அதிகாரம் ஆறு
மீதியானோர் மீது இரக்கம் காட்டுகிறார் யெகோவா
மக்கள்தொகை மிகுந்திருக்கும் ஒரு பகுதி, சூறாவளியின் சீற்றத்திற்கு இலக்காகிறது. பேய்க் காற்று சுழற்றி அடிக்க, அடை மழை கொட்ட, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளையும் பயிர்களையும் உயிர்களையும் காவுகொள்கிறது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் புயற்காற்று ஓய்ந்து அமைதி தவழ்கிறது. உயிர்தப்பியவர்கள் சீரமைக்கும் பணிக்கு ஆயத்தமாகின்றனர்.
2 இதைப் போன்ற ஒன்றுதான் யூதாவிலும் எருசலேமிலும் நடக்குமென ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைக்கிறார். தெய்வீக நியாயத்தீர்ப்பென்ற கருத்த மேகங்கள் திரண்டு வந்துகொண்டே இருக்கின்றன! அதற்கு நல்ல காரணமும் உண்டு. ஏனெனில் தேசம் பெரும் பாவத்தைச் சுமக்கிறது. ஆளுபவர்களும் சரி ஆளப்படுபவர்களும் சரி தேசத்தை அநீதியாலும் இரத்தத்தாலும் நிரப்புகின்றனர். யூதாவின் பாவத்தை ஏசாயா மூலம் யெகோவா அம்பலமாக்குகிறார். அதன்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப் போவதாகவும் எச்சரிக்கிறார். (ஏசாயா 3:25) இந்தப் புயற்காற்றினால் யூதா தேசம் முழுமையாக பாழாக்கப்படும். இந்தச் செய்தி ஏசாயாவிற்கு கவலை தரலாம்.
3 ஆனால் சந்தோஷமான செய்தியும் உண்டு! யெகோவாவின் நீதியுள்ள நியாயத்தீர்ப்பின் புயற்காற்று ஓயும், சிலர் உயிர் தப்புவார்கள். ஆம், யூதாவை நியாயந்தீர்க்கையில் யெகோவா இரக்கமும் காட்டுவார்! ஏசாயா 4:2-6-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஏசாயாவின் ஏவப்பட்ட செய்தி இப்படிப்பட்ட ஆசீர்வாதத்திற்குரிய காலத்தையே முன்னுரைக்கிறது. அதற்கு முந்தைய வசனங்கள் (ஏசாயா 2:6–4:1) நியாயத்தீர்ப்பின் காட்சிகளையும் ஒலிகளையும் விவரித்தாலும், இப்போது காட்சி மாறுகிறது. கருத்த மேகங்களை கிழித்துக்கொண்டு சூரியன் பிரகாசிப்பது போல் நியாயத்தீர்ப்புக் காலத்திற்குப் பின், தேசம் அழகாக சீரமைக்கப்பட்டு தேசத்தார் களிகூரும் பிரகாசமான காலம் வருமென்று விவரிக்கப்படுகிறது.
4 மீதியானோர் தப்பிப்பிழைத்து மீண்டும் பாதுகாப்போடு வாழ்வார்கள் என ஏசாயா முன்னுரைத்தது, ‘கடைசி நாட்களாகிய’ நம் காலத்திலும் நிறைவேறுகிறது. (ஏசாயா 2:2-4) காலத்திற்கேற்ற இச்செய்தியை நாம் இப்போது கலந்தாராயலாம். ஏனெனில் அது தீர்க்கதரிசன அர்த்தமுள்ளது மட்டுமல்ல, யெகோவாவின் இரக்கத்தைப் பற்றியும் தனிப்பட்ட விதமாக நாம் எவ்வாறு அவர் இரக்கத்தைப் பெறலாம் என்பதைப் பற்றியும் பாடம் கற்பிக்கிறது.
‘யெகோவாவின் கிளை’
5 சூறாவளிக்குப்பின் வரவிருக்கும் அமைதி தவழும் காலத்தைப் பற்றி ஏசாயா இப்போது இதமான தொனியில் விவரிக்கிறார். அவர் எழுதுவதாவது: “இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.”—ஏசாயா 4:2.
