“சமாதானத்திற்கான காலம்” சமீபம்!
“ஒவ்வொன்றுக்கும் குறிக்கப்பட்ட ஒரு காலமுண்டு, . . . போருக்கான ஒரு காலமும் சமாதானத்திற்கான ஒரு காலமும் [உண்டு].”—பிரசங்கி 3:1, 8, NW.
1. போரையும் சமாதானத்தையும் குறித்ததில் என்ன நிலைமை இந்த 20-ம் நூற்றாண்டில் இருந்துவருகிறது?
சமாதானத்தை அநேகர் வாஞ்சிக்கிறார்கள், நல்ல காரணத்தோடுதான். சரித்திரத்தில் வேறெந்த நூற்றாண்டையும்விட குறைந்த சமாதானத்தையே இந்த 20-ம் நூற்றாண்டு அனுபவித்திருக்கிறது. இது முரண்பாடாக உள்ளது. ஏனெனில் சமாதானத்தை உறுதியாக நிலைநாட்ட முன்னொருபோதும் இந்தளவு முயற்சி செய்யப்படவில்லை. 1920-ல் சர்வதேச சங்கம் அமைக்கப்பட்டது. 1928-ல் கெல்லாக்-ப்ரையன்ட் உடன்படிக்கை. இது, “முதல் உலக யுத்தத்திற்குப்பின் சமாதானத்தை கட்டிக் காப்பதற்கு ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் மிகவும் கம்பீரமானது” என்று ஒரு புத்தகத்தில் அழைக்கப்பட்டது. “அரசியல் செயல்திட்டத்தின் கருவியாக போரை உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ள ஒப்பந்தம் தெரிவித்து, பெரும்பாலும் உலக தேசங்கள் எல்லாவற்றாலும் கையெழுத்திடப்பட்டது.” கல்லறைக்குச் சென்ற சர்வதேச சங்கம், 1945-ல் ஐக்கிய நாட்டு சங்கமாக உயிர்பெற்று வந்தது.
2. ஐக்கிய நாட்டு சங்கத்தின் இலக்கு என்ன, எந்த அளவில் அது வெற்றிகண்டது?
2 சர்வதேச சங்கத்தைப்போல், ஐக்கிய நாட்டு சங்கத்தின் இலக்கும் உலக சமாதானத்தைப் பாதுகாப்பதே. ஆனால் அதன் வெற்றி வெற்றுவேட்டாகவே இருந்திருக்கிறது. அந்த இரண்டு உலக யுத்தங்களைப் போன்ற மாபெரும் ஓர் உலக யுத்தத்தை அதன்பின் அனுபவிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் டஜன்கணக்கான சிறிய போர்கள் லட்சக்கணக்கானோரின் மன சமாதானத்தையும் உடைமைகளையும் உயிரையுங்கூட வாரிக்கொண்டு போயிருக்கின்றன. ஐக்கிய நாட்டு சங்கம் 21-ம் நூற்றாண்டை ‘சமாதானத்திற்கான ஒரு காலமாக’ மாற்றுமென்று குருட்டுத்தனமாக நம்ப முடியுமா?
உண்மையான சமாதானத்திற்கு மூலாதாரம்
3. பகையோடுகூட மெய்யான சமாதானம் ஏன் இருந்துவர முடியாது?
3 ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் இடையில் சமாதானம் நிலவ வெறுமனே பொறுத்துப்போவதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது. தான் பகைக்கும் ஒருவரோடு எவராவது உண்மையில் சமாதானமாக இருக்க முடியுமா? 1 யோவான் 3:15-ன்படி, அப்படியிருக்க முடியாது: “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்.” வேரூன்றிய பகைகள் தீவிர வன்முறை செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு சமீப சரித்திரம் சான்று பகருகிறது.
4. யார் மாத்திரமே சமாதானத்தை அனுபவிக்க முடியும், ஏன்?
