-
மீதியானோர் மீது இரக்கம் காட்டுகிறார் யெகோவாஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
‘யெகோவாவின் கிளை’
5 சூறாவளிக்குப்பின் வரவிருக்கும் அமைதி தவழும் காலத்தைப் பற்றி ஏசாயா இப்போது இதமான தொனியில் விவரிக்கிறார். அவர் எழுதுவதாவது: “இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.”—ஏசாயா 4:2.
6 ஏசாயா இங்கே புதுப்பித்தலைப் பற்றி பேசுகிறார். “கிளை” என்பதற்கான எபிரெய பெயர்ச்சொல் ‘துளிர்விடுவதை, முளைவிடுவதை’ குறிக்கிறது. யெகோவா, செழிப்பையும் ஆசீர்வாதத்தையும் அதிகரிப்பையும் அருளுவார் என இது அர்த்தப்படுத்தலாம். இவ்வாறு, தேசம் என்றென்றும் பாழாய் கிடக்காது என்ற நம்பிக்கையை ஏசாயா அளிக்கிறார். யெகோவாவின் ஆசீர்வாதத்தால் யூதா முன்பிருந்த அதே செழுமையைப் பெற்று மறுபடியும் மிகுந்த கனிகொடுக்கும்.a—லேவியராகமம் 26:3-5.
7 வரவிருக்கும் மகத்தான மாற்றத்தை ஏசாயா தத்ரூபமாக விவரிக்கிறார். யெகோவாவின் கிளை, “அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்” என்கிறார். ‘அலங்காரம்’ என்ற வார்த்தை, நூற்றாண்டுகளுக்கு முன்னர் யெகோவா தேவன் இஸ்ரவேலர்களுக்கு கொடுத்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் அழகை நினைவுபடுத்துகிறது. அது அவ்வளவு அழகாக இருந்ததால் ‘எல்லா தேசங்களின் அலங்காரமாக [“மணியாக,” நியூ அமெரிக்கன் பைபிள்]’ கருதப்பட்டது. (எசேக்கியேல் 20:6, NW) ஆகவே யூதா தேசம் முன்பிருந்த அதே அழகையும் மகிமையையும் மீண்டும் பெறும் என ஏசாயாவின் வார்த்தைகள் உறுதியளிக்கின்றன. சொல்லப்போனால் அது பூமியின் மணி மகுடமாக இருக்கும்.
8 ஆனால் தேசம் மீண்டும் எழில் கொஞ்சும் சமயத்தில் யார் அங்கிருப்பர்? ‘இஸ்ரவேலில் தப்பினவர்கள்’ என எழுதுகிறார் ஏசாயா. ஆக, முன்னுரைக்கப்பட்ட அவமானத்திற்குரிய அழிவில் கண்டிப்பாக சிலர் தப்புவார்கள். (ஏசாயா 3:25, 26) தப்பிப்பிழைப்போரில் மீதியானோர் யூதாவுக்கு திரும்பி அதை புதுப்பிப்பதில் பங்குகொள்வர். இவ்வாறு திரும்புபவர்களுக்கு, அதாவது ‘தப்பினவர்களுக்கு’ புதுப்பிக்கப்பட்ட தேசத்தின் அமோக விளைச்சல் ‘சிறப்பும் [“பெருமையும்,” NW] அலங்காரமுமாயிருக்கும்.’ (ஏசாயா 4:2) பாழ்க்கடிப்பின் அவமானத்திற்கு பதிலாக பெருமையும் பெருமிதமும் உண்டாகும்.
9 ஏசாயா முன்னுரைத்தபடியே, நியாயத்தீர்ப்பின் புயற்காற்று பொ.ச.மு. 607-ல் அடித்தது. அப்போது பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தனர், அநேக இஸ்ரவேலர்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்த சிலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். யெகோவா மட்டும் இரக்கம் காட்டவில்லை என்றால், இந்தக் கொஞ்சம்பேரும் தப்பிப்பிழைத்திருக்க மாட்டார்கள். (நெகேமியா 9:31) இறுதியில் யூதா முழுமையாக பாழாக்கப்பட்டது. (2 நாளாகமம் 36:17-21) அதன்பின் பொ.ச.மு. 537-ல், இரக்கத்தின் உருவான கடவுள், ‘தப்பினவர்கள்’ யூதாவுக்குத் திரும்பி உண்மை வணக்கத்தை நிலைநாட்ட அனுமதித்தார்.b (எஸ்றா 1:1-4; 2:1, 2) சிறையிருப்பிலிருந்து திரும்பிவருவோர் இதயப்பூர்வமாக திருந்துவதை சங்கீதம் 137 அழகாக வர்ணிக்கிறது. இச்சங்கீதம், அவர்கள் சிறையிருப்பில் இருந்த காலத்தில் அல்லது விடுதலையாகி கொஞ்ச காலத்திற்குள் எழுதப்பட்டிருக்கலாம். யூதாவிற்கு வந்த பிறகு அவர்கள் நிலத்தை பண்படுத்தி விதை விதைத்தனர். கடவுள் அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, நிலத்தை ‘ஏதேன் தோட்டத்தை’ போல் காய்த்துக் குலுங்கச் செய்வதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்!—எசேக்கியேல் 36:34-36.
