சந்தோஷமாய் ஆர்ப்பரிக்க நமக்கு காரணமுண்டு
“சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.”—ஏசாயா 35:10.
1. சந்தோஷத்திற்கான குறிப்பிட்ட காரணத்தை இன்று யார் கொண்டிருக்கின்றனர்?
இப்போதெல்லாம் அநேகர் உண்மையில் சந்தோஷமாக இல்லை என்பதை நீங்கள் ஒருவேளை கவனித்திருப்பீர்கள். என்றபோதிலும், உண்மை கிறிஸ்தவர்களாக, யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கின்றனர். அதே சந்தோஷத்தை அடையும் எதிர்பார்ப்பு, சாட்சிகளுடன் கூட்டுறவுகொள்ளும் சிறியோரும் பெரியோருமாகிய இன்னும் முழுக்காட்டப்படாத கூடுதலான லட்சக்கணக்கானோருக்கு முன்பாகவே இருக்கிறது. இந்தப் பத்திரிகையிலுள்ள இந்த வார்த்தைகளை நீங்கள் இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிற உண்மைதானே, சந்தோஷம் ஏற்கெனவே உங்களுடையதாய் இருக்கிறது அல்லது உங்களுக்கு எட்டும் தொலைவில் இருக்கிறது என்பதை சுட்டிக் காண்பிக்கிறது.
2. பெரும்பாலான மக்களுடைய பொதுவான நிலையிலிருந்து ஒரு கிறிஸ்தவனின் சந்தோஷம் எவ்வாறு வேறுபடுகிறது?
2 பெரும்பாலானோர் தங்களுடைய வாழ்க்கை ஏதோவொன்றில் குறைவுபடுவதாக உணருகின்றனர். உங்களைப் பற்றியதென்ன? உண்மைதான், நீங்கள் பயன்படுத்துவதற்கு வேண்டிய எல்லா நவீன சாதனங்களும், நிச்சயமாகவே இன்றைய செல்வந்தர்களும் அதிகாரமுள்ளவர்களும் வைத்திருக்கும் எல்லாமும் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் இன்னும் நல்ல ஆரோக்கியமும் அதிக திடமும் உள்ளவர்களாயிருக்க விரும்பலாம். இருந்தாலும், சந்தோஷத்தைப் பொறுத்தவரையில், உலகிலுள்ள கோடிக்கணக்கானோரில் பெரும்பான்மையோரைக் காட்டிலும் நீங்கள் அதிக செல்வந்தர்களாயும் அதிக ஆரோக்கியமுள்ளவர்களாயும் இருக்கிறீர்கள் என்று தாராளமாக சொல்லலாம். அதெப்படி?
3. அர்த்தம் நிறைந்த என்ன வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்குத் தகுதியுடையவை, ஏன்?
3 இயேசுவினுடைய பின்வரும் வார்த்தைகளை நினைவுபடுத்திப்பாருங்கள்: “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.” (யோவான் 15:11) “உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்.” என்னே ஓர் விவரிப்பு! கிறிஸ்தவ வாழ்க்கை முறையைப் பற்றிய ஆழமான படிப்பு, நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருப்பதற்கான அநேக காரணங்களை வெளிப்படுத்தும். ஆனால் இப்பொழுதே, ஏசாயா 35:10-ல் உள்ள அர்த்தம் நிறைந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். இவை அர்த்தம் நிறைந்தவை, ஏனெனில் அவை இன்று நம்முடன் அதிக சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. நாம் வாசிக்கிறோம்: “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி [“வரையறையில்லா காலத்துக்கு சந்தோஷமாயிருத்தல்,” NW] அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.”
