உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் நிலைக்காது
“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் [“நிலைத்திராது,” பொது மொழிபெயர்ப்பு].”—ஏசாயா 54:17.
1, 2. அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் எவ்வாறு ஏசாயா 54:17 உண்மையென்பதை நிரூபிக்கின்றன?
ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சிறிய மலைநாட்டில், பல பத்தாண்டுகளுக்கு முன்னால், கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதியினர் தைரியமாய் செயல்பட்டு வந்தார்கள். அவர்களை ஒழித்துக்கட்ட நாத்திக பொதுவுடைமை அரசாங்கம் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தது. ஆனால், சித்திரவதையோ, கட்டாய உழைப்பு முகாமோ, பொய் பிரச்சாரத் தாக்குதலோ அவர்களை அழிக்க முடியவில்லை. அவர்கள் யார்? அவர்கள்தான் அல்பேனியாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள். சபையாக ஒன்றுகூடி வருவதும், பிரசங்கிப்பதும் அவர்களுக்கு அதிக கடினமாய் இருந்தது; எனினும், பல பத்தாண்டுகளாக அவர்கள் விட்டுக்கொடுக்காமல் விசுவாசத்தில் நிலைத்திருந்ததன் காரணமாக உண்மைக் கிறிஸ்தவத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரித்திருக்கிறது, யெகோவாவின் பெயருக்குப் புகழும் சேர்ந்திருக்கிறது. கடந்த வருடம் அங்கு கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, நீண்ட காலமாய் உண்மையோடு யெகோவாவை சேவித்துவருகிற ஒருவர் இவ்வாறு சொன்னார்: “சாத்தான் என்னதான் கடுமையாக முயற்சி செய்தாலும் அவன் தோற்றுக்கொண்டே இருக்கிறான், யெகோவா ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்!”
2 இவை யாவும், ஏசாயா 54:17-ல் தம்முடைய ஜனங்களுக்கு கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதியின் உண்மைத்தன்மைக்கு உயிருள்ள அத்தாட்சியாய் அமைகின்றன. அது சொல்வதாவது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் [“நிலைத்திராது,” பொ.மொ.]; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்.” யெகோவா தேவனை வழிபடாதபடி அவருடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்களைத் தடுத்து நிறுத்த சாத்தானின் உலகம் எடுக்கும் எந்த முயற்சியும் தோல்வியையே தழுவும் என்பதை சரித்திரம் உறுதிப்படுத்துகிறது.
தோல்வியைத் தழுவும் சாத்தானின் முயற்சிகள்
3, 4. (அ) சாத்தானின் ஆயுதங்களில் எவையெல்லாம் அடங்கும்? (ஆ) பிசாசின் ஆயுதங்கள் எந்த விதத்தில் தோல்வி கண்டிருக்கின்றன?
3 உண்மை வணக்கத்தாருக்கு எதிராக தடையுத்தரவுகள், கலகக் கும்பலின் தாக்குதல்கள், சிறைதண்டனைகள், ‘தீமையைப் பிறப்பிக்கிற கட்டளைகள்’ போன்றவற்றை சாத்தான் ஆயுதங்களாகப் பயன்படுத்தியிருக்கிறான். (சங்கீதம் 94:20) இந்தக் கட்டுரையை யெகோவாவின் சாட்சிகள் வாசித்துக்கொண்டிருக்கிற இந்தச் சமயத்திலும்கூட, கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதற்காக சில நாடுகளில் மெய்க் கிறிஸ்தவர்கள் ‘சோதிக்கப்படுகிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 2:10.
