யெகோவாவின் ஊழியக்காரன்—‘நம் மீறுதல்களுக்காக உருவக் குத்தப்பட்டார்’
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு [‘உருவக் குத்தப்பட்டு,’ NW] நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; . . . அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” —ஏசா. 53:5.
1. கிறிஸ்துவின் நினைவுநாளை அனுசரிக்கும்போது எதை நாம் மனதில் வைக்க வேண்டும், இதற்கு எந்தத் தீர்க்கதரிசனம் நமக்குத் துணைபுரியும்?
கிறிஸ்துவின் நினைவுநாளை நாம் அனுசரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அவரது மரணத்தை நினைவுகூருவதற்காக அனுசரிக்கிறோம்; இன்னொன்று, அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் சாதித்த அனைத்தையும் நம் மனக்கண் முன் நிறுத்துவதற்காக அனுசரிக்கிறோம். யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியென நிரூபிக்கப்படுவதை, அவருடைய பெயர் பரிசுத்தப்படுவதை, அவருடைய நோக்கம் நிறைவேற்றப்படுவதை அதேசமயத்தில் மனிதகுலம் மீட்கப்படுவதை கிறிஸ்துவின் நினைவுநாள் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. ஏசாயா 53:3-12-லுள்ள தீர்க்கதரிசன பதிவைப் போல் வேறெந்த பைபிள் பதிவும் கிறிஸ்துவின் பலியையும் அதனால் விளைந்த நன்மையையும் அத்தனை அருமையாக விவரிப்பதில்லை. ஊழியக்காரனான கிறிஸ்து பட்ட பாடுகளைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியும், அதனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் ‘வேறே ஆடுகளுக்கும்’ கிடைக்கப் போகிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் ஏசாயா முன்னுரைத்தார்.—யோவா. 10:16.
2. ஏசாயா தீர்க்கதரிசனம் எதற்கு சான்றளிக்கிறது, அது நம்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
2 இயேசு பூமியில் பிறப்பதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா மூலம் யெகோவா ஒரு தீர்க்கதரிசனம் உரைத்தார்; தாம் தெரிந்துகொண்ட ஊழியக்காரன் சாவே வந்தாலும் உண்மையுடன் இருப்பார் என்று அந்தத் தீர்க்கதரிசனத்தில் அறிவித்தார். தம்முடைய மகன் தமக்கு உத்தமமாய் இருப்பார் என்பதில் யெகோவாவுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதற்கு இத்தீர்க்கதரிசனமே ஒரு சான்று. இத்தீர்க்கதரிசனத்தை ஆராய்கையில், நம் உள்ளத்தில் நன்றியுணர்வு பெருக்கெடுக்கும், நம் விசுவாசமும் பலப்படும்.
“அசட்டை பண்ணப்பட்டார்,” ‘மதிக்கப்படவுமில்லை’
3. யூதர்கள் ஏன் இயேசுவை வரவேற்றிருக்க வேண்டும், அவர்களோ அவரை எப்படி நடத்தினார்கள்?
3 ஏசாயா 53:3-ஐ வாசியுங்கள். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட இயேசு தம் தந்தை அருகே வேலை செய்யும் சந்தோஷத்தைத் துறந்து, பாவம், மரணம் எனும் கோரப்பிடியிலிருந்து மனிதரை மீட்க தம் உயிரையே பலியாகக் கொடுக்க பூமிக்கு வந்தது எப்பேர்ப்பட்ட தியாகம்! (பிலி. 2:5–8) மனிதர்களுக்கு நிஜமான பாவமன்னிப்பு, மோசேயின் சட்டத்தின்படி செலுத்தப்பட்ட மிருக பலிகளால் அல்ல, இயேசுவின் தியாக பலியால் மட்டுமே கிடைக்கவிருந்தது. (எபி. 10:1–4) அப்படியிருக்க, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை எதிர்நோக்கி காத்திருந்த அந்த யூதர்களாவது அவரை வரவேற்று கௌரவித்திருக்க வேண்டுமல்லவா? (யோவா. 6:14) ஆனால், ஏசாயா முன்னுரைத்தபடி, கிறிஸ்துவை யூதர்கள் ‘அசட்டை பண்ணினார்கள்,’ ‘அவரை எண்ணாமற்போனார்கள் [அதாவது, மதிக்கவில்லை].’ இதைக் குறித்து அப்போஸ்தலன் யோவானும் எழுதினார்: ‘அவர் தம் [சொந்த இடத்துக்கு] வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.’ (யோவா. 1:11) ‘நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்தீர்கள்’ என்று அப்போஸ்தலன் பேதுரு யூதர்களிடம் சொன்னார்.—அப். 3:13, 14.
