இந்நாள் வரையாக யெகோவாவால் போதிக்கப்படுதல்
“கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் [“போதிக்கப்பட்டிருப்போரின்,” NW] நாவைத் தந்தருளினார்.”—ஏசாயா 50:4.
1, 2. (அ) யெகோவா தம் தனிப்பாசத்துக்குரிய மாணவரை எதற்காக தயாரித்தார், அதன் விளைவு என்னவாக இருந்தது? (ஆ) இயேசு எவ்வாறு தம் போதனைகளின் ஊற்றுமூலத்தை ஒப்புக்கொண்டார்?
யெகோவா தேவன் தந்தையாக ஆன சமயத்திலிருந்து ஒரு போதனையாளராக இருந்து வந்திருக்கிறார். அவருடைய பிள்ளைகளில் சிலர் கலகத்தனம் செய்து சில காலத்துக்குப் பிறகு, அவர் தம்முடைய தனிப்பாசத்துக்குரிய மாணவராகிய முதற்பேறானவரை பூமியில் ஊழியம் செய்வதற்காக தயார் செய்தார். (நீதிமொழிகள் 8:30) ஏசாயா 50-ஆம் அதிகாரம் இந்த மாணவர் அதை பின்வருமாறு சொல்வதுபோல் தீர்க்கதரிசனமாக அளிக்கிறது: “இளைப்படைந்தவனுக்குச் சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் [“போதிக்கப்பட்டிருப்போரின்,” NW] நாவைத் தந்தருளினார்.” (ஏசாயா 50:4) பூமியில் இருக்கையில் தம்முடைய தகப்பனின் போதனையை பொருத்தினதன் காரணமாக, ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்துகொண்டிருந்த’ அனைவருக்கும் இயேசு இளைப்பாறுதலின் ஊற்றுமூலராயிருந்தார்.—மத்தேயு 11:28-30.
2 முதல் நூற்றாண்டின்போது இயேசு அநேக வல்லமைவாய்ந்த செயல்களை செய்துகாட்டினார். அவர் குருடரின் கண்களைத் திறந்தார், இறந்தோரையும்கூட எழுப்பினார், இருந்தபோதிலும் அவர் காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களால் அவர் முக்கியமாக ஒரு போதனையாளராக அறியப்பட்டிருந்தார். அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய எதிராளிகளும் அவரை போதகர் என்று அழைத்தனர். (மத்தேயு 8:19; 9:11; 12:38; 19:16; யோவான் 3:2) இயேசு தாம் கற்பித்தவற்றுக்கு புகழை தாமே எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் தாழ்மையோடு இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” “என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.”—யோவான் 7:16; 8:28; 12:49.
பரிபூரணமான போதனையாளர்-மாணவர் உறவுமுறை
3. யெகோவா தாம் போதிக்கிறவர்களின் பேரில் அக்கறை கொண்டுள்ளார் என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது?
3 மிகச்சிறந்த போதனையாளர் தன் மாணவர்களில் தனிப்பட்ட, உள்ளார்ந்த மற்றும் அன்பான அக்கறையை எடுத்துக்கொள்கிறார். யெகோவா தேவன் தாம் போதிக்கும் ஆட்களில் அந்தவிதமான அக்கறை கொண்டிருக்கிறார் என்று ஏசாயா 50-ஆம் அதிகாரம் வெளிப்படுத்துகிறது. “காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப் போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்,” என்று தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. (ஏசாயா 50:4) ஒரு போதனையாளர் தன் மாணவர்களுக்குப் போதிப்பதற்காக அதிகாலையிலேயே அவர்களை எழுப்புவதைப் போன்று இங்கே உள்ள மொழிநடை குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒரு பைபிள் கல்விமான் இத்தீர்க்கதரிசன பொருத்தத்தின் பேரில் தன் கருத்தைக் கூறினார்: “அடையாள அர்த்தத்தில் சொன்னால், மீட்பர் கடவுளுடைய பள்ளியில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் கருத்து; அவர் மற்றவர்களுக்கு போதனை அளிக்க தகுதியுள்ளவராய் இருக்க வேண்டும். . . . மேசியா மனிதவர்க்கத்துக்கு போதனையாளராக இருப்பதற்கு, தெய்வீக போதனையால் சிறந்தவிதத்தில் தகுதி பெற்றவராய் இருப்பார்.”