4. ஏசாயா 35:10-ல் என்ன வகையான சந்தோஷம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, இதற்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
4 “வரையறையில்லா காலத்துக்கு சந்தோஷமாயிருத்தல்.” “வரையறையில்லா காலத்துக்கு” என்ற சொற்றொடர், எபிரெயுவில் ஏசாயா எழுதினதன் திருத்தமான மொழிபெயர்ப்பாகும். ஆனால், மற்ற வசனங்கள் உறுதிசெய்கிறபடி, இந்த வசனத்தின் உட்கருத்து ‘என்றென்றும்’ என்பதாகும். (சங்கீதம் 45:6; 90:2; ஏசாயா 40:28; NW) ஆகவே, நித்தியத்துக்கும் சந்தோஷமாயிருப்பதை அனுமதிக்கும்—ஆம், நியாயப்படுத்தும்—சூழ்நிலைமைகளில் சந்தோஷமாயிருப்பது முடிவில்லாதிருக்கும். அது இனிமையாக தொனிக்கவில்லையா? எனினும், ஒருவேளை அந்த வசனம் ஒரு கோட்பாட்டியலான சூழ்நிலையைக் குறித்த ஒரு குறிப்புரையாக உங்களை கவர்ந்து, ‘என்னுடைய அன்றாட பிரச்சினைகளும் கவலைகளும் என்னை உட்படுத்துகிற அளவுக்கு உண்மையாகவே அது என்னை உட்படுத்துவதில்லை,’ என்று நீங்கள் நினைக்கும்படி செய்யலாம். ஆனால் உண்மைகள் அதற்கு மாறாக நிரூபிக்கின்றன. ஏசாயா 35:10-ல் உள்ள தீர்க்கதரிசன வாக்குறுதி இன்று உங்களுக்கு அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. அதெப்படி என்பதை கண்டுபிடிக்க, அழகிய அதிகாரமாகிய ஏசாயா 35-ன் ஒவ்வொரு பகுதியையும் அதன் சூழமைவில் சிந்திப்பதன் மூலம் நாம் ஆராய்வோமாக. நாம் கண்டுபிடிக்கும் காரியங்களை நீங்கள் மகிழ்ந்து அனுபவிப்பீர்கள் என்பதில் நிச்சயமாயிருங்கள்.
சந்தோஷப்பட வேண்டியவர்களாயிருந்த ஜனங்கள்
5. என்ன தீர்க்கதரிசன சூழமைவில் ஏசாயா 35-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம் காணப்படுகிறது?
5 ஓர் உதவியாக, கவரத்தக்க இந்தத் தீர்க்கதரிசனத்தின் பின்னணியை, அதன் சரித்திரப்பூர்வமான சூழமைவை கவனிப்போமாக. சுமார் பொ.ச.மு. 732-ல் எபிரெய தீர்க்கதரிசியாகிய ஏசாயா இதை எழுதினார். அது பாபிலோனிய சேனைகள் எருசலேமை அழிப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பாகும். ஏசாயா 34:1, 2 காட்டுகிறபடி, ஏசாயா 34:6-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதோமைப் போன்ற தேசங்களின்மீது கோபாக்கினையை வெளிப்படுத்தப்போவதாக கடவுள் முன்னறிவித்திருந்தார். அதைச் செய்வதற்கு பூர்வ பாபிலோனியர்களைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாயிருக்கிறது. அதேவிதமாக, யூதர்கள் உண்மைத்தன்மையற்றவர்களாக இருந்ததால், கடவுள் பாபிலோனியர்களைக் கொண்டு யூதாவை நாசமடையச் செய்தார். அதன் விளைவு? கடவுளுடைய மக்கள் சிறைக்கைதிகளாக எடுத்துச் செல்லப்பட்டனர், அவர்களுடைய சொந்த தேசம் 70 ஆண்டுகளாக பாழாய் கிடந்தது.—2 நாளாகமம் 36:15-21.
6. ஏதோமியர்மீது வரவிருந்ததற்கும் யூதர்கள்மீது வரவிருந்ததற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?
6 என்றபோதிலும், ஏதோமியருக்கும் யூதருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஒன்றிருக்கிறது. ஏதோமியர் மீதான தெய்வீக தண்டனை தீர்வானதாய் இருந்தது; காலப்போக்கில் அவர்கள் ஒரு ஜனமாக மறைந்துபோனார்கள். ஆம், உலகப் புகழ்பெற்ற பெத்ராவின் எஞ்சிய பகுதிகளைப் போன்ற ஏதோமியர் வாழ்ந்திருந்த இடத்தில் இருந்த காலியான இடிபாடுகளை இன்னும் நீங்கள் சென்று பார்க்கலாம். ஆனால், ‘ஏதோமியர்’ என்று அடையாளப்படுத்த எந்த ஒரு தேசமோ ஜனமோ இன்று இல்லை. மறுபட்சத்தில், யூதாவை பாபிலோன் பாழாக்கியது என்றென்றும் நீடித்திருந்து, அத்தேசத்தை நித்திய காலமாக சந்தோஷமற்றதாக விட்டுவிட்டதா?
