இதோ! யெகோவாவுக்குப் பிரியமான ஊழியக்காரன்
‘இதோ, . . . என் தாசன் [‘ஊழியக்காரன்,’ NW] . . . என் ஆத்துமாவுக்குப் பிரியமானவர்.’—ஏசா. 42:1.
1. முக்கியமாக கிறிஸ்துவின் நினைவுநாள் நெருங்கி வரும் இந்தச் சமயத்தில் யெகோவாவின் மக்கள் என்ன செய்ய வேண்டும், ஏன்?
சீக்கிரத்திலேயே கிறிஸ்துவின் நினைவுநாளை நாம் அனுசரிக்கப் போகிறோம். அதனால், ‘விசுவாசத்தின் அதிபதியாக இருப்பவரும் விசுவாசத்தைப் பூரணமாக்குபவருமான இயேசுவின் மீதே கண்களை ஒருமுகப்படுத்துங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்! அதோடு பவுல் சொன்னார், “பாவிகள் தங்களுக்கே கேடுண்டாகும்படி பேசிய கேவலமான பேச்சுகளையெல்லாம் சகித்துக்கொண்ட அவரைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள்; அப்படிச் செய்தால், நீங்கள் மனச்சோர்வடைந்து தளர்ந்துபோக மாட்டீர்கள்.” (எபி. 12:2, 3, NW) ஆம், தம்மையே பலியாக அர்ப்பணிக்கும்வரை உண்மையுடன் இருந்த கிறிஸ்துவின் வரலாற்று சுவடுகளைக் கவனமாகப் படித்துப் பார்க்கும்போது, ‘தளர்ந்துபோகாமல்’ என்றென்றும் யெகோவாவை உண்மையுடன் சேவிக்க முடியும்—அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய தோழர்களான வேறே ஆடுகளாக இருந்தாலும் சரி.—கலாத்தியர் 6:9-ஐ ஒப்பிடுங்கள்.
2. கடவுளுடைய மகனைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2 யெகோவா தமது மகனைக் குறித்து ஏசாயா மூலம் பல தீர்க்கதரிசனங்களை உரைத்திருக்கிறார். ‘விசுவாசத்தின் அதிபதியாக இருப்பவரும் விசுவாசத்தைப் பூரணமாக்குபவருமான இயேசுவின் மீதே கண்களை ஒருமுகப்படுத்த’ இவை துணைபுரிகின்றன.a அவருடைய குணங்களை, அவருடைய பாடுகளை, நமது ராஜாவும் மீட்பருமாய் இருக்கிற அவருடைய மேன்மையான ஸ்தானத்தைப் பற்றிய தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இவை விளங்குகின்றன. கிறிஸ்துவின் நினைவுநாளை இன்னும் நன்றாய் புரிந்துகொள்ளவும் இவை நமக்கு உதவுகின்றன. இந்த வருடம், ஏப்ரல் 9 வியாழக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அவருடைய நினைவுநாளை அனுசரிப்போம்.
அந்த ஊழியக்காரன் யார்?
3, 4. (அ) ஏசாயா புத்தகத்தில் வரும் ‘ஊழியக்காரன்,’ “தாசன்” என்ற வார்த்தைகள் யாரைக் குறிக்கின்றன? (ஆ) ஏசாயா 42, 49, 50, 52, 53 ஆகிய அதிகாரங்களில் வரும் ஊழியக்காரனை பைபிளே எப்படி அடையாளம் காட்டுகிறது?
