அதிகாரம் பதினேழு
கடவுளுடைய ஜெப வீட்டில் அந்நியர்
வருடம் 1935, மே 31, வெள்ளிக்கிழமை. வாஷிங்டன், டி.சி.-யில் நடந்த மாநாட்டில் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு பேசினார். அப்போஸ்தலனாகிய யோவான் தரிசனத்தில் கண்ட ‘திரள் கூட்டம்’ யாரை அடையாளப்படுத்துகிறது என்பதைப் பற்றி பேசினார். “பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய எல்லாரும் தயவுசெய்து எழுந்து நிற்கிறீர்களா?” என சகோதரர் ரதர்ஃபர்டு அவருடைய பேச்சின் உச்சக்கட்டமாக கேட்டார். “மாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் எழுந்து நின்றார்கள்” என அப்போது மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவர் சொல்கிறார். அதைப் பார்த்த பேச்சாளர்: “இதோ! திரள் கூட்டம்!” என சொன்னார். “முதலில் கொஞ்ச நேரம் நிசப்தமாக இருந்தது, பிறகு சந்தோஷ குரல் எழுந்தது, அதற்குப் பின்பு மகிழ்ச்சி ஆரவாரம் நீண்ட நேரத்திற்கு நீடித்தது” என அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மற்றொருவர் சொல்கிறார்.—வெளிப்படுத்துதல் 7:9.
2 சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் அது முக்கிய கட்டமாக இருந்தது. அந்த தீர்க்கதரிசனம் நம் பைபிள்களில் ஏசாயா 56-ம் அதிகாரமாக பதிவாகியுள்ளது. ஏசாயாவில் உள்ள மற்ற தீர்க்கதரிசனங்களைப் போலவே இதிலும் ஆறுதல் அளிக்கும் வாக்குறுதிகளும் உள்ளன, கடுமையான எச்சரிப்புகளும் உள்ளன. அதன் முதல் நிறைவேற்றத்தில், ஏசாயா காலத்தில் வாழும் கடவுளுடைய உடன்படிக்கைக்குட்பட்ட ஜனங்களிடம் அந்த தீர்க்கதரிசனம் சொல்லப்படுகிறது. ஆனால், அதன் நிறைவேற்றம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நம் நாள் வரையாகவும் நீடிக்கிறது.
இரட்சிப்பு எதை தேவைப்படுத்துகிறது
3 ஏசாயா 56-ம் அதிகாரம் யூதர்களுக்கு ஓர் அறிவுரை கொடுப்பதாய் துவங்குகிறது. என்றாலும், தீர்க்கதரிசி எழுதும் வார்த்தைகளுக்கு மெய் வணக்கத்தார் அனைவருமே கவனம் செலுத்த வேண்டும். நாம் வாசிக்கிறோம்: “கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.” (ஏசாயா 56:1, 2) கடவுளிடமிருந்து இரட்சிப்பை நாடும் யூதாவின் குடிகள் நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். அதாவது, நியாயத்தைப் பின்பற்றி நீதியாக வாழ வேண்டும். ஏன்? ஏனெனில் யெகோவா தாமே நீதிபரர். நீதியை கடைப்பிடிப்பவர்கள் யெகோவாவின் தயவைப் பெறுவதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பர்.—சங்கீதம் 144:15ஆ, NW.
4 இந்த தீர்க்கதரிசனம் ஓய்வுநாளை கடைப்பிடிப்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. ஏனென்றால், ஓய்வுநாள் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் முக்கிய அம்சமாகும். யூதாவின் குடிகள் இறுதியில் சிறையிருப்பிற்குள் செல்வதற்கான காரணங்களில் ஒன்று ஓய்வுநாள் சட்டத்தை அசட்டை செய்வதே. (லேவியராகமம் 26:34, 35; 2 நாளாகமம் 36:20, 21) யூதர்களோடு யெகோவா வைத்திருக்கும் விசேஷ உறவிற்கு ஓய்வுநாள் அடையாளமாக இருக்கிறது. எனவே, ஓய்வுநாள் சட்டத்தை கடைப்பிடிப்பவர்கள் அந்த உறவை மதிப்பதை வெளிக்காட்டுகிறார்கள். (யாத்திராகமம் 31:13) அதோடு, ஓய்வுநாளை கடைப்பிடிப்பது, யெகோவாவே படைப்பாளர் என்பதையும் ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நினைப்பூட்டும். மேலும், யெகோவா தங்களிடம் காட்டிய இரக்கத்தையும் மனதிற்கு கொண்டு வரும். (யாத்திராகமம் 20:8-11; உபாகமம் 5:12-15) முடிவாக, ஓய்வுநாளை ஆசரிப்பது, ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் தவறாமல் யெகோவாவை வணங்குவதற்கான ஏற்பாடாகவும் அமையும். அன்றாட வேலையிலிருந்து வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுப்பது, ஜெபம், படிப்பு மற்றும் தியானத்திற்கான வாய்ப்பை யூதாவின் குடிகளுக்கு தரும்.
