சுயநீதியைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்!
முதல் நூற்றாண்டில், கடவுளின் நீதியுள்ள வணக்கத்தாராக இருக்கும் நற்பெயரை பரிசேயர்கள் அனுபவித்தார்கள். அவர்கள் வேதவசனங்களை உள்ளார்வத்துடன் படிக்கும் மாணவர்களாக இருந்தார்கள்; அடிக்கடி ஜெபித்தார்கள். கருணையும் நியாயத்தன்மையும் உள்ளவர்களென சில மக்கள் அவர்களைக் கருதினார்கள். யூத சரித்திராசிரியராகிய ஜோஸிஃபஸ் எழுதினார்: “பரிசேயர்கள் ஒருவருக்கொருவர் பாசமுள்ளவர்களாகவும், சமூகத்திலுள்ளவர்களுடன் சுமூகமான உறவுகளை வளர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.” அந்தச் சமயத்திலிருந்த யூத சமுதாயத்திலேயே மிகவும் மதிக்கப்பட்டவர்களாகவும் உயர்வாகப் போற்றப்பட்டவர்களாகவும் அவர்கள் இருந்திருக்கக்கூடும் என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!
என்றபோதிலும், “பரிசேயரைப் போன்ற” என்ற வார்த்தையும் அதையொத்த பதங்களும் இழிவானவையாக, புனிதத் தோற்றமுடைய, சுயநீதியுள்ள, எல்லாரையும்விட ஒழுக்கத்தில் சிறந்த, அளவுக்கதிக பக்தியுள்ள, உதட்டளவு சேவை செய்கிற என்பது போன்ற பதங்களுடன் ஒத்த பொருளுடையவையாய் பயன்படுத்தப்படுகின்றன. பரிசேயர்கள் ஏன் தங்கள் நற்பெயரை இழந்தனர்?
ஏனென்றால், பெரும்பாலான யூதர்களைப் போலில்லாமல், இயேசு பரிசேயர்களின் வெளித்தோற்றத்தால் ஏமாற்றப்படவில்லை. ‘புறம்பே அலங்காரமாய்க் காணப்பட்டு, உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு’ அவர் அவர்களை ஒப்பிட்டார்.—மத்தேயு 23:27.
பொது இடங்களில் நின்றுகொண்டு அவர்கள் நீண்ட ஜெபங்களைச் செய்தார்கள் என்பது உண்மையே; ஆனால் இயேசு சொன்னதுபோல, இது மற்றவர்களால் காணப்படுவதற்காகவே செய்யப்பட்டது. அது வெறும் ஒரு ஏமாற்று நடிப்பாகவே இருந்தது. அவர்கள் விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும் விரும்பினார்கள். எல்லா யூதர்களும் தங்கள் வஸ்திரத் தொங்கல்களைக் கொண்டிருக்க வேண்டியிருந்தாலும், அளவுக்கதிகமாக நீண்ட தொங்கல்களை அணிவதன்மூலம் பரிசேயர்கள் மக்களைக் கவர முயன்றார்கள். தாயத்துகள் போல் அணியப்பட்ட வேதவசனங்களைக் கொண்டிருக்கும் பெரிதாக்கப்பட்ட பேழைகளை மற்றவர்கள் காணும்படி அணிந்திருப்பதில் பெருமைப்பட்டார்கள். (மத்தேயு 6:5; 23:5-8) அவர்களுடைய மாய்மாலம், அவர்களுடைய பேராசை, அவர்களுடைய ஆணவம் ஆகியவை முடிவில் அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தன.
பரிசேயரைக் கடவுள் நிராகரித்திருப்பதை இயேசு எடுத்துக்கூறினார்: “மாயக்காரரே, உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.” (மத்தேயு 15:7-9) அவர்களுடைய நீதி உண்மையிலேயே சுயநீதியாக இருந்தது. புரிந்துகொள்ளத்தக்கவிதமாகவே, இயேசு தம்முடைய சீஷர்களை எச்சரித்தார்: “பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 12:1) இன்று, நாமும் சுயநீதியைக் குறித்து ‘எச்சரிக்கையாய்’ இருக்கவேண்டும் அல்லது மத சம்பந்தமான மாய்மாலக்காரராவதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, ஒரே இரவில் ஒருவர் சுயநீதியுள்ளவராக ஆவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். மாறாக, அந்த மனச்சாய்வு ஒரு காலப்பகுதியில் படிப்படியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அறியாமலேயேகூட ஒருவர் பரிசேயர்களின் விரும்பத்தகாத பண்புகளைப் பெறலாம்.
