இன்று ஆளும் குழுவுடன் ஒத்துழைத்தல்
“தமக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான்.”—லூக்கா 12:44.
1. பொ.ச. 33-ல் கிறிஸ்து எந்த ராஜ்யத்தில் ஆளத் தொடங்கினார்? எதைக் கொண்டு?
பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று, சபையின் தலைவரான இயேசு கிறிஸ்து ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய அடிமைகளின் ராஜ்யத்தில் சுறுசுறுப்பாக ஆட்சி செய்யத் தொடங்கினார். எவ்விதமாக? பரிசுத்த ஆவி, தூதர்கள் மற்றும் காணக்கூடிய ஓர் ஆளும் குழுவின் மூலமாக. அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்ட வண்ணமே, தேவன், ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினார்.’—கொலோசெயர் 1:13–18; அப்போஸ்தலர் 2:33, 42; 15:2; கலாத்தியர் 2:1, 2; வெளிப்படுத்துதல் 22:16.
2. கிறிஸ்து 1914-ல் எந்தப் பெரிய ராஜ்யத்தில் ஆளத் தொடங்கினார்?
2 “புறஜாதியாருக்கு நியமிக்கப்பட்ட காலங்களின்” முடிவில் கிறிஸ்துவுடைய அரச அதிகாரம், கிறிஸ்தவ சபைக்கும் அப்பால் செல்லும்படியாக யெகோவா அதைப் பெருக்கினார். (லூக்கா 21:24) ஆம், 1914-ல் தேவன் தம்முடைய குமாரனுக்கு “ஜாதிகள்” மேலும், “இவ்வுலக ராஜ்யங்கள்” மேலும் மனிதவர்க்கம் அனைத்தின் மேலும் ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார்.—சங்கீதம் 2:6–8; வெளிப்படுத்துதல் 11:15.
“தமக்குள்ளதெல்லாவற்றின் மேலும்” நியமிக்கப்படுதல்
3, 4. (எ) ராத்தல் பற்றிய இயேசுவின் உவமையில் ராஜகுடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறான்? (பி) 1918 மற்றும் 1919-ல் என்ன ராஜ்ய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன?
3 ராஜகுடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனைப் பற்றிய இயேசுவின் உவமை இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. (லூக்கா 19:11–27) அந்த மனிதன் ஆட்சி செய்யும் அதிகாரத்தைப் பெறுவதற்காகத் தூரதேசத்திற்குப் பிரயாணம் பண்ணுவதற்கு முன்பு வியாபாரம் செய்யும்படியாகத் தனது அடிமைகளுக்கு பணத்தைக் (ராத்தல்) கொடுத்தான். கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த மனிதன் திரும்பிய பிறகு, “தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.” (லூக்கா 19:15) இது இயேசு அரச அதிகாரத்தைப் பெற்ற பிறகு எவ்வாறு செயல்பட்டது?
4 1918-ல் ஒரு சிறிய கிறிஸ்தவத் தொகுதி கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைவிட்டு வெளியேறி தங்களுடைய எஜமானரின் பூமிக்குரிய அக்கறைகளைக் கவனிப்பதில் தங்களை சுறுசுறுப்பாய் ஈடுபடுத்திக்கொண்டிருப்பதை சிங்காசனத்தில் ஏற்றப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்து கண்டார். நெருப்பில் புடமிட்டதைப்போன்று அவர்களைப் புடமிட்டப் பிறகு 1919-ல் தம்முடைய அடிமைகளுக்கு இயேசு கூடுதல் அதிகாரத்தை அளித்தார். (மல்கியா 3:1–4; லூக்கா 19:16–19) “தமக்குள்ள எல்லாவற்றின்மேலும்” அவர்களை நியமித்தார்.—லூக்கா 12:42–44.
“தகுதியான காலத்தில் படி கொடுத்தல்”
5, 6. (எ) கிறிஸ்துவின் உக்கிராணக்காரர் என்ன விரிவான வேலை நியமிப்புகளைப் பெற்றனர்? (பி) 1914-க்குப் பின்னர் எந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டியிருந்தன? அவற்றின் நிறைவேற்றத்தில் உக்கிராண வகுப்பு எவ்விதத்தில் சுறுசுறுப்பான பங்கை வகிப்பவர்களாய் இருந்தனர்?
