அதிகாரம் 17
கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
“உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்; . . . எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்.”—யூதா 20, 21.
1, 2. கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் எல்லாருமே ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்க விரும்புகிறோம். அதனால், சத்தான உணவைச் சாப்பிடுகிறோம், தவறாமல் உடற்பயிற்சி செய்கிறோம், உடலை நன்றாகப் பராமரிக்கிறோம். இதையெல்லாம் செய்ய அதிக முயற்சி தேவைப்பட்டாலும், நமக்கு நல்ல பலன்கள் கிடைப்பதால் அதை நாம் தொடர்ந்து செய்கிறோம். இன்னொரு விஷயத்திலும் நாம் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்க வேண்டும்.
2 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள இதுவரை நாம் அதிக முயற்சி எடுத்திருந்தாலும், யெகோவாவோடு நாம் வைத்திருக்கும் பந்தத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ள வேண்டும். “எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்” என்று கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியதோடு, அவர்கள் அதை எப்படிச் செய்யலாம் என்றும் யூதா விளக்கினார். “உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (யூதா 20, 21) அப்படியானால், விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்
3-5. (அ) யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான்? (ஆ) யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
3 யெகோவாவின் வழிகள் மிகச் சிறந்தவை என்று நீங்கள் உறுதியாக நம்புவது முக்கியம். கடவுளுடைய நெறிமுறைகளின்படி வாழ்வது ரொம்பக் கஷ்டம் என்று நீங்கள் நினைக்க வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான். அதோடு எது சரி, எது தவறு என்பதை நீங்களே தீர்மானித்துக்கொண்டால் சந்தோஷமாக இருக்க முடியும் என்றும் நீங்கள் நினைக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறான். மக்களை இப்படி நம்ப வைப்பதற்கு, அவன் ஏதேன் தோட்டத்திலிருந்தே முயற்சி செய்து வந்திருக்கிறான். (ஆதியாகமம் 3:1-6) இன்றும்கூட அதற்காக ரொம்பவே முயற்சி செய்கிறான்.
4 சாத்தான் சொல்வது சரியா? யெகோவாவின் நெறிமுறைகள் ரொம்பக் கெடுபிடியானதா? இல்லை. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு அழகான பூங்காவில் நடந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால், அதன் ஒரு பகுதியில் உயரமான வேலி போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். ‘ஏன் வேலி போட்டிருக்கிறார்கள்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அந்தச் சமயத்தில், வேலியின் பின்னாலிருந்து ஒரு சிங்கம் கர்ஜிக்கிற சத்தம் கேட்கிறது. இப்போது, அந்த வேலியைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அந்தச் சிங்கத்துக்கு இரையாகாமல் அந்த வேலி உங்களைப் பாதுகாப்பதை நினைத்துச் சந்தோஷப்படுவீர்கள், இல்லையா? யெகோவாவுடைய நியமங்கள் அந்த வேலியைப் போல இருக்கின்றன. பிசாசு, அந்த சிங்கத்தைப் போல இருக்கிறான். “தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்! உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்” என்று கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது.—1 பேதுரு 5:8.
5 நாம் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். சாத்தானிடம் நாம் ஏமாந்துபோகக் கூடாது என்று அவர் நினைக்கிறார். அதனால்தான், அவர் சட்டங்களையும் நியமங்களையும் தந்திருக்கிறார். அவை நம்மைப் பாதுகாக்கின்றன, சந்தோஷப்படுத்துகின்றன. (எபேசியர் 6:11) யாக்கோபு இப்படி எழுதினார்: “விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன் . . . சந்தோஷமாக இருக்கிறான்.”—யாக்கோபு 1:25.
6. கடவுளுடைய வழிகள்தான் மிகச் சிறந்தவை என்பதை நாம் எப்போது உறுதியாக நம்புவோம்?
6 யெகோவாவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால், நம் வாழ்க்கை நன்றாக இருக்கும்; அவரோடு நாம் வைத்திருக்கும் பந்தமும் பலப்படும். உதாரணத்துக்கு, தன்னிடம் அடிக்கடி ஜெபம் செய்யும்படி யெகோவா நம்மிடம் சொல்கிறார். நாம் அப்படிச் செய்யும்போது நன்மை அடைகிறோம். (மத்தேயு 6:5-8; 1 தெசலோனிக்கேயர் 5:17) தன்னை வணங்குவதற்காகவும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதற்காகவும் ஒன்றுகூடி வரும்படி அவர் நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். பிரசங்க வேலையிலும் கற்றுக்கொடுக்கும் வேலையிலும் முழுமையாக ஈடுபடும்படியும் கட்டளை கொடுத்திருக்கிறார். அவற்றுக்கு நாம் கீழ்ப்படியும்போது சந்தோஷமாக இருப்போம். (மத்தேயு 28:19, 20; கலாத்தியர் 6:2; எபிரெயர் 10:24, 25) நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படி உதவியிருக்கின்றன என்று யோசித்துப் பார்க்கும்போது, யெகோவாவின் வழிகள் மிகச் சிறந்தவை என்று நாம் இன்னும் உறுதியாக நம்புவோம்.
