அதிகாரம் இருபது
யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை
யூத தேசம் யெகோவாவோடு ஓர் உடன்படிக்கைக்குள் இருப்பதாக உரிமை பாராட்டுகிறது. இருந்தாலும், எங்கும் பிரச்சினைதான். நியாயமே இல்லை; குற்றச்செயலும் வன்முறையும் பரவலாக இருக்கின்றன. நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கைக்கே இடமில்லை. ஏதோ மிகப் பெரிய தவறு நடந்திருக்கிறது. யெகோவா இதை எப்போதாவது சரிப்படுத்துவாரா என பலர் யோசிக்கின்றனர். ஏசாயாவின் நாட்களிலுள்ள நிலைமை இதுதான். ஆனால், அந்த சமயத்தைக் குறித்த ஏசாயாவின் விவரப்பதிவு வெறுமனே நடந்து முடிந்த பூர்வ சரித்திரமல்ல. கடவுளை வணங்குவதாக உரிமைப் பாராட்டிக்கொண்டு, அவருடைய சட்டங்களைப் புறக்கணிப்பவர்களுக்கு தீர்க்கதரிசன எச்சரிக்கைகள் அவருடைய வார்த்தையில் உள்ளன. கடினமானதும் ஆபத்துக்கள் நிறைந்ததுமான காலப்பகுதியில் வாழ்ந்தாலும் யெகோவாவை சேவிக்க முயலும் அனைவருக்கும், ஏசாயா 59-ம் அதிகாரத்தில் பதிவாகியுள்ள ஏவப்பட்ட தீர்க்கதரிசனம் பரிவோடு உற்சாகமூட்டுகிறது.
உண்மை கடவுளிடமிருந்து விலகியிருத்தல்
2 சற்று யோசித்துப் பாருங்கள்—யெகோவாவின் உடன்படிக்கை ஜனங்கள் விசுவாசதுரோகத்திற்குள் வீழ்ந்துவிடுகின்றனர்! தங்கள் படைப்பாளரை புறக்கணித்துவிடுகின்றனர். இவ்வாறு, அவருடைய பாதுகாப்பான கரங்களிலிருந்து தங்களை பிரித்துக் கொள்கின்றனர். இதனால் மிகுந்த துன்பத்தை எதிர்ப்படுகின்றனர். தங்களுடைய இக்கட்டான நிலைக்கு ஒருவேளை யெகோவாவை காரணம் காட்டுகின்றனரா? ஏசாயா அவர்களிடம் சொல்கிறார்: “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.”—ஏசாயா 59:1, 2.
3 இந்த வார்த்தைகள் அப்பட்டமானவை, ஆனால் உண்மையானவை. யெகோவாவே இன்னமும் இரட்சிப்பின் தேவன். ‘ஜெபத்தைக் கேட்கிறவராக,’ தம் உண்மையுள்ள ஊழியர்களின் ஜெபங்களை அவர் கேட்கிறார். (சங்கீதம் 65:2) என்றாலும், தவறு செய்பவர்களை அவர் ஆசீர்வதிப்பதில்லை. யெகோவாவிடமிருந்து பிரிந்து போனதற்கு ஜனங்களே பொறுப்பு. அவர்களுடைய அக்கிரமங்களாலேயே அவர் அவர்களுக்கு செவிகொடுக்காமல் முகத்தை மறைக்கிறார்.
4 யூதா படுமோசமாக நடந்திருப்பதே உண்மை. அதற்கு எதிரான சில குற்றச்சாட்டுகளை ஏசாயா தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது: “உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.” (ஏசாயா 59:3) ஜனங்கள் பொய்யையும் அநியாயமான விஷயங்களையும் பேசுகின்றனர். ‘கைகள் இரத்தத்தால் . . . கறைப்பட்டிருக்கிறது’ என்ற சொற்றொடர், சிலர் கொலையும் செய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. கடவுளுக்கு எவ்வளவு பெரிய அவமதிப்பு! அவருடைய சட்டம் கொலையை மட்டுமல்ல, ‘சகோதரனை உள்ளத்தில் பகைப்பதையும்கூட’ தடை செய்கிறது. (லேவியராகமம் 19:17) யூதாவின் ஜனங்களுடைய கட்டுக்கடங்கா பாவங்களும், அவற்றின் நாசகரமான விளைவுகளும் இன்று நமக்கு பாடம் கற்பிக்கின்றன; பாவமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நம் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்துகின்றன. இல்லையெனில், கடவுளிடமிருந்து நம்மை பிரித்துவிடும் துன்மார்க்க செயல்களில் நாம் வீழ்ந்துவிடுவோம்.—ரோமர் 12:9; கலாத்தியர் 5:15; யாக்கோபு 1:14, 15.
