பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்துதல்
“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.
1. உன்னதமான ஸ்தானங்களிலுள்ள தேவதூதர்கள் யெகோவாவின் பரிசுத்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
யெகோவா பரிசுத்தமான கடவுள். பரலோகத்தில் உன்னதமான ஸ்தானங்களிலுள்ள தேவதூதர்கள் அவருடைய பரிசுத்தத்தை சந்தேகமானச் சொற்களால் அறிவிப்பதில்லை. “சேனைகளின் கர்த்தர் [யெகோவா, NW] பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது.” பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசி தரிசனத்தில் கண்ட சேராபீன்களின் கிளர்ச்சியூட்டும் அழைப்பு இப்படியாக இருந்தது. பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில், அப்போஸ்தலனாகிய யோவான் நாம் இப்பொழுது இருக்கும் அந்தக் “கர்த்தருடைய நாளில்” சம்பவிக்க வேண்டியவற்றைப் பற்றிய தரிசனங்களைக் கண்டான். அவன் யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களையும் அவை ஓயாமல் “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று சொல்லிக்கொண்டே இருப்பதையும் கண்டான். யெகோவாவின் பரலோக ஆவி சிருஷ்டிகளின் இந்த மும்மடங்கான அறிவிப்புகள் சிருஷ்டிகரின் உச்ச அளவு உயர்தரமான பரிசுத்தத்தை அழுத்திச் சொல்வதாக இருக்கின்றன.—ஏசாயா 6:2, 3; வெளிப்படுத்துதல் 1:10; 4:6–8.
பரிசுத்தமும் தனியே பிரிந்திருத்தலும்
2. (எ) பரிசுத்தத்துக்கு என்ன இரண்டு அம்சங்கள் இருக்கின்றன? இவ்விரண்டு அம்சங்களிலும் யெகோவா எவ்விதமாக பரிசுத்தராக இருக்கிறார்? (பி) யெகோவாவின் பரிசுத்தத்தை மோசே எவ்விதமாக வலியுறுத்திக் கூறினான்?
2 பரிசுத்தம் என்பது மதசம்பந்தமான சுத்தத்தை அல்லது தூய்மையை மாத்திரமல்லாமல், தனியே பிரிந்திருத்தலை அல்லது புனிதத்தன்மையை அர்த்தப்படுத்துகிறது. யெகோவா உச்ச அளவில் சுத்தமாக அல்லது தூய்மையாக இருக்கிறார்; அவர் தேசங்களின் எல்லா அசுத்தமான கடவுட்களிலிருந்தும் முற்றிலும் தனியே பிரிந்திருக்கிறார். அவருடைய இந்தப் பரிசுத்தம் அல்லது புனித அம்சம் மோசே, பின்வருமாறு பாடியபோது வலியுறுத்திக் கூறப்பட்டது: “கர்த்தாவே [யெகோவாவே, NW] தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரு . . . மாகிய உமக்கு ஒப்பானவர் யார்?”—யாத்திராகமம் 15:11.
3. என்னவிதங்களில் எல்லா இஸ்ரவேலரும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டனர்? இந்த விஷயத்தில் யெகோவா எவ்விதமாக அவர்களுக்கு உதவி செய்தார்?
3 பரிசுத்த கடவுளாகிய யெகோவா, பூமியின் மீது தம்முடைய மக்களாக இருந்த பூர்வ இஸ்ரவேலரும்கூட பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இது ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களிடமிருந்து மாத்திரமல்லாமல், முழு தேசத்தாரிடமிருந்தும்கூட கேட்கப்பட்டது. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய [யெகோவாவுமாகிய, NW] நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” (லேவியராகமம் 19:2) இதற்காகவே ஆவிக்குரிய பிரகாரமாயும், ஒழுக்க சம்பந்தமாயும், மனதின் பிரகாரமாயும், சரீர சம்பந்தமாயும் ஆசார முறைமையின்படியும் அவர்கள் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க உதவிசெய்வதற்காக அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார். ஆசாரமுறைமையின்படி சுத்திகரிப்பு வாசஸ்தலத்திலும் பின்னால் ஆலயத்திலும் அவர்களுடைய வணக்கத்தின் சம்பந்தமாக இருந்தது.
