படிப்புக் கட்டுரை 28
தடையுத்தரவின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள்
“நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது.”—அப். 4:19, 20.
பாட்டு 32 உறுதியாய் நில்லுங்கள்!
இந்தக் கட்டுரையில்...a
1-2. (அ) நம்முடைய வணக்கத்துக்குத் தடை போடப்படுவதைப் பார்த்து நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
நம்முடைய வேலைக்குத் தடை போடப்பட்டிருக்கிற அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிற நாடுகளில், 2,23,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருப்பதாக 2018-ம் ஊழிய ஆண்டின் அறிக்கை சொல்கிறது. இதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், துன்புறுத்தல் வரும் என்பது உண்மைக் கிறிஸ்தவர்களான நமக்கு நன்றாகத் தெரியும். (2 தீ. 3:12) நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, எதிர்பார்க்காத நேரத்தில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று அரசாங்க அதிகாரிகள் நம்முடைய வேலைகளைத் தடை செய்யலாம்.
2 உங்கள் நாட்டு அரசாங்கம் நம் வணக்கத்தைத் தடை செய்ய முடிவெடுத்தால், இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் வரலாம்: ‘கடவுளோட ஆதரவு இல்லாதனாலதான் துன்புறுத்தல அனுபவிக்கிறோமா? தடை இருக்குறதுனால இனிமேல் யெகோவாவ வணங்க முடியாம போயிடுமா? கடவுள சுதந்திரமா வணங்குறதுக்காக நான் வேற ஒரு நாட்டுக்கு குடிமாறி போகணுமா?’ இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் கலந்துபேசுவோம். அதோடு, தடையுத்தரவின் மத்தியிலும் எப்படித் தொடர்ந்து யெகோவாவை வணங்கலாம் என்பதைப் பற்றியும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
கடவுளுடைய ஆதரவு இல்லாததால்தான் துன்புறுத்தப்படுகிறோமா?
3. இரண்டு கொரிந்தியர் 11:23-27 காட்டுகிறபடி, அப்போஸ்தலன் பவுல் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார், அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
3 அரசாங்கம் நம் வேலையைத் தடை செய்யும்போது, கடவுளுடைய ஆதரவு இல்லாததால்தான் அந்த நிலைமை வந்துவிட்டது என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது உண்மை கிடையாது! துன்புறுத்தல் வந்தால், யெகோவாவின் ஆதரவு நமக்கு இல்லை என்று அர்த்தம் கிடையாது. அப்போஸ்தலன் பவுலைப் பற்றி யோசித்துப்பாருங்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 14 கடிதங்களை எழுதும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. மற்ற தேசத்து மக்களுக்கு அப்போஸ்தலனாகவும் அவர் இருந்தார்! அப்படியென்றால், அவருக்குக் கடவுளுடைய ஆதரவு இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும், அவர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். (2 கொரிந்தியர் 11:23-27-ஐ வாசியுங்கள்.) துன்புறுத்தலைச் சந்திப்பதற்குத் தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா அனுமதிக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
4. இந்த உலகம் ஏன் நம்மை வெறுக்கிறது?
4 துன்புறுத்தல் வருமென்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்? நாம் இந்த உலகத்தின் பாகமாக இல்லாததால் மற்றவர்களுடைய வெறுப்புக்கு ஆளாவோம் என்று இயேசு சொன்னார். (யோவா. 15:18, 19) துன்புறுத்தல் வந்தால், நமக்கு யெகோவாவின் ஆதரவு இல்லை என்று அர்த்தம் கிடையாது; நாம் சரியானதைச் செய்கிறோம் என்று அர்த்தம்!
தடையுத்தரவால் நம் வணக்கம் தடைபட்டுவிடுமா?
5. நாம் யெகோவாவை வணங்குவதைச் சாதாரண மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியுமா? சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.