5 தேசம் முழுவதையுமே பாவம் சீரழித்திருக்கிறது. தீர்க்கதரிசனம் சொல்கிறது: “நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.” (ஏசாயா 59:4) நீதியைப் பேசுகிறவர் எவருமே இல்லை. நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களிலும், உண்மையுள்ளவரை அல்லது நம்பிக்கைக்குரியவரை காண்பதே அரிதாக இருக்கிறது. யூதா தேசம் யெகோவாவை புறக்கணித்துவிட்டு, தேசங்களுடனான அரசியல் கூட்டுறவுகளிலும், உயிரற்ற விக்கிரகங்களிலும்தான் தன் நம்பிக்கையை வைக்கிறது. இவை அனைத்தும் ‘மாயையே,’ எந்தவிதப் பிரயோஜனமும் அற்றவையே. (ஏசாயா 40:17, 23; 41:29) அதன் விளைவாக, கணக்குவழக்கில்லாத பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன, ஆனால் அவையனைத்தும் உபயோகமற்றவை. திட்டங்கள் பல தீட்டப்படுகின்றன; ஆனால் அவையனைத்தும் பிரச்சினையிலும் தீமையிலுமே விளைவடைகின்றன.
6 யூதாவில் நிலவியதுபோலவே அநீதியும் வன்முறையும் இன்று கிறிஸ்தவமண்டலத்திலும் நிலவுகிறது. (பக்கம் 294-ல் உள்ள “விசுவாசதுரோக எருசலேம்—கிறிஸ்தவமண்டலத்தின் இணை” என்ற பெட்டியைக் காண்க.) கிறிஸ்தவ நாடுகள் என உரிமைப் பாராட்டிக்கொள்பவை கொடூரமான இரண்டு உலக யுத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றன. இதுநாள் வரையாக, தன் உறுப்பினர்களிடையே இருந்துவரும் இனப்படுகொலைகளையோ, ஜாதிச் சண்டைகளையோ கிறிஸ்தவமண்டல மதங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. (2 தீமோத்தேயு 3:5) கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்கும்படி தம் சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார்; என்றாலும், இராணுவ தளவாடங்களிலும் அரசியல் கூட்டுறவுகளிலுமே கிறிஸ்தவமண்டல நாடுகள் நம்பிக்கை வைக்கின்றன. (மத்தேயு 6:10) சொல்லப்போனால், போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருப்பவை பெரும்பாலும் கிறிஸ்தவமண்டல நாடுகளே! ஆம், பாதுகாப்பான எதிர்காலத்திற்காக மனித முயற்சிகளையும் அமைப்புகளையும் கிறிஸ்தவமண்டலம் நம்புகிறது. எனவே, அதுவும் ‘மாயையைத்தான்’ நம்புகிறது.
கசப்பான பலன்களை அறுவடை செய்தல்
7 விக்கிரகாராதனையும் நேர்மையின்மையும் வளமான சமுதாயத்திற்கு வழிவகுக்காது. ஆனால், இப்படிப்பட்ட வழிகளில்தான் விசுவாசமற்ற யூதர்கள் நடக்கின்றனர்; எனவே, அவர்கள் எதை விதைத்தார்களோ அதைத்தான் இப்போது அறுக்கிறார்கள். நாம் வாசிக்கிறோம்: “நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்; சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்; அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்; உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.” (ஏசாயா 59:5, பொ.மொ.) யூதா தீட்டும் திட்டங்கள் யாவும் ஆரம்பம் முதல் முடிவு வரை உபயோகமற்றவை. விஷப் பாம்பின் முட்டைகளிலிருந்து விஷப் பாம்புகள்தான் வெளிவரும்; அதுபோலவே, அவர்களுடைய கெட்ட எண்ணங்கள் தீமையைத்தான் விளைவிக்கின்றன. அதனால் தேசம் அவதிப்படுகிறது.
