யெகோவா —போதிக்கும் ஒரு கடவுள்
“எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்.”—யோவான் 6:45.
1. இயேசு இப்போது கப்பர்நகூமில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
இயேசு கிறிஸ்து சமீபத்தில் அற்புதங்களைச் செய்திருந்தார், இப்போது கலிலேயா கடலருகே கப்பர்நகூமில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருப்பதாகக் காணப்படுகிறார். (யோவான் 6:1-21, 59) “நான் வானத்திலிருந்து வந்த அப்பம்,” என்று அவர் சொன்னபோது அநேகர் அவநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் இவ்வாறு முறுமுறுக்கின்றனர்: “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான்?” (யோவான் 6:38, 42) இயேசு அவர்களைக் கண்டித்து பின்வருமாறு அறிவிக்கிறார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.”—யோவான் 6:44.
2. உயிர்த்தெழுதலைப் பற்றிய இயேசுவின் வாக்கை நம்புவதற்கு என்ன அடிப்படை உள்ளது?
2 கடவுளுடைய ராஜ்யம் ஆட்சிசெய்கையில் கடைசிநாளில் உயிர்த்தெழுப்பப்படுவது—எப்படிப்பட்ட மகத்தான ஓர் வாக்கு! நாம் இந்த வாக்கை நம்பலாம், ஏனென்றால் இது தகப்பனாகிய யெகோவா தேவனால் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. (யோபு 14:13-15; ஏசாயா 26:19) இறந்தோர் உயிர்த்தெழுப்பப்படுவர் என்று கற்பிக்கும் யெகோவா உண்மையிலேயே “எல்லாரைக் காட்டிலும் மிகப்பெரிய போதகராயிருக்கிறார்.” (யோபு 36:22, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) தம் தகப்பனுடைய போதனைக்கு கவனத்தைச் செலுத்துபவராய், இயேசு அடுத்து சொல்கிறார்: “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே.”—யோவான் 6:45.
3. என்ன கேள்விகளை நாம் சிந்திப்போம்?
3 ஏசாயா தீர்க்கதரிசி யாரைக் குறித்து எழுதினாரோ அவர்கள் மத்தியில் இருப்பது நிச்சயமாகவே ஒரு சிலாக்கியமாக இருக்கும்: ‘உன் குமாரர் எல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்.’ (ஏசாயா 54:13, NW) நாம் அவரால் போதிக்கப்படுவோமா? அவருக்கு குமாரர்களைப் போலிருந்து அவருடைய போதனைகளை ஏற்றுக்கொண்டிருப்பது யார்? அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் யெகோவாவின் என்ன முக்கியமான போதனைகளை அறிந்து அதன் பேரில் செயல்பட வேண்டும்? கடந்த காலங்களில் யெகோவா எவ்வாறு போதித்தார், இன்றும் அவர் அதேவிதத்தில் போதிக்கிறாரா? இவை நாம் சிந்திக்கப்போகும் கேள்விகள்.
தந்தை, போதனையாளர், கணவர்
4. யெகோவாவின் போதனைகளை முதலாவதாகப் பெற்றுக்கொண்ட அவருடைய குமாரர்கள் யார்?
4 மனிதரை சிருஷ்டிப்பதற்கு முன்பு தம் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை சிருஷ்டித்தபோது, யெகோவா முதலாவது தந்தையும் போதனையாளருமாக ஆனார். இவர் “வார்த்தை” என்றழைக்கப்பட்டிருக்கிறார், ஏனென்றால் அவர் யெகோவாவின் சார்பாக பேசுவதில் பிரதானமானவராய் இருக்கிறார். (யோவான் 1:1, 14; 3:16) அந்த வார்த்தை “[தந்தை] அருகே கைதேர்ந்த வேலையாளாக” சேவித்தார், அவர் தம்முடைய தந்தையின் போதனையிலிருந்து நன்றாகக் கற்றுக்கொண்டார். (நீதிமொழிகள் 8:22, 30, NW) உண்மையில் அவர் ஏஜென்ட்டாக ஆனார், அவர் மூலமாய் தந்தை ஆவிக்குரிய “தேவ புத்திரர்” உட்பட மற்ற எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். கடவுளால் போதிக்கப்படுவதைக் குறித்து அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்! (யோபு 1:6; 2:1; 38:7; கொலோசெயர் 1:15-17) பின்பு முதல் மனிதனாகிய ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டான். அவனும்கூட ‘கடவுளுடைய குமாரனாக’ இருந்தான், யெகோவா அவனுக்குப் போதித்தார் என்று பைபிள் வெளிக்காட்டுகிறது.—லூக்கா 3:38; ஆதியாகமம் 2:7, 16, 17.