5 ஆட்சி செய்துகொண்டிருக்கும் அரசரான இயேசு கிறிஸ்து தம்முடைய உக்கிராணக்காரனுக்கு அல்லது வீட்டு விசாரணைக்காரனுக்கு பூமியில் ஒரு விரிவாக்கப்பட்ட வேலையைக் கொடுத்தார். அபிஷேகம்பண்ணப்பட்டக் கிறிஸ்தவர்கள், முடிசூட்டப்பட்டு பூமியின் சகல ஜனங்களின் மீதும் ஆளுகை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அரசருக்குப் பதிலாக “ஸ்தானாபதிகளாக” இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 5:20; தானியேல் 7:14) அடிப்படையில் அவர்களுடைய மொத்த வேலை கிறிஸ்துவின் அபிஷேகம்பண்ணப்பட்ட பணிவிடைக்காரருக்கு மட்டும் “தகுதியான காலத்தில் படி கொடுத்தலாக” இனிமேலும் இருக்கப் போவதில்லை. (லூக்கா 12:42) அவர்கள் இப்பொழுது 1914-ல் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பிறகு நிறைவேற்றமடையவிருந்த தீர்க்கதரிசனங்களின் பேரில் உழைப்பதற்கு சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருக்க வேண்டியவர்களாயிருந்தனர்.
6 நடைமுறையில் இது எதை அர்த்தப்படுத்தியது? ‘குடியிருக்கப்பட்ட பூமி எங்கும் ராஜ்யத்தினுடைய நற்செய்தி’ பிரசங்கிக்கப்படுவதையே அர்த்தப்படுத்தியது. (மத்தேயு 24:14) மேலும் சாத்தானிய பொல்லாத ஒழுங்குமுறைக்கும் அதன் ஆதரவாளருக்கும் எதிராக வல்லமைவாய்ந்த நியாயத்தீர்ப்பு செய்திகளைப் பிரஸ்தாபப்படுத்துவதைக் குறித்தது. இது ‘ஜாதிகளை அசைப்பதில்’ விளைவடைந்தது. இப்படியாக “விரும்பப்பட்டவைகள்,” கிறிஸ்துவின் “வேறே ஆடுகள்” உள்ளே வர ஆரம்பித்தன. (ஆகாய் 2:7; யோவான் 10:16) 1935-லிருந்து “திரள் கூட்டம்” உலகமுழுவதிலும் யெகோவாவின் அமைப்பிற்குள் திரளாக வர ஆரம்பித்தது. (வெளிப்படுத்துதல் 7:9, 10) இது அமைப்பில் படிப்படியான முன்னேற்றங்களைக் கேட்பதாயிருந்தது. அடையாள அர்த்தத்தில், கற்கள் இரும்பாலும், மரம் வெண்கலத்தாலும், இரும்பு வெள்ளியாலும், வெண்கலம் பொன்னாலும் மாற்றியமைக்கப்பட வேண்டியதாயிருந்தன. (ஏசாயா 60:17) இவை அனைத்துமே 1919-லிருந்து தம்முடைய ராஜ்ய அக்கறைகளை அல்லது உடைமைகளை உண்மையுள்ள அடிமை வகுப்பினருக்கும் அதன் ஆளும் குழுவுக்கும் ஒப்படைத்திருக்கிற கிறிஸ்துவின் சுறுசுறுப்பான மற்றும் நெருங்கிய வழிநடத்துதலின் கீழ் நிகழ்ந்திருக்கின்றன.
7. உக்கிராணக்காரனின் கூடுதல் பொறுப்புகள் எதை உட்படுத்தியது?