7. பாபிலோனிலிருந்த யூத சிறைக்கைதிகள் ஏசாயா 35-ம் அதிகாரத்திற்கு எவ்வாறு பிரதிபலித்திருக்கக்கூடும்?
7 இங்கே ஏசாயா 35-ம் அதிகாரத்திலுள்ள இந்த அதிசயமான தீர்க்கதரிசனம் சிலிர்க்க வைக்கும் உட்பொருளை உடையதாயிருக்கிறது. திரும்பநிலைநாட்டும் தீர்க்கதரிசனம் என்று இதை அழைக்கலாம், ஏனெனில் யூதர்கள் பொ.ச.மு. 537-ல் தங்கள் தாயகம் திரும்பியபோது அது தன் முதலாம் நிறைவேற்றத்தை கண்டது. பாபிலோனில் சிறைக்கைதிகளாயிருந்த இஸ்ரவேலர் தங்கள் தாயகம் திரும்புவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டனர். (எஸ்றா 1:1-11) இருந்தபோதிலும், அது சம்பவிக்கும் வரையாக இந்தத் தெய்வீக தீர்க்கதரிசனத்தை சிந்தித்த, பாபிலோனிலிருந்த யூத சிறைக்கைதிகள் தங்களுடைய தேசிய தாய்நாடாகிய யூதாவிற்கு திரும்பும்போது எந்தவிதமான நிலைமைகளை அவர்கள் காண்பார்கள் என்பதாக யோசித்திருக்கலாம். அவர்கள்தாமே எப்படிப்பட்ட நிலைமையில் இருப்பார்கள்? இதற்கான பதில்கள், நாம் சந்தோஷத்துடன் ஆர்ப்பரிப்பதற்கு நமக்கு உண்மையிலேயே ஏன் காரணம் இருக்கிறது என்பதோடு நேரடியாக தொடர்புடையவையாய் இருக்கின்றன. நாம் அதைப் பார்க்கலாம்.
8. பாபிலோனிலிருந்து திரும்பிவருகையில் யூதர்கள் எப்படிப்பட்ட நிலைமைகளைக் காண்பார்கள்? (ஒப்பிடுக: எசேக்கியேல் 19:3-6; ஓசியா 13:8.)
8 யூதர்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பி வரமுடியும் என்பதை கேட்டபோதுகூட, அந்தச் சூழ்நிலைமை அவர்களுக்கு நிச்சயமாகவே நம்பிக்கையூட்டுவதாய் தோன்றியிருக்காது. அவர்களுடைய தேசம் எழுபது ஆண்டுகளாக, ஒரு முழு வாழ்நாட்காலமளவாக பாழாய் கிடந்தது. அத்தேசத்திற்கு என்ன நடந்திருந்தது? விளைநிலங்கள், திராட்சைத் தோட்டங்கள், அல்லது பழத்தோட்டங்கள் போன்ற எதுவும் காடாக மாறியிருக்கும். நீர்ப்பாசன வசதியுடைய தோட்டங்கள் அல்லது நிலப்பகுதிகள், வறண்ட பாழ்நிலமாக அல்லது பாலைவனமாக ஆகியிருக்கும். (ஏசாயா 24:1, 4; 33:9; எசேக்கியேல் 6:14) பெருகியிருக்கும் காட்டு விலங்குகளைப் பற்றியும்கூட சிந்தித்துப்பாருங்கள். மாம்சபட்சினியாகிய சிங்கங்கள், சிறுத்தைகள் போன்றவற்றையும் இவை உட்படுத்தும். (1 இராஜாக்கள் 13:24-28; 2 இராஜாக்கள் 17:25, 26; உன்னதப்பாட்டு 4:8) ஆண், பெண், அல்லது பிள்ளையைப் பீறிப்போடும் வலிமையுடைய கரடிகளையும்கூட அவர்கள் அசட்டை செய்துவிட முடியாது. (1 சாமுவேல் 17:34-37; 2 இராஜாக்கள் 2:24; NW; நீதிமொழிகள் 17:12) விரியன் பாம்புகளையும் விஷமிக்க மற்ற பாம்புகளையும், அல்லது தேள்களையும் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. (ஆதியாகமம் 49:17; உபாகமம் 32:33; யோபு 20:16; சங்கீதம் 58:4; 140:3; லூக்கா 10:19) பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து திரும்பிவந்த அந்த யூதர்களுடன் நீங்கள் இருந்திருந்தால், இப்படிப்பட்ட இடத்தின் வழியாக நடந்துவருவதற்கு நீங்கள் ஒருவேளை தயங்கியிருந்திருப்பீர்கள். அவர்கள் வந்துசேர்ந்தபோது அது ஒரு பரதீஸாக இல்லை.