5 சர்வவல்லமையுள்ள கடவுளை நாம் வணங்குவதைச் சாதாரண மனிதர்களால் தடுத்து நிறுத்தவே முடியாது. நிறைய பேர் அப்படிச் செய்ய முயற்சி செய்து மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள்! இரண்டாம் உலகப் போரின்போது, நிறைய அரசாங்கங்கள் கடவுளுடைய மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தின. ஜெர்மனியிலிருந்த நாசி கட்சி மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களும் மற்ற அரசாங்கங்களும் நம்முடைய வேலைகளைத் தடை செய்தன. ஆனால் என்ன நடந்தது? போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, அதாவது 1939-ல், உலகம் முழுவதும் 72,475 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். ஆனால் போரின் முடிவில், அதாவது 1945-ல், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,56,299-ஆக உயர்ந்தது! யெகோவாவின் ஆசீர்வாதத்தால் இரண்டு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டது.
6. எதிர்ப்புகளால் என்ன அருமையான பலன்கள் கிடைக்கலாம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
6 துன்புறுத்தல்களைப் பார்த்து நாம் முடங்கிவிட மாட்டோம்; யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைப்போம். உதாரணத்துக்கு, கணவனும் மனைவியும் ஒரு சின்னப் பையனும் இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிப் பார்க்கலாம். அவர்களுடைய நாட்டு அரசாங்கம் நம் வேலையைத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அப்போது, அந்தக் கணவனும் மனைவியும் என்ன செய்தார்கள்? பயத்தில் முடங்கிவிட்டார்களா? இல்லை! அவர்கள் இரண்டு பேருமே ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தார்கள். கை நிறைய சம்பளம் தரும் வேலையை அந்த மனைவி விட்டுவிட்டார். தடையுத்தரவுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு அதிகமானதால், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது சுலபமாக இருந்தது என்று அந்தக் கணவர் சொல்கிறார். இன்னொரு அருமையான பலனும் கிடைத்தது. அதாவது, யெகோவாவை வணங்குவதை நிறுத்தியிருந்த நிறைய பேர் மறுபடியும் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் வர ஆரம்பித்ததாக அந்த நாட்டில் சேவை செய்யும் ஒரு மூப்பர் சொன்னார்.
7. (அ) லேவியராகமம் 26:36, 37-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) நம்முடைய வேலை தடை செய்யப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
7 தடையுத்தரவைப் பார்த்து மிரண்டுபோய் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நாம் நிறுத்திவிடுவோம் என்று எதிரிகள் கனவு காண்கிறார்கள். அதோடு, நம்மைப் பற்றிய கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்கள், நம்முடைய வீடுகளைச் சோதனை செய்ய அதிகாரிகளை அனுப்புகிறார்கள், நம்மை நீதிமன்ற கூண்டில் நிற்க வைக்கிறார்கள், நம்மில் சிலரைச் சிறையிலும் தள்ளுகிறார்கள். இப்படிச் சிலரைச் சிறையில் அடைப்பதன் மூலம் நம்மை மிரளவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை! ஆனால், அவர்களுடைய மிரட்டல்களுக்குப் பயந்துவிட்டால் யெகோவாவை வணங்காதபடி நமக்கு நாமே “தடை” விதித்துக்கொள்வோம்! லேவியராகமம் 26:36, 37-ல் சொல்லப்பட்டிருக்கிற ஆட்களைப் போல் இருக்க நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்! (வாசியுங்கள்.) பயந்துபோய், யெகோவாவுக்குச் செய்யும் சேவையைக் குறைத்துக்கொள்ளவோ நிறுத்திக்கொள்ளவோ மாட்டோம். யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்போம், பயந்து நடுங்க மாட்டோம். (ஏசா. 28:16) நம்மை வழிநடத்தும்படி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்வோம். அவருடைய ஆதரவு எப்போதும் நமக்கு இருப்பதால், அவரை நாம் உண்மையோடு வணங்குவதை எவ்வளவு சக்திபடைத்த அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.—எபி. 13:6.
நான் வேறு நாட்டுக்குக் குடிமாறிப் போக வேண்டுமா?
8-9. (அ) குடும்பத் தலைவரோ தனி நபரோ என்ன முடிவை எடுக்க வேண்டும்? (ஆ) ஞானமான முடிவை எடுக்க எது உதவும்?