6 ஏசாயா இங்கே புதுப்பித்தலைப் பற்றி பேசுகிறார். “கிளை” என்பதற்கான எபிரெய பெயர்ச்சொல் ‘துளிர்விடுவதை, முளைவிடுவதை’ குறிக்கிறது. யெகோவா, செழிப்பையும் ஆசீர்வாதத்தையும் அதிகரிப்பையும் அருளுவார் என இது அர்த்தப்படுத்தலாம். இவ்வாறு, தேசம் என்றென்றும் பாழாய் கிடக்காது என்ற நம்பிக்கையை ஏசாயா அளிக்கிறார். யெகோவாவின் ஆசீர்வாதத்தால் யூதா முன்பிருந்த அதே செழுமையைப் பெற்று மறுபடியும் மிகுந்த கனிகொடுக்கும்.a—லேவியராகமம் 26:3-5.
7 வரவிருக்கும் மகத்தான மாற்றத்தை ஏசாயா தத்ரூபமாக விவரிக்கிறார். யெகோவாவின் கிளை, “அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்” என்கிறார். ‘அலங்காரம்’ என்ற வார்த்தை, நூற்றாண்டுகளுக்கு முன்னர் யெகோவா தேவன் இஸ்ரவேலர்களுக்கு கொடுத்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் அழகை நினைவுபடுத்துகிறது. அது அவ்வளவு அழகாக இருந்ததால் ‘எல்லா தேசங்களின் அலங்காரமாக [“மணியாக,” நியூ அமெரிக்கன் பைபிள்]’ கருதப்பட்டது. (எசேக்கியேல் 20:6, NW) ஆகவே யூதா தேசம் முன்பிருந்த அதே அழகையும் மகிமையையும் மீண்டும் பெறும் என ஏசாயாவின் வார்த்தைகள் உறுதியளிக்கின்றன. சொல்லப்போனால் அது பூமியின் மணி மகுடமாக இருக்கும்.
8 ஆனால் தேசம் மீண்டும் எழில் கொஞ்சும் சமயத்தில் யார் அங்கிருப்பர்? ‘இஸ்ரவேலில் தப்பினவர்கள்’ என எழுதுகிறார் ஏசாயா. ஆக, முன்னுரைக்கப்பட்ட அவமானத்திற்குரிய அழிவில் கண்டிப்பாக சிலர் தப்புவார்கள். (ஏசாயா 3:25, 26) தப்பிப்பிழைப்போரில் மீதியானோர் யூதாவுக்கு திரும்பி அதை புதுப்பிப்பதில் பங்குகொள்வர். இவ்வாறு திரும்புபவர்களுக்கு, அதாவது ‘தப்பினவர்களுக்கு’ புதுப்பிக்கப்பட்ட தேசத்தின் அமோக விளைச்சல் ‘சிறப்பும் [“பெருமையும்,” NW] அலங்காரமுமாயிருக்கும்.’ (ஏசாயா 4:2) பாழ்க்கடிப்பின் அவமானத்திற்கு பதிலாக பெருமையும் பெருமிதமும் உண்டாகும்.
9 ஏசாயா முன்னுரைத்தபடியே, நியாயத்தீர்ப்பின் புயற்காற்று பொ.ச.மு. 607-ல் அடித்தது. அப்போது பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தனர், அநேக இஸ்ரவேலர்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்த சிலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். யெகோவா மட்டும் இரக்கம் காட்டவில்லை என்றால், இந்தக் கொஞ்சம்பேரும் தப்பிப்பிழைத்திருக்க மாட்டார்கள். (நெகேமியா 9:31) இறுதியில் யூதா முழுமையாக பாழாக்கப்பட்டது. (2 நாளாகமம் 36:17-21) அதன்பின் பொ.ச.மு. 537-ல், இரக்கத்தின் உருவான கடவுள், ‘தப்பினவர்கள்’ யூதாவுக்குத் திரும்பி உண்மை வணக்கத்தை நிலைநாட்ட அனுமதித்தார்.b (எஸ்றா 1:1-4; 2:1, 2) சிறையிருப்பிலிருந்து திரும்பிவருவோர் இதயப்பூர்வமாக திருந்துவதை சங்கீதம் 137 அழகாக வர்ணிக்கிறது. இச்சங்கீதம், அவர்கள் சிறையிருப்பில் இருந்த காலத்தில் அல்லது விடுதலையாகி கொஞ்ச காலத்திற்குள் எழுதப்பட்டிருக்கலாம். யூதாவிற்கு வந்த பிறகு அவர்கள் நிலத்தை பண்படுத்தி விதை விதைத்தனர். கடவுள் அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, நிலத்தை ‘ஏதேன் தோட்டத்தை’ போல் காய்த்துக் குலுங்கச் செய்வதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்!—எசேக்கியேல் 36:34-36.
