“பின்னால் இருப்பவற்றை” திரும்பிப் பார்க்காதீர்கள்
“கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்கிற எவனும் கடவுளுடைய அரசாங்கத்திற்குத் தகுதி இல்லாதவன்.”—லூக். 9:62.
உங்கள் பதில் என்ன?
ஏன் ‘லோத்தின் மனைவியை நாம் நினைத்துப் பார்க்க’ வேண்டும்?
எந்த மூன்று காரியங்களை நாம் திரும்பிப் பார்க்காதிருக்க வேண்டும்?
யெகோவாவின் அமைப்புடன் சேர்ந்து நாம் எப்படி முன்னோக்கிச் செல்லலாம்?
1. இயேசு என்ன எச்சரிக்கையைக் கொடுத்தார், என்ன கேள்வி எழும்புகிறது?
“லோத்தின் மனைவியை நினைத்துப் பாருங்கள்” என்று இயேசு எச்சரித்தார். (லூக். 17:32) சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொடுத்த இந்த எச்சரிக்கை நம் காலத்திற்கு மிக மிக முக்கியம். வலிமைமிக்க இந்த எச்சரிக்கையைக் கொடுத்தபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? இதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்களுக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. ஏனென்றால், லோத்தின் மனைவிக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவள் தன் குடும்பத்தாருடன் சோதோமைவிட்டு ஓடிப் போகையில் கீழ்ப்படியாமல் திரும்பிப் பார்த்ததினால் உப்புத்தூண் ஆனாள்.—ஆதியாகமம் 19:17, 26-ஐ வாசியுங்கள்.
2. லோத்தின் மனைவி ஏன் திரும்பிப் பார்த்திருக்கலாம், கீழ்ப்படியாததால் அவளுக்கு என்ன நேரிட்டது?
2 ஆனால், லோத்தின் மனைவி ஏன் திரும்பிப் பார்த்தாள்? என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத் துடிப்பினாலா? நம்பிக்கை இல்லாததினாலா? அல்லது, சோதோமில் விட்டுவந்த பொருள்கள் மீதிருந்த ஏக்கத்தினாலா? (லூக். 17:31) அவள் எதற்காகத் திரும்பிப் பார்த்திருந்தாலும் சரி, கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் தக்க தண்டனையைப் பெற்றாள். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்—சோதோம் கொமோராவில் வாழ்ந்த நெறிகெட்ட மனிதர்கள் இறந்துபோன அதே நாளில் அவளும் இறந்துபோனாள். அப்படியானால், “லோத்தின் மனைவியை நினைத்துப் பாருங்கள்” என்று இயேசு சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
3. நாம் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதை இயேசு எப்படி வலியுறுத்தினார்?
3 விட்டுவந்த காரியங்களை நாமும்கூட திரும்பிப் பார்க்கக் கூடாது, அதாவது அவற்றைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கக் கூடாது. தம் சீடராய் ஆக விரும்பிய ஒருவனிடம் இயேசு இதைத்தான் வலியுறுத்தினார். முதலில் வீட்டாரிடமிருந்து விடைபெற்று வர அவன் அனுமதி கேட்டபோது இயேசு அவனிடம், “கலப்பையின் மேல் கை வைத்த பிறகு, பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்கிற எவனும் கடவுளுடைய அரசாங்கத்திற்குத் தகுதி இல்லாதவன்” என்று சொன்னார். (லூக். 9:62) இயேசுவின் பதில் கடுமையாகவோ நியாயமில்லாமலோ இருந்ததா? இல்லை, காலம் தாழ்த்தத்தான்... பொறுப்பைத் தட்டிக்கழிக்கத்தான்... அவன் சாக்குப்போக்கு சொன்னான் என்பதை அவர் அறிந்திருந்தார். இப்படிக் காலம் தாழ்த்துவதைத்தான் ‘பின்னால் இருப்பவற்றை’ திரும்பிப் பார்ப்பதற்கு இயேசு ஒப்பிட்டார். ஒருவன் உழுதுகொண்டே சற்றுத் திரும்பிப் பார்ப்பதிலோ உழுவதை ஒரேயடியாக நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்ப்பதிலோ ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? எப்படிச் செய்தாலும் அவனுடைய கவனம் திசைதிரும்பிவிடுகிறது; இதனால், அவனுடைய வேலையே பாழாகலாம்.