4 யெகோவாவே ‘சமாதானம் அருளும் கடவுள்.’ ஆகவே, கடவுளில் அன்புகூருவோரும் அவருடைய நீதியுள்ள நியமங்களுக்கு ஆழ்ந்த மதிப்புடையோருமே சமாதானத்தை அனுபவிக்க முடியும். யெகோவா எல்லாருக்கும் சமாதானத்தை அருளுகிறதில்லை என்பது தெளிவாயிருக்கிறது. “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.” இது ஏனென்றால், சமாதானம் எனும் கனியை பிறப்பிக்கும் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட துன்மார்க்கர் மறுத்துவிடுகிறார்கள்.—ரோமர் 15:33; ஏசாயா 57:21; கலாத்தியர் 5:22.
5. கிறிஸ்தவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாதது எது?
5 முக்கியமாய் இந்த 20-ஆம் நூற்றாண்டு போலி கிறிஸ்தவர்கள் அடிக்கடி செய்ததுபோல், சக மனிதருக்கு எதிராக போரிடுவது மெய் கிறிஸ்தவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. (யாக்கோபு 4:1-4) கடவுளைப் பற்றி திரித்துக்கூறுகிற போதகங்களுக்கு எதிராக இவர்கள் போரிடுகிறார்கள் என்பது மெய்யே. ஆனால் இந்தப் போர், ஆட்களுக்குத் தீங்கு செய்வதற்கு அல்ல, உதவி செய்வதற்கே. மத வேறுபாடுகளுக்காகவோ தேசியவாதத்திற்காகவோ மற்றவர்களைத் துன்புறுத்துவது உண்மையான கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் எதிர்மாறானது. “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுறுத்தினார்.—ரோமர் 12:17-19; 2 தீமோத்தேயு 2:24, 25.
6. இன்று எங்கு மாத்திரமே உண்மையான சமாதானத்தைக் காண முடியும்?
6 இன்று, கடவுளால் அருளப்படும் சமாதானம், யெகோவா தேவனை வணங்கும் உண்மையான வணக்கத்தாருக்குள் மாத்திரமே காணப்படுகிறது. (சங்கீதம் 119:165; ஏசாயா 48:18) அரசியல் சம்பந்தமாக எல்லா இடங்களிலும் நடுநிலை வகிப்பதால், அரசியல் வேறுபாடுகள் அவர்கள் ஒற்றுமையைக் குலைக்கிறதில்லை. (யோவான் 15:19; 17:14) ‘பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருப்பதால்,’ அவர்கள் சமாதானத்திற்கு பயமுறுத்தலாக மதவேறுபாடுகள் எதுவும் இல்லை. (1 கொரிந்தியர் 1:10) யெகோவாவின் சாட்சிகள் அனுபவித்து மகிழும் சமாதானம் நவீனகால ஓர் அற்புதம். அது, கடவுள் கொடுக்கும் பின்வரும் வாக்குறுதிக்கு இசைவாக அவரால் கொண்டுவரப்பட்ட ஒன்று: “நான் . . . உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.”—ஏசாயா 60:17; எபிரெயர் 8:10.
ஏன் ‘போருக்கான ஒரு காலம்’?
7, 8. (அ) யெகோவாவின் சாட்சிகள், சமாதான நிலையை ஏற்றிருக்கிறபோதிலும், தற்காலத்தை எவ்வாறு கருதுகிறார்கள்? (ஆ) ஒரு கிறிஸ்தவனின் போருக்குரிய முக்கிய ஆயுதம் எது?
7 யெகோவாவின் சாட்சிகள் சமாதான நிலைநிற்கை ஏற்றபோதிலும், தற்காலம் முக்கியமாய் ‘போருக்கான ஒரு காலம்’ என்று கருதுகிறார்கள். நிச்சயமாகவே, சொல்லர்த்தமான போரல்ல. ஏனெனில், கத்தி முனையில் பைபிள் செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவது, ‘விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்’ என்ற கடவுளுடைய அழைப்புக்கு முரண்படும். (வெளிப்படுத்துதல் 22:17) கட்டாய மதமாற்றங்கள் இதில் இல்லை! யெகோவாவின் சாட்சிகள் செய்யும் போர், கண்டிப்பாக ஆவிக்குரியதே. பவுல் இவ்வாறு எழுதினார்: “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 கொரிந்தியர் 10:4; 1 தீமோத்தேயு 1:18.
