மரணத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
நாம் எவ்வளவுதான் திடகாத்திரமாக இருந்தாலும் அல்லது செல்வ செழிப்பில் திளைத்தாலும் அன்றாட வேலைகளை ஓடி ஆடி செய்துகொண்டிருக்கையில் மரணத்தைப் பற்றிய நினைவு நம் உற்சாகத்தை உறிஞ்சிவிடுகிறது. அடுத்த முறை சாலையைக் கடக்கும் போதோ அல்லது படுக்கையில் படுத்திருக்கும் போதோ நாம் மரணத்தைத் தழுவலாம். நியூ யார்க் நகரிலும் வாஷிங்டன், டி.சி.-யிலும் செப்டம்பர் 11, 2001-ல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலால் ஏற்பட்ட பேரழிவை மனதில் அசைபோடுகையில், ‘கடைசிச் சத்துருவாகிய மரணம்’ சமுதாய/பொருளாதார அந்தஸ்தையும், வயதையும் பார்த்து வருவதில்லை என்பதையும், அது சில சமயங்களில் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைக் காவுகொண்டு விடுகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம்.—1 கொரிந்தியர் 15:26.
மரணம் மிகவும் பயங்கரமானதாக இருந்தாலும், அதில் மக்கள் காட்டும் ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை எனத் தோன்றுகிறது. குறிப்பாக, கதிகலங்க வைக்கும் சூழ்நிலைமைகளில் எண்ணற்றோர் பலியான அறிக்கைகளைப் பற்றி தகவலறிய மக்கள் துடிப்பதால் செய்தித்தாள்களுக்கு டிமான்ட் அதிகமாகிறது. இப்படிப்பட்ட செய்திகளை பார்ப்பதற்கே டெலிவிஷனிடமும் நிறைய பேர் ஈர்க்கப்படுகின்றனர். போர், இயற்கை சேதம், குற்றச்செயல், அல்லது நோய் என எதனால் மரணம் ஏற்பட்டாலும் சரி, அதைப் பற்றிய அறிக்கைகளை வாசிப்பதில் மக்கள் சலிப்படைவதே இல்லை. முக்கிய பிரமுகர்களும் புகழ்பெற்றவர்களும் மரிக்கையில் மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து மரணம் மனதை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
மரணத்துக்கு பலர் பலவிதமாக பிரதிபலிப்பதை மறுக்க முடியாது. மற்றவர்களின் மரணத்தில் மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் மரணத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க விரும்புவதில்லை. நம்மில் பலரும் எண்ணிப் பார்க்க விரும்பாத ஒரு விஷயம் அதுதான்.
மரணத்தை நினைத்து குழப்பமா?
நம்முடைய மரணத்தைப் பற்றி எண்ணிப் பார்ப்பது எப்போதும் வேண்டாத காரியமாக தோன்றுகிறது. எப்போதுமே அப்படித்தான் தோன்றும். அது ஏன்? ஏனென்றால், என்றுமாக வாழ்வதற்கான தீராத ஆசையோடுதான் கடவுள் நம்மைப் படைத்தார். ஆங்கர் பைபிள் மொழிபெயர்ப்பின்படி “நித்திய கால நினைவை அவர்கள் இருதயத்தில் வைத்திருக்கிறார்” என்று பிரசங்கி 3:11 கூறுகிறது. ஆகவே மரணம் நிச்சயம் என்ற உண்மையில் மனிதரின் மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழுகிறது, உடன்பாடில்லாத ஓர் உணர்வு தொடருகிறது. இந்த மனப்போராட்டத்தை சமாளித்து தொடர்ந்து வாழ வேண்டும் என்ற இயற்கையான ஆசையை திருப்திப்படுத்த ஆத்துமா சாகாமை, மறுபிறப்பு என்றெல்லாம் பல விதமான நம்பிக்கைகளையும் மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் மரணம் என்பது மனக்கலக்கத்தை ஏற்படுத்தும், திகிலடையச் செய்யும் சம்பவம். இந்த மரண பயம் எங்கும் காணப்படுகிறது. ஆகவே மனித சமுதாயம் பொதுவில் மரணத்தை பயத்துடன் பார்ப்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு விஷயம் என்னவென்றால், செல்வத்தைச் சேர்ப்பதிலும் செல்வாக்கு பெறுவதிலும் வாழ்நாள் முழுவதையும் வீணடிப்பது எத்தனை பயனற்றது என்பதை மரணம் புரிய வைக்கிறது.
மரண படுக்கையில் தனிமையா?