8 தங்களைக் காத்துக்கொள்ள யூதாவின் குடிகளில் சிலர் வன்முறையை பிரயோகிக்கலாம். ஆனால், அது தோல்வியில்தான் முடிவுறும். மோசமான சீதோஷ்ண நிலையில் ஆடை உடலை பாதுகாப்பதுபோல், சிலந்தி வலையால் காக்க முடியுமோ! அப்படித்தான், யெகோவாவின் மீதுள்ள நம்பிக்கையும் நீதியின் செயல்களும் பாதுகாப்பளிப்பதுபோல் சரீர பலத்தால் பாதுகாப்பளிக்க முடியாது. ஏசாயா அறிவிக்கிறார்: “அவைகளின் நெசவுகள் [“சிலந்திவலை,” NW] வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ள மாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. அவர்கள் கால்கள் பொல்லாப்பைச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.” (ஏசாயா 59:6, 7) யூதாவின் எண்ணம் சரியல்ல. பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள, அது வன்முறையை பிரயோகிக்க முயற்சிக்கிறது; இவ்வாறு கடவுள் பக்தியற்ற மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது. கடவுளின் உண்மையான ஊழியர்களையும் அப்பாவிகளையும் தாக்குகிறோமே என்ற கவலையே அதற்கு கிடையாது.
9 கிறிஸ்தவமண்டலம் சிந்தும் இரத்தத்தை ஏவப்பட்ட இந்த வார்த்தைகள் நினைவுபடுத்துகின்றன. கிறிஸ்தவத்தை தவறாக பிரதிநிதித்துவம் செய்யும் வருந்தத்தக்க செயலுக்காக அது கடவுளுக்கு கணக்கு கொடுத்தாக வேண்டும்! ஏசாயாவின் நாட்களிலிருந்த யூதர்களைப் போலவே கிறிஸ்தவமண்டலமும் ஒழுக்கக்கேடான வழியை பின்பற்றி வந்திருக்கிறது. ஏனென்றால், அதன் தலைவர்கள் இதுதான் நடைமுறையான ஒரே வழியென நம்புகின்றனர். சமாதானத்தைப் பற்றி பேசுகின்றனர், ஆனால் அநியாயத்தையே செய்கின்றனர். என்னே வஞ்சகம்! இப்படிப்பட்ட சூழ்ச்சியை கிறிஸ்தவமண்டலத்தின் தலைவர்கள் தொடர்ந்து பின்பற்றுவதால், மெய் சமாதானம் அவர்களுக்கு கிட்டாது. இதைத்தான் தீர்க்கதரிசனமும் சொல்கிறது: “சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.”—ஏசாயா 59:8.
ஆவிக்குரிய இருளில் தடவுதல்
10 யூதாவின் மாறுபாடான, அழிவுக்குரிய வழிகளை யெகோவா ஆசீர்வதிக்க மாட்டார். (சங்கீதம் 11:5) யூதா தேசத்தின் சார்பாக பேசுவதுபோல, அதன் குற்றத்தை ஏசாயா ஒப்புக்கொள்கிறார்: “நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம். நாங்கள் குருடரைபோல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம்.” (ஏசாயா 59:9-11அ) கடவுளுடைய வார்த்தையை கால்களுக்கு தீபமாகவும் பாதைக்கு வெளிச்சமாகவும் அந்த யூதர்கள் வைக்கவில்லை. (சங்கீதம் 119:105) அதன் விளைவாக, எல்லாமே இருண்டு விடுகிறது. நட்டநடுப் பகலிலும் இரவில் தடவுவதுபோல தடவுகிறார்கள். செத்தவர்களைப்போல் இருக்கின்றனர். இதிலிருந்து விடுதலையை நாடி, பசியுள்ள அல்லது காயம்பட்ட கரடிகளைப்போல சத்தமாக உறுமுகின்றனர். தனிமையில் வாடும் புறாக்களைப்போல் சிலர் பரிதாபமாக கூவுகின்றனர்.
