அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
எத்தியோப்பிய அதிகாரி ஒருவருக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுக்கிறார்
தன் இரதத்தில் போகும்போது, எத்தியோப்பியர் ஒருவர் தன்னுடைய நேரத்தை ஞானமாக உபயோகித்துக்கொண்டிருந்தார். அவர் சப்தமாக வாசித்துக்கொண்டிருந்தார், இது முதல் நூற்றாண்டு பயணிகளிடையே சர்வசாதாரணமாக இருந்த ஒரு பழக்கமாகும். இந்தக் குறிப்பிட்ட நபர் “எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே” என்பவரின் அதிகாரத்தின் கீழிருந்தார்.a “அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும்” அதிகாரியாக இருந்தார்—சுருங்கக்கூறின்—அவர் ஒரு நிதி அமைச்சராக இருந்தார். அறிவை பெறுவதற்காக இந்த அதிகாரி கடவுளுடைய வார்த்தையிலிருந்து படித்துக்கொண்டிருந்தார்.—அப்போஸ்தலர் 8:27, 28.
அருகிலேயே சுவிசேஷகனாகிய பிலிப்பு இருந்தார். அவரை ஒரு தேவதூதர் இந்த இடத்திற்கு வழிநடத்தினார், இப்போது அவருக்குச் சொல்லப்பட்டதாவது: “நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள்.” (அப்போஸ்தலர் 8:26, 29) ‘இந்த மனிதர் யார்? அவர் என்ன வாசித்துக்கொண்டிருக்கிறார்? நான் ஏன் அவரிடத்திற்கு வழிநடத்தப்பட்டேன்?’ போன்ற கேள்விகளைத் தனக்குத்தானே பிலிப்பு கேட்டுக்கொண்டதை நாம் கற்பனைசெய்து பார்க்கலாம்.
இரதத்தின் கூடவே பிலிப்பு ஓடிக்கொண்டிருக்கையில், அந்த எத்தியோப்பியர் இந்த வார்த்தைகளை வாசித்ததைக் கேட்டார்: ‘அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்?’—அப்போஸ்தலர் 8:32, 33.
அந்தப் பகுதியை பிலிப்பு உடனே தெரிந்துகொண்டார். அது ஏசாயா எழுதியதன் பாகமாக இருந்தது. (ஏசாயா 53:7, 8) அந்த எத்தியோப்பியர் என்ன வாசித்துக்கொண்டிருந்தாரோ அதனால் குழப்பமடைந்தார். ‘நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?’ என்று கேட்பதன் மூலம் பிலிப்பு உரையாடலை ஆரம்பித்தார். அந்த எத்தியோப்பியர் பதிலளித்தார்: ‘ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படி தெரியும்?’ அதன் பின்பு பிலிப்புவை தன்னுடைய இரதத்திலே தன்னுடன் உட்காரும்படி வேண்டிக்கொண்டார்.—அப்போஸ்தலர் 8:30, 31.
“நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன?”
அந்த எத்தியோப்பியர் பிலிப்புவிடம் கேட்டார், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ?” (அப்போஸ்தலர் 8:34) அந்த எத்தியோப்பியர் அடைந்த குழப்பம் ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல, ஏனென்றால் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் “ஆடு,” அல்லது ‘தாசன்’ என்பதன் அடையாளத்தைக் காணுதல் நீண்ட காலமாகவே ஒரு புதிராக இருந்துவந்தது. (ஏசாயா 53:11) பிலிப்பு “இயேசுவைப் பற்றிய நற்செய்தியை” அந்த எத்தியோப்பியருக்கு அறிவிக்கையில், இது எவ்வளவாய் தெள்ளத்தெளிவாகியிருக்கும்! சற்று நேரத்திற்குப்பின் அந்த எத்தியோப்பியர் சொன்னார்: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன?” ஆகவே பிலிப்பும் அவ்விடத்திலேயே அத்தருணத்திலேயே அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.—அப்போஸ்தலர் 8:35-38, NW.
இது ஓர் அவசர செயலா? இல்லவே இல்லை! அந்த எத்தியோப்பியர் யூதமதத்திற்கு மாறிய ஒருவராக இருந்தார்.b ஆகவே மேசியாவைப்பற்றி தீர்க்கதரிசனங்கள் உட்பட, வேதவசனங்களின் அறிவுடன் யெகோவாவின் ஒரு வணக்கத்தாராய் அவர் ஏற்கெனவே இருந்தார். இருப்பினும் அவரது அறிவு பூரணமடையவில்லை. இப்போது இயேசு கிறிஸ்துவினுடைய பங்கைப்பற்றிய முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொண்டார், அந்த எத்தியோப்பியர் தன்னிடத்திலிருந்து கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டார், அதற்கு இசைய நடக்கவும் தயாரானார். ஞானஸ்நானம் மிகப் பொருத்தமாகவே இருந்தது.—மத்தேயு 28:18-20; 1 பேதுரு 3:21.
