“இதோ அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்,” என்று நீங்கள் சொல்வீர்களா?
“யெகோவா [சொன்னார்]: ‘யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?’ அதற்கு நான்: ‘இதோ அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்’ என்று சொல்ல ஆரம்பித்தேன்.—ஏசாயா 6:8
“கொலம்பியாவுக்குச் செல்வதற்கான எங்கள் ஒப்புதல் கடிதத்தை அனுப்புவதில் நாங்கள் அதிக மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் தட்டச்சுப் பொறி விவரிக்க முடியாதளவுக்கு நாங்கள் இங்கு ஈக்வேடாரில் எங்களுடைய ஊழிய சிலாக்கியத்தை அனுபவித்து வந்திருக்கிறோம்.” உவாட்ச் டவர் சங்கத்திற்கு ஒரு புதிய கிளைக்காரியாலய கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஈக்வேடாருக்குப் போன இரண்டு யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து வந்த கடிதம் இப்படியாக தொடங்கியது.
2 இந்த ஊழியர்கள் அந்தக் கட்டட வேலையில் உதவுவதைவிட அதிகத்தைச் செய்வதற்கு ஈக்வேடாருக்குச் சென்றனர். அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்: “நாங்கள் வெளி ஊழியத்தையே மிக முக்கியமான காரியமாகக் கண்டோம். மூன்று வாரங்களுக்கு முன்பு நாங்கள் எட்டு பேர் ஒரு திறந்த அங்காடிக்குப் போனோம். நாங்கள் 73 புத்தகங்களையும் 40 பத்திரிகைகளையும் விநியோகித்தோம். போன வாரம் நாங்கள் இரண்டு புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம். [இப்பொழுது கொலம்பியாவில்] இந்த விசேஷமான முழுநேர ஊழிய சிலாக்கியத்தில் நாங்கள் தொடருவதற்கான இந்த வாய்ப்புக்கு நானும் என் மனைவியும் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்.”
3 இந்தத் தம்பதிகளும் அந்நிய நாட்டிற்கு அனுப்பப்படுவதற்குத் தங்களை மனமுவந்து அளித்திருக்கும் நூற்றுக்கணக்கான மற்றவர்களும் ஏசாயா தீர்க்கதரிசி வெளிப்படுத்தியதற்கு ஒப்பான ஆவியைப் பிரதிபலிக்கின்றனர். “யாரை நான் அனுப்புவேன். யார் நமது காரியமாய்ப் போவான்? என்று யெகோவா சொன்னதைக் கேட்ட ஏசாயா: “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்,” என்றான். பின்பு தேவன் அவனிடம்: “நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, ‘நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், இருங்கள் என்று சொல்’ என்றார். (ஏசாயா 6:8, 9) என்ன காரியத்திற்கு அனுப்பப்படுவதற்காக ஏசாயா முன்வந்தான்? அதன் பலன் என்னவாக இருந்தது? இந்த விவரப்பதிவிலிருந்து நவீன பொருத்தமாகவும் நமக்குத் தனிப்பட்ட பாடங்களாகவும் நாம் கற்றுக் கொள்வது என்ன?
ஏசாயா பிரசங்கிக்க அனுப்பப்படுகிறான்
4 உசியா அரசன் மரித்த அந்த வருடத்திலே, “யாரை நான் அனுப்புவேன்?” என்று யெகோவா ஏசாயாவைக் கேட்டார். (ஏசாயா 6:1) அது பொ.ச.மு 777-ஆக இருந்தது. அல்லது பாபிலோனியர் எருசலேமை அழித்து யூதாவைப் பாழ்க்கடிப்புக்கு உட்படுத்துவதற்கு ஏறக்குறைய ஒன்றேமுக்கால் நூற்றாண்டுக்கு முன்னாக இருந்தது. அவர்களுக்கு வரப்போகும் விசனகரமான விளைவுகளுக்கு வழிநடத்திய காரியங்களை யெகோவா காண முடிந்தது, எனவே அதைக் குறித்த ஒரு செய்தியை அறிவிப்பதற்காக ஏசாயாவை அனுப்புகிறார். அவன் பெற்ற பிரசங்கிப்பு வேலையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5 நாம் எப்படி உணர்ந்திருப்போமோ அதுபோலவே அந்தப் பிரசங்கிக்கும் பொறுப்பைப் பெற்ற அந்தச் சூழ்நிலை அமைப்பைக் கண்டு ஏசாயா வெகுவாகக் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தான்: அவன் எழுதினதாவது: “யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன். அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து ஒருவரையொருவர் நோக்கி: ‘சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது’ என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.”—ஏசாயா 6:1-3.