8 உங்கள் நாட்டு அரசாங்கம் நம் வணக்கத்தைத் தடை செய்யும்போது, யெகோவாவைச் சுதந்திரமாக வணங்குவதற்காக வேறொரு நாட்டுக்குக் குடிமாறிப் போகலாமா என்று நீங்கள் யோசிக்கலாம். இதைப் பற்றி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்; உங்களுக்காக வேறு யாரும் முடிவெடுக்க முடியாது. துன்புறுத்தலை அனுபவித்தபோது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை யோசித்துப்பார்ப்பது சிலருக்கு உதவியாக இருக்கலாம். எதிரிகள் ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்ற பிறகு, எருசலேமில் இருந்த சீஷர்கள் யூதேயா மற்றும் சமாரியா முழுவதும் சிதறிப்போனார்கள். பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்கள்வரை சிலர் போனார்கள். (மத். 10:23; அப். 8:1; 11:19) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இன்னொரு சமயம் துன்புறுத்தல் வந்தபோது அப்போஸ்தலன் பவுல் என்ன செய்தார் என்பதைப் பற்றி வேறுசில சகோதரர்கள் ஆராய்ச்சி செய்ய நினைக்கலாம். பிரசங்க வேலைக்கு எங்கெல்லாம் எதிர்ப்பு வந்ததோ, அந்த இடங்களை விட்டுப் போகாமல் அங்கேயே தங்கி ஊழியம் செய்வதென்று பவுல் முடிவெடுத்தார். தன்னுடைய உயிரையே பணயம் வைத்து நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், பயங்கரமான துன்புறுத்தலை அனுபவித்துக்கொண்டிருந்த சகோதரர்களைப் பலப்படுத்துவதற்காக அங்கேயே தங்கியிருந்தார்.—அப். 14:19-23.
9 இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? குடிமாறிப் போக வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி அந்தந்தக் குடும்பத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் முடிவெடுப்பதற்கு முன்பு, தன் குடும்பத்தின் சூழ்நிலையைப் பற்றி அவர் கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். அதோடு, குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி நன்மை அடைவார்கள் என்றும் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்றும் யோசித்துப்பார்க்க வேண்டும். இதைப் பற்றி அவர் ஜெபம் செய்யவும் வேண்டும். இந்த விஷயத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரவருடைய ‘பாரத்தை சுமக்க வேண்டும்.’ (கலா. 6:5) மற்றவர்கள் எடுக்கும் தீர்மானத்தைப் பற்றி நாம் குறை சொல்லக் கூடாது.
தடையுத்தரவின்போது யெகோவாவை எப்படி வணங்குவோம்?
10. கிளை அலுவலகத்திடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும் என்ன வழிநடத்துதல் கிடைக்கும்?
10 அந்தச் சமயத்தில், நமக்கு ஆன்மீக உணவு எப்படிக் கிடைக்கும்... கூட்டங்களுக்காக எப்படிக் கூடிவருவோம்... ஊழியத்தை எப்படிச் செய்வோம்... என்பதைப் பற்றியெல்லாம் சபை மூப்பர்களுக்குக் கிளை அலுவலகம் ஆலோசனைகளைக் கொடுக்கும். ஒருவேளை, கிளை அலுவலகத்தால் மூப்பர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், தொடர்ந்து யெகோவாவை வணங்க உங்களுக்கும் சபையிலிருக்கிற ஒவ்வொருவருக்கும் மூப்பர்கள் உதவுவார்கள். பைபிள் மற்றும் பிரசுரங்களில் இருக்கும் ஆலோசனைகளின்படி அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.—மத். 28:19, 20; அப். 5:29; எபி. 10:24, 25.
11. ஆன்மீக உணவு எப்போதுமே கிடைக்கும் என்பதில் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம், பைபிளையும் பிரசுரங்களையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
11 விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான ஆன்மீக உணவைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 65:13, 14; லூக். 12:42-44) அதனால், நீங்கள் உண்மையோடு நிலைத்திருக்கத் தேவையான எல்லாவற்றையும் தருவதற்கு யெகோவாவின் அமைப்பு தன்னால் முடிந்ததையெல்லாம் செய்யும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கலாம். அதேசமயத்தில், உங்கள் பங்கில் என்ன செய்யலாம்? தடை போடப்பட்டிருக்கும் சமயத்தில், உங்கள் பைபிளையும் மற்ற பிரசுரங்களையும் மறைத்து வைக்க ஒரு நல்ல இடத்தைக் கண்டுபிடியுங்கள். விலைமதிக்க முடியாத அந்தப் பொக்கிஷங்களை, அது அச்சிடப்பட்ட வடிவில் இருந்தாலும் சரி, எலக்ட்ரானிக் வடிவில் இருந்தாலும் சரி, மற்றவர்களுடைய கண்ணில்படாமல் மறைத்துவையுங்கள். தடை போடப்பட்டிருக்கும் சமயத்தில் நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள, நாம் ஒவ்வொருவரும் நடைமுறையான படிகளை எடுக்க வேண்டும்.
12. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத விதத்தில் மூப்பர்கள் எப்படிக் கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள்?
12 கூட்டங்களில் கலந்துகொள்வதைப் பற்றி இப்போது பார்க்கலாம். நாம் தொடர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். அதேசமயத்தில், மற்றவர்களுடைய கவனம் நம் பக்கம் திரும்பாதபடியும் பார்த்துக்கொள்வார்கள். அதற்காக, சின்னச் சின்ன தொகுதிகளாக அவர்கள் நம்மை கூடிவரச் சொல்லலாம். கூட்டங்களின் நேரத்தையும் கூட்டங்கள் நடக்கும் இடத்தையும் அடிக்கடி மாற்றலாம். கூட்டங்களுக்கு வருபவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாமும் உதவலாம். எப்படி? கூட்டங்களுக்கு வரும்போதும் போகும்போதும் சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்கலாம். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்காத விதத்தில் சாதாரணமாக உடை உடுத்தலாம்.
13. முன்னாள் சோவியத் யூனியனிலிருந்த சகோதரர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
13 ஊழியத்தை எப்படிச் செய்வோம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். ஊழியம் செய்வதற்கான சூழ்நிலை இடத்துக்கு இடம் மாறுபடும். யெகோவாவை நேசிப்பதாலும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல ஆசைப்படுவதாலும், ஊழியம் செய்வதற்கு நாம் நிச்சயம் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். (லூக். 8:1; அப். 4:29) முன்னாள் சோவியத் யூனியனிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் செய்த ஊழியத்தைப் பற்றி சரித்திர ஆசிரியரான எமிலி ப்ருடர்லே பாரன் சொல்வதைக் கவனியுங்கள். “தங்களோட நம்பிக்கைகள பத்தி மத்தவங்ககிட்ட பேச கூடாதுனு விசுவாசிகள்கிட்ட அரசாங்கம் சொன்னப்போ, அக்கம்பக்கத்துலயும் கூடவேலை செஞ்சவங்ககிட்டயும் நண்பர்கள்கிட்டயும் சாட்சிகள் தங்களோட நம்பிக்கைகள பத்தி பேசுனாங்க. அதனால, கட்டாய வேலை முகாமுக்கு போகவேண்டிய நிலைமை அவங்களுக்கு வந்துச்சு. அங்க போனதுக்கு அப்புறமும் மத்த கைதிகள்கிட்ட அவங்க பிரசங்கிச்சாங்க” என்று அவர் சொன்னார். தடை போடப்பட்டிருந்தாலும் ஊழியம் செய்வதை நம் சகோதரர்கள் நிறுத்தவே இல்லை! உங்களுடைய நாட்டிலும் அப்படி ஒரு நிலைமை வந்தால், அந்தச் சகோதரர்கள் செய்ததைப் போலவே செய்வதற்கு உறுதியாக இருங்கள்.
எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்?
14. சங்கீதம் 39:1 என்ன எச்சரிப்பைத் தருகிறது?
14 மற்றவர்களிடம் என்ன தகவல்களைச் சொல்கிறீர்கள் என்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். தடையுத்தரவு போடப்பட்டிருக்கும் சமயத்தில், “பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வது முக்கியம். (பிர. 3:7) சில விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, சகோதர சகோதரிகளுடைய பெயர்கள் என்ன... கூட்டங்கள் எங்கே நடக்கின்றன... எப்படி ஊழியம் செய்கிறோம்... ஆன்மீக உணவு நமக்கு எப்படிக் கிடைக்கிறது... போன்ற விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும். அதிகாரிகளிடம் இந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது. அதோடு, நம் நாட்டில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிற நண்பர்களிடமோ சொந்தக்காரர்களிடமோ இந்த விஷயங்களைச் சொல்லக் கூடாது. அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி! நாம் கவனமாக இல்லையென்றால், சகோதரர்களை ஆபத்தில் சிக்க வைத்துவிடுவோம்.—சங்கீதம் 39:1-ஐ வாசியுங்கள்.