11 கடவுளுக்கு எதிராக கலகம் செய்ததே யூதாவின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் என்பது ஏசாயாவுக்கு நன்கு தெரியும். அவர் சொல்கிறார்: “நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று. எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.” (ஏசாயா 59:11ஆ-13) யூதாவின் குடிகள் மனந்திரும்பாததால் அவர்கள் பாவங்கள் இன்னமும் மன்னிக்கப்படவில்லை. ஜனங்கள் யெகோவாவை விட்டு விலகியிருப்பதால் நியாயம் தேசத்தைவிட்டு விலகியிருக்கிறது. அவர்கள் முழுக்க முழுக்க பொய்யர்களாக நிரூபித்திருக்கின்றனர். தங்கள் சகோதரர்களை அடக்கி ஒடுக்கவும் செய்கின்றனர். இன்றைய கிறிஸ்தவமண்டலத்தினரோடு எவ்வளவு ஒத்திருக்கின்றனர்! அவர்களில் அநேகர் நீதியை புறக்கணிப்பது மட்டுமல்ல, கடவுளுடைய சித்தத்தை செய்ய நாடும் யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளை கடுமையாக துன்புறுத்தவும் செய்கின்றனர்.
யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார்
12 யூதாவில் நீதியில்லை, நியாயமில்லை, சத்தியமுமில்லை. “நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.” (ஏசாயா 59:14) யூதாவில், நகர வாசல்களுக்குப் பின்னால் ஒலிமுகவாசல்கள் அல்லது வீதிகள் உள்ளன; வழக்குகளை விசாரிக்க மூப்பர்கள் இங்குதான் கூடுவர். (ரூத் 4:1, 2, 11) இவர்கள் நீதியின்படி தீர்ப்பளிக்க வேண்டும்; நியாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; லஞ்சம் வாங்கக் கூடாது. (உபாகமம் 16:18-20) மாறாக, யூதாவின் மூப்பர்கள் தங்கள் சுயநல விருப்பத்தின்படி தீர்ப்பு அளிக்கின்றனர். இதைவிட மோசமான காரியம் என்னவென்றால், நன்மை செய்ய மனதார முயற்சி செய்பவர்களை சுலபமான இரையாக கருதுகின்றனர். நாம் வாசிக்கிறோம்: “சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்.”—ஏசாயா 59:15அ.
13 ஒழுக்கக்கேட்டை எதிர்த்து தைரியமாக பேசத் தவறுபவர்கள், கடவுள் குருடருமல்ல, நடப்பதை அறியாதவருமல்ல, சக்தியற்றவருமல்ல என்பதை மறந்துவிடுகின்றனர். ஏசாயா எழுதுகிறார்: “இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.” (ஏசாயா 59:15ஆ, 16) நியாயம் விசாரிக்க நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறுவதால், யெகோவா இந்த விஷயத்தில் தலையிடுவார். அப்படி தலையிடுகையில், அவர் நீதியோடும் வல்லமையோடும் செயல்படுவார்.
14 இன்றும் அதேபோன்ற நிலைமை இருக்கிறது. பெரும்பாலானோர் ‘ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும்’ ஓர் உலகில்தான் நாம் வாழ்கிறோம். (எபேசியர் 4:19, பொ.மொ.) யெகோவா தலையிட்டு பூமியிலிருந்து தீமையை நீக்கிப்போடுவாரென சிலரே நம்புகின்றனர். எனினும், மனித விவகாரங்களை யெகோவா மிக உன்னிப்பாக கவனிக்கிறார் என ஏசாயாவின் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. அவர் தீர்ப்புகள் செய்கிறார், மேலும் தமக்கே உரிய நேரத்தில் அந்த தீர்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுகிறார். அவருடைய தீர்ப்புகள் நியாயமானவையா? நியாயமானவையே என ஏசாயா சுட்டிக்காட்டுகிறார். யூத தேசத்தைக் குறித்து அவர் எழுதுகிறார்: “அவர் [யெகோவா] நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பெனும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதி சரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.” (ஏசாயா 59:17) போருக்கு தயாராகும் மாவீரராக யெகோவாவை இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் சித்தரித்துக் காட்டுகின்றன. அவர் தம் நோக்கத்திற்கிசைய இரட்சிப்பளிப்பதில் குறியாய் இருக்கிறார். தமது உறுதியான, மறுக்க முடியாத நீதியைக் குறித்து அவர் நிச்சயமாக இருக்கிறார். தம் தீர்ப்புகளை சிறிதும் அஞ்சாமல் வைராக்கியமாக நிறைவேற்றுவார். நீதியே ஜெயிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமே இல்லை.