6 ஆசாரிய வம்சத்தினனாக இல்லாதிருந்தும் அகந்தையுள்ளவனாக தூபங்காட்டுவதற்கு ஆலயத்தில் பிரவேசித்த உசியா குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டான் என்பதை ஏசாயா அறிந்திருந்தான். எனவே ஏசாயாவுக்குக் கடவுளுடைய பிரசன்னத்தைக் காணும் என்னே ஓர் அரிய வாய்ப்பு! ஏசாயா அபூரண மனிதனாக யெகோவாவை நேரடியாகப் பார்க்கவில்லை, ஆனால் அவரை ஒரு தரிசனத்தில் பார்க்க அனுமதிக்கப்பட்டான். (யாத்திராகமம் 33:20-23) இதன் மகிமை உயர்ந்த வரிசையைச் சேர்ந்த தேவதூதர்கள் (சேராபீன்கள்) யெகோவாவின் சிங்காசனத்தில் செய்துவந்த பணிவிடையால் சிறப்பிக்கப்படுகிறது. கடவுளுடைய பரிசுத்தத்தன்மையை உணர்ந்து மரியாதையுடன் தங்கள் ‘முகங்களை’ மூடிக்கொண்டனர். தங்களுடைய மகிமையைத் தாழ்த்திக் கொள்ளுதலோடு, அவர்கள் கடவுளுடைய பரிசுத்தத்தை அழுத்தந்திருத்தமாக அறிவிக்கின்றனர். இந்தக் காரியங்களனைத்தும் ஒரு மனிதன் மீது என்ன பாதிப்பை உடையதாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
7 ஏசாயா பதில் சொல்லட்டும்: “அப்பொழுது நான்: ‘ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே’ என்றேன்.” (ஏசாயா 6:5) தான் கடவுளுக்குப் பிரதிநிதியாக பேச வேண்டும் என்பதை ஏசாயா அறிந்திருந்தான், என்றபோதிலும் தான் அசுத்தமானவன், மகிமை பொருந்திய இந்தப் பரிசுத்த அரசரின் பிரதிநிதியாகப் பேசுவதற்குத் தகுதியான தூய்மையான உதடுகள் இல்லாதவன் என்பதை இந்தத் தரிசனம் அவனுடைய மனதிற்குக் கொண்டுவந்தது. நம்மில் சிலருங்கூட சில சமயங்களில் நம்முடைய பாவத்தின் பாதிப்புக்குள்ளானவர்களாய்க் கடவுளை ஜெபத்தில் அணுகுவதற்கு தகுதியற்றவர்களாய் இருப்பதாக, அவருடைய நாமத்தைத் தாங்கியிருக்க தகுதியற்றவர்களாக உணரக்கூடும். அப்படியென்றால் ஏசாயாவின் மேலுமான அனுபவம் நமக்கு உற்சாகமளிப்பதாயிருக்க வேண்டும்.
8 பணிவிடை செய்து கொண்டிருந்த சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து ஒரு நெருப்புத் தழலுடன் அவனிடம் பறந்து சென்றான். அந்த நெருப்புத் தழலால் ஏசாயாவின் வாயைத் தொட்டு அந்தத் தூதன் சொன்னதாவது: “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது.” (ஏசாயா 6:6, 7) செலுத்தப்பட்ட பலிகள் ஆசாரியர்களைக் கடவுளுக்கு முன்பாக சுத்திகரிக்க முடியாத நிலையிலிருந்தும் சாலொமோனின் நாட்களில் பரலோகத்திலிருந்து வந்த அக்கினி யெகோவா தேவன் பலியை அங்கீகரித்தார் என்பதற்கு அத்தாட்சியாக இருந்தது. (2 நாளாகமம் 7:1-3; எபிரெயர் 10:1-4, 11) என்றபோதிலும், அந்த நெருப்புத் தழலால் ஏசாயாவின் அசுத்த நிலை நீக்கப்பட்டபோது, ஒரு விஷேசமான பிரசங்க வேலையைப் பெற்றுக் கொள்ளுமளவுக்கு அவனுடைய பாவம் நிவர்த்தி செய்யப்பட்டது என்ற யெகோவாவின் தீர்ப்பை அவன் ஏற்றுக்கொள்ள முடிந்தது. இது எதிர்காலத்தைக் குறித்த அக்கறை தூண்டும் என்ன காரியங்களை அடையாளப்படுத்துகிறது?