10 அதேவிதமான புதுப்பித்தல் நம் நாளிலும் நடந்திருக்கிறது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனில்’ ஆவிக்குரிய விதத்தில் சிறைப்படுத்தப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 17:5) ஏற்கெனவே அநேக பொய்மத போதகங்களை அவர்கள் விட்டொழித்திருந்த போதிலும் இன்னும் சில பாபிலோனிய கருத்துக்களும் பழக்கங்களும் அவர்களை கறைப்படுத்தின. குருமாரின் தூண்டுதலால் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர், சிலர் சொல்லர்த்தமாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது ஆவிக்குரிய தேசம்—மத அல்லது ஆன்மீக நிலைமை—பாழாக்கப்பட்டது.
11 ஆனால் 1919, இளவேனிற்காலத்தில் யெகோவா ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானோரான இவர்கள்மீது இரக்கம் காட்டினார். (கலாத்தியர் 6:16) அவர்கள் மனந்திரும்பி உண்மையோடு தம்மை சேவிக்க விரும்புவதை அவர் கண்டார். ஆகவே சொல்லர்த்தமான சிறையிருப்பிலிருந்தும், அதைக் காட்டிலும் முக்கியமாக ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்தும் அவர்களை விடுவித்தார். இவ்வாறு ‘தப்பினவர்கள்’ கடவுள் கொடுத்த ஆவிக்குரிய தேசத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்டனர். கடவுள் இத்தேசத்தை அமோகமாக விளையச் செய்தார். அழகிய வசீகர தோற்றமுடைய இந்த ஆவிக்குரிய தேசம் தேவபயமுள்ள லட்சக்கணக்கானோரை கவர்ந்திழுத்திருக்கிறது. இவர்கள் மீதியானோரோடு சேர்ந்து உண்மை வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
12 கடவுள் தம் மக்கள் மீது காட்டும் இரக்கத்தின் மேன்மையை ஏசாயாவின் வார்த்தைகள் சிறப்பித்துக் காட்டுகின்றன. இஸ்ரவேலர்கள் ஒரு தேசமாக யெகோவாவிற்கு எதிராக திரும்பிய போதும், மனந்திரும்பிய மீதியானோர் மீது அவர் இரக்கம் காட்டினார். ஆகவே, பொல்லாத பாவம் செய்தோரும்கூட நம்பிக்கையோடு யெகோவாவிடம் திரும்பலாம் என்பதை அறிவது ஆறுதலளிக்கிறது. மனந்திரும்பிய பிறகும் யெகோவாவின் இரக்கத்தை பெற முடியாது என நினைக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணிப்பதில்லை. (சங்கீதம் 51:17) “யெகோவா உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” என பைபிள் நம்பிக்கையளிக்கிறது. (சங்கீதம் 103:8, 13, தி.மொ.) இப்பேர்ப்பட்ட இரக்கமுள்ள தேவனை நாம் எவ்வளவு துதித்தாலும் தகும்!
மீதியானோர் யெகோவாவிற்கு பரிசுத்தமாகின்றனர்
13 யெகோவாவின் இரக்கத்தைப் பெறவிருக்கும் மீதியானோரை ஏசாயா முதலில் அறிமுகப்படுத்தினார். இப்போது அவர்களைப் பற்றி இன்னும் விவரமாக இவ்வாறு எழுதுகிறார்: “சீயோனிலே விடப்பட்டு எருசலேமில் மீதியானவனாகிய ஜீவனுக்கென்று எருசலேமிலே பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.”—ஏசாயா 4:4, தி.மொ.