4. இயேசு எந்த விதத்தில் ‘நோயுற்று நலிந்தார்’?
4 இயேசு ‘நோயுற்று நலிவார்’ என்றும் ஏசாயா முன்னுரைத்தார். ஊழியம் செய்தபோது, சில சமயங்களில் இயேசு களைத்துப்போனார் என்பது உண்மைதான், ஆனால் அவர் வியாதியுற்றதாக எங்கேயும் சொல்லப்படவில்லை. (யோவா. 4:6) என்றாலும், தாம் பிரசங்கித்த ஆட்களின் வியாதிகளை அவர் தாங்கிக்கொண்டார். அவர்களுக்காக மனமிரங்கி அநேகரைச் சுகப்படுத்தினார். (மாற். 1:32–34) இவ்வாறு, பின்வரும் தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றினார்: “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்.”—ஏசா. 53:4அ, பொது மொழிபெயர்ப்பு; மத். 8:16, 17.
‘தேவனால் அடிபட்டவர்’ போல
5. இயேசுவின் மரணத்தை பெரும்பாலான யூதர்கள் எப்படிக் கருதினார்கள், இது அவருடைய மனதை எந்தளவு நோகடித்தது?
5 ஏசாயா 53:4-ன் பிற்பகுதியை வாசியுங்கள். இயேசு ஏன் பாடுபட்டு மரித்தார் என்பதை அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்ளவில்லை. அருவருப்பான வியாதியைக் கொடுத்து கடவுள் அவரை தண்டித்ததைப் போல் அவர்கள் நினைத்தார்கள். (மத். 27:38-44) தெய்வநிந்தனை செய்ததாக யூதர்கள் அவர்மீது குற்றம்சாட்டினார்கள். (மாற். 14:61–64; யோவா. 10:33) ஆனால், அவர்கள் நினைத்ததைப் போல் இயேசு ஒரு பாவியுமில்லை, கடவுளை நிந்தித்துப் பேசவுமில்லை. ஆனால், கடவுளைப் பழித்துப் பேசினவன் என்ற குற்றச்சாட்டோடு சாகவேண்டுமே என்பதை நினைத்தபோது தம் தந்தைமீது மிகுந்த அன்பு வைத்திருந்த யெகோவாவின் ஊழியக்காரனுடைய மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும். இருந்தாலும், யெகோவாவின் சித்தத்திற்கு இணங்கிச் செல்ல அவர் மனமுள்ளவராய் இருந்தார்.—மத். 26:39.
6, 7. எந்த அர்த்தத்தில் யெகோவா தம் உண்மையுள்ள ஊழியக்காரனை ‘நொறுக்கினார்,’ இது ஏன் அவருக்கு ‘மகிழ்ச்சி’ அளித்தது?
6 கிறிஸ்து, ‘தேவனால் அடிபட்டவர்’ என எல்லாரும் நினைத்ததாக ஏசாயா சொல்வதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால், ‘யெகோவாவே அவரை நொறுக்குவதில் மகிழ்ச்சி கண்டதாக அவர் சொல்லும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். (ஏசா. 53:10, NW) ‘இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவர், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவர்’ என்றெல்லாம் இயேசுவைக் குறித்து யெகோவாவே சொல்லியிருப்பதால், ‘அவரை நொறுக்குவது அவருக்கு எப்படி மகிழ்ச்சியாக’ இருந்திருக்க முடியும்? (ஏசா. 42:1) அப்படியானால், எந்த அர்த்தத்தில் இது யெகோவாவுக்கு மகிழ்ச்சி அளித்தது?