5 அப்படியானால், கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும் என்கிற இந்த கட்டளை கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறதா? நேரடியாக பொருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணச் சட்டத்தின்கீழ் இல்லாததால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டிய அவசியமில்லை. (கொலோசெயர் 2:16, 17) இருந்தாலும், உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு “ஓய்வெடுக்கும் காலம்” இருக்கிறதென அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார். இரட்சிப்பிற்காக இயேசுவின் கிரயபலியில் விசுவாசம் வைப்பதையும் கிரியைகளில் மட்டுமே சார்ந்திருப்பதை விட்டுவிடுவதையும் இந்த “ஓய்வெடுக்கும் காலம்” உட்படுத்துகிறது. (எபிரெயர் 4:6-10, பொ.மொ.) எனவே, ஓய்வுநாளைப் பற்றிய ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த வார்த்தைகள், இரட்சிப்புக்கான யெகோவாவின் ஏற்பாட்டில் விசுவாசம் வைக்க வேண்டியதன் அவசியத்தை இன்று அவருடைய ஊழியர்களுக்கு நினைப்பூட்டுகின்றன. யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டு, அவருடைய வணக்கத்தில் சீராக நிலைத்திருக்க வேண்டியதையும் நினைவுக்கு கொண்டு வருகின்றன.
அந்நியனுக்கும் அண்ணகனுக்கும் ஆறுதல்
6 இரு தொகுதியினரிடம் யெகோவா இப்போது பேசுகிறார். இவர்கள் அவரை சேவிக்க விரும்புகின்றனர், ஆனாலும் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி யூதர்களுடைய சபைக்குள் வருவதற்கு தகுதி பெறுவதில்லை. நாம் வாசிக்கிறோம்: “யெகோவாவைச் சேர்ந்த அந்நியன்: யெகோவா என்னைத் தமது ஜனத்திலிருந்து முற்றிலும் பிரித்துப் போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும், இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.” (ஏசாயா 56:3, தி.மொ.) இஸ்ரவேல் தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு போவதே அந்நியனின் பயம். தன் பெயர் சொல்ல வாரிசு இல்லாமல் போகுமே என்பதுதான் அண்ணகனின் கவலை. ஆனால், இந்த இரு தொகுதியினருமே தைரியமாக இருக்கலாம். ஏன்? அதற்கான காரணத்தை சிந்திப்பதற்கு முன், நியாயப்பிரமாணச் சட்டத்தின்கீழ் இஸ்ரவேல் தேசத்தில் அவர்களுடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திப்போம்.