தனியே பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ஜனம்
4, 5. (எ) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் எவ்விதமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேசமாக இருந்தது? (பி) ஆவிக்குரிய இஸ்ரவேலரிடம் கேட்கப்படுவது என்ன? அப்போஸ்தலனாகிய பேதுரு இதை எவ்விதமாக உறுதி செய்கிறான்?
4 இஸ்ரவேலர் கடவுளுடைய சட்டங்களைப் பின்பற்றிய அளவில், அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த ஒழுக்கங்கெட்ட தேசங்களிலிருந்து தனித்துக் காணப்பட்டனர். அவர்கள் பரிசுத்த கடவுளாகிய யெகோவாவின் சேவைக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட அல்லது பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு ஜனமாக மேம்படுத்திக் காண்பிக்கப்பட்டனர். மோசே அவர்களிடம் சொன்னான்: “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு, NW] பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்.”—உபாகமம் 7:6.
5 இப்படிப்பட்ட சுத்தமும் பிரிந்திருத்தலும் ஆவிக்குரிய இஸ்ரவேலரிடமும்கூட கேட்கப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆவிக்குரிய இஸ்ரவேலாக இருப்பதற்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு இவ்விதமாக எழுதினான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.”—1 பேதுரு 1:1, 14–16.
6, 7. (எ) “திரள் கூட்டத்தாரின்” உறுப்பினர்கள், வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் எவ்விதமாக வருணிக்கப்பட்டுள்ளனர்? நியாயமாகவே அவர்களிடம் கேட்கப்படுவது என்ன? (பி) பின்வரும் பாராக்களில் சிந்திக்கப்படப்போவது என்ன?
6 வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் “திரள்கூட்டத்தாரின்” உறுப்பினர்கள், “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்”களாக “[யெகோவாவுடைய, NW] சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்ப”தாக வருணிக்கப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14) அவர்களுடைய வெள்ளை அங்கி யெகோவாவுக்கு முன்பாக அவர்களுடைய சுத்தமான, நீதியான நிலைநிற்கையை அடையாளப்படுத்துகிறது. இதை, அவர்கள் கிறிஸ்துவின் மீட்பின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் காரணமாக அவர் அருளிச்செய்கிறார். அப்படியென்றால், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல, ஆனால் “வேறே ஆடு”களும்கூட யெகோவாவை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வணங்குவதற்கு ஆவிக்குரிய விதத்திலும் ஒழுக்கச் சம்பந்தமாகவும் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது.—யோவான் 10:16.
7 கடந்தக் காலங்களில் யெகோவாவின் மக்கள் எவ்விதமாகத் தங்களைச் சுத்தமுள்ளவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் நிரூபிக்க வேண்டியவர்களாயிருந்தனர் என்பதையும் ஏன் இன்று கடவுளுடைய மக்களுக்கு அதே நியமங்கள் பொருந்துகின்றன என்பதையும் நாம் இப்போது சிந்திப்போம்.
ஆவிக்குரிய சுத்தம்
8. என்ன காரணங்களுக்காக இஸ்ரவேலர் கானானின் மதங்களிலிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும்?
8 மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர், மற்ற தேசங்களின் அசுத்தமான மதசம்பந்தமான பழக்கவழக்கங்களிலிருந்து இம்மியும் பிசகாமல் தங்களைத் தாங்களே பிரித்து வைத்திருக்க வேண்டியவர்களாக இருந்தனர். மோசேயின் மூலமாகப் பேசுகிறவராய் யெகோவா இஸ்ரவேலரிடம் சொன்னதாவது: “நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை பண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும். அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் [அருவருப்பான பால் சம்பந்தப்பட்ட வணக்கத்தின் சம்பந்தமாக பயன்படுத்தப்பட்ட] சிலைகளைத் தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே [அல்லது “தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற தேவன்,” புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள், அடிக்குறிப்பு]; ஆகையால் அந்நிய தேவனை நீ பணிந்து கொள்ளவேண்டாம். அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்”—யாத்திராகமம் 34:12–15.
9. பொ.ச.மு. 537-ல் பாபிலோனை விட்டு புறப்பட்ட உண்மையுள்ள மீதியானோருக்கு என்ன திட்டவட்டமான கட்டளைகள் கொடுக்கப்பட்டன?