4. இயேசு எவ்வாறு தம் தகப்பனின் போதகத்துக்குப் பிரதிபலித்தார்?
4 மாணவர்கள் மிகச்சிறந்த விதத்தில் தங்கள் போதனையாளரின் போதனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை உடையவர்களாய் இருக்கின்றனர். இயேசு எவ்வாறு தம் தகப்பனின் போதனைக்கு பிரதிபலித்தார்? அவருடைய பிரதிலிப்பு, நாம் ஏசாயா 50:5-ல் வாசிப்பவற்றுக்கு இசைவாக இருந்தது: “கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.” ஆம், இயேசு கற்றுக்கொள்வதற்கு ஆவலாயிருந்தார். அவர் அதிக கவனத்தோடு செவிகொடுத்துக் கேட்பவராய் இருந்தார். அதற்கும் மேலாக, அவருடைய தகப்பன் அவரிடம் கேட்ட எல்லாவற்றையும் செய்வதற்கு அவர் மனமுள்ளவராயிருந்தார். அவர் கலகம் செய்பவராக இருக்கவில்லை; மாறாக அவர் சொன்னார்: “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.”—லூக்கா 22:42.
5. (அ) பூமியில் தாம் சோதனைகளை அனுபவிப்பார் என்பதை இயேசு முன்பாகவே அறிந்திருந்தாரென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) ஏசாயா 50:6-ல் உள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது?
5 கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்போது நிகழக்கூடிய விளைவுகளைக் குறித்து குமாரனுக்கு முன்பாகவே சொல்லப்பட்டிருந்தது என்று தீர்க்கதரிசனம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. போதிக்கப்பட்டவர் சொல்பவற்றிலிருந்து இது காண்பிக்கப்படுகிறது: “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.” (ஏசாயா 50:6) தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறபடி, பூமியில் இருக்கையில் இயேசுவை அதிகக் கொடூரமாக நடத்தினார்கள். ‘அவர்கள் அவருடைய முகத்தில் துப்பினார்கள்,’ என்று அப்போஸ்தலனாகிய மத்தேயு எழுதினார். “சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.” (மத்தேயு 26:67) பொ.ச. 33-ல் பஸ்கா இரவன்று மதத்தலைவர்களின் செயல்களினால் இது நடந்தது. அதற்கு அடுத்த நாள் ரோம போர்ச்சேவகர்கள் அவரைக் கழுமரத்தில் அறைந்து இறந்துபோகும்படி விடுவதற்கு முன்பாக அவரை இரக்கமின்றி அடித்தபோது இயேசு அவரை அடித்தவர்களுக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தினார்.—யோவான் 19:1-3, 16-23.
6. இயேசு தம் போதனையாளரின் பேரில் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை என்பதை எது காண்பிக்கிறது, அவருடைய நம்பிக்கை எவ்வாறு பலனளிக்கப்பட்டது?
6 முன்பாகவே நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்த குமாரன் தம் போதகர் பேரில் நம்பிக்கை இழந்து விடவில்லை. தீர்க்கதரிசனத்தின்படி அவர் அடுத்ததாக சொல்வதில் இது காண்பிக்கப்பட்டிருக்கிறது: “கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்.” (ஏசாயா 50:7) தம்முடைய போதனையாளரின் பேரில் இருந்த இயேசுவின் நம்பிக்கை மிகச்சிறந்த விதத்தில் பலனளிக்கப்பட்டது. அவருடைய தகப்பன் அவரை உயர்த்தினார், கடவுளின் மற்ற எல்லா ஊழியர்களைக் காட்டிலும் அவருக்கு ஒரு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்தார். (பிலிப்பியர் 2:5-11) யெகோவாவின் போதனையை நாம் கீழ்ப்படிதலோடு கடைப்பிடித்து, ‘பின்வாங்காமல் இருந்தால்’ நமக்கும்கூட மகத்தான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. அந்தப் போதனை நம் நாள் வரையாக எவ்வாறு கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதை நாம் இப்போது காண்போம்.