கடந்த காலங்களில், நோய்வாய்ப்பட்ட அல்லது சாவுக்கேதுவாக காயப்பட்ட மனிதர் தனக்குப் பிடித்த தன் சொந்த வீட்டில் பரிச்சயமான சூழலில் மரிக்கவே அனுமதிக்கப்பட்டார். பைபிள் காலங்களைப் பொருத்ததிலும் பெரும்பாலும் இதுவே உண்மை. சில கலாச்சாரங்களில் இன்றும் இப்படி நடக்கிறது. (ஆதியாகமம் 49:1, 2, 33) இப்படிப்பட்டவர்களுடைய காரியத்தில் குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக கூடிவருகின்றனர். பிள்ளைகளும் சம்பாஷணையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இதனால், தான் மட்டுமே துக்கப்படுவதில்லை என்ற உணர்வு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. பொறுப்பையும் துக்கத்தையும் பகிர்ந்துகொள்ள மற்றவர்கள் இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
மரணத்தைப் பற்றி பேசவே கூடாது, அது மிகவும் சோர்வுண்டாக்கும் விஷயம், அதுவும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அதைப் பற்றி பேசக்கூடாது, அதை அவர்களால் “தாங்கிக்கொள்ள முடியாது” என்று நினைக்கும் சில சமுதாயங்களில் நிலைமை மிகவும் வித்தியாசமாக உள்ளது. இப்போதெல்லாம் மரிப்பதும் பல வழிகளில் வித்தியாசப்படுகிறது, பெரும்பாலும் தனிமையில் இருக்கையில் அது சம்பவிக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள், வீட்டாரின் அன்பான கவனிப்போடு அமைதியாக கடைசி மூச்சை விடவே ஆசைப்படுகிறோம்; ஆனால் அநேகர் மருத்துவமனையில், பொதுவாக தனிமையில் வலியில் துடித்துக்கொண்டு, உயர்-தொழில்நுட்ப கருவிகள் உடலில் இணைக்கப்பட்டிருக்க தங்கள் கடைசி மூச்சை விடுவதே கொடூரமான உண்மை. இன்னொரு பக்கத்தில், லட்சோப லட்சம் பேர் அநாதைகளாக, இனப்படுகொலையில், பஞ்சத்தில், எய்ட்ஸில், உள்நாட்டுப் போரில் அல்லது கடும் ஏழ்மையில் முகம் தெரியாத ஆட்களாக பலியாகிறார்கள்.
சிந்திக்க வேண்டிய விஷயம்
மரணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாம் என பைபிள் சொல்வதில்லை. சொல்லப்போனால், பிரசங்கி 7:2 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்.” நிஜ வாழ்வில் மரணத்தை சந்திக்கையில், தினசரி வாழ்க்கையின் கவலைகளை அல்லது நடவடிக்கைகளை ஒரு கணம் தள்ளி வைத்துவிட்டு, வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை மனதில் யோசித்துப் பார்ப்போம். அப்படி செய்யும்போது வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்வதற்கு அல்லது வாழ்க்கையை வீணடிப்பதற்கு பதிலாக அதிக அர்த்தமுள்ள விதத்தில் வாழ நமக்கு உதவி செய்யும்.
மரணத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வாழ்க்கையின் முடிவைப் பற்றிய உங்கள் உணர்ச்சிகளை, நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை, பயங்களை ஆராய்ந்துவிட்டீர்களா?
வாழ்வின் இயல்பையும் சாவின் இயல்பையும் விளங்கிக்கொண்டு அவற்றை விளக்குவது மனிதனின் திறமைக்கு அப்பாற்பட்டது. இந்த விஷயத்தில் பேச தகுதியுள்ள நம்பிக்கையான ஒரேவொருவர் நம்முடைய படைப்பாளரே. அவரிடம்தான் ‘ஜீவ ஊற்றும்,’ ‘மரணத்திற்கு நீங்கும் வழிகளுமுண்டு.’ (சங்கீதம் 36:9; 68:20) மரணத்தைப் பற்றிய சில பிரபலமான நம்பிக்கைகளை கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஆய்வு செய்வது ஒருவேளை ஆச்சரியமளிப்பதாக இருந்தாலும் ஆறுதலாகவும் உற்சாகமளிப்பதாகவும் இருக்கும். மரணம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அது வெளிப்படுத்தும்.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
மரணம் நிகழலாம் என்ற உண்மை, அதிக அர்த்தமுள்ள வகையில் வாழ நமக்கு வழி செய்கிறது