4. எதன்மீது நம் கவனத்தைப் பதிக்க வேண்டும்?
4 பின்னால் விட்டு வந்ததைத் திரும்பிப் பார்ப்பதற்குப் பதிலாக, முன்னால் இருப்பவற்றின் மீது நம் கவனத்தைப் பதிக்க வேண்டும். இதைப் பற்றி நீதிமொழிகள் 4:25 (NW) தெளிவாகச் சொல்வதைக் கவனியுங்கள்: “உன் கண்கள் நேராகப் பார்க்கட்டும்; ஒளிவீசும் உன் கண்கள் நேராக இருப்பதை உற்றுக் கவனிக்கட்டும்.”
5. பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்காதிருக்க நமக்கு என்ன காரணம் இருக்கிறது?
5 பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்காதிருக்க நமக்கு நியாயமான காரணம் இருக்கிறது. ஏன்? நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம். (2 தீ. 3:1) அன்று பொல்லாத இரண்டு நகரங்கள்தான் அழிந்தன, இன்றோ இந்தப் பொல்லாத உலகமே ஒட்டுமொத்தமாக அழியப்போகிறது. லோத்தின் மனைவிக்கு ஏற்பட்ட கதி நமக்கு ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்? நம்மை ஆசையாகத் திரும்பிப் பார்க்கத் தூண்டுகிற சில காரியங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். (2 கொ. 2:11) அவை என்ன, அவற்றின் மீது கண்களைப் பதிக்காதிருக்க நாம் என்ன செய்யலாம் என்பதை இப்போது சிந்திப்போம்.
‘அதெல்லாம் வசந்த காலம்’ என்ற எண்ணம்
6. கடந்த கால சம்பவங்கள் எல்லாமே ஏன் நமக்கு ஞாபகம் இருக்காது?
6 முன்பு நம் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது என்று நாம் நினைக்கலாம். ஆனால், கடந்த காலம் உண்மையில் எப்படியிருந்தது என்பது நமக்கு எப்போதுமே ஞாபகம் இருக்காது. நம்மை அறியாமலேயே, கடந்த கால பிரச்சினைகளை நாம் குறைத்து மதிப்பிடலாம், நாம் முன்பு அதிக சந்தோஷமாக இருந்ததாகத் தப்புக்கணக்குப் போடலாம்; மொத்தத்தில், கடந்த காலத்தை வசந்த காலமாக எண்ணிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட தவறான நினைவுகள் கடந்த காலத்தை எண்ணி ஏங்கச் செய்யலாம். ஆனால், “‘இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?’ என்று கேட்காதே; இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (பிர. 7:10, பொது மொழிபெயர்ப்பு) இப்படிப்பட்ட மனோபாவம் ஏன் மிகவும் ஆபத்தானது?
7-9. (அ) எகிப்திலே இஸ்ரவேலருக்கு என்ன நடந்தது? (ஆ) என்ன காரணங்களுக்காக இஸ்ரவேலர் ஆனந்தப்பட்டார்கள்? (இ) எதைக் குறித்து இஸ்ரவேலர் முறுமுறுக்கவும் முறையிடவும் ஆரம்பித்தார்கள்?
7 எகிப்து தேசத்தில் இஸ்ரவேலருக்கு நடந்ததைக் கவனியுங்கள். ஆரம்பத்தில் எகிப்தியர் அவர்களை விருந்தினர்போல் நடத்தினார்கள் என்பது உண்மைதான்; ஆனால், யோசேப்பின் காலத்திற்குப் பிறகு, “கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலைவாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர்.” (யாத். 1:11, பொ.மொ.) இஸ்ரவேலர் பெருகுவதைக் கண்ட பார்வோன் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்கப் பார்த்தான். அதற்காக, இஸ்ரவேலரின் ஆண் குழந்தைகளைக் கொலை செய்யக்கூட ஆணையிட்டான். (யாத். 1:15, 16, 22) எனவே, “எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” என்று யெகோவா மோசேயிடம் சொன்னதில் ஆச்சரியம் ஏதுமில்லை.—யாத். 3:7, பொ.மொ.
