சாவில்லாத வாழ்வைத் தேடி
“மனுஷர்கள் மும்முரமாகச் செய்வதற்கென்று கடவுள் கொடுத்திருக்கிற வேலைகளைக் கவனித்தேன். கடவுள் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் அழகாக செய்திருக்கிறார். என்றென்றும் வாழும் எண்ணத்தையும் மனுஷர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்.”—பிரசங்கி 3:10, 11.
மனித வாழ்க்கை குறுகியது. யாராலும் சாவைத் தவிர்க்க முடிவதில்லை. இருந்தாலும், வாழ வேண்டும் என்ற ஆசைதான் காலம்காலமாகவே எல்லாருக்கும் இருந்திருக்கிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள சாலொமோன் ராஜாவின் வார்த்தைகளும், மனிதன் வாழத்தான் ஆசைப்படுகிறான் என்பதைக் காட்டுகின்றன. சொல்லப்போனால், பல்லாண்டுகள் வாழ்வதற்கான வழியைத் தேடி அலைந்த எத்தனையோ பேரைப் பற்றி சரித்திரமும் சொல்கிறது, புராணக் கதைகளும் சொல்கின்றன.
உதாரணத்துக்கு, சுமேரியாவின் ராஜா கில்காமேஷின் வாழ்க்கையைப் பற்றி நிறைய புராணக் கதைகள் இருக்கின்றன. கில்காமேஷ் காப்பியம் என்று சொல்லப்படும் புராணக் கதையில், இவர் மரணத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கு வழி கண்டுபிடிக்க, ஆபத்துகள் மத்தியிலும் ரொம்ப தூரம் பயணம் செய்கிறார். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
கி.மு. நான்காம் நூற்றாண்டில், சீனாவிலிருந்த ரசவாதிகள் (உலோகங்களைத் தங்கமாக மாற்ற முயற்சி செய்தவர்கள்), ஆயுளைக் கூட்டுவதற்காக ஜீவாமிர்தத்தைத் தயாரிக்க நினைத்தார்கள். கடைசியில், கொஞ்சம் பாதரசத்தையும் (மெர்க்குரியையும்) ஆர்சனிக் என்ற தனிமத்தின் கூறுகளையும் கலந்து ஒரு பானத்தைத் தயாரித்தார்கள். ஆனால், அதைக் குடித்த சீனப் பேரரசர்கள் பலர் இறந்துபோனதாகச் சொல்லப்படுகிறது. இடைக்காலத்தில் (சுமார் கி.பி. 500-1500-ல்), தங்க பஸ்பத்தைத் தயாரிக்க, அதாவது மனித உடலால் ஜீரணிக்க முடிந்த விதத்தில் தங்கத்தை மாற்ற, ஐரோப்பாவிலிருந்த சில ரசவாதிகள் முயற்சி செய்தார்கள். தங்கம் துருப்பிடிக்காது என்பதால், அதை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ஆயுள் கூடும் என்று அவர்கள் நம்பினார்கள்.
இன்று, மனிதர்களுக்கு ஏன் முதுமை வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க சில உயிரியல் நிபுணர்களும் மரபியல் நிபுணர்களும் முயற்சி செய்கிறார்கள். ரசவாதிகளுடைய முயற்சிகளும் சரி, இந்த நிபுணர்களுடைய முயற்சிகளும் சரி, எதைக் காட்டுகின்றன? முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பிக்க மனிதர்கள் ஏங்கித் தவிப்பதைத்தான் காட்டுகின்றன. ஆனால், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறதா?
கடவுள், ‘என்றென்றும் வாழும் எண்ணத்தை மனுஷர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்.’—பிரசங்கி 3:10, 11
முதுமையின் காரணங்களைத் தேடி...
மனித செல்களை ஆராயும் விஞ்ஞானிகள், நாம் ஏன் வயதாகி பின்பு சாகிறோம் என்பதற்கு 300-க்கும் அதிகமான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப ஆண்டுகளில், மூலக்கூறு உயிரியல் நிபுணர்கள், ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்தப்படும் விலங்குகளையும் மனித செல்களையும் வைத்து சோதனை நடத்தி, அவற்றின் மரபணுக்கள் மற்றும் புரதங்களுடைய அமைப்பை மாற்றிப் பார்த்தார்கள். முதுமை அடையும் வேகத்தைக் குறைக்கும் அந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது! இப்படிப்பட்ட வெற்றிகளைப் பார்த்த வசதிபடைத்த சிலர், முதுமை அடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளுக்குப் பண உதவி செய்திருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சிகளின் முடிவு என்ன?
