அதிகாரம் 3
“யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்”
1, 2. ஏசாயா தீர்க்கதரிசி கண்ட தரிசனம் என்ன, அது யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?
ஏசாயா ஒரு காட்சியைக் கண்டு பயபக்தியாலும் பிரமிப்பாலும் திக்குமுக்காடிப் போனார். அது கடவுளிடமிருந்து வந்த ஒரு தரிசனம். அது மிக மிக தத்ரூபமாக இருந்தது! அதனால்தான், உன்னத சிங்காசனத்தில் ‘யெகோவா உட்கார்ந்திருப்பதை பார்த்ததாகவே’ அவர் பிற்பாடு எழுதினார். யெகோவாவின் நீண்ட வஸ்திரம் எருசலேமிலிருந்த பிரமாண்டமான ஆலயத்தை நிரப்பியது.—ஏசாயா 6:1, 2.
2 ஏசாயா தான் கேட்ட பாடலாலும் பிரமித்துப் போனார்; அது அவ்வளவு பலமாக ஒலித்ததால் அஸ்திவாரம் உட்பட முழு ஆலயமே அதிர்ந்தது. அப்பாடலை மிக உயர்ந்த ஸ்தானத்திலிருக்கும் ஆவி சிருஷ்டிகளாகிய சேராபீன்கள் பாடினர். வலிமையான, இணக்கமான தொனியில் கணீரென்று அவர்கள் பாடிய இந்த கம்பீரமிக்க பாடல் மதுரமாக ஒலித்தது: “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர். பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது.” (ஏசாயா 6:3, 4) இவ்வாறு “பரிசுத்தமானவர்” என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லி அவர்கள் பாடியது, அதை மிகவும் வலியுறுத்தியது; பரிசுத்தத்தில் யெகோவாவிற்கு நிகர் யெகோவாவே என்பதால் இது மிகவும் பொருத்தமானது. (வெளிப்படுத்துதல் 4:8) யெகோவாவின் பரிசுத்தத்தன்மை பைபிள் முழுவதிலும் வலியுறுத்தப்படுகிறது. அவரது பெயரை பரிசுத்தத்தன்மையோடு இணைத்துப் பேசும் நூற்றுக்கணக்கான வசனங்கள் பைபிளில் இருக்கின்றன.
3. யெகோவாவின் பரிசுத்தத்தன்மை பற்றிய தவறான அபிப்பிராயங்களால் எவ்வாறு அநேகர் அவரிடம் நெருங்கிச் செல்வதற்கு பதிலாக அவரிடமிருந்து விலகிச் சென்றிருக்கின்றனர்?
3 யெகோவா, தம்மைப் பற்றிய முக்கியமான விஷயங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார்; அப்படிப்பட்ட விஷயங்களில் அவர் பரிசுத்தர் என்பதும் ஒன்றாகும். ஆனாலும் அநேகர் இந்தக் கருத்தைக் கேட்டதுமே வெறுப்படைகின்றனர். சிலர் பரிசுத்தத்தை சுயநீதியோடு அல்லது போலி பக்தியோடு தவறாக சம்பந்தப்படுத்துகின்றனர். சுயமரியாதை குறைவுபடுவதால் அல்லாடுபவர்களுக்கு கடவுள் பரிசுத்தர் என்ற கருத்து மனதை கவருவதற்குப் பதிலாக அச்சுறுத்துகிறது. இப்படிப்பட்ட பரிசுத்த கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கு தங்களுக்கு எப்போதுமே அருகதை கிடையாது என நினைத்து அவர்கள் அஞ்சலாம். எனவே கடவுள் பரிசுத்தமாக இருப்பதால் அநேகர் அவரை விட்டு விலகுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது, ஏனெனில் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உந்துவிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றே அவரது பரிசுத்தத்தன்மை. ஏன்? இதற்கு பதிலளிப்பதற்கு முன், உண்மையான பரிசுத்தம் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை பற்றி கலந்தாராயலாம்.
பரிசுத்தம் என்பது என்ன?
4, 5. (அ) “பரிசுத்தம்” எதை அர்த்தப்படுத்துகிறது, எதை அர்த்தப்படுத்துவதில்லை? (ஆ) எந்த இரண்டு முக்கியமான விதங்களில் யெகோவா ‘விலகியிருக்கிறார்’?