8 இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகிச் சென்றபோது பெற்ற சந்தோஷத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கர்வம் பிடித்த பார்வோன் மீதும் அவனுடைய மக்கள் மீதும் யெகோவா பத்து வாதைகளைக் கொண்டுவந்தபோது அவருடைய வல்லமையை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். (யாத்திராகமம் 6:1, 6, 7-ஐ வாசியுங்கள்.) கடைசியில், இஸ்ரவேலர் விடுதலையாகிச் செல்ல எகிப்தியர் அனுமதித்தது மட்டுமல்லாமல், சீக்கிரமாகப் புறப்பட்டுப் போகச் சொல்லியும் அவசரப்படுத்தினார்கள்; அதோடு, இஸ்ரவேலர் “எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் எக்கச்சக்கமான தங்கத்தையும் வெள்ளியையும் கொடுத்து அனுப்பினார்கள். (யாத். 12:33-36) பிற்பாடு, பார்வோனும் அவனுடைய படைவீரர்களும் சிவந்த சமுத்திரத்தில் ஜலசமாதியானதை இஸ்ரவேலர் கண்டபோது ஆனந்தப்பட்டார்கள். (யாத். 14:30, 31) இப்படிப்பட்ட... மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்களைக் கண்கூடாகப் பார்த்தது அவர்களுடைய விசுவாசத்தை எந்தளவு பலப்படுத்தியிருக்கும்!
9 ஆனால், அற்புதமாய் விடுதலையான கொஞ்ச நாட்களிலேயே இதே மக்கள் முறுமுறுக்கவும் முறையிடவும் ஆரம்பித்தார்கள். எதைக் குறித்து? அற்ப உணவைக் குறித்து! யெகோவா கொடுத்த உணவில் திருப்தியடையாமல் இவ்வாறு குறைகூறினார்கள்: ‘நாம் எகிப்திலே செலவில்லாமல் சாப்பிட்ட மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே.’ (எண். 11:5, 6) ஆம், கடந்த காலம் உண்மையில் எப்படியிருந்தது என்பது அவர்களுக்கு ஞாபகம் இல்லை. அது அதிக சந்தோஷமாக இருந்ததாய் தப்புக்கணக்குப் போட்டார்கள். எனவே, தாங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்திற்கே திரும்பிப் போக ஆசைப்பட்டார்கள்! (எண். 14:2-4) அவர்கள் தாங்கள் விட்டு வந்தவற்றைத் திரும்பிப் பார்த்ததால், யெகோவாவின் தயவை இழந்தார்கள்.—எண். 11:10.
10. இஸ்ரவேலரது உதாரணம் நமக்கு என்ன பாடத்தைப் புகட்டுகிறது?
10 இன்று நமக்கென்ன பாடம்? கஷ்டங்களும் பிரச்சினைகளும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போது, கடந்த காலத்தில்... அதாவது சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னான காலத்தில்... அனுபவித்த காரியங்களை ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கக் கூடாது. கடந்த கால படிப்பினைகளை அல்லது இனிய நினைவுகளை எண்ணிப் பார்ப்பதில் தவறில்லை. என்றாலும், நமக்குச் சமநிலையான... எதார்த்தமான... கண்ணோட்டம் தேவை. இல்லாவிட்டால், நம்முடைய தற்போதைய சூழ்நிலைமைகளைக் குறித்து அதிருப்தியடைந்து, பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பிப் போகத் தூண்டப்படுவோம்.—2 பேதுரு 2:20-22-ஐ வாசியுங்கள்.
முன்பு நாம் செய்த தியாகங்கள்
11. கடந்த காலத்தில் செய்த தியாகங்களைச் சிலர் எப்படிக் கருதுகிறார்கள்?
