வெட்டுக்கிளிகளைப் போலவே
நீங்கள் எப்போதாவது கோடை காலத்திலே பசும்புல்வெளியில் உலாவ செல்லப் போனபோது, உங்கள் பாதையில் எண்ணற்ற வெட்டுக்கிளிகள் திடீரென தாவிக்குதித்து ஓடுவதை பார்த்திருக்கிறீர்களா? அவை எங்கும் இருப்பதுபோல் தோன்றுகின்றன; ஒருவேளை நீங்கள் போதுமானளவு அக்கறை காண்பித்திருக்கமாட்டீர்கள். என்னதான் இருந்தாலும், அவை தீங்கற்றதாயும் அற்பமானதாயும் தோன்றுகின்றன.
ஆனாலும், வெட்டுக்கிளிகளின் இந்தத் தோற்றத்தில் அற்பமாகத் தோன்றும் தன்மை, அவை மனிதகுலத்திற்கு ஒரு பொருத்தமான அடையாளமாக இருக்கச் செய்கின்றன. சில பிரபலமான மனிதர்கள் தங்களை அதிக முக்கியத்துவமுடையவர்களாக நினைத்துக்கொண்டாலும், நம்முடைய சிருஷ்டிகர் வேறுவிதமாக நினைக்கிறார். அவருடைய தீர்க்கதரிசி ஏசாயா சொன்னார்: “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.”—ஏசாயா 40:22.
ஒரு மனிதன் எப்படி வெட்டுக்கிளியைவிட அறிவிலும் வல்லமையிலும் மேம்பட்டவனாக இருக்கிறானோ, அதைப்போலவே யெகோவா தேவனின் மேன்மை, பலம், ஞானம் ஆகியவை அவரை வெறும் மனிதர்களின் வரம்பிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறது. ஆனாலும், கடவுளுடைய உன்னத குணம் அன்பு. நாம் அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவருடைய ஈடிணையற்ற அன்பு அவர் நம்மைப் பார்த்து, நமக்கு உதவிசெய்து, நம்மைப் பாதுகாக்கும்படிச் செய்ய அவரைத் தூண்டுகிறது. நாம் அற்பமான வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தாலும், யெகோவா நம்மிடம் அன்போடு செயல்படுகிறார். சங்கீதக்காரன் சொன்னார்: “உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.”—சங்கீதம் 113:5-7.
இந்தச் சங்கீதம் விளக்குகிறப் பிரகாரம், மனத்தாழ்மையுள்ளோருக்கு யெகோவா அன்புடன் உதவிசெய்கிறார். ஆம், கடவுள் மனத்தாழ்மையோடு ‘தம்மைத் தேடுகிறவர்கள் தம்மைக் கண்டுபிடிக்கத்தக்கதாக’ அவர்களுக்கு உதவிசெய்கிறார். (அப்போஸ்தலர் 17:27) கடவுளைத் தேடுபவர்கள்—அவரைச் சேவிப்பவர்கள்—அவருடைய கண்களில் அருமையானவர்களாகவுங்கூட ஆகிறார்கள். (ஏசாயா 43:4, 10-ஐ ஒப்பிடுங்கள்.) எனவே, மனத்தாழ்மையான வெட்டுக்கிளி நமக்கு நம்முடைய சொந்த அற்ப நிலையையும், கீழ்ப்படிதல் உள்ள மனிதர்களுக்கு தம்முடைய தோழமையையும் தகுதியற்ற தயவையும் கொடுக்கிற சர்வ வல்லமையுடைய சிருஷ்டிகரின் அன்பையும் ஞாபகப்படுத்துகிறது. நீங்கள் கடவுளின் அன்பிற்கு போற்றுதலைத் தெரிவிக்கிறீர்களா?