3 ‘ஊழியக்காரன்,’ “தாசன்” என்ற வார்த்தைகள் ஏசாயா புத்தகத்தில் பல முறை வருகின்றன. சில வசனங்களில்தான் இந்த வார்த்தைகள் ஏசாயா தீர்க்கதரிசியைக் குறிக்கின்றன. (ஏசா. 20:3; 44:26) இன்னும் சில இடங்களில், இந்த வார்த்தைகள் இஸ்ரவேல் தேசத்தாரை (அதாவது, யாக்கோபின் வம்சத்தாரை) குறிக்கின்றன. (ஏசாயா 41:8, 9; 44:1, 2, 21) அப்படியானால், ஏசாயா 42, 49, 50, 52, 53 ஆகிய அதிகாரங்களில் வரும் ஊழியக்காரனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைக் குறித்து என்ன சொல்லலாம்? இந்த அதிகாரங்களில் விவரிக்கப்படும் யெகோவாவின் ஊழியக்காரன் யாரென கிரேக்க வேதாகமம் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், ரதத்தில் போய்க்கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரியைச் சந்திப்பதற்கு சுவிசேஷகன் பிலிப்புவைக் கடவுளுடைய சக்தி உந்துவித்த சமயத்தில், இந்தத் தீர்க்கதரிசனங்களில் ஒன்றைத்தான் மந்திரி வாசித்துக்கொண்டிருந்தார். இதை வாசித்துவிட்டு, அதாவது இன்று நம்முடைய கையிலிருக்கிற பைபிளில் ஏசாயா 53:7, 8 வசனங்களை வாசித்துவிட்டு, “தீர்க்கதரிசி யாரைக் குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக் குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ?” என்று பிலிப்புவிடம் மந்திரி கேட்டார். பிலிப்பு தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மேசியாவான இயேசுவைப் பற்றியே ஏசாயா கூறுவதாக மந்திரிக்கு விளக்கினார்.—அப். 8:26–35.
4 பச்சிளங்குழந்தையாக இருந்த இயேசுவைப் பார்த்து, ஏசாயா 42:6, 49:6 முன்னறிவித்தபடி, “இயேசு என்னும் பிள்ளை,” “புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாக” இருக்குமென்று கடவுளுடைய சக்தியினால் நீதிமானாகிய சிமியோன் உரைத்தார். (லூக். 2:25–32) அதோடு, இயேசு விசாரணை செய்யப்பட்ட இரவில் இழிவாக நடத்தப்பட்டதைக் குறித்தும் ஏசாயா 50:6-9-ல் முன்னுரைக்கப்பட்டுள்ளது. (மத். 26:67; லூக். 22:63) இயேசுதான் யெகோவாவின் ‘பிள்ளை’ அல்லது ‘ஊழியக்காரன்’ என்பதை பொ.ச. 33 பெந்தேகொஸ்தே நாளுக்குப் பிறகு அப்போஸ்தலன் பேதுரு தெளிவாக்கினார். (ஏசா. 52:13; 53:11; NW; அப்போஸ்தலர் 3:13, 26-ஐ வாசியுங்கள்.) மேசியாவைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
யெகோவா தம் ஊழியக்காரனை பயிற்றுவிக்கிறார்
5. அந்த ஊழியக்காரன் எப்படிப்பட்ட பயிற்சியைப் பெற்றார்?
5 கடவுளுடைய ஊழியக்காரனைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் ஒன்று, யெகோவாவின் தலைமகனான இயேசு பூமிக்கு வரும்முன் அவருக்கும் அவர் தந்தைக்கும் இருந்த நெருக்கமான உறவைப் பற்றி விளக்குகிறது. (ஏசாயா 50:4–9-ஐ வாசியுங்கள்.) யெகோவா தமக்கு தொடர்ந்து அளித்துவந்த பயிற்சியைக் குறித்து அந்த ஊழியக்காரனே சொல்கிறார்: ‘காலைதோறும் அவர் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப் போல [‘சீடர்களைப் போல,’ NW அடிக்குறிப்பு], நான் கேட்கும்படி செய்கிறார்.’ (ஏசா. 50:4) யெகோவாவின் ஊழியக்காரன் பரலோகத்திலிருந்த காலமெல்லாம் பணிவான சீடனைப் போல தம் தந்தைக்குச் செவிகொடுத்து கற்றுக்கொண்டார். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவருடைய பாதபடியில் அமர்ந்து கற்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!
6. அந்த ஊழியக்காரன் தம் தந்தைக்கு முற்றிலும் கீழ்ப்பட்டிருந்ததை எப்படித் தெரிவித்தார்?
