பிரகாசமாகிவரும் வெளிச்சத்தின் பாதையில் நடத்தல்
“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.”—நீதிமொழிகள் 4:18.
1, 2. யெகோவாவிடமிருந்து வரும் அதிகமதிகமான வெளிச்சத்தினால் அவரது மக்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறார்கள்?
சூரியன் மெல்ல மெல்ல உதித்து இருளை நீக்கும்போது ஏற்படுகிற மாற்றங்களை, வெளிச்சத்தின் ஊற்றுமூலரான யெகோவா தேவனைவிட வேறு யாரால் நன்கு விவரிக்க முடியும்? (சங்கீதம் 36:9) ‘விடியற்காலத்து வெளிச்சம் பூமியின் கடையாந்தரங்களைப் பிடிக்கையில், பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்’ என அவர் விவரிக்கிறார். (யோபு 38:12-14) சூரிய வெளிச்சம் அதிகரிக்க அதிகரிக்க பூமியிலுள்ள அனைத்தும் மேன்மேலும் தெளிவாகக் காட்சியளிக்கிறது; மிருதுவான களிமண்மீது ஒரு சின்னத்தின் முத்திரை பதிக்கப்படும்போது அதன் ரூபம் மாறுவது போலவே பூமியின் ரூபமும் மாறுகிறது.
2 யெகோவா, ஆன்மீக வெளிச்சத்தின் ஊற்றுமூலராகவும் இருக்கிறார். (சங்கீதம் 43:3) இவ்வுலகம் காரிருளில் மூழ்கியிருக்கையில், மெய்த் தேவனாகிய யெகோவா தம் மக்கள்மீது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்கிறார். அதன் விளைவு? “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 4:18) யெகோவாவிடமிருந்து வரும் அதிகமதிகமான வெளிச்சம், தொடர்ந்து அவருடைய மக்களின் பாதையைப் பிரகாசிக்கச் செய்கிறது; அமைப்பு சம்பந்தப்பட்ட, கோட்பாடு சம்பந்தப்பட்ட, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட அம்சங்களில் அவர்களை மேன்மேலும் மெருகூட்டுகிறது.
அறிவொளியின் அதிகரிப்பால் அமைப்பு சீரடைகிறது
3. ஏசாயா 60:17-ல் என்ன வாக்குறுதி உள்ளது?
3 ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா இவ்வாறு முன்னறிவித்தார்: ‘நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணுவேன்.’ (ஏசாயா 60:17) தரம் குறைந்தவற்றிற்குப் பதிலாக தரம் உயர்ந்தவற்றைப் பயன்படுத்துவது முன்னேற்றத்தைக் குறிக்கிறது; அதேபோல், யெகோவாவின் சாட்சிகள் ‘உலகத்தின் முடிவு’ காலமாகிய ‘கடைசி நாட்கள்’ முழுவதும், அமைப்பு சார்ந்த செயல்முறைகளில் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர்.—மத்தேயு 24:3; 2 தீமோத்தேயு 3:1.
4. 1919-ல் என்ன ஏற்பாடு ஆரம்பமானது, அது எவ்வாறு பயனளித்தது?
4 கடைசி நாட்களின் ஆரம்பப் பகுதியில், பைபிள் மாணாக்கர்கள் என அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள், தங்கள் மூப்பர்களையும் டீக்கன்களையும் (உதவி ஊழியர்களையும்) ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தன. இருந்தாலும், சில மூப்பர்களுக்கு பிரசங்கிப்பதில் உண்மையான ஆர்வமே இருக்கவில்லை. சிலர் பிரசங்க வேலையில் ஈடுபடாதது மட்டுமல்லாமல், அதில் ஈடுபடாதபடி மற்றவர்களுடைய ஆர்வத்தையும் குலைத்துப் போட்டார்கள். ஆகவே, 1919-ல் ஒவ்வொரு சபையிலும் ‘சர்வீஸ் டைரக்டர்’ என்ற ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டார். அவர் சபையினரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை; ஆனால் கிளை அலுவலகத்தால் தேவராஜ்ய முறையில் நியமிக்கப்பட்டார். பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பது, பிராந்தியங்களை நியமிப்பது, வெளி ஊழியத்தில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்துவது ஆகியவையே அவரது பொறுப்புகள். தொடர்ந்துவந்த ஆண்டுகளில் ராஜ்ய பிரசங்க வேலை மிகுந்த உத்வேகத்தோடு செய்யப்பட்டது.