15. என்ன செய்ய சாத்தான் முயற்சி செய்வான், நாம் எப்படி அதற்கு இடம்கொடுக்காமல் இருக்கலாம்?
15 சின்னச் சின்ன விஷயங்கள் நமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு இடம்கொடுக்கக் கூடாது. பிரிவினைகள் இருக்கும் வீடு நிலைத்திருக்காது என்பது சாத்தானுக்குத் தெரியும். (மாற். 3:24, 25) நமக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு அவன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருப்பான். அவனை எதிர்த்து சண்டை போடுவதற்குப் பதிலாக, நமக்குள்ளேயே நாம் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
16 சகோதரி கெட்ரூட் பொட்ஸிங்கர் வைத்த அருமையான முன்மாதிரியைப் பற்றிச் சொல்லுங்கள்.
16 பிரிவினைக்கு இடம்கொடுக்காமல் இருப்பதற்கு முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகள்கூட கவனமாக இருக்க வேண்டும். பரலோக நம்பிக்கையுள்ள சகோதரிகளான கெட்ரூட் பொட்ஸிங்கர் மற்றும் எல்ஃப்ரீடா லோரின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். மற்ற சகோதரிகளோடு சேர்த்து இவர்களையும் நாசி சித்திரவதை முகாமில் அடைத்திருந்தார்கள். முகாமிலிருந்த மற்ற சகோதரிகளிடம் எல்ஃப்ரீடா உற்சாகமான பேச்சுகளைக் கொடுத்ததைப் பார்த்து கெட்ரூட் பொறாமைப்பட்டார். பிற்பாடு, அப்படிப் பொறாமைப்பட்டதை நினைத்து அவர் வெட்கப்பட்டார்; உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சினார். “மற்றவர்கள் நம்மைவிட திறமைசாலிகளாக இருந்தாலோ, அவர்களுக்கு நம்மைவிட அதிக பொறுப்புகள் கிடைத்தாலோ, அதை ஏற்றுக்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் எழுதினார். பொறாமைப்படுவதை அவர் எப்படி நிறுத்தினார்? எல்ஃப்ரீடாவிடமிருந்த நல்ல குணங்களையும், நட்புடன் அவர் பழகும் விதத்தையும் கெட்ரூட் பார்க்க ஆரம்பித்தார். இப்படிச் செய்ததன் மூலம் எல்ஃப்ரீடாவுடன் இருந்த நட்பைப் பலப்படுத்திக்கொண்டார். அந்த முகாமிலிருந்த கஷ்டமான சூழ்நிலையை இரண்டு பேரும் வெற்றிகரமாகச் சமாளித்தார்கள். தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரை, யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார்கள். நமக்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கும் இடையில் இருக்கிற மனஸ்தாபங்களைச் சரி செய்ய கடினமாக முயற்சி செய்தால், பிரிவினைக்கு இடம்கொடுக்காமல் இருப்போம்.—கொலோ. 3:13, 14.
17. நாம் ஏன் எப்போதுமே வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
17 வழிநடத்துதலுக்கு எப்போதும் கீழ்ப்படியுங்கள். நம்பிக்கைக்குரிய, பொறுப்பிலிருக்கிற சகோதரர்களிடமிருந்து வருகிற வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியும்போது பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். (1 பே. 5:5) நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கிற ஒரு நாட்டில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களை ஊழியத்தில் கொடுக்க வேண்டாம் என்று பொறுப்பிலிருந்த சகோதரர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால், பயனியராக இருந்த ஒரு சகோதரர், அதற்குக் கீழ்ப்படியாமல் பிரசுரங்களைக் கொடுத்தார். அவரும் மற்ற பிரஸ்தாபிகளும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்து முடித்த கொஞ்ச நேரத்திலேயே போலீஸ்காரர்கள் அவர்களைப் பிடித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்ன நடந்திருக்கலாம் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்து போயிருக்கிறார்கள்; அவர்கள் வினியோகித்த எல்லா பிரசுரங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்! இந்த அனுபவம் என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது? சில வழிநடத்துதல்கள்மீது நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும், நாம் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். முன்னின்று வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிற சகோதரர்களுக்குக் கீழ்ப்படியும்போது, யெகோவாவின் ஆசீர்வாதம் எப்போதுமே நம்மீது இருக்கும்.—எபி. 13:7, 17.