7 விருத்தசேதனம் செய்யப்படாத அந்நியர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு வணக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக, அந்நியர் எவரும் பஸ்காவைப் புசிக்க அனுமதியில்லை. (யாத்திராகமம் 12:43) இருந்தபோதிலும், அந்த தேசத்தின் சட்டங்களை மீறாத அந்நியர்களுக்கு நியாயம் வழங்கப்படுகிறது; மேலும், தோழமையோடு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் தேசத்தோடு எந்த நிரந்தர பிணைப்புகளும் அவர்களுக்கு இல்லை. அந்நியர்களில் சிலர், நியாயப்பிரமாண சட்டத்தை முழுமையாய் ஏற்றுக்கொள்கின்றனர் என்பது உண்மையே. அதற்கு அடையாளமாக அவர்களுடைய ஆண்கள் விருத்தசேதனமும் செய்துகொள்கின்றனர். யூத மதத்திற்கு மாறிய இவர்கள், யெகோவாவின் ஆலய பிரகாரத்தில் அவரை தொழுதுகொள்ளும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். அதோடு, இஸ்ரவேலர்களுடைய சபையின் பாகமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். (லேவியராகமம் 17:10-14; 20:2; 24:22) இருந்தபோதிலும், இஸ்ரவேலர்களோடு யெகோவா செய்திருக்கும் உடன்படிக்கையில் இவர்களுக்கும் முழுமையான பங்கு இல்லை. மேலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இவர்களுக்கு எந்தவித பங்கும் இல்லை. மற்ற அந்நியர்கள் ஆலயத்தை நோக்கி ஜெபிக்கலாம். மேலும், ஆசாரியர்கள் வாயிலாக பலிகளை செலுத்தலாம். அதேசமயம் அந்தப் பலிகள் நியாயப்பிரமாண சட்டத்திற்கு இசைவாக இருக்க வேண்டும். (லேவியராகமம் 22:25; 1 இராஜாக்கள் 8:41-43) ஆனால், இவர்களோடு இஸ்ரவேலர்கள் நெருங்கிய கூட்டுறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
என்றுமுள்ள பெயரை அண்ணகர்கள் பெறுகின்றனர்
8 யூதப் பெற்றோருக்கு பிறந்தவர்களாக இருந்தாலும், அண்ணகர்கள் இஸ்ரவேல் தேசத்தின் முழு உரிமையுள்ள அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை.a (உபாகமம் 23:1) பைபிள் காலங்களில் இருந்த சில பொய்மத தேசங்களில், அண்ணகர்கள் விசேஷித்த ஸ்தானங்களில் இருந்தனர். போரில் கைதிகளாக கொண்டு செல்லப்படும் பிள்ளைகள் சிலருடைய இனப்பெருக்க ஆற்றலை அழிப்பது அவர்களது வழக்கம். அரசவைகளில் அதிகாரிகளாகவும் இந்த அண்ணகர்கள் பொறுப்பு வகித்தனர். ‘ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிறவராகவோ,’ ‘வைப்பாட்டியரின் கண்காணிப்பாளராகவோ’ அல்லது அரசியின் பணியாளராகவோ அண்ணகன் நியமிக்கப்பட்டான். (எஸ்தர் 2:3, 12-15; 4:4-6, 9; NW) ஆனால் இதே பழக்கங்களை இஸ்ரவேலர்களும் கடைப்பிடித்தார்கள் என்பதற்கோ, அண்ணகர்கள் இஸ்ரவேல் ராஜாக்களுக்கு சேவைசெய்ய விசேஷமாக நியமிக்கப்பட்டார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை.b
9 இஸ்ரவேலில் இருக்கும் சொல்லர்த்தமான அண்ணகர்களால் மெய் வணக்கத்தில் ஓரளவுக்கே பங்குகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, அவர்களுடைய குடும்ப பெயரை நிலைக்க வைக்க பிள்ளைகளை பெற்றெடுக்க முடியாத பெரும் அவமானத்தையும் எதிர்ப்படுகின்றனர். அப்படியானால், தீர்க்கதரிசனத்தில் அடுத்து வரும் வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கும்! நாம் வாசிக்கிறோம்: “ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு, என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.”—ஏசாயா 56:4, 5, பொ.மொ.
10 யெகோவாவின் ஊழியர்களாக முழுமையாய் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சரீரப்பிரகாரமாக அண்ணகர்களாக இருப்பதும்கூட தடையாய் இல்லாத ஒரு காலம் நிச்சயம் வரும். கீழ்ப்படிவார்களேயாகில், யெகோவாவின் இல்லத்தில் அண்ணகர்களுக்கு ஒரு “நினைவுச்சின்னம்” அல்லது ஒரு இடம் இருக்கும். அதோடு, புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரும் கிடைக்கும். இது எப்போது நடக்கிறது? இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு பிறகே. அப்போது, பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குப் பதிலாக புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலருக்கு பதிலாக ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ தேர்ந்தெடுக்கப்பட்டனர். (கலாத்தியர் 6:16) அதுமுதல், விசுவாசம் காண்பிப்போர் அனைவரும் கடவுளுக்கு ஏற்கத்தக்க வணக்கத்தை செலுத்த முடிந்திருக்கிறது. மாம்சப் பிரகாரமான வேறுபாடுகளோ சரீர நிலையோ இனியும் முக்கியமல்ல. விசுவாசத்தோடு சகித்திருப்பவர்கள், தங்கள் சரீர நிலை எப்படியிருந்தாலும்சரி, “ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை” பெறுவார்கள். அவர்களை யெகோவா மறக்க மாட்டார். அவரது ‘ஞாபகப் புஸ்தகத்திலே’ அவர்களது பெயர் எழுதப்பட்டிருக்கும். கடவுளுடைய உரிய நேரத்தில், அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவர்.—மல்கியா 3:16; நீதிமொழிகள் 22:1; 1 யோவான் 2:17.
