கல்வியும் பணமும் நிறைவான வாழ்க்கையைத் தருமா?
நன்றாகப் படித்து பணக்காரர்களாக இருக்கிறவர்களுடைய வாழ்க்கை நிறைவாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகத்துக்குப் போய் படித்தால் திறமையாக வேலை செய்ய முடியும், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடியும், சமுதாயத்துக்கும் உதவியாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதோடு, நன்றாகப் படித்தால் கைநிறைய சம்பளம் தருகிற வேலை கிடைக்கும் என்றும் சந்தோஷமாக இருக்க முடியும் என்றும் நினைக்கிறார்கள்.
பலர் எடுக்கும் முடிவு
சீனாவில் வாழ்கிற சுவான் சென் இப்படிச் சொல்கிறார்: “வறுமையில இருந்து வெளிய வரணும்னா பல்கலைக்கழகத்துல படிச்சு பட்டம் வாங்கணும். அப்போதான் நல்ல வேலை கிடைக்கும், சந்தோஷமா திருப்தியா வாழ முடியும்னு நினைச்சேன்.”
நிறைய பேர் பிரபலமாக இருக்கிற பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். அதுவும், வெளிநாடுகளில் இருக்கிற பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு அவ்வளவாகப் போக முடியாத சூழ்நிலை வந்தது. அதற்கு முன்புவரை, நிறைய பேர் வெளிநாடுகளுக்குப் போய் படித்துக் கொண்டிருந்தார்கள். பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு 2012-ல் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட 52% ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று சொல்லப்பட்டிருந்தது.
பிள்ளைகளை இப்படி படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் நிறைய தியாகங்களைச் செய்கிறார்கள். “என்னோட அப்பா அம்மா வசதியானவங்க இல்ல. ஆனாலும், எங்க நாலு பேரையும் அமெரிக்காவுல இருக்கிற கல்லூரிக்கு அனுப்புனாங்க” என்று தைவானில் இருக்கிற சிஷியான் சொல்கிறார். இதற்காக சிஷியானின் பெற்றோர் நிறைய கடன் வாங்க வேண்டியிருந்தது. சொல்லப்போனால், இவர்களைப் போலத்தான் நிறைய பெற்றோர்கள் செய்கிறார்கள்.
அனுபவம் என்ன காட்டுகிறது?
கல்வி ஒரு விதத்தில் வாழ்க்கையை நல்லபடியாக மாற்றுகிறது என்பது உண்மைதான்! இருந்தாலும், மாணவர்கள் எதிர்பார்த்த பலன்களை அது எல்லா சமயத்திலும் தருவதில்லை. உதாரணத்துக்கு, நிறைய தியாகங்கள் செய்து, கடன் வாங்கி, ஆசைப்பட்டதைப் படித்தாலும், எதிர்பார்த்த வேலை கிடைப்பதில்லை. ரேச்சல் மூ என்பவர் வெளியிட்ட ஒரு அறிக்கை சிங்கப்பூரை சேர்ந்த பிஸ்னஸ் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது. அது இப்படிச் சொன்னது: “பட்டதாரிகள் நிறைய பேருக்கு வேலையே கிடைப்பதில்லை. இது ஒரு பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கிறது.” தைவானில் இருக்கிற ஜியெஞ்சி இப்படிச் சொல்கிறார்: “படிப்புக்கு ஏத்த வேலை நிறைய பேருக்குக் கிடைக்காதனால, கிடைச்ச வேலைய செய்ய வேண்டிய கட்டாயத்துல இருக்குறாங்க.” இவர் டாக்டர் பட்டம் பெற்றவர்!
சிலருக்குப் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தாலும் எதிர்பார்த்த வாழ்க்கை அமைவதில்லை. தாய்லாந்தைச் சேர்ந்த நிரன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இவர், ஐரோப்பாவில் இருக்கிற ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தவர். “நான் எதிர்பார்த்த மாதிரியே படிப்புக்கு ஏத்த வேலை கிடைச்சுது. கைநிறைய சம்பளமும் கிடைச்சுது. ஆனா, நிறைய உழைக்க வேண்டியிருந்துச்சு. என் நேரமெல்லாம் அதுலயே போயிடுச்சு. கொஞ்ச நாள்ல கம்பெனியில ஆட்கள குறைச்சாங்க. அப்போ, என்னையும் வேலையில இருந்து தூக்கிட்டாங்க. ஒரு நல்ல வேலை கிடைச்சிட்டா வாழ்க்கை எப்பவுமே நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது” என்கிறார் நிரன்.
பணக்காரர்களாக வாழ்கிறவர்கள் சந்தோஷமாகவும் நிறைவாகவும் வாழ்வதுபோல் தெரியலாம். ஆனால், அவர்களுக்குக் குடும்பப் பிரச்சினைகளும் உடல்நல பிரச்சினைகளும் இருக்கும்; பணத்தைப் பற்றிய கவலையும் இருக்கும். ஜப்பானில் இருக்கிற கட்சுடோஷி இப்படிச் சொல்கிறார்: “என்கிட்ட நிறைய பணம் இருந்துச்சு. ஆனா, நான் சந்தோஷமாவே இல்ல. என்னை சுற்றி இருந்தவங்க என்கூட போட்டிபோட்டாங்க, பொறாமப்பட்டாங்க, என்னை மோசமாவும் நடத்துனாங்க.” வியட்நாமில் இருக்கிற லேம் என்ற பெண் இப்படிச் சொல்கிறார்: “நல்ல சம்பளம் கிடைக்கிற ஒரு வேலை கிடைச்சுதுனா வாழ்க்கை நிறைவா திருப்தியா இருக்கும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, நிஜத்துல அப்படி இல்ல! அவங்களும் ரொம்ப கவலைப்படுறாங்க; உடல்நல பிரச்சினைகளும் வருது, மனசோர்வுனாலயும் கஷ்டப்படுறாங்க.”
மேற்படிப்பு படிப்பது... சொத்துப்பத்துகளைச் சேர்த்து வைப்பது... இவற்றைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று ஃப்ராங்க்லினை மாதிரியே நிறைய பேர் ஒத்துக்கொள்கிறார்கள். பணம் பொருள் சேர்த்து வைப்பதிலேயே குறியாக இல்லாமல், ‘ஒரு நல்ல மனுஷனா வாழ்ந்து, நாலு பேருக்கு நல்லது செஞ்சாலே வாழ்க்கை நல்லா இருக்கும்’ என்று சிலர் நினைக்கிறார்கள். இது உண்மையிலேயே நிறைவான வாழ்க்கையைத் தருமா? பதில் அடுத்த கட்டுரையில்...