5. எந்த அருமையான சிலாக்கியத்தை ஆதாம் இழந்து போனான், இருப்பினும் யெகோவா யாருக்கு போதித்தார், ஏன்?
5 விசனகரமாக ஆதாம் வேண்டுமென்றே கீழ்ப்படியாததன் மூலம் கடவுளுடைய குமாரனாக தொடர்ந்து இருக்கும் சிலாக்கியத்தை இழந்துபோனான். ஆகையால் அவனுடைய சந்ததியார் வெறுமனே பிறப்பின் அடிப்படையில் கடவுளுடைய குமாரர்கள் என்ற உறவை உரிமைபாராட்டிக்கொள்ள முடியாது. இருந்தபோதிலும் வழிநடத்துதலுக்காக அவரை நோக்கியிருந்த அபூரண மனிதர்களுக்கு யெகோவா போதித்தார். உதாரணமாக, நோவா ‘தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்த ஒரு நீதிமானாக’ நிரூபித்தார். ஆகையால் யெகோவா நோவாவுக்கு போதித்தார். (ஆதியாகமம் 6:9, 13–ஆதியாகமம் 6:13 7:5) ஆபிரகாம் தன் கீழ்ப்படிதலின் மூலமாக ‘யெகோவாவின் நண்பன்’ என்று தன்னை நிரூபித்தார், ஆகையால் அவரும்கூட யெகோவாவால் போதிக்கப்பட்டார்.—யாக்கோபு 2:23, NW; ஆதியாகமம் 12:1-4; 15:1-8; 22:1, 2.
6. யெகோவா யாரைத் தம் ‘குமாரனாக’ கருதினார், அவர்களுக்கு எப்படிப்பட்ட போதனையாளராக அவர் இருந்தார்?
6 வெகு காலத்திற்குப் பிற்பாடு, மோசேயின் நாளின்போது யெகோவா இஸ்ரவேல் தேசத்தோடு ஒரு உடன்படிக்கை உறவுக்குள் பிரவேசித்தார். அதன் காரணமாக அந்தத் தேசம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக ஆனது, அவருடைய ‘குமாரனாக’ கருதப்பட்டது. கடவுள் “இஸ்ரவேல் என்னுடைய குமாரன்” என்று சொன்னார். (யாத்திராகமம் 4:22, 23; 19:3-6; உபாகமம் 14:1, 2) ஏசாயா தீர்க்கதரிசியால் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி அந்த உடன்படிக்கை உறவின் அடிப்படையில் இஸ்ரவேலர்கள் இவ்வாறு சொல்லக்கூடும்: “தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்.” (ஏசாயா 63:16) யெகோவா தம் தகப்பனுக்குரிய உத்தரவாதத்தை எடுத்துக்கொண்டு தம் பிள்ளைகளாகிய இஸ்ரவேலருக்கு அன்பாக போதித்தார். (சங்கீதம் 71:17; ஏசாயா 48:17, 18) உண்மையில், அவர்கள் உண்மையற்றவர்களாய் ஆனபோது, அவர் இரக்கத்தோடு அவர்களிடம் மன்றாடினார்: “சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்.”—எரேமியா 3:14.
7. இஸ்ரவேல் யெகோவாவோடு என்ன உறவைக் கொண்டிருந்தது?
7 இஸ்ரவேலோடு உடன்படிக்கை உறவுக்குள் வந்ததன் விளைவாக, அடையாள அர்த்தத்தில் அந்த தேசத்துக்கு கணவராகவும்கூட ஆனார், அத்தேசம் அடையாளப்பூர்வமாக அவருடைய மனைவியாக ஆனது. அவளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.” (ஏசாயா 54:5; எரேமியா 31:32) யெகோவா மதிப்புக்குரிய விதத்தில் கணவர் என்ற தம் பங்கை நிறைவேற்றியபோதிலும், இஸ்ரவேல் தேசம் ஒரு உண்மையற்ற மனைவியாக ஆனது. “ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்”தீர்கள் என்று யெகோவா சொன்னார். (எரேமியா 3:20) யெகோவா தம்முடைய உண்மையற்ற மனைவியின் குமாரர்களிடத்தில் தொடர்ந்து முறையிட்டுக்கொண்டே இருந்தார்; அவர் அவர்களுடைய ‘மகத்தான போதகராக’ தொடர்ந்து இருந்தார்.—ஏசாயா 30:20, NW; 2 நாளாகமம் 36:15.