கடவுளுடைய ஜனங்களோடு அந்நியரும் வணங்குதல்
11 அந்நியர்களைப் பற்றியதென்ன? தீர்க்கதரிசனம் இப்போது இவர்கள்மீது கவனம் செலுத்துகிறது. இவர்களுக்காக மிகுந்த ஆறுதலின் வார்த்தைகளை யெகோவா தருகிறார். ஏசாயா எழுதுகிறார்: “கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப் பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும்.”—ஏசாயா 56:6, 7.
12 நம் நாட்களில், ‘அந்நியர்’ மெதுமெதுவாக தோன்ற ஆரம்பித்திருக்கின்றனர். இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கை உடையவர்களைவிட—தேவனுடைய இஸ்ரவேல் என இன்று நாம் அடையாளம் கண்டுள்ளோரைவிட—அதிக எண்ணிக்கையானோர் இரட்சிப்பு பெறுவர் என்பது முதல் உலக யுத்தத்திற்கு முன்னர் புரிந்துகொள்ளப்பட்டது. யோவான் 10:16-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை பைபிள் மாணாக்கர் அறிந்திருந்தனர்: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” இந்த ‘வேறே ஆடுகள்’ பூமிக்குரிய வகுப்பார் என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், இந்த வேறே ஆடுகள் இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது தோன்றுவர் என பைபிள் மாணாக்கரில் பெரும்பாலானோர் நம்பினர்.
13 இறுதியாக, செம்மறியாடுகளைப் பற்றி குறிப்பிடும், இதனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு வசனம் புரிந்துகொள்ளப்பட்டது. மத்தேயு 25-ம் அதிகாரத்தில், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய இயேசுவின் உவமை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செம்மறியாடு போன்றோர் நித்திய ஜீவனைப் பெறுகின்றனர்; ஏனென்றால், அவர்கள் இயேசுவின் சகோதரர்களுக்கு ஆதரவு காட்டுகின்றனர். எனவே, இவர்கள் கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களிலிருந்து வேறுபட்ட ஒரு வகுப்பினர். 1923-ல், அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் இது விளக்கப்பட்டது. அதாவது, இயேசுவின் ஆயிர வருட ஆட்சியின்போதல்ல, ஆனால் இந்த ஒழுங்குமுறையின் இறுதி பாகத்தில் வேறே ஆடுகள் தோன்றுவார்கள் என விளக்கப்பட்டது. ஏன்? ஏனென்றால், “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இயேசு இந்த உவமையையும் குறிப்பிட்டார்.—மத்தேயு 24:3, NW.
14 தாங்கள் பரலோக நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை யெகோவாவின் ஆவி தங்களோடு சாட்சி பகரவில்லை என 1920-களில், பைபிள் மாணாக்கரோடு கூட்டுறவு கொண்டிருந்தவர்களில் சிலர் உணர்ந்தனர். இருந்தாலும், மகா உன்னத கடவுளின் ஊழியர்களாக அவர்கள் வைராக்கியத்தோடு சேவை செய்தனர். 1931-ல், நியாயநிரூபணம் (ஆங்கிலம்) எனும் புத்தகம் வெளியிடப்பட்டபோது இவர்களுடைய நிலை சற்று தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்தப் புத்தகத்தில், பைபிள் புத்தகமாகிய எசேக்கியேல் வசனம் வசனமாக சிந்திக்கப்பட்டது. கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற “மனிதன்” பற்றிய தரிசனத்தை இந்த நியாயநிரூபணம் புத்தகம் விளக்கியது. (எசேக்கியேல் 9:1-11, NW) இந்த “மனிதன்,” எருசலேம் எங்கும் சுற்றித் திரிந்து, அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடுவதை அந்தத் தரிசனத்தில் காண்கிறோம். அந்த “மனிதன்,” இயேசுவின் சகோதரர்களுக்கு படமாக இருக்கிறான். அதாவது, எருசலேமுக்கு படமாக இருக்கும் கிறிஸ்தவமண்டலத்திற்கு நியாயத்தீர்ப்பு வரும் காலத்தில் பூமியில் உயிரோடிருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் மீதியானவர்களை இம்மனிதன் குறிக்கிறான். அந்த சமயத்தில் வாழும் வேறே ஆடுகளாகிய ஜனங்களே அந்த மனிதனால் அடையாளம் போடப்படுபவர்கள். அந்த விசுவாச துரோக நகரத்தின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்போது இவர்கள் தப்பிப்பிழைப்பதை தரிசனம் காட்டுகிறது.