9 பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால், பாபிலோனிலிருந்து யூதேயாவுக்குத் திரும்பி வரக்கூடிய, உண்மையுள்ள மீதியானோரிடமாக இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைக்கூற யெகோவா ஏசாயாவைத் தம்முடைய ஆவியினால் ஏவினார்: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, [எருசலேமில் ஆலயத்தில் மெய் வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டுவதில் பயன்படுத்தப்பட இருந்தவை] அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.”—ஏசாயா 52:11.
10, 11. (எ) பொ.ச. முதல் நூற்றாண்டில் அதை ஒத்த என்ன அறிவுரைகள் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டன? (பி) குறிப்பாக 1919 மற்றும் 1935 முதற்கொண்டு இந்த அறிவுரைகள் எவ்விதமாக பின்பற்றப்பட்டிருக்கின்றன? வேறு என்ன விதத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் அவர்களுடையத் தோழர்களும் ஆவிக்குரிய பிரகாரமாய் சுத்தமுள்ளவர்களாக இருக்கின்றனர்?
10 அதேவிதமாகவே, ஆவிக்குரிய இஸ்ரவேலரும் அவர்களுடைய தோழர்களும் இந்த உலகின் பொய் மதங்களினால் தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாதிருக்க வேண்டும். கொரிந்துவிலிருந்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதாவது: “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று யெகோவா (NW) சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.”—2 கொரிந்தியர் 6:16-18.
11 1919 முதற்கொண்டு அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரின் சுத்திகரிக்கவும் புடமிடவும்பட்ட உறுப்பினர்கள், மகா பாபிலோனின் அசுத்தமான பொய் மதங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். (மல்கியா 3:1–3) இந்தப் பரலோக அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” (வெளிப்படுத்துதல் 18:4) 1935 முதற்கொண்டு “வேறே ஆடு”களின் அதிகரித்துவரும் திரள்கூட்டத்தார், அதேவிதமாகவே இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அசுத்தமான பாபிலோனிய மதங்களிலிருந்து தொடர்பை அறுத்துக்கொண்டுவிட்டிருக்கிறார்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் அவர்களுடையத் தோழர்களும் விசுவாச துரோகிகளின் பொல்லாத கருத்துக்களோடு எல்லாத் தொடர்பையும் தவிர்ப்பதன் மூலம் ஆவிக்குரிய வகையில் சுத்தமுள்ளவர்களாக வைத்துக்கொள்கிறார்கள்.—யோவான் 10:16; 2 யோவான் 9–11.
ஒழுக்க சுத்தம்
12. (எ) என்ன கட்டளைகளின் மூலமாக, யெகோவா இஸ்ரவேலரின் ஒழுக்க நிலையைச் சுற்றியிருந்த தேசங்களினுடையதைவிட வெகுவாக உயர்த்தினார்? (பி) ஆசாரியத்துவத்துக்கு என்ன சட்டங்கள் குறிப்பாகக் கண்டிப்பாக இருந்தன?
12 நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மூலமாக, யெகோவா இஸ்ரவேலரின் ஒழுக்க நிலையை, அவர்களைச் சுற்றியிருந்த தேசங்களின் இழிவான நிலைக்கு மேலாக வெகுவாக உயர்த்தினார். விவாகமும் குடும்ப வாழ்க்கையும் இஸ்ரவேலில் பாதுகாக்கப்பட்ட நிறுவனங்களாக இருந்தன. பத்துக் கற்பனைகளில் ஏழாவது விபசாரத்தை தடைசெய்தது. விபசாரமும் வேசித்தனமும் ஆகிய இரண்டுமே கடுமையாக தண்டிக்கப்பட்டன. (உபாகமம் 22:22–24) கன்னிப்பெண்களும்கூட, நியாயப்பிரமாணத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டனர். (உபாகமம் 22:28, 29) குறிப்பாக ஆசாரியத்துவத்துக்கு விவாக விதிகள் கண்டிப்பானவையாக இருந்தன. பிரதான ஆசாரியனைப் பற்றியதில், அவன் கற்புள்ள ஒரு கன்னிகையை மனைவியாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.—லேவியராகமம் 21:6, 7, 10, 13.
13. கிறிஸ்துவின் “மணவாட்டி” யாருக்கு ஒப்பிடப்படுகிறார்கள்? ஏன்?