4 கடவுள் பரிசுத்தமாக இருக்கிறார் என்பதற்காக மிதமீறிய தன்னிறைவுள்ளவராக, அகந்தையுள்ளவராக, மற்றவர்களை இகழ்பவராக இருக்கிறார் என்ற அர்த்தமல்ல. மாறாக, அவர் இப்படிப்பட்ட பண்புகளை வெறுக்கவே செய்கிறார். (நீதிமொழிகள் 16:5; யாக்கோபு 4:6) அப்படியென்றால் ‘பரிசுத்தம்’ என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன? பைபிள் எழுதப்பட்ட எபிரெய மொழியில், இவ்வார்த்தை “விலகியிருத்தல்” என அர்த்தந்தரும் பதத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது. வணக்கத்தில், ‘பரிசுத்தம்’ என்பது சாதாரண உபயோகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்றை, அதாவது புனிதமாக கருதப்படும் ஒன்றை குறிக்கிறது. சுத்தத்தையும் தூய்மையையும்கூட பரிசுத்தம் முக்கியமாக அர்த்தப்படுத்துகிறது. இந்த வார்த்தை எவ்வாறு யெகோவாவிற்கு பொருந்துகிறது? அவர் அபூரண மனிதர்களாகிய நம்மிடம் நெருக்கமாக இல்லை என்ற அர்த்தத்திலா நம்மிடமிருந்து ‘விலகியிருக்கிறார்’?
5 நிச்சயமாகவே இல்லை. இஸ்ரவேலின் ‘பரிசுத்தமான கடவுளான’ யெகோவா, தம் மக்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்கள் “நடுவில்” இருப்பதாக சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். (ஏசாயா 12:6; ஓசியா 11:9) ஆகவே அவர் பரிசுத்தமாக இருக்கிறார் என்பதற்காக நெருக்கமாக இல்லை என நினைக்க முடியாது. அப்படியென்றால் எந்த விதத்தில் ‘விலகியிருக்கிறார்’? இரண்டு முக்கியமான விதங்களில். முதலாவதாக, அவர் மட்டுமே உன்னதமானவர் என்ற கருத்தில் எல்லா சிருஷ்டிகளிலிருந்தும் விலகியிருக்கிறார். அவரது தூய்மை பூரணமானது, எல்லையற்றது. (சங்கீதம் 40:5; 83:18) இரண்டாவதாக, யெகோவா எல்லாவித பாவத்தன்மையிலிருந்தும் அறவே விலகியிருக்கிறார், இது நமக்கு ஆறுதலான விஷயம். ஏன்?
6. யெகோவா பாவத்தன்மையிலிருந்து அறவே விலகியிருப்பது நமக்கு எவ்வாறு ஆறுதல் தருகிறது?
6 உண்மையான பரிசுத்தம் அரிதாயிருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். கடவுளிடமிருந்து விலகியிருக்கும் மனித சமுதாயத்தின் அனைத்து அம்சங்களும் ஏதாவது ஒரு விதத்தில் மாசுபட்டிருக்கிறது; பாவத்தாலும் அபூரணத்தாலும் கறைப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் பாவத்தோடு போராட வேண்டியிருக்கிறது. மேலும், கவனமாயிராவிட்டால் பாவத்தால் மேற்கொள்ளப்படும் ஆபத்து நம் அனைவருக்கும் உண்டு. (ரோமர் 7:15-25; 1 கொரிந்தியர் 10:12) யெகோவாவுக்கோ அப்படிப்பட்ட எந்த ஆபத்தும் இல்லை. பாவத்தன்மையிலிருந்து அறவே விலகியிருக்கும் அவர், துளியளவு பாவத்தாலும்கூட ஒருபோதும் கறைப்படமாட்டார். இது, அவர் முற்றிலும் நம்பகமானவர் என அர்த்தப்படுத்துவதால் அவர் தலைசிறந்த தகப்பன் என்ற நம் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது. யெகோவா, பாவமுள்ள மனித தகப்பன்மார் அநேகரைப் போல் சீர்கெட்டவராக, ஒழுக்கக் கட்டுப்பாடற்றவராக, அல்லது தீங்கிழைப்பவராக ஒருபோதும் மாற மாட்டார். அவருடைய பரிசுத்தத்தன்மை இப்படிப்பட்ட எந்த காரியத்திற்கும் சிறிதும் இடமளிப்பதில்லை. அவ்வப்போது யெகோவா தமது பரிசுத்தத்தின் மீதே ஆணையிட்டு சில விஷயங்களை கூறியிருக்கிறார், ஏனெனில் அதைவிட நம்பத்தக்கது வேறில்லை. (ஆமோஸ் 4:2) இது நம் நம்பிக்கையை அதிகரிக்கவில்லையா?
