யெகோவாவின் மகிமை அவருடைய மக்கள்மீது பிரகாசிக்கிறது
‘யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமாவார்.’—ஏசாயா 60:20, தி.மொ.
1. தமது உண்மையுள்ள மக்களை யெகோவா எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்?
“கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.” (சங்கீதம் 149:4) இவ்வாறு பூர்வ சங்கீதக்காரன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது. யெகோவாவின் மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கையில் அவர் அவர்களை கவனித்துக் கொள்கிறார், பலனளிக்கிறார், பாதுகாக்கிறார். பூர்வ காலங்களில், அவர்களுடைய எதிரிகள்மீது வெற்றி சிறக்க செய்தார். இன்று, ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவர்களாக இருக்க உதவுகிறார், இயேசுவின் பலியின் அடிப்படையில் இரட்சிப்பை அவர்களுக்கு உறுதியளிக்கிறார். (ரோமர் 5:9) அவருடைய பார்வையில் அவர்கள் அழகுள்ளவர்களாக இருப்பதால் இதை எல்லாம் செய்கிறார்.
2. கடவுளுடைய மக்கள் எதிர்ப்பை சந்தித்தபோதிலும் எதைப் பற்றி நிச்சயமாயிருக்கிறார்கள்?
2 இருளில் மூழ்கியிருக்கும் இந்த உலகில் ‘தேவபக்தியாய் நடக்கிறவர்கள்’ நிச்சயம் எதிர்ப்பை சந்திப்பார்கள். (2 தீமோத்தேயு 3:12) என்றாலும், எதிரிகளை யெகோவா கவனித்து அவர்களை இவ்வாறு எச்சரிக்கிறார்: “உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.” (ஏசாயா 60:12) இன்று பல விதங்களில் எதிர்ப்பு எழுகிறது. சில நாடுகளிலுள்ள எதிரிகள், நேர்மை இருதயமுள்ள கிறிஸ்தவர்கள் யெகோவாவிற்கு செய்யும் சேவையை குறைத்துப்போட அல்லது தடை செய்ய முயலுகின்றனர். மற்ற நாடுகளிலோ, மதவெறியர்கள் யெகோவாவின் வணக்கத்தாரை நேரடியாக தாக்கி அவர்களுடைய சொத்துக்களை எரித்து நாசமாக்குகின்றனர். ஆனால், யெகோவாவின் நோக்கம் நிறைவேற எது முட்டுக்கட்டையாக இருந்தாலும் அதற்கு என்ன நேரிடும் என்பதை அவர் முன்னரே தீர்மானித்துவிட்டதை மறந்துவிடாதீர்கள். எதிர்ப்பவர்கள் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார்கள். பூமியில் அவளுடைய பிள்ளைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் சீயோனை எதிர்த்து போரிடும் எவரும் நிச்சயம் வெற்றி பெற மாட்டார்கள். நம்முடைய மகத்தான கடவுளாகிய யெகோவா தரும் இந்த வாக்குறுதி ஊக்கமளிக்கவில்லையா?
எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய ஆசீர்வாதம்
3. யெகோவாவின் வணக்கத்தாருடைய அழகும் செழிப்பும் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன?
3 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில், யெகோவா தம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மிஞ்சி அவர்களை ஆசீர்வதித்திருப்பதே உண்மை. முக்கியமாக, தமது வணக்க ஸ்தலத்தையும் தமது பெயரை தரித்தவர்களாக, அதற்குள் இருப்பவர்களையும் தொடர்ந்து அலங்கரித்திருக்கிறார். ஏசாயா தீர்க்கதரிசனத்தின்படி அவர் சீயோனிடம், “என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்” என்று கூறுகிறார். (ஏசாயா 60:13) செழிப்பான காடுகள் நிறைந்த மலைகள் கண்கொள்ளா காட்சியாகும். ஆகவே செழிப்பான மரங்கள், யெகோவாவின் வணக்கத்தாருடைய அழகிற்கும் செழிப்புக்கும் பொருத்தமான அடையாளங்களாகும்.—ஏசாயா 41:19; 55:13.