5. 1920-களில் என்ன சீரமைப்பு செய்யப்பட்டது?
5 அதன் பிறகு, 1922-ல் அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடந்த பைபிள் மாணாக்கர்களின் மாநாட்டில், “ராஜாவையும் அவரது ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என்ற அழைப்பு அனைவரையும் இன்னுமதிகமாக தூண்டியெழுப்பியது. 1927-க்குள் வெளி ஊழியம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டது; வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு ஞாயிற்றுக்கிழமையே மிகப் பொருத்தமான நாள் என தீர்மானிக்கப்பட்டது. ஏன்? ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் பெரும்பாலானோர் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார்கள். இன்றும் யெகோவாவின் சாட்சிகள் அதே மனப்பாங்குடன், ஜனங்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் சமயங்களில் ஊழியம் செய்ய முயற்சி செய்கிறார்கள்; உதாரணமாக, வார இறுதி நாட்களிலும் மாலை நேரங்களிலும் ஊழியம் செய்கிறார்கள்.
6. 1931-ல் என்ன உறுதிமொழி ஏற்கப்பட்டது, அது ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை எவ்வாறு முன்னேற்றுவித்தது?
6 ஜூலை 26, 1931, ஞாயிற்றுக்கிழமை மதியம், ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு பெரும் தூண்டுதல் கிடைத்தது; அன்றைய தினம் அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில் நடந்த மாநாட்டில் ஓர் உறுதிமொழி எடுக்கப்பட்டது; அதன் பிறகு உலகெங்கும் அது எடுக்கப்பட்டது. அந்த உறுதிமொழியின் ஒரு பகுதி இது: “நாங்கள் யெகோவா தேவனின் ஊழியர்கள், அவருடைய பெயரில் ஒரு வேலையைச் செய்யும் பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியும் வகையில், இயேசு கிறிஸ்து பிரசங்கித்த செய்தியை அறிவிக்கவும், யெகோவாவே சர்வவல்லமையுள்ள மெய்யான கடவுள் என்று ஜனங்களுக்குத் தெரிவிக்கவும் வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது; ஆகையால், கர்த்தராகிய தேவனே வைத்த பெயரை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம், அந்தப் பெயராலேயே நாங்கள் அறியப்படவும், அழைக்கப்படவும் விரும்புகிறோம், அப்பெயர்: யெகோவாவின் சாட்சிகள்.” (ஏசாயா 43:10) அப்பெயரைத் தரித்திருக்கும் அனைவரும் செய்ய வேண்டிய முக்கிய வேலையை அது எவ்வளவு தெளிவாக எடுத்துக்காட்டியது! ஆம், யெகோவா தம் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வேலையை வைத்திருந்தார். மொத்தத்தில், அந்த வேலையில் அனைவருமே மிகுந்த உற்சாகத்தோடு ஈடுபட ஆரம்பித்தார்கள்.
7. 1932-ல் என்ன மாற்றம் ஏற்பட்டது, ஏன்?
7 அநேக மூப்பர்கள் மனத்தாழ்மையோடு பிரசங்க வேலைக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள். ஆனால் சில இடங்களில், ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்கள், சபையிலுள்ள அனைவருமே பிரசங்க ஊழியத்தில் ஈடுபட வேண்டுமென்ற கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள். அப்படியிருந்தும், இன்னுமதிக முன்னேற்றங்கள் ஏற்படவிருந்தன. 1932-ல், மூப்பர்களையும் டீக்கன்களையும் இனியும் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கக் கூடாதென காவற்கோபுர பத்திரிகையின் மூலம் சபைகளுக்குச் சொல்லப்பட்டது. அதற்குப் பதிலாக, சபைகள் ஓர் ஊழியக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும், பிரசங்க ஊழியத்தில் பங்குபெறுகிற ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஆண்கள் அந்தக் குழுவில் இருக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டது. இவ்வாறு, ஊழியத்தில் உற்சாகத்தோடு பங்குபெற்றவர்களே கண்காணிகளாய் நியமிக்கப்பட்டார்கள்; ஆகவே, ஊழிய வேலை தொடர்ந்து முன்னேறியது.
அதிகமான வெளிச்சம்—கூடுதலான முன்னேற்றங்கள்
8. 1938-ல் நடந்த சீரமைப்பு என்ன?