9 இந்த ஆச்சரியமான அனுபவம் அந்தத் தீர்க்கதரிசி பிரசங்க வேலை செய்யும் நியமிப்பைப் பெறுவதற்கு வழிநடத்தியது. (ஏசாயா 6:8, 9) ஆனால் அந்த மக்கள் அடிக்கடி கேட்டாலும் எந்த ஒரு அறிவையும் பெற மாட்டார்கள் என்று ஏன் ஏசாயா சொல்ல வேண்டுடியதாயிருந்தது? கடவுளுடைய குரல் பின்வருமாறு தொடர்ந்து கூறியது: “நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு.” (ஏசாயா 6:10) அப்படியென்றால் ஏசாயா சாதுரியமற்றவனாய் யூதர்கள் யெகோவாவுக்கு முரணாக இருந்து வெறுப்புக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கிறதா? இல்லை. “இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்” என்று சொல்லுவதன் மூலம் மனமுவந்து ஏற்றிருக்கும் இந்தப் பிரசங்க வேலையை ஏசாயா எவ்வளவு உண்மையாயும் முழுமையாயும் செய்தாலும் பெரும்பான்மையான யூதர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்கள் என்பதற்கு இது ஓர் அறிகுறியாக மட்டுமே இருந்தது.
10 தவறு மக்களுடையதாயிருந்தது. ஏசாயா அவர்களை “மறுபடியும் மறுபடியும் கேட்க” அனுமதித்தபோதிலும் அவர்கள் அறிவையோ அல்லது தெளிந்துணர்வையோ பெற்றுக்கொள்ள மனதாயில்லை. அவர்களுடைய பிடிவாதமான ஆவிக்குரியதாயில்லாத மனநிலையின் காரணத்தால் பெரும்பான்மையினர் சாதகமாக பிரதிபலிக்கமாட்டார்கள் என்பதைக் கடவுள் முன்னதாகவே குறிப்பிட்டர். ஒரு சிறுபான்மையினர் செவிகொடுக்கக்கூடும். ஆனால் பெரும்பான்மையினர் பலமான பசை கொண்டு கண்களை இறுக ஒட்டிக்கொண்டது போல் குருடராயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்யக்கூடும். இந்தக் கெட்ட நிலைமை எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? தான் எத்தனை ஆண்டுகளுக்கு சேவிக்க வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, அவன் இந்தக் கேள்வியைத் தான் கேட்டான்: “யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு?” அதற்கு தேவன்: “பட்டணங்கள் குடியில்லாமலும் வீடுகள் மனுஷ சஞ்சாரமில்லாமலும் பாழாகிப் போகும் வரைக்கும்” என்றார். ஏசாயாவின் வாழ்நாட்காலத்துக்குப் பின்பு என்றாலும் அது அப்படியே நடந்தது. பாபிலோனியர்கள் பூமியின் மனிதரை நீக்கி, யூதாவை “அவாந்தர வெளியாக்கினர்”—ஏசாயா 6:11, 12; 2 இராஜாக்கள் 25:1-26.
11 என்றபோதிலும் எல்லாம் அந்தளவுக்கு மோசமாயிருக்காது என்று யெகோவா ஏசாயாவுக்கு உறுதியளித்தார். “ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கு இருக்கும்.” ஆம் அது “கருவாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போன பின்பு அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும்.” (ஏசாயா 6:13) ஒரு பெரிய மரத்தின் அடிமரத்தில் துளிர் தோன்றுவது போல் ஓர் 70 ஆண்டு பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு, ஒரு வித்து, அல்லது மீதியானோர் தேசத்துக்குத் திரும்பிவந்தனர். (2 நாளாகமம் 36:22, 23; எஸ்றா 1:1-4; யோபு 14:7-9 மற்றும் தானியேல் 4:10, 13-15, 26-ஐ ஒப்பிடவும்.) ஏசாயாவின் செய்தி இருண்டதோர் செய்தியாக இருப்பினும் அதில் ஆறுதலளிக்கும் அம்சமும் காணப்பட்டது. எதிர்கால சம்பவங்களுக்கு ஏசாயாவை ஒரு மாதிரிப்படிவமாக நோக்குவதற்கு நமக்கு வேதப்பூர்வமான காரணம் இருக்கிறது. எப்படி?