7. பரிசுத்தம் யெகோவாவுடைய இயல்பில் கலந்திருக்கும் ஒன்று என ஏன் சொல்லலாம்?
7 பரிசுத்தத்தன்மை யெகோவாவுடைய இயல்போடு இயல்பாக கலந்திருக்கும் ஒன்று. இதன் அர்த்தம் என்ன? உதாரணத்திற்கு: “மனிதன்” என்ற வார்த்தையையும் “அபூரணம்” என்ற வார்த்தையையும் எடுத்துக்கொள்ளுங்கள். அபூரணத்தை பற்றியே சிந்திக்காமல் உங்களால் மனிதனை பற்றி விவரிக்க முடியாது. அபூரணம் நம்மில் இரண்டறக் கலந்திருக்கிறது, நாம் செய்யும் அனைத்திலும் முகங்காட்டுகிறது. இப்போது இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்ட வேறு இரு வார்த்தைகளை எடுத்துக்கொள்ளுங்கள்; அவை, “யெகோவா” மற்றும் ‘பரிசுத்தம்.’ பரிசுத்தம் யெகோவாவில் இரண்டறக் கலந்திருக்கிறது. அவர் சுத்தமும், தூய்மையும், நேர்மையுமே உருவானவர். ஆழமான அர்த்தம் பொதிந்த ‘பரிசுத்தம்’ என்ற வார்த்தைக்கு கூர்ந்து கவனம் செலுத்தி அதை புரிந்துகொள்ள முயலாவிட்டால் யெகோவா உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாது.
“யெகோவா பரிசுத்தமே உருவானவர்”
8, 9. சம்பந்தப்பட்ட விதத்தில் அபூரண மனிதர்கள் பரிசுத்தமாவதற்கு யெகோவா உதவுகிறார் என எது காட்டுகிறது?
8 யெகோவா பரிசுத்தத்தின் பிரதிபிம்பமாக இருப்பதால் அனைத்து பரிசுத்தத்திற்கும் அவரே ஊற்றுமூலர் என சரியாகவே சொல்லலாம். அவர் இந்தப் பண்பை சுயநலத்தோடு தமக்கே பொத்திவைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் வழங்குகிறார், அதுவும் தாராளமாக வழங்குகிறார். முட்செடியின் நடுவிலிருந்து தேவதூதன் மூலமாக யெகோவா மோசேயிடம் பேசியபோது, அவர் நிமித்தம் சுற்றிலுமிருந்த நிலம்கூட பரிசுத்தமானதே!—யாத்திராகமம் 3:5.
9 யெகோவாவின் உதவியோடு அபூரண மனிதர்கள் பரிசுத்தமாக முடியுமா? முடியும், முழுமையாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட விதத்தில் முடியும். “பரிசுத்த ஜனமாக” ஆகும் எதிர்பார்ப்பை கடவுள் தம் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு அளித்தார். (யாத்திராகமம் 19:6) பரிசுத்தமான, மாசற்ற, தூய்மையான ஒரு வணக்கமுறையை ஏற்படுத்தி அத்தேசத்தாரை அவர் ஆசீர்வதித்தார். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்தும் பரிசுத்தமே. சொல்லப்போனால், பிரதான ஆசாரியர் பசும்பொன்னினாலான ஒரு பட்டத்தை தன் தலைப்பாகையின் முகப்பிலே கட்டியிருந்தார்; அது ஒளியில் பிரகாசிப்பதை அனைவராலும் காண முடிந்தது. “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்ற வார்த்தைகள் அதன்மீது பொறிக்கப்பட்டிருந்தன. (யாத்திராகமம் 28:36) ஆகவே உயர்தரமான தூய்மை அவர்கள் வணக்கத்தையும், வாழ்க்கை முறையையும்கூட வேறுபடுத்திக் காட்ட வேண்டியிருந்தது. “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். (லேவியராகமம் 19:2) அபூரண மனிதர்களாக இஸ்ரவேலர்கள் தங்களால் இயன்ற மட்டும் கடவுளுடைய ஆலோசனைகளின்படி நடந்தவரை, சம்பந்தப்பட்ட விதத்தில் பரிசுத்தமாக இருந்தார்கள்.