4. ‘பரிசுத்த ஸ்தானமும், [யெகோவாவின்] பாதஸ்தானமும்’ எதைக் குறிக்கின்றன, அவை எவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளன?
4 ஏசாயா 60:13-ல் சொல்லப்பட்டுள்ள ‘பரிசுத்த ஸ்தானம்’ என்பதும் ‘[யெகோவாவின்] பாதஸ்தானம்’ என்பதும் எதைக் குறிக்கின்றன? இந்தப் பதங்கள் யெகோவாவின் மாபெரும் ஆவிக்குரிய ஆலயத்தின் பிரகாரங்களைக் குறிக்கின்றன; இந்த ஆவிக்குரிய ஆலயம், இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவாவை வணங்குவதற்கான ஏற்பாடாகும். (எபிரெயர் 8:1-5; 9:2-10, 23) அந்த ஆவிக்குரிய ஆலயத்தில் வணங்குவதற்காக எல்லா தேசத்தாரையும் கூட்டிச்சேர்த்து அதை மகிமைப்படுத்துவதே தமது நோக்கம் என்பதை யெகோவா தெரிவித்திருக்கிறார். (ஆகாய் 2:7) எல்லா தேசங்களையும் சேர்ந்த கூட்டத்தார் யெகோவாவின் உயர்த்தப்பட்ட வணக்கமாகிய மலைக்கு ஓடி வருவதை ஏசாயா முன்னரே மனக்கண்ணில் பார்த்திருந்தார். (ஏசாயா 2:1-4) நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு, “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்க[ளை]” அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் பார்த்தார். இவர்கள், “தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 15) இந்தத் தீர்க்கதரிசனங்கள் நம் நாளில் நிறைவேறுகையில் யெகோவாவின் ஆலயம் அலங்கரிக்கப்படுவதை நாமே கண்ணார பார்த்திருக்கிறோம்.
5. சீயோனின் பிள்ளைகள் என்ன மாபெரும் முன்னேற்றத்தை அனுபவித்தனர்?
5 இவை அனைத்தும் சீயோனுக்கு எவ்வளவு பெரிய முன்னேற்றமாக இருந்துள்ளன! “நீ கைவிடப்பட்டும் வெறுக்கப்பட்டுமிருந்தாய், எவரும் உன் வழியாய்க் கடந்துபோகவில்லை. அப்படியிருந்த உன்னை நித்திய மாட்சிமைக்கும் தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய இடமாக வைப்பேன்.” (ஏசாயா 60:15, தி.மொ.) முதல் உலக யுத்தம் முடியும் தறுவாயில், “தேவனுடைய இஸ்ரவே[ல்]” கொஞ்ச காலத்திற்கு பாழாய் கிடந்தது உண்மையே. (கலாத்தியர் 6:16) பூமியிலுள்ள அவளுடைய பிள்ளைகளுக்கான கடவுளுடைய நோக்கத்தை அவள் தெளிவாக புரிந்துகொள்ளாததால் முற்றிலும் ‘கைவிடப்பட்டதைப்’ போல் உணர்ந்தாள். ஆனால் அபிஷேகம் செய்யப்பட்ட தம் ஊழியர்களை 1919-ல் யெகோவா உயிர்ப்பித்தது முதல் அபரிமிதமான ஆவிக்குரிய செழுமையால் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். அதுமட்டுமா, இந்த வசனத்திலுள்ள வாக்குறுதியும் கிளர்ச்சியூட்டவில்லையா? யெகோவாவின் பார்வையில் சீயோன் ‘பெருமைக்குரியதாக’ இருக்கும். ஆம், சீயோனின் பிள்ளைகளும் யெகோவாவும்கூட அவளைக் குறித்து பெருமைப்படுவார்கள். அது “மகிழ்ச்சியாக,” எல்லையற்ற ஆனந்தத்திற்கு காரணமாக இருக்கும். அதுவும் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே அல்ல. பூமியிலுள்ள அவளுடைய பிள்ளைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் சீயோனின் உயர்ந்த நிலை “தலைமுறை தலைமுறையாயிருக்கும்.” அதற்கு முடிவே இருக்காது.