8. இஸ்ரவேல் ஒரு தேசமாக யெகோவாவால் நிராகரிக்கப்பட்டபோதிலும், என்ன மாதிரிப்படிவத்துக்குரிய அடையாளப்பூர்வமான மனைவியை அவர் இன்னும் கொண்டிருக்கிறார்?
8 இஸ்ரவேல் அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை நிராகரித்து கொலை செய்தபோது, கடவுள் இறுதியில் அவளை நிராகரித்தார். ஆகையால் அந்த யூத தேசம் அதற்குப் பிறகு அவருக்கு அடையாளப்பூர்வமான மனைவியாக இல்லை, அவர் அவளுடைய சொற்கேளாத குமாரர்களின் தந்தையாகவும் போதனையாளராகவும்கூட இல்லை. (மத்தேயு 23:37, 38) இருப்பினும், இஸ்ரவேல் வெறும் ஒரு மாதிரியாக, ஒரு அடையாளப்பூர்வமான மனைவியாக மட்டுமே இருந்தது. அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 54:1-ஐ மேற்கோளாக எடுத்துக் காண்பித்தார், அது ‘பிள்ளைபெறாத மலடியைப்’ பற்றி பேசுகிறது, அவள் ‘நாயகரையுடைய ஸ்திரீயிலிருந்து,’ அதாவது இயற்கையான இஸ்ரவேல் தேசத்திலிருந்து வித்தியாசமானவளாயும் தனித்தன்மை வாய்ந்தவளாயும் இருக்கிறாள். அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘மலடியின்’ பிள்ளைகள் என்று பவுல் வெளிப்படுத்திக்காட்டுகிறார், அவர்களை அவர் ‘மேலான எருசலேம்’ என்று அழைக்கிறார். இந்த மாதிரிப்படிவத்துக்குரிய அடையாளப்பூர்வமான பெண், ஆவி சிருஷ்டிகள் அடங்கிய கடவுளுடைய பரலோக அமைப்பை அடக்கியதாய் உள்ளது.—கலாத்தியர் 4:26, 27.
9. (அ) ‘உன் குமாரர் எல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று கூறியபோது இயேசு யாரைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்? (ஆ) ஜனங்கள் எந்த அடிப்படையில் கடவுளின் ஆவிக்குரிய குமாரர்களாக ஆகின்றனர்?
9 இவ்வாறு கப்பர்நகூம் ஜெப ஆலயத்தில் இயேசு ‘உன் குமாரர் எல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை மேற்கோளாக எடுத்துக் கூறியபோது, கடவுளின் மனைவிபோன்ற பரலோக அமைப்பாகிய ‘மேலான எருசலேமின்’ ‘குமாரர்களாக‘ ஆகப்போகிறவர்களைக் குறித்து அவர் பேசிக்கொண்டிருந்தார். பரலோகத்திலிருந்து வந்த கடவுளின் பிரதிநிதியாகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், செவிகொடுத்துக் கொண்டிருந்த அந்த யூதர்கள் முன்பு மலடியாயிருந்த கடவுளுடைய பரலோக ஸ்திரீயின் பிள்ளைகளாக ஆகக்கூடும், ஆவிக்குரிய ‘தேவனுடைய இஸ்ரவேலாக’ ஒரு ‘பரிசுத்த ஜாதியாக’ ஆகின்றனர். (1 பேதுரு 2:9, 10; கலாத்தியர் 6:16) கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஆவதற்கு இயேசு ஏற்பாடு செய்திருந்த மகத்தான வாய்ப்பை விவரிப்பவராய் அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”—யோவான் 1:11, 12.
யெகோவாவின் முக்கியமான போதனைகள்
10. ஏதேனில் கலகத்தனம் நடந்தவுடனேயே, ‘வித்தைக்’ குறித்து யெகோவா என்ன கற்பித்தார், யார் இந்த வித்தாக நிரூபித்தார்?