உயர்வு மனப்பான்மை
நாம் ‘எச்சரிக்கையாய்’ இருக்கவேண்டிய சில பண்புகள் யாவை? சுயநீதியுள்ள நபர்கள் வழக்கமாக “தாங்கள் ஒருபோதும் ஒரு தவறையும் செய்யவில்லை என்பதுபோல் பேசுகிறார்கள், நிற்கிறார்கள், நோக்குகிறார்கள்,” என்பதாக மதம் மற்றும் நன்னெறிகளின் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) விவரிக்கிறது. சுயநீதியுள்ளவர்கள் தற்பெருமையுள்ளவர்களாகவும் தங்களை மேம்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள்; பரிசேயர்களிடம் இதுவே பெரிய பிரச்சினையாக இருந்தது.
பரிசேயர்களுக்குரிய இந்த மனப்பான்மையை இயேசு ஒரு உவமையின் மூலமாகச் சித்தரித்தார்: “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும் இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்.” இதற்கு நேர்மாறாக அந்த ஆயக்காரன் மனத்தாழ்மையுடன் தன் குறைகளை ஒத்துக்கொண்டு, தற்பெருமையுள்ள பரிசேயனைவிட அதிக நீதிமானாக நிரூபித்தான். “தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின”வர்களிடம் இயேசு இந்த உவமையைச் சொன்னார்.—லூக்கா 18:9-14.
அபூரண மனிதராக இருப்பதால், நம்முடைய இயல்பான திறமைகள் அல்லது நன்மைகளின் காரணமாக அவ்வப்போது நாம் மற்றவர்களைவிட மேம்பட்டவர்களாக உணரக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட எண்ணங்களை கிறிஸ்தவர்கள் உடனடியாக மனதைவிட்டு அகற்றிவிடவேண்டும். கிறிஸ்தவ வாழ்வில் நீங்கள் அநேக வருட அனுபவத்தைக் கொண்டிருக்கக்கூடும். நீங்கள் ஒரு திறம்பட்ட பைபிள் போதகராக இருக்கக்கூடும். அல்லது ஒருவேளை பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்வதற்காக அபிஷேகம் செய்யப்பட்டவராக உரிமைபாராட்டலாம். சபையிலுள்ள சிலர் முழுநேர ஊழியர்கள், மூப்பர்கள், அல்லது உதவி ஊழியர்கள் என்று விசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கின்றனர். ‘யெகோவா எனக்குக் கொடுத்திருப்பவற்றை, மற்றவர்களிலிருந்து உயர்வானவர் என்று உணருவதற்காக அடிப்படையாகப் பயன்படுத்தினால் அவர் எப்படி உணருவார்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாகவே இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.—பிலிப்பியர் 2:3, 4.
கடவுளால் கொடுக்கப்பட்ட திறமைகள், சிலாக்கியங்கள், அல்லது அதிகாரத்தின் காரணமாக ஒரு கிறிஸ்தவன் உயர்வு மனப்பான்மையை வெளிக்காட்டும்போது, அவன் உண்மையில் கடவுளுக்கே உரித்தான மகிமையையும் புகழையும் அவரிடமிருந்து திருடுகிறான். ஒரு கிறிஸ்தவன் “தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்” இருக்கும்படி பைபிள் தெளிவாக அறிவுரை கூறுகிறது. அது நம்மை இவ்வாறு தூண்டுகிறது: “ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.”—ரோமர் 12:3, 16.
“தீர்ப்பு செய்யாதிருங்கள்”
பைபிள் கலைக்களஞ்சியம் ஒன்றின்படி, சுயநீதியுள்ள ஒருவர், “சட்டப்பூர்வமான தேவைகளை அவற்றின் நிஜமான உள்நோக்கைப் பொருட்படுத்தாமல், இம்மியும் பிசகாமல் கடைப்பிடிப்பதன் காரணமாக, ஒழுக்கரீதியில் நேர்மையாய் இருப்பதாக அல்லது கடவுளுடன் சரியான நிலைநிற்கையில் இருப்பதாகத் தன்னைத்தானே கருதுகிறார்.” “மற்றவர்களின் துன்மார்க்கத்தைக் கண்டுபிடிப்பதற்காகவே தங்கள் நேரத்தை எல்லாம் செலவிடும் அளவுக்கதிகமான மதப்பற்றுள்ள மக்கள்” சுயநீதியுள்ளவர்கள் என்று மற்றொரு இலக்கிய படைப்பு விளக்குகிறது.