6. தேசங்களிலுள்ள வளங்களை உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு உபயோகிக்கின்றனர்?
6 கடவுள் கொடுக்கும் மற்றொரு வாக்குறுதியை கேளுங்கள். சீயோனிடம் பேசுகிறவராக யெகோவா இவ்வாறு கூறுகிறார்: “நீ ஜாதிகளுக்குரிய [“தேசங்களுக்குரிய,” NW] பாலைக் குடித்து, ராஜாக்களுக்குரிய முலைப்பாலையுண்பாய்; யெகோவாவாகிய நானே உனக்கு ரட்சிப்பவரென்றும், யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவரென்றும் அறிந்துகொள்வாய்.” (ஏசாயா 60:16, தி.மொ.) சீயோன் எவ்வாறு ‘தேசங்களின் பாலைக் குடித்து’ ‘ராஜாக்களின் முலைப்பாலை உண்ணும்’? அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் ‘வேறே ஆடுகளான’ அவர்களுடைய தோழர்களும் சுத்தமான வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக தேசங்களின் மதிப்புமிக்க வளங்களை உபயோகிப்பார்கள். (யோவான் 10:16) தாராளமாய் கொடுக்கப்படும் பொருளாதார நன்கொடைகள், பிரசங்க வேலையும் போதிக்கும் வேலையும் சர்வதேச அளவில் பிரமாண்டமாக நடைபெற உதவுகின்றன. நவீன தொழில்நுட்பத்தை ஞானமாக பயன்படுத்துவதால் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நூற்றுக்கணக்கான மொழிகளில் பிரசுரிக்க முடிகிறது. சரித்திரம் காணாதளவுக்கு இன்று பைபிள் சத்தியம் ஏராளமானோருக்குக் கிடைக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட தமது ஊழியர்களை ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த யெகோவாவே இரட்சகர் என்பதை பற்பல தேசத்தாரும் கற்று வருகின்றனர்.
அமைப்பு சார்ந்த முன்னேற்றம்
7. சீயோனின் பிள்ளைகள் என்ன குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர்?
7 யெகோவா தம் மக்களை மற்றொரு வழியிலும் அலங்கரித்திருக்கிறார். அமைப்பு சார்ந்த முன்னேற்றங்களாலும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். ஏசாயா 60:17-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “நான் வெண்கலத்துக்குப் [“செம்புக்குப்,” NW] பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், [“செம்பையும்,” NW] கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.” செம்புக்கு பதிலாக பொன்னை மாற்றுவது ஒரு முன்னேற்றமே, அதைப்போல இங்கு சொல்லப்பட்டிருக்கும் மற்ற உலோகங்களைப் பொருத்ததிலும் இதுவே உண்மை. இதற்கிசைய, தேவனுடைய இஸ்ரவேலர் இந்தக் கடைசி நாட்கள் முழுவதும் அமைப்பு சார்ந்த முன்னேற்றங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். சில உதாரணங்களை கவனியுங்கள்.
8-10. அமைப்பில் 1919 முதல் ஏற்பட்டிருக்கும் சில முன்னேற்றங்களை விவரியுங்கள்.
8 கடவுளுடைய மக்களின் சபைகளை நிர்வகித்து வந்த மூப்பர்களும் டீக்கன்களும் 1919-க்கு முன்பு வரை சபை அங்கத்தினர்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வருடம் முதல், வெளி ஊழிய நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஒவ்வொரு சபையிலும் சர்வீஸ் டைரக்டர் என்ற ஒருவரை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமை’ நியமித்தது. (மத். 24:45-47, NW) ஆனால், ஓட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மூப்பர்கள் பிரசங்க வேலையை முழுமையாய் ஆதரிக்காததால் அநேக சபைகளில் இந்த ஏற்பாடு திறம்பட்ட விதத்தில் செயல்படவில்லை. ஆகவே, 1932-ல் ஓட்டு போட்டு மூப்பர்களையும் டீக்கன்களையும் தேர்ந்தெடுப்பதை முடிவுக்கு கொண்டுவந்து, அதற்கு பதிலாக சர்வீஸ் டைரக்டரோடு சேர்ந்து செயல்படும் ஊழியக் குழு ஒன்றை நியமிக்கும்படி சபைகளுக்கு சொல்லப்பட்டது. அது ‘மரத்திற்கு’ பதிலாக ‘செம்பை’ பயன்படுத்துவதைப் போலிருந்தது. அது எவ்வளவு பெரிய மாற்றம்!