விரிவாக்கப்பட்ட ஒரு போதனா திட்டம்
7. யெகோவா எவ்வாறு தம் போதனையை பூமியில் நிறைவேற்றி வந்திருக்கிறார்?
7 நாம் ஏற்கெனவே கவனித்தபடி, முதல் நூற்றாண்டின்போது தெய்வீக போதனையை நிறைவேற்றுவதற்கு யெகோவா தம் பூமிக்குரிய பிரதிநிதியாகிய இயேசு கிறிஸ்துவை உபயோகித்தார். (யோவான் 16:27, 28) இயேசு எப்போதும் தம் போதனைக்கு கடவுளுடைய வார்த்தையை அதிகாரமாகக் குறிப்பிட்டுக் காட்டினார், இவ்வாறு தம்முடைய போதனையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு முன்மாதிரியை வைத்தார். (மத்தேயு 4:4, 7, 10; 21:13; 26:24, 31) அதற்குப் பிறகு, அப்படி போதிக்கப்பட்ட நபர்களின் ஊழியத்தின் மூலமாக யெகோவாவின் போதனை பூமியின் மீது நிறைவேற்றப்பட்டது. இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டதை நினைவுபடுத்திப் பாருங்கள்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 10) சீஷர்கள் உண்டுபண்ணப்பட்டபோது, இவர்கள் ‘தேவனுடைய வீட்டிலே . . . ஜீவனுள்ள தேவனுடைய சபையின்’ பாகமாக ஆயினர். (1 தீமோத்தேயு 3:15) அவர்கள் தனிப்பட்ட சபைகளாகவும்கூட ஒழுங்கமைக்கப்பட்டனர், அவற்றில் அவர்கள் யெகோவாவால் போதிக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 14:23; 15:41; 16:5; 1 கொரிந்தியர் 11:16) அந்த விதத்தில் தெய்வீக போதனை நம் நாள் வரையாக தொடர்ந்து வந்திருக்கவில்லையா?
8. முடிவு வருவதற்கு முன்பாக பிரசங்க வேலை பூமியில் வழிநடத்தப்படும் என்பதை இயேசு எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டினார்?
8 உண்மையில் அது அவ்வாறுதான் வந்திருக்கிறது! தம்முடைய மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்பு ஒரு பெரிய பிரசங்க வேலை நடைபெறும் என்று இயேசு முன்னறிவித்தார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” இந்த உலகளாவிய பிரசங்கிப்பு மற்றும் போதனா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கருவியைக் குறித்து இயேசு தொடர்ந்து விவரித்துக்கொண்டே சென்றார். தம்முடைய ஊழியர்களுக்கு ஆவிக்குரிய உணவை அளிப்பதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” (NW) ஒரு கருவியாக சேவிக்கும் என்று அவர் கூறினார். (மத்தேயு 24:14, 45-47) பூமிமுழுவதும் ராஜ்ய அக்கறைகளை கண்காணிப்பதற்கு யெகோவா தேவன் இந்த ‘அடிமையை’ உபயோகித்து வந்திருக்கிறார்.
9. உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை யார் உண்டுபண்ணுகின்றனர்?
9 இன்று உண்மையும் விவேகமுமுள்ள அடிமை ராஜ்ய சுதந்தரவாளிகளின் மீதியானோரால் உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. இவர்கள் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இவர்கள் ‘கிறிஸ்துவினுடையவர்களாகவும்’ ‘ஆபிரகாமின் சந்ததியின்’ பாகமாகவும் 1,44,000 பேரில் பூமியில் மீதமாயிருக்கும் நபர்கள் ஆவர். (கலாத்தியர் 3:16, 29; வெளிப்படுத்துதல் 14:1-3) நீங்கள் எவ்வாறு உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை அடையாளம் கண்டுகொள்ளலாம்? குறிப்பாக அவர்கள் செய்யும் வேலையின் மூலமாகவும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை மிகவும் கவனத்துடன் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம்.
10. யெகோவாவின் போதனைகளை முன்னேற்றுவிப்பதற்கு என்ன கருவிகளை அடிமை வகுப்பார் உபயோகிக்கின்றனர்?