15 இன்று சில நாடுகளில், சத்தியத்தின் எதிரிகள் யெகோவாவின் ஊழியர்களுடைய வேலையை தடை செய்ய முயற்சி செய்கின்றனர். பொய்யான, அவதூறான பிரச்சாரங்களை பரப்புவதன் மூலம் இவ்வாறு செய்கின்றனர். சத்தியத்தின் பக்கம் நிலைநிற்கை எடுக்க உண்மை கிறிஸ்தவர்கள் தயங்குவதில்லை. ஆனால், தனிப்பட்ட விதமாக ஒருபோதும் வஞ்சம் தீர்த்துக்கொள்ள நாடுவதில்லை. (ரோமர் 12:19) விசுவாச துரோக கிறிஸ்தவமண்டலத்தோடு யெகோவா கணக்கு தீர்த்துக்கொள்கையிலும், பூமியில் இருக்கும் அவருடைய வணக்கத்தார் அதை அழிப்பதில் எந்த விதத்திலும் பங்குகொள்ள மாட்டார்கள். பழிவாங்குதல் யெகோவாவுக்கே உரியது எனவும் தக்க நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர்கள் அறிவர். தீர்க்கதரிசனம் இவ்வாறு உறுதியளிக்கிறது: “கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.” (ஏசாயா 59:18) ஏசாயாவின் நாட்களில் நிறைவேறியதுபோலவே, கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் நியாயமாக மட்டுமல்ல முழுமையாகவும் நிறைவேற்றப்படும். தொலை தூரத்திலுள்ள ‘தீவுகளையும்’ அவை சென்றெட்டும். யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் சென்றெட்ட முடியாதளவு தொலைதூரத்திலோ ஒதுக்குப்புறத்திலோ எவரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
16 சரியானதைச் செய்ய கடும் முயற்சி எடுப்போரை யெகோவாவும் நீதியாக நியாயந்தீர்ப்பார். பூமியின் ஒரு முனை துவங்கி மறு முனை மட்டும் இருக்கும் இப்படிப்பட்ட ஜனங்கள் அழிவை தப்பிப்பிழைப்பர் என ஏசாயா முன்னறிவிக்கிறார். யெகோவாவின் பாதுகாப்பை அவர்கள் அனுபவிப்பது அவர்மேல் உள்ள பயபக்தியையும் மரியாதையையும் இன்னும் வலுவாக்கும். (மல்கியா 1:11) நாம் வாசிக்கிறோம்: “சூரியன் அஸ்தமிக்குந்திசை தொடங்கி யெகோவாவின் பெயருக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; ஏனெனில் தம் ஆவியால் உந்தித் தள்ளப்பட்ட காட்டாற்று வெள்ளம்போல் யெகோவா வருவார்.” (ஏசாயா 59:19, NW) கடும் சூறாவளிக்காற்று, காட்டாற்று வெள்ளப்பெருக்கை உந்தித் தள்ளி, அதன் போக்கில் உள்ள அனைத்தையும் ஒட்டுமொத்தமாய் அழிக்கும். அதுபோலவே, யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எல்லா தடைகளையும் அவரது ஆவி அடித்துத் தள்ளிவிடும். மனிதனுடைய எந்த சக்தியையும்விட மிக அதிக ஆற்றல்வாய்ந்தது அவருடைய ஆவி. மனிதர்கள் மற்றும் தேசங்கள்மீது தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற அதைப் பயன்படுத்துகையில் அவர் நிச்சயம் முழுமையான வெற்றி அடைவார்.
மனந்திரும்புவோருக்கு நம்பிக்கையும் ஆசீர்வாதமும்
17 மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தின்கீழ், அடிமையாக விற்கப்பட்ட ஓர் இஸ்ரவேலனை இன்னொருவர் அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்கலாம். அந்த நபர் அவருடைய மீட்பர். ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தில் ஏற்கெனவே ஒருமுறை, மனந்திரும்புகிறவர்களின் மீட்பராக யெகோவா விவரிக்கப்படுகிறார். (ஏசாயா 48:17) இப்போது மனந்திரும்புவோரின் மீட்பராக அவர் மீண்டும் விவரிக்கப்படுகிறார். யெகோவாவின் வாக்குறுதியை ஏசாயா பதிவு செய்கிறார்: “மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 59:20) பொ.ச.மு. 537-ல், நம்பிக்கையூட்டும் இந்த வாக்குறுதி நிறைவேறுகிறது. ஆனால், இதற்கு மற்றுமொரு நிறைவேற்றமும் இருக்கிறது. இந்த வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுல் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டி, கிறிஸ்தவர்களுக்கு அவற்றை பொருத்தினார். அவர் இவ்வாறு எழுதினார்: “இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்; நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.” (ரோமர் 11:26, 27) சொல்லப்போனால் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் இன்னும் மிகப் பெரிய அளவில், அதாவது நம் நாளிலும் எதிர்காலத்திலும் நிறைவேறும். எப்படி?