7 எஜமானரின் அடிமை, அவருடைய உக்கிராணக்காரன் அல்லது அவருடைய வீட்டு விசாரணைக்காரன் மீது இருக்கும் கனமான அதிகரிக்கப்பட்ட இந்தப் பொறுப்பு புத்தகங்கள் எழுதுவதும் பிரசுரிப்பதுமான நடவடிக்கைகளை உட்படுத்தியது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆவிக்குரிய உணவு ஒழுங்காக ஏற்ற வேளையில் காவற்கோபுரம் (The Watchtower) பத்திரிகையில் பிரசுரிக்கப்படவேண்டியிருந்தது. 1919-ல் தி கோல்டன் ஏஜ் (The Golden Age) [பின்னர் கான்சலேஷன் (Consolation) என்றும் அதற்கும் பின்னர் விழித்தெழு! என்றும் வெளியான ஓர் உடன் பத்திரிகை] பொது மக்களின் அக்கறையைத் தூண்டுவதற்காகவும், அத்துடன் “வேலைக்காரர்” கட்டியெழுப்பப்படுவதற்கும் பிரசுரிக்கப்பட ஆரம்பித்தது. (மத்தேயு 24:45) கடந்த ஆண்டுகளினூடே வெள்ளப்பெருக்கைப்போன்று ஏராளமான புத்தகங்கள், சிறுபுத்தகங்கள், துண்டுப்பிரதிகள் ஆகியவை பிரசுரிக்கப்பட்டுவந்திருக்கின்றன.
தொடர்ந்திருந்த தெளிவுகள்
8. காணக்கூடிய ஆளும் குழுவின் அங்கத்தினர் முதலில் எதனுடன் தங்களை அடையாளப்படுத்திக் காட்டினர்? காவற்கோபுரம் 1944-ல் என்ன குறிப்பைக் கூறியது?
8 இந்த “முடிவு காலத்தில்” நாம் பின்னே பார்க்கும் போது, ஆளும் குழுவின் அங்கத்தினர் முதலில் காவற்கோபுர சங்கத்தின் பதிப்பு ஆசிரியர் தொகுதியினரோடு நெருக்கமாக தங்களை அடையாளப்படுத்திக் காட்டியதில் ஆச்சரியமில்லை. (தானியேல் 12:4) காவற்கோபுரம் நவம்பர் 1, 1944 தேதியிட்ட ஆங்கில பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட “இன்று தேவராஜ்ய இசைவு” என்ற கட்டுரை குறிப்பிட்டதாவது: “பசியோடும் தாகத்தோடுமுள்ள மற்றவர்களுக்கு இந்த வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களைப் பரப்புவதில் ஐக்கியத்தோடு தேவனைச் சேவிக்கவும், ஆவியோடும் உண்மையோடும் அவரை வணங்கவும் விரும்பிய எல்லாரையும் வழிநடத்தவும் வெளிப்படுத்தப்பட்ட பைபிள் சத்தியங்களைக் கொண்ட பிரசுரங்கள் எவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அவர்களே நியாயமாக கர்த்தருடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஆளும் குழுவாகக் கருதப்பட்டனர்.”
9. ஆளும் குழு பின்னர் எதனுடன் மிக நெருங்க அடையாளங்கண்டுகொள்ளப்பட்டது? ஏன்?
9 இந்தப் பத்திரிகைகளையும் மற்ற பைபிள் படிப்பு ஏதுக்களையும் பிரசுரிப்பதில் சட்டப்பூர்வமான தேவைகள் உட்பட்டிருந்தன. எனவே அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் பென்சில்வேனியாவில் பதிவுசெய்யப்பட்டு காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கம் (The Watch Tower Bible and Tract Society) நிறுவப்பட்டது. காணக்கூடிய ஆளும் குழு பல ஆண்டுகளாக உலக முழுவதிலுமுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்குத் தேவையானதும், அவர்கள் பயன்படுத்துவதுமான பைபிள் படிப்பு ஏதுக்களைப் பிரசுரிக்கும்படி நிறுவப்பட்ட இச்சங்கத்தின் ஏழு உறுப்பினர் கொண்ட நிர்வாக இயக்குநர் குழுவாக அடையாளங்கண்டுகொள்ளப்பட்டது.
10, 11. 1944-ல் என்ன சுத்திகரிப்பு நடைபெற்றது? இதைக் குறித்து காவற்கோபுரம் பத்திரிகையில் என்ன குறிப்பு கூறப்பட்டது?