பரிசேயர்கள் இந்தக் குற்றத்தை உடையவர்களாய் இருந்தனர். காலப்போக்கில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அவர்களுடைய சட்டங்கள், கடவுளுடைய சட்டங்கள் மற்றும் நியமங்களைவிட அதிக முக்கியமானவையாகத் தோன்றின. (மத்தேயு 23:23; லூக்கா 11:41-44) அவர்கள் தங்களையே நியாயாதிபதிகளாக நியமித்துக்கொண்டு, தங்களுடைய சுயநீதியுள்ள தராதரங்களைக் கடைப்பிடிக்காத எவரையும் கண்டனம் செய்யும் மனச்சாய்வைக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உயர்வு மனப்பான்மையும் மிகைப்பட்ட தன்மதிப்பும், மற்ற மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தேவையை ஏற்படுத்தின. இயேசுவைக் கட்டுப்படுத்த அவர்கள் திறமையற்றவர்களாக இருந்தது, அவர்களைச் சீற்றமடையச் செய்தது; ஆகவே அவருடைய கொலைக்காக சதி செய்தனர்.—யோவான் 11:47-53.
தன்னைத்தானே ஒரு நியாயாதிபதியாக ஏற்படுத்திக்கொண்டு, எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் கூர்ந்து ஆராய்ந்துகொண்டும் காவல்செய்துகொண்டும் இருக்கும் ஒருவர் மத்தியில் இருப்பது எவ்வளவு வருத்தமூட்டுவதாக இருக்கிறது. உண்மையில், சபையிலுள்ள எவரும் தன் சொந்தக் கருத்துக்களை அல்லது சுயமாக உருவாக்கப்பட்ட சட்டங்களை மற்றவர்கள்மீது சுமத்தும் அதிகாரத்தை உடையவர்களாய் இல்லை. (ரோமர் 14:10-13) தினசரி வாழ்க்கையில் பல அம்சங்கள் தனிப்பட்டவர்களாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டியவை என்பதை சமநிலையுள்ள கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். விசேஷமாக, பரிபூரணத்தை எதிர்பார்க்கிற மற்றும் அதிகத்தைக் கேட்கிற மனச்சாய்வுள்ளவர்கள், மற்றவர்களைத் தீர்ப்புச்செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் சுமூகமான செயல்பாட்டிற்கு உதவும் வழிகாட்டுக்குறிப்புகளைக் கொண்டிருப்பதற்கு கிறிஸ்தவ சபை அதிகாரமுடையதாய் இருக்கிறது என்பது உண்மைதான். (எபிரெயர் 13:17) ஆனால் சிலர் இந்த வழிகாட்டுக்குறிப்புகளைப் புரட்டியிருக்கிறார்கள் அல்லது தங்கள் சொந்த சட்டங்களைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரு பகுதியில், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் உள்ள மாணாக்கர் அனைவரும் ஒரு பேச்சைக் கொடுக்கும்போது ஸூட்டுகளை அணிந்து தங்கள் கோட் பட்டன்களை போட்டுக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் ஒரு மாணவர், எதிர்காலத்தில் பேச்சுக் கொடுப்பதற்கு தகுதியற்றவராக்கப்படுவார் என்றிருந்தது. அப்படிப்பட்ட கண்டிப்பான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு மாறாக, தேவைக்கேற்ப தயவான, தனிப்பட்ட வழிநடத்துதலைக் கொடுப்பது அதிக நியாயமானதாகவும் கடவுளுடைய வார்த்தையின் உள்நோக்கிற்கு இசைவானதாகவும் இருக்கும் அல்லவா?—யாக்கோபு 3:17.
ஒரு கிறிஸ்தவர் அநேக தனிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தால், அவர் ஆவிக்குரிய விதத்தில் குறைவுபட்டவராக இருக்க வேண்டும் என்ற கருத்தையுங்கூட சுயநீதி முன்னேற்றுவிக்கக்கூடும். சுயநீதியுள்ள எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகியோர் உண்மையுள்ள யோபைப் பற்றி சரியாக அவ்வாறே நினைத்தனர். நிலைமையைப் பற்றி அவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை; அவ்வாறிருக்கையில் யோபு தவறு செய்ததாகக் குற்றஞ்சாட்டியது அவர்களுடைய பாகத்தில் அகந்தையைக் குறித்தது. யோபின் சோதனைகளைக் குறித்து அவர்கள் தவறாகப் புரட்டியவிதத்தில் எடைபோட்டதற்காக யெகோவா அவர்களைச் சிட்சித்தார்.—யோபு 4, 5, 8, 11, 18, 20-ம் அதிகாரங்களைக் காண்க.