18 முதல் நூற்றாண்டில், இஸ்ரவேல் தேசத்தாரில் சிறு தொகுதியினரே இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டனர். (ரோமர் 9:27; 11:5) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில், இந்த விசுவாசிகளில் சுமார் 120 பேர்மீது யெகோவா தம் பரிசுத்த ஆவியை ஊற்றி, இவர்களுடன் ஒரு புதிய உடன்படிக்கை செய்தார். அந்த உடன்படிக்கைக்கு இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக இருந்தார். (எரேமியா 31:31-33; எபிரெயர் 9:15) ‘தேவனுடைய இஸ்ரவேல்’ எனும் புதிய தேசம் அந்த நாளில் உருவாக்கப்பட்டது; ஆபிரகாமின் மாம்சப்பிரகாரமான சந்ததியினரல்ல அதன் உறுப்பினர்கள். ஆனால், இவர்கள் கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள். (கலாத்தியர் 6:16) இந்த புதிய தேசத்தில் விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியினரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்; அப்படிப்பட்டவர்களில் முதல் நபர் கொர்நேலியு. (அப்போஸ்தலர் 10:24-48; வெளிப்படுத்துதல் 5:9, 10) இப்படியாக, அவர்கள் யெகோவா தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருடைய ஆவிக்குரிய புத்திரர்களும் இயேசுவின் உடன் ஆட்சியாளர்களுமாயினர்.—ரோமர் 8:16, 17.
19 தேவனுடைய இஸ்ரவேலோடு யெகோவா இப்போது ஓர் உடன்படிக்கை செய்கிறார். நாம் வாசிக்கிறோம்: “உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 59:21) இந்த வார்த்தைகள் ஏசாயாவிடம் நிறைவேறியதோ இல்லையோ, ஆனால் நிச்சயமாக இயேசுவிடம் நிறைவேறின. அவர் ‘தமது சந்ததியைக் காண்பார்’ என உறுதியளிக்கப்பட்டது. (ஏசாயா 53:10) யெகோவாவிடமிருந்து கற்றவற்றை இயேசு பேசினார்; அதுமட்டுமல்ல, யெகோவாவின் ஆவி அவர்மீது இருந்தது. (யோவான் 1:18; 7:16) இயேசுவின் சகோதரரும் உடன் ஆட்சியாளர்களுமான தேவனுடைய இஸ்ரவேலின் உறுப்பினர்கள்கூட யெகோவாவின் பரிசுத்த ஆவியைப் பெறுகின்றனர்; தங்கள் பரலோக தகப்பனிடமிருந்து கற்றவற்றை பிரசங்கிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்கின்றனர்.’ (ஏசாயா 54:13, NW; லூக்கா 12:12; அப்போஸ்தலர் 2:38) ஏசாயா மூலம் அல்லது அவர் தீர்க்கதரிசனமாக அடையாளப்படுத்திய இயேசு மூலம் யெகோவா இப்போது ஓர் உடன்படிக்கையை செய்கிறார். அவர்களை நீக்கிவிடாமல் என்றென்றும் தமது சாட்சிகளாக பயன்படுத்துவதாக உடன்படிக்கை செய்கிறார். (ஏசாயா 43:10) அப்படியானால், இந்த உடன்படிக்கையால் நன்மையடையப் போகிற மற்றொரு தொகுதியினரான அவர்களுடைய “சந்ததி” யார்?