8 வெளிச்சம் ‘அதிகமதிகமாய்ப் பிரகாசித்தது.’ 1938-ல், ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் முறை முற்றிலும் நீக்கப்பட்டது. சபை ஊழியர்கள் அனைவரும் தேவராஜ்ய முறைப்படி, அதாவது ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ கண்காணிப்பில் நியமிக்கப்பட்டார்கள். (மத்தேயு 24:45-47, NW) இந்த மாற்றத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய அனைத்து சபைகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது; சாட்சிகொடுக்கும் வேலை தொடர்ந்து பலனளித்தது.
9. 1972-ல் என்ன ஏற்பாடு ஆரம்பமானது, அது எவ்வாறு ஒரு சீரமைப்பாக இருந்தது?
9 அக்டோபர் 1, 1972-ல் சபை கண்காணிப்பு சம்பந்தமாக மற்றொரு சீரமைப்பு செய்யப்பட்டது. உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், ஒரேவொரு சபை ஊழியருக்குப் பதிலாக, அதாவது கண்காணிக்குப் பதிலாக, மூப்பர் குழு ஒன்றை நியமிக்கும் ஏற்பாடு ஆரம்பமானது. இந்தப் புதிய ஏற்பாடு, சபையை முன்னின்று வழிநடத்தும் தகுதியைப் பெற முதிர்ச்சியுள்ள ஆண்களுக்கு மிகுந்த உத்வேகம் அளித்திருக்கிறது. (1 தீமோத்தேயு 3:1-7) இதன் காரணமாக, அநேக சகோதரர்கள் சபை பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட புதியவர்களை மேய்ப்பதில் அவர்கள் எப்பேர்ப்பட்ட மதிப்புள்ள பங்காற்றியிருக்கிறார்கள்!
10. 1976-ல் என்ன ஏற்பாடு அமலுக்கு வந்தது?
10 ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் ஆறு குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டார்கள்; ஜனவரி 1, 1976 முதல், அமைப்பின் நடவடிக்கைகளும் உலகெங்குமுள்ள சபைகளின் நடவடிக்கைகளும் இந்தக் குழுக்களுடைய மேற்பார்வையின் கீழ் வந்தன. ராஜ்ய வேலையின் அனைத்து அம்சங்களுமே ‘ஆலோசனைக்காரர் அநேகரால்’ வழிநடத்தப்படுவது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது!—நீதிமொழிகள் 15:22; 24:6.
11. 1992-ல் என்ன மாற்றம் செய்யப்பட்டது, எதற்காக?
11 இன்னொரு மாற்றம் 1992-ல் செய்யப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்களும் மற்றவர்களும் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்று திரும்பியபோது நடந்த சீரமைப்புக்கு ஒத்ததாக அது இருந்தது. அச்சமயத்தில், ஆலயப் பணிகளைச் செய்யப் போதுமான லேவியர்கள் இருக்கவில்லை. ஆகவே லேவியர்களுக்கு பணிவிடை செய்ய இஸ்ரவேலரல்லாத நிதனீமியர் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல், அதிகரித்துவரும் பூமிக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாருக்கு உதவிசெய்ய ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களில் சிலருக்கு 1992-ல் கூடுதலான ஊழியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. ஆளும் குழுவின் வெவ்வேறு குழுக்களுக்கு அவர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.—யோவான் 10:16.
12. யெகோவா எவ்வாறு சமாதானத்தை நம் கண்காணிகளாய் நியமித்திருக்கிறார்?
12 இந்தச் சீரமைப்புகளின் விளைவு என்ன? “உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலை வாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்” என யெகோவா சொல்கிறார். (ஏசாயா 60:17, பொ.மொ.) இன்று யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் ‘சமாதானம்’ இருக்கிறது; “நேர்மை” அவர்களை ‘வேலை வாங்குகிறது,’ அதாவது கடவுளுக்கு ஊழியம் செய்யும்படி தூண்டும் சக்தியாக ஆகியிருக்கிறது. ராஜ்ய பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் செய்ய அவர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்.—மத்தேயு 24:14; 28:19, 20.
கோட்பாடுகளை யெகோவா வெளிச்சமாக்குகிறார்
13. கோட்பாடு சம்பந்தமாக யெகோவா தம் மக்களின் பாதையை எவ்வாறு 1920-களில் வெளிச்சமாக்கினார்?