10 சங்கத்தின் இந்த ஏழு நிர்வாக இயக்குநர்களும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் ஒரு சட்டப்பூர்வமான சங்கத்தின் அலுவலர்களாக இருந்தது, ஒருவேளை அவர்கள் ஆளும் குழுவில் தங்களுடைய ஸ்தானங்களைக் காவற்கோபுர சங்கத்தின் சட்டப்பூர்வ அங்கத்தினரால் தேர்வு செய்யப்படுவதன் மூலம் கொண்டிருந்ததாகக் குறிக்கப்பட்டிருக்கலாம். மேலுமாக, அத்தகைய அங்கம் வகித்தலும், அதன் தேர்தல் சிலாக்கியங்களும் சங்கத்திற்கு நிதி உதவியை நன்கொடையாகக் கொடுக்கும் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடு மாற்றப்பட வேண்டியிருந்தது. இந்த மாற்றம் அக்டோபர் 2, 1944-ல் நடைபெற்ற பென்சில்வேனியாவிலுள்ள காவற்கோபுர சங்கத்தின் வருடாந்தர கூட்டத்தில் செய்யப்பட்டது. உறுப்பினர் இனி ஒருபோதும் நிதி உதவி அடிப்படையில் இல்லாதபடிக்குச் சங்கத்தின் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. உறுப்பினர்கள் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தனர். புரூக்ளினிலுள்ள சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திலும், உலகம் முழுவதிலுமுள்ள கிளைக்காரியாலயங்களிலும் பல வகைகளில் முழுநேர சேவை செய்துவந்தவர்களை இது உட்படுத்தியது.
11 இந்த முன்னேற்றத்தின் பேரில் அறிக்கைசெய்த நவம்பர் 1, 1944 ஆங்கில காவற்கோபுரம் குறிப்பிட்டதாவது: “நிதி உதவி சார்ந்த நன்கொடைகளின் வடிவில் உள்ள பணமானது, தீர்மானத்துக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது. உண்மையில் அதற்கும் பூமியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு உறுப்பினரைப் பூர்த்திசெய்வதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்கக்கூடாது. . . . இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவாவிடமிருந்து இறங்கிவரும் கிரியை செய்யும் சக்தியாகிய பரிசுத்த ஆவியே இவ்விஷயத்தைத் தீர்மானித்து வழிநடத்த வேண்டும்.”
நிர்வாக இயக்குநர் குழுவிலிருந்து வித்தியாசப்பட்டது
12. ஆளும் குழுவுடைய வழிநடத்துதலின் கீழ் இந்தச் சுத்திகரிப்புகளை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதை எது காண்பிக்கிறது?
12 தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் இவ்வேலையின் முன்னேற்றந்தானே நவீன நாளைய ஆளும் குழுவின் புரிந்துகொள்ளதலில் காணப்படும் இந்தச் சுத்திகரிப்பை யெகோவா ஆசீர்வதித்தார் என்று நிரூபிக்கிறது. (நீதிமொழிகள் 10:22) உலக முழுவதிலுமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1944-ல் 1,30,000-ற்கும் குறைவாக இருக்க அது 1970-ல் 14,83,430-ஐ எட்டியது! ஆனால் தொடர்ந்து முன்னேற்றங்கள் வரவிருந்தன.
13. (எ) 1971 வரை ஆளும் குழுவைக் குறித்ததில் நிலை என்னவாக இருந்தது? (பி) 1971-ல் சங்கத்தின் வருடாந்தரக் கூட்டத்தில் என்ன நடந்தது?
13 1971 வரையிலும் ஆளும்குழு இன்னும் பென்சில்வேனியாவிலுள்ள காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கத்தின் நிர்வாக இயக்குநர்களடங்கிய ஏழு அங்கத்தினர்களால் குறிக்கப்பட்டது. மேலுமாக, சங்கத்தின் தலைவரே உலகம் முழுவதிலுமிருந்த சங்கத்தின் கிளைக்காரியாலயங்களின் செயல் முறைகளைப் பாதிக்கும் தீர்மானங்கள் எடுக்கும் கடினமான முக்கியப் பொறுப்பைக் கையாண்டார். ஆனால் அக்டோபர் 1, 1971-ல் நடைபெற்ற வருடாந்தரக் கூட்டத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் பேச்சுகள் கொடுக்கப்பட்டன. “பரிசுத்த ஸ்தலத்தைச் சரியான நிலைமைக்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பில் சங்கத் தலைவரும் “ஒரு சட்டப்பூர்வமான சங்கத்திலிருந்து வித்தியாசப்பட்ட ஓர் ஆளும் குழு” என்ற தலைப்பில் துணைத்தலைவரும் பேசினர். ஆளும் குழுவிற்கும் சட்டப்பூர்வமான சங்கத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?