9 பிறகு 1938-ல், உலகம் முழுவதிலும் உள்ள சபைகள் வேதப்பூர்வ முன்னோடிகளுக்கு இசைவான மேம்பட்ட ஓர் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தன. சபையை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பெனி சர்வென்ட்டிடமும் மற்ற சர்வென்ட்டுகளிடமும் ஒப்படைக்கப்பட்டது; இவர்கள் அனைவருமே உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின் மேற்பார்வையில் நியமிக்கப்பட்டனர். இனி தேர்தல்களே கிடையாது! இவ்வாறு சபை நியமிப்புகள் அனைத்தும் தேவராஜ்ய முறைப்படி செய்யப்பட்டன. இது, ‘கற்களுக்கு’ பதிலாக ‘இரும்பை’ அல்லது ‘செம்புக்கு’ பதிலாக ‘பொன்னை’ உபயோகிப்பதைப் போலிருந்தது.
10 அப்போது முதல் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு மூப்பர் மற்றவர்களை அடக்கியாளுவது சரியல்ல; மாறாக தேவராஜ்ய முறைப்படி நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அடங்கிய ஒன்றுபட்ட ஒரு குழு சபையின் காரியங்களை மேற்பார்வையிடுவதே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகள் செயல்பட்டதற்கு இசைவாக இருக்கும் என்று 1972-ல் புரிந்துகொள்ளப்பட்டது. மேலுமாக, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு மற்றொரு முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில சட்டப்பூர்வ நிறுவனங்களின் இயக்குநர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் ஆளும் குழுவானது, அன்றாடக சட்டப்பூர்வ காரியங்களுக்கு கவனம் செலுத்தி திசை திரும்பிவிடாமல் கடவுளுடைய மக்களின் ஆவிக்குரிய தேவைக்கு அதிக கவனம் செலுத்த முடிந்தது.
11. யெகோவாவின் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அமைப்பு சார்ந்த மாற்றங்களுக்கு யார் காரணம், இவற்றால் என்ன பலன் கிடைத்துள்ளது?
11 படிப்படியான இந்த மாற்றங்களுக்கு யார் காரணம்? யெகோவா தேவனே என்பதில் சந்தேகமில்லை. ‘நான் பொன்னை வரப்பண்ணுவேன்’ என்று சொன்னவர் அவரே. ‘உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களும் ஆக்குவேன்’ என்று கூறியவரும் அவரே. ஆம், தம் மக்களை மேற்பார்வை செய்வது யெகோவாவின் பொறுப்பே. முன்னுரைக்கப்பட்ட அமைப்பு சார்ந்த முன்னேற்றங்கள், அவர் தமது மக்களை அலங்கரிப்பதற்கான மற்றொரு வழியாகும். இதனால் யெகோவாவின் சாட்சிகள் பல வழிகளில் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். ஏசாயா 60:18-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்பட மாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.” அந்த வார்த்தைகள் எவ்வளவு அழகானவை! ஆனால் அவை எவ்வாறு நிறைவேறின?
12. உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் சமாதானம் எவ்வாறு முக்கிய அம்சமாக இருக்கிறது?