6 ஏசாயா தீர்க்கதரிசனத்தில், அந்த ஊழியக்காரன் தம் தந்தையை “உன்னத அரசரான யெகோவா” என அழைக்கிறார். அப்படியானால், யெகோவாவே உன்னத அரசதிகாரம் பெற்றவர் என்ற அடிப்படை உண்மையை அவர் அறிந்திருந்தார் என்பது தெரிகிறது. அவர் தம் தந்தைக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டிருந்தார்; அதனால்தான், “உன்னத அரசரான யெகோவா என் செவியைத் திறந்தார்; நான் அவரை எதிர்க்கவுமில்லை, அவரைப் பின்பற்றுவதை விட்டுவிடவும் இல்லை” என்று சொன்னார். (ஏசா. 50:5, NW) இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் யெகோவா படைத்தபோது, அந்த ஊழியக்காரன் அவர் ‘அருகே கைதேர்ந்த வேலையாளாய்’ (NW) இருந்தார். ‘கைதேர்ந்த இந்த வேலையாள்,’ ‘நித்தம் அவருடைய [யெகோவாவுடைய] மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தார். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தார்.’—நீதி. 8:22–31.
7. தாம் பாடனுபவித்தபோது தந்தையின் ஆதரவு தமக்கு இருந்ததை அந்த ஊழியக்காரன் நம்பினார் என்பதற்கு என்ன அத்தாட்சி?
7 இந்த ஊழியக்காரன் பூமிக்கு வந்தபோது கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் பெற்ற பயிற்சியும் மனிதகுலத்தின் மீது அவருக்கிருந்த பிரியமும் இதற்குப் பெரிதும் உதவின. கடுமையான சோதனைகள் மத்தியிலும், தம்முடைய தந்தையின் சித்தத்தைச் செய்வதிலேயே அவர் எப்போதும் இன்பம் கண்டார். (சங். 40:8; மத். 26:42; யோவா. 6:38) பூமியில் தாம் பாடனுபவித்த காலமெல்லாம் தந்தையின் அங்கீகாரமும் ஆதரவும் தமக்கு இருந்ததை இயேசு உறுதியாக நம்பினார். எனவேதான், ஏசாயா தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடி, “என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? . . . இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார்” என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. (ஏசா. 50:8, 9) தம்முடைய ஊழியக்காரன் பூமியில் சேவைசெய்த காலமெல்லாம் யெகோவா அவருக்குப் பக்கத்துணையாக இருந்தார் என்பதை ஏசாயாவின் மற்றொரு தீர்க்கதரிசனத்தில் பார்க்கலாம்.
அந்த ஊழியக்காரன் பூமியில் செய்த சேவை
8. ஏசாயா 42:1-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, யெகோவாவால் ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்’ இயேசுவே என்பதை எது நிரூபிக்கிறது?
8 பொ.ச. 29-ல் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது என்ன நடந்ததென்று பைபிள் பதிவு சொல்கிறது. ‘பரிசுத்த ஆவி . . . அவர்மேல் இறங்கியது. வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.’ (லூக். 3:21, 22) தாம் ‘தெரிந்துகொண்டவர்’ என ஏசாயா தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டது யார் என்பதை இதன் மூலம் யெகோவா தெளிவாக அடையாளம் காட்டினார். (ஏசாயா 42:1–7-ஐ வாசியுங்கள்.) இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில், இந்தத் தீர்க்கதரிசனத்தை வெகு சிறப்பாக நிறைவேற்றினார். மத்தேயு தான் எழுதிய சுவிசேஷ பதிவில் ஏசாயா 42:1-4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள் காட்டி அவற்றை இயேசுவுக்குப் பொருத்தினார்.—மத். 12:15–21.
9, 10. (அ) இயேசு ஊழியம் செய்த காலத்தில் எவ்வாறு ஏசாயா 42:3-ஐ நிறைவேற்றினார்? (ஆ) பூமியில் இருந்தபோது கிறிஸ்து எவ்வாறு ‘நியாயத்தை வெளிப்படுத்தினார்,’ எப்போது ‘நியாயத்தைப் பூமியில் நிலைநாட்டுவார்’?