4 உதாரணத்திற்கு, ஒரே வருடத்தில், ஊழியத்தில் கலந்துகொண்ட கடவுளுடைய ஊழியர்கள் தாக்கப்பட்டது பற்றிய 32 சம்பவங்களை யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்று தெரிவித்தது. அதோடு, பகிரங்கமாய் பிரசங்கித்ததற்காக யெகோவாவின் சாட்சிகளில் சிறியோர் பெரியோர், ஆண் பெண் என பாராமல் காவல் துறையால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டது பற்றிய 59 சம்பவங்களையும் அது அறிவித்தது. அவர்களில் சிலர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டதால், அவர்களுடைய கைரேகைகள் பதிவுசெய்யப்பட்டன; புகைப்படங்கள் எடுக்கப்பட்டன, பிறகு அவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். தாக்கப்போவதாகச் சொல்லி மற்றவர்களையும் அவர்கள் மிரட்டினார்கள். வேறொரு நாட்டில், யெகோவாவின் சாட்சிகள் கைது செய்யப்பட்டது, அபராதம் செலுத்தியது, அல்லது அடிக்கப்பட்டது சம்பந்தமாக தற்போது 1,100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களில் 200-க்கும் அதிகமானவை, இயேசுவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்குக் கூடிவந்த சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தன. எனினும், இந்த நாடுகளிலும்சரி பிற நாடுகளிலும்சரி, கடினமான சூழ்நிலைகளிலும் யெகோவாவின் மக்கள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அவருடைய பரிசுத்த ஆவி உதவியிருக்கிறது. (சகரியா 4:6) பகைவரின் கடுங்கோபம், யெகோவாவைத் துதிப்பவர்களின் வாய்க்குப் பூட்டுப்போட முடியாது. ஆம், கடவுளுடைய நோக்கம் நிறைவேறாதபடி எந்த ஆயுதமும் தடுத்துநிறுத்த முடியாதென நாம் உறுதியாய் நம்புகிறோம்.
பொய் நாவுகள் குற்றப்படுத்தப்படும்
5. முதல் நூற்றாண்டில் யெகோவாவின் ஊழியர்களுக்கு விரோதமாக எத்தகைய பொய் நாவுகள் எழும்பின?
5 கடவுளுடைய ஜனங்கள், தங்களுக்கு விரோதமாய் எழும்புகிற எந்த நாவையும் குற்றப்படுத்துவார்களென ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். முதல் நூற்றாண்டில், அடிக்கடி கிறிஸ்தவர்களைப் பற்றிய தவறான கருத்துகள் பரப்பப்பட்டன; துன்மார்க்கரென அவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள். இதற்கு அப்போஸ்தலர் 16:20, 21-ல் காணப்படும் வார்த்தைகள் எடுத்துக்காட்டாய் உள்ளன. “இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள்” என்று அது சொல்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு எதிராகச் செயல்படும்படி பட்டணத்து அதிகாரிகளைத் தூண்டிவிடுவதற்கு வேறு மதத்தைச் சேர்ந்த எதிரிகள் முயற்சி செய்தார்கள். “உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். . . . [இவர்கள்] இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று” அவர்கள் அடித்துச் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 17:6, 7) ‘கொள்ளைநோய்’ போன்றவர், ‘பூச்சக்கரம்’ எங்கும் கலகத்தைக் கிளப்பிவிடுகிற மதத் தொகுதியின் தலைவர் என அப்போஸ்தலன் பவுல் முத்திரை குத்தப்பட்டார்.—அப்போஸ்தலர் 24:2-5.
6, 7. தங்களுக்கு எதிராக சொல் அம்புகள் கொண்டு தாக்குவோரை உண்மைக் கிறிஸ்தவர்கள் குற்றப்படுத்துகிற ஒரு வழி எது?
6 இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் எக்கச்சக்கமான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கும் அபாண்டமான அவதூறுகளுக்கும் மோசமான வதந்திகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்; எனினும் இவற்றையெல்லாம் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. சொல் அம்புகள் கொண்டு இத்தகைய தாக்குதல் நடத்துவோரை நாம் குற்றப்படுத்துகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?—ஏசாயா 54:17.
7 யெகோவாவின் சாட்சிகளுடைய நல்ல நடத்தையால் பெரும்பாலும் அத்தகைய குற்றச்சாட்டுகளும் பிரச்சாரங்களும் தவறானவையென நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. (1 பேதுரு 2:12) சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிற குடிமக்கள் என்றும் ஒழுக்கநெறி தவறாதவர்கள் என்றும் சக மனிதரின் நலனில் உண்மையான அக்கறை காட்டுகிறவர்கள் என்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள் நிரூபிக்கும்போது அவர்களுக்கு எதிராகக் குவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தெரிய வருகிறது. நாம் நேர்மையானவர்கள் என்பதற்கு நம்முடைய நல்ல நடத்தையே சாட்சி சொல்கிறது. நற்செயல்களில் நாம் ஊக்கமாய் ஈடுபடுவதை மற்றவர்கள் கவனிக்கும்போது, பெரும்பாலும் அவர்கள் நம் பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துவதற்கும் அவருடைய ஊழியர்களின் வாழ்க்கைமுறை மேம்பட்டதென ஒப்புக்கொள்வதற்கும் தூண்டப்படுகிறார்கள்.—ஏசாயா 60:14; மத்தேயு 5:14-16.