10. பரிசுத்தத்தை பொறுத்தமட்டில், பூர்வ இஸ்ரவேலர்களுக்கும் சுற்றுப்புற தேசத்தாருக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்தது?
10 இவ்வாறு இஸ்ரவேலில் பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதானது, சுற்றுப்புற தேசத்தாரின் வணக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அந்த அந்நிய தேசத்தார் வழிபட்ட கடவுட்கள் வாழ்ந்ததாக சொல்லப்பட்டதே பொய்யும் போலியுமானது; அதோடு, அவை மூர்க்கமான, பேராசைமிக்க, ஒழுக்கக்கேடான கடவுட்களாக வர்ணிக்கப்பட்டன. எல்லா அம்சங்களிலும் அவை பரிசுத்தமின்றி இருந்தன. அப்படிப்பட்ட கடவுட்களை வழிபட்டது மக்களை அசுத்தமாக்கியது. ஆகவே புறமத வணக்கத்தாரிலிருந்தும் அவர்களது அசுத்தமான மத பழக்கவழக்கங்களிலிருந்தும் விலகியிருக்கும்படி யெகோவா தம் ஊழியர்களை எச்சரித்தார்.—லேவியராகமம் 18:24-28; 1 ராஜாக்கள் 11: 1, 2.
11. யெகோவாவுடைய பரலோக அமைப்பின் பரிசுத்தம் எவ்வாறு இவர்களில் வெளிப்படுகிறது: (அ) தேவதூதர்கள், (ஆ) சேராபீன்கள், (இ) இயேசு?
11 மிகச் சிறந்த சூழ்நிலைகளிலும்கூட, யெகோவாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமாகிய பூர்வ இஸ்ரவேலால் அவரது பரலோக அமைப்பின் பரிசுத்தத்தை மங்கலாக மட்டுமே பிரதிபலிக்க முடிந்தது. கடவுளை உண்மையோடு சேவிக்கும் லட்சக்கணக்கான ஆவி சிருஷ்டிகள், “பரிசுத்த தூதர்கள்” என குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். (உபாகமம் 33:2; யூதா 14) கடவுளுடைய பரிசுத்தத்தின் பிரகாசமான, தூய்மையான அழகை அவர்கள் பரிபூரணமாக பிரதிபலிக்கின்றனர். ஏசாயா தன் தரிசனத்தில் பார்த்த சேராபீன்களையும் நினைத்துப் பாருங்கள். சர்வலோகம் எங்கும் யெகோவாவின் பரிசுத்தத்தை அறிவிப்பதில் இந்த வல்லமை மிகுந்த ஆவி சிருஷ்டிகள் முக்கிய பங்கு வகிப்பதை அவர்கள் பாடும் பாடலின் வரிகள் காட்டுகின்றன. ஒரு ஆவி சிருஷ்டியோ இவர்கள் அனைவரைக் காட்டிலும் மேலானவர்—அவர்தான் கடவுளுடைய ஒரே மகன். இயேசு, யெகோவாவின் பரிசுத்தத்தை தலைசிறந்த விதத்தில் பிரதிபலிப்பவர். பொருத்தமாகவே அவர் “கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்” என்று அழைக்கப்படுகிறார்.—யோவான் 6:68, 69.
பரிசுத்த பெயர், பரிசுத்த சக்தி
12, 13. (அ) கடவுளுடைய பெயர் பரிசுத்தமுள்ளது என்று விவரிக்கப்படுவது ஏன் பொருத்தமானது? (ஆ) கடவுளுடைய பெயர்மீது இருக்கும் களங்கம் ஏன் நீக்கப்பட வேண்டும்?
