“கோணலான” வழிகளில் கடவுள் செயல்படுகிறாரா?
“டீயூஸ் எஸ்க்ரீவி ஸெர்டூ பார் லின்யாஸ் டார்ட்டாஸ்” (“கோணல் வரிகளால் நேராக கடவுள் எழுதுகிறார்,”) என்பது பிரேஸில் நாட்டுப் பழமொழி. கடவுள் எப்பொழுதுமே சரியான காரியங்களைத்தான் செய்கிறார்; ஆனால், சில சமயங்களில் அவை மனிதனுக்கு கோணலாக தோன்றலாம். உதாரணமாக, வாலிப வயதில் ஒருவர் இறந்தால், ‘கடவுள் அவரை கூப்பிட்டுக்கிட்டார்’ என்று பலர் சொல்கின்றனர். ஒருவர் உடல் ஊனத்தாலோ அல்லது துயர சம்பவத்தாலோ அவதியுற்றால், ‘ஆண்டவர் சித்தம் இது தான்’ என்றே சொல்கின்றனர். சாவு, சரீர குறைபாடுகள், துயரத்தின் மற்றெல்லா காரணங்களுக்கும் கடவுள்மீதே பழி போடுகின்றனர். இதனால், மனிதனுடைய புத்திக்கு எட்டாத விதத்தில் கடவுள் ‘கோணலாக எழுதிவிட்டார்’ என்ற அர்த்தத்தையே ஒருவேளை இந்தக் கூற்றுகள் தரலாம்.
சாவுக்கும் துன்பத்திற்கும் கடவுளே பொறுப்பு என்று பல மதத்தினர் ஏன் நம்புகின்றனர்? பைபிளில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதைத் தவறாக புரிந்து கொண்டிருப்பதன் விளைவே இந்த நம்பிக்கைகள். அவற்றில் சிலவற்றை சுருக்கமாக ஆராய்வோமா!
● “ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கியவர் யார்? கர்த்தராகிய [“யெகோவாவாகிய,” NW] நான் அல்லவா?”—யாத்திராகமம் 4:11.
வித்தியாசமான உடல் குறைபாடுகளோடு அவதிப்படுவதற்கு கடவுள்தான் காரணம் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. இது கடவுளுடைய குணத்தோடு சற்றேனும் ஒத்துப்போவதாக இராது. “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு [1 திமொத்தேயு] 4:4, பொ.மொ.) ஒருவர் குருடாகவோ, ஊமையாகவோ, அல்லது செவிடாகவோ பிறப்பதற்கு கடவுள் காரணமல்ல. அவருடைய சிருஷ்டிகளுக்கு அவர் நன்மையையே விரும்புகிறார். ஏனெனில் அவரே ‘நன்மையான எந்த ஈவுக்கும் பூரணமான எந்த வரத்திற்கும்’ பிறப்பிடமாய் இருக்கிறார்.—யாக்கோபு 1:17.
இதற்கு காரணகர்த்தா நம்முடைய முதல் பெற்றோரே. ஆதாமும் ஏவாளும் தங்களுடைய சொந்த இஷ்டப்படி கடவுளுக்கு எதிராக கலகம் செய்தனர். இதனால், தங்களுடைய பரிபூரணத்தை இழந்தனர். பரிபூரண பிள்ளைகளைப் பிறப்பிக்கும் சக்தியையும் இழந்தனர். (ஆதியாகமம் 3:1-6, 16, 19; யோபு 14:4) அவர்கள் சந்ததியில் வந்தவர்கள் கல்யாணம் செய்து, பிள்ளைகளைப் பெற்றபோது, உடல் ஊனங்கள் உட்பட இன்னும் அநேக குறைபாடுகள் மனிதர்களிடையே தலைதூக்கின. யெகோவா தேவன் இவற்றிற்கு காரணமாக இல்லாதபோதிலும், அவற்றை அனுமதித்திருக்கிறார். எனவேதான், ஊமையனையும் செவிடனையும் குருடனையும் தாம் ‘உண்டாக்கியதாக’ சொல்லுகிறார்.
● “கோணலானதை நேராக்கக்கூடாது.”—பிரசங்கி 1:15.
கடவுளே கோணலாக படைத்தாரா? நிச்சயமாகவே இல்லை. பிரசங்கி 7:29 குறிப்பிடுகிறது: “தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்.” கான்டெம்பொரரி இங்லீஷ் வர்ஷன் அதன் அர்த்தத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: “கடவுள் எங்களை படைத்தபோது நாங்கள் நேர்மையின் சிகரங்களாகவே இருந்தோம்; ஆனால், இப்பொழுதோ எங்கள் மனங்களை கோணலாக்கிக் கொண்டோம்.” கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு கீழ்ப்படியாமல், பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தங்கள் இஷ்டப்படி திட்டங்களையும் வழிகளையும் சூழ்ச்சிகளையும் உபாயங்களையும் வகுத்துக்கொண்டு அதன்வழியில் செல்கின்றனர். அதன் விளைவே மனிதகுலம் அனுபவிக்கும் துயரங்கள்.—1 தீமோத்தேயு 2:14.
அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டுள்ளது போல், மனிதவர்க்கத்தின் பாவத்தால் “படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது.” (ரோமர் [உரோமையர்] 8:20, பொ.மொ.) மனித முயற்சிகளால் இந்நிலையை “நேராக்கக் கூடாது.” பூமிக்குரிய காரியங்கள் அனைத்திலும் உள்ள கோணல்களையும் பயனற்றத்தன்மையையும் தெய்வீக தலையீட்டால் மாத்திரமே நேராக்க முடியும்.
● “கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்?”—பிரசங்கி [சபை உரையாளர்] 7:13, பொ.மொ.
இன்னொரு முறையில் சொன்னால், சாலொமோன் ராஜா கேட்கிறார்: ‘கடவுள் அனுமதித்து இருக்கும் குறைபாடுகளையும் அபூரணங்களையும் மனிதர்களில் யார் நேராக்க முடியும்?’ யாராலும் முடியாது. ஏனென்றால், இவற்றை யெகோவா காரணத்தோடுதான் அனுமதித்திருக்கிறார்.
ஆகவே, சாலொமோன் இப்படி பரிந்துரைக்கிறார்: “வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ளவேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்.’ ” (பிரசங்கி [சபை உரையாளர்] 7:14, பொ.மொ.) நன்மையான காரியங்கள் நிகழும் நாளில் மனமகிழ்ந்து நல்ல செயல்களில் ஒருவர் ஈடுபடவேண்டும். அந்நாளை கடவுளிடம் இருந்து பெற்ற பரிசாக கருதவேண்டும். ஆனால், இக்கட்டு நாளில்? ஒரு மனிதன் நினைவில் வைக்கவேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அது, துயரங்களை கடவுள் அனுமதிக்கிறார் என்பதை புரிந்துகொள்வதே. ஏன் அப்படி அனுமதிக்கிறார்? சாலொமோன் சொல்லுகிறார்: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ளா வண்ணம்.’ இதன் அர்த்தம் என்ன?
இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி நாம் அனுபவிக்க கடவுள் அனுமதித்து இருப்பது, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் சொல்லமுடியாது என்பதை ஞாபகப்படுத்துகிறது. நல்லவர்கள், கெட்டவர்கள் இருவருக்குமே கஷ்டங்கள் வரலாம். அதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை. இது, நம்மையே பெரிதாக நினைத்துக் கொண்டிராமல், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதை ஞாபகத்தில் வைத்து, கடவுள் மேல் சார்ந்திருப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். (1 யோவான் 4:8) சில விஷயங்களை நாம் இப்பொழுது புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். காரியங்கள் முழுமை பெறும்போது கடவுள் அனுமதித்த யாவுமே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்மையில் முடிவடையும் என நிச்சயமாய் எதிர்பார்க்கலாம்.
அப்படியே கடவுள் தீமையை அனுமதித்தாலும் நல்லவர்கள் காலமெல்லாம் கஷ்டப்படும் அளவுக்கு விடமாட்டார். அப்போஸ்தலனாகிய பேதுரு இதை தெளிவுபடுத்துகிறார். அவருடைய காலத்தில், உடன் விசுவாசிகளுக்கு வந்த கஷ்டங்களைப் பற்றி சொல்லும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.”—1 பேதுரு 5:10.
சீர்திருத்துவதற்கான காலம்
இப்போது நாம் எதிர்ப்படும் எல்லா சோதனைகளையும் சகிக்க யெகோவா நமக்கு பலம் தருகிறார். மேலும் அவர் “சகலத்தையும் புதிதாக்குவதாக” வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:5) ஆம், அவருடைய பரலோக ராஜ்யத்தின் மூலம் வெகு விரைவில், சரீர குறைபாடுகளால் அவதியுறும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அளிப்பதும் இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதுமே அவரது நோக்கம். கோணல்மாணலான வழியை உடைய பிசாசாகிய சாத்தானையும் அந்த அரசாங்கம் ஒழித்துவிடும். (யோவான் 5:28, 29; ரோமர் 16:20; 1 கொரிந்தியர் 15:26; 2 பேதுரு 3:13) எல்லாக் காரியங்களையும் சீர்படுத்தும் கடவுளுடைய காலம் வரும்போது, பூமி முழுவதிலும் உள்ள கடவுள் பயமுள்ள ஜனங்களுக்கு அது என்னே மாபெரும் ஆசீர்வாதம்!
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
Job Hearing of His Ruin/The Doré Bible Illustrations/Dover Publications