11 கடந்த காலத்தில் செய்த தியாகங்களைச் சிலர் எண்ணிப் பார்த்து, ‘பொன்னான வாய்ப்புகளை நான் நழுவ விட்டுவிட்டேனோ?’ என ஏங்குவது வருத்தத்தை அளிக்கிறது. உயர் கல்வி கற்க, பேரும் புகழும் சம்பாதிக்க, சொத்து சுகங்களைச் சேர்க்க உங்களுக்கு வாய்ப்புகள் இருந்திருக்கலாம், என்றாலும் அவற்றை நாடாமலிருக்க நீங்கள் தீர்மானித்திருக்கலாம். நம்முடைய சகோதர சகோதரிகளில் அநேகர் வியாபாரம், பொழுதுபோக்கு, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் கிடைத்த உயர் பதவிகளை உதறிவிட்டு வந்திருக்கிறார்கள். இப்போது ரொம்ப காலம் ஆகியும் முடிவு இன்னும் வரவில்லை என அவர்கள் நினைக்கலாம். ‘நான் அந்தத் தியாகங்களைச் செய்யாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என நீங்கள் யோசிக்கிறீர்களா?
12. தான் விட்டுவந்த காரியங்களைக் குறித்து பவுல் எப்படி உணர்ந்தார்?
12 கிறிஸ்துவின் சீடராவதற்காக அப்போஸ்தலன் பவுல் அநேக தியாகங்களைச் செய்தார். (பிலி. 3:4-6) தான் விட்டுவந்த காரியங்களைக் குறித்து அவர் எப்படி உணர்ந்தார்? அவரே நமக்குச் சொல்கிறார்: “நான் லாபமென்று கருதியவற்றைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று கருதுகிறேன்.” ஏன்? “என் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டமென்று கருதுகிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றிருக்கிறேன்; கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்” என்றார்.a (பிலி. 3:7, 8) குப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்ட ஒருவர் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகப் புலம்ப மாட்டார். அதுபோல, உலகத்தில் விட்டுவந்த வாய்ப்புகளை எண்ணி பவுல் வருந்தவும் இல்லை, அவற்றை மதிப்புமிக்கவையாகக் கருதவும் இல்லை.
13, 14. பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
13 “பொன்னான வாய்ப்புகளை” இழந்துவிட்டதாக நாம் நினைக்க ஆரம்பித்திருந்தால் அந்த நினைப்பை விட்டொழிக்க என்ன செய்ய வேண்டும்? பவுலுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். எப்படி? தற்போது நீங்கள் பெற்றுள்ள பாக்கியங்கள் எவ்வளவு மதிப்புவாய்ந்தவை என்பதை எண்ணிப் பாருங்கள். யெகோவாவுடன் ஓர் அருமையான பந்தத்தைப் பெற்றிருக்கிறீர்கள், அவரிடம் நல்ல பெயரைச் சம்பாதித்திருக்கிறீர்கள். (எபி. 6:10) இந்த உலகம் வாரி வழங்கும் பொருள்கள் எங்கே, நாம் இப்போது அனுபவிக்கிற... எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகிற... ஆன்மீக ஆசீர்வாதங்கள் எங்கே?—மாற்கு 10:28-30-ஐ வாசியுங்கள்.
14 அடுத்ததாக, தொடர்ந்து உண்மையுடன் இருக்க உதவும் ஒன்றைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். “பின்னானவற்றை மறந்து, முன்னானவற்றை எட்டிப்பிடிக்க நாடி . . . ஓடுகிறேன்” என அவர் கூறுகிறார். (பிலி. 3:13, 14) இங்கே பவுல் இரண்டு படிகளைச் சிறப்பித்துக் காட்டுவதைக் கவனியுங்கள்; இரண்டுமே முக்கியமானவை. முதலாவதாக, பின்னானவற்றை நாம் மறக்க வேண்டும், அவற்றைக் குறித்து சதா யோசித்துக்கொண்டு நம்முடைய பொன்னான நேரத்தையும் சக்தியையும் வீணாக்கிவிடக் கூடாது. இரண்டாவதாக, எல்லைக்கோட்டைத் தொடப் போகும் ஓட்டப்பந்தய வீரரைப் போல, முன்னால் இருப்பவற்றின் மீது கண்களைப் பதியவைத்து அவற்றை நோக்கி ஓட வேண்டும்.
15. கடவுளுடைய உண்மை ஊழியர்களின் உதாரணங்களைத் தியானிக்கும்போது என்ன பலனைப் பெறலாம்?