7 ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த வரிகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒரு விஷயத்தை நாம் நினைவில்கொள்ள வேண்டும். அதாவது, யெகோவாவின் உன்னத அரசுரிமைக்கு எதிராக சாத்தான் சவால்விட்ட சமயத்தில், பரலோகத்திலும் பூமியிலும் உள்ள கடவுளுடைய ஊழியர்களின் உத்தமத்தன்மையைக் குறித்து அவன் கேள்வி எழுப்பினான். (யோபு 1:9–11; 2:3–5) மரணம்வரை இயேசு உண்மையுடன் இருந்து சாத்தான் விட்ட சவாலுக்குச் சரியான பதிலடி கொடுத்தார். கிறிஸ்துவின் எதிரிகள் அவரைக் கொன்றுபோட யெகோவா அனுமதித்தபோதிலும், தாம் தெரிந்துகொண்ட ஊழியக்காரன் கழுமரத்தில் அறையப்பட்டபோது யெகோவா நிச்சயம் துடிதுடித்துப் போயிருப்பார். எனினும், தம்முடைய மகனின் மாசில்லாத உண்மைத்தன்மையைக் கண்டபோது யெகோவாவின் உள்ளம் சந்தோஷத்தில் பூரித்திருக்கும். (நீதி. 27:11) அதோடு, மனந்திரும்பும் மனிதர்களுக்கு தம் மகனின் மரணம் எப்பேர்ப்பட்ட நன்மைகளை அளிக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது யெகோவாவின் மனம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்திருக்கும்.—லூக். 15:7.
‘நம் மீறுதல்களுக்காக உருவக் குத்தப்பட்டார்’
8, 9. (அ) இயேசு எவ்வாறு ‘நம் மீறுதல்களுக்காக உருவக் குத்தப்பட்டார்’? (ஆ) இதை பேதுரு எப்படி உறுதிப்படுத்தினார்?
8 ஏசாயா 53:6-ஐ வாசியுங்கள். வழிதப்பி திரியும் ஆடுகளைப் போல, பாவமுள்ள மனிதர்கள் ஆதாமிடமிருந்து மரபு வழியாக பெற்ற வியாதியிலிருந்தும் மரணத்திலிருந்தும் விமோசனம் தேடி அலைந்திருக்கிறார்கள். (1 பே. 2:25) ஆதாமின் சந்ததியில் வந்த அனைவரும் பாவிகளாக இருப்பதால் அவன் இழந்ததை யாருமே மீட்டுத் தர முடியாது. (சங். 49:7) இருந்தாலும், யெகோவா நம்மிடம் வைத்திருக்கும் அளவற்ற அன்பின் காரணமாக தமது நேச மகன்மீது, தாம் தெரிந்துகொண்ட ஊழியக்காரன்மீது, “நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் . . . விழப்பண்ணினார்.” ‘நம்முடைய மீறுதல்களுக்காக காயப்படுவதற்கும் [‘உருவக் குத்தப்படுவதற்கும்,’ NW] . . . நம்முடைய அக்கிரமங்களுக்காக நொறுக்கப்படுவதற்கும்’ கிறிஸ்து தம்மையே அர்ப்பணித்து, கழுமரத்தில் நம் பாவங்களைச் சுமந்து நமக்காக உயிர் விட்டார்.
9 அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்.” பின்பு ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காட்டி, “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” என்றும் பேதுரு எழுதினார். (1 பே. 2:21, 24; ஏசா. 53:5) பாவிகள் மறுபடியும் கடவுளோடு சமரசமாவதற்கு இது வழிவகுத்தது. இதனால்தான், ‘கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டு’ மரித்தார் என்று பேதுரு தொடர்ந்து சொன்னார்.—1 பே. 3:18.
“அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல”
10. (அ) யோவான்ஸ்நானன் இயேசுவை என்ன சொல்லி வர்ணித்தார்? (ஆ) யோவான் சொன்ன வார்த்தைகள் ஏன் பொருத்தமாய் இருந்தன?
10 ஏசாயா 53:7, 8-ஐ வாசியுங்கள். இயேசு தன்னிடம் வருவதை யோவான்ஸ்நானன் கண்டு, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றார். (யோவா. 1:29) இயேசுவை ஆட்டுக்குட்டி என்று யோவான் சொன்னபோது “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல” இருந்தார் என்று ஏசாயா சொன்னது அவர் மனதில் இருந்திருக்கலாம். (ஏசா. 53:7) ‘அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றினார்’ என்று ஏசாயா முன்னுரைத்தார். (ஏசா. 53:12) ஆர்வத்துக்குரிய விஷயம் என்னவென்றால், இயேசு தம்முடைய நினைவுநாள் அனுசரிப்பை ஆரம்பித்து வைத்த இரவன்று ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்து உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களுக்கு கொடுத்தபோது, ‘இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாய் இருக்கிறது’ என்றார்.—மத். 26:28.