9 சாமானியர்கள் யூத மதத் தலைவர்களால் இழிவாக நடத்தப்பட்டார்கள். (யோவா. 7:47–49) கொடூரமாக நடத்தப்பட்ட இந்தச் சாமானிய மக்கள் ‘நெரிந்த நாணலைப்’ போலவும் ‘மங்கியெரிகிற திரியைப்’ போலவும் இருந்தார்கள். ஆனால், நலிவடைந்தோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் இயேசு கருணை காட்டினார். (மத். 9:35, 36) அவர்களை நோக்கி, “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அன்புடன் அழைத்தார். (மத். 11:28) அதோடு, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய யெகோவாவின் நெறிமுறைகளைக் கற்பித்து ‘நியாயத்தை . . . வெளிப்படுத்தினார்.’ (ஏசா. 42:3) நியாயப்பிரமாணத்தை அமல்படுத்தும் விஷயத்தில் நீதியுடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் எடுத்துக் காட்டினார். (மத். 23:23) அதோடு, இயேசு எந்தப் பாகுபாடுமின்றி ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் பிரசங்கித்து நியாயத்தை வெளிப்படுத்தினார்.—மத். 11:5; லூக். 18:18–23.
10 யெகோவாவால் ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்’ ‘பூமியில் நியாயத்தை நிலைநாட்டுவார்’ என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் முன்னுரைக்கிறது. (ஏசா. 42:4) மேசியானிய ராஜ்யத்தின் அரசராக வீற்றிருக்கும் இயேசு இதைச் சீக்கிரத்தில் நிறைவேற்றுவார். அப்போது, அனைத்து அரசியல் அமைப்புகளையும் அடியோடு அழித்து, நீதியுள்ள ஆட்சியை அமைப்பார். “நீதி வாசமாயிருக்கும்” புத்தம் புது பூமிக்குள் நம்மை வழிநடத்திச் செல்வார்.—2 பே. 3:13; தானி. 2:44.
“ஒளியாகவும்” “உடன்படிக்கையாகவும்”
11. இயேசு எந்த அர்த்தத்தில் முதலாம் நூற்றாண்டில் “புறதேசத்தாருக்கு ஒளி”யாக விளங்கினார், இன்றும் அவர் எப்படி ஒளியாக விளங்குகிறார்?
11 ஏசாயா 42:6 (NW) சொன்னபடியே இயேசு ‘புறதேசத்தாருக்கு ஒளியாகத்’ திகழ்ந்தார். அவர் பூமியில் ஊழியம் செய்த காலத்தில், முக்கியமாக யூதர்கள் மீதே ஆன்மீக ஒளியைப் பிரகாசித்தார். (மத். 15:24; அப். 3:26) ஆனால், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 8:12) இயேசு ஆன்மீக அறிவொளியூட்டியதோடு, மனிதகுலத்திற்கு தம் பரிபூரண உயிரையே மீட்பு விலையாக செலுத்தியதன் மூலமும் யூதருக்கும் புறதேசத்தாருக்கும் ஒளியாய் விளங்கினார். (மத். 20:28) “பூமியின் கடைசிபரியந்தமும்” தம்மைக் குறித்து சாட்சி கொடுக்கும்படி உயிர்த்தெழுந்து வந்தபின் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். (அப். 1:8) பவுலும் பர்னபாவும் யூதரல்லாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்தபோது, “புறதேசத்தாருக்கு ஒளி” (NW) என்ற சொற்றொடரை மேற்கோள் காண்பித்து தங்கள் ஊழியத்திற்குப் பொருத்திப் பேசினார்கள். (அப். 13:46–48; ஏசாயா 49:6-ஐ ஒப்பிடுங்கள்.) அந்த ஊழிய வேலை இன்றும் நடைபெற்று வருகிறது. எப்படியென்றால், பூமியில் வாழும் அபிஷேகம் செய்யப்பட்ட இயேசுவின் சகோதரர்களும் அவர்களுடைய தோழர்களும் ஆன்மீக ஒளியைப் பிரகாசித்து, “புறதேசத்தாருக்கு ஒளி”யாக விளங்கும் இயேசுமீது விசுவாசம் வைக்க ஜனங்களுக்கு உதவுகிறார்கள்.
12. யெகோவா தம் ஊழியக்காரனை எந்த விதத்தில் மக்களுக்கு ஓர் “உடன்படிக்கையாக” கொடுத்திருக்கிறார்?