8. (அ) பைபிள் அடிப்படையில் நாம் செய்கிற காரியங்களை ஆதரிக்க சில சமயங்களில் என்ன செய்ய வேண்டியிருக்கிறது? (ஆ) கிறிஸ்துவைப் போலவே, எதிர்க்கிற நாவுகளை நாம் எப்படிக் குற்றப்படுத்துகிறோம்?
8 யெகோவாவை வணங்குபவர்களுக்கு ஏற்ற நடத்தையை வெளிக்காட்டுவது மட்டுமின்றி, பைபிள் அடிப்படையில் நாம் செய்கிற காரியங்களைத் தைரியமாக ஆதரிப்பதும் சில சமயங்களில் தேவைப்படுகிறது. இதற்கு ஒரு வழி, பாதுகாப்பு கோரி அரசாங்கங்களிடமும் நீதிமன்றங்களிடமும் முறையீடு செய்வதாகும். (எஸ்தர் 8:3; அப்போஸ்தலர் 22:25-29; 25:10-12) இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில், சில சமயங்களில், தம்மை விமர்சிப்பவர்களிடம் நேரடியாகவே விவாதித்து, அவர்களுடைய குற்றச்சாட்டுகளைப் பொய்யென நிரூபித்தார். (மத்தேயு 12:34-37; 15:1-11) இயேசுவைப் போலவே, நாம் மனமார நம்புகிறவற்றை மற்றவர்களுக்குத் தெளிவாய் விளக்குவதற்குக் கிடைக்கிற வாய்ப்புகளை சந்தோஷமாய் பயன்படுத்திக்கொள்கிறோம். (1 பேதுரு 3:15) பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ நம்மை ஏளனம் செய்யலாம், சத்தியத்தில் இல்லாத உறவினர்கள் கேலி, கிண்டல் செய்யலாம்; இவற்றுக்குப் பயந்து கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை யாவருக்கும் அறிவிப்பதை நிறுத்திவிடாதிருப்போமாக.—2 பேதுரு 3:3, 4.
எருசலேம்—“பாரமான கல்”
9. சகரியா 12:3-ல், ‘பாரமான கல்லென’ எந்த எருசலேம் குறிப்பிடப்படுகிறது, அதை பூமியில் யார் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்?
9 தேசத்தார் உண்மைக் கிறிஸ்தவர்களை எதிர்ப்பதற்கான காரணத்தை சகரியாவின் தீர்க்கதரிசனம் விளக்குகிறது. “அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்” என சகரியா 12:3 சொல்வதைக் கவனியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனம் எந்த எருசலேமைப்பற்றிக் குறிப்பிடுகிறது? இது, ‘பரம எருசலேமை,’ அதாவது, பரலோக அரசாங்கத்தைக் குறிப்பிடுகிறது; இதில் ஆட்சி செய்ய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். (எபிரெயர் 12:22, 24) கடவுளுடைய அரசாங்கத்தில் கிறிஸ்து இயேசுவுடன் சேர்ந்து ஆளப்போகிறவர்களில் கொஞ்சப் பேர் இன்னும் பூமியில் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தோழர்களான ‘வேறே ஆடுகளுடன்’ சேர்ந்து, காலம் இருக்கையிலேயே கடவுளுடைய அரசாங்கத்தின் பிரஜைகளாகும்படி மக்களை ஊக்கப்படுத்துகிறார்கள். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 11:15) இந்த அழைப்புக்கு மக்கள் எப்படிப் பிரதிபலித்திருக்கிறார்கள்? இன்று உண்மை வணக்கத்தாருக்கு யெகோவா எத்தகைய ஆதரவை அளிக்கிறார்? சகரியா 12-ஆம் அதிகாரத்தை கூடுதலாய் ஆராய்கையில் இதைத் தெரிந்துகொள்வோம். இதன்மூலம், கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும், ஒப்புக்கொடுத்த ஊழியர்களான அவர்களுடைய தோழர்களுக்கும் எதிராக உருவாக்கப்படுகிற ‘எந்த ஆயுதமும் நிலைக்காது’ என்பதற்கான உறுதியைப் பெறுவோம்.
10. (அ) கடவுளுடைய மக்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? (ஆ) ‘பாரமான கல்லை’ அப்புறப்படுத்த முயற்சி செய்தவர்களுக்கு என்ன சம்பவித்திருக்கிறது?
