, தானியேலைப் போன்ற பூர்வ காலத்து விசுவாசிகள், பூமிக்குரிய விவகாரங்களை நிர்வகிப்பதில் உதவிபுரிய முடியும். உயிர்த்தெழுப்பப்படும் கோடிக்கணக்கான ‘அநீதிமான்களுக்குப்’ போதிப்பதும் இதில் அடங்கும்.—சங்கீதம் 45:16.
22 தானியேல் அப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்பதற்குமுன், நிச்சயமாய் சில கேள்விகளைக் கேட்பார். சில சிக்கலான தீர்க்கதரிசனங்கள் அவரிடம் சொல்லப்பட்டபோது, “நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை” என்றல்லவா சொன்னார். (தானியேல் 12:8) ஒருவழியாக, இந்தத் தெய்வீக புதிர்களைப் புரிந்துகொள்வதில் எவ்வளவு பூரிப்படைவார்! நிச்சயமாகவே மேசியாவைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ள விரும்புவார். அவரது காலத்திலிருந்து நம் நாள் வரையாக மெதுமெதுவாய் தோன்றி மறைந்த உலக வல்லரசுகளைப் பற்றியும் தானியேல் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு தெரிந்துகொள்வார். ‘முடிவுகாலத்தில்’ துன்புறுத்துதலின் மத்தியிலும் உண்மையோடு சகித்திருந்த ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்களின்’ அடையாளம், கடவுளது மேசியானிய ராஜ்யத்தால் எல்லா மனித அரசாங்கங்களுக்கும் ஏற்பட்ட இறுதி அழிவு ஆகியவற்றைப் பற்றியும் ஆவல்பொங்க கேட்டு தெரிந்துகொள்வார்.—தானியேல் 2:44; 7:21; 12:4.
பரதீஸில் தானியேலுக்கு பங்கு உண்டு—உங்களுக்கும்தான்!
23 தானியேல் மீண்டும் உயிரோடு வருகையில் தான் காணும் உலகைப் பற்றி—தான் வாழ்ந்த உலகிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படும் அந்த உலகைப் பற்றி—அறிந்துகொள்ள விரும்புவார். அவர் வாழ்ந்த உலகைப் பாழாக்கிய போர்களும் ஒடுக்குதலும் சுவடு தெரியாமல் மறைந்திருக்கும். துக்கமோ வியாதியோ மரணமோ இருக்காது. (ஏசாயா 25:8; 33:24) அதேசமயம் உண்பதற்கு ஏராளமான உணவு இருக்கும், வீடுகளுக்கும் குறைவிருக்காது, எல்லாருக்கும் திருப்தியான வேலை இருக்கும். (சங்கீதம் 72:16; ஏசாயா 65:21, 22) மனிதவர்க்கம், ஐக்கியப்பட்ட மகிழ்ச்சிபொங்கும் ஒரே குடும்பமாய் வாழும்.