10 யெகோவா இன்று தம்முடைய ஜனங்களுக்கு போதிப்பதற்கு இந்த ‘அடிமையை’ கருவியாகப் பயன்படுத்துகிறார். இந்த அடிமை வகுப்பைச் சேர்ந்தவர்கள் 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டனர். அந்த சமயத்திலிருந்து இலட்சக்கணக்கானோர் அவர்களோடு கூட்டுறவுகொண்டு, அந்த பெயரை ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அறிவிப்பதில் அவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கின்றனர். காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்ற இந்த பத்திரிகை, ‘அடிமை’ வகுப்பு போதிக்கும் வேலையில் பயன்படுத்தி வரும் முக்கிய கருவியாகும். இருப்பினும், புத்தகங்கள், சிறு புத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் மற்றும் விழித்தெழு! பத்திரிகை போன்ற மற்ற பிரசுரங்களும்கூட பயன்படுத்தப்படுகின்றன.
11. என்ன பள்ளிகளை “அடிமை” வகுப்பார் ஆரம்பித்திருக்கின்றனர், இப்பள்ளிகளில் ஒவ்வொன்றும் என்ன நோக்கத்தைச் சேவிக்கிறது?
11 கூடுதலாக, இந்த ‘அடிமை’ பல்வேறு பள்ளிகளை ஆரம்பித்து ஆதரவு தருகிறது. இவை அயல்நாட்டு மிஷனரி சேவைக்காக இளம் ஊழியர்களை தயார் செய்வதற்கென்று ஐந்து-மாத பயிற்சி அளிக்கும் காவற்கோபுர பைபிள் கிலியட் பள்ளி, விசேஷ தேவராஜ்ய நியமிப்புகளுக்காக விவாகமாகாத மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயிற்றுவிக்கும் இரண்டு மாத ஊழிய பயிற்சி பள்ளி ஆகியவை இதில் அடங்கும். கிறிஸ்தவ மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்கள் சபை உத்தரவாதங்களைக் குறித்து அவ்வப்போது போதனை பெற்றுக்கொள்ளும் ராஜ்ய ஊழியப் பள்ளி, முழு-நேர சுவிசேஷகர்கள் தங்கள் பிரசங்க வேலையில் அதிக திறம்பட்டவர்களாக ஆவதற்கு அவர்களைத் தகுதியாக்கும் பயனியர் ஊழியப் பள்ளி ஆகியவையும்கூட இருக்கின்றன.
12. போதனா திட்டத்தின் வாராந்தர அம்சம் என்ன?
12 உலகமுழுவதிலும் யெகோவாவின் ஜனங்கள் 75,500-க்கும் மேற்பட்ட சபைகளில் ஐந்து வாராந்தர கூட்டங்களை நடத்துவது போதனா திட்டத்தின் மற்றொரு அம்சமாகும். நீங்கள் இந்த கூட்டங்களிலிருந்து உங்களால் கூடுமானவரை முழுமையாக பயனடைகிறீர்களா? கொடுக்கப்படும் போதனைக்கு நீங்கள் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்பதன் மூலம், நீங்கள் கடவுளுடைய பள்ளியில் இருப்பதைப் போன்று இருக்கிறீர்கள் என்று உண்மையில் நீங்கள் நம்புவதாக காண்பிக்கிறீர்களா? நீங்கள் “போதிக்கப்பட்டிருப்போரின் நாவை” கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் மற்றவர்களுக்கு வெளிப்படையாகக் காண்பிக்கிறதா?—ஏசாயா 50:4; 1 தீமோத்தேயு 4:15, 16.
சபை கூட்டங்களில் போதிக்கப்படுதல்
13. (அ) இன்று யெகோவா தம் ஜனங்களுக்குப் போதிக்கும் ஒரு முக்கியமான வழி என்ன? (ஆ) காவற்கோபுரம் பத்திரிகைக்கு எவ்வாறு நம் போற்றுதலைக் காண்பிக்கலாம்?