14. சட்டப்பூர்வமான சங்கத்துக்கும் ஆளும் குழுவுக்கும் இடையே என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?
14 ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, பென்சில்வேனியாவின் காவற்கோபுரம் பைபிள் மற்றும் துண்டுபிரதி சங்கம் ஏழுபேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக இயக்குநர்களைக் கொண்டிருக்கிறது. ஒப்புக்கொடுத்தக் கிறிஸ்தவர்களாகிய இவர்கள் மூன்றாண்டு காலத்திற்கு சங்கத்திலுள்ள 500-க்கு மேற்படாத அங்கத்தினரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அல்லர். மேலுமாக ஒரு குறிப்பிட்ட பூகோள தலைமைக் காரியாலயத்துடன் சங்கம் இருப்பதுதானே முற்றிலும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால், அது நாட்டின் இராயனால் அதாவது அரசால் கலைக்கப்படக்கூடும். (மாற்கு 12:17) மறுபட்சத்தில் ஆளும்குழு என்பது, மெய்யாக ஒரு சட்டப்பூர்வமான கருவியாக இல்லை. அதன் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறதில்லை. அவர்கள் யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகின்றனர். (அப்போஸ்தலர் 20:28 ஒப்பிடவும்.) மேலுமாக, ஆளும்குழுவிலுள்ளவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு பூகோள வரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது தலைமைக் காரியாலயம் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை.
15. டிசம்பர் 15, 1971-ன் ஆங்கில காவற்கோபுரம் பத்திரிகையில் அமைப்பு பற்றி என்ன சொல்லப்பட்டது? நவீன நாளைய ஆளும் குழுவைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
15 புரிந்துகொள்ளுதலில் இந்தத் தெளிவுகளைப் பற்றி விமர்சிக்கும் வகையில் டிசம்பர் 15, 1971 ஆங்கில காவற்கோபுரம் வெளியீடு இப்படியாகக் குறிப்பிட்டது: “நன்றி தெரிவிக்கும் வகையில் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் இது ஓர் ஒற்றை மனித மத அமைப்பு அல்ல, ஆனால் இது ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய ஓர் ஆளும் குழுவைக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் உறுதியாகச் சொல்லிக் கொண்டுமிருக்கின்றனர்.” அபிஷேகம்பண்ணப்பட்ட அடிமை வகுப்பினரின் ஆளும் குழுவும், வேறே ஆடுகளின் மத்தியிலுள்ள அவர்களுடைய இலட்சக்கணக்கான கூட்டாளிகளும் அதன் கண்காணிப்புப் பொறுப்பைக் கவனித்துக்கொள்வதற்கு படிப்படியாக ஆயத்தம் செய்யப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
16. 1971 முதல் கிறிஸ்துவின் பூமிக்குரிய உடைமைகள் எப்படி அதிகரித்திருக்கிறது? இவற்றில் ஆளும் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனின் பொறுப்பில் அவர் ஒப்படைத்திருக்கும் சில காரியங்கள் என்ன?
16 அரசராகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய உடைமைகள் தொடர்ந்து அதிகரித்திருக்கின்றன. 1971-ல் சாட்சிகள் எண்ணிக்கை 16,00,000-க்கும் குறைவாக இருந்தது 1989-ல் உச்ச எண்ணிக்கையாக 37,00,000-ற்கும் அதிகமாக ஆகிவிட்டது. கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு என்னே ஓர் அத்தாட்சி! (ஏசாயா 60:22) ஆனால் இந்த வளர்ச்சி தலைமைக் காரியாலயத்திலும் கிளைக்காரியாலயங்களிலும் கட்டிட வசதிகளைப் பெருக்குவதையும் உற்பத்தி மற்றும் விநியோகிப்பு முறைகளை நவீனப்படுத்துவதையும் தேவைப்படுத்தியிருக்கிறது. அது பூமி முழுவதிலும் பல ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டுவதில் விளைவடைந்திருக்கிறது. எல்லாச் சமயங்களிலும் ஆளும் குழு பிரசங்க வேலையை மேற்பார்வை செய்வதையும் வேதப்படிப்பு ஏதுக்களைத் தயாரிப்பதையும் கண்காணிகளைக் கிளைகளிலும் மாவட்டங்களிலும் வட்டாரங்களிலும் மேலும் சபைகளிலும் நியமிப்பதையும் உள்ளடக்கிய பொறுப்பையும்கூட கவனித்துவந்திருக்கிறது. இவைதானே ஆளும் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் கவனிப்புக்காகக் கிறிஸ்து ஒப்படைத்திருக்கும் ராஜ்ய அக்கறைகளாய் இருக்கின்றன.