7, 8. எதிர்காலத்தில் வரப்போகும் சோதனைகளை நினைத்து கவலைப்படுவதைத் தவிர்க்க எது நமக்கு உதவும்?
7 எதிர்காலத்தில், நம் விசுவாசத்துக்கு வரப்போகும் கடுமையான சோதனைகளை நினைத்து நாம் கவலைப்படலாம். அப்படிப்பட்ட எண்ணம் எப்போதாவது உங்களுக்கு வந்தால், யெகோவாவின் இந்த வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்: “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன். நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
8 யெகோவாவுக்கு நாம் கீழ்ப்படியும்போது, நம்முடைய சமாதானம் வற்றாத ஆற்றைப் போலவும் நம்முடைய நீதி ஓயாத அலைகளைப் போலவும் இருக்கும். நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, நம்மால் விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியும். “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.—சங்கீதம் 55:22.
‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’
9, 10. முதிர்ச்சியுள்ளவராக ஆவது என்றால் என்ன?
9 யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நீங்கள் பலப்படுத்திக்கொண்டே இருந்தால், நீங்கள் ‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுவீர்கள்.’ (எபிரெயர் 6:2) முதிர்ச்சியுள்ளவராக ஆவது என்றால் என்ன?
10 வயதாவதால் மட்டுமே ஒருவர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆகிவிட முடியாது. முதிர்ச்சியுள்ளவராக ஆவதற்கு, யெகோவாவை நம்முடைய மிக நெருங்கிய நண்பராக ஆக்கிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் யெகோவா பார்க்கும் விதத்தில் பார்க்க முயற்சி செய்ய வேண்டும். (யோவான் 4:23) பவுல் இப்படி எழுதினார்: “பாவ வழியில் நடக்கிறவர்கள் பாவ காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்கள் கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிக்கிறார்கள்.” (ரோமர் 8:5) முதிர்ச்சியுள்ள ஒருவர் சுகபோக வாழ்க்கைக்கோ பணம், பொருளுக்கோ முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். அதற்குப் பதிலாக, யெகோவாவின் சேவைக்கே முக்கியத்துவம் கொடுப்பார். அதோடு, வாழ்க்கையில் ஞானமான தீர்மானங்களையும் எடுப்பார். (நீதிமொழிகள் 27:11; யாக்கோபு 1:2, 3-ஐ வாசியுங்கள்.) தவறு செய்வதற்கான எந்தத் தூண்டுதலுக்கும் இடங்கொடுக்க மாட்டார். முதிர்ச்சியுள்ள ஒருவருக்கு எது சரியென்று தெரியும். அதைச் செய்ய அவர் தீர்மானமாக இருப்பார்.
11, 12. (அ) ஒரு கிறிஸ்தவருடைய “பகுத்தறியும் திறன்களை” பற்றி பவுல் என்ன சொன்னார்? (ஆ) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவது, எப்படி ஒரு ஓட்டப் பந்தய வீரனாக ஆவதைப் போல இருக்கிறது?
11 முதிர்ச்சியுள்ளவராக ஆவதற்கு முயற்சி தேவை. “திட உணவோ முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது; சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிற ஆட்களுக்கே உரியது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 5:14) “பயிற்றுவித்திருக்கிற” என்ற வார்த்தை ஒரு ஓட்டப் பந்தய வீரன் எடுக்கும் பயிற்சியை நம் மனதுக்குக் கொண்டுவருகிறது.
12 சிறப்பாக ஓடும் ஒரு ஓட்டப் பந்தய வீரனைப் பார்க்கும்போது, அவர் அந்தளவுக்கு முன்னேற அதிக நேரமும் பயிற்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவர் பிறக்கும்போதே ஒரு ஓட்டப் பந்தய வீரனாகப் பிறக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு தன்னுடைய கைகால்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது. பொருள்களை எப்படிப் பிடிப்பது, எப்படி நடப்பது என்பதையெல்லாம் போகப் போக அது கற்றுக்கொள்கிறது. போதுமான பயிற்சி கிடைத்த பிறகு ஒரு ஓட்டப் பந்தய வீரனாக ஆக முடிகிறது. அதேபோல், முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு நேரமும் பயிற்சியும் நமக்குத் தேவைப்படுகின்றன.