10 யெகோவா ஒரு அன்பான தகப்பனாக தம்முடைய நோக்கங்களை தம் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துகிறார். இவ்வாறு ஒரு கலகக்கார தேவதூதன் முதல் மானிட ஜோடியை கீழ்ப்படியாமற்போகும்படி தூண்டியபோது, பூமியை பரதீஸாக ஆக்க வேண்டும் என்ற தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் குறித்து உடனடியாக தெரிவித்தார். அவர் ‘பழைய பாம்பாகிய’ பிசாசாகிய சாத்தானுக்கும் “ஸ்திரீக்கும்” இடையே பகை உண்டாக்கப் போவதாகக் கூறினார். பிறகு அவர் ஸ்திரீயின் “வித்து” சாத்தானை ‘தலையில்’ சாவுக்கேதுவாக நசுக்கும் என்று விளக்கினார். (ஆதியாகமம் 3:1-6, 15; வெளிப்படுத்துதல் 12:9; 20:9, 10) நாம் பார்த்தபடி, அந்த ஸ்திரீ—“மேலான எருசலேம்” என்று பின்னர் அடையாளம் காட்டப்பட்டது—அது ஆவி சிருஷ்டிகள் அடங்கிய கடவுளுடைய பரலோக அமைப்பு. ஆனால் அவளுடைய “வித்து” யார்? பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டவரும், இறுதியில் சாத்தானை அழிக்கப்போகிறவருமாகிய அவர் கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆவார்.—கலாத்தியர் 4:4; எபிரெயர் 2:14; 1 யோவான் 3:8.
11, 12. ‘வித்தைக்’ குறித்த தம்முடைய முக்கியமான போதனையை யெகோவா எவ்வாறு விரிவாக்கினார்?
11 யெகோவா ஆபிரகாமுக்கு வாக்களித்தபோது ‘வித்தைக்’ குறித்த இந்த முக்கியமான போதனையின் பேரில் விரிவாக எடுத்துரைத்தார்: “நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ணுவேன் . . . , உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:17, 18) இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து என்பதையும், ஆனால் மற்றவர்களும்கூட அந்த ‘வித்தின்’ பாகமாக ஆவார்கள் என்பதையும் விளக்குவதற்கு யெகோவா அப்போஸ்தலனாகிய பவுலை உபயோகித்தார். “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்,” என்று பவுல் எழுதினார்.—கலாத்தியர் 3:16, 29.
12 வித்தாகிய கிறிஸ்து யூதாவின் அரச வம்சாவழியிலிருந்து வருவார் என்பதையும் “ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்” என்பதையும்கூட யெகோவா வெளிப்படுத்திக் காண்பித்தார். (ஆதியாகமம் 49:10) யூதா கோத்திரத்து தாவீது ராஜாவைக் குறித்து யெகோவா இவ்வாறு வாக்களித்தார்: “என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன்.” (சங்கீதம் 89:3, 4, 29, 36) காபிரியேல் தூதன் இயேசுவின் பிறப்பை அறிவித்தபோது, அப்பிள்ளை கடவுளால் நியமிக்கப்பட்ட அரசர், தாவீதின் வித்து என்று அவர் விளக்கினார். “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். . . . அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.”—லூக்கா 1:32, 33; ஏசாயா 9:6, 7; தானியேல் 7:13, 14.
13. யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, அவருடைய போதனைக்கு நாம் எவ்வாறு செவிகொடுக்க வேண்டும்?
13 யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இந்த முக்கியமான போதனையை நாம் அறிந்திருக்க வேண்டும், அதன் பேரில் செயல்பட வேண்டும். இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார் என்பதையும் அவர் கடவுளின் நியமிக்கப்பட்ட ராஜா என்பதையும் நாம் நம்ப வேண்டும்—பூமியில் பரதீஸ் திரும்பவுமாக நிலைநாட்டப்படப்போவதை கண்காணிக்கப்போகும் ராஜரீக வித்து—அவர் இறந்தோரை உயிர்த்தெழுப்புவார். (லூக்கா 23:42, 43; யோவான் 18:33-37) இயேசு கப்பர்நகூமில் இறந்தோரை உயிர்த்தெழுப்பியதைப் பற்றி பேசியபோது, அவர் சத்தியத்தைப் பேசினார் என்பது எல்லா யூதர்களுக்கும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். ஏன், ஒருசில வாரங்களுக்கு முன்பு, ஜெப ஆலயத் தலைவனுடைய 12-வயது மகளை அங்கே ஒருவேளை கப்பர்நகூமிலேயே அவர் உயிர்த்தெழுப்பியிருந்தார்! (லூக்கா 8:49-56) இந்த ராஜ்யத்தைப் பற்றிய யெகோவாவின் நம்பிக்கை-தோற்றுவிக்கும் போதனையின் பேரில் நம்பிக்கை வைத்து அதற்கு இசைவாக செயல்பட நமக்கு நிச்சயமாகவே போதுமான காரணங்கள் இருக்கின்றன!