17. 1971, 1974 மற்றும் 1976-ல் கண்காணிப்பு விஷயத்தில் மேலும் என்ன முன்னேற்றங்கள் செய்யப்பட்டன?
17 முதல் நூற்றாண்டில் இயேசுவின் அப்போஸ்தலருக்கும் கூடுதலாக மற்றவர்களையும் கொண்டிருக்கும்வகையில் ஆளும் குழு விரிவாக்கப்பட்டது. விருத்தசேதனம் சம்பந்தப்பட்ட பிரச்னை எழும்பியபோது, அந்தக் குழு ‘எருசலேமிலிருந்த அப்போஸ்தலரையும் மூப்பரையும்’ உட்படுத்தியது. (அப்போஸ்தலர் 15:1, 2) அதற்கு ஒப்பாக ஆளும் குழு 1971-லும் மறுபடியுமாக 1974-லும் விரிவாக்கப்பட்டது. அவர்களுடைய கண்காணிப்பு வேலையை எளிதாக்கும்படி ஆளும் குழு ஜனவரி 1, 1976 முதல் ஐந்து குழுக்கள் செயல்பட ஆரம்பிக்கும்படி ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு குழுவும் மூன்றிலிருந்து ஆறு அங்கத்தினர்களைக் கொண்டது. அனைவருமே ஆலோசிக்கப்படும் காரியங்களின் மீது சமமான கருத்துரிமையைக் கொண்டவர்கள். ஒவ்வொரு குழுவின் அக்ராசினரும் ஒரு வருட காலம் பணியாற்றுவார். ஆளும் குழுவின் தனிப்பட்ட அங்கத்தினர்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழுக்களில் பணியாற்றுவர். இந்த ஐந்து குழுக்களில் ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் பூமிக்குரிய உடைமைகளின் குறிப்பிட்ட அம்சத்துக்குத் தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாக இருக்கிறது. அக்ராசினர் குழு எனப்படும் ஆறாவது குழு ஒவ்வொரு வருடமும் சுற்றுமுறைப்படியான உறுப்பினரைக் கொண்டிருக்கும். இது எழும் அவசரப் பிரச்னைகளைக் கையாளும்.
ஆளும் குழுவுடன் முழுமையான ஒத்துழைப்பு
18. ஆளும் குழு எவ்வாறு செயல்படுகிறது? அதோடு நம்முடைய ஒத்துழைப்பைக் காட்டக்கூடிய ஒரு வழி என்ன?
18 ஆளும் குழுவின் இந்தக் குழுக்கள் வாராந்தர கூட்டங்களை நடத்துகின்றன. முக்கியமான காரியங்களை மறு பரிசீலனைச் செய்யவும் ஜெபத்தோடு கூடிய தீர்மானங்களை எடுக்கவும், எதிர்கால தேவராஜ்ய நடவடிக்கைகளுக்காக திட்டமிடவும் அவ்வாறு நடத்துகிறது. முன்னால் கவனித்தபடி, அப்போஸ்தலர் 15-ம் அதிகாரம் தீர்மானிக்கப்படவேண்டிய முக்கிய கேள்விகள் முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை காட்டுகிறது. இன்றும் அப்படியே இருக்கிறது. முக்கிய கேள்விகள் வாரம் ஒரு முறை அல்லது அவசியப்பட்டால் அதிக முறை கூடும் அந்த முழு ஆளும் குழுவிடமும் கொண்டுவரப்படுகின்றன. தற்போது 12 பேரைக் கொண்டிருக்கும் ஆளும் குழு அங்கத்தினர்கள் வேதவாக்கியங்களின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடுகின்றனர். நாம் தனிப்பட்ட வகையில் ஆளும் குழுவுடன் நம்முடைய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் ஒரு வழி அவர்களை நம்முடைய அன்றாட ஜெபங்களில் நினைப்பதாகும்.—ரோமர் 12:12.