13. யெகோவா யோசிக்கும் விதமாக யோசிப்பதற்கு எது நமக்கு உதவும்?
13 யெகோவா யோசிக்கும் விதமாக யோசிக்கவும் எல்லாவற்றையும் அவர் பார்க்கும் விதமாகப் பார்க்கவும் இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டோம். யெகோவாவின் நெறிமுறைகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொண்டோம். அதனால், ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பைபிளிலுள்ள எந்தச் சட்டங்கள் அல்லது நியமங்கள் இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்துகின்றன? அவற்றை நான் எப்படிப் பின்பற்றலாம்? நான் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புவார்?’—நீதிமொழிகள் 3:5, 6-ஐயும் யாக்கோபு 1:5-ஐயும் வாசியுங்கள்.
14. நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
14 யெகோவாமீது நமக்கிருக்கும் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். நம் உடல் பலமாக இருப்பதற்கு சத்தான உணவு முக்கியமாக இருப்பது போல, நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வது முக்கியம். நாம் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, யெகோவாவையும் அவருடைய வழிகளையும் பற்றிய அடிப்படை உண்மைகளைக் கற்றுக்கொண்டோம். ஆனால் போகப் போக, இன்னும் ஆழமான விஷயங்களை நாம் புரிந்துகொள்வது முக்கியம். இதை மனதில் வைத்தே பவுல் இப்படிச் சொன்னார்: “திட உணவோ முதிர்ச்சியுள்ளவர்களுக்கே உரியது.” கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் நாம் பின்பற்றும்போது, நாம் ஞானமுள்ளவர்களாக ஆகிறோம். “எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 4:5-7; 1 பேதுரு 2:2.
15. யெகோவாமீதும் நம் சகோதர சகோதரிகள்மீதும் அன்பு காட்டுவது எந்தளவுக்கு முக்கியமானது?
15 ஒருவர் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கலாம். ஆனால், தன்னை நன்றாக கவனித்துக்கொண்டால்தான் தொடர்ந்து அப்படி இருக்க முடியும் என்று அவருக்குத் தெரியும். அதேபோல், யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டுமென்று முதிர்ச்சியுள்ள ஒருவருக்குத் தெரியும். அதனால்தான், “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 13:5) நமக்குப் பலமான விசுவாசம் இருந்தால் மட்டும் போதாது. யெகோவாமீதும் நம் சகோதர சகோதரிகள்மீதும் அன்பு காட்டுவதில் நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். பவுல் இப்படிச் சொன்னார்: “எனக்கு . . . எல்லா அறிவும் இருந்தாலும், மலைகளை நகர வைக்குமளவுக்கு விசுவாசம் இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை.”—1 கொரிந்தியர் 13:1-3.
உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்
16. நாம் எப்படியெல்லாம் நினைக்க வேண்டுமென்று சாத்தான் விரும்புகிறான்?
16 யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் நம்மால் வாழவே முடியாது என நாம் நினைக்க வேண்டும் என்றுதான் சாத்தான் விரும்புகிறான். நாம் சோர்ந்துபோக வேண்டுமென்றும் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வே கிடைக்காது என நாம் நினைக்க வேண்டுமென்றும் அவன் விரும்புகிறான். நம் சகோதர சகோதரிகள்மீது நம்பிக்கை வைக்கக் கூடாது என்றும் நாம் சந்தோஷமாக வாழக் கூடாது என்றும் அவன் நினைக்கிறான். (எபேசியர் 2:2) எதிர்மறையான எண்ணங்கள், நம்மையும் கடவுளோடு நமக்கிருக்கும் பந்தத்தையும் பாதித்துவிடும் என்று அவனுக்குத் தெரியும். இப்படிப்பட்ட எண்ணங்களை எதிர்த்துப் போராட யெகோவா நமக்கு அருமையான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
17. நம்பிக்கை எந்தளவுக்கு முக்கியமானது?
17 ஒன்று தெசலோனிக்கேயர் 5:8 நம் நம்பிக்கையை, தலைக்கவசத்தோடு ஒப்பிடுகிறது. அதை, “மீட்புக்கான நம்பிக்கை” என அந்த வசனம் சொல்கிறது. தலைக்கவசம், ஒரு போர்வீரனின் தலையைப் பாதுகாக்கிறது. அதேபோல், யெகோவாவின் வாக்குறுதிகள்மீதுள்ள நம்பிக்கை, நம் மனதைப் பாதுகாக்கிறது; எதிர்மறையான எண்ணங்களை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது.