8 நம்முடைய ‘போராயுதங்களில்’ முக்கியமானது, ‘தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்.’ (எபேசியர் 6:17) இந்தப் பட்டயம் வல்லமையுள்ளது. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) இந்தப் பட்டயத்தை பயன்படுத்துவதன்மூலம், “தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும்” கிறிஸ்தவர்கள் நிர்மூலமாக்குகிறார்கள். (2 கொரிந்தியர் 10:5) பொய்க் கோட்பாடுகளையும், தீங்கான பழக்கவழக்கங்களையும், தேவ ஞானத்தைப் பார்க்கிலும் மனித ஞானத்தையே பிரதிபலிக்கிற தத்துவ ஞானங்களையும் அம்பலப்படுத்த அது அவர்களுக்கு உதவி செய்கிறது.—1 கொரிந்தியர் 2:6-8; எபேசியர் 6:11-13.
9. பாவ மாம்சத்திற்கு விரோதமான நம்முடைய போருக்கு ஏன் நிறுத்தமே இருக்க முடியாது?
9 பாவமுள்ள மாம்சத்திற்கு எதிரான போரே ஆவிக்குரிய போரின் மற்றொரு வகை. பவுலின் இந்த முன்மாதிரியை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் சொன்னார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள் [“மரத்துப்போகச் செய்யுங்கள்,” NW]” என்று கொலோசேயிலிருந்த கிறிஸ்தவர்கள் அறிவுரை கூறப்பட்டார்கள். (கொலோசெயர் 3:5) மேலும், பைபிள் எழுத்தாளராகிய யூதா, கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு கூறினார்: ‘பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டும்.’ (யூதா 3) நாம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பவுல் பதிலளிக்கிறார்: “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” (ரோமர் 8:13) இந்தத் தெளிவான கூற்றின்படி, நம்முடைய கெட்ட போக்குகளுக்கு எதிரான நம்முடைய போரில் தளர்ந்துபோவதற்கே இடமில்லை.
10. 1914-ல் என்ன நடந்தது, விரைவில் என்ன நடக்கும்?
10 ‘நமது கடவுள் பழிவாங்கும் நாள்’ நெருங்கியிருப்பதால், தற்காலத்தை போருக்கான காலம் என கருதுவதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கிறது. (ஏசாயா 61:1, 2) 1914-ல் மேசியானிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கும், சாத்தானின் ஒழுங்குமுறைக்கு எதிராக போர் நடத்த அதற்கு அதிகாரம் அளிப்பதற்கும், யெகோவாவின் குறிக்கப்பட்ட காலம் வந்திருந்தது. கடவுளுடைய தலையீடு இல்லாமல் மனிதனால் ஆளப்படும் ஆட்சியை மனிதர் சோதனை செய்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்ட காலப்பகுதி அந்தச் சமயத்தில் முடிவடைந்தது. கடவுளுடைய மேசியானிய அரசரை ஏற்பதற்குப் பதிலாக, முதல் நூற்றாண்டில் பெரும்பான்மையர் செய்தது போலவே, பெரும்பாலான மக்கள் தொடர்ந்து அவரை ஏற்க மறுக்கிறார்கள். (அப்போஸ்தலர் 28:27) ஆகவே, இந்த ராஜ்ய எதிர்ப்பின் காரணமாக கிறிஸ்து ‘தம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்ய’ வற்புறுத்தப்பட்டவராக இருக்கிறார். (சங்கீதம் 110:2, NW) அவர் இதில் ‘ஜெயிப்பார்’ என்று வெளிப்படுத்துதல் 6:2 உறுதிகூறுவது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. ‘எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் எனப்படுகிற,’ ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தின்போது’ இதை அவர் செய்வார்.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
‘பேசுவதற்கான காலம்’ இதுவே
11. யெகோவா ஏன் மிதமீறிய அளவில் பொறுமையோடு இருந்திருக்கிறார், ஆனால் முடிவில் என்ன வரும்?