14, 15. (அ) யெகோவாவின் ராஜ்யம் இயேசுவுக்கு எவ்வளவு முக்கியமாய் இருக்கிறது? (ஆ) யெகோவாவின் ராஜ்யத்தைக் குறித்து நாம் எதைப் புரிந்துகொண்டு அதை விளக்கும் நிலையில் இருக்க வேண்டும்?
14 யெகோவாவின் ராஜ்யத்தைக் குறித்து போதிப்பதற்கு இயேசு தம் பூமிக்குரிய வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் அதை தம் ஊழியத்தின் முக்கிய பொருளாக ஆக்கினார், அதற்காக ஜெபிக்கும்படி அவர் தம் ஊழியர்களுக்கு கட்டளையும்கூட கொடுத்தார். (மத்தேயு 6:9, 10; லூக்கா 4:43) ‘ராஜ்யத்தின் புத்திரராக’ இருப்பதற்கு இயற்கையான யூதர்கள் வாய்ப்புடையவர்களாக இருந்தனர், ஆனால் விசுவாசம் குறைவுபட்டதன் காரணமாக பெரும்பாலானோர் அச்சிலாக்கியத்தை இழந்துபோயினர். (மத்தேயு 8:12; 21:43) ‘ராஜ்யத்தின் புத்திரராக’ ஆவதற்கான சிலாக்கியத்தை “சிறுமந்தை” மட்டுமே பெற்றுக்கொள்ளும் என்று இயேசு வெளிப்படுத்தினார். இந்தப் “புத்திரர்” அவருடைய பரலோக ராஜ்யத்தில் ‘கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரராக’ ஆகின்றனர்.—லூக்கா 12:32; மத்தேயு 13:38; ரோமர் 8:14-17; யாக்கோபு 2:5.
15 எத்தனை ராஜ்ய சுதந்தரவாளிகளை கிறிஸ்து பூமியின் மீது ஆட்சிசெய்வதற்கு தம்மோடு பரலோகத்துக்கு அழைத்துச் செல்வார்? பைபிளின்படி 1,44,000 பேர் மட்டுமே. (யோவான் 14:2, 3; 2 தீமோத்தேயு 2:12; வெளிப்படுத்துதல் 5:10; 14:1-3; 20:4) ஆனால் இயேசு தாம் ‘வேறே ஆடுகளைக்’ கொண்டிருப்பதாகக் கூறினார், அவர்கள் அந்த ராஜ்ய ஆட்சியின் பூமிக்குரிய பிரஜைகளாக இருப்பர். இவர்கள் பரிபூரண ஆரோக்கியத்தையும் சமாதானத்தையும் என்றென்றுமாக பரதீஸிய பூமியின் மீது அனுபவிப்பர். (யோவான் 10:16; சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4) ராஜ்யத்தைப் பற்றிய யெகோவாவின் போதனையை நாம் புரிந்துகொண்டு அதை விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
16. யெகோவாவின் எந்த முக்கியமான போதனையை நாம் கற்று நடைமுறையில் அப்பியாசிக்க வேண்டும்?
16 அப்போஸ்தலனாகிய பவுல் யெகோவாவின் மற்றொரு முக்கியமான போதனையை அடையாளம் காண்பித்தார். அவர் சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.” (1 தெசலோனிக்கேயர் 4:9) யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு நாம் அப்படிப்பட்ட அன்பை வெளிக்காட்ட வேண்டும். “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று பைபிள் சொல்கிறது, அன்பைக் காண்பிப்பதில் நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். (1 யோவான் 4:8; எபேசியர் 5:1, 2) விசனகரமாக, பெரும்பாலான ஜனங்கள் கடவுள் நமக்கு போதித்திருப்பது போல் தங்கள் உடன் மானிடர்களை நேசிப்பதற்கு கற்றுக்கொள்வதில் படுமோசமாக தோல்வியடைந்திருக்கின்றனர். நம்மைப் பற்றியென்ன? யெகோவாவின் இந்தப் போதனைக்கு நாம் பிரதிபலித்திருக்கிறோமா?