15 கடவுளுடைய உண்மை ஊழியர்களின் அன்றைய... இன்றைய... உதாரணங்களைத் தியானித்துப் பார்க்கும்போது பின்னானவற்றைத் திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கிச் செல்லத் தேவையான ஊக்கத்தைப் பெறலாம். உதாரணத்திற்கு, ஆபிரகாமும் சாராளும் ஊர் நகரத்தைப் பற்றிச் சதா நினைத்துக் கொண்டே இருந்திருந்தால், “திரும்பிப்போக அவர்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.” (எபி. 11:13-15) ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அதேபோல, மோசேயும் எகிப்திலிருந்த எந்தவொரு இஸ்ரவேலனும் பிற்பாடு விட்டு வந்ததைவிட, அவர் விட்டுவந்தவை மிக மிக அதிகம். ஆனாலும், அவற்றையெல்லாம் அவர் ஏக்கத்தோடு எண்ணிப் பார்த்ததாக எந்தப் பதிவும் இல்லை. மாறாக, “எகிப்தின் பொக்கிஷங்களைவிட, கடவுளால் நியமிக்கப்படுவதன் பொருட்டு வரும் அவதூறையே மேலான செல்வமென்று கருதி, தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்” என்று பைபிள் சொல்கிறது.—எபி. 11:26.
முன்பு நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்
16. கடந்த கால அனுபவங்கள் நம்மை எப்படிப் பாதிக்கலாம்?
16 கடந்த கால அனுபவங்கள் எல்லாமே நம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்காது. உதாரணத்திற்கு, கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து நாம் கவலையில் மூழ்கிப்போகலாம். (சங். 51:3) அல்லது, நமக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான அறிவுரை தேள் கொட்டியதைப் போல் இன்னமும் வலிக்கலாம். (எபி. 12:11) நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அல்லது இழைக்கப்பட்டதாகத் தோன்றுகிற அநீதிகள் நம் மனதை வாட்டி வதைக்கலாம். (சங். 55:2) இப்படிப்பட்ட அனுபவங்கள் பின்னானவற்றின் மீது நம் மனதைத் திருப்பாமலிருக்க என்ன செய்யலாம்? மூன்று உதாரணங்களைக் கவனியுங்கள்.
17. (அ) “பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிக அற்பமானவன்” என்று ஏன் பவுல் குறிப்பிட்டார்? (ஆ) குற்றவுணர்வில் அமிழ்ந்துவிடாதிருக்க பவுலுக்கு எது உதவியது?
17 கடந்த கால தவறுகள். “பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிக அற்பமானவன்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபே. 3:8) தன்னைப் பற்றி ஏன் அப்படி உணர்ந்தார்? ‘கடவுளுடைய சபையைத் துன்புறுத்தியதால்’ அப்படி உணர்ந்தார். (1 கொ. 15:9) தான் துன்புறுத்தியவர்களில் சிலரை பவுல் மீண்டும் சந்தித்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? என்றாலும், குற்றவுணர்வில் அமிழ்ந்துவிடுவதற்குப் பதிலாக, கடவுள் தனக்குக் காட்டிய அளவற்ற கருணைமீது மனதை ஒருமுகப்படுத்தினார். (1 தீ. 1:12-16) அதனால் உண்டான நன்றியுணர்வு ஊழியத்தில் ஊக்கமாய் ஈடுபட அவரைத் தூண்டியது. பவுல் அடியோடு மறக்க நினைத்த காரியங்களில் அவர் செய்த தவறுகளும் அடங்கும். யெகோவா நம்மிடம் காட்டியிருக்கிற இரக்கத்தை நாமும் எண்ணிப்பார்த்தால், மாற்ற முடியாத பழைய சம்பவங்களை நினைத்துக் கவலைப்பட்டு நம் சக்தியையெல்லாம் இழந்துவிடாதிருப்போம். மாறாக, அந்தச் சக்தியை ஊழியத்தில் செலவிடுவோம்.
18. (அ) நாம் அறிவுரை பெற்றதை வெறுப்புடன் நினைத்துப் பார்த்தால் என்ன நடக்கலாம்? (ஆ) அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், எப்படி சாலொமோனின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கலாம்?