12 அதே தீர்க்கதரிசனத்தில், ‘உம்மை காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாக வைப்பேன்’ என்று தாம் தெரிந்துகொண்ட ஊழியக்காரனிடம் யெகோவா சொன்னார். (ஏசா. 42:7) இயேசுவைக் கொலை செய்யவும் பூமியில் அவர் செய்த ஊழியத்தைத் தடுக்கவும் சாத்தான் எவ்வளவோ முயன்றபோதிலும், அவர் சாவதற்கான வேளை வரும்வரை யெகோவா அவரைப் பாதுகாத்தார். (மத். 2:13; யோவா. 7:30) பின்பு இயேசுவை உயிர்த்தெழுப்பியதன் மூலம் மக்களுக்கு அவரை ஓர் “உடன்படிக்கையாக,” அதாவது வாக்குறுதியாக, யெகோவா கொடுத்தார். இது, கடவுளுடைய உண்மையுள்ள இந்த ஊழியக்காரன் தொடர்ந்து “புறதேசத்தாருக்கு ஒளி”யாக இருந்து, ஆன்மீக ரீதியாக இருளில் இருப்பவர்களை விடுதலை செய்வார் என்பதற்கு உறுதியளித்தது.—ஏசாயா 49:8, 9-ஐ வாசியுங்கள்.b
13. இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது, ‘இருளில் இருந்தவர்களை’ எந்த அர்த்தத்தில் விடுவித்தார், இன்றும் எவ்வாறு விடுவித்து வருகிறார்?
13 இந்த வாக்குறுதிக்கு இசைய, யெகோவா தெரிந்துகொண்ட அந்த ஊழியக்காரன் ‘குருடருடைய கண்களைத் திறப்பார்;’ “கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும்” விடுவிப்பார். (ஏசா. 42:6) இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது, பொய்மத பாரம்பரியங்களை அம்பலப்படுத்தியதன் மூலமும் ராஜ்ய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்ததன் மூலமும் இத்தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். (மத். 15:3; லூக். 8:1) இவ்வாறு, ஆன்மீக ரீதியாக இருளில் இருந்த யூதர்களை விடுதலை செய்து தமது சீடர்களாக்கினார். (யோவா. 8:31, 32) அதேபோல், யூதரல்லாத லட்சோபலட்சம் மக்களுக்கும் ஆன்மீக ரீதியில் விடுதலை அளித்திருக்கிறார். ‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ (NW) என்று தம் சீடர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்; அதோடு, இந்த “உலகத்தின் முடிவுபரியந்தம்” அவர்களோடு இருப்பதாக வாக்குறுதியும் அளித்திருக்கிறார். (மத். 28:19, 20) இப்போது, உலகளவில் செய்யப்படும் பிரசங்க வேலையைப் பரலோகத்திலிருந்து கிறிஸ்து இயேசு கண்காணித்து வருகிறார்.
யெகோவா தம் ‘ஊழியக்காரனை’ மேன்மைப்படுத்தினார்
14, 15. ஏன், எப்படி யெகோவா தமது ஊழியக்காரனை மேன்மைப்படுத்தினார்?
14 மேசியாவாக இருக்கிற தமது ஊழியக்காரனைப் பற்றிய மற்றொரு தீர்க்கதரிசனத்தில், யெகோவா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.” (ஏசா. 52:13) தமது உன்னத அரசாட்சிக்கு தம் மகன் கீழ்ப்பட்டு, கடும் சோதனைகளின் மத்தியிலும் உத்தமமாய் இருந்ததைப் பார்த்து யெகோவா அவரை மேன்மைப்படுத்தினார்.
15 இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” (1 பே. 3:22) அதேபோல், அப்போஸ்தலன் பவுலும் அவரைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலி. 2:8–11.
16. இயேசு 1914-ல் எவ்வாறு ‘மகா உன்னத ஸ்தானத்தை’ பெற்றார், அப்போதுமுதல் என்னவெல்லாம் சாதித்திருக்கிறார்?