பெரிய நிறைவேற்றங்கள்
12 ஏசாயா மரித்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு பெரிய ஏசாயா என்று நாம் அழைக்கக்கூடிய ஒருவர் வந்தார்—இயேசு கிறிஸ்து. மனிதனாக பிறப்பதற்கு முன்பு அவர் தம்முடைய பிதாவால் பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்வந்தார். அப்பொழுது ஏசாயா எழுதிய காரியங்களைத் தம்முடைய பிரசங்க வேலையில் உட்படுத்துவார். (நீதிமொழிகள் 8:30, 31; யோவான் 3:17, 34; 5:36-38; 7:28; 8:42; லூக்கா 4:16-19; ஏசாயா 61:1) அதிக குறிப்பாக, இயேசு தாம் போதித்த விதம் குறித்து விளக்கும்போது தம்மை ஏசாயா 6-ம் அதிகாரத்துடன் இணைத்துப் பேசினார். (மத்தேயு 13:10-15; மாற்கு 4:10-12; லூக்கா 8:9, 10) அது பொருத்தமாக இருந்தது, ஏனென்றால் இயேசு பேசியதைக் கேட்ட யூதர்களில் பெரும்பான்மையினர், ஏசாயாவின் காலத்திலிருந்த ஆட்களைப்போலவே அவருடைய செய்தியை ஏற்று அதன்படி செயல்பட மனமற்றவர்களாயிருந்தனர். (யோவான் 12:36-43) மேலும் பொ.ச. 70-ல் இயேசுவின் செய்திக்குத் தங்களைக் ‘குருடராகவும் செவிடராகவும்’ ஆக்கிக் கொண்டவர்கள் பொ.ச.மு. 607-ல் ஏற்பட்டதுபோன்ற ஓர் அழிவை எதிர்பட்டனர். இந்த முதல் நூற்றாண்டு சம்பவங்கள் எருசலேம் மீது ‘உலக முண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான’ உபத்திரவமாக இருந்தது. (மத்தேயு 24:21) என்றபோதிலும் ஏசாயா முன்னறிவித்தபடி, மீதியானோர், அல்லது “பரிசுத்த வித்து” விசுவாசித்தது. இவர்கள் ஓர் ஆவிக்குரிய தேசமாக, அபிஷேகம் பண்ணப்பட்ட “தேவனுடைய இஸ்ரவேலராக” அமைக்கப்பட்டனர்.—கலாத்தியர் 6:16.
13 நாம் இப்பொழுது ஏசாயா 6-ம் அதிகாரத்தின் பைபிள் அடிப்படையான இன்னொரு நிறைவேற்றத்திற்கு வருகிறோம். இதைப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் பொ.ச. 60-ம் ஆண்டுபோல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய வார்த்தைகளைக் கவனியுங்கள். ரோமில் தன்னுடைய வார்த்தைகளைக் கேட்ட யூதரில் பலர் “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்ததை” ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை விளக்கினான். இதற்குக் காரணம் ஏசாயா 6:4, 10 மீண்டும் நிறைவேற்றத்தைக் காண்கிறது. (அப்போஸ்தலர் 28:17-27) அப்படியென்றால் இயேசு இந்தப் பூமியை விட்டுச் சென்ற பின்பு, அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்கள் ஏசாயா செய்ததைப் போன்ற ஒரு வேலையை நிறைவேற்ற வேண்டுமா? ஆம், நிச்சயமாக!
14 பெரிய ஏசாயா பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு, தம்முடைய சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாய்” இருப்பார்கள் என்றார். (அப்போஸ்தலர் 1:8) ஏசாயாவின் பாவம் நீக்கப்படுவதற்குத் தேவையானதை அந்தப் பலிபீடம் அளித்ததுபோல தங்களுடைய ‘பாவ நிவிர்த்திக்கு’ இயேசுவின் பலி அடிப்படையாக இருந்தது. (லேவியராகமம் 6:12, 13; எபிரெயர் 10:5-10; 13:10-15) இப்படியாகக் கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியினால் அவர்களை அபிஷேகம் பண்ணக்கூடும். இது ‘பூமியின் கடையாந்தரம் மட்டும் சாட்சிகளாயிருக்க அவர்களைப் பலப்படுத்திடும். ஏசாயா தீர்க்கதரிசி மற்றும் பெரிய ஏசாயா ஆகிய இரண்டு பேரும் கடவுளுடைய செய்தியை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டனர். அதுபோல இயேசுவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சீஷர்கள் “கிறிஸ்துவுக்குள் . . . தேவனால் அனுப்பப்பட்டனர்.”—2 கொரிந்தியர் 2:17.