12 கடவுளுடைய தனிப்பட்ட பெயரைப் பற்றி என்ன சொல்லலாம்? அதிகாரம் 1-ல் நாம் பார்த்தபடி, அது வெறும் பட்டப்பெயர் அல்ல. அது யெகோவா தேவனை பிரதிநிதித்துவம் செய்கிறது, அவரது அனைத்து குணங்களையும் உள்ளடக்குகிறது. ஆகவே அவருடைய ‘பெயர் பரிசுத்தமானது’ என பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 57:15) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி கடவுளுடைய பெயரை நிந்திப்பது மரண தண்டனைக்கு ஏற்ற குற்றமாக இருந்தது. (லேவியராகமம் 24:16) இயேசு ஜெபத்தில் எதற்கு முதல் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் கவனியுங்கள்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்றார். (மத்தேயு 6:9) எதையாகிலும் பரிசுத்தப்படுத்துவது என்பது, அதை புனிதமானதாக பிரித்து வைப்பதையும் உயர்வாக மதிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. ஆனால் தூய்மையே உருவான கடவுளுடைய பெயரை பரிசுத்தப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
13 கடவுளுடைய பரிசுத்த பெயர் அவமதிக்கப்பட்டிருக்கிறது, பொய்களாலும் அவதூறினாலும் களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏதேனில் சாத்தான் யெகோவாவைப் பற்றி பொய் சொல்லி, அவர் அநீதியான பேரரசரென மறைமுகமாக குறிப்பிட்டான். (ஆதியாகமம் 3:1-5) அதுமுதற்கொண்டு, இந்த அசுத்த உலகத்தை ஆளுகிறவனாகிய சாத்தான், கடவுளை பற்றிய பொய்கள் பலுகிப் பெருகும்படி செய்திருக்கிறான். (யோவான் 8:44; 12:31; வெளிப்படுத்துதல் 12:9) கடவுள் கொடுங்கோன்மை செலுத்துபவர், பட்டும்படாதவர், அல்லது கொடூரமானவர் என மதங்கள் கற்பித்திருக்கின்றன. இரத்தவெறி பிடித்த அவற்றின் போர்களை அவர் ஆதரிப்பதாக சொல்லிக் கொள்கின்றன. கடவுளது அற்புதமான படைப்புகள் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்வால் அல்லது பரிணாமத்தினால் உண்டானதாக சொல்கின்றன. ஆம், கடவுளுடைய பெயர் மிக மோசமாக தூற்றப்பட்டிருக்கிறது. அது பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும்; அதற்கே உரிய மகிமை மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். தன்னுடைய பெயர்மீது இருக்கும் களங்கத்தை கடவுள் நீக்கப்போகும் காலத்துக்காக நாம் ஏங்குகிறோம். தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக அவர் அதை செய்வார். இந்த அரசாங்கத்துக்கு அவருடைய மகன்தான் ராஜா. இந்த மகத்தான நோக்கத்தில் எவ்வித பங்கு வகிப்பதிலும் நாம் இன்பம் காண்கிறோம்.
14. கடவுளுடைய சக்தி ஏன் பரிசுத்தமுள்ளதென அழைக்கப்படுகிறது, பரிசுத்த சக்தியை நிந்திப்பது ஏன் மாபெரும் பாவம்?
14 யெகோவாவோடு நெருங்கிய சம்பந்தமுள்ள இன்னொன்றும் கிட்டத்தட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் பரிசுத்தமானதாக அழைக்கப்படுகிறது; அதுவே அவரது சக்தி, அதாவது செயல் நடப்பிக்கும் சக்தி. (ஆதியாகமம் 1:2) நிகரற்ற வல்லமை பொருந்திய இந்த சக்தியை பயன்படுத்தி யெகோவா தமது நோக்கங்களை நிறைவேற்றுகிறார். கடவுள் எதைச் செய்தாலும் பரிசுத்தமான, தூய்மையான, மாசற்ற விதத்தில் செய்கிறார்; ஆகவே அவரது செயல் நடப்பிக்கும் சக்தியானது, பரிசுத்த சக்தி அல்லது பரிசுத்தமுள்ள சக்தி என பொருத்தமாகவே அழைக்கப்படுகிறது. (லூக்கா 11:13; ரோமர் 1:5) பரிசுத்த சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்வது வேண்டுமென்றே யெகோவாவின் நோக்கங்களுக்கு எதிராக செயல்படுவதை உட்படுத்துகிறது; இது மன்னிக்க முடியாத பாவமாகும்.—மாற்கு 3:29.
யெகோவாவின் பரிசுத்தத்தன்மை அவரிடம் நெருங்கி வர தூண்டுவது ஏன்
15. யெகோவாவின் பரிசுத்தத்தன்மை தேவபயத்தை, அல்லது பயபக்தியை, தூண்ட வேண்டியது ஏன் பொருத்தமானது, அப்படிப்பட்ட பயபக்தி எதை உட்படுத்துகிறது?