15 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெகூவையும் அவருக்கு ஆதரவு காட்டிய இஸ்ரவேலன் அல்லாத யோனதாப்பையும் குறித்த தீர்க்கதரிசன நாடகம் 1932-ல் சரியாக புரிந்துகொள்ளப்பட்டது. பாகால் வணக்கத்தை யெகூ அழித்தபோது, யோனதாப் அவரோடு சென்று முழு ஆதரவு கொடுத்தது போலவே, கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களுக்கு வேறே ஆடுகள் முழு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை அந்தத் தீர்க்கதரிசன நாடகம் சுட்டிக்காட்டியது. இறுதியாக 1935-ல், அப்போஸ்தலனாகிய யோவான் தரிசனத்தில் கண்ட திரள் கூட்டமான ஜனங்களே இந்த ஒழுங்குமுறையின் முடிவு காலத்தில் வாழும் வேறே ஆடுகள் என அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. இது முன்பு குறிப்பிட்டபடி, வாஷிங்டன், டி.சி.-யில் நடந்த மாநாட்டில் முதன்முதலாக விளக்கப்பட்டது. பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்களே ‘திரள் கூட்டத்தார்’ என ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு அப்போது சுட்டிக்காட்டினார்.
16 எனவே, கடைசி நாட்களில், யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் ‘அந்நியர்’ பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்பது படிப்படியாக புரிந்து கொள்ளப்பட்டது. யெகோவாவை வணங்குவதற்கு தேவனுடைய இஸ்ரவேலோடு இவர்கள் சேர்ந்து கொள்கின்றனர். (சகரியா 8:23) அந்த ஆவிக்குரிய தேசத்தோடு சேர்ந்து, இவர்களும் கடவுளுக்கு உகந்த பலிகளை செலுத்துகின்றனர்; அதோடு, இளைப்பாறுதல் காலத்திலும் பிரவேசிக்கின்றனர். (எபிரெயர் 13:15, 16) மேலும், கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தில் இவர்கள் தொழுதுகொள்கின்றனர்; இந்த ஆலயம், எருசலேம் ஆலயத்தைப் போல, ‘எல்லா ஜனங்களுக்கும் ஜெப வீடாக’ இருக்கிறது. (மாற்கு 11:17) இயேசு கிறிஸ்துவின் கிரய பலியில் விசுவாசம் வைப்பதால், ‘இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுக்கிறார்கள்.’ அதுமட்டுமல்ல, ‘இரவும் பகலும்’ யெகோவாவுக்கு இடைவிடாமல் ஊழியம் செய்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:14, 15.
17 இந்த நவீன நாளைய அந்நியரும் புதிய உடன்படிக்கையை பற்றிக்கொள்கின்றனர். எந்த அர்த்தத்தில்? தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவு கொள்வதன் வாயிலாக, புதிய உடன்படிக்கையின் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அவர்கள் அனுபவிக்கின்றனர். இவர்கள் புதிய உடன்படிக்கையின் பாகமாக இல்லை என்றாலும், அதனோடு சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிகிறார்கள். எனவே, யெகோவாவின் சட்டங்கள் அவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யெகோவாவை தங்களுடைய பரலோக தகப்பனாகவும் சர்வலோகப் பேரரசராகவும் ஏற்றுக்கொள்கின்றனர்.—எரேமியா 31:33, 34; மத்தேயு 6:9; யோவான் 17:3.
18 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் மேலும் தொடர்கிறது: “இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.” (ஏசாயா 56:8) முடிவு காலத்தில், ‘இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானவர்களை யெகோவா கூட்டிச் சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்ல, திரள் கூட்டமான மற்றவர்களையும் அவர் கூட்டிச் சேர்க்கிறார். யெகோவாவின் கண்காணிப்பிலும் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் தலைமையிலும் சமாதானத்தோடும் ஒத்திசைவோடும் இவர்கள் வணக்கத்தில் ஒன்றுபடுகின்றனர். கிறிஸ்துவால் ஆளப்படும் யெகோவாவின் அரசாங்கத்திற்கு இவர்கள் தங்கள் உத்தமத்தை காட்டுவதால், நல்ல மேய்ப்பர் இவர்களை ஐக்கியப்பட்ட, சந்தோஷமுள்ள மந்தையாக்கியிருக்கிறார்.