18. தேவையில்லாத சட்டங்களை ஏன் போடக் கூடாது?
18 தேவையில்லாத சட்டங்களைப் போடாதீர்கள். தேவையில்லாத சட்டங்களை மூப்பர்கள் போட்டால், மற்றவர்கள் தலையில் அவர்கள் பாரத்தை வைக்கிறார்கள் என்று அர்த்தம். முன்னாள் செக்கோஸ்லோவாகியாவில் நம்முடைய வேலைக்குத் தடை போடப்பட்ட சமயத்தில் என்ன நடந்தது என்று யூரி காமின்ஸ்கீ என்ற சகோதரர் சொல்கிறார். “பொறுப்புல இருந்த சகோதரர்களும் நிறைய மூப்பர்களும் கைது செய்யப்பட்டதுக்கு அப்புறம், சபைகளயும் வட்டாரங்களயும் வழிநடத்துறதுக்காக சகோதரர்கள் இருந்தாங்க. அதுல சிலர், பிரஸ்தாபிகள் எப்படி நடந்துக்கணும், என்ன செய்யணும், என்ன செய்ய கூடாதுனு சட்டங்கள போட ஆரம்பிச்சாங்க” என்று அவர் சொல்கிறார். இப்படிச் சட்டம் போடும் அதிகாரத்தை யெகோவா நமக்குக் கொடுக்கவில்லை. தேவையில்லாத சட்டங்களைப் போடுபவர்கள், சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பதில்லை. அவர்களுடைய விசுவாசத்துக்கு அதிகாரிகளாக ஆகத்தான் முயற்சி செய்கிறார்கள்!—2 கொ. 1:24.
யெகோவாவை வணங்குவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள்
19. சாத்தான் என்ன செய்தாலும் சரி, நாம் நம்பிக்கையோடு இருக்க 2 நாளாகமம் 32:7, 8 எப்படி உதவுகிறது?
19 நம்முடைய முக்கிய எதிரியான பிசாசாகிய சாத்தான், யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளைத் துன்புறுத்துவதை நிறுத்தவே மாட்டான். (1 பே. 5:8; வெளி. 2:10) சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் நம்முடைய வணக்கத்துக்குத் தடை போட முயற்சி செய்வார்கள். ஆனால், நாம் பயந்துவிட மாட்டோம்; யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட மாட்டோம். (உபா. 7:21) யெகோவா நம்மோடு இருக்கிறார்! நம்முடைய வேலைக்குத் தடை போடப்பட்டாலும், அவருடைய ஆதரவு எப்போதும் நமக்கு இருக்கும்.—2 நாளாகமம் 32:7, 8-ஐ வாசியுங்கள்.
20 என்ன செய்ய நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்?
20 அன்றைய ஆட்சியாளர்களிடம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இப்படிச் சொன்னார்கள்: “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது.” அவர்களுக்கு இருந்த அதே உறுதி நமக்கும் இருக்கட்டும்!—அப். 4:19, 20.
பாட்டு 137 தைரியத்தைத் தாருங்கள்
a யெகோவாவை வணங்கக் கூடாது என்று அரசாங்கம் தடை போட்டால் என்ன செய்வது? தொடர்ந்து யெகோவாவை வணங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதற்கான நடைமுறையான ஆலோசனைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b படங்களின் விளக்கம்: நம்முடைய வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கிற நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளை இந்தப் படங்களில் பார்க்கலாம். ஒரு சகோதரருடைய வீட்டிலிருக்கிற சாமான்கள் வைக்கும் அறையில், ஒரு சிறிய தொகுதி கூட்டங்களுக்குக் கூடிவருகிறது.
c படங்களின் விளக்கம்: ஒரு சகோதரி (இடது பக்கத்தில் இருப்பவர்), இன்னொரு பெண்ணிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். யெகோவாவைப் பற்றிச் சொல்வதற்குச் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கிறார்.
d படங்களின் விளக்கம்: போலீஸ்காரர்களால் விசாரணை செய்யப்படுகிற ஒரு சகோதரர், சபையைப் பற்றிய விவரங்களைச் சொல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.