15 ஆக, கடவுளுடைய பரிசுத்தத்தன்மையையும் மனிதன் காட்ட வேண்டிய தேவபயத்தையும், அல்லது பயபக்தியையும், பைபிள் சம்பந்தப்படுத்தி பேசுவது ஏன் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு சங்கீதம் 99:3 இவ்வாறு வாசிக்கிறது: “கடவுளே, உங்களுடைய மகத்தான பெயரை அவர்கள் புகழட்டும். ஏனென்றால், அது பயபக்திக்குரியது, பரிசுத்தமானது.” இந்த பயபக்தி, மிகுந்த மதிப்பிற்குரிய மரியாதையை குறிக்கிறது. இந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது பொருத்தமே, ஏனெனில் கடவுளுடைய பரிசுத்தம் நம்மைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. அது தூய்மையே உருவானது, மகிமை பொருந்தியது. எனினும் அது நம்மை அவரிடமிருந்து விலகச் செய்துவிடக் கூடாது. மாறாக, கடவுளுடைய பரிசுத்தத்தை பற்றிய சரியான கண்ணோட்டம் நம்மை அவரிடம் நெருங்கிச் செல்ல உந்துவிக்கும். ஏன்?
16. (அ) பரிசுத்தம் எவ்வாறு மகிமையோடு, அல்லது அழகோடு, சம்பந்தப்பட்டிருக்கிறது? ஓர் உதாரணம் தருக. (ஆ) யெகோவாவை பற்றிய தரிசன விவரிப்புகள் எவ்வாறு சுத்தம், தூய்மை, பிரகாசம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன?
16 பைபிள் பரிசுத்தத்தையும் அழகையும் சம்பந்தப்படுத்தி பேசுகிறது. பரலோகம் கடவுளுடைய ‘பரிசுத்தமும் மகிமையும் [அல்லது, “அழகும்,” அடிக்குறிப்பு] நிறைந்த உயர்ந்த குடியிருப்பு’ என ஏசாயா 63:15 விவரிக்கிறது. அழகு நம்மை வசீகரிக்கிறது. உதாரணத்திற்கு 33-ஆம் பக்கத்திலுள்ள படத்தை பாருங்கள். அக்காட்சி உங்களை ஈர்க்கவில்லையா? அது அவ்வளவு அழகாக இருக்க காரணம் என்ன? அந்த தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது! நீலநிற வானமும் எங்குமுள்ள ஒளிப் பிரகாசமும் காற்றின் தூய்மையை பறைசாற்றுகின்றன. ஆனால் இதே காட்சி வேறுவிதமாக இருந்தால்—ஓடையில் குப்பைக்கூளங்கள், மரங்களிலும் பாறைகளிலும் வாசகங்கள், காற்றில் புகைமண்டலம் என எங்கும் தூய்மைக்கேடு நிறைந்திருந்தால்—அதைக் கண்டு நாம் கவர்ந்திழுக்கப்பட மாட்டோம், வெறுப்படையத்தான் செய்வோம். சுத்தம், தூய்மை, பிரகாசம் ஆகியவற்றையே நாம் அழகோடு, அல்லது மகிமையோடு, சம்பந்தப்படுத்துகிறோம். இதே வார்த்தைகளை யெகோவாவின் பரிசுத்தத்தை விவரிப்பதற்கும் பயன்படுத்தலாம். யெகோவாவைப் பற்றிய தரிசன விவரிப்புகள் நம்மை வசீகரிப்பதில் ஆச்சரியமேது! கண்ணைப் பறிக்கும் பிரகாசமும், இரத்தினங்களை போன்ற ஜொலிப்பும், தூய்மையும் பளபளப்பும் செறிந்த விலைமதிப்புள்ள உலோகங்களை அல்லது அக்கினியை போன்ற தகதகப்பும் பொருந்திய அழகல்லவோ நம் பரிசுத்த கடவுளின் அழகு, அல்லது மகிமை!—எசேக்கியேல் 1:25-28; வெளிப்படுத்துதல் 4:2, 3.
அழகைப் போலவே பரிசுத்தமும் நம்மை வசீகரிக்க வேண்டும்
17, 18. (அ) தரிசனத்தைக் கண்ட ஏசாயா ஆரம்பத்தில் எப்படி உணர்ந்தார்? (ஆ) யெகோவா எவ்வாறு ஒரு சேராபீனை பயன்படுத்தி ஏசாயாவுக்கு ஆறுதல் அளித்தார், சேராபீனுடைய செயலின் முக்கியத்துவம் என்ன?