13 கோட்பாடுகள் சம்பந்தமாகவும் யெகோவா தம் மக்களின் பாதையை வெளிச்சமாக்குகிறார். வெளிப்படுத்துதல் 12:1-9 அதற்கு ஓர் உதாரணத்தை அளிக்கிறது. அடையாள அர்த்தமுள்ள மூன்று கதாபாத்திரங்களைப் பற்றி அது குறிப்பிடுகிறது—கர்ப்பவதியாக இருந்து பிள்ளைபெறும் ஒரு “ஸ்திரீ,” ஒரு ‘வலுசர்ப்பம்,’ ஓர் “ஆண்பிள்ளை.” இவர்கள் யாரைக் குறிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 1925, மார்ச் 1, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பத்திரிகையில் வெளிவந்த, “ஒரு தேசத்தின் பிறப்பு” என்ற கட்டுரை இதற்கு விளக்கம் அளித்தது. ராஜ்யத்தின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசனங்களை நன்றாகப் புரிந்துகொள்ள அக்கட்டுரை கடவுளுடைய மக்களுக்கு உதவியது; யெகோவாவின் அமைப்பு, சாத்தானின் அமைப்பு என்ற இரண்டு தனித்தனி அமைப்புகள் இருப்பதை அது தெள்ளத்தெளிவாக்கியது. அதன்பின் 1927/28-ல், கிறிஸ்மஸும் பிறந்தநாள் கொண்டாட்டமும் வேதப்பூர்வமற்றவை என்பதை கடவுளுடைய மக்கள் புரிந்துகொண்டார்கள், பிறகு அவற்றில் ஈடுபடுவதை நிறுத்தினார்கள்.
14. 1930-களில் என்னென்ன கோட்பாடுகள் தெளிவாக்கப்பட்டன?
14 1930-களில், இன்னும் மூன்று கோட்பாடுகள்மீது யெகோவா வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார். வெளிப்படுத்துதல் 7:9-17-ல் சொல்லப்பட்டுள்ள ‘திரள் கூட்டத்தார்,’ கிறிஸ்துவுடன் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் பணியாற்றப்போகிற 1,44,000 பேரிலிருந்து வித்தியாசமானவர்கள் என்பதை பைபிள் மாணாக்கர்கள் பல ஆண்டுகளாகவே அறிந்திருந்தார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-5) ஆனால் திரள் கூட்டத்தார் உண்மையில் யார் என்பது தெளிவற்றதாகவே இருந்தது. அதிகாலையில் மங்கலாகத் தெரியும் பொருள்கள் சூரிய வெளிச்சம் அதிகரிக்க அதிகரிக்க மேன்மேலும் தெளிவாகக் காட்சியளிப்பதுபோல், 1935-ல் திரள் கூட்டத்தாரின் அடையாளமும் தெளிவானது; அவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தப்பிப்பிழைத்து பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடையவர்கள் என்பது புலப்பட்டது. அதே வருடத்தின் பிற்பகுதியில் மற்றொரு விஷயமும் தெளிவானது. அந்த விஷயம், அநேக நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளை—பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை—பாதித்தது. உலகெங்கும் தேசப்பற்று தீவிரமாகியிருந்த சமயத்தில், கொடி வணக்கம் வெறும் சம்பிரதாயமல்ல என்பதை சாட்சிகள் புரிந்துகொண்டார்கள். அதற்கடுத்த வருடம், மற்றொரு கோட்பாடு விளக்கப்பட்டது; அதாவது, கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை, ஆனால் கழுமரத்தில் இறந்தார் என்பது விளக்கப்பட்டது.—அப்போஸ்தலர் 10:39.
15. இரத்தத்தின் புனிதத்தன்மை எப்போது, எவ்வாறு வலியுறுத்தப்பட்டது?
15 இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இரத்தத்தின் பரிசுத்தத்தன்மை சம்பந்தமாக கூடுதலான வெளிச்சம் பிரகாசித்தது; அச்சமயத்தில், காயமடைந்த போர்வீரர்களுக்கு இரத்தம் ஏற்றுவது பழக்கமாக இருந்தது. ஆனால் ஜூலை 1, 1945, ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு ஊக்கப்படுத்தியது: ‘நீதியுள்ள புதிய உலகில் நித்திய வாழ்வைப் பெற நாடும் யெகோவாவின் வணக்கத்தார் அனைவரும் இரத்தத்தின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும், இந்த முக்கிய விஷயம் சம்பந்தமான கடவுளுடைய நீதியுள்ள சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.’
16. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு எப்போது வெளியிடப்பட்டது, அதன் இரண்டு சிறப்பம்சங்கள் யாவை?