14 ‘விடப்பட்டவர்களும்,’ ‘மீதியானவர்களும்’ யார்? முந்தின வசனத்தில் குறிப்பிடப்பட்ட ‘தப்பினவர்களே’—அதாவது, யூதாவிற்கு திரும்பிவர அனுமதி பெறப்போகும் நாடுகடத்தப்பட்ட யூதர்களே இவர்கள். யெகோவா இவர்கள்மீது ஏன் இரக்கம் காட்டுவார் என இப்போது ஏசாயா சொல்கிறார். அவர்கள் அவருக்கு ‘பரிசுத்தமாக இருப்பார்கள்’ என்கிறார். பரிசுத்தம் என்பது “மதத் தூய்மை, சுத்தம், புனிதம்” ஆகியவற்றை அர்த்தப்படுத்துகிறது. பரிசுத்தமாக இருப்பது சொல்லிலும் செயலிலும் சுத்தமாக, தூய்மையாக இருப்பதை உட்படுத்துகிறது. சரி எது தவறு எது என்பதற்கான யெகோவாவின் தராதரத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வதைக் குறிக்கிறது. ஆம், யெகோவா தமக்கு ‘பரிசுத்தமாக’ இருக்கும் மக்கள்மீது இரக்கம் காட்டி, ‘பரிசுத்த நகரமாகிய’ எருசலேமுக்கு திரும்பும்படி அனுமதிப்பார்.—நெகேமியா 11:1.
15 இந்த உண்மையுள்ள மீதியானோர் அங்கேயே நிலைத்திருப்பார்களா? அவர்கள் ‘ஜீவனுக்கென்று எருசலேமிலே பேரெழுதப்படுவார்கள்’ என ஏசாயா வாக்குறுதி அளிக்கிறார். இது, குடும்பம் கோத்திரம் போன்ற விவரங்களை துல்லியமாக பதிவுசெய்யும் பழக்கம் யூதர்களுக்கு இருந்ததை நம் நினைவுக்கு கொண்டு வருகிறது. (நெகேமியா 7:5) பெயர் பதிவுசெய்யப்பட்டிருப்பது, ஒருவர் உயிருடன் இருப்பதைக் குறித்தது. இறக்கும்போது அவரது பெயர் அந்தப் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பைபிளின் மற்ற பகுதிகளில் அடையாள அர்த்தமுள்ள பதிவு புத்தகம் ஒன்றைப் பற்றி வாசிக்கிறோம். இதில் யெகோவாவிடமிருந்து ஜீவனைப் பரிசாக பெறுவோரின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருந்தாலும் இப்பதிவு நிபந்தனைக்கு உட்பட்டது, ஏனெனில் யெகோவாவால் இப்பெயர்களை ‘நீக்கிவிட’ முடியும். (யாத்திராகமம் 32:32, 33, பொ.மொ.; சங்கீதம் 69:28) ஆக, ஏசாயாவின் வார்த்தைகள் எச்சரிப்பு அளிக்கின்றன—புதுப்பிக்கப்பட்ட தேசத்திற்கு திரும்பிவருவோர், கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமாக நிலைத்திருந்தால் மட்டுமே அங்கு தொடர்ந்து வாழ முடியும்.
16 பொ.ச.மு. 537-ல் மீதியானோர், தூய்மையான நோக்கத்துடன், அதாவது உண்மை வணக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் எருசலேமுக்கு திரும்பினர். பொய்மத பழக்கங்களால் அல்லது ஏசாயா கடுமையாய் எச்சரித்திருந்த அசுத்த பழக்கங்களால் கறைபட்டிருந்தோருக்கு திரும்பி வர உரிமையில்லை. (ஏசாயா 1:15-17) யெகோவாவின் பார்வையில் பரிசுத்தமாக இருந்தோர் மட்டுமே யூதாவிற்கு திரும்ப முடிந்தது. (ஏசாயா 35:8) அதேவிதமாக, 1919-ல் ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து விடுதலையான சமயம் முதற்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமாக இருக்க எல்லா விதங்களிலும் முயன்றிருக்கிறார்கள். பூமியில் நித்தியமாக வாழும் நம்பிக்கை உடைய லட்சக்கணக்கான “வேறே ஆடுகளும்” அவ்வாறே முயன்றிருக்கிறார்கள். (யோவான் 10:16) அவர்கள் பாபிலோனிய போதனைகளையும் பழக்கங்களையும் விட்டொழித்திருக்கிறார்கள். தனிப்பட்ட விதமாக, கடவுளது உயர்ந்த ஒழுக்க தராதரங்களை பின்பற்ற முயலுகிறார்கள். (1 பேதுரு 1:14-16) ஆக, யெகோவா அவர்கள் மீது இரக்கம் காட்டியது வீண் போகவில்லை.