17 என்றாலும், கடவுளுடன் ஒப்பிட நாம் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சியை அவருடைய பரிசுத்தத்தன்மை ஏற்படுத்த வேண்டுமா? ஆம், கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும். நாம் யெகோவாவைவிட நிச்சயமாகவே தாழ்ந்தவர்கள், இப்படி சொல்வதும் உண்மையை மிக மிக குறைத்துக் கூறுவதாகத்தான் இருக்கும். இதை அறிவது அவரிடமிருந்து நம்மை அந்நியப்படுத்த வேண்டுமா? யெகோவாவின் பரிசுத்தத்தைப் பற்றி சேராபீன்கள் அறிவித்ததைக் கேட்ட ஏசாயாவின் உணர்ச்சிகளை சிந்தித்துப் பாருங்கள்: “அப்போது நான், ‘ஐயோ, என் கதி அவ்வளவுதான்! நான் செத்தவனைப் போல ஆகிவிட்டேன். ஏனென்றால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவைப் பார்த்துவிட்டேன். அதுமட்டுமல்ல, என் உதடுகள் அசுத்தமாக இருக்கின்றன. அசுத்தமான உதடுகள் உள்ள ஜனங்களோடு நான் வாழ்கிறேன்’ என்று சொன்னேன்.” (ஏசாயா 6:5) யெகோவாவின் எல்லையற்ற பரிசுத்தம், தான் எந்தளவு பாவியாகவும் அபூரணமாகவும் இருந்தார் என்பதை ஏசாயாவுக்கு நினைவூட்டின. அதனால் விசுவாசமுள்ள ஏசாயா ஆரம்பத்தில் மனமொடிந்து போனார். ஆனால் யெகோவா அவரை அப்படியே விட்டுவிடவில்லை.
18 சேராபீன்களில் ஒருவர் உடனடியாக தீர்க்கதரிசிக்கு ஆறுதல் அளித்தார். எப்படி? அவர் பலிபீடத்திற்கு பறந்து சென்று, அதிலிருந்து ஒரு நெருப்புத்தழலை எடுத்து, ஏசாயாவின் உதடுகளை தொட்டார். இது ஆறுதலளிப்பதற்கு பதிலாக வேதனையளித்திருக்குமே என நாம் யோசிக்கலாம். ஆனால், இது அடையாள அர்த்தம் பொதிந்த ஒரு தரிசனம் என்பதை ஞாபகம் வையுங்கள். விசுவாசமுள்ள யூதரான ஏசாயா, பாவங்களுக்கு நிவாரணமாக ஆலயத்தின் பலிபீடத்தில் தினமும் பலிகள் செலுத்தப்பட்டு வந்ததை நன்கு அறிந்திருந்தார். மேலும், அவர் உண்மையில் “அசுத்தமான உதடுகள் உள்ள” அபூரணராக இருந்தாலும் கடவுளுக்கு முன் சுத்தமான நிலைநிற்கையை பெற முடியும் என்பதை அந்த சேராபீன் அவருக்கு அன்பாக நினைப்பூட்டினார்.a அபூரணமான, பாவமுள்ள மனிதனாகிய அவரை சம்பந்தப்பட்ட விதத்திலாவது பரிசுத்தமானவனாக பார்ப்பதற்கு யெகோவா மனமுள்ளவராக இருந்தார்.—ஏசாயா 6:6, 7.
19. நாம் அபூரணராக இருந்தாலும் எவ்வாறு சம்பந்தப்பட்ட விதத்தில் பரிசுத்தமாக இருக்க முடியும்?