17. நாம் யாருடைய மனநிலையை பின்பற்ற வேண்டும்?
17 யெகோவாவின் எல்லா போதனைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவர்களாய் இருப்பது முக்கியம். பைபிள் சங்கீதக்காரர்களைப் போன்று நம்முடைய மனநிலை இருப்பதாக. அவர்கள் எழுதினார்கள்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்.” “உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும் . . . உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.” (சங்கீதம் 25:4, 5; 119:12, 66, 108) சங்கீதக்காரர்களுடையதைப் போன்றே உங்களுடைய உணர்ச்சிக் கருத்துக்களும் இருந்ததேயென்றால், யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய கூட்டத்தின் மத்தியில் நீங்கள் இருக்கலாம்.
போதிக்கப்பட்டிருக்கும் திரள்கூட்டத்தார்
18. நம்முடைய காலத்தில் என்ன நடக்கும் என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார்?
18 நம்முடைய காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; . . . திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்.” (ஏசாயா 2:2, 3; மீகா 4:2) யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கும் இந்த நபர்கள் யார்?
19. யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பவர்கள் மத்தியில் இன்று யாரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்?
19 கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சிசெய்யப் போகிறவர்கள் மட்டுமன்றி மற்றவர்களையும் அது உள்ளடக்குகிறது. முன்பு கவனித்தபடி, இயேசு, ராஜ்ய சுதந்தரவாளிகள் அடங்கிய ‘சிறுமந்தையோடு’கூட ‘வேறே ஆடுகளை’—ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகளை—கொண்டிருந்ததாக கூறினார். (யோவான் 10:6; லூக்கா 12:32) ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டத்தார்’ வேறே ஆடுகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், இயேசு சிந்திய இரத்தத்தின் பேரிலுள்ள தங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் யெகோவாவுக்கு முன்பாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையை அனுபவிக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஏசாயா 54:13-ல் பேசப்பட்டிருக்கும் ‘குமாரர்கள்’ மத்தியில் வேறே ஆடுகள் நேரடியாக சேர்க்கப்பட்டில்லையென்றாலும்கூட, அவர்கள் யெகோவாவால் போதிக்கப்படும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கின்றனர். ஆகையால் அவர்கள் கடவுளை சரியாகவே ‘பிதா’ என்று அழைக்கின்றனர், ஏனென்றால், ‘நித்திய பிதாவாகிய’ இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர் அவர்களுக்கு பாட்டனாராக ஆகிறார்.—மத்தேயு 6:9; ஏசாயா 9:6.
யெகோவா எவ்வாறு போதிக்கிறார்
20. எந்த வழிகளில் யெகோவா போதிக்கிறார்?
20 யெகோவா பலவிதங்களில் போதிக்கிறார். உதாரணமாக, அவர் தம்முடைய சிருஷ்டிப்பு வேலைகள் மூலமாக அவ்வாறு செய்கிறார், அவை அவர் இருப்பதைக் குறித்தும் அவருடைய பெரும் ஞானத்தைக் குறித்தும் சாட்சி பகருகின்றன. (யோபு 12:7-9; சங்கீதம் 19:1, 2; ரோமர் 1:20) கூடுதலாக, இயேசு மனிதனாகப் பிறப்பதற்கு முன்பு அவருக்கு அவர் போதித்தது போல நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் அவர் போதிக்கிறார். அதே போல், பதிவுசெய்யப்பட்டிருக்கும் மூன்று சம்பவங்களின்போது, அவர் பரலோகத்திலிருந்து நேரடியாக பூமியின் மீதிருந்த ஜனங்களோடு பேசினார்.—மத்தேயு 3:17; 17:5; யோவான் 12:28.
21. எந்த தேவதூதனை யெகோவா குறிப்பாக தம்முடைய பிரதிநிதியாக உபயோகித்தார், ஆனால் மற்றவர்களும்கூட பயன்படுத்தப்பட்டனர் என்பது நமக்கு எவ்வாறு தெரியும்?