ஆயுளை அதிகரிக்க. நம் செல்களில் உள்ள குரோமோசோம்களின் நுனிகளில் டெலோமியர்கள் என்ற அமைப்புகள் இருக்கின்றன. இவற்றுக்கும் முதுமைக்கும் முக்கியத் தொடர்பு இருப்பதாக சில உயிரியல் நிபுணர்கள் நம்புகிறார்கள். செல்கள் பிரியும்போது அவற்றின் மரபணுக்களில் இருக்கிற தகவல்களை இந்த டெலோமியர்கள் பாதுகாக்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறை செல்கள் பிரியும்போதும் இந்த டெலோமியர்களின் நீளம் குறைகிறது. கடைசியில், செல்கள் பிரிவது நின்றுபோய், முதுமை தட்ட ஆரம்பிக்கிறது.
2009-ல் நோபெல் பரிசுபெற்ற எலிசபெத் ப்ளாக்பர்னும் அவருடைய குழுவும், டெலோமியர்களின் நீளம் குறைவதைத் தள்ளிப்போடும் ஒரு நொதியை (enzyme) கண்டுபிடித்தார்கள். முதுமையைத் தள்ளிப்போட அந்த நொதி உதவும் என்று அவர்கள் நம்பினார்கள். அதேசமயத்தில், டெலோமியர்களின் நீளம் குறையாமல் இருந்தால்கூட மனிதர்களால் 70, 80 வருஷங்களுக்கு மேல் வாழ முடியாது என்று அவர்கள் தங்களுடைய அறிக்கையில் ஒத்துக்கொண்டார்கள்.
செல்களை மாற்றியமைப்பதும் முதுமைக்கு முட்டுக்கட்டை போட உதவும். நம்முடைய செல்கள் பிரிய முடியாதளவுக்கு முதுமை அடையும்போது, பக்கத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்களுக்குத் தவறான சிக்னல்களை அனுப்பும். அதனால்தான், வீக்கமும் தீராத வலியும் நோயும் வருகின்றன. சமீபத்தில், பிரான்சிலுள்ள விஞ்ஞானிகள் வயதான நபர்களுடைய செல்களை மாற்றியமைத்திருக்கிறார்கள். அதுவும், அந்த நபர்களில் சிலர் 100 வயதைத் தாண்டியவர்கள். இந்த ஆராய்ச்சி, முதுமையை முறியடிக்க முடியும் என்பதை நிரூபித்திருப்பதாக அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் ஜீன்-மார்க் லமாட்டர் அறிவித்தார்.
அறிவியல் நம் ஆயுளைக் கூட்டுமா?
முதுமையைத் தடுக்க பல சிகிச்சைமுறைகள் இருந்தாலும், இப்போது வாழ்வதைவிட அதிக காலத்துக்கு மனிதர்களால் வாழ முடியாது என்று நிறைய விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 19-வது நூற்றாண்டிலிருந்து, மனிதர்களின் சராசரி வாழ்நாள் காலம் அதிகரித்துக்கொண்டே வந்திருப்பது உண்மைதான். ஆனால் இதற்கு முக்கியக் காரணம், சுகாதாரம், தொற்றுநோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவைதான். மனிதர்களுடைய வாழ்நாள் காலம் இதற்குமேல் அதிகமாவதற்கு அவ்வளவாக வாய்ப்பில்லை என்று சில மரபியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சுமார் 3,500 வருஷங்களுக்கு முன்பு, பைபிள் எழுத்தாளர்களில் ஒருவரான மோசே இப்படிச் சொன்னார்: “எங்களுடைய ஆயுள் 70 வருஷம், நிறைய தெம்பு இருந்தால் 80 வருஷம். ஆனால், அவை துன்ப துயரங்களால்தான் நிறைந்திருக்கின்றன. அவை வேகமாக ஓடிவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகிறோம்.” (சங்கீதம் 90:10) வாழ்நாள் காலத்தைக் கூட்ட மனிதர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், இன்றும் நம் நிலைமை மோசே சொன்னது போலத்தான் இருக்கிறது.
ஆனால், சில உயிரினங்கள் 200 வருஷங்களுக்கு மேல் வாழ்கின்றன! ராட்சஸ செக்கோயா போன்ற மரங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு வாழ்கின்றன! அப்படியென்றால், நாம் ஏன் வெறும் 70, 80 வருஷத்துக்கு மட்டும் வாழ்கிறோம் என்ற கேள்வி நம் மனதைக் குடைகிறது, இல்லையா?