9. திரும்பிவந்தவர்கள் என்ன காரணத்தினிமித்தம் நம்பிக்கைக்கும் உறுதிக்குமான ஆதாரத்தைக் கொண்டிருந்தனர்?
9 என்றபோதிலும், யெகோவாதாமே தம்முடைய வணக்கத்தாரை சொந்த தேசத்திற்கு வழிநடத்தியிருந்தார், பாழான நிலைமையை முற்றிலும் மாற்றுவதற்குரிய வல்லமையும் அவரிடம் இருக்கிறது. சிருஷ்டிகரின் வல்லமையைக் குறித்து நீங்கள் அவ்வாறு நம்பவில்லையா? (யோபு 42:2; எரேமியா 32:17, 21, 27, 37, 41) ஆகவே, திரும்பி வந்துகொண்டிருந்த யூதர்களுக்கும் அவர்களுடைய தேசத்திற்கும் அவர் என்ன செய்வார்—அவர் என்ன செய்தார்? நவீன காலங்களில் வாழும் கடவுளுடைய மக்களின்மீதும் உங்களுடைய—தற்போதைய மற்றும் எதிர்கால—சூழ்நிலைமையின்மீதும் இது என்ன விளைவை உண்டாக்குகிறது? முதலாவதாக, அப்பொழுது என்ன சம்பவித்தது என்பதை நாம் காண்போம்.
மாற்றப்பட்ட நிலைமையைக் குறித்து சந்தோஷமாய் இருத்தல்
10. என்ன மாற்றத்தை ஏசாயா 35:1, 2 முன்னறிவித்தது?
10 அச்சந்தருகிற அத்தேசத்திற்கு யூதர்கள் திரும்பிச்செல்லும்படி கோரேசு அனுமதித்தபோது என்ன நடக்கும்? ஏசாயா 35:1, 2-ல் உள்ள கிளர்ச்சியூட்டும் அந்தத் தீர்க்கதரிசனத்தை வாசியுங்கள்: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும். லீபனோனின் மகிமையும், கர்மேல், சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.”
11. அத்தேசத்தைப் பற்றிய என்ன அறிவின்பேரில் ஏசாயா கவனத்தைத் திருப்பினார்?
11 பைபிள் காலங்களில், லீபனோன், கர்மேல், சாரோன் ஆகியவை அதன் பசுமை நிறைந்த அழகுக்கு பெயர்பெற்றவையாய் இருந்தன. (1 நாளாகமம் 5:16; 27:29; 2 நாளாகமம் 26:10, NW; உன்னதப்பாட்டு 2:1; 4:15; ஓசியா 14:5-7) கடவுளுடைய உதவியால் மாற்றப்படும் தேசம் எதைப்போல் இருக்கும் என்பதை விவரிப்பதற்கு ஏசாயா அந்த உதாரணங்களிடம் கவனத்தைத் திருப்பினார். ஆனால் வெறுமனே நிலத்தின்மீது ஏற்படப்போகும் மாற்றமாகத்தான் இது இருந்ததா? நிச்சயமாகவே இல்லை!
12. ஏசாயா 35-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனத்திற்கு மக்களே மையமாக இருக்கின்றனர் என்று நாம் ஏன் சொல்லமுடியும்?
12 அத்தேசம் ‘மகிழ்ச்சியினால் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்,’ என்று ஏசாயா 35:2 சொல்கிறது. அந்த நிலமும் செடிகொடிகளும் சொல்லர்த்தமாகவே ‘மகிழ்ச்சியினால் பூரிக்க’வில்லை என்பது நமக்குத் தெரியும். இருப்பினும், செழிப்பாகவும் விளைச்சல் மிக்கவையாகவும் மாறும் அவற்றின் மாற்றம், ஜனங்கள் அவ்விதமாக உணரும்படி செய்யக்கூடும். (லேவியராகமம் 23:37-40; உபாகமம் 16:15; சங்கீதம் 126:5, 6; ஏசாயா 16:10; எரேமியா 25:30; 48:33) அத்தேசத்தில் ஏற்படும் சொல்லர்த்தமான மாற்றங்கள்தாமே அந்த ஜனங்கள்மீது ஏற்படும் மாற்றங்களுக்கு ஒத்திருக்கும், ஏனெனில் மக்களே இத்தீர்க்கதரிசனத்திற்கு மையமாக இருக்கின்றனர். எனவே, ஏசாயாவின் வார்த்தைகள், திரும்பிவரும் யூதர்களில், விசேஷமாக அவர்களுடைய சந்தோஷத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் பிரதானமாக கவனத்தை ஊன்றவைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு காரணமிருக்கிறது.