21 யெகோவா தம்முடைய முதற்பேறான “வார்த்தை” உட்பட, தேவதூத பிரதிநிதிகளையும்கூட கற்பிப்பதற்கு உபயோகிக்கிறார். (யோவான் 1:1-3) யெகோவா தம்முடைய பரிபூரண மானிட குமாரனாகிய ஆதாமிடம் ஏதேன் தோட்டத்தில் நேரடியாக பேசியிருக்க முடிந்திருந்தாலும்கூட, அவர் சார்பாக பேசுவதற்காக அவர் பெரும்பாலும் இயேசுவை உபயோகித்திருக்கக்கூடும். (ஆதியாகமம் 2:16, 17) இவர் ‘இஸ்ரவேலரின் சேனைக்கு முன்பாக நடந்த தேவதூதனாய்’ இருந்திருக்கக்கூடும், அவரைக் குறித்து யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “அவர் வாக்குக்குச் செவிகொடு.” (யாத்திராகமம் 14:19; 23:20, 21) மனிதனாக ஆவதற்கு முன்பிருந்த இயேசு ‘கர்த்தருடைய சேனையின் அதிபதியாயும்’கூட இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை, அவர் யோசுவாவைப் பலப்படுத்துவதற்காக அவருக்குக் காட்சியளித்தார். (யோசுவா 5:14, 15) மோசேயிடம் தம் நியாயப்பிரமாணத்தை ஒப்படைப்பதற்கு யெகோவா தேவதூதர்களை பயன்படுத்தியது போல தம் போதனைகளை கொடுப்பதற்காக மற்ற தேவதூதர்களையும்கூட பயன்படுத்துகிறார்.—யாத்திராகமம் 20:1; கலாத்தியர் 3:19; எபிரெயர் 2:2, 3.
22. (அ) போதிப்பதற்காக பூமியில் யெகோவா யாரை பயன்படுத்தியிருக்கிறார்? (ஆ) எந்த முக்கியமான வழியின் மூலமாய் இன்று யெகோவா மனிதர்களுக்குப் போதிக்கிறார்?
22 கூடுதலாக, யெகோவா தேவன் போதிப்பதற்காக மனித பிரதிநிதிகளை உபயோகிக்கிறார். இஸ்ரவேலில் இருந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியவர்களாய் இருந்தனர்; தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், பிரபுக்கள், லேவியர்கள் ஆகியோர் தேசத்தாருக்கு யெகோவாவின் சட்டத்தை போதித்தனர். (உபாகமம் 11:18-21; 1 சாமுவேல் 12:20-25; 2 நாளாகமம் 17:7-9) இயேசு பூமியிலிருக்கையில் கடவுள் சார்பாக பேசுவதில் முதன்மையானவராக இருந்தார். (எபிரெயர் 1:1, 2) இயேசு தாம் கற்பித்தவை எல்லாம் தம் தகப்பனிடமிருந்து திருத்தமாக கற்றுக்கொண்டவை என்று அடிக்கடி சொன்னார், ஆகையால் அவருக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் உண்மையில் யெகோவாவால் போதிக்கப்பட்டிருந்தனர். (யோவான் 7:16; 8:28; 12:49; 14:9, 10) யெகோவா தம் வார்த்தைகளை பதிவுசெய்து வைக்கும்படி செய்திருக்கிறார், நம்முடைய நாளில் இப்படிப்பட்ட ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்தின் மூலம் அவர் முக்கியமாக போதிக்கிறார்.—ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16.
23. அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
23 நாம் முக்கியமான காலங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், ஏனென்றால் “கடைசிநாட்களில்” [நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம்] அநேக ஜனங்கள் யெகோவாவின் வழிகளைக் குறித்து போதிக்கப்படுவார்கள். (ஏசாயா 2:2, 3) இந்தப் போதனை எவ்வாறு அளிக்கப்படுகிறது? இப்போது முன்னேற்றமடைந்து வரும் யெகோவாவின் மகத்தான போதனா திட்டத்திலிருந்து பயனடைவதற்கும், அதில் பங்குகொள்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகளை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா எவ்வாறு ஒரு தந்தையாக, ஒரு போதனையாளராக, ஒரு கணவராக ஆனார்?
◻ ‘வித்தைக்’ குறித்து யெகோவா எதைக் கற்பிக்கிறார்?
◻ கடவுள் கொடுத்திருக்கும் எந்த முக்கியமான போதனையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்?
◻ யெகோவா எவ்வாறு போதிக்கிறார்?
[பக்கம் 10-ன் படம்]
யவீருவின் மகளை உயிர்த்தெழுப்பியது, இயேசுவின் உயிர்த்தெழுதல் வாக்கை நம்புவதற்கான அடிப்படையை அளித்தது