15 நவீன காலங்களில் குறிப்பாக முதல் உலக மகா யுத்தம் முதற்கொண்டு அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய செய்தியை அறிவிக்க வேண்டிய அவசியத்தைக் கண்டிருக்கின்றனர். இது “நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளை” சமீபித்திருக்கிறது என்ற தெளிந்த உண்மையையும் உட்படுத்துகிறது. அது பாழாக்கப்படுவது பூர்வ இஸ்ரவேலைப் போன்று தங்களைக் கடவுளுடைய மக்கள் என்று வெகுகாலமாக உரிமைப்பாராட்டி வந்திருக்கும் கிறிஸ்தவ மண்டலத்துக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். கடவுளுடைய அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகள் பல பத்தாண்டுகளாக உண்மையுடன் சாட்சி கொடுத்து வந்தும் கிறிஸ்தவ மண்டலத்தில் பெரும்பான்மையினர் ‘தங்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, தங்கள் காதுகளை மந்தப்படுத்தி தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.’ “பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷ சஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தர வெளியாகிப்” போகும்வரை இது தொடர்ந்திருக்கும் என்பதை ஏசாயாவின் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. இது இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைக் குறிக்கும்.—ஏசாயா 6:10-12.
“என்னை அனுப்பும்”
16 ஒரு பரதீஸான பூமியில் என்றென்றுமாக வாழும் பைபிள் நம்பிக்கையுடைய பல இலட்சக்கணக்கான பக்திவைராக்கியமுள்ள கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இயேசுவின் பலிக்குரிய இரத்தத்தின் அடிப்படையில் இந்தத் “திரள் கூட்டம்” இப்பொழுது அவசியத்திற்கேற்ப தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறலாம். “இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்,” என்று சொல்வதில் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானோரை சேர்ந்திருக்கும்போது அவர்களும் கடவுளுடைய ஆவியின் மூலம் பெலமும் ஆதரவும் பெறுகின்றனர். என்ன செய்வதற்காக அனுப்புவது? ரோமர் 10:13-15-ல் பவுல் பின்வருமாறு சொல்லுகிறான்: “யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்வார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி அவரை விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள். அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை சுவிஷேசமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு நன்றாயிருக்கிறது’ என்று [ஏசாயா 52:7-ல்] எழுதியிருக்கிறதே.”—வெளிப்படுத்துதல் 7:9-15.
17 தான் சொல்லப்போகும் செய்தியின் முழு தகவலையும் அறிந்து கொள்வதற்கு முன்பே ஏசாயா “இதோ, அடியேன்! என்னை அனுப்பும்” என்று சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு மாறாக, “யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாக போவான்?” என்ற அழைப்புக்குப் பிரதிபலிப்பவர்கள் மூலம் இன்று என்ன செய்தி அறிவிக்கப்படும்படி கடவுள் விரும்புகிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அது “நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளைக்” குறித்து முன்னெச்சரிப்பு கொடுப்பதையும் உட்படுத்துகிறது. என்றபோதிலும் இந்தச் செய்தி ‘நற்காரியங்களின் சுவிசேஷத்தையும்’ உள்ளடக்கியதாயிருக்கிறது. உதாரணமாக “அனுப்பப்பட்டவர்கள்” “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும்” அறிவிப்பதில் பங்குகொள்கிறார்கள். அதைச் செய்வது மிகுந்த திருப்தியளிப்பதாய் இருக்காதா?—ஏசாயா 61:1, 2.