10 சகரியா 12:3-ல், தேசத்தார் ‘சிதைக்கப்படுகிறார்கள்,’ புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளின்படி, ‘மோசமான சிராய்ப்பைப்’ பெறுகிறார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சம்பவிக்கிறது? ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பிரசங்கிக்கும் பொறுப்பை யெகோவாவின் சாட்சிகள் முக்கியமானதாய்க் கருதுகிறார்கள். அந்த ராஜ்யமே மனிதருடைய ஒரே நம்பிக்கை என அறிவிப்பது தேசத்தாருக்கு “பாரமான கல்” போல ஆகியிருக்கிறது. ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதைத் தடுப்பதன்மூலம் அவர்கள் அந்தக் கல்லை அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படிச் செய்யும் தேசத்தார், ‘தங்கள்மீது மோசமான சிராய்ப்பைப்’ பெற்றிருக்கிறார்கள், பல இடங்களில் வெட்டுக்காயத்தைப் பெற்றிருக்கிறார்கள். தலைதூக்க முடியாதளவுக்குப் படுதோல்வியைத் தழுவுகையில் அவர்களுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுகிறது. இந்தத் தேசங்களால் உண்மை வணக்கத்தாருடைய வாய்க்குப் பூட்டுப்போட முடியாது. ஏனெனில், மேசியானிய ராஜ்யத்தின் “நித்திய சுவிசேஷத்தை” இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவிற்கு முன்பாக அறிவிப்பதை அவர்கள் பொன்னான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6) ஓர் ஆப்பிரிக்க நாட்டில், யெகோவாவின் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்த ஒரு சிறைக் காவலாளி இவ்வாறு சொன்னார்: ‘இந்த ஜனங்களைத் துன்புறுத்தி நீங்கள் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? இவர்கள் மசியவே மாட்டார்கள். இவர்கள் அதிகரிக்கத்தான் செய்வார்கள்.’
11. சகரியா 12:4-ல் கொடுத்த வாக்கைக் கடவுள் எப்படிக் காப்பாற்றியிருக்கிறார்?
11 சகரியா 12:4-ஐ வாசியுங்கள். ராஜ்யத்தைப்பற்றித் தைரியமாய் அறிவிப்பவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை, அடையாள அர்த்தத்தில் குருடாக்கி, “திகைப்பை” அதாவது குழப்பத்தை, ஏற்படுத்துவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றியிருக்கிறார். உதாரணத்திற்கு, உண்மை வணக்கம் தடைசெய்யப்பட்டிருந்த ஒரு நாட்டில், கடவுளுடைய ஜனங்கள் பைபிள் பிரசுரங்களைப் பெறுவதைத் தடுக்க எதிரிகளால் முடியவில்லை. அந்நாட்டிற்குள் பைபிள் பிரசுரங்களைக் கொண்டுவருவதற்காக யெகோவாவின் சாட்சிகள் பலூன்களைப் பயன்படுத்தியதாகக்கூட ஒரு செய்தித்தாள் அறிவித்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! “என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன்” என்று தம்முடைய உண்மை ஊழியர்களுக்கு கடவுள் தந்த வாக்குறுதி நிஜமாகியிருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்ப்பவர்கள் கோபத்தில் குழம்பிப்போய், என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். நாமோ, தம்முடைய மக்களை ஒரு தொகுதியாக யெகோவா பாதுகாப்பார், அவர்களுடைய நலனில் கரிசனை காட்டுவாரென உறுதியாய் நம்புகிறோம்.—2 இராஜாக்கள் 6:15-19.
12. (அ) எந்த அர்த்தத்தில் இயேசு பூமியிலிருக்கையில் அக்கினியைப் பற்றவைத்தார்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எப்படி ஆன்மீக ரீதியில் அக்கினியைப் பற்றவைத்திருக்கிறார்கள், என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?
