பாடம் 57
ஒரு பெரிய பாவத்தை நீங்கள் செய்துவிட்டால்...
நீங்கள் யெகோவாமேல் நிறைய அன்பு வைத்திருக்கலாம். அவருடைய மனதைக் காயப்படுத்தும் எதையுமே செய்துவிடக் கூடாது என்று நினைக்கலாம். ஆனாலும், சிலசமயம் தவறுகள் செய்துவிடலாம். நாம் பெரிய பாவத்தைக்கூட செய்துவிட வாய்ப்பு இருக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) அப்படிப்பட்ட ஒரு பெரிய பாவத்தை நீங்கள் செய்துவிட்டால் யெகோவா உங்களை வெறுத்துவிடுவார் என்று நினைக்காதீர்கள். உங்களை மன்னிக்கவும் உங்களுக்கு உதவவும் அவர் தயாராக இருக்கிறார்.
1. யெகோவா நம்மை மன்னிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
யெகோவாமேல் அன்பு வைத்திருப்பவர்கள் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் சோகத்தில் மூழ்கிவிடலாம். ஆனால், “உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்” என்று யெகோவா சொல்வது அவர்களுக்கு ஆறுதல் தருகிறது. (ஏசாயா 1:18) நாம் உண்மையிலேயே மனம் திருந்தும்போது யெகோவா நம்மை முழுமையாக மன்னிப்பார். நாம் எப்படி மனம் திருந்தலாம்? நாம் செய்த பாவத்தை நினைத்து மனதார வருத்தப்பட வேண்டும், மறுபடியும் அதைச் செய்யக் கூடாது, மன்னிப்புக்காக யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும். அதன்பின், நம்மைப் பாவம் செய்யத் தூண்டிய தவறான யோசனைகளை அல்லது பழக்கங்களை மாற்றிக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டும். யெகோவா எதிர்பார்க்கிறபடி பரிசுத்தமாக வாழவும் முயற்சி எடுக்க வேண்டும்.—ஏசாயா 55:6, 7-ஐ வாசியுங்கள்.
2. யெகோவா எப்படி மூப்பர்கள் மூலம் உதவுகிறார்?
நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால், ‘சபையில் இருக்கிற மூப்பர்களை . . . வரவழைக்க வேண்டும்’ என்று யெகோவா சொல்கிறார். (யாக்கோபு 5:14, 15-ஐ வாசியுங்கள்.) மூப்பர்கள் யெகோவா மீதும் அவருடைய மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கிறார்கள். யெகோவாவிடம் மறுபடியும் ஒரு நல்ல பந்தத்துக்குள் வர நமக்கு உதவி செய்யும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது.—கலாத்தியர் 6:1.
நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் இரண்டு அல்லது மூன்று மூப்பர்கள் பைபிளிலிருந்து அறிவுரைகள் கொடுத்து நம்மைத் திருத்துவார்கள். நாம் மறுபடியும் பாவம் செய்யாமல் இருப்பதற்குத் தேவையான நடைமுறையான ஆலோசனைகளையும் உற்சாகத்தையும்கூட தருவார்கள். ஒருவேளை, பெரிய பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தவில்லை என்றால், அவரிடமிருந்து சபையைப் பாதுகாப்பதற்காக அவரை மூப்பர்கள் சபையிலிருந்து க்கிவிடுவார்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் யெகோவா எப்படி உதவி செய்வார்? அதற்கு நாம் எப்படி நன்றியோடு இருக்கலாம்? பார்க்கலாம்.
3. பாவத்தை ஒத்துக்கொண்டால் குணமாவோம்
நாம் பாவம் செய்யும்போது யெகோவாவின் மனதைக் காயப்படுத்திவிடுவோம். அதனால் அவரிடம் அதை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பது முக்கியம். சங்கீதம் 32:1-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நம் பாவங்களை மூடி மறைப்பதற்குப் பதிலாக யெகோவாவிடம் ஒத்துக்கொள்வது ஏன் நல்லது?
நம் பாவங்களை யெகோவாவிடம் ஒத்துக்கொள்வது மட்டுமல்லாமல், மூப்பர்களிடமும் உதவி கேட்கும்போது நமக்கு மன நிம்மதி கிடைக்கும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
யெகோவாவிடம் திரும்பிவர மூப்பர்கள் எப்படி ஒரு சகோதரருக்கு உதவினார்கள்?