18, 19. இயேசுவுக்கு இருந்த நம்பிக்கை அவரை எப்படிப் பலப்படுத்தியது?
18 இயேசுவுக்கு இருந்த நம்பிக்கை அவரைப் பலப்படுத்தியது. இறப்பதற்கு முந்தின நாள் இரவு, அடுத்தடுத்து பல கஷ்டங்களை அவர் சந்தித்தார். அவருடைய நெருங்கிய நண்பன் அவரைக் காட்டிக்கொடுத்தான். இன்னொரு நண்பன் அவரை யாரென்றே தெரியாது என்று சொன்னார். மற்றவர்கள் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். அவருடைய சொந்த ஊர் மக்களே அவருக்கு எதிராகத் திரண்டு, அவரைச் சித்திரவதை செய்து கொல்லும்படி சொன்னார்கள். இவ்வளவு வலியையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள எது அவருக்கு உதவியது? “அவர் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் மரக் கம்பத்தில் வேதனைகளைச் சகித்தார்; இப்போது, கடவுளுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 12:2.
19 உண்மையாக இருப்பதன் மூலம் தன் தகப்பனுக்கு மகிமை சேர்க்க முடியும் என்றும் சாத்தானை ஒரு பொய்யன் என நிரூபிக்க முடியும் என்றும் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. இந்த நம்பிக்கை அவருக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. சீக்கிரத்தில் தன்னுடைய பரலோகத் தகப்பனிடம் போய்விடுவார் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. இந்த நம்பிக்கை, சகித்திருக்க அவருக்கு உதவியது. இயேசுவைப் போல நாமும் நம்முடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, சகித்திருக்க அது நமக்கு உதவும்.
20. நம்பிக்கையான மனப்பான்மையோடு இருக்க எது உங்களுக்கு உதவும்?
20 உங்களுடைய விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் யெகோவா கவனிக்கிறார். (ஏசாயா 30:18; மல்கியா 3:10-ஐ வாசியுங்கள்.) உங்கள் ‘இதயத்திலுள்ள ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாக’ அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 37:4) அதனால், உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள். உங்கள் நம்பிக்கையை நீங்கள் விட்டுவிட வேண்டுமென்றும், யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார் என நீங்கள் நினைக்க வேண்டுமென்றும் சாத்தான் விரும்புகிறான். ஆனால், இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்கள் நம்பிக்கை குறைவதுபோல் உங்களுக்குத் தெரிந்தால், உதவிக்காக யெகோவாவிடம் கேளுங்கள். பிலிப்பியர் 4:6, 7-லுள்ள வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.”
21, 22. (அ) பூமிக்கான யெகோவாவுடைய நோக்கம் என்ன? (ஆ) என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
21 நமக்கு முன்னாலிருக்கும் அற்புதமான எதிர்காலத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க தவறாமல் நேரமெடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் புதிய உலகில் வாழும் எல்லாருமே யெகோவாவை வணங்குவார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14) அங்கே வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் கற்பனை செய்வதைவிட அது அருமையானதாக இருக்கும். அங்கே சாத்தானும், அவனுடைய பேய்களும் இருக்க மாட்டார்கள். எல்லா அக்கிரமங்களும் ஒழிந்துபோயிருக்கும். நமக்கு வியாதியோ மரணமோ வராது. ஒவ்வொரு நாளும் பூரண ஆரோக்கியத்தோடு இருப்போம். உயிரோடு இருப்பதை நினைத்து ஒவ்வொரு நாளும் சந்தோஷப்படுவோம். இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்ற எல்லாரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம். எல்லாரும் திருப்தியாகச் சாப்பிடுவோம், பாதுகாப்பாக வாழ்வோம். யாருமே கொடூரமாகவோ மூர்க்கமாகவோ நடந்துகொள்ள மாட்டார்கள். எல்லாருமே ஒருவருக்கொருவர் அன்பாகவும் பாசமாகவும் இருப்போம். கடைசியில் எல்லாரும், “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை” பெறுவோம்.—ரோமர் 8:21.
22 நீங்கள் தன்னுடைய மிக நெருங்கிய நண்பராக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அதனால், ஒவ்வொரு நாளும் அவருக்குக் கீழ்ப்படியவும், அவரிடம் நெருங்கிப் போகவும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். நாம் எல்லாருமே கடவுளுடைய அன்பில் என்றென்றும் நிலைத்திருப்போமாக!—யூதா 21.