16 1946-ல், ஒரு புதிய பைபிள் மொழிபெயர்ப்பு தேவையென உணரப்பட்டது; அன்றைய நவீன அறிவையும் புலமையையும் பயன்படுத்தி, கிறிஸ்தவமண்டல பாரம்பரியங்களால் கறைபடாதபடி அதைத் தயாரிக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பு வேலை டிசம்பர் 1947-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1950-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. எபிரெய வேதாகமம் ஆங்கிலத்தில் ஐந்து தொகுப்புகளாக 1953 முதற்கொண்டு வெளிவந்தது. கடைசி தொகுப்பு 1960-ல் வெளியிடப்பட்டது; ஆக, மொழிபெயர்ப்பு வேலை முடிவடைய 12 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக ஆனது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாக 1961-ல் வெளியிடப்பட்டது. இப்போது அநேக மொழிகளில் கிடைக்கும் இந்த மொழிபெயர்ப்பில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. கடவுளுடைய பெயரான யெகோவா, உரிய இடங்களில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மூலப் பதிவுகளில் உள்ளபடியே அனைத்தும் சொல்லர்த்தமாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், தெய்வீக சத்தியங்களைப் புரிந்துகொள்ளுவதில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
17. 1962-ல் வெளிச்சம் எவ்வாறு கூடுதலாகப் பிரகாசித்தது?
17 ரோமர் 13:1-ல் சொல்லப்பட்டுள்ள ‘மேலான அதிகாரமுள்ளவர்கள்’ யார் என்பதும், அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் எந்தளவு கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதும் 1962-ல் தெளிவுபடுத்தப்பட்டது. ரோமர் 13-ஆம் அதிகாரத்தையும் தீத்து 3:1, 2, 1 பேதுரு 2:13, 17 போன்ற வசனங்களையும் ஆழமாக ஆராய்ச்சி செய்ததில், அந்த ‘மேலான அதிகாரமுள்ளவர்கள்’ யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் அல்ல, மாறாக மனித அரசாங்க அதிகாரிகளே என்பது தெளிவானது.
18. 1980-களில் தெளிவாக்கப்பட்ட சில சத்தியங்கள் என்னென்ன?
18 தொடர்ந்துவந்த ஆண்டுகளில் நீதிமான்களின் பாதை மேன்மேலும் பிரகாசமாகி வந்தது. “ஜீவனை அளிக்கும்” நீதிக்கு ஏதுவான தீர்ப்பைப் பெறுவதும், கடவுளுடைய சிநேகிதர் என அழைக்கப்படும்படி நீதிமானாய் எண்ணப்படுவதும் எதைக் குறிக்கின்றன என்பது 1985-ல் தெளிவாக்கப்பட்டது. (ரோமர் 5:18; யாக்கோபு 2:23) கிறிஸ்தவ யூபிலியின் அர்த்தம் 1987-ல் முழுமையாக விளக்கப்பட்டது.
19. சமீப ஆண்டுகளில் யெகோவா எவ்வாறு தம் மக்களுக்கு இன்னுமதிகமான ஆன்மீக வெளிச்சத்தை அளித்திருக்கிறார்?
19 1995-ல் ‘செம்மறியாடுகளும்’ ‘வெள்ளாடுகளும்’ பிரிக்கப்படுவதன் அர்த்தம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டது. 1998-ல் எசேக்கியேல் கண்ட ஆலய தரிசனத்திற்கு விவரமான விளக்கம் கிடைத்தது; அது ஏற்கெனவே நிறைவேறி வரும் ஒரு தரிசனமாகும். 1999-ல், ‘பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ எவ்வாறு, எப்போது என்பவற்றிற்கு விளக்கம் தரப்பட்டது. (மத்தேயு 24:15, 16; 25:32) 2002-ல், கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்வதன் அர்த்தம் இன்னும் தெளிவானது.—யோவான் 4:24.
20. வேறெந்த அம்சங்களில் கடவுளுடைய மக்கள் சீரமைக்கப்பட்டிருக்கிறார்கள்?
20 அமைப்பு மற்றும் கோட்பாடு சம்பந்தமான சீரமைப்புகளுடன், கிறிஸ்தவ நடத்தை சம்பந்தமான சீரமைப்புகளும் செய்யப்பட்டன. உதாரணத்திற்கு, 1973-ல் புகையிலையைப் பயன்படுத்துவது ‘மாம்சத்தை அசுசிப்படுத்தும்’ என்றும், அது பெரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் புரிந்துகொள்ளப்பட்டது. (2 கொரிந்தியர் 7:1) பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 15, 1983 தேதியிட்ட காவற்கோபுரம், துப்பாக்கியைப் பயன்படுத்துவது சம்பந்தமான நம் நிலைநிற்கையைத் தெளிவாக்கியது. நம் காலத்தில் வெளிச்சம் பிரகாசித்து வருவதற்கு இவை சில உதாரணங்களே.
