பாடம் 06
உயிர் எப்படி உருவானது?
‘எல்லாவற்றையும் [கடவுள்தான்] படைத்தார்.’ (வெளிப்படுத்துதல் 4:11) நீங்கள் இதை நம்புகிறீர்களா? எல்லாம் தானாகவே உருவாகிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள். மனிதர்களும் தானாகத்தான் தோன்றினார்கள் என்றால் நம் வாழ்க்கைக்கு அர்த்தமே இருக்காது. ஆனால், யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார் என்றால் அவர் அப்படிப் படைத்ததற்கு ஒரு காரணம் இருக்கும், இல்லையா?a உயிர் எப்படி உருவானது என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அதை நாம் ஏன் நம்பலாம் என்றும் பார்க்கலாம்.
1. வானமும் பூமியும் எப்படி உருவானது?
“ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரு ஆரம்பம் இருந்ததாகப் பெரும்பாலான விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கிறார்கள். கடவுள் அதை எப்படிப் படைத்தார்? தன் ‘சக்தியினால்தான்’ அதில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களையும், கோள்களையும், மற்ற எல்லாவற்றையும் படைத்தார்.—ஆதியாகமம் 1:2.
2. கடவுள் ஏன் இந்தப் பூமியைப் படைத்தார்?
யெகோவா “[இந்தப் பூமியை] காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.” (ஏசாயா 45:18) மனிதர்கள் சவுகரியமாக என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக அவர் இந்தப் பூமியைப் படைத்தார். (ஏசாயா 40:28-யும் 42:5-யும் வாசியுங்கள்.) பூமி ஒரு விசேஷமான கோள் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே பூமியில் மட்டும்தான் மனிதர்களால் உயிர்வாழ முடியும்.
3. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?
யெகோவா பூமியைப் படைத்த பிறகு உயிரினங்களைப் படைத்தார். முதலில், செடி கொடிகளையும், மிருகங்களையும் படைத்தார். பிறகு, “மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார்.” (ஆதியாகமம் 1:27-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நாம் ரொம்ப விசேஷமானவர்கள். கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அன்பு, நீதி போன்ற அவருடைய குணங்களை நம்மாலும் காட்ட முடியும். அதுமட்டுமல்ல, நம்மால் புதுப்புது மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும், கலை வேலைப்பாடுகளைப் பார்த்து ரசிக்க முடியும், இசையையும் கேட்டு ரசிக்க முடியும். முக்கியமாக, நம்மைப் படைத்த கடவுளை வணங்க முடியும். இதையெல்லாம் மிருகங்களால் செய்ய முடியாது.
ஆராய்ந்து பார்க்கலாம்!
உயிரைக் கடவுள்தான் படைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் ஏன் நம்பலாம்? மனிதர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்க்கும்போது கடவுளைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? இப்போது பார்க்கலாம்.
4. உயிர் கடவுளுடைய கைவண்ணம்
மனிதர்கள் இயற்கையைக் காப்பியடித்து எதையாவது உருவாக்கும்போது அவர்களை எல்லாரும் புகழ்கிறார்கள். அப்படியென்றால், இயற்கையையே உருவாக்கியவரை நாம் புகழ வேண்டாமா? அவர் யார்? வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மனிதர்கள் இயற்கையைப் பார்த்து எதையெல்லாம் காப்பியடித்திருக்கிறார்கள்?
ஒவ்வொரு வீட்டையும் யாரோ ஒருவர் கட்டியிருக்க வேண்டும். அப்படியென்றால், இயற்கையில் நாம் பார்க்கிற எல்லாவற்றையும் யாரோ ஒருவர் உருவாக்கியிருக்க வேண்டும். அவர் யார்? எபிரெயர் 3:4-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இயற்கையில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் எது?
எல்லாவற்றையும் ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஏன்?
உங்களுக்குத் தெரியுமா?
இது சம்பந்தமாக இன்னும் நிறைய கட்டுரைகளையும் வீடியோக்களையும், jw.org வெப்சைட்டில் “யாருடைய கைவண்ணம்?” என்ற பகுதியிலும், “உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?” என்ற பகுதியிலும் நீங்கள் பார்க்கலாம்.
“உண்மைதான், ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே”
5. படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் நம்பலாம்
இந்தப் பூமியும், அதில் இருக்கிற உயிர்களும் படைக்கப்பட்டதைப் பற்றி ஆதியாகமம் 1-ஆம் அதிகாரம் சொல்கிறது. அதை நீங்கள் நம்பலாமா அல்லது அது வெறும் கதையா? வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பூமியும் அதில் இருக்கிற உயிர்களும் வெறும் ஆறே நாட்களில் படைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறதா?
படைப்பைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?
ஆதியாகமம் 1:1-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரு ஆரம்பம் இருந்ததாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அது எப்படி இந்த வசனத்தோடு ஒத்துப்போகிறது?
உயிரினங்களை உருவாக்குவதற்குக் கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தியதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆதியாகமம் 1:21, 25, 27-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கடவுள் ஒரே ஒரு உயிரணுவைப் படைத்துவிட்டு, அதிலிருந்து மீன்களும் மிருகங்களும் மனிதர்களும் தானாகவே உருவாவதற்கு விட்டுவிட்டதாக பைபிள் சொல்கிறதா? அல்லது, எல்லாவற்றையும் அவர் தனித்தனியாகப் படைத்தாரா?
6. மனிதர்கள் கடவுளுடைய ஒரு விசேஷப் படைப்பு
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆதியாகமம் 1:26-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கடவுள் தன் சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. அன்பும் கரிசனையும் நமக்கு இருக்கிறதென்றால், என்னென்ன குணங்கள் கடவுளுக்கும் இருக்கும்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுள்தான் எல்லாத்தயும் படைச்சாருனு பைபிள் சொல்றது வெறும் கதை.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன்?
சுருக்கம்
இந்தப் பிரபஞ்சத்தையும் எல்லா உயிர்களையும் யெகோவாதான் படைத்தார்.
ஞாபகம் வருகிறதா?
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
ஒரே ஒரு உயிரணுவிலிருந்து எல்லா உயிரினங்களும் தானாகவே உருவாவதற்குக் கடவுள் விட்டுவிட்டாரா அல்லது எல்லாவற்றையும் தனித்தனியாகப் படைத்தாரா?
மனிதர்கள் விசேஷமான ஒரு படைப்பு என்று ஏன் சொல்லலாம்?
அலசிப் பாருங்கள்
படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கு இயற்கையில் தெரியும் அத்தாட்சிகளைப் பாருங்கள்.
படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதை ஒரு அப்பா தன்னுடைய பையனுக்கு எப்படிச் சொல்லித் தருகிறார் என்று பாருங்கள்.
பரிணாமக் கொள்கை பைபிள் சொல்வதோடு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள்.
“பரிணாமத்தைப் பயன்படுத்திதான் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் கடவுள் படைத்தாரா?” (ஆன்லைன் கட்டுரை)
உயிரைக் கடவுள் படைத்தாரா அல்லது அது தானாக வந்ததா? இதைப் பற்றி அறிவியல் ஆராய்ச்சிகளும் புதைபடிவங்களும் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.
a மனிதர்களைக் கடவுள் எதற்காகப் படைத்தார் என்பதைப் பற்றி 25-வது பாடத்தில் பார்ப்போம்.