17 இஸ்ரவேலில் பரிசுத்தமாக இருந்தவர்களை யெகோவா கவனித்து, ‘அவர்களது பெயர்களை ஜீவனுக்கென்று எழுதி வைத்ததை’ ஞாபகப்படுத்திப் பாருங்கள். இன்றும்கூட, மனதிலும் உடலிலும் பரிசுத்தமாக இருக்க முயலும் நம்மை யெகோவா கவனிக்கிறார். நம் ‘சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க’ முயல்வதை கவனிக்கிறார். (ரோமர் 12:1) இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வோர் கடவுளுடைய “ஜீவ புஸ்தகத்தில்” பதிவு செய்யப்படுகின்றனர். இது, பரலோகத்திலோ பூமியிலோ நித்திய ஜீவனை பெற தகுதிபெற்றவர்களின் பெயர்கள் அடங்கிய அடையாளப்பூர்வ புஸ்தகமாகும். (பிலிப்பியர் 4:3; மல்கியா 3:16) ஆகவே, கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமாக நிலைத்திருக்க நம்மாலான அனைத்தையும் செய்வோமாக. அப்போதுதான் அந்த விலைமதிப்புள்ள ‘புஸ்தகத்தில்’ நம் பெயரை காத்துக்கொள்ள முடியும்.—வெளிப்படுத்துதல் 3:5.
கரிசனையோடு பாதுகாக்க வாக்குறுதி
18 அடுத்ததாக, புதுப்பிக்கப்பட்ட தேசத்தின் குடிமக்கள் எவ்வாறு பரிசுத்தமாவார்கள் என்றும் என்ன ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்றும் ஏசாயா சொல்கிறார்: “அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் [“நியாயத்தீர்ப்பின்,” NW] ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, . . . கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.”—ஏசாயா 4:3, 5.
19 ஒழுக்க சீர்கேட்டை ஆடம்பர ஆபரணங்களால் மூடி மறைத்த ‘சீயோன் குமாரத்திகளை’ ஏசாயா முன்பு கண்டனம் செய்தார். மக்கள் சுமந்துவந்த இரத்தப்பழியை அம்பலப்படுத்தி, தங்களை கழுவிக்கொள்ளும்படி ஊக்குவித்தார். (ஏசாயா 1:15, 16; 3:16-23) இப்போதோ, கடவுள்தாமே மக்களின் ஒழுக்கக் கறையாகிய “அழுக்கைக் கழுவி,” ‘இரத்தப்பழிகளை நீக்கிவிடும்’ காலத்தைப் பற்றி பேசுகிறார். (ஏசாயா 4:4) இந்த சுத்தப்படுத்துதல் எவ்வாறு நிறைவேற்றப்படும்? ‘நியாயத்தீர்ப்பின் ஆவியினாலும்,’ ‘சுட்டெரிப்பின் ஆவியினாலும்.’ எருசலேம் அழிக்கப்பட்டு அதன் மக்கள் நாடுகடத்தப்படுவது, கடவுளது கடும் நியாயத்தீர்ப்பின் வெளிக்காட்டாகவும் சுட்டெரிக்கும் கோபத்தின் வெளிக்காட்டாகவும் இருக்கும். இந்த பெருந்துன்பங்களிலிருந்து தப்பித்து தாய்நாடு திரும்புவோர் மனத்தாழ்மையைக் கற்று பக்குவமாகியிருப்பர். இதனால்தான் அவர்கள் யெகோவாவின் பார்வையில் பரிசுத்தமானவர்களாக இரக்கம் பெறுவார்கள்.—மல்கியா 3:2, 3-ஐ ஒப்பிடுக.