18 நீங்கள் ஏற்கெனவே “நற்காரியங்களை சுவிஷேசமாய்” அறிவிக்கிறவர்களாயிருப்பீர்களானால், ஏசாயா 6-ம் அதிகாரத்தை விமர்சிப்பது உங்களைப் பின்வரும் கேள்வியைக் கேட்கத் தூண்டிடும்: ஏசாயா 6:8-ன் ஆவியில் நான் எப்படி அதிக முழுமையாக பிரதிபலிக்கக்கூடும்? ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அந்தத் தம்பதிகளைப் போன்று சர்வதேச வாலன்டியர் கட்டடப் பணியாளர்கள் திட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் பங்குகொண்டிருக்கின்றனர். கட்டடங்கட்டும் திறமைகளில்லாத மற்ற அநேக ஆட்கள் ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கான ஆட்கள் அதிகமாகத் தேவைப்படும் நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். உவாட்ச் டவர் சங்கத்தின் கிளைக் காரியாலயத்தின் ஆலோசனையை நாடுவதன் மூலம் இது நன்கு செய்யப்படுகிறது. உண்மைதான், திட்டமிடுவது மிகவும் அவசியம், ஏனென்றால் மொழி, வாழ்க்கைத் தரங்கள், வேலைவாய்ப்பு சாத்தியங்கள், போன்ற மற்ற காரியங்கள் அந்நிய தேசத்தில் வெகுவாக வித்தியாசப்படலாம். என்றபோதிலும், பேரளவான மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்வதற்கான சாத்தியத்தை ஒதுக்கிவிடாதீர்கள். “இதோ, அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்” என்ற மனநிலையுடைய அநேகர் அப்படிச் சென்றிருக்கின்றனர், மற்றும் அப்படிச் செய்ததற்காக அவர்கள் யெகோவாவால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுமிருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 24:27; லூக்கா 14:28-30-ஐ ஒப்பிடவும்.
19 இன்னும் மற்றவர்கள்—விவாகமாகாத சகோதரர்கள் அல்லது சகோதரிகள், விவாகமான தம்பதிகள் முழு குடும்பங்களுங்கூட—தங்களுடைய சொந்த தேசத்தில் அல்லது பிராந்தியத்தில் ராஜ்ய பிரசங்கிகளுக்கான அல்லது கிறிஸ்தவ கண்காணிகளுக்கான கூடுதல் தேவை இருக்கும் இடங்களுக்கு மாறிச் சென்றிருக்கின்றனர். (அப்போஸ்தலர் 16:9, 10) இதைச் செய்வது, வேறொரு வேலையைப் பெறுவது, ஒருவேளை குறைந்த ஊதியத்தைப் பெற்றுத்தரும் ஒன்றைப் பெறுவது போன்ற தியாகங்களைச் செய்வதை தேவைப்படுத்தியிருக்கக் கூடும். சிலர் குறைந்த ஓய்வு ஊதியத்தையே பெறும்வகையில் வேலையிலிருந்து முன்னதாகவே ஓய்வு பெற்றுவிட்டிருக்கின்றனர் மற்றும் ஊழியத்திற்கு அதிக நேரத்தைக் கொண்டிருக்க ஒரு பகுதி நேர வேலையைக் கண்டுபிடித்திருக்கின்றனர். முழு குடும்பங்களும் ஒன்றுசேர்ந்து, “இதோ இருக்கிறோம்! எங்களை அனுப்பும் என்று சொல்லும்போது எவ்வளவு அருமையாக இருக்கிறது. இதுவுங்கூட ஏசாயாவின் சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது. அவனுடைய மனைவி, ஒரு தீர்க்கதரிசினியாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சுறுசுறுப்பான பங்கையுடையவளாயிருந்தாள், மற்றும் அவனுடைய குமாரர்களும் தீர்க்கதரிசன செய்திகளில் உட்பட்டிருந்தனர்.—ஏசாயா 7:3, 14-17; 8:3, 4.
