வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அனைவரும் நன்கு அறிந்த மேசியானிய தீர்க்கதரிசனம் ஒன்று ஏசாயா 53-ம் அதிகாரத்தில் உள்ளது. வசனம் 10 வாசிக்கிறதாவது: “யெகோவாவோ அவரை நொறுக்குவதில் ஆனந்தப்பட்டார்; அவரை பாடுகளுக்குட்படுத்தினார்.” (NW) இது எதை அர்த்தப்படுத்துகிறது?
ஏசாயா 53:10-ஐ குறித்து இப்படி ஒரு கேள்வி எழும்புவது நியாயமானதே. இரக்கமும் கரிசனையுமே உருவான நம் கடவுள் ஒருவரை நொறுக்குவதிலோ அல்லது பாடுபடுத்துவதிலோ ஆனந்தப்படமாட்டார். இது உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. அப்பாவிகளை சித்ரவதை செய்வதில் கடவுள் சந்தோஷப்படுகிறவர் அல்ல என்ற நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது. (உபாகமம் 32:4; எரேமியா 7:30, 31) ஆனால், பல நூற்றாண்டுகளாக யெகோவா துயரங்களை அனுமதித்திருக்கிறார். இது அவருடைய ஞானத்திற்கும் அன்பிற்கும் எந்தவிதத்திலும் முரண்பாடாக இல்லை. ஏனென்றால், அதற்கான தகுந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. தம் அருமை குமாரன் இயேசு பட்ட பாடுகளுக்கெல்லாம் காரணம் அவரல்ல. அப்படியானால், இந்த வசனத்தின் அர்த்தம்தான் என்ன?
அந்த வசனம் முழுவதையுமே ஆராய்ந்து பார்த்தால், அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அந்த வசனத்தில் “ஆனந்தம்” என்ற பதம் இருமுறை வருவதைக் கவனியுங்கள். ஏசாயா 53:10 (NW) வாசிக்கிறதாவது: “யெகோவாவோ அவரை நொறுக்குவதில் ஆனந்தப்பட்டார்; அவரை பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய உயிரைக் குற்றநிவாரணபலியாக நீர் கொடுத்ததால், அவர் தம் சந்ததியைக் கண்டு, நீடித்த நாள் வாழ்வார்; அவரால் யெகோவாவின் ஆனந்தம் நிறைவேறும்.”
அந்த வசனத்தின் கடைசியிலுள்ள “யெகோவாவின் ஆனந்தம்” என்ற பதம் சுட்டிக்காட்டுவது என்ன? பைபிளின் முக்கியப் பொருளாகிய, ராஜ்யத்தின் மூலமாக கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதையே இந்தப் பதம் சுட்டிக்காட்டுகிறது. அவர் தம் சர்வலோக ஆட்சியுரிமையை நியாயநிரூபணம் செய்வதையும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை பாவத்திலிருந்து விடுவிப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. (1 நாளாகமம் 29:11; சங்கீதம் 83:17; அப்போஸ்தலர் 4:24; எபிரெயர் 2:14, 15; 1 யோவான் 3:8) இவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், கடவுளுடைய குமாரன் மனிதனாக பூமிக்கு வந்து, தம் ஜீவனை பலியாக தர வேண்டியது மிக முக்கியம். இதை நிறைவேற்ற வேண்டுமெனில், இயேசு பாடுபட வேண்டியதும் அவசியம். இது நாம் அறிந்ததே. ‘அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’ என பைபிள் குறிப்பிடுகிறது. எனவே, இயேசு தாம் பட்ட பாடுகளிலிருந்து நிச்சயமாகவே பலன் அடைந்தார்.—எபிரெயர் 5:7-9.
தாம் மேற்கொள்ள வேண்டிய இந்த உயர்ந்த பணி தமக்கு வேதனையைத் தரும் என்பதை இயேசு ஏற்கெனவே அறிந்திருந்தார். யோவான் 12:23, 24-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளே இதற்கு அத்தாட்சி. “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.” மரணம் வரையாக தம்முடைய உத்தமத்தைக் காக்க வேண்டுமென இயேசு அறிந்திருந்தார். தொடர்ந்து வசனம் 27, 28 சொல்கிறதாவது: “இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.”—யோவான் 12:27, 28; மத்தேயு 26:38, 39.
இந்த சூழமைவில்தான் ஏசாயா 53:10-ஐ நாம் புரிந்துகொள்ள முடியும். தம் மகன், பூமிக்கு வந்து நொறுக்கப்பட்டு வேதனையை அனுபவித்தாக வேண்டும் என்பதை யெகோவா ஏற்கெனவே அறிந்திருந்தார். இருந்தாலும், இந்தப் பாடுகளினால் கிடைக்கப் போகிற மகத்தான நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அறிந்து, இயேசு அனுபவிக்க இருந்த கஷ்டங்களில் யெகோவா ஆனந்தப்பட்டார். இந்த அர்த்தத்தில்தான், இயேசு அல்லது மேசியா ‘நொறுக்கப்படுவதில் யெகோவா ஆனந்தப்பட்டார்.’ தாம் சாதிக்கப் போவதில், தாம் சாதித்ததில் இயேசுவும் ஆனந்தப்பட்டார். ஏசாயா 53:10-ம் வசனத்தின் முடிவில் சொல்கிறபடியே, “அவரால் யெகோவாவின் ஆனந்தம் நிறைவேறும்” என்பது முழுக்க முழுக்க சரியே.