24 தானியேலுக்கு அப்படிப்பட்ட உலகில் நிச்சயமாய் இடமுண்டு. ‘உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள நீ எழுந்திருப்பாய்’ என தூதன் அவரிடம் சொல்லியிருந்தார். இங்கே ‘பங்கு’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அதே எபிரெய வார்த்தைதான், சொல்லர்த்தமான துண்டு நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. c இஸ்ரவேலர்களின் மீண்டும் நிலைநாட்டப்பட்ட தேசம் பங்கிடப்படுவதைப் பற்றிய எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தை தானியேல் அறிந்திருப்பார். (எசேக்கியேல் 47:13–48:35) இந்தத் தீர்க்கதரிசனம் பரதீஸில் எவ்வாறு நிறைவேறும்? கடவுளது மக்கள் அனைவருக்கும் பரதீஸில் இடமிருக்கும். நிலம் கிரமமாகவும் நியாயப்படியும் பங்கிடப்படும். ஆனால் பரதீஸில் நிலம் மட்டுமே தானியேலின் பங்காக இருக்காது. அங்கே கடவுளது நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் அவருக்கு பங்கிருக்கும். தானியேலின் பங்கிற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
25 உங்கள் பங்கைப் பற்றியென்ன? இதே வாக்குறுதிகள் உங்களுக்கும் பொருந்தும். கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் தங்கள் பங்கைப் பெற, அதாவது பரதீஸில் ஓர் இடத்தைப் பெற ‘எழுந்திருக்க’ வேண்டுமென யெகோவா விரும்புகிறார். கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: தானியேலை நேருக்கு நேர் சந்திப்பது என்னே ஓர் அனுபவமாய் இருக்கும்! அவரை மட்டுமல்ல பைபிள் காலங்களில் வாழ்ந்த மற்ற உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும்கூட சந்திப்போம். அதன்பின் இன்னும் எண்ணற்றவர்கள் உயிர்த்தெழுந்து வருவார்கள்; யெகோவா தேவனை அறியவும் அவரை நேசிக்கவும் அவர்களுக்கு போதனை தேவைப்படும். நமது வீடாகிய இந்தப் பூமியை பராமரித்து, எண்ணற்ற மரம் செடி கொடிகள் நிறைந்த அழியா அழகு கொஞ்சும் பரதீஸாக மாற்ற நீங்கள் உதவுவதை கற்பனை செய்து பாருங்கள். யெகோவாவால் போதிக்கப்பட்டு, மனிதன் எப்படி வாழவேண்டுமென அவர் நினைத்தாரோ அப்படி வாழக் கற்றுக்கொள்வதை எண்ணிப்பாருங்கள். (ஏசாயா 11:9; யோவான் 6:45) ஆம், பரதீஸில் உங்களுக்கும் ஓர் இடம் காத்திருக்கிறது. பரதீஸ் என்பது இன்று சிலருக்கு கேட்க விநோதமாக இருக்கலாம். இருந்தாலும் அப்படிப்பட்ட இடத்தில் வாழவே யெகோவா மனிதனை உண்டாக்கினார் என்பதை நினைவில்கொள்ளுங்கள். (ஆதியாகமம் 2:7-9) இந்த அர்த்தத்தில், பூமியில் வாழும் கோடிக்கணக்கானோரின் இயற்கை வாழிடமே பரதீஸ். அதுவே அவர்களது சொந்த இடம். அங்கு செல்வது வீடு திரும்புவதைப் போன்றது.
26 இவை எல்லாவற்றையும் நினைக்க நினைக்க நம் உள்ளங்கள் ஏங்குகின்றன, போற்றுதலால் பொங்கி வழிகின்றன அல்லவா? நீங்களும் அங்கு இருக்கத்தானே ஏங்குகிறீர்கள்? இந்த உலகின் முடிவு எப்போது வருமென்பதை அறிய யெகோவாவின் சாட்சிகள் ஆவலாயிருப்பது ஆச்சரியமல்லவே! காத்திருப்பது கடினம். யெகோவா இதை ஒப்புக்கொள்கிறார். ஏனெனில் முடிவு “தாமதித்தாலும் அதற்குக் காத்திரு” என நம்மை உற்சாகப்படுத்துகிறார். நம் நோக்குநிலையிலிருந்து முடிவு தாமதிப்பதாய் தோன்றலாம் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார். ஏனெனில் அதே வசனம், “அது தாமதிப்பதில்லை” என்றும் உறுதியளிக்கிறது. (ஆபகூக் 2:3; ஒப்பிடுக: நீதிமொழிகள் 13:12.) ஆம், குறிக்கப்பட்ட காலத்தில் முடிவு வந்தே தீரும்.