20 இந்த சுத்திகரிக்கப்பட்ட மீதியானோரை தாம் கரிசனையோடு கவனித்துக்கொள்வதாக ஏசாயா மூலம் யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். ‘மேகம்,’ “புகை,” “கொழுந்துவிட்டு எரியும் அக்கினி” ஆகிய பதங்கள், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு கிளம்பிய பிறகு யெகோவா எவ்வாறு அவர்களை காத்தார் என்பதை நினைவுபடுத்துகின்றன. துரத்திவந்த எகிப்தியர்களிடமிருந்து ‘அக்கினியும் மேகமுமான ஸ்தம்பம்’ அவர்களைக் காத்தன, வனாந்தரத்திலும் அவர்களுக்கு வழிகாட்டின. (யாத்திராகமம் 13:21, 22; 14:19, 20, 24) யெகோவா சீனாய் மலையின்மேல் இறங்கினபோது மலை முழுவதும் “புகைக்காடாய்” ஆனது. (யாத்திராகமம் 19:18) ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட மீதியானோர் பயப்பட வேண்டியதில்லை. யெகோவா அவர்களைக் காப்பார். வீடுகளில் கூடினாலும் சரி பரிசுத்த மாநாடுகளில் கூடினாலும் சரி அவர் அவர்களோடு இருப்பார்.
21 தினசரி வாழ்க்கைக்குப் பொருந்தும் குறிப்பைச் சொல்லி தெய்வீக பாதுகாப்பு பற்றிய விவரிப்பை ஏசாயா இவ்வாறு முடிக்கிறார்: “பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.” (ஏசாயா 4:6) திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் ஒரு கூடாரம் அல்லது குடிசை கட்டப்பட்டது. இது, வறண்ட காலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு நிழலாகவும் மழை காலத்து குளிருக்கும் புயற்காற்றுக்கும் புகலிடமாகவும் விளங்கியது.—யோனா 4:5-ஐ ஒப்பிடுக.
22 துன்புறுத்துதல் எனும் வெயில் பொசுக்கினாலும் எதிர்ப்பு எனும் புயற்காற்று வீசினாலும், சுத்திகரிக்கப்பட்ட மீதியானோருக்கு யெகோவா பாதுகாப்பும் அடைக்கலமும் புகலிடமும் தருவார். (சங்கீதம் 91:1, 2; 121:5) ஓர் அருமையான ஆசீர்வாதம் அவர்களுக்கு முன் வைக்கப்படுகிறது: பாபிலோனின் அசுத்த நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் விட்டொழித்து, யெகோவாவின் நியாயத்தீர்ப்பினால் உண்டாகும் சுத்திகரிப்பிற்கு பணிந்து, பரிசுத்தமாக நிலைத்திருக்க கடுமையாக முயற்சி செய்தால், தெய்வீக பாதுகாப்பென்னும் ‘கூடாரத்தில்’ அவர்கள் பத்திரமாக நிலைத்திருப்பார்கள்.
23 சுத்திகரிப்பு முதலில் நடந்த பிறகே ஆசீர்வாதங்கள் கிடைப்பதாக சொல்லப்படுவதை கவனியுங்கள். இது நம் நாளிலும் உண்மையாகி இருக்கிறது. 1919-ல் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட தாழ்மையோடு இடமளித்தனர். யெகோவாவும் அவர்களது அசுத்தத்தை ‘கழுவினார்.’ அப்போது முதற்கொண்டு வேறே ஆடுகளாகிய ‘திரள் கூட்டத்தினரும்’ யெகோவா தங்களை சுத்திகரிக்க அனுமதித்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9) இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட மீதியானோரும் அவர்களது கூட்டாளிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்—யெகோவா அவர்களை தமது செட்டைகளின்கீழ் பாதுகாக்கிறார். துன்புறுத்துதலும் எதிர்ப்பும் அவர்களை அறவே அண்டாதபடி அவர் எந்த அற்புதத்தையும் செய்வதில்லை. ஆனால் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாத்து, “நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும்” ஒரு கூடாரத்தை அவர்கள்மீது எழுப்புகிறார் என சொல்லலாம். எப்படி?