12 சகரியா 12:5, 6-ஐ வாசியுங்கள். ‘யூதாவின் தலைவர்கள்,’ கடவுளுடைய மக்களை முன்நின்று வழிநடத்துகிற அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளைக் குறிக்கிறார்கள். தம்முடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட பூமிக்குரிய “பொறுப்புகளை” கையாள அவர்களை பற்றியெரியும் பக்திவைராக்கியத்தால் யெகோவா நிரப்புகிறார். “பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன்” என்று ஒருசமயம் இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (லூக்கா 12:49) ஒருவிதத்தில், அவர் உண்மையிலேயே அக்கினியைப் பற்றவைத்தாரென சொல்லலாம். பிரசங்க வேலையில் முழுமூச்சாக ஈடுபட்டதன்மூலம், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை மக்கள் மத்தியில் மிக முக்கியமான விஷயமாக அவர் ஆக்கினார். இது யூதா தேசமெங்கும் அனல் பறக்கும் காரசாரமான விவாதத்தைக் கிளப்பிவிட்டது. (மத்தேயு 4:17, 25; 10:5-7, 17-20) அதே விதமாக, நம் நாளில் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்கள், ‘விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்பையும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டியையும்’ போல், ஆன்மீக ரீதியில் அக்கினியைப் பற்றவைக்கிறார்கள். 1917-ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட நிறைவேறித்தீர்ந்த இரகசியம்a என்ற புத்தகம் வலிமைமிக்க விதத்தில் கிறிஸ்தவமண்டலத்தின் வெளிவேஷத்தை அம்பலப்படுத்தியது. இது மதகுருமாரின் கோபத்தைக் கிளறிவிட்டது. சமீபத்தில், “மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?” என்ற தலைப்பில் வெளிவந்த ராஜ்ய செய்தி எண் 37, கடவுளுடைய ராஜ்யத்தின் பக்கமாகவோ அதற்கு எதிராகவோ நிலைநிற்கை எடுக்க அநேகரைத் தூண்டியிருக்கிறது.
‘யூதாவின் கூடாரங்கள்’ காப்பாற்றப்பட்டன
13. ‘யூதாவின் கூடாரங்கள்’ என்ற சொற்றொடர் எதைக் குறிக்கிறது, பாதிக்கப்படுகிறவர்களை யெகோவா ஏன் காப்பாற்றுகிறார்?
13 சகரியா 12:7, 8-ஐ வாசியுங்கள். பூர்வ இஸ்ரவேலில் கூடாரங்கள் அந்தத் தேசத்திற்கே உரிய சிறப்பம்சங்களாய்த் திகழ்ந்தன; மேய்ப்பர்களும் விவசாயிகளும் சில சமயங்களில் அவற்றைப் பயன்படுத்தினார்கள். எதிரி நாட்டவர் எருசலேம் நகரத்தைத் தாக்க வந்தால், இப்படிப்பட்டவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள், இவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்பட்டது. ‘யூதாவின் கூடாரங்கள்’ என்ற சொற்றொடர், இன்றுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அடையாள ரீதியில் பாதுகாப்பற்ற பகுதியில் இருக்கிறார்கள், அரண் சூழ்ந்த நகரங்களில் அல்ல என்பதையே குறிக்கிறது. அங்கு அவர்கள் கிறிஸ்து இயேசுவின் தலைமையிலான கடவுளுடைய அரசாங்கத்தோடு தொடர்புடையவற்றை தைரியமாய் ஆதரிக்கிறார்கள். சேனைகளின் யெகோவா “யூதாவின் கூடாரங்களை முதல்முதல்” காப்பாற்றுவார்; ஏனெனில், இவை சாத்தானுடைய தாக்குதலின் முக்கிய குறியாக இருக்கின்றன.
14. ‘யூதாவின் கூடாரங்களில்’ உள்ளவர்களை யெகோவா எப்படிக் காப்பாற்றி, தள்ளாடாதபடி பார்த்துக்கொள்கிறார்?
14 உண்மைதான், ராஜ்யத்தின் ஸ்தானாபதிகளான அபிஷேகம் செய்யப்பட்டவர்களை, வெட்டவெளியிலிருக்கிற அவர்களுடைய ‘கூடாரங்களில்’ யெகோவா காப்பாற்றுகிறார் என்பதை சரித்திரம் நிரூபித்திருக்கிறது.b அவர்கள் ‘தள்ளாடாதபடி’ யெகோவா பார்த்துக்கொள்கிறார்; யுத்த வீரரான தாவீது ராஜாவைப்போல அவர்களைப் பலப்படுத்தி, தைரியப்படுத்துகிறார்.
15. யெகோவா ஏன் ‘எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்க்கிறார்,’ எந்தக் காலகட்டத்தில் அவர் இதைச் செய்வார்?