குருட்டு காவல்காரர், ஊமையான நாய்கள்
19 இதற்கு முன் சொல்லப்பட்ட அன்பான, உற்சாகமளிக்கும் வார்த்தைகளுக்கு முற்றிலும் மாறாக கடுமையான, அதிர்ச்சியூட்டும் வார்த்தைகள் தொடருகின்றன. அந்நியர்களிடமும் அண்ணகர்களிடமும் இரக்கத்தோடு நடந்துகொள்ள யெகோவா தயாராக இருக்கிறார். ஆனால், கடவுளுடைய சபையார் என உரிமை பாராட்டிக் கொள்ளும் அநேகர் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டு, நியாயத்தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, இவர்களுடைய சடலங்கள் மரியாதைக்குரிய விதத்தில் அடக்கம் பண்ணப்பட மாட்டா. அவை கொடிய காட்டு மிருகங்களால் குதறிப் போடப்படுவதற்கே ஏற்றவை. எனவே, நாம் வாசிக்கிறதாவது: “வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.” (ஏசாயா 56:9) இந்தக் கொடிய மிருகங்கள் எதை பட்சிக்கப் போகின்றன? தீர்க்கதரிசனம் விளக்கும். வரப்போகிற அர்மகெதோன் யுத்தத்தில் கடவுளை எதிர்ப்பவர்களுக்கு காத்திருக்கிற முடிவை இது நினைவுபடுத்துகிறது. அப்போது, கொலையுண்டவர்களின் உடல்களை வானத்தின் பறவைகள் பட்சிக்கும்.—வெளிப்படுத்துதல் 19:17, 18.
20 தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “அவனுடைய [“அவருடைய,” NW] காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்க மயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்; திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் [“அநியாயமான ஆதாயத்தையும்,” NW] நோக்கிக்கொண்டிருக்கிறான். வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம் போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.”—ஏசாயா 56:10-12.
21 யூதாவின் மதத் தலைவர்கள் யெகோவாவை வணங்குவதாக உரிமை பாராட்டுகின்றனர். ‘அவருடைய காவற்காரர்’ என சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் ஆவிக்குரிய குருடர், ஊமையர், நித்திரைப் பிரியர். விழிப்புடனிருந்து வரப்போகும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கவில்லை என்றால், அவர்கள் இருந்து என்ன பிரயோஜனம்? இப்படிப்பட்ட மத காவற்காரர் பகுத்தறிவில்லாதவர்கள்; செம்மறியாடு போன்ற ஜனங்களுக்கு ஆவிக்குரிய வழிநடத்துதலை கொடுக்க தகுதியற்றவர்கள். மேலும், அவர்கள் ஊழல் நிறைந்தவர்கள். தணியாத, சுயநல ஆசை உடையவர்கள். யெகோவாவின் வழிநடத்துதலை பின்பற்றுவதற்கு மாறாக, தங்களுடைய சொந்த வழியை நாடுபவர்கள். அநியாயமான ஆதாயத்தை தேடுபவர்கள். மது வெறிகொண்டவர்கள். மற்றவர்களையும் குடித்து வெறிக்க தூண்டுபவர்கள். வரப்போகும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை குறித்து அந்தளவுக்கு அறியாமையில் இருப்பதால், எதைப் பற்றியும் கவலையே வேண்டாம் என மற்றவர்களிடம் சொல்கின்றனர்.
22 யூதாவின் விசுவாசமற்ற மதத் தலைவர்களை விவரிக்க, இதே போன்ற வார்த்தைகளை இந்த தீர்க்கதரிசனத்தில் ஏற்கெனவே ஒரு தடவை ஏசாயா பயன்படுத்தி உள்ளார். ஆவிக்குரிய குடிவெறி, மந்த நிலை, புரிந்துகொள்ளுதல் இல்லாமை போன்ற வார்த்தைகள் அவை. அந்த மதத் தலைவர்கள் மனித பாரம்பரியங்களை ஜனங்கள் மீது சுமத்தினர். மத ரீதியான பொய்களை பேசினர். கடவுளுடைய உதவியை நாடாமல் அசீரியாவை நம்பி அதன் உதவியை நாடினர். (2 இராஜாக்கள் 16:5-9; ஏசாயா 29:1, 9-14) அவர்கள் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. விசனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், முதல் நூற்றாண்டிலும் இதே விதமான தலைவர்கள் இருந்தனர். கடவுளுடைய சொந்த குமாரன் சொன்ன நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாமல், இயேசுவை மறுதலித்து அவரை கொலை செய்ய சதி செய்தனர். அவர்களை ‘குருட்டு வழிகாட்டிகள்’ என இயேசு வெளிப்படையாக கண்டனம் செய்தார்; மேலும், “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே” என்றார்.—மத்தேயு 15:14.