13, 14. மக்களில் ஏற்படும் என்ன மாற்றத்தை ஏசாயா 35:3, 4 முன்னறிவித்தது?
13 மேற்சொன்னவாறு, கிளர்ச்சியூட்டும் இந்தத் தீர்க்கதரிசனம் யூதர்களுடைய விடுதலைக்கும் பாபிலோனிலிருந்து திரும்பிவருதலுக்கும் பிறகு எவ்வாறு நிறைவேற்றமடைந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதைக் குறித்து நாம் இன்னும் அதிகமாக ஆராயலாம். 3, 4 வசனங்களில், திரும்பிவந்தவர்களில் ஏற்பட்ட மற்ற மாற்றங்களைப் பற்றி ஏசாயா சொல்கிறார்: “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.”
14 அந்த நிலத்தின் பாழான நிலைமையை முற்றிலும் மாற்றக்கூடிய நம்முடைய கடவுள், தம்முடைய வணக்கத்தாரில் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை எண்ணிப்பார்ப்பது பலப்படுத்துவதாய் இல்லையா? சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் பலவீனமுள்ளவர்களாகவோ, ஊக்கமிழந்தவர்களாகவோ அல்லது எதிர்காலத்தைக் குறித்து கவலையுற்றவர்களாகவோ உணரும்படி அவர் விரும்பவில்லை. (எபிரெயர் 12:12) அந்த யூத சிறைக்கைதிகளின் நிலைமையைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து கடவுளுடைய தீர்க்கதரிசனங்களிலிருந்து அவர்கள் பெறக்கூடிய நம்பிக்கையைத் தவிர, நல்லது நடக்குமென்பதில் நம்பிக்கையோடிருப்பது அவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். அங்குமிங்கும் செல்வதற்கும் யெகோவாவை சேவிப்பதில் சுறுசுறுப்பாய் இருப்பதற்கும் சுயாதீனமற்றவர்களாக இருண்ட கெபியில் இருப்பதுபோல அது இருந்தது. நிச்சயமாகவே அவர்களுக்கு முன்பு எந்த வெளிச்சமும் இல்லாததுபோலவே தோன்றியிருக்கும்.—ஒப்பிடுக: உபாகமம் 28:29; ஏசாயா 59:10.
15, 16. (அ) திரும்பிவந்தவர்களுக்காக யெகோவா என்ன செய்தார் என்று நாம் முடிவுசெய்யலாம்? (ஆ) திரும்பிவந்தவர்கள் ஏன் அற்புதகரமான சரீர சுகப்படுத்துதல்களை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் ஏசாயா 35:5, 6-க்கு இசைவாக கடவுள் என்ன செய்தார்?
15 இருந்தபோதிலும், சொந்த தேசத்திற்கு திரும்பிச்செல்ல கோரேசு அவர்களை விடுதலை செய்யும்படி யெகோவா செய்தபோது அது எப்படி மாறியது! திரும்பிவந்த யூதர்களுடைய எந்த குருடான கண்களையும் கடவுள் அற்புதகரமாக குணப்படுத்தினார், செவிடர்களுடைய காதுகளைத் திறந்தார், அல்லது முடமான அல்லது ஊனமுற்ற எவரையும் சுகப்படுத்தினார் என்பதற்கு வேதப்பூர்வமான அத்தாட்சி எதுவும் இல்லை. இருப்பினும், அதைவிட அதிக மகத்தான ஒன்றை அவர் உண்மையிலேயே செய்தார். அவர்களை வெளிச்சத்திற்கும் தங்களுடைய நேசத்திற்குரிய தேசத்தின் விடுதலைக்கும் மீண்டும் கொண்டுவந்தார்.