16 1914-ஆம் ஆண்டில், இயேசுவை யெகோவா இன்னும் மேன்மைப்படுத்தினார். மேசியானிய ராஜ்யத்தின் ராஜாவாக அவரை சிம்மாசனத்தில் யெகோவா அமர்த்தியபோது அவருக்கு ‘மகா உன்னத ஸ்தானத்தை’ அளித்தார். (சங். 2:6; தானி. 7:13, 14) அப்போதுமுதல், கிறிஸ்து ‘தம் சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்து’ வருகிறார். (சங். 110:2) முதலில் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பூமிக்குத் தள்ளி அவர்கள்மீது வெற்றிகொண்டார். (வெளி. 12:7–12) பின்பு, மகா கோரேசுவாக செயல்பட்டு, பூமியில் மீதமுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட தமது சகோதரர்களை ‘மகா பாபிலோனின்’ இரும்புக்கரத்திலிருந்து விடுவித்தார். (வெளி. 18:2; ஏசா. 44:28) இன்றுவரை உலகளாவிய பிரசங்க வேலையை அவர் தலைமைதாங்கி நடத்தி வந்திருக்கிறார்; அதன் விளைவாக, அவருடைய ஆன்மீக சகோதரர்களில் ‘மீதமுள்ளவர்களும்,’ ‘சிறுமந்தையின்’ உண்மைத் தோழர்களான லட்சக்கணக்கான “வேறே ஆடுகளும்” கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.—வெளி. 12:17, NW; யோவா. 10:16; லூக். 12:32.
17. ‘ஊழியக்காரனைப்’ பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை இதுவரை படித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
17 ஏசாயா புத்தகத்திலுள்ள மகத்தான தீர்க்கதரிசனங்களைப் பற்றி இதுவரை நாம் ஆராய்ந்திருப்பதால், நம்முடைய ராஜாவும் மீட்பருமான கிறிஸ்து இயேசுமீது நமக்கு இருக்கிற மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. இயேசு பூமியிலிருந்த காலத்தில் தம் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தது அவர் பூமிக்கு வரும்முன் யெகோவாவிடமிருந்து பெற்ற பயிற்சியைப் பறைசாற்றுகிறது. இயேசு தாமே செய்த ஊழியத்தின் மூலமும் இன்றுவரை தமது கண்காணிப்பில் நடந்துவரும் பிரசங்க வேலையின் மூலமும் ‘புறதேசத்தாருக்கு ஒளியாக’ விளங்குவதை நிரூபித்திருக்கிறார். மேசியாவாக இருக்கிற இந்த ஊழியக்காரன் நம்முடைய நன்மைக்காக பாடுகள் பட்டு தமது உயிரையே அர்ப்பணித்ததைப் பற்றி மற்றொரு தீர்க்கதரிசனத்தில் பார்க்கப் போகிறோம். அவருடைய நினைவுநாள் நெருங்கிவரும் இந்தச் சமயத்தில் இந்த விஷயங்களைப் பற்றி ‘கவனமாகச் சிந்திப்பது’ தகுந்ததே.—எபி. 12:2, 3, NW.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தீர்க்கதரிசனங்களை பின்வரும் வசனங்களில் காணலாம்: ஏசாயா 42:1–7; 49:1–12; 50:4–9 மற்றும் 52:13–53:12.
b ஏசாயா 49:1-12-ல் உள்ள தீர்க்கதரிசன விளக்கத்திற்கு, ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு II என்ற புத்தகத்தில் 136-145 பக்கங்களைக் காண்க.
சிந்திப்பதற்கு
• ஏசாயா தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்படும் அந்த ‘ஊழியக்காரன்’ யார், நமக்கு எப்படித் தெரியும்?
• யெகோவாவிடமிருந்து அந்த ஊழியக்காரன் எப்படிப்பட்ட பயிற்சியைப் பெற்றார்?
• இயேசு எவ்வாறு ‘புறதேசத்தாருக்கு ஒளியாக’ விளங்குகிறார்?
• அந்த ஊழியக்காரன் எவ்வாறு மேன்மைப்படுத்தப்பட்டார்?
[பக்கம் 21-ன் படம்]
ஏசாயா குறிப்பிடுகிற அந்த ‘ஊழியக்காரன்’ மேசியாவான இயேசுதான் என்பதை பிலிப்பு தெளிவாக அடையாளம் காட்டினார்
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியக்காரனாகிய இயேசு, நலிவடைந்தோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் கருணை காட்டினார்
[பக்கம் 24-ன் படம்]
இயேசுவைக் கடவுள் உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்தி, மேசியானிய ராஜ்யத்தின் ராஜாவாக சிம்மாசனத்தில் அமர்த்தினார்