13 அதேவிதமாகவே, மகா பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து, “கன்னிகைகளுக்கு” ஒப்பிடப்படும் 1,44,000 பேர்களடங்கிய அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை “மணவாட்டி”யாகக் கொண்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 14:1–5; 21:9) அவர்கள் சாத்தானுடைய உலகத்தால் கறைபடாதபடி தங்களை வைத்துக்கொண்டு கோட்பாடு சம்பந்தமாகவும் ஒழுக்கம் சம்பந்தமாகவும் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்கிறார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலிருந்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இவ்விதமாக எழுதினான்: “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:2) பவுல் பின்வருமாறும்கூட எழுதினான்: “அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும் கரைதிறை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.”—எபேசியர் 5:25–27.
14, 15. (எ) மணவாட்டி வகுப்பின் ஆவிக்குரிய தூய்மையோடு எது இணைந்திருக்க வேண்டும்? எந்த வேதவசனம் இதைக் காண்பிக்கிறது? (பி) ஒழுக்க சுத்தத்தைப் பற்றிய இப்படிப்பட்டத் தேவைகள் வேறே ஆடுகளுக்கும்கூட பொருந்துவது ஏன் தெளிவாகத் தெரிகிறது?
14 கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் ஆவிக்குரிய இந்தத் தூய்மை, அதன் அங்கத்தினர்களின் பங்கில் ஒழுக்கச் சுத்தத்தோடு இணைந்திருக்கவேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9–11.
15 ஒழுக்கச் சுத்தத்தைப் பற்றிய இப்படிப்பட்டக் கட்டளைகள் வேறே ஆடுகளுக்கும்கூட பொருந்துகின்றன. யெகோவா வாக்குப்பண்ணியிருக்கும் அவருடைய புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் வராதபடி யார் தடை செய்யப்படுவர் என்பதைச் சிந்திக்கையில் இது தெளிவாகத் தெரிகிறது. நாம் வாசிப்பதாவது: “அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், . . . இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.”—வெளிப்படுத்துதல் 21:1, 8.
கனமுள்ள விவாகம்
16, 17. (எ) ஒழுக்க சுத்தத்துக்கு விவாகமில்லாதிருத்தல் அவசியமில்லை என்பதை எந்த வேதவசனங்கள் காண்பிக்கின்றன? (பி) விவாகத் துணைவரை தெரிந்து கொள்வதில் ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக சரியான கடவுள் பயத்தைக் காண்பிக்கலாம்? அப்போஸ்தலரின் கட்டுப்பாட்டை அசட்டை செய்வது ஏன் ஞானமற்றதாக இருக்கும்?
16 ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க, மணவாட்டியின் அபிஷேகம் பண்ணப்பட்ட உறுப்பினர்களும், வேறே ஆடுகளும் விவாகமில்லாதிருக்கவேண்டிய அவசியமில்லை. கட்டாய மணத்துறவு வேத ஆதாரமற்றது. (1 தீமோத்தேயு 4:1–3) விவாக பந்தத்திற்குள் பாலுறவுகள் அசுத்தமானவை அல்ல. கடவுளுடைய வார்த்தை சொல்வதாவது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.”—எபிரெயர் 13:4.
17 என்றபோதிலும், “பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்த” விரும்பும் ஒரு கிறிஸ்தவன், அவனோ அல்லது அவளோ தன் இஷ்டப்படி எவரையும் விவாகம் செய்துகொள்ள விடுதலைப்பெற்றவராக இருப்பதாக நினைக்கக்கூடாது. ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, சுத்திகரித்துக்கொண்டு பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தும்படியாக’ உடன்கிறிஸ்தவர்களுக்குப் புத்திசொல்வதற்கு சற்றுமுன்பாக அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? . . . அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரிந்தியர் 6:14, 15; 7:1) யெகோவாவின் தனிப்பட்ட மற்றும் சுத்தமான ஜனத்தின் உறுப்பினராக, விவாகம் செய்துகொள்ள விரும்பும் ஒரு கிறிஸ்தவ ஆண் அல்லது பெண், “கர்த்தருக்குட்பட்ட”வரை மாத்திரமே செய்து கொள்ள வேண்டும் என்ற அப்போஸ்தலரின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வான். அதாவது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட உண்மையுள்ள ஊழியன் ஒருவரை தெரிந்துகொள்வதன் மூலம் அவ்விதமாகச் செய்வான். (1 கொரிந்தியர் 7:39) கடந்த காலங்களிலிருந்தது போலவே, இன்று கடவுளுடைய ஜனங்களின் மத்தியிலுள்ள ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள், இந்த வேதாகம புத்திமதியை அசட்டை செய்வது நிச்சயமாகவே ஞானமற்றதாக இருக்கும். (உபாகமம் 7:3, 4; நெகேமியா 13:23–27 ஒப்பிடவும்.) அது நம்முடைய மகத்தான எஜமானனாகிய யெகோவாவுக்கு ஆரோக்கியமான பயத்தைக் காண்பிப்பதாகாது.—மல்கியா 1:6.