11, 12. (அ) ஈசாக்கு தன்னையே பலியாகச் செலுத்த முன்வந்தது எப்படி கிறிஸ்துவின் பலிக்குப் படமாக இருக்கிறது? (ஆ) நினைவுநாளை அனுசரிக்கையில் பெரிய ஆபிரகாமாகிய யெகோவாவைப் பற்றி நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
11 முற்பிதாவான ஈசாக்கைப் போல, யெகோவாவின் சித்தம் என்ற பலிபீடத்தின் மீது இயேசுவும் தம்மை பலியாகச் செலுத்துவதற்கு முன்வந்தார். (ஆதி. 22:1, 2, 9–13; எபி. 10:5–10) தன்னையே பலியாய் கொடுப்பதற்கு ஈசாக்கு மனப்பூர்வமாய் சம்மதித்தபோதிலும், ஆபிரகாம்தான் அவரைப் பலி செலுத்துவதற்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் செய்தார். (எபி. 11:17) அதேபோல், இயேசுவும் சாவை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டபோதிலும், மீட்புவிலை செலுத்தப்படுவதற்கு யெகோவாதான் மூலகாரணராக இருந்தார். இப்படி தமது மகனையே பலியாகக் கொடுத்ததன் மூலம் மனிதகுலத்தின் மீது தாம் வைத்திருக்கும் ஆழமான அன்பை கடவுள் வெளிக்காட்டினார்.
12 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று இயேசுவே குறிப்பிட்டார். (யோவா. 3:16) “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 5:8) நினைவுநாளை அனுசரித்து கிறிஸ்துவை கௌரவிக்கையில், அந்தப் பலியை ஏற்பாடு செய்தது பெரிய ஆபிரகாமாகிய யெகோவாவே என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவருக்கு மகிமை சேர்ப்பதற்காகவே நினைவுநாளை அனுசரிக்கிறோம்.
அந்த ஊழியக்காரன் “அநேகரை நீதிமான்களாக்குவார்”
13, 14. யெகோவாவின் ஊழியக்காரர் எவ்வாறு ‘அநேகரை நீதிமான்களாக்கினார்’?
13 ஏசாயா 53:11, 12-ஐ வாசியுங்கள். தாம் தெரிந்துகொண்ட ஊழியக்காரனைக் குறித்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “என் தாசனாகிய நீதிபரர் . . . அநேகரை நீதிமான்களாக்குவார்.” எந்த விதத்தில்? 12-ஆம் வசனத்தின் மத்திப பகுதி பதிலைக் கண்டுபிடிக்க நமக்கு உதவுகிறது. ‘அவர் [ஊழியக்காரன்] . . . அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதாக [‘பரிந்து பேசினதாக,’ பொ.மொ.]’ அது சொல்கிறது. ஆதாமிலிருந்து பிறந்த எல்லாருமே பாவிகள், அதாவது ‘அக்கிரமக்காரர்கள்.’ அதனால், ‘பாவத்தின் சம்பளமாக’ மரணத்தை பெறுகிறார்கள். (ரோ. 5:12; 6:23) இப்போது யெகோவாவுக்கும் பாவமுள்ள மனிதனுக்கும் இடையே சமரசம் உண்டாக வேண்டும். அதற்காக பாவமுள்ள மனிதர்களின் சார்பாக இயேசு எப்படி ‘பரிந்து பேசினார்’ என்பதை ஏசாயா 53-ஆம் அதிகாரம் மிக அழகாகச் சித்தரிக்கிறது: “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”—ஏசா. 53:5.
14 நம்முடைய பாவங்களையெல்லாம் சுமந்து நமக்காக தம் உயிரையே கொடுத்ததன் மூலம் கிறிஸ்து ‘அநேகரை நீதிமான்களாக்கினார்.’ அதைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “சகல பரிபூரணமும் அவருக்குள்ளே [கிறிஸ்துவுக்குள்ளே] வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் [அதாவது, சமரசமாக்கிக் கொள்ளவும்] அவருக்குப் பிரியமாயிற்று.”—கொலோ. 1:19, 20.
15. (அ) “பரலோகத்திலுள்ளவைகள்” என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்? (ஆ) யார் மட்டுமே நினைவுநாள் அனுசரிப்பு சின்னங்களில் பங்குகொள்ள தகுதியுள்ளவர்கள், ஏன்?