11 மனித விவகாரங்களில் அந்தத் திருப்பு கட்டமான 1914-லிருந்து 85 ஆண்டுகள் கடந்துவிட்டன. மனிதவர்க்கத்தினரின்மீது யெகோவா மிதமீறிய அளவில் பொறுமையோடு இருந்திருக்கிறார். நிலைமையின் அவசரத் தன்மையை தம்முடைய சாட்சிகள் முழுமையாய் தெரிந்திருக்கும்படி செய்திருக்கிறார். கோடிக்கணக்கானோரின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. இந்தத் திரளானோர் எச்சரிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில், “யெகோவா . . . எவரும் அழிக்கப்படும்படி விரும்புகிறதில்லை, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றே விரும்புகிறார்.” (2 பேதுரு 3:9, NW) எனினும், விரைவில் ‘கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும் வானத்திலிருந்து வெளிப்படுவார்.’ அப்போது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை வேண்டுமென்றே ஏற்காது தள்ளினவர்கள் அனைவரும் “ஆக்கினையை [“பழித்தீர்ப்பை,” NW]” அனுபவிப்பார்கள். ‘தேவனை அறியாதவர்கள்மீதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்மீதும்’ இயேசு இதை கொண்டுவருவார்.—2 தெசலோனிக்கேயர் 1:6-9.
12. (அ) மிகுந்த உபத்திரவம் எப்போது தொடங்கும் என்பதைப் பற்றிய எந்த ஊகிப்பும் ஏன் பயனற்றது? (ஆ) இதன் சம்பந்தமாக என்ன ஆபத்தை இயேசு எச்சரித்தார்?
12 யெகோவாவின் பொறுமை எப்போது முடிவாக தீரும்? அந்த “மிகுந்த உபத்திரவம்” எப்போது தொடங்கும் என்பதைப் பற்றி எந்த ஊகிப்பும் பயனற்றது. இயேசு தெளிவாக இவ்வாறு கூறினார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் . . . மற்றொருவனும் அறியான்.” மறுபட்சத்தில், இவ்வாறு அறிவுரை கூறினார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். . . . நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத்தேயு 24:21, 36, 42, 44) தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நாம் ஒவ்வொரு நாளும் உலக சம்பவங்களை விழிப்புடன் கவனித்து, மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதை எதிர்நோக்கியவர்களாக இருக்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:1-5) அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம், எப்போதும்போல் வாழ்க்கை நடத்திக்கொண்டு அமர்ந்திருக்கலாம் என்று நினைப்பது எவ்வளவு அபாயகரமானது! இயேசு சொன்னார்: “உங்கள் இருதயங்கள் பெருந் தீனியினாலும் வெறியினாலும் லௌகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடி உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இல்லையானால், அந்த நாள் திடீரென ஒரு கண்ணியைப்போல் உங்கள்மேல் வரும்.” (லூக்கா 21:34, 35, தி.மொ.) இதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம்: தற்போது அடிக்காதவாறு யெகோவாவின் “நான்கு தூதர்கள்” தடுத்து வைத்திருக்கிற அந்த ‘நான்கு காற்றுகள்’ என்றுமாக அவ்வாறு தடுத்து வைக்கப்பட போவதில்லை.—வெளிப்படுத்துதல் 7:1-3.
13. ஏறக்குறைய 60 லட்சம் பேர் எதை அறிந்திருக்கிறார்கள்?
13 விரைவாய் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பழித்தீர்க்கும் நாளை கருதுகையில், “பேச ஒரு காலமுண்டு” என்பதைப் பற்றிய சாலொமோனின் வார்த்தைகள் விசேஷித்த அர்த்தத்தை ஏற்கின்றன. (பிரசங்கி 3:7) நிச்சயமாக, இப்போதே ‘பேச ஒரு காலம்’ என்பதை அறிந்தவர்களாய், ஏறக்குறைய 60 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜாதிகாரத்தின் மகிமையைப் பற்றி ஆர்வத்துடன் பேசி, அவருடைய பழித்தீர்க்கும் நாளைக் குறித்து எச்சரித்து வருகிறார்கள். கிறிஸ்துவின் பராக்கிரம நாளிலே அவர்கள் தங்களை மனப்பூர்வமாய் அளிக்கிறார்கள்.—சங்கீதம் 110:3; 145:10-12.
“சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று” சொல்வோர்
14. பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டில் எந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்?
14 பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின்போது, எருசலேமில் இருந்தவர்களின் கீழ்ப்படியாத தாறுமாறான போக்கின் காரணமாக அவர்களுக்கு விரோதமாக கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்பின் செய்திகளை கடவுளுடைய தீர்க்கதரிசிகளாகிய எரேமியாவும் எசேக்கியேலும் அறிவித்தார்கள். கடவுளுடைய செய்தி அறிவிப்பாளர்களுக்கு எதிராக முதன்மையானவர்களும் செல்வாக்குமிக்கவர்களுமான மதத் தலைவர்கள் பேசினபோதிலும், அவர்கள் முன்னறிவித்த அந்த அழிவு பொ.ச.மு. 607-ல் நிறைவேறினது. அந்த மதத் தலைவர்கள், “மதிகெட்ட தீர்க்கதரிசிக[ள்] . . . சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, [கடவுளுடைய] ஜனத்தை மோசம்போக்[கினவர்களாக]” நிரூபித்தார்கள்.—எசேக்கியேல் 13:1-16; எரேமியா 6:14, 15; 8:8-12.
15. அக்காலத்தைப் போலவே இன்றும் பொய் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களா? விளக்குங்கள்.
15 அக்காலத்தில் வாழ்ந்த அந்த ‘மதிகெட்ட தீர்க்கதரிசிகளைப்போல்,’ இன்றும் மதத் தலைவர்கள் பெரும்பான்மையர், வரவிருக்கும் கடவுளுடைய ஆக்கினைத் தீர்ப்பின் நாளைக் குறித்து ஜனங்களை எச்சரிக்கத் தவறுகிறார்கள். அதற்குப் பதிலாக, சமாதானத்தையும் பாதுகாப்பையும் அரசியல் தொகுதிகள் முடிவில் கொண்டுவருமென்ற மழுப்புதலான ஒரு நம்பிக்கையை உண்டாக்குகிறார்கள். கடவுளைவிட மனிதரையே திருப்திசெய்ய அவர்கள் அதிக ஆவலுள்ளவர்களாக இருப்பதால், கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதையும் சீக்கிரத்தில் மேசியானிய அரசர் முழுமையாக வெற்றி பெறுவார் என்பதையும் தங்கள் சபையோருக்கு விளக்கிச் சொல்வதற்குப் பதிலாக, மக்கள் கேட்க விரும்புகிறவற்றை மாத்திரமே சொல்கிறார்கள். (தானியேல் 2:44; 2 தீமோத்தேயு 4:3, 4; வெளிப்படுத்துதல் 6:2) பொய்த் தீர்க்கதரிசிகளைப் போல, இவர்களும் “சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று” பேசுகிறார்கள். ஆனால், யாரை தாங்கள் தவறாக எடுத்துக் காட்டி, அவருடைய பெயரின்மீது சொல்லமுடியாத அளவில் நிந்தையைக் கொண்டுவந்தார்களோ அவருடைய கோபத்தை சீக்கிரத்தில் எதிர்ப்பட வேண்டியபோது, அவர்கள் நம்பிக்கை திடீர் பயநடுக்கமாக மாறும். வேசியாக பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கிற இந்தப் பொய்மத உலகப் பேரரசின் தலைவர்கள், சமாதானம் என்று தவறாக கூக்குரலிடுகையிலேயே அழிவார்கள்.—வெளிப்படுத்துதல் 18:7, 8.
16. (அ) யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்டவர்களாக நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள்? (ஆ) “சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று” சொல்வோரிலிருந்து அவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?