19. ஆளும் குழுவின் அறிவுரைகள் சபைகளுக்கு எப்படி வந்து சேருகிறது?
19 ஆளும் குழுவின் புத்திமதிகளும் தீர்மானங்களும் சபைக்கு எப்படி வந்து சேருகின்றன? முதல் நூற்றாண்டு ஆளும் குழு கடவுளுடைய ஆவியின் உதவியால் தீர்மானத்திற்கு வந்த பிறகு, அவர்கள் சபைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். (அப்போஸ்தலர் 15:22–29) என்றபோதிலும் இன்று இது முக்கியமாகக் கிறிஸ்தவ பிரசுரங்கள் மூலம் செய்யப்படுகிறது.
20 பிப்ரவரி 1, 1976 முதல் காவற்கோபுர சங்கத்தின் ஒவ்வொரு கிளைக்காரியாலயமும் ஆளும் குழுவால் நியமிக்கப்பட்ட திறமையுள்ள ஆட்களைக் கொண்ட ஒரு கிளைக் காரியாலய குழுவைக் கொண்டிருக்கிறது. இந்தச் சகோதரர்கள் கிளைக்காரியாலயத்தின் மேற்பார்வையின் கீழிருக்கும் ஒரு நாட்டிற்கு அல்லது நாடுகளுக்கு ஆளும் குழுவின் பிரதிநிதிகளாய் உண்மையுள்ள, விசுவாசமுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும். இது பூர்வ இஸ்ரவேலில் ஜனங்களை நியாயம் விசாரிக்க மோசேவுக்கு உதவிய திறமையுள்ள, தேவனுக்குப் பயந்த நம்பத்தக்க மனிதர்களை நமக்கு நினைப்பூட்டுகிறது. (யாத்திராகமம் 18:17–26) கிளைக்காரியாலய குழுவின் உறுப்பினர்கள் சங்கத்தின் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் நம் ராஜ்ய ஊழியம் மூலமாகப் பெறப்பட்ட அறிவுரைகளையும், உள்ளூர் பிரச்னைகளோடு சம்பந்தப்பட்ட பொதுவான கடிதங்கள் மற்றும் விசேஷ கடிதங்களில் வரும் யோசனைகளையும் அமல்படுத்துகின்றனர். கிளைக்காரியாலய குழுக்கள் ஒவ்வொரு தேசத்திலும் காலத்தோடொட்டிய வேலையின் முன்னேற்றத்தையும் எழும்பக்கூடிய பிரச்னைகளையும் ஆளும் குழுவிற்கு அவ்வப்போது தெரியப்படுத்துவர். இவ்வாறு உலகமுழுவதிலுமிருந்து பெறப்படும் அறிக்கைகள், சங்கத்தின் பிரசுரங்களில் கையாளப்படும் விஷயங்களைத் தீர்மானிப்பதில் ஆளும் குழுவிற்கு உதவுகிறது.
21. பயணக் கண்காணிகள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்? அவர்களுடைய பெறுப்புகள் எதையும் உட்படுத்துகின்றன?
21 பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் கிளைக்காரியாலய குழுக்கள் முதிர்ச்சியுள்ள ஆவிக்குரிய ஆட்களை வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளாக சேவை செய்யும்படி சிபாரிசு செய்கின்றனர். ஆளும் குழுவால் நேரடியாக நியமிக்கப்பட்ட பின்பு, இந்தச் சகோதரர்கள் பிரயாணக் கண்காணிகளாக சேவை செய்கின்றனர். அவர்கள் ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பும்படியும், ஆளும் குழுவிடமிருந்து பெறப்பட்ட புத்திமதிகளைப் பொருத்திப் பிரயோகிக்க உதவவும் வட்டாரங்களையும் சபைகளையும் சந்திக்கின்றனர். (அப்போஸ்தலர் 16:4; ரோமர் 1:11, 12-ஐ ஒப்பிடவும்.) பிரயாண கண்காணிகள் கிளைக்காரியாலயங்களுக்கு அறிக்கைகளை அனுப்புகின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவி மற்றும் ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்தின் துணை கொண்டு, உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் ஆளும் குழுவால் அல்லது அதன் பிரதிநிதிகளால் நியமிக்கப்படும்படி உள்ளூர் மூப்பர்களுடன் சேர்ந்து அதற்குத் தகுதியான சகோதரர்களைச் சிபாரிசு செய்கின்றனர்.—பிலிப்பியர் 1:1; தீத்து 1:5; 1 தீமோத்தேயு 3:1–13; 4:14-ஐ ஒப்பிடவும்.