20 பூர்வ காலங்களில், யெகோவா ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி இதுவே: “உன் வித்தின் மூலம் பூமியிலுள்ள சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்.” (ஆதியாகமம் 22:18, NW) இதற்கு இசைவாக, மேசியாவை ஏற்றுக்கொண்ட மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்களில் ஒரு சிறு தொகுதியினர், பல தேசங்களுக்கும் சென்று கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கித்தனர். கொர்நேலியு முதலான விருத்தசேதனம் பண்ணப்படாத புறஜாதியாரில் அநேகர் ஆபிரகாமின் வித்துவாகிய இயேசு மூலமாக ‘தங்களை ஆசீர்வதித்துக்கொண்டனர்.’ அவர்கள் தேவனுடைய இஸ்ரவேலின் பாகமாயினர்; ஆபிரகாமுடைய வித்துவின் இரண்டாம் பாகமும் ஆயினர். அவர்கள் யெகோவாவின் ‘பரிசுத்த ஜாதியின்’ பாகம். ‘[தங்களை] அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை [“மகத்துவங்களை,” NW] அறிவிக்கும்படியான’ பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.—1 பேதுரு 2:9; கலாத்தியர் 3:7-9, 14, 26-29.
21 இன்று, தேவனுடைய இஸ்ரவேலின் எண்ணிக்கை முழுமையடைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், தேசங்கள் தொடர்ந்து ஆசீர்வாதத்தை பெற்று வருகின்றன; அதுவும் மிகப் பெரிய அளவில். எப்படி? எப்படியெனில், தேவனுடைய இஸ்ரவேலுக்கு “சந்ததி” உண்டாகியிருக்கிறது. இந்த பூமியில் பூங்கா போன்ற நிலைமைகளில் நித்திய ஜீவனை பெறும் நம்பிக்கையுள்ள இயேசுவின் சீஷர்களே அந்த சந்ததி. (சங்கீதம் 37:11, 29) இந்த ‘சந்ததியாரும்’ யெகோவாவால் போதிக்கப்பட்டு, அவருடைய வழிகளில் நடக்க அறிவுரை பெறுகின்றனர். (ஏசாயா 2:2-4) இவர்கள் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படவில்லை; புதிய உடன்படிக்கையின் பாகமாக ஆகவில்லை; என்றாலும், அவர்களுடைய பிரசங்க வேலைக்கு சாத்தான் போடும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தகர்த்தெறிய யெகோவாவின் பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்படுகின்றனர். (ஏசாயா 40:28-31) இப்போது லட்சக்கணக்கில் இருக்கும் இவர்கள், சந்ததியை பெற்றெடுத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அபிஷேகம் பண்ணப்பட்டோரோடு யெகோவா செய்திருக்கும் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம், இந்த ‘சந்ததியாருக்கு’ நம்பிக்கையை அளிக்கிறது. தம் சார்பாக பேச இவர்களையும் யெகோவா என்றென்றும் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4, 7.
22 ஆக, நாம் அனைவரும் யெகோவாவில் விசுவாசத்தை காத்துக்கொள்வோமாக. அவர் நம்மை காக்க விருப்பமும் வல்லமையும் உடையவர்! அவரது கரம் எப்போதுமே குறுகிப்போகாது; விசுவாசமுள்ள தம் ஜனங்களை அவர் எப்போதும் காப்பார். அவரை நம்பும் அனைவரும், அவருடைய நல்வார்த்தைகளை “இதுமுதல் என்றென்றைக்கும்” தங்கள் வாய்களில் தொடர்ந்து காப்பர்.
[கேள்விகள்]
1. யூதாவின் நிலைமை என்ன, அநேகர் எதைக் குறித்து யோசிக்கின்றனர்?
2, 3. யெகோவா ஏன் யூதாவை காப்பதில்லை?
4. யூதாவுக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன?
5. யூதாவில் ஊழல் எந்தளவுக்கு வியாபித்திருக்கிறது?
6. கிறிஸ்தவமண்டலத்தின் செயல்கள் எப்படி யூதாவின் செயல்களுக்கு ஒத்திருக்கின்றன?
7. யூதாவின் திட்டங்கள் யாவும் ஏன் தீமையில் முடிகின்றன?
8. யூதாவின் தவறான எண்ணத்தை எது வெளிக்காட்டுகிறது?
9. மெய் சமாதானம் கிறிஸ்தவமண்டலத் தலைவர்களுக்கு ஏன் கிட்டாத ஒன்று?
10. யூதாவின் சார்பாக என்ன குற்றங்களை ஏசாயா ஒப்புக்கொள்கிறார்?
11. நியாயத்திற்கும் இரட்சிப்புக்குமான யூதாவின் நம்பிக்கைகள் ஏன் வீணானவை?
12. யூதாவில், நீதி விசாரணை செய்யும் பொறுப்பில் இருப்பவர்களின் மனப்பான்மை என்ன?