19 இன்றும் அதுவே உண்மை. எருசலேமிலிருந்த பலிபீடத்தின்மீது செலுத்தப்பட்ட பலிகள் மகத்தான வேறொன்றிற்கு முன்நிழலாகவே இருந்தன; அதாவது, பொ.ச. 33-ல் இயேசு அளித்த ஒரே பரிபூரண பலியையே முன்நிழலிட்டுக் காட்டின. (எபிரெயர் 9:11-14) நாம் உண்மையிலேயே மனந்திரும்பி, நம் நடத்தையை திருத்திக்கொண்டு, அப்பலியின்மீது விசுவாசம் வைத்தால் மன்னிக்கப்படுவோம். (1 யோவான் 2:2) கடவுளுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையை அனுபவிக்க முடியும். ஆகவே, “‘நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே” என பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். (1 பேதுரு 1:16) யெகோவா, தாம் எந்தளவு பரிசுத்தமாக இருக்கிறாரோ அந்தளவு பரிசுத்தமாக நாமும் இருக்க வேண்டுமென சொல்லவில்லை. நம்மால் முடியாததை ஒருபோதும் அவர் எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 103:13, 14) அவர் பரிசுத்தமானவராக இருப்பதன் காரணமாக நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென சொல்கிறார். “அன்பான பிள்ளைகளைப் போல்” அபூரண மனிதர்களாகிய நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவரை பின்பற்ற முயல்கிறோம். (எபேசியர் 5:1) ஆகவே பரிசுத்தத்தை அடைவது தொடரும் செயலாகும். நாம் ஆவிக்குரிய விதத்தில் வளரும்போது ‘பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்ட’ அனுதினமும் முயல்வோம்.—2 கொரிந்தியர் 7:1.
20. (அ) கடவுளின் கண்களில் நம்மால் சுத்தமாக இருக்க முடியும் என்பதை புரிந்துகொள்வது ஏன் முக்கியமானது? (ஆ) ஏசாயா, தன் பாவங்களுக்கு நிவிர்த்தி அளிக்கப்பட்டதை புரிந்துகொண்டவுடன் எவ்வாறு நடந்துகொண்டார்?
20 யெகோவா நேர்மையையும் தூய்மையையும் நேசிக்கிறார்; பாவத்தை வெறுக்கிறார். (ஆபகூக் 1:13) ஆனால் அவர் நம்மை வெறுக்கிறதில்லை. பாவத்தை அவர் கருதுவதுபோலவே நாமும் கருதி, கெட்டதை வெறுத்து நல்லதை நேசித்து, இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்ற முயற்சி செய்யும் வரைக்கும், யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார். (ஆமோஸ் 5:15; 1 பேதுரு 2:21) கடவுளின் கண்களில் நம்மால் சுத்தமாக இருக்க முடியும் என்பதை புரிந்துகொள்கையில் அது நம்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. யெகோவாவின் பரிசுத்தம், முதலில் ஏசாயாவின் அசுத்தத்தை அவருக்கு நினைப்பூட்டியது. “ஐயோ, என் கதி அவ்வளவுதான்!” என்று அலறினார். ஆனால் தனது பாவங்களுக்கு நிவிர்த்தி அளிக்கப்பட்டதை புரிந்துகொண்டவுடன் அவரது கண்ணோட்டம் மாறியது. ஒரு நியமிப்பை நிறைவேற்ற எவராவது முன்வர முடியுமா என யெகோவா கேட்டபோது ஏசாயா உடனடியாக முன்வந்தார். அதில் எது உட்பட்டிருக்கும் என தெரியாதபோதிலும், “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்றார்.—ஏசாயா 6:5-8.
21. பரிசுத்தத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்புவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
21 நாம் பரிசுத்த கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம், தார்மீக பண்புகளும் ஆன்மீக திறனும் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. (ஆதியாகமம் 1:26) பரிசுத்தத்தை காட்டும் உள்ளாற்றல் நம் அனைவருக்குமே இருக்கிறது. நாம் தொடர்ந்து பரிசுத்தத்தை அபிவிருத்தி செய்கையில் யெகோவா சந்தோஷத்தோடு உதவியளிப்பார். காலப்போக்கில் நம் பரிசுத்த கடவுளிடம் நெருங்கி வருவோம். இனிவரும் அதிகாரங்களில் யெகோவாவின் பண்புகளை சிந்திக்கையில், அவரிடம் நெருங்கிச் செல்வதற்கு அநேக காரணங்கள் இருப்பதை காண்போம்!
a “அசுத்தமான உதடுகள்” என்ற பதம் பொருத்தமானது, ஏனெனில் பேச்சை அல்லது மொழியை குறிப்பதற்காக பைபிள் அடிக்கடி உதடுகளை அடையாளப்பூர்வமாக பயன்படுத்துகிறது. அபூரண மனிதர்கள் அனைவர் விஷயத்திலும், பெருமளவு பாவங்கள் அவர்கள் பேச்சுத்திறனை பயன்படுத்தும் விதத்தையே சார்ந்திருக்கின்றன.—நீதிமொழிகள் 10:19; யாக்கோபு 3:2, 6.