13 காவற்கோபுரம் பத்திரிகையை போதிப்பதற்கு ஒரு ஏதுவாக உபயோகித்து ஒவ்வொரு வாரமும் பைபிளை படிப்பதன் மூலம் யெகோவா குறிப்பாக தம் ஜனங்களுக்கு போதிக்கிறார். நீங்கள் இந்தக் கூட்டத்தை யெகோவாவால் போதிக்கப்படும் ஓர் நேரமாக கருதுகிறீர்களா? ஏசாயா 50:4 முக்கியமாக இயேசுவுக்குப் பொருந்தினாலும்கூட, “போதிக்கப்பட்டிருப்போரின் நாவை” பெற்றுக்கொள்வதற்கு கடவுளுடைய ஏற்பாடுகளை தங்களுக்கென்று பயன்படுத்திக்கொள்ளும் அனைவருக்கும்கூட அது பொருந்தக்கூடும். நீங்கள் காவற்கோபுரம் பத்திரிகையின் ஒவ்வொரு இதழையும் பெற்றுக்கொண்டவுடன் கூடுமானவரை உடனடியாக வாசிப்பதன் மூலம் நீங்கள் அதை மதிப்புடையதாய் வைத்துப் போற்றுகிறீர்கள் என்பதை ஒருவிதத்தில் காண்பிக்கலாம். பின்பு, காவற்கோபுரம் சபையில் படிக்கப்படும்போது, நீங்கள் ஆஜராயிருப்பதன் மூலமும் உங்கள் நம்பிக்கையை வெளிப்படையாய் அறிக்கையிடுவதற்கு தயாராக இருப்பதன் மூலமும் நீங்கள் உங்கள் போற்றுதலைக் காண்பிக்கலாம்.—எபிரெயர் 10:23.
14. (அ) கூட்டங்களில் குறிப்புகள் சொல்வது ஏன் அவ்வளவு முக்கியமான சிலாக்கியமாக இருக்கிறது? (ஆ) இளைஞர் கொடுக்கும் எப்படிப்பட்ட குறிப்புகள் அதிக உற்சாகமூட்டுபவையாய் இருக்கின்றன?
14 கூட்டங்களில் உங்களுடைய குறிப்புகள் மூலம் யெகோவாவின் மகத்தான போதனா திட்டத்தில் நீங்கள் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்பதை போற்றுகிறீர்களா? “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” நாம் ஒருவரையொருவர் ஊக்குவிப்பதற்கு கூட்டங்களில் குறிப்புகள் சொல்வது ஒரு முக்கியமான வழி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. (எபிரெயர் 10:24, 25) பிள்ளைகளும்கூட இப்போதனா திட்டத்தில் பங்குகொள்ளலாமா? ஆம், அவர்கள் பங்குகொள்ளலாம். இளம் நபர்களால் கொடுக்கப்படும் இருதயப்பூர்வமான குறிப்புகள் வயதானவர்களுக்கு பெரும்பாலும் உற்சாகமூட்டுபவையாய் இருக்கின்றன. சில சமயங்களில் நம்முடைய கூட்டங்களுக்கு புதிதாக வருபவர்கள், பிள்ளைகள் கொடுக்கும் குறிப்புகளால் உற்சாகப்படுத்தப்பட்டு பைபிள் சத்தியத்தில் இன்னும் கூடுதலாக ஆர்வமுள்ள அக்கறை காண்பித்திருக்கின்றனர். பாராவிலிருந்து குறிப்புகளை நேரடியாக வாசிப்பது அல்லது பெரியவர் ஒருவர் அவர்களுடைய காதில் சொல்லும் பதிலை திரும்பவும் சொல்வது ஆகியவற்றை சில இளைஞர் பழக்கமாக ஆக்கிக்கொள்கின்றனர். என்றபோதிலும், அவர்களுடைய குறிப்புகள் நன்கு தயாரிக்கப்பட்டவையாய் இருந்தால், அது அதிக உற்சாகமூட்டுவதாய் இருக்கும். இப்படி குறிப்புகள் சொல்வது நம்முடைய மகத்தான போதனையாளருக்கும் அவருடைய மேன்மைப்படுத்தப்பட்ட போதனா திட்டத்துக்கும் உண்மையிலேயே கனத்தைக் கொண்டு வருகிறது.—ஏசாயா 30:20, 21.
15. தங்கள் பிள்ளைகள் அதிக திறம்பட்டவிதத்தில் குறிப்புகள் சொல்வதற்கு உதவிசெய்ய பெற்றோர் என்ன செய்யலாம்?