16 யெகோவா இத்தகைய அற்புதகரமான சரீர சுகப்படுத்துதல்களை செய்யும்படி திரும்பிவந்தவர்கள் எதிர்பார்த்தனர் என்பதற்கு எந்தவித குறிப்பும் இல்லை. ஈசாக்கு, சிம்சோன், அல்லது ஏலிக்கும் அவர் இவ்விதமே செய்யவில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். (ஆதியாகமம் 27:1; நியாயாதிபதிகள் 16:21, 26-30; 1 சாமுவேல் 3:2-8; 4:15) ஆனால் தங்களுடைய நிலைமை ஒரு தெய்வீக மாற்றத்தினால் அடையாளப்பூர்வமாக மாறுவதை எதிர்பார்த்து இருந்திருந்தால், அவர்கள் ஏமாற்றப்படவில்லை. நிச்சயமாகவே அடையாளப்பூர்வமான ஒரு அர்த்தத்தில், 5, 6 வசனங்கள் உண்மையான ஒரு நிறைவேற்றத்தைக் கண்டன. ஏசாயா துல்லியமாக முன்னுரைத்தார்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”
அத்தேசத்தை ஒரு பரதீஸைப் போலாக்குதல்
17. தெளிவாகவே, இயற்கைக்குரிய என்ன மாற்றங்களை யெகோவா செய்தார்?
17 “வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்,” என்பதாக ஏசாயா தொடர்ந்து விவரித்த இதுபோன்ற நிலைமைகளைக் குறித்து திரும்பிவந்தவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடுவதற்கு நிச்சயமாகவே காரணத்தை உடையவர்களாய் இருந்திருப்பர். (ஏசாயா 35:6ஆ, 7) அந்த முழுப் பிரதேசத்திலும் இன்று நாம் அதைக் காணாதபோதிலும், யூதாவாக இருந்த அந்தப் பகுதி ஒருகாலத்தில் “புல்வெளிமிக்க பரதீஸாய்” இருந்தது.a
18. திரும்பிவந்த யூதர்கள் எவ்வாறு கடவுளுடைய ஆசீர்வாதங்களுக்குப் பிரதிபலித்திருப்பார்கள்?
18 சந்தோஷத்திற்கான காரணங்களைக் குறித்ததில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்பிவந்தபோது யூத மீதியானோர் எவ்வாறு உணர்ந்திருப்பார்கள் என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! ஓநாய்களும் இப்படிப்பட்ட மற்ற விலங்குகளும் குடியிருந்த அந்தப் பாழ்நிலத்தை சுதந்தரித்து, அதை மாற்றும் நிலையில் இருந்தார்கள். புதுப்பிக்கிற அத்தகைய வேலையை செய்வதில், விசேஷமாக கடவுள் உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார் என்று அறிந்திருந்தால், நீங்கள் சந்தோஷத்தை கண்டடைந்திருக்க மாட்டீர்களா?
19. என்ன கருத்தில் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவருவது நிபந்தனைக்குரியதாய் இருந்தது?
19 என்றபோதிலும், பாபிலோனிலிருந்த எந்தவொருவரோ எல்லா யூத சிறைக்கைதிகளோ அந்த சந்தோஷகரமான மாற்றத்தில் பங்குகொள்வதற்கு திரும்பி வரமுடியும் அல்லது திரும்பிவந்தனர் என்பதல்ல. கடவுள் நிபந்தனைகளை வைத்தார். பாபிலோனிய, புறமத பழக்கங்களால் கறைபட்ட எவருக்கும் திரும்பிவரும் உரிமையில்லாதிருந்தது. (தானியேல் 5:1, 4, 22, 23; ஏசாயா 52:11) ஞானமற்ற போக்குக்கு முட்டாள்தனமாக தங்களை ஒப்புக்கொடுத்திருந்த எவரும்கூட திரும்பிவர முடியாமல் இருந்தனர். இப்படிப்பட்ட ஆட்கள் அனைவரும் தகுதியற்றவர்களாய் நிராகரிக்கப்பட்டனர். மறுபட்சத்தில், கடவுளுடைய தராதரங்களைப் பூர்த்திசெய்தவர்கள், சம்பந்தப்பட்ட ஒரு கருத்தில் பரிசுத்தமாக இருப்பதாய் அவரால் கருதப்பட்டவர்கள், யூதாவுக்குத் திரும்பிவர முடிந்தது. பரிசுத்த வழியிலே நடப்பதுபோல் அவர்களால் பயணம் செய்யமுடிந்தது. 8-ம் வசனத்தில் ஏசாயா அதைத் தெளிவாக்கினார்: “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை [“பேதைகள் அவ்வழியில் சுற்றித்திரிவதில்லை,” NW].”