நாம் மூப்பர்களிடம் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். ஏனென்றால், நமக்கு உதவி செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள். யாக்கோபு 5:16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மூப்பர்களிடம் நாம் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லும்போது நமக்கு உதவி செய்வது அவர்களுக்கு ஏன் சுலபமாக இருக்கும்?
4. பாவம் செய்தவர்களுக்கு யெகோவா இரக்கம் காட்டுகிறார்
ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டு மனம் திருந்த மறுக்கிறவர்கள் சபையிலிருந்து நீக்கப்படுவார்கள். நாம் அவர்களோடு பழக மாட்டோம். 1 கொரிந்தியர் 5:6, 11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடுவதுபோல், மனம் திருந்தாத ஒருவரோடு பழகுவது எப்படி சபையில் இருக்கும் மற்றவர்களைப் பாதிக்கலாம்?
பாவம் செய்த ஒருவரிடம் யெகோவாவைப் போலவே மூப்பர்களும் இரக்கம் காட்ட முயற்சி எடுக்கிறார்கள். அவர்களைத் தேடிப் போய் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். சபையிலிருந்து நீக்கப்படுவது பாவம் செய்தவருக்கு வேதனை தந்தாலும் மனம் திருந்த அவருக்கு உதவுகிறது. அதனால்தான், இந்தக் கண்டிப்பை ஏற்றுக்கொண்ட நிறைய பேர் மறுபடியும் சபைக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள்.—சங்கீதம் 141:5.
பாவம் செய்தவர்களிடம் யெகோவா நடந்துகொள்ளும் விதம் அவர் நியாயமானவர், இரக்கமுள்ளவர், அன்பானவர் என்பதை எப்படிக் காட்டுகிறது?
5. நாம் மனம் திருந்தும்போது யெகோவா மன்னிக்கிறார்
ஒருவர் மனம் திருந்தும்போது யெகோவா எப்படி உணருகிறார் என்று நாம் புரிந்துகொள்வதற்கு இயேசு ஒரு கதையைச் சொன்னார். லூக்கா 15:1-7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?
எசேக்கியேல் 33:11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மனம் திருந்திவிட்டதைக் காட்ட முக்கியமாக நாம் என்ன செய்ய வேண்டும்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நான் செஞ்ச பாவத்தை பத்தி மூப்பர்கள்கிட்ட சொன்னா என்னை சபையிலிருந்து நீக்கிடுவாங்களோனு பயமா இருக்கு.”
அவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
சுருக்கம்
நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டாலும், உண்மையிலேயே மனம் திருந்தி, மறுபடியும் அந்தப் பாவத்தைச் செய்யாமல் இருக்க உறுதியாக இருந்தால், யெகோவா நம்மை மன்னிப்பார்.
ஞாபகம் வருகிறதா?
நம் பாவங்களை யெகோவாவிடம் ஒத்துக்கொள்வது ஏன் நல்லது?
யெகோவா நம் பாவங்களை மன்னிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் ஏன் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்?
அலசிப் பாருங்கள்
ஏசாயா 1:18-ல் சொல்லியிருக்கிறபடி யெகோவா எப்படி ஒருவருக்கு இரக்கம் காட்டினார் என்று பாருங்கள்.
பெரிய பாவம் செய்த ஒருவருக்கு உதவ மூப்பர்கள் எப்படி முயற்சி எடுக்கிறார்கள்?
“மூப்பர்களே, பாவம் செய்தவர்களுக்கு அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்” (காவற்கோபுரம், ஆகஸ்ட் 2024)
மனந்திருந்தாத பாவிகளுக்கு எப்படி அன்பும் இரக்கமும் காட்டப்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“மூப்பர்களே, சபையிலிருந்து நீக்கப்படுகிறவர்களுக்கு உதவுங்கள்” (காவற்கோபுரம், ஆகஸ்ட் 2024)
யெகோவாதான் மறுபடியும் தன்னை ஈர்த்ததாக அவரைவிட்டு விலகிப்போன ஒருவர் நினைத்தார். ஏன்? “நான் யெகோவாவிடம் திரும்பிப் போக வேண்டும்” என்ற அனுபவத்தைப் படித்துப் பாருங்கள்.
“பைபிள்—ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (காவற்கோபுரம், ஜூலை 1, 2012)