15 நம்முடைய கடவுளைத் துதிப்பதில் பிள்ளைகள் பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவதைக் காண்பது ஆனந்தமாய் இருக்கிறது. இளைஞரிடமிருந்து வந்த துதிகள் அடங்கிய சொற்றொடர்களுக்கு இயேசு போற்றுதல் தெரிவித்தார். (மத்தேயு 21:15, 16) ஒரு கிறிஸ்தவ மூப்பர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் பிள்ளையாயிருந்தபோது, காவற்கோபுர படிப்பில் குறிப்புகள் சொல்ல விரும்பினேன். ஒரு குறிப்பைத் தயாரிப்பதற்கு எனக்கு உதவிய பிறகு, நான் அந்தக் குறிப்பை ஏழு தடவைகளாவது பழகிக்கொள்ள வேண்டும் என்று என் தந்தை கேட்டுக் கொள்வார்.” ஒருவேளை உங்களுடைய குடும்ப பைபிள் படிப்பின்போது, பெற்றோராகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் காவற்கோபுரம் பத்திரிகையில் உள்ள சில குறிப்பிட்ட பாராக்களின் பேரில் தங்கள் சொந்த வார்த்தைகளில் குறிப்புகளைத் தயார்செய்யும்படி உதவி செய்யலாம். யெகோவாவின் போதனா திட்டத்தில் பங்குகொள்வதற்கு அவர்கள் கொண்டிருக்கும் பெரும் சிலாக்கியத்தை அவர்கள் போற்றும்படி அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
16. தேவராஜ்ய ஊழியப்பள்ளியின் பயன்கள் என்னவாக இருந்திருக்கின்றன, பள்ளியில் யார் சேர்ந்துகொள்ளலாம்?
16 மற்ற கிறிஸ்தவ கூட்டங்களில் கொடுக்கப்படும் போதனைக்கும்கூட கருத்தார்ந்தவிதத்தில் கவனம் செலுத்த வேண்டும். விஷயத்தை அளிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருப்பவர்களும், அளிக்கப்படும் போதனைக்கு செவிகொடுத்துக் கேட்பவர்களும் இதைச் செய்யவேண்டும். இப்போது 50 வருடங்களுக்கும் மேலாக யெகோவா ராஜ்ய செய்தியை அதிக திறம்பட்டவிதத்தில் அளிப்பதற்காக இலட்சக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பயிற்றுவிப்பதற்கு வாராந்தர தேவராஜ்ய ஊழியப்பள்ளியை உபயோகித்து வந்திருக்கிறார். கூட்டங்களுக்கு சமீபத்தில் ஆஜராக ஆரம்பித்திருக்கும் ஆட்கள் உட்பட சபையோடு சுறுசுறுப்பாக கூட்டுறவு கொண்டிருப்போர் சேர்ந்துகொள்ளலாம், ஆனால் அவர்கள் கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.
17. (அ) பொதுக்கூட்டம் குறிப்பாக எந்த நோக்கத்துக்காக ஸ்தாபிக்கப்பட்டது? (ஆ) பொது பேச்சாளர்கள் என்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்?
17 பொதுக் கூட்டம் போதனா திட்டத்தின் மற்றொரு நீண்டகால அம்சமாக இருக்கிறது. அதனுடைய பெயர் குறிப்பிடுகிறபடி, சாட்சிகளாக இல்லாதவர்களை அடிப்படை பைபிள் போதனைகளோடு அறிமுகப்படுத்துவதற்கு இந்தக் கூட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாறு பேச்சைக் கொடுப்பவர், செய்தியை முதன் முறையாகக் கேட்போர் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் விஷயங்களை அளிக்க வேண்டும். புரிந்துகொள்ளமுடியாத “வேறே ஆடுகள்,” “சகோதரர்கள்,” “மீதியானோர்” போன்ற பதங்களை விளக்குவதை இது அர்த்தப்படுத்துகிறது. பொதுக்கூட்டத்துக்கு ஆஜராகும் ஆட்கள் வேதாகமத்துக்கு முற்றிலும் மாறான நம்பிக்கைகளை அல்லது வாழ்க்கை-பாணிகளைக் கொண்டிருக்கலாம்—இன்றைய சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாய் இருந்தாலும்—பேச்சாளர் எப்போதும் சாதுரியமாக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட நம்பிக்கைகளை அல்லது வாழ்க்கை-பாணிகளைப் பற்றி ஒருபோதும் கேலி செய்யக்கூடாது.—1 கொரிந்தியர் 9:19-23-ஐ ஒப்பிடுக.