10 அதேவிதமான புதுப்பித்தல் நம் நாளிலும் நடந்திருக்கிறது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனில்’ ஆவிக்குரிய விதத்தில் சிறைப்படுத்தப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 17:5) ஏற்கெனவே அநேக பொய்மத போதகங்களை அவர்கள் விட்டொழித்திருந்த போதிலும் இன்னும் சில பாபிலோனிய கருத்துக்களும் பழக்கங்களும் அவர்களை கறைப்படுத்தின. குருமாரின் தூண்டுதலால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர், சிலர் சொல்லர்த்தமாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது ஆவிக்குரிய தேசம்—மத அல்லது ஆன்மீக நிலைமை—பாழாக்கப்பட்டது.
11 ஆனால் 1919, இளவேனிற்காலத்தில் யெகோவா ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானோரான இவர்கள்மீது இரக்கம் காட்டினார். (கலாத்தியர் 6:16) அவர்கள் மனந்திரும்பி உண்மையோடு தம்மை சேவிக்க விரும்புவதை அவர் கண்டார். ஆகவே சொல்லர்த்தமான சிறையிருப்பிலிருந்தும், அதைக் காட்டிலும் முக்கியமாக ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்தும் அவர்களை விடுவித்தார். இவ்வாறு ‘தப்பினவர்கள்’ கடவுள் கொடுத்த ஆவிக்குரிய தேசத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்டனர். கடவுள் இத்தேசத்தை அமோகமாக விளையச் செய்தார். அழகிய வசீகர தோற்றமுடைய இந்த ஆவிக்குரிய தேசம் தேவபயமுள்ள லட்சக்கணக்கானோரை கவர்ந்திழுத்திருக்கிறது. இவர்கள் மீதியானோரோடு சேர்ந்து உண்மை வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
12 கடவுள் தம் மக்கள் மீது காட்டும் இரக்கத்தின் மேன்மையை ஏசாயாவின் வார்த்தைகள் சிறப்பித்துக் காட்டுகின்றன. இஸ்ரவேலர்கள் ஒரு தேசமாக யெகோவாவிற்கு எதிராக திரும்பிய போதும், மனந்திரும்பிய மீதியானோர் மீது அவர் இரக்கம் காட்டினார். ஆகவே, பொல்லாத பாவம் செய்தோரும்கூட நம்பிக்கையோடு யெகோவாவிடம் திரும்பலாம் என்பதை அறிவது ஆறுதலளிக்கிறது. மனந்திரும்பிய பிறகும் யெகோவாவின் இரக்கத்தை பெற முடியாது என நினைக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணிப்பதில்லை. (சங்கீதம் 51:17) “யெகோவா உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” என பைபிள் நம்பிக்கையளிக்கிறது. (சங்கீதம் 103:8, 13, தி.மொ.) இப்பேர்ப்பட்ட இரக்கமுள்ள தேவனை நாம் எவ்வளவு துதித்தாலும் தகும்!
-
-
மீதியானோர் மீது இரக்கம் காட்டுகிறார் யெகோவாஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
a ‘யெகோவாவின் கிளை’ என்ற பதம், எருசலேம் புதுப்பிக்கப்பட்ட பிறகு தோன்றவிருக்கும் மேசியாவை குறிப்பதாக சில அறிஞர்கள் சொல்கின்றனர். அராமிக் டார்கம்ஸ், இப்பதத்தை “யெகோவாவின் மேசியா [கிறிஸ்து]” என மொழிபெயர்க்கிறது. மேலும், தாவீதுக்கு ‘ஒரு நீதியுள்ள கிளை’ எழும்புமென பிற்பாடு எரேமியா குறிப்பிடுகையில் அதே எபிரெய பெயர்ச்சொல்லை (ஸேமேக் [tseˈmach]) பயன்படுத்தியது ஆர்வத்திற்குரியது.—எரேமியா 23:5; 33:15.
b ‘தப்பினவர்கள்,’ சிறையிருப்பின் காலத்தில் பிறந்த சிலரையும் உட்படுத்தியது. இவர்களது முற்பிதாக்கள் அழிவில் தப்பிப்பிழைத்திருக்காவிட்டால் இவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள் என்பதால் இவர்களையும் ‘தப்பினவர்கள்’ என அழைக்கலாம்.—எஸ்றா 9:13-15; ஒப்பிடுக: எபிரெயர் 7:9, 10.
-