18. வேறு என்ன வழியில், கிறிஸ்தவர்கள் தங்கள் விவாகத்தைக் கனமுள்ளதாய் வைத்துக் கொள்ளலாம்?
18 மேலுமாக, இஸ்ரவேலில் சட்டம் விவாக பந்தத்திற்குள்ளும்கூட பாலுறவு நடவடிக்கைகளின் மேல் கட்டுப்பாட்டை விதித்தது. ஒரு கணவன் தன்னுடைய மனைவியினுடைய மாதவிடாய் சமயத்தில் அவளோடு உடலுறவுக்கொள்வதிலிருந்து விலகியிருக்க வேண்டும். (லேவியராகமம் 15:24; 18:19; 20:18) இது இஸ்ரவேல ஆண்மக்களின் பங்கில் அன்பான கரிசனையையும் தன்னடக்கத்தையும் தேவைப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் தங்கள் மனைவிகள்பால் அதைவிட குறைந்த கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டுமா? அப்போஸ்தலனாகிய பேதுரு, கிறிஸ்தவ கணவன்மார், தங்களுடைய மனைவிமார்களுடனே “அறிவின்படி”, அதாவது “பெலவீன பாண்டமாய்” அவர்களுடைய உருவமைப்பைப் பற்றிய அறிவின்படி, வாழ்ந்து வரவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுகிறான்.—1 பேதுரு 3:7, NW.
“பரிசுத்த வழி”யில் நடத்தல்
19, 20. (எ) மனிதவர்க்கத்தின் பெரும்பகுதி போய்க்கொண்டிருக்கும் அந்த விசாலமான வழியை விவரியுங்கள். (பி) யெகோவாவின் மக்கள் எவ்விதமாக சாத்தானுடைய உலகிலிருந்து வித்தியாசமாக இருக்கவேண்டும்? (சி) கடவுளுடைய மக்கள் எந்தப் பெரும்பாதையில் நடந்து செல்கிறார்கள்? அது எப்போது திறக்கப்பட்டது? யார் மட்டுமே அதற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்?
19 மேலே சொல்லப்பட்டவை, யெகோவாவின் மக்களைச் சாத்தானுடைய உலகிலிருந்து பிரிக்கின்ற, விரிவாகிய வண்ணமே இருக்கும் பெரிய பிளவை அழுத்திக் காண்பிக்கின்றன. தற்போதைய காரிய ஒழுங்கு முறை அதிகமதிகமாக கட்டுப்பாடற்றதாகவும் தங்குதடையற்ற இன்பத்தில் இழைவதாயும் இருக்கின்றது. இயேசு சொன்னார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.” (மத்தேயு 7:13) அந்த விசாலமான வழியில் மனிதவர்க்கத்தின் பெரும்பகுதி போய்க்கொண்டிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுருவை மேற்கோள் காண்பிக்க, அது “காமவிகாரத்தையும், துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச் செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனைச் செய்யும்” ஒரு வழியாக, “துன்மார்க்க உளை”க்குப் போகும் வழியாக இருக்கிறது. (1 பேதுரு 4:3, 4) அதன் முடிவு அழிவாகும்.