18. வேறு என்ன வாராந்தர சபைக்கூட்டங்கள் இருக்கின்றன, அவை என்ன நோக்கங்களை சேவிக்கின்றன?
18 உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் வழிநடத்துதலின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரசுரங்கள் ஒவ்வொரு வாரமும் பைபிளோடுகூட படிக்கப்படும் ஒரு கூட்டமாக சபை புத்தகப்படிப்பு இருக்கிறது. வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகம் தற்போது அநேக தேசங்களில் படிக்கப்பட்டு வரும் புத்தகமாக உள்ளது. ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதிலும் சீஷர்களை உண்டுபண்ணுவதிலும் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருப்பதற்கு ஊழியக்கூட்டம் யெகோவாவின் ஜனங்களை தகுதியாக்குவதற்கு அமைக்கப்பட்டிருக்கிறது.—மத்தேயு 28:19, 20; மாற்கு 13:10.
பெரிய கூட்டங்களில் போதிக்கப்படுதல்
19. ஒவ்வொரு வருடமும் “அடிமை” வகுப்பார் என்ன பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர்?
19 நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ‘உண்மையுள்ள அடிமை,’ மெய்க் கிறிஸ்தவர்களுக்கு போதிப்பதற்கும் அவர்களை விசேஷமாய் உற்சாகப்படுத்துவதற்கும் மாநாடுகளையும் அசெம்பிளிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது. அப்படிப்பட்ட மூன்று பெரிய கூட்டங்கள் இப்போது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றன. ஒரு வட்டாரத்தை உண்டுபண்ணும் அநேக சபைகள் ஒன்றுசேர்ந்து ஆஜராகும் ஒரு-நாள் அசெம்பிளியும்கூட உள்ளது. ஒவ்வொரு வட்டாரமும், வட்டார மாநாடு என்றழைக்கப்படும் இரண்டு நாள் கூட்டத்தை ஒரு வருடத்தில் நடத்துகிறது. கூடுதலாக, மாவட்ட மாநாடு என்றழைக்கப்படும் ஒரு கூட்டமும் உள்ளது, அதற்கு அநேக வட்டாரங்கள் ஆஜராகின்றன. சில வருடங்களில் சர்வதேச மாநாடுகளும்கூட நடத்தப்படுகின்றன. அநேக தேசங்களிலிருந்து விருந்தினராய் வரும் சாட்சிகளோடுகூட இப்படிப்பட்ட பெரிய கூட்டங்கள் யெகோவாவின் ஜனங்களுக்கு உண்மையிலேயே விசுவாசத்தைப் பலப்படுத்துவதாய் இருக்கின்றன!—உபாகமம் 16:16-ஐ ஒப்பிடுக.
20. யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய கூட்டங்களில் எது நிலையாக அழுத்தியுரைக்கப்பட்டு வந்திருக்கிறது?
20 1922-ல் சுமார் 10,000 பேர் சீடர் பாய்ன்ட், ஒஹாயோ, அ.ஐ.மா.-ல் ஒன்றுகூடியபோது பேச்சாளரின் ஊக்குவிப்பால் மாநாட்டு பிரதிநிதிகள் எழுச்சியூட்டப்பட்டனர்: “இதுவே ஒரு மகத்தான நாள். இதோ, ராஜா அரசாளுகிறார்! நீங்களே அவருடைய விளம்பரதாரர்கள். எனவே ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” அப்படிப்பட்ட பெரிய மாநாடுகள் பிரசங்க வேலைக்கு தொடர்ச்சியாக விடாமல் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. உதாரணமாக, 1953-ல் நியூ யார்க் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில், வீட்டுக்கு-வீடு பயிற்சி திட்டம் ஒன்றை எல்லா சபைகளிலும் ஏற்பாடு செய்வதைக் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. அத்திட்டத்தை நிறைவேற்றியது அநேக தேசங்களில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் பேரில் ஒரு நல்ல பயனுள்ள பாதிப்பைக் கொண்டிருந்தது.