16 முக்கியமானவர்களும் செல்வாக்குமிக்கவர்களுமான தலைவர்களில் பெரும்பான்மையர் தங்கள் மாய்மால வாக்குறுதியைத் தொடர்ந்து அளிப்பது, உண்மையான சமாதானத்திற்கான கடவுளுடைய வாக்குறுதியில் விசுவாசமுள்ளோரின் நம்பிக்கையை அசைப்பதில்லை. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையின் உண்மைதவறா ஆதரவாளர்களாகவும் பொய் மதத்தை தைரியத்துடன் எதிர்ப்போராகவும் கடவுளுடைய ராஜ்யத்தை மன உறுதியுடன் ஆதரிப்போராகவும் நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சமாதானத்தைப் பற்றி செவிக்கு இனிதான பயனற்ற கூற்றுகளால் ஜனங்களை உறங்க வைப்பதற்கு முற்றிலும் மாறாக, இன்று போருக்கான காலம் என்ற உண்மையை கூறி அவர்களை விழிப்புற செய்யவே ஊக்கமாய் உழைக்கிறார்கள்.—ஏசாயா 56:10-12; ரோமர் 13:11, 12; 1 தெசலோனிக்கேயர் 5:6.
யெகோவா தம்முடைய மவுனத்தை கலைக்கிறார்
17. சீக்கிரத்தில் யெகோவா தம்முடைய மவுனத்தைக் கலைப்பார் என்பதன் அர்த்தமென்ன?
17 சாலொமோனும்கூட இவ்வாறு சொன்னார்: “நீதியுள்ளவனையும் துன்மார்க்கனையும் கடவுள் நியாயந்தீர்ப்பார், எக்காரியத்திற்கும் . . . ஒரு காலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.” (பிரசங்கி 3:17, தி.மொ.) ஆம், பொய் மதத்தின்மீதும், ‘யெகோவாவுக்கும் அவர் அபிஷேகம் பண்ணினவருக்கும் விரோதமாய் . . . எழும்புகிற’ ‘பூமியின் ராஜாக்கள்’ மீதும் ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு யெகோவா ஒரு காலத்தை குறித்திருக்கிறார். (சங்கீதம் 2:1-6; வெளிப்படுத்துதல் 16:13-16) அந்தக் காலம் வந்தவுடன், யெகோவா ‘மவுனமாயிருக்கும்’ நாட்கள் முடிந்துவிடும். (சங்கீதம் 83:1; ஏசாயா 62:1; எரேமியா 47:6, 7) சிங்காசனத்தில் ஏற்றப்பட்டிருக்கும் தம் மேசியானிய அரசராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அவருடைய எதிரிகள் புரிந்துகொள்ளும் அந்த ஒரே மொழியில் “பேசுவார்”: ‘கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி; அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப் பண்ணுவேன். குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.”—ஏசாயா 42:13-16.
18. சீக்கிரத்தில் கடவுளுடைய ஜனங்கள் என்ன கருத்தில் ‘மவுனமாயிருப்பார்கள்’?
18 தம்முடைய தேவத்துவத்தின் சார்பில் யெகோவா ‘பேசுகையில்,’ அவருடைய ஜனங்கள் தங்கள் சார்பாக அதற்குமேலும் பேச வேண்டியதில்லை. அது அவர்கள்தாமே ‘மவுனமாயிருப்பதற்கான’ சமயமாயிருக்கும். கடந்த காலங்களில் கடவுளுடைய ஊழியர்களுக்குப் பொருந்தின இந்த வார்த்தைகள் அவர்களுக்குப் பொருந்தும்: “அங்கே நீங்கள் போரிட வேண்டியதில்லை; . . . நீங்கள் அணிவகுத்து நின்று யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ரட்சிப்பைப் பாருங்கள்.”—2 நாளாகமம் 20:17, NW.
19. சீக்கிரத்தில் என்ன சிலாக்கியம் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு இருக்கும்?