18 கடுமையான அறிவுரை. நாம் அறிவுரை பெற்றதை வெறுப்புடன் நினைத்துப் பார்த்தால் என்ன நடக்கலாம்? அது வேதனை அளிக்கலாம், கோபத்தைக் கிளறலாம், அல்லது நம்மைச் சோர்ந்துபோகச் செய்யலாம். (எபி. 12:5) அறிவுரையை உடனடியாக நாம் புறக்கணித்தாலும் சரி, அப்போதைக்கு ஏற்றுக்கொண்டு பிற்பாடு புறக்கணித்தாலும் சரி, விளைவு ஒன்றுதான். அதாவது, அறிவுரையிலிருந்து பயனடைய மாட்டோம். ஆகவே, “புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்” என்ற சாலொமோனின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பது எவ்வளவு மேல்! (நீதி. 4:13) சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாளக் குறியீடுகளுக்குக் கவனம் செலுத்துகிற டிரைவரைப் போல, அறிவுரைகளை ஏற்று, அவற்றிற்குக் கீழ்ப்படிந்து, முன்னோக்கிச் செல்வோமாக.—நீதி. 4:26, 27; எபிரெயர் 12:12, 13-ஐ வாசியுங்கள்.
19. விசுவாசம் வைப்பதில் ஆபகூக் மற்றும் எரேமியாவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
19 நமக்கு இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்பட்டதாகத் தோன்றுகிற அநீதிகள். நீதி கேட்டு யெகோவாவிடம் முறையிட்ட ஆபகூக் தீர்க்கதரிசியைப் போல சில சமயங்களில் நாம் உணரலாம்; அநீதியான செயல்கள் நடக்க யெகோவா ஏன் அனுமதித்தார் என்பது புரியாமல் அவர் தவித்தார். (ஆப. 1:2, 3) என்றாலும், ‘நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்’ என்று சொல்லி யெகோவாவின் மீது விசுவாசத்தை வெளிக்காட்டினார்; ஆபகூக்கின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்! (ஆப. 3:18) விசுவாசத்திற்கு மற்றொரு முன்மாதிரி எரேமியா. அவரைப் போல் நாமும் நீதியின் கடவுளான யெகோவாமீது முழு விசுவாசம் வைத்து, ‘காத்திருக்கும் மனப்பான்மையை’ காட்டினால், ஏற்ற சமயத்தில் எல்லாம் சரிசெய்யப்படும் என்ற உறுதியோடு இருக்கலாம்.—புல. 3:19-24.
20. ‘லோத்தின் மனைவியை நினைத்துப் பார்க்கிறோம்’ என்று எப்போது சொல்ல முடியும்?
20 மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். பூரிப்பளிக்கும் சம்பவங்கள் இப்போது நடந்து வருகின்றன, எதிர்காலத்தில் இன்னும் பல நடக்கப் போகின்றன. நாம் ஒவ்வொருவரும் யெகோவாவின் அமைப்புடன் சேர்ந்து முன்னோக்கிச் செல்வோமாக. எனவே, முன்னோக்கிப் பாருங்கள்... பின்னானவற்றைப் பார்க்காதீர்கள்... என்ற பைபிளின் அறிவுரைக்குக் கீழ்ப்படிவோமாக. அப்போதுதான், ‘லோத்தின் மனைவியை நினைத்துப் பார்க்கிறோம்’ என்று சொல்ல முடியும்!
[அடிக்குறிப்பு]
a “குப்பை” என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்குரிய மூலச்சொல், “நாய்களுக்குத் தூக்கிப் போடப்படும் ஒன்றையும்,” “சாணத்தையும்,” “மலத்தையும்”கூட அர்த்தப்படுத்தலாம். “வெறும் குப்பையாகக் கருதுகிறேன்” என்று பவுல் சொன்னபோது, “வீணானவற்றை, வெறுக்கத்தக்கவற்றை அடியோடு விட்டுவிலக உறுதிபூண்டிருப்பதை, மறுபடியும் பார்க்கக்கூட விரும்பாமல் இருப்பதை” அர்த்தப்படுத்தியதாக பைபிள் அறிஞர் ஒருவர் சொல்கிறார்.