20. யூதர்கள் திரும்பிவந்தபோது எதற்கு பயப்படவேண்டிய அவசியமில்லாதிருந்தது, அது எதில் விளைவடைந்தது?
20 திரும்பிவரும் யூதர்கள் மிருகத்துக்கு ஒப்பான மனிதர்களிடமிருந்து அல்லது கொள்ளைக்காரர்களிடமிருந்து வரும் எந்தவொரு தாக்குதலுக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. ஏன்? ஏனெனில் திரும்ப மீட்கப்பட்ட தம்முடைய மக்களுக்கு திரும்பிவரும் வழியில் இப்படிப்பட்டவை நடப்பதை யெகோவா அனுமதிக்கவில்லை. ஆகையால் அவர்கள் சந்தோஷ நம்பிக்கையோடு, மகிழ்ச்சியான எதிர்பார்ப்புகளோடு பயணம் செய்ய முடிந்தது. இந்தத் தீர்க்கதரிசனத்தை முடிக்கையில் அதை ஏசாயா எவ்வாறு விவரித்தார் என்பதை கவனியுங்கள்: “அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.”—ஏசாயா 35:9, 10.
21 இங்கு என்னே ஒரு தீர்க்கதரிசன படம் நமக்கு இருக்கிறது! நம்முடைய நிலைமையுடன் அல்லது நம்முடைய எதிர்காலத்துடன் எந்தவித சம்பந்தமுமில்லாத வெறும் கடந்தகால சரித்திரமாக, ஓர் அழகிய கதையைப் போல நாம் இதைக் கருதக்கூடாது. உண்மை என்னவென்றால், இந்தத் தீர்க்கதரிசனம் கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் இன்று வியப்பூட்டும் வண்ணம் நிறைவேறி வருகிறது. ஆகவே உண்மையிலேயே அது நம் ஒவ்வொருவரையும் உட்படுத்துகிறது. அது, சந்தோஷமாய் ஆர்ப்பரிப்பதற்கான நல்ல காரணத்தை நமக்களிக்கிறது. இப்பொழுதும் எதிர்காலத்திலும் உங்களுடைய வாழ்க்கையை உட்படுத்துகிற இந்த அம்சங்கள் பின்வரும் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படுகின்றன.
[அடிக்குறிப்பு]
a உழவியல் நிபுணர் உவால்டர் சி. லூடர்மில்க் என்பவர் (ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்பவர்) அந்தப் பிரதேசத்தைப் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சியிலிருந்து இந்தவிதமான முடிவுக்கு வந்தார்: “இந்நிலம் ஒருகாலத்தில் புல்வெளிமிக்க பரதீஸாய் இருந்தது. ரோமர் காலம் முதற்கொண்டு,” அங்கிருந்த சீதோஷ்ணநிலை குறிப்பிடத்தக்க விதத்தில் மாறிவிடவில்லை என்றும்கூட அவர் சுட்டிக்காண்பித்தார். “ஒருகாலத்தில் செழிப்பாயிருந்த அத்தேசத்தை மாற்றிய அந்தப் ‘பாலைவனம்’ மனிதனின் செயலாகும், இயற்கையின் செயலல்ல,” என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஏசாயா 35-ம் அதிகாரம் முதலில் எப்பொழுது நிறைவேற்றமடைந்தது?
◻ அந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
◻ ஏசாயா 35:5, 7-ஐ யெகோவா எவ்வாறு நிறைவேற்றினார்?
◻ திரும்பிவந்த யூதர்கள், அத்தேசத்திலும் தங்களுடைய சூழ்நிலைமையிலும் ஏற்பட்ட என்ன மாற்றங்களை அனுபவித்தனர்?
21. ஏற்கெனவே நடந்திருக்கிற ஏசாயா 35-ம் அதிகாரத்தின் நிறைவேற்றத்தை நாம் இன்று எவ்வாறு நோக்க வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
ஒருகாலத்தில் ஏதோமியர் வாழ்ந்த இடத்தில் பெத்ராவின் இந்த இடிபாடுகள்
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 10-ன் படங்கள்]
யூதர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கையில், யூதேயாவின் பெரும்பகுதி வனாந்தரமாயிருந்தது; கரடிகள், சிங்கங்கள் போன்ற மூர்க்க மிருகங்களால் நிறைந்திருந்தது
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
Bear and Lion: Safari-Zoo of Ramat-Gan, Tel Aviv