19 சாத்தானுக்கும் அவனுடைய அமைப்புக்கும் எப்பேர்ப்பட்ட படுதோல்வி! கிறிஸ்துவின் மகிமைப்படுத்தப்பட்ட சகோதரர்கள், பின்வரும் இந்த வாக்குறுதியின்படி, நீதியின் சார்பாக கவனிக்கத்தக்க ஒரு வெற்றியில் பங்குகொள்வார்கள்: “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.” (ரோமர் 16:20) நீண்ட காலமாக காத்திருந்த சமாதானத்திற்கான அந்தக் காலம் கடைசியாய் சமீபித்திருக்கிறது.
20. சீக்கிரத்தில் எதற்கு காலமாயிருக்கும்?
20 பூமியில் யெகோவாவினுடைய வல்லமையின் இந்த மகா வெளிப்பாட்டை உயிர்தப்பிப் பிழைத்திருக்கிற எல்லாருடைய வாழ்க்கையும், எத்தகைய ஆசீர்வாதமாயிருக்கும்! உண்மையுள்ளோராயிருந்த கடந்தகால ஆண்களும் பெண்களும் உயிர்த்தெழுவதற்கான குறிக்கப்பட்ட காலம் வந்திருக்கும்போது, விரைவில் அவர்களும் இவர்களோடு சேர்ந்துகொள்வார்கள். கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சி, மெய்யாகவே ‘நட்டுவைக்க ஒருகாலம்; . . . குணமாக்க ஒருகாலம்; . . . கட்ட ஒருகாலம்; . . . நகைக்க ஒரு காலம்; . . . துள்ளி விளையாட ஒருகாலம்; . . . நேசிக்க ஒருகாலமாக’ இருக்கும். ஆம், அது ‘சமாதானத்திற்கான ஒரு காலமாக’ என்றென்றும் இருக்கும்!—பிரசங்கி 3:1-8, தி.மொ.; சங்கீதம் 29:11; 37:11; 72:7.
உங்கள் பதில் என்ன?
◻ நிலையான சமாதானத்திற்கு மூலாதாரம் என்ன?
◻ யெகோவாவின் சாட்சிகள் ஏன் தற்காலத்தை “போருக்கான ஒரு காலம்” என்று கருதுகிறார்கள்?
◻ கடவுளுடைய ஜனங்கள் எப்போது “பேச” வேண்டும், எப்போது ‘மவுனமாயிருக்க’ வேண்டும்?
◻ எவ்வாறு, எப்போது யெகோவா தம்முடைய மவுனத்தைக் கலைப்பார்?
[பக்கம் 13-ன் பெட்டி/படங்கள்]
இவற்றிற்கு யெகோவா ஒரு காலத்தை குறித்திருக்கிறார்
◻ கடவுளுடைய ஜனங்கள்மீது தாக்குதல் செய்ய கோகை திருப்புவதற்கு.—எசேக்கியேல் 38:3, 4, 10-12
◻ மகா பாபிலோனை அழிக்கும்படியான ஆலோசனையை மனித ஆளுநர்களின் இருதயங்களில் வைப்பதற்கு.—வெளிப்படுத்துதல் 17:15-17; 19:2
◻ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தை நடத்துவதற்கு.—வெளிப்படுத்துதல் 19:6, 7
◻ அர்மகெதோன் போரை தொடங்குவதற்கு.—வெளிப்படுத்துதல் 19:11-16, 19-21
◻ இயேசுவின் ஆயிரமாண்டு ஆட்சியைத் ஆரம்பிக்க சாத்தானை கட்டிவைப்பதற்கு.—வெளிப்படுத்துதல் 20:1-3
இந்தச் சம்பவங்கள், வெறுமென வேதவசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. யெகோவா தீர்மானிக்கிற வரிசையிலும், அவர் தீர்மானிக்கிற அதே சமயத்திலுமே, இந்த எல்லா ஐந்து சம்பவங்களும் நடக்கும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.
[பக்கம் 15-ன் படங்கள்]
கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சி மெய்யாகவே இவற்றிற்கு காலமாயிருக்கும் . . .
சிரித்து மகிழ்வதற்கு . . .
தழுவுவதற்கு . . .
நேசிப்பதற்கு . . .
நடுவதற்கு . . .
துள்ளி விளையாடுவதற்கு . . .
கட்டுவதற்கு . . .