13. யூதாவின் நியாயாதிபதிகள் தங்கள் கடமையிலிருந்து தவறுவதால், யெகோவா என்ன செய்வார்?
14. (அ) இன்று அநேகரின் மனப்பான்மை என்ன? (ஆ) யெகோவா செயல்படுவதற்கு எப்படி தயாராகிறார்?
15. (அ) யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடந்துகொள்வர்? (ஆ) யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளைப் பற்றி என்ன சொல்லலாம்?
16. யெகோவாவின் நியாயத்தீர்ப்பை யார் தப்பிப்பிழைப்பர், தப்பிப்பிழைப்பதிலிருந்து எதை கற்பர்?
17. சீயோனின் மீட்பர் யார், அவர் சீயோனை எப்போது மீட்கிறார்?
18. எப்போது, எப்படி ‘தேவனுடைய இஸ்ரவேலை’ யெகோவா உருவாக்கினார்?
19. தேவனுடைய இஸ்ரவேலோடு என்ன உடன்படிக்கையை யெகோவா செய்கிறார்?
20. ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதி எப்படி முதல் நூற்றாண்டில் நிறைவேறியது?
21. (அ) நவீன காலங்களில், தேவனுடைய இஸ்ரவேல் என்ன ‘சந்ததியை’ பெற்றெடுத்திருக்கிறது? (ஆ) தேவனுடைய இஸ்ரவேலரோடு யெகோவா செய்திருக்கும் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தத்தால் அவர்களுடைய ‘சந்ததியார்’ எவ்வாறு ஆறுதல் பெறுகின்றனர்?
22. யெகோவாவில் நாம் என்ன நம்பிக்கை வைக்கலாம், அது நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
[பக்கம் 294-ன் பெட்டி]
விசுவாசதுரோக எருசலேம்—கிறிஸ்தவமண்டலத்தின் இணை
கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட தேசத்தின் தலைநகரமே எருசலேம். ஆவி சிருஷ்டிகளடங்கிய கடவுளுடைய பரலோக அமைப்பையும் கிறிஸ்துவின் மணவாட்டியாக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதியையும் இது படமாக குறிக்கிறது. (கலாத்தியர் 4:25, 26; வெளிப்படுத்துதல் 21:2) என்றாலும், எருசலேமின் குடிகள் திரும்பத் திரும்ப யெகோவாவிடம் உண்மையற்றவர்களாக நடந்துகொண்டனர். எனவே, அந்த நகரம் வேசியாகவும் விபசாரியாகவும் விவரிக்கப்பட்டது. (எசேக்கியேல் 16:3, 15, 30-42) இந்த நிலையில், எருசலேம் விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்திற்கு பொருத்தமான மாதிரியாக இருந்தது.
‘தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவள்’ என இயேசு எருசலேமை அழைத்தார். (லூக்கா 13:34; மத்தேயு 16:21) விசுவாசமற்ற எருசலேமைப்போல், கிறிஸ்தவமண்டலமும் உண்மையான கடவுளை சேவிப்பதாக உரிமை பாராட்டுகிறது. ஆனால், அவருடைய நீதியான வழிகளிலிருந்து முற்றிலும் வழிமாறிச் செல்கிறது. விசுவாசதுரோக எருசலேமை எந்த நீதியான தராதரங்களின்படி நியாயந்தீர்த்தாரோ, அதே தராதரங்களின்படி கிறிஸ்தவமண்டலத்தையும் யெகோவா நியாயந்தீர்ப்பார் என நாம் உறுதியாய் இருக்கலாம்.
[பக்கம் 296-ன் படம்]
நியாயாதிபதி நீதியாக நியாயந்தீர்க்க வேண்டும், நியாயத்தை நாட வேண்டும், லஞ்சம் வாங்கக்கூடாது
[பக்கம் 298-ன் படம்]
யெகோவாவின் தீர்ப்புகள், அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எல்லா தடைகளையும் காட்டாற்று வெள்ளம்போல் அடித்துத் தள்ளிவிடும்
[பக்கம் 302-ன் படம்]
தம்முடைய சாட்சிகளாக இருக்கும் பாக்கியத்தை தம் ஜனங்கள் ஒருபோதும் இழக்க மாட்டார்கள் என யெகோவா உடன்படிக்கை செய்கிறார்