அதற்குப்பிறகு, “கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார்.” அவர் மற்றொரு நியமிப்புக்குச் சென்றுவிட்டார். அந்த எத்தியோப்பியர் ‘சந்தோஷத்தோடே தன் வழியே போனார்.’—அப்போஸ்தலர் 8:39, 40.
நமக்குப் படிப்பினை
நேர்மை இருதயமுள்ள தனி நபர்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்யவேண்டிய கடமையை யெகோவாவின் தற்கால ஊழியர்களாகிய நாம் கொண்டிருக்கிறோம். பயணம் செய்கையில் அல்லது தற்செயலான மற்ற சந்தர்ப்பங்களில் மற்றவர்களுடன் நற்செய்தியை அளிப்பதில் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் பலனாக, ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் யெகோவாவுக்கான தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை ஞானஸ்நானம் பெறுவதன்மூலம் அடையாளப்படுத்துகிறார்கள்.
நிச்சயமாகவே, புதியவர்களை ஞானஸ்நானத்திற்கு அவசரப்படுத்தக்கூடாது. முதலாவதாக அவர்கள், யெகோவா தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவை பெறவேண்டும். (யோவான் 17:3) அதன்பிறகு, கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய மாறுவதற்காக அவர்கள் மனந்திரும்பி, தவறான நடத்தையைக் கைவிட்டு, அதிலிருந்து விடுபட வேண்டும். (அப்போஸ்தலர் 3:20) இதற்கு நேரமெடுக்கும், விசேஷமாக ஒருவேளை தவறான சிந்தனையும் நடத்தையும் ஆழமாக வேரூன்றி இருந்தால் நேரமெடுக்கும். கிறிஸ்தவ சீஷராவதில் உட்பட்டிருக்கும் தியாகங்களையும், யெகோவா தேவனுடன் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஓர் உறவுக்குள் நுழைவதனால் வரக்கூடிய ஆசீர்வாதங்களையும் புதியவர்கள் கருத்தோடு சிந்திக்க வேண்டும். (ஒப்பிடுக: லூக்கா 9:23; 14:25-33.) கடவுள் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற உபயோகித்துக்கொண்டிருக்கும் அமைப்பினிடமாக அத்தகைய புதியவர்களை யெகோவாவின் சாட்சிகளாக இருப்போர் உற்சாகத்துடன் வழிநடத்துகிறார்கள். (மத்தேயு 24:45-47) இவர்களிடத்திலிருந்து கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதைப்பற்றி கற்றுக்கொள்கையிலும் அவற்றிற்கு இசைவாக மாற்றங்களைச் செய்கையிலும் அந்த எத்தியோப்பியரைப் போலவே இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a “கந்தாகே” என்பது ஒரு பெயர் அல்ல, ஆனால் வழிவழியாக வரும் எத்தியோப்பிய ராஜஸ்திரீகளுக்கு இடப்பட்ட ஒரு பட்டப்பெயர் (“பார்வோன்” மற்றும் “இராயன்” போன்றே ஒரு பட்டப்பெயர்) ஆகும்.
b மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றி நடக்க தெரிவுசெய்த யூதர் அல்லாதவர்கள் யூத மதமாறியவர்களாவர்.—லேவியராகமம் 24:22.
[பக்கம் 8-ன் பெட்டி]
அண்ணகன் என்று அழைக்கப்படுவதேன்?
அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்திலுள்ள பதிவு முழுவதிலும், அந்த எத்தியோப்பியர் “அண்ணகன்” என்பதாகச் சில மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடப்படுகிறார். இருப்பினும், மோசேயின் நியாயப்பிரமாணம் அலியாக இருக்கும் ஒரு ஆடவனை சபையில் அனுமதிக்காததால், அந்த மனிதர் சொல்லர்த்தமாகவே ஓர் அலியாக நிச்சயம் இல்லை. (உபாகமம் 23:1) “அண்ணகன்” என்பதற்கான கிரேக்க வார்த்தை உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு நபரைக் குறிப்பிடலாம். இவ்வாறாக, அந்த எத்தியோப்பியர் எத்தியோப்பிய ராஜஸ்திரீயின் கீழே இருந்த ஓர் அதிகாரியாக இருந்தார்.