24 சற்று யோசித்துப் பாருங்கள்: சரித்திரத்திலேயே மிகுந்த வல்லமைமிக்க அரசாங்கங்கள் யெகோவாவின் சாட்சிகளது பிரசங்க வேலையை தடை செய்திருக்கின்றன அல்லது அடியோடு அழிக்க முயன்றிருக்கின்றன. இருந்தாலும் சாட்சிகள் உறுதியாக நிலைத்திருந்து விட்டுக்கொடுக்காமல் பிரசங்கம் செய்திருக்கின்றனர்! பலம்பொருந்திய தேசங்களும்கூட, பாதுகாப்பற்றவர்களாக தோன்றும் இந்தச் சிறிய தொகுதியினரின் ஊழியத்தை நிறுத்த முடியவில்லையே, ஏன்? ஏனெனில் எந்த மனிதனாலும் அழிக்க முடியாத பாதுகாப்பு ‘கூடாரத்தில்’ யெகோவா தமது பரிசுத்தமான ஊழியர்களை வைத்திருக்கிறார்!
25 நம் ஒவ்வொருவரையும் பற்றியென்ன? யெகோவா நமது பாதுகாப்பாளர் என்பதற்காக இவ்வுலகில் நமக்கு பிரச்சினையே வராது என அர்த்தமாகாது. அநேக உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் வறுமை, இயற்கை சேதங்கள், போர், வியாதி, மரணம் போன்ற கடும் சோதனைகளை எதிர்ப்படுகின்றனர். அப்படிப்பட்ட சோதனைகளின்போது, தேவன் நம்மோடிருக்கிறார் என்பதை மறவாதிருப்போமாக. அவர் நம்மை ஆவிக்குரிய விதத்தில் பாதுகாக்கிறார். சோதனைகளை சகித்து உண்மையோடு நிலைத்திருக்க தேவையான அனைத்தையும், ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியையும்கூட’ அளிக்கிறார். (2 கொரிந்தியர் 4:7, NW) அவர் நம்முடன் இருக்கையில் நமக்கு பயமில்லை. அவர் பார்வையில் பரிசுத்தமாக இருக்க நம்மாலான அனைத்தையும் செய்யும்வரை, எதுவும் ‘தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது.’—ரோமர் 8:38, 39.
[அடிக்குறிப்புகள்]
a ‘யெகோவாவின் கிளை’ என்ற பதம், எருசலேம் புதுப்பிக்கப்பட்ட பிறகு தோன்றவிருக்கும் மேசியாவை குறிப்பதாக சில அறிஞர்கள் சொல்கின்றனர். அராமிக் டார்கம்ஸ், இப்பதத்தை “யெகோவாவின் மேசியா [கிறிஸ்து]” என மொழிபெயர்க்கிறது. மேலும், தாவீதுக்கு ‘ஒரு நீதியுள்ள கிளை’ எழும்புமென பிற்பாடு எரேமியா குறிப்பிடுகையில் அதே எபிரெய பெயர்ச்சொல்லை (ஸேமேக் [tseˈmach]) பயன்படுத்தியது ஆர்வத்திற்குரியது.—எரேமியா 23:5; 33:15.
b ‘தப்பினவர்கள்,’ சிறையிருப்பின் காலத்தில் பிறந்த சிலரையும் உட்படுத்தியது. இவர்களது முற்பிதாக்கள் அழிவில் தப்பிப்பிழைத்திருக்காவிட்டால் இவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள் என்பதால் இவர்களையும் ‘தப்பினவர்கள்’ என அழைக்கலாம்.—எஸ்றா 9:13-15; ஒப்பிடுக: எபிரெயர் 7:9, 10.
[கேள்விகள்]
1, 2. யூதாவையும் எருசலேமையும் குறித்து ஏசாயா எதை முன்னறிவிக்கிறார்?
3. ஏசாயா 4:2-6-ல் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கும் சந்தோஷமான செய்தி என்ன?
4. தப்பிப்பிழைக்கும் மீதியானோரைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை இப்போது ஏன் கலந்தாராய வேண்டும்?