27 முடிவு நெருங்க நெருங்க நீங்கள் என்ன செய்யவேண்டும்? யெகோவாவின் நேசத்திற்குரிய தீர்க்கதரிசியாகிய தானியேலைப் போலவே, விசுவாசத்தோடு சகித்திருங்கள். கடவுளது வார்த்தையை சிரத்தையோடு படியுங்கள். ஊக்கமாக ஜெபியுங்கள். அன்பாக உடன் விசுவாசிகளோடு கூடிவாருங்கள். சத்தியத்தை மற்றவர்களுக்கு வைராக்கியமாய் பிரசங்கியுங்கள். இப்பொல்லாத உலகின் ஆயுள் காலம் குறைந்துகொண்டே வருகிறது. ஆகவே உன்னதமானவருடைய உத்தமமுள்ள ஊழியராய் அவரது வார்த்தையை தீவிரமாய் பிரசங்கிக்கும் தீர்மானத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். முக்கியமாய், தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! சர்வலோகப் பேரரசரான யெகோவாவிற்கு முன்பாக என்றென்றைக்கும் சந்தோஷமாய் நிற்கும் பாக்கியத்தை அவர் உங்களுக்கு அருளுவாராக!
[அடிக்குறிப்புகள்]
a பொ.ச.மு. 617-ல் தானியேல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார். அப்போது அவர் வாலிபராய் இருந்திருக்கலாம். இந்தத் தரிசனத்தை அவர் கோரேசின் மூன்றாம் வருட ஆட்சியில், அதாவது பொ.ச.மு. 536-ல் பெற்றார்.—தானியேல் 10:1.
b ‘எழுந்திருத்தல்’ என்பதற்கு இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தை “மரணத்திற்குப்பின் உயிர்பெறுவதை” குறிப்பதாய் ப்ரௌன்-டிரைவர்-ப்ரிக்ஸ் எபிரெய-ஆங்கில அகராதி சொல்கிறது.
c இதற்கான எபிரெய வார்த்தை ‘சிறு கூழாங்கற்களுக்கு’ பயன்படுத்தப்பட்ட வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் அக்காலங்களில் ஏதேனும் முடிவெடுக்க, சிறு கற்களையே குலுக்கிப்போட்டு எடுத்தார்கள். சிலசமயம் நிலமும் இம்முறையில் பங்கிடப்பட்டது. (எண்ணாகமம் 26:55, 56, NW) இங்கே இவ்வார்த்தை, “ஒரு நபருக்கு (கடவுள்) ஒதுக்கியிருப்பது” என அர்த்தப்படுத்துவதாய் தானியேல் புத்தகத்தைப் பற்றிய நூல் (ஆங்கிலம்) சொல்கிறது.
நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?
• முடிவுவரை சகித்திருப்பதற்கு தானியேலுக்கு உதவியது எது?
• சாவைப் பற்றிய எண்ணம் ஏன் தானியேலுக்கு கொடுங்கனவாக இல்லை?
• தானியேல் ‘தன் பங்கைப் பெற எழுந்திருப்பார்’ என தூதன் கொடுத்த வாக்குறுதி எவ்வாறு நிறைவேறும்?
• தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிகொடுத்ததால் நீங்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறீர்கள்?
[கேள்விகள்]
1, 2. (அ) எல்லைக்கோட்டைத் தொட ஓட்டப்பந்தய வீரனுக்கு என்ன முக்கியமான குணம் தேவை? (ஆ) யெகோவாவை உண்மையோடு சேவிக்கும் வாழ்க்கையை அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வாறு பந்தயத்திற்கு ஒப்பிட்டார்?
3. (அ) ‘பொறுமையோடு ஓட’ தானியேலைத் தூண்டியது எது? (ஆ) யெகோவாவின் தூதன் தானியேலுக்கு சொன்ன மூன்று தெளிவான விஷயங்கள் என்ன?
4. ‘முடிவுமட்டும் செல்’ என்று எந்த அர்த்தத்தில் யெகோவாவின் தூதன் சொன்னார், அது ஏன் தானியேலுக்கு ஒரு சவாலாய் இருந்திருக்கும்?
5. தானியேல் முடிவுவரை நிலைத்திருந்தார் என எதை வைத்து சொல்லலாம்?
6. தானியேல் கடவுளது வார்த்தையின் ஆர்வமிக்க மாணாக்கராய் இருந்தார் என நமக்கு எவ்வாறு தெரியும்?