20 உங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் அவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்ய அனுமதிக்காவிட்டாலும், ‘ஏசாயா பிரதிபலித்த விதத்தைப் பின்பற்றும் வகையில் என்னாலான எல்லாவற்றையும் செய்கிறேனா?’ என்று சிந்தித்துப் பாருங்கள். சீதோஷ்ண நிலை சாதகமற்றதாயிருந்தாலும் அல்லது பொதுமக்களின் மனப்பான்மை வித்தியாசப்பட்டிருந்தாலும் கடவுளுடைய செய்தியை அறிவிப்பதில் மும்முரமாக ஈடுபடுங்கள். நிச்சயமாகவே ஏசாயா அதைத்தான் செய்தான். “நற்காரியங்களின் சுவிசேஷத்தைக்” குறித்து மற்றவர்களிடம் பேசுவதில் வைராக்கியமாயிருங்கள்! “யாரை நான் அனுப்புவேன்?” என்றார் யெகோவா. பூர்வக் காலத்தில் வாழ்ந்த ஏசாயாவைப் போல அவருடைய செய்தியை அறிவிக்க “இதோ அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்” என்பதே உங்களுடைய பதில் என்பதை நிரூபியுங்கள். (w87 10⁄15)
விமர்சன குறிப்புகள்
◻ ஏசாயா எந்தச் சூழ்நிலையில் 6-ம் அதிகாரத்தின் தரிசனத்தைப் பெற்றான்? அவன் பார்த்தது என்ன?
◻ ஏசாயா என்ன வேலையைப் பெற்றான்?
◻ இயேசுவை ஏன் பெரிய ஏசாயா என்று அழைக்கலாம்? அவருடைய சீஷர்கள் எப்படி ஏசாயாவின் வேலைக்கு ஒப்பான வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்?
◻ நீங்கள் எப்படி ஏசாயாவைப் போன்ற ஆவியை வெளிக்காட்டலாம்?
[கேள்விகள்]
1, 2. ஒரு தம்பதி மகிழ்ச்சி கொள்வதற்கு என்ன விசேஷ காரணம் இருந்தது?
3. ஏசாயா காண்பித்ததற்கு ஒப்பான என்ன ஆவியை இன்று அநேகர் பிரதிபலித்திருக்கின்றனர்?
4, 5. (எ) ஏசாயா 6-ம் அதிகாரத்தில் பதிவு செய்திருக்கும் தரிசனத்தை பெற்றபோது என்ன நிலைமை இருந்தது? (பி) ஏசாயா இந்தக் காட்சியில் என்ன கண்டான்?
6. ஏசாயா பார்த்த காரியம் ஏன் அவனுக்கு பார்க்கக் கிடைத்த ஒரு சிலாக்கியமாக இருந்தது?
7. ஏசாயா எப்படிப் பிரதிபலித்தான்? நாமுங்கூட என் அப்படி உணர்ந்திருக்கக்கூடும்?
8. தேவ தூதரில் ஒருவன் என்ன சேவை செய்தான்? என்ன பலனுடன்?
9. ஏசாயாவின் செய்தியின் கருத்து என்ன?
10. (எ) மக்கள் குருடராகவும் செவிடராகவும் இருப்பதில் தவறு எங்கே இருந்தது? (பி) “எவ்வளவு காலத்திற்கு?” என்று ஏசாயா என்ன கருத்தில் கேட்டான்?
11 ஏசாயாவின் பிரசங்க வேலை எப்படி ஆறுதலளிப்பதாயிருந்தது?
12. இயேசுவை பெரிய ஏசாயா என்று அழைப்பதற்கு என்ன வேதப்பூர்வமான ஆதாரம் இருக்கிறது?
13. ஏசாயா 6-ம் அதிகாரத்தின் இன்னொரு நிறைவேற்றத்தை நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
14. இயேசுவின் சீஷர்கள் எப்படி ஏசாயாவைப்போன்ற வேலையை செய்வதாக இருந்தது?
15. ஏசாயாவின் காலத்திற்கு ஒப்பாக நம்முடைய நாளில் பொதுவாக என்ன பிரதிபலிப்பு இருந்து வந்திருக்கிறது? என்ன எதிர்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது?
16. “திரள் கூட்டத்தினர்” ஏசாயா செய்ததைப் போன்ற ஒரு வேலையில் பங்கு கொள்கின்றனர் என்று ஏன் சொல்லலாம்?
17. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்துக்கு ஒப்பாக நம்முடைய செய்தியல் என்ன அடங்கியிருக்கிறது?
18, 19. என்ன விசேஷ வழிகளில் அநேகர் “என்னை அனுப்பும்” என்று சொல்கின்றனர்?
20. ஏசாயா 6:8-ஐ மனதில் கொண்டவர்களாக, நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன?
[பக்கம் 17-ன் படம்]
ஏசாயா சுத்திகரிக்கப்பட்டு பிரசங்கிக்க அனுப்பப்பட்டான்
[பக்கம் 18-ன் படம்]
“இதோ, அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்,” என்று அநேகர் பிரதிபலித்திருக்கின்றனர்