5, 6. (அ) சூறாவளிக்குப்பின் வரவிருக்கும் அமைதி தவழும் காலத்தை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) “கிளை” என்பதன் அர்த்தமென்ன, யூதா தேசத்தைக் குறித்ததில் இது எதை சுட்டிக்காட்டுகிறது?
7. யெகோவாவின் கிளை எந்த விதத்தில் “அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்”?
8. புதுப்பிக்கப்பட்ட தேசத்தை அனுபவிக்க யார் அங்கு இருப்பர், அவர்களது உணர்ச்சிகளை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்?
9. (அ) ஏசாயா முன்னுரைத்த விதமாகவே பொ.ச.மு. 537-ல் என்ன நடந்தது? (ஆ) ‘தப்பினவர்கள்’ சிறையிருப்பின் காலத்தில் பிறந்த சிலரையும் உட்படுத்தும் என ஏன் சொல்லலாம்? (அடிக்குறிப்பைக் காண்க.)
10, 11. (அ) 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பைபிள் மாணாக்கர்கள் எவ்வாறு ‘மகா பாபிலோனில்’ சிறைப்படுத்தப்பட்டனர்? (ஆ) ஆவிக்குரிய இஸ்ரவேலர்களில் மீதியானோரை யெகோவா எவ்வாறு ஆசீர்வதித்தார்?
12. யெகோவா தம் மக்கள்மீது காட்டும் இரக்கத்தின் மேன்மையை ஏசாயாவின் வார்த்தைகள் எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகின்றன?
13. யெகோவாவின் இரக்கத்தைப் பெறவிருக்கும் மீதியானோரை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்?
14. ‘விடப்பட்டவர்களும்,’ ‘மீதியானவர்களும்’ யார், யெகோவா அவர்கள்மீது ஏன் இரக்கம் காட்டுவார்?
15. (அ) ‘ஜீவனுக்கென்று எருசலேமிலே பேரெழுதப்படுவார்கள்’ என்ற சொற்றொடர் எந்த யூத பழக்கத்தை நம் நினைவுக்கு கொண்டுவருகிறது? (ஆ) என்ன எச்சரிக்கையை ஏசாயாவின் வார்த்தைகள் அளிக்கின்றன?
16. (அ) பொ.ச.மு. 537-ல் யூதாவிற்கு திரும்பியவர்களிடம் யெகோவா எதை எதிர்பார்த்தார்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் மீதும் ‘வேறே ஆடுகள்’ மீதும் யெகோவா இரக்கம் காட்டியது வீண் போகவில்லை என ஏன் சொல்லலாம்?
17. யெகோவா தமது ‘ஜீவபுஸ்தகத்தில்’ யாருடைய பெயர்களை எழுதுகிறார், நாம் எதைச் செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும்?
18, 19. ஏசாயா 4:3, 5-ன்படி யெகோவா என்ன சுத்தப்படுத்துதலை செய்வார், அது எவ்வாறு நிறைவேற்றப்படும்?
20. (அ) ‘மேகம்,’ “புகை,” “கொழுந்துவிட்டு எரியும் அக்கினி” ஆகிய பதங்கள் எதை ஞாபகப்படுத்துகின்றன? (ஆ) சுத்திகரிக்கப்பட்ட மீதியானோர் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
21, 22. (அ) கூடாரம் அல்லது குடிசை எதற்காக கட்டப்பட்டது? (ஆ) சுத்திகரிக்கப்பட்ட மீதியானோர் முன் என்ன ஆசீர்வாதம் வைக்கப்படுகிறது?
23. அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரையும் அவர்களது கூட்டாளிகளையும் யெகோவா ஏன் ஆசீர்வதித்துள்ளார்?
24. யெகோவா தமது மக்களை ஓர் அமைப்பாக ஆசீர்வதித்திருப்பது எவ்வாறு தெளிவாக தெரிகிறது?
25. யெகோவா பாதுகாப்பாளர் என்பது நம் ஒவ்வொருவருக்கும் எதை அர்த்தப்படுத்தும்?
[பக்கம் 63-ன் படங்கள்]
தெய்வீக நியாயத்தீர்ப்பு எனும் புயற்காற்று யூதாவில் வீசும்