7. நம் காலத்தை தானியேலின் நாட்களோடு ஒப்பிடுகையில், கடவுளது வார்த்தையை படிப்பதில் நமக்கு என்ன அனுகூலங்கள் இருக்கின்றன?
8. ஜெபத்தின் விஷயத்தில் தானியேல் என்ன முன்மாதிரி வைத்தார்?
9. ஏன் நாம் ஜெபத்தின் பாக்கியத்தை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது?
10. கடவுளது வார்த்தையின் சத்தியத்தை போதிப்பது ஏன் தானியேலுக்கு முக்கியமான ஒன்றாய் இருந்தது?
11. (அ) தானியேலுடைய ஊழியத்தின் விசேஷ அம்சம் எது? (ஆ) தனக்குக் கிடைத்த அசாதாரண நியமிப்பை தானியேல் எந்தளவு திறம்பட நிறைவேற்றினார்?
12. (அ) இன்று கிறிஸ்தவர்களாக நாம் எந்தெந்த விதங்களில் போதிக்கிறோம்? (ஆ) “புறம்பே இருக்கிறவர்கள் விஷயத்தில் தொடர்ந்து ஞானமாய் நடவுங்கள்” என்ற பவுலின் புத்திமதியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
13, 14. ஏன் சாவைப் பற்றிய எண்ணம் அநேக பாபிலோனியர்களுக்கு ஒரு கொடுங்கனவாய் இருந்தது, தானியேலின் விஷயம் எவ்வாறு வித்தியாசமாய் இருந்தது?
15. பிறந்த நாளைவிட மரண நாள் எப்படி சிறந்ததாய் இருக்க முடியும்?
16. (அ) தானியேல் எவ்வாறு கடவுளிடம் நற்பெயர் எடுக்க முயன்றார்? (ஆ) யெகோவாவிடம் நற்பெயர் பெற்றுவிட்ட முழு நம்பிக்கையோடு எவ்வாறு தானியேலால் இளைப்பாறச் செல்ல முடிந்தது?
17. யெகோவாவிடம் நற்பெயர் எடுப்பதற்கு இன்று ஏன் அவசர தேவை இருக்கிறது?
18, 19. (அ) தானியேல் எதிர்காலத்தில் ‘எழுந்திருப்பார்’ என தூதன் எந்த அர்த்தத்தில் முன்னறிவித்தார்? (ஆ) உயிர்த்தெழுதலைப் பற்றி தானியேலுக்கு ஏன் தெரிந்திருக்க வேண்டும்?
20, 21. (அ) எந்த உயிர்த்தெழுதலில் தானியேலுக்கு நிச்சயமாய் பங்குண்டு? (ஆ) பரதீஸில் உயிர்த்தெழுதல் எவ்விதத்தில் நடக்குமென தெரிகிறது?
22. தானியேல் என்னென்ன கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்துகொள்ள நிச்சயமாகவே ஆவலாய் இருப்பார்?
23, 24.(அ) தானியேல் உயிர்த்தெழுந்து வரும் உலகம் எவ்வாறு அவர் வாழ்ந்த உலகிலிருந்து வித்தியாசமாயிருக்கும்? (ஆ) தானியேலுக்கு பரதீஸில் இடம் இருக்குமா, நமக்கு எப்படித் தெரியும்?
25. (அ) பரதீஸிய வாழ்க்கையில் உங்களைக் கவர்ந்த சில அம்சங்கள் எவை? (ஆ) பரதீஸ் மனிதர்களது சொந்த இடமென ஏன் சொல்லலாம்?
26. இவ்வுலக முடிவிற்குக் காத்திருப்பது கடினம் என்பதை யெகோவா எவ்வாறு ஒப்புக்கொள்கிறார்?
27. யெகோவாவிற்கு முன்பாக என்றென்றைக்கும் சந்தோஷமாய் நிற்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 307-ன் முழுபடம்]
[பக்கம் 318-ன் படம்]
தானியேலைப் போலவே, நீங்களும் கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்கு செவிசாய்க்கிறீர்களா?