22. (எ) சபையின் மூப்பர்கள் எவ்வாறு ஆளும் குழுவுடன் ஒத்துழைக்கின்றனர்? (பி) இந்தத் தேவராஜ்ய ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதை எது நிரூபிக்கிறது?
22 மூப்பர் குழுக்கள் ‘தங்களைக் குறித்தும் பரிசுத்த ஆவி தங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருக்கிறார்கள்.’ (அப்போஸ்தலர் 20:28) இந்தக் கண்காணிகள் யெகோவாவிடமிருந்தும் கிறிஸ்துவிடமிருந்தும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை மற்றும் அதன் ஆளும் குழுவின் மூலமாக பெறப்பட்ட புத்திமதிகளைப் பொருத்திப் பிரயோகிக்கும்படி உண்மையுடன் நாடுகின்றனர். இந்தத் தேவாட்சிமுறை ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார், ஏனென்றால் ‘சபைகள் விசுவாசத்திலே ஸ்திரப்பட்டு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றன.’—அப்போஸ்தலர் 16:5.
23. ஆளும் குழுவைக் குறித்ததில், நாம் என்ன செய்ய தீர்மானம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்?
23 யெகோவா தேவனும் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவும் கடவுளுடைய மக்களுக்குத் தங்களுடைய ஆதரவை ஆளும் குழுவின் மூலம் தொடர்ந்து தெரியப்படுத்துகிறார்கள் என்பது எவ்வளவு நேர்த்தியாயிருக்கிறது! (சங்கீதம் 94:14) யெகோவாவின் அமைப்பின் ஒரு பாகமாக நாம் அப்படிப்பட்ட ஆதரவிலிருந்து தனிப்பட்டவிதத்தில் நன்மை அடைகிறோம். (சங்கீதம் 145:14) இதுதானே கடவுளுடைய ஏற்பாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்த வேண்டும். ஆம், “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்,” காலத்தை நோக்கி நாம் முன்னேறுகையில், நாம் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவுடன் சேர்ந்து எல்லாச் சமயத்திலும் ஒத்துழைப்பவர்களாய் காணப்படுவோமாக.—ஏசாயா 11:9. (w90 3/15)
நினைவில் கொண்டிருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
◻ உக்கிராண வகுப்பார் 1919-ல் என்ன கூடுதலான உத்தரவாதங்களைப் பெற்றனர்?
◻ காணக்கூடிய ஆளும் குழு அநேக ஆண்டுகளாக எதனுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது?
◻ ஆளும் குழு அங்கத்தினர்களின் நியமிப்பில் முன்னேற்றத்திற்குரிய என்ன சுத்திகரிப்புகள் செய்யப்பட்டன?
◻ தம்முடைய அடிமை வகுப்புக்கும் அதன் ஆளும் குழுவுக்கும் கிறிஸ்து ஒப்படைத்திருக்கும் பூமிக்குரிய சில உடைமைகள் யாவை?
◻ ஆளும் குழுவுடன் நாம் எவ்வாறு ஒத்துழைக்கலாம்?
20. (எ) 1976-ல் அமைப்பு சம்பந்தப்பட்ட மேலும் என்ன சுத்திகரிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன? (பி) கிளைக் காரியாலய குழுக்கள் எவ்வாறு ஆளும் குழுவுடன் ஒத்துழைக்கின்றன?
[பக்கம் 16,17-ன் படங்கள்]
ஆளும் குழு நியு யார்க்கில் புரூக்ளினிலுள்ள அதன் உலக தலைமைக் காரியாலயத்திலிருந்து காவற்கோபுர சங்கத்தின் 93 கிளைகளிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் பிரசுரிக்கும் மற்றும் பிரசங்கிக்கும் வேலையை மேற்பார்வையிடுகிறது
ஜெர்மனி
ஜப்பான்
தென் ஆப்பிரிக்கா
பிரேஸில்