15 சகரியா 12:9-ஐ வாசியுங்கள். யெகோவா ஏன் ‘எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்க்கிறார்’? ஏனெனில், அவர்கள் கிறிஸ்து இயேசுவின் தலைமையிலான கடவுளுடைய அரசாங்கத்தை விடாப்பிடியாக எதிர்த்து வருகிறார்கள். கடவுளுடைய மக்களைத் துன்புறுத்துவதால் அவர்கள் தண்டனைத்தீர்ப்பைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள். விரைவில் பூமியிலுள்ள சாத்தானின் பிரதிநிதிகள் கடவுளின் உண்மை வணக்கத்தாரை கடைசி முறையாகத் தாக்குவார்கள்; இதனால் உலகெங்கும், அர்மகெதோன் என பைபிள் விவரிக்கிற சூழ்நிலை உருவாகும். (வெளிப்படுத்துதல் 16:13-16) அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் உன்னத நியாயாதிபதி தம் ஊழியர்களைக் காப்பாற்றுவார், தேசத்தார் மத்தியில் தம் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்.—எசேக்கியேல் 38:14-18, 22, 23.
16, 17. (அ) எது ‘கர்த்தருடைய ஊழியக்காரரின் சொத்து’? (ஆ) சாத்தானின் தாக்குதல்களை நாம் சகித்திருப்பது எதற்கு அத்தாட்சி அளிக்கிறது?
16 உலகெங்குமுள்ள கடவுளுடைய மக்களின் விசுவாசத்தைக் குலைத்துப்போடுகிற அல்லது அவர்களுடைய பக்திவைராக்கியத்தைத் தணித்துப்போடுகிற எந்த ஆயுதமும் சாத்தானிடம் இல்லை. தம்முடைய காக்கும் வல்லமையால் யெகோவா நம்மை ஆதரிக்கிறார் என்பதை அறிவது சமாதானத்தைத் தருகிறது; இந்தச் சமாதானம், ‘கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரம் [அதாவது, சொத்து].’ (ஏசாயா 54:17) நம் சமாதானத்தையும் ஆன்மீக ரீதியில் அனுபவிக்கிற செழுமையையும் வலுக்கட்டாயமாக யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. (சங்கீதம் 118:6) எதிர்ப்பைத் தூண்டிவிடுவதிலும், துன்பத்தைத் தருவதிலும் சாத்தான் ஓயவே மாட்டான். அவதூறுகளின் மத்தியிலும் உண்மையோடு நாம் சகித்திருக்கையில், கடவுளுடைய ஆவி நம்மிடம் இருக்கிறதென்பது நிரூபணமாகிறது. (1 பேதுரு 4:14) தற்போது ஆட்சி செய்து வருகிற யெகோவாவுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. எதிர்ப்பு என்னும் ஏராளமான ‘கவண்கற்கள்’ கடவுளுடைய மக்கள்மீது வீசப்பட்டு வருகின்றன. எனினும், யெகோவா தரும் பலத்தால் அவருடைய ஊழியர்கள் அவற்றை மேற்கொள்கிறார்கள். இப்படியாக, அந்த எதிர்ப்புகளுக்கு பலனில்லாமல் போகிறது. (சகரியா 9:15) பூமியில் மீந்திருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் அவர்களுடைய உண்மையுள்ள தோழர்களும் செய்கிற வேலையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
17 பிசாசின் தாக்குதல்களிலிருந்து முற்றும் முழுமையான விடுதலையை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். ‘நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் [“நிலைத்திராது,” பொ.மொ.]; நமக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நாம் குற்றப்படுத்துவோம்’ என்ற உத்தரவாதம் பெரும் ஆறுதலை அளிக்கிறது, அல்லவா?
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சிடப்படுவதில்லை.
b கூடுதல் விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 675-6-ஐக் காண்க.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• சாத்தானின் ஆயுதங்கள் நிலைக்காமல் போனதை எது காட்டுகிறது?
• பரம எருசலேம் எப்படி ‘பாரமான கல்லாக’ ஆகியிருக்கிறது?
• ‘யூதாவின் கூடாரங்களை’ யெகோவா எப்படிக் காப்பாற்றுகிறார்?
• அர்மகெதோன் நெருங்கி வருகையில் எதைக் குறித்து நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்கள்?
[பக்கம் 21-ன் படங்கள்]
அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் மக்கள் சாத்தானுடைய தாக்குதல்களின் மத்தியிலும் உண்மையாய் நிலைத்திருந்தார்கள்
[பக்கம் 23-ன் படம்]
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இயேசு பொய்யென நிரூபித்தார்
[பக்கம் 24-ன் படங்கள்]
நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு எதிரான எந்த ஆயுதமும் நிலைக்காது