20 மறுபட்சத்தில் கடவுளுடைய மக்கள் வித்தியாசமான ஒரு வழியில் நடந்து கொண்டிருக்கிறார்கள், சுத்தமான ஜனம் நடந்துசெல்லும் சுத்தமான வழி. முடிவு காலத்தில் இந்த வழி திறக்கப்படுவது ஏசாயா தீர்க்கதரிசியால் முன்னுரைக்கப்பட்டது. அவன் எழுதினான்: “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை.” (ஏசாயா 35:8) இந்தத் தீர்க்கதரிசனத்தின் பேரில் குறிப்புச் சொல்வதாய், “சமாதானப் பிரபுவின் கீழ் உலகளாவிய பாதுகாப்பு” புத்தகம் சொல்வதாவது: “1919-ல் ஓர் அடையாள அர்த்தமுள்ள பெரும்பாதை கடவுளின் சந்தோஷமுள்ள ஊழியர்களுக்குத் திறக்கப்பட்டது. யெகோவாவின் பார்வையில் பரிசுத்தமாக இருக்க விரும்பியவர்களே அந்தப் ‘பெரும் பாதையில்’, ‘பரிசுத்த வழியில்’ நடந்தார்கள். . . . இன்று, ‘இந்தக் காரிய ஒழுங்கின் முடிவில்’ கடவுளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப் ‘பெரும் பாதை’ இன்னும் திறந்தே இருக்கிறது. போற்றுதலுள்ள திரளான மக்கள் . . . ‘பரிசுத்த வழி’யாகிய ஆவிக்குரிய பரதீஸின் பாதையில் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள்.”a
21. பிசாசின் கூட்டத்தாரிலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் எவ்விதமாக மற்றும் ஏன் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும்? அடுத்த பிரதியில் சிந்திக்கப்படவிருப்பது என்ன?
21 ஆம், ஆவிக்குரிய இஸ்ரவேலின் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரும் அவர்களுடைய தோழர்களாகிய வேறே ஆடுகளும், இன்று பரிசுத்தம் என்ற கருத்தின் எல்லா அர்த்தத்தையும் இழந்துவிட்டிருக்கும் சாத்தானிய உலகிலிருந்து தனியே பிரித்து வைக்கப்பட்ட ஒரு ஜனமாக தங்களை வேறுபடுத்திக் காண்பிக்கிறார்கள். “கேட்டுக்குப் போகிற” “விரிவும் விசாலமுமான” வழியில் நடந்து செல்லும் பிசாசின் கூட்டத்தாருக்கு எதுவுமே பரிசுத்தமானது இல்லை. அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாயும் ஒழுக்க சம்பந்தமாயும் அசுத்தமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆனால் பெரும்பாலானவர்களின் விஷயத்தில் அவர்கள் சரீரப்பிரகாரமாயும் அசுத்தமாயும், மிகக் குறைவாகச் சொன்னால், அவர்கள் தோற்றம் ஒழுங்கற்றும் இருக்கின்றது. என்றபோதிலும் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான்: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) மாம்சத்திலும் ஆவியிலும் சுத்தமாயிருப்பதற்கு, கடவுளுடைய மக்கள் என்ன விதங்களில் கவனமாயிருக்க வேண்டும் என்பது அடுத்த பிரதியில் சிந்திக்கப்படும். (w89 6/1)
[அடிக்குறிப்புகள்]
a அதிகாரம் 16, பக்கங்கள் 134–5.
விமர்சனத்துக்குக் குறிப்புகள்
◻ பரிசுத்தத்துக்கு என்ன இரண்டு அம்சங்கள் இருக்கின்றன? யெகோவா பரிசுத்தராக இருக்கிறார் என்று ஏன் சொல்லப்படலாம்?
◻ எந்த இரண்டு வழிகளில், இஸ்ரவேலர் தங்களை பரிசுத்தமான தேசமாக நிரூபிக்க வேண்டியவர்களாக இருந்தனர்?
◻ ஆவிக்குரிய இஸ்ரவேலரிடமும் வேறே ஆடுகளாகிய அவர்களுடைய தோழர்களிடமிருந்தும் என்ன கேட்கப்படுகிறது?
◻ கடவுளிடமாக பயம், நம்முடைய விவாகத்துணையை தெரிந்தெடுப்பதை எவ்விதமாக பாதிக்க வேண்டும்?
◻ இன்று எந்த இரண்டு வழிகளில் செல்லமுடியும்? தெளிவான ஒரு தெரிவு ஏன் செய்யப்படவேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “விவாகம் கனமுள்ளதாயிருப்பதாக”