15 “பரலோகத்திலுள்ளவைகள்” யாரைக் குறிக்கிறது? பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதற்காக அழைக்கப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. இயேசு சிந்திய இரத்தத்தின் மூலம் இவர்கள் யெகோவாவோடு சமரசமாகியிருக்கிறார்கள். ‘பரம அழைப்புக்குப் பங்குள்ள’ இந்தக் கிறிஸ்தவர்கள் “வாழ்வு பெறும்படி நீதிமான்களாக” அறிவிக்கப்படுகிறார்கள். (எபி. 3:1; ரோ. 5:1, 18, NW) அவர்களைத் தம்முடைய மகன்களாக யெகோவா ஏற்றுக்கொள்கிறார். இவர்கள் ‘கிறிஸ்துவின் சக வாரிசுகள்’ என கடவுளுடைய சக்தி அவர்களிடம் சாட்சி கொடுக்கிறது. இவர்கள் பரலோக ராஜ்யத்தில் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருப்பதற்காக அழைக்கப்படுகிறார்கள். (ரோ. 8:15–17, NW; வெளி. 5:9, 10) இவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலின், அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ பாகமாகி, ‘புது உடன்படிக்கைக்குள்’ வருகிறார்கள். (எரே. 31:31–34; கலா. 6:16) இப்போது புது உடன்படிக்கையின் அங்கத்தினர்களாக இருப்பதால், நினைவுநாள் அனுசரிப்பு சின்னங்களில் பங்குகொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள்; அந்தச் சின்னங்களில் ஒன்றுதான் சிவப்பு திராட்சை ரசம். அதைக் குறித்து இயேசு சொன்னபோது, “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” என்றார்.—லூக். 22:20.
16. “பூலோகத்திலுள்ளவைகள்” யாரைக் குறிக்கிறது, எந்த அர்த்தத்தில் இவர்கள் யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாகிறார்கள்?
16 “பூலோகத்திலுள்ளவைகள்” யாரைக் குறிக்கிறது? பூமியில் சதாகாலம் வாழும் நம்பிக்கையைப் பெற்ற கிறிஸ்துவின் வேறே ஆடுகளைக் குறிக்கிறது. யெகோவா தெரிந்துகொண்ட அந்த ஊழியக்காரன் இவர்களையும் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக்குகிறார். இவர்கள் கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து, ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்திருக்கிறார்கள்.’ அதனால் இவர்களை நீதிமான்கள் என யெகோவா அறிவிக்கிறார்; இவர்களை தம்முடைய மகன்களாக அல்ல நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார், ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்கும் மகத்தான எதிர்பார்ப்பையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (வெளி. 7:9, 10, 14; யாக். 2:23) வேறே ஆடுகளுக்குப் புது உடன்படிக்கையில் பங்கில்லை, ஆகவே பரலோகத்துக்குப் போகும் நம்பிக்கையில்லை. எனவே, நினைவுநாள் அனுசரிப்பு சின்னங்களில் இவர்கள் பங்குகொள்வதில்லை. மாறாக, பார்வையாளர்களாக இருந்து மரியாதைக்குரிய விதத்தில் அனுசரிக்கிறார்கள்.
யெகோவாவுக்கும் அவருக்குப் பிரியமான ஊழியக்காரனுக்குமே நமது நன்றி!
17. ஊழியக்காரனை மையமாய்க் கொண்ட ஏசாயா தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்தது, கிறிஸ்துவின் நினைவுநாளுக்காக நம் மனதை எவ்வாறு பக்குவப்படுத்தியிருக்கிறது?