போதிப்பதற்கு கடவுளால் போதிக்கப்பட்டிருத்தல்
21. எந்த சிலாக்கியத்தை அதன் நோக்கம் தவறவிடாமல் நாம் ஏற்றுக்கொள்ள விரும்புவோம்?
21 நிச்சயமாகவே இன்று யெகோவா ஒரு மகத்தான போதனா திட்டத்தை இந்த பூமியில் கொண்டிருக்கிறார்! அதை பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் கடவுளால் போதிக்கப்படக்கூடும், ஆம், “போதிக்கப்பட்டிருப்போரின் நாவை” பெற்றிருப்போர் மத்தியில் இருக்கலாம். கடவுளுடைய பள்ளியில் இருப்பதைப்போல் இருப்பது என்னே ஒரு சிலாக்கியம்! இருப்பினும், இந்த சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் அதன் நோக்கத்தை தவறவிடக்கூடாது. இயேசு மற்றவர்களுக்குப் போதிப்பதற்காக யெகோவா இயேசுவுக்குப் போதித்தார், இயேசு தாம் செய்துகொண்டிருந்த அதே வேலையை, ஆனால் அதைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் தம் சீஷர்கள் செய்வதற்காக அவர்களுக்குப் போதித்தார். அதே போல், நாம் மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, யெகோவாவின் மகத்தான போதனா திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறோம்.—யோவான் 6:45; 14:12; 2 கொரிந்தியர் 5:20, 21; 6:1; 2 தீமோத்தேயு 2:2.
22. (அ) மோசேயும் எரேமியாவும் என்ன பிரச்சினையைக் கொண்டிருந்தனர், ஆனால் அது எவ்வாறு தீர்க்கப்பட்டது? (ஆ) ராஜ்ய பிரசங்கிப்பு வேலை கட்டாயமாக நிறைவேற்றப்படுவதைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதற்கு நாம் என்ன உறுதியைக் கொண்டிருக்கலாம்?
22 மோசே சொன்னது போல், “நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றோ அல்லது எரேமியா சொன்னது போல், “நான் பேச அறியேன்” என்றோ நீங்கள் சொல்கிறீர்களா? யெகோவா அவர்களுக்கு உதவியது போல உங்களுக்கும் உதவி செய்வார். ‘நான் உன் வாயோடே இருப்பேன்,’ என்று அவர் மோசேயிடம் கூறினார். “நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம் . . . நான் உன்னுடனே இருக்கிறேன்,” என்று எரேமியாவிடம் அவர் கூறினார். (யாத்திராகமம் 4:10-12; எரேமியா 1:6-8) மதத்தலைவர்கள் அவருடைய சீஷர்களை அமைதல்படுத்த விரும்பியபோது, இயேசு சொன்னார்: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்.” (லூக்கா 19:40) ஆனால் அப்போது கற்கள் கூப்பிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை, அவை இப்போதும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் யெகோவா தம் ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கு தம்மால் போதிக்கப்பட்டிருப்பவர்களின் நாவை பயன்படுத்தி வருகிறார்.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
◻ ஏசாயா 50-ஆம் அதிகாரத்தில் என்ன சிறந்த போதனையாளர்-மாணவர் உறவு சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது?
◻ யெகோவா எவ்வாறு ஒரு மிகப்பெரிய போதனா திட்டத்தை நிறைவேற்றி வந்திருக்கிறார்?
◻ யெகோவாவின் போதனா திட்டத்தின் சில அம்சங்கள் யாவை?
◻ யெகோவாவின் போதனா திட்டத்தில் பங்குகொள்வது ஏன் ஒரு மகத்தான சிலாக்கியமாய் இருக்கிறது?
[பக்கம் 16-ன் படம்]
பிள்ளைகள் கொடுக்கும் இருதயப்பூர்வமான பதில்கள் பெரியவர்களுக்கு பெரும்பாலும் உற்சாகமூட்டுபவையாய் இருக்கின்றன