தவறாக வழிநடத்தப்பட்ட வைராக்கியம்
சுயநீதி மற்றும் வைராக்கியம் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மத சார்பான மனச்சாய்வைக் கொண்டிருக்கும் யூதர்களைக் குறித்து ‘தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்,’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோமர் 10:2, 3) ஒரு பரிசேயனாக, பவுல்தானே, தன்னுடைய வைராக்கியம் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் யெகோவாவின் நீதியின் அடிப்படையில் இல்லாததாகவும் இருந்தபோதிலும், அளவுக்கதிகமான வைராக்கியமுள்ளவராக இருந்தார்.—கலாத்தியர் 1:13, 14; பிலிப்பியர் 3:6.
பொருத்தமாகவே பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?” (பிரசங்கி 7:16) ஒரு சபையில் ஒரு கிறிஸ்தவர் நேர்மையுடன் தொடங்கக்கூடும், ஆனால் அவருடைய நேர்மையும் வைராக்கியமும் சுயநீதியாக உருவெடுக்கலாம். யெகோவாவின் நீதிக்கு மாறாக மனித ஞானத்தால் வழிநடத்தப்படும்போது, மத வைராக்கியம் மற்றவர்களைப் புண்படுத்தலாம். எப்படி?
உதாரணமாக, பெற்றோர், மற்றவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைக் கவனிப்பதில் மிகவும் ஈடுபட்டவர்களாக ஆகக்கூடும்; அவ்வாறு செய்கையில் தங்கள் சொந்த குடும்பத்தின் தேவைகளைக் கவனியாமல் விடக்கூடும். அல்லது பெற்றோர் அளவுக்கதிகமாக வைராக்கியமுள்ளவர்களாக இருப்பதால், ஒருவேளை அவர்கள் பிள்ளைகளால் செய்ய முடிவதற்கும் அதிகத்தைக் கேட்கக்கூடும். (எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21) சில பிள்ளைகள், அப்படிப்பட்ட நியாயமற்ற எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல், இரட்டை வாழ்க்கை நடத்துவதன்மூலம் பிரதிபலிக்கிறார்கள். நியாயத்தன்மையுள்ள பெற்றோர் ஒருவர், தன் குடும்பத்தின் வரையறைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, பொருத்தமான சரிப்படுத்தல்களைச் செய்துகொள்வார்.—ஆதியாகமம் 33:12-14-ஐ ஒப்பிடுக.
மற்றவர்களுடன் தொடர்புகொள்கையில் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற சாதுரியம், ஒற்றுணர்வு, கனிவு ஆகியவற்றையும் மிதமிஞ்சிய வைராக்கியம் இழக்கச்செய்யும். ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக ஒருவர் மிகக் கடினமாக உழைக்கக்கூடும். என்றபோதிலும், அவருடைய மிதமிஞ்சிய வைராக்கியமான போக்கு அநேகரைப் புண்படுத்தக்கூடும். பவுல் சொன்னார்: “நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.”—1 கொரிந்தியர் 13:2, 3.
தாழ்மையுள்ளவர்களைக் கடவுள் ஆதரிக்கிறார்
சுயநீதியின் அச்சுறுத்தலை, அது உருவெடுக்கும் முன்னரே கிறிஸ்தவர்களாகிய நாம் அடையாளங்காண்பது அவசியம். உயர்வு மனப்பான்மை, மற்றவர்களை நியாயந்தீர்ப்பது, மனித ஞானத்தின்மீது சார்ந்த குருட்டுத்தனமான வைராக்கியம் ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.
பரிசேயருக்குரிய மனப்பான்மைகளைக் குறித்து நாம் ‘எச்சரிக்கையாய்’ இருக்கையில், மற்றவர்களை சுயநீதியுள்ளவர்களென தீர்ப்பு செய்வதற்குப் பதிலாக, நம் சொந்த மனச்சாய்வுகளிலும் விருப்பங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. இயேசு பரிசேயர்களைக் குறித்து தீர்ப்புக்கூறி, அவர்கள் நித்திய அழிவுக்குப் பாத்திரரான ‘விரியன்பாம்புக் குட்டிகள்’ என்று கண்டனம் செய்தது உண்மைதான். ஆனால் இயேசுவால் மக்களின் இருதயத்தை ஆராய முடியும். நம்மால் முடியாது.—மத்தேயு 23:33.
நம்முடைய நீதியை அல்ல, கடவுளுடைய நீதியை நாம் தேடுவோமாக. (மத்தேயு 6:33) அப்போது மட்டுமே நாம் யெகோவாவின் ஆதரவைப் பெற முடியும்; ஏனென்றால் பைபிள் நம் எல்லாருக்கும் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—1 பேதுரு 5:5.