17 யெகோவாவின் ஊழியக்காரனையே மையமாய்க் கொண்ட இந்த ஏசாயா தீர்க்கதரிசனங்களை இதுவரை நாம் ஆராய்ந்திருக்கிறோம்; கிறிஸ்துவின் நினைவுநாளுக்காக நம் மனதையும் இருதயத்தையும் நன்கு பக்குவப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அளித்திருக்கிறது. ‘விசுவாசத்தின் அதிபதியாக இருப்பவரும் விசுவாசத்தைப் பூரணமாக்குபவருமான இயேசு மீதே கண்களை ஒருமுகப்படுத்த’ துணைபுரிந்திருக்கிறது. (எபி. 12:2, NW) இந்தத் தீர்க்கதரிசனங்களிலிருந்து கடவுளுடைய மகன் கலகத்தனம் செய்பவரல்ல என்பதைக் கற்றிருக்கிறோம். சாத்தானைப் போல் அல்லாமல், யெகோவாவே உன்னத அரசதிகாரம் பெற்றவர் என்பதை இவர் உணர்ந்திருக்கிறார்; அதோடு, அவரால் கற்பிக்கப்படுவதை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறார். பூமியில் ஊழியம் செய்த காலத்தில், தம் பிரசங்கத்திற்கு செவிகொடுத்த மக்கள்மீது கருணை மழை பொழிந்திருக்கிறார். உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் அநேகரை குணப்படுத்தியிருக்கிறார். மேசியாவாகவும் ராஜாவாகவும் ‘பூமியில் நியாயத்தைப் நிலைநாட்டும்போது’ என்னவெல்லாம் செய்வார் என்பதற்கு இவையெல்லாம் அச்சாரமாக இருக்கின்றன. (ஏசா. 42:4) ‘புறதேசத்தாருக்கு ஒளியாக’ இருந்து ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில் இயேசு ஆர்வத்துடன் ஈடுபட்டார். பூகோளமெங்கும் நற்செய்தியை உற்சாகமாய் அறிவிப்பதற்கு அவர் காட்டிய ஆர்வத் தீ இன்று அவரைப் பின்பற்றுவோருடைய மனதில் ஜோதியாக சுடர்விட்டு எரிகிறது.—ஏசா. 42:6.
18. யெகோவா மீதும் அவருடைய உண்மையுள்ள ஊழியக்காரன் மீதும் ஏசாயா தீர்க்கதரிசனம் ஏன் நம் உள்ளத்தில் நன்றியுணர்வு பொங்கி வழியச் செய்கிறது?
18 தமது பாசத்துக்குரிய மகன் நமக்காக பாடுபட்டு மரிப்பதற்கு யெகோவா அவரை பூமிக்கு அனுப்பி வைத்தது மாபெரும் தியாகமல்லவா? இதைப் பற்றிய நம்முடைய அறிவை ஏசாயா தீர்க்கதரிசனம் விசாலமாக்கியிருக்கிறது. தம்முடைய மகன் பட்ட பாடுகளைப் பார்த்து யெகோவா மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக, மரணம்வரை இயேசு காட்டிய மாசில்லாத உண்மைத்தன்மையைக் கண்டுதான் மகிழ்ச்சியடைந்தார். யெகோவாவோடு சேர்ந்து நாமும் மகிழ்ச்சிகொள்ள வேண்டும்; ஆம், சாத்தானைப் பொய்யனாக்கவும், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தவும், அதன் மூலம் அவருடைய உன்னத அரசதிகாரமே சரியென நிரூபிக்கவும் இயேசு செய்த அனைத்தையும் நாம் உணர்ந்து மகிழ்ச்சிகொள்ள வேண்டும். அதோடு, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து நமக்காக உயிர் விட்டார். இந்த விதத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய சகோதரர்களான சிறுமந்தையினரும் வேறே ஆடுகளும் யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாவதற்கு வழி செய்தார். நினைவுநாள் அனுசரிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுகூடி வருகையில், யெகோவா மீதும் அவருடைய உண்மையுள்ள ஊழியக்காரன் மீதும் நம் உள்ளம் நன்றியுணர்வால் பொங்கி வழிவதாக!
சிந்திப்பதற்கு
• தமது மகன் ‘நொறுக்கப்பட்டபோது’ எந்த அர்த்தத்தில் யெகோவா ‘மகிழ்ச்சி கண்டார்’?
• இயேசு எவ்வாறு ‘நம் மீறுதல்களுக்காக உருவக் குத்தப்பட்டார்’?
• அந்த ஊழியக்காரன் எப்படி ‘அநேகரை நீதிமான்களாக்கினார்’?
• ஊழியக்காரனைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்தது கிறிஸ்துவின் நினைவுநாளுக்காக உங்கள் மனதை எவ்வாறு பக்குவப்படுத்தியிருக்கிறது?
[பக்கம் 26-ன் படம்]
“அவர் அசட்டை பண்ணப்பட்டார்,” ‘மதிக்கப்படவுமில்லை’
[பக்கம் 28-ன் படம்]
‘அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றினார்’
[பக்கம் 29-ன் படம்]
‘வேறே ஆடுகள்’ பார்வையாளர்களாக இருந்து நினைவுநாளை மரியாதைக்குரிய விதத்தில் அனுசரிக்கிறார்கள்