இன்றைய காவற்காரர்
23 கள்ளப் போதகர்கள் எழும்பி கிறிஸ்தவர்களை மோசம் போக்குவர் என அப்போஸ்தலனாகிய பேதுரு எச்சரித்தார். அவர் எழுதினார்: “கள்ளத்தீர்க்கதரிசிகளும் [இஸ்ரவேலின்] ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.” (2 பேதுரு 2:1) இப்படிப்பட்ட கள்ளப்போதகர்களின் பொய் போதனைகளாலும் பிரிவினைகளாலும் என்ன உருவாகியுள்ளது? கிறிஸ்தவமண்டலமே. இன்று, அதன் மதத் தலைவர்கள் தங்களுடைய அரசியல் தோழர்கள் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற ஜெபிக்கின்றனர். அதோடு, பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய வாக்குறுதிகளையும் கொடுக்கின்றனர். இவர்கள் ஆவிக்குரிய விஷயங்களில் குருடராகவும், ஊமையராகவும், நித்திரைப் பிரியர்களாகவும் நிரூபித்திருக்கின்றனர்.
24 என்றாலும், யெகோவா தம்முடைய ஆவிக்குரிய ஜெப வீட்டில் தம்மை சேவிக்க லட்சக்கணக்கான அந்நியர்களை கூட்டிச் சேர்க்கிறார். தேவனுடைய இஸ்ரவேலர்களில் கடைசியாக மீந்திருப்பவர்களோடு சேர்ந்து தம்மை சேவிக்கும்படி இவர்களை கூட்டிச் சேர்க்கிறார். இந்த அந்நியர்கள் பல தேசங்களிலிருந்தும் இனத்தாரிலிருந்தும் பாஷைக்காரரிலிருந்தும் வந்தவர்கள் என்றாலும், ஒருவரோடொருவரும் தேவனுடைய இஸ்ரவேலோடும் ஐக்கியமாக ஒன்றுசேர்ந்து சேவை செய்கின்றனர். யெகோவா தேவனிடமிருந்து இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும் என்பதை உறுதியாய் நம்புகின்றனர். யெகோவாவுக்கான அன்பு அவர்களைத் தூண்டுவதால், கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரரோடு சேர்ந்து தங்கள் விசுவாசத்தை யாவரறிய அறிவிக்கின்றனர். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனின் பின்வரும் வார்த்தைகளால் பெருமளவில் ஆறுதல் அடைகின்றனர்: “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.”—ரோமர் 10:9.
[அடிக்குறிப்புகள்]
a பிற்பாடு, ‘அண்ணகன்’ என்ற பதம் பொதுவாக அரசவை அதிகாரியை குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது; இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்பட்ட நபரை குறிக்கவில்லை. பிலிப்புவால் முழுக்காட்டப்பட்ட எத்தியோப்பியன், யூத மதத்திற்கு மாறியவராக தெரிவதால்—விருத்தசேதனம் பண்ணப்படாத யூதரல்லாதவர்களுக்கு வாய்ப்பு திறக்கப்படும் முன்னே முழுக்காட்டப்பட்டதால்—அரசவை அதிகாரி என்ற அர்த்தத்தில்தான் அவர் அண்ணகராக இருந்திருப்பார்.—அப்போஸ்தலர் 8:27-39.
b சிதேக்கியா ராஜாவை நேரடியாக தொடர்புகொண்டவரும், எரேமியாவுக்கு உதவி செய்தவருமான எபேத்மெலேக், அண்ணகன் என அழைக்கப்படுகிறார். அவர் சரீரப்பிரகாரமாக உறுப்பழிப்பு செய்யப்பட்டவர் என்பதையல்ல, அரசவை அதிகாரி என்பதையே இங்கு குறிப்பதாக தோன்றுகிறது.—எரேமியா 38:7-13, NW.