பிரகாசமாகிவரும் வெளிச்சத்தின் பாதையில் தொடர்ந்து நடவுங்கள்
21. பிரகாசமாகிவரும் வெளிச்சத்தின் பாதையில் தொடர்ந்து நடக்க எப்படிப்பட்ட மனப்பான்மை நமக்கு உதவும்?
21 “புதிய சீரமைப்புகளை ஏற்றுக்கொள்வதும் அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதும் கஷ்டமாக இருக்கலாம்” என நீண்ட காலம் மூப்பராக சேவைசெய்த ஒருவர் ஒப்புக்கொள்கிறார். அவர் தன்னுடைய 48 ஆண்டுகால பிரசங்க வேலையில் அநேக சீரமைப்புகளை கண்ணாரக் கண்டிருக்கிறார்; அவற்றை ஏற்றுக்கொள்ள எது அவருக்கு உதவியிருக்கிறது? அவர் இவ்வாறு சொல்கிறார்: “சரியான மனப்பான்மைதான் மிக முக்கியம். புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தோமென்றால், அமைப்பு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும்போது நாம் மட்டும் பின்தங்கி விடுவோம். மாற்றங்களை ஏற்றுக்கொள்வது எனக்குக் கஷ்டமாக இருந்தால், இயேசுவிடம் பேதுரு சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்திப் பார்ப்பேன்; ‘ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே’ என அவர் சொன்னதை நினைத்துப் பார்ப்பேன். அதன்பின், ‘நான் எங்கே போவேன்—உலகத்தின் இருளுக்குள்ளா?’ என என்னையே கேட்டுக்கொள்வேன். இப்படிக் கேட்டுக்கொள்வது, கடவுளுடைய அமைப்பை உறுதியாகப் பற்றிக்கொள்ள எனக்கு உதவுகிறது.”—யோவான் 6:68.
22. வெளிச்சத்தில் நடப்பதால் நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
22 நம்மைச் சுற்றியுள்ள உலகம் காரிருளில் மூழ்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. யெகோவா தம் மக்கள்மீது தொடர்ந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்கையில், அவர்களுக்கும் உலகத்தாருக்கும் உள்ள இடைவெளி அகலமாகிக்கொண்டே போகிறது. அந்த வெளிச்சம் நமக்கு என்ன செய்கிறது? இருண்ட சாலையிலுள்ள ஒரு குழியின் மீது வெளிச்சத்தைக் காட்டுவது, அந்தக் குழியை நீக்கிவிடாது; அதுபோலவே கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சம் படுகுழிகளை நீக்கிவிடாது. ஆனாலும், அவற்றைத் தவிர்க்க நிச்சயமாகவே நமக்கு உதவும்; இவ்வாறு, பிரகாசமாகிவரும் வெளிச்சத்தின் பாதையில் நம்மால் தொடர்ந்து நடக்க முடியும். ஆக, யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையை ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போல்’ கருதி, தொடர்ந்து அதற்குக் கவனம் செலுத்துவோமாக.—2 பேதுரு 1:19.
நினைவிருக்கிறதா?
• அமைப்பு சார்ந்த என்ன சீரமைப்புகளை யெகோவா செய்திருக்கிறார்?
• அதிகமதிகமாக பிரகாசிக்கும் வெளிச்சத்தால், கோட்பாடு சம்பந்தமாக என்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?
• நீங்கள் தனிப்பட்ட விதமாக என்னென்ன மாற்றங்களைப் பார்த்திருக்கிறீர்கள், அவற்றை ஏற்றுக்கொள்ள எது உங்களுக்கு உதவியிருக்கிறது?
• பிரகாசமாகிவரும் வெளிச்சத்தின் பாதையில் தொடர்ந்து நடக்க நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?
[பக்கம் 27-ன் படங்கள்]
1922-ல் ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடந்த மாநாடு கடவுளுடைய ஊழியத்தைச் செய்ய பைபிள் மாணாக்கர்களுக்கு உத்வேகம் அளித்தது
[பக்கம் 29-ன் படம்]
“கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு” பைபிளை 1950-ல் என்.எச். நார் வெளியிட்டார்
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com