[கேள்விகள்]
1, 2. கிளர்ச்சியூட்டும் என்ன அறிவிப்பு 1935-ல் கொடுக்கப்பட்டது, அது எதன் பாகமாக இருந்தது?
3. கடவுளிடமிருந்து இரட்சிப்பை பெற யூதர்கள் என்ன செய்ய வேண்டும்?
4. ஓய்வுநாளை கடைப்பிடிப்பது ஏன் இஸ்ரவேலில் முக்கியமாக கருதப்படுகிறது?
5. அடிப்படையில், ஓய்வுநாள் சம்பந்தமான புத்திமதியை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?
6. எந்த இரு தொகுதியினரிடம் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது?
7. இஸ்ரவேலில் இருந்த அந்நியர்கள்மீது என்ன வரம்புகளை நியாயப்பிரமாண சட்டம் வைக்கிறது?
8. (அ) நியாயப்பிரமாண சட்டத்தின்கீழ் அண்ணகர்கள் எவ்வாறு கருதப்பட்டனர்? (ஆ) பொய்மத தேசங்களில் எப்படிப்பட்ட பணிகளுக்கு அண்ணகர்கள் பயன்படுத்தப்பட்டனர், ‘அண்ணகன்’ என்ற பதம் சில சமயங்களில் எதைக் குறித்தது?
9. சொல்லர்த்தமான அண்ணகர்களுக்கு என்ன ஆறுதலான வார்த்தைகளை யெகோவா சொல்லுகிறார்?
10. அண்ணகர்களின் நிலையில் எப்போது மாற்றம் ஏற்பட்டது, அதுமுதல் அவர்களுக்கு என்ன சிலாக்கியம் உள்ளது?
11. ஆசீர்வாதங்களைப் பெற, அந்நியர் என்ன செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர்?
12. ‘வேறே ஆடுகளைப்’ பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் ஒருசமயம் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது?
13. மத்தேயு 25-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள செம்மறியாடு போன்றோர், இந்த ஒழுங்குமுறையின் இறுதி பாகத்தில்தான் தோன்றுவர் என ஏன் சொல்லப்பட்டது?
14, 15. முடிவு காலத்தில் வேறே ஆடுகளின் நிலையைப் புரிந்துகொள்வதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது?
16. ‘அந்நியர்’ என்ன சிலாக்கியங்களையும் பொறுப்புகளையும் பெறுகின்றனர்?
17. நவீன நாளைய அந்நியர் புதிய உடன்படிக்கையை எப்படி பற்றிக்கொள்கின்றனர்?
18. முடிவு காலத்தின்போது, என்ன கூட்டிச் சேர்க்கும் வேலை நடைபெற்று வருகிறது?
19. வெளியிலும் காட்டிலும் வசிக்கும் மிருகங்களுக்கு என்ன அழைப்பு கொடுக்கப்படுகிறது?
20, 21. மதத் தலைவர்களின் என்ன தவறான போக்கு ஆவிக்குரிய வழிகாட்டிகளாக இருக்க அவர்களை தகுதியற்றவர்களாக்குகிறது?
22. இயேசுவின் நாட்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் எப்படி பூர்வ யூதாவின் மதத் தலைவர்களைப் போன்று இருக்கிறார்கள்?
23. மதத் தலைவர்களைப் பற்றிய பேதுருவின் எந்த தீர்க்கதரிசனம் நிறைவேறி வந்திருக்கிறது?
24. ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் அந்நியருக்கும் இடையே எப்படிப்பட்ட ஒற்றுமை நிலவுகிறது?
[பக்கம் 250-ன் படம்]
ஜெபம், படிப்பு, தியானம் ஆகியவற்றிற்கு ஓய்வுநாள் வாய்ப்பளிக்கும்
[பக்கம் 256-ன் படங்கள்]
1935-ல், வாஷிங்டன், டி.சி.-யில் நடைபெற்ற மாநாட்டில் வேறே ஆடுகளின் நிலை தெளிவாக விளக்கப்பட்டது (கீழே: முழுக்காட்டுதல் படம், வலது: நிகழ்ச்சிநிரல்)
[பக்கம் 259-ன் படம்]
மிருகங்கள் பட்சிக்க அழைக்கப்படுகின்றன
[பக்கம் 261-ன் படங்கள்]
அந்நியரும் தேவனுடைய இஸ்ரவேலரும் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இருக்கின்றனர்