12 வழிநடத்துதலுக்காகவும் போதனைக்காகவும் உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவையே நோக்கியிருக்கிறார்கள்; அதன் பலன் ஏசாயா முன்னுரைத்ததைப் போலவே இருக்கிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” (ஏசாயா 54:13) மேலும், யெகோவாவின் ஆவி அவருடைய மக்களிடம் செயல்படுகிறது; அதன் கனிகளில் ஒன்று சமாதானமாகும். (கலாத்தியர் 5:22, 23) இதனால், யெகோவாவின் மக்கள் அனுபவிக்கும் சமாதானம், வன்முறை நிறைந்த பாலைவனம் போன்ற இந்த உலகில் புத்துணர்ச்சியூட்டும் பாலைவன சோலையாக அவர்களை ஆக்குகிறது. உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவரில் ஒருவர் வைக்கும் அன்பை அடிப்படையாக கொண்ட அவர்களுடைய சமாதானமான நிலை, புதிய உலகில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சிறிய அத்தாட்சியே. (யோவான் 15:17; கொலோசெயர் 3:14) அந்த சமாதானத்தை அனுபவிப்பதிலும் அதை அதிகரிப்பதிலும் நாம் ஒவ்வொருவருமே அகமகிழுகிறோம் அல்லவா? இதுவே நமது கடவுளுக்கு துதியையும் மகிமையையும் சேர்க்கிறது; அதேசமயம் இது நமது ஆவிக்குரிய பரதீஸின் முக்கிய அம்சமாகவும் இருக்கிறது!—ஏசாயா 11:9.
யெகோவாவின் ஒளி தொடர்ந்து பிரகாசிக்கும்
13. யெகோவாவின் ஒளி அவருடைய மக்கள்மீது நித்திய காலத்துக்கும் பிரகாசிக்கும் என்பதில் நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
13 யெகோவாவின் ஒளி அவருடைய மக்கள் மீது எப்போதுமே பிரகாசிக்குமா? நிச்சயம் பிரகாசிக்கும்! “பகலிலே வெளிச்சம் தரச் சூரியன் இனி உனக்குத் தேவையில்லை, தன் பிரகாசத்தினால் உனக்கு வெளிச்சம் தரச் சந்திரனும் தேவையில்லை; யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் கடவுளே உனக்கு மகிமையுமாவார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை; உன் சந்திரன் தேய்வதுமில்லை; யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமாவார், உன் துக்கநாட்கள் முடிந்துபோம்” என ஏசாயா 60:19, 20-ல் (தி.மொ.) வாசிக்கிறோம். ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருந்தோரின் “துக்கநாட்கள்” 1919-ல் முடிவிற்கு வந்ததும் யெகோவாவின் ஒளி அவர்கள்மீது பிரகாசிக்க ஆரம்பித்தது. இன்று, 80-க்கும் அதிக வருடங்கள் கழித்தும் அவருடைய தயவை அவர்கள் அனுபவிக்கிறார்கள்; யெகோவாவின் ஒளியும் தொடர்ந்து பிரகாசிக்கிறது. அது ஒருபோதும் தடைபடாது. தம்முடைய வணக்கத்தாரை பொருத்தவரை, கடவுள் சூரியனைப்போல ‘அஸ்தமிக்கவும் மாட்டார்,’ சந்திரனைப்போல ‘தேயவும் மாட்டார்.’ மாறாக, நித்திய காலத்திற்கும் அவர்கள்மீது ஒளியைப் பிரகாசிக்க செய்வார். இருள் சூழ்ந்த இந்த உலகின் கடைசி நாட்களில் வாழும் நமக்கு அது எவ்வளவு அருமையான வாக்குறுதியாக இருக்கிறது!
14, 15. (அ) கடவுளுடைய மக்கள் அனைவரும் என்ன அர்த்தத்தில் ‘நீதிமான்கள்’? (ஆ) ஏசாயா 60:21-ஐப் பொருத்தவரை என்ன முக்கியமான நிறைவேற்றத்திற்காக வேறே ஆடுகள் காத்திருக்கிறார்கள்?
14 சீயோனின் பூமிக்குரிய பிரதிநிதியாகிய தேவனுடைய இஸ்ரவேலைப் பற்றி யெகோவா கூறும் மற்றொரு வாக்குறுதியை கவனியுங்கள். ஏசாயா 60:21 இவ்வாறு கூறுகிறது: “உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் [“தேசத்தை,” NW] சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.” அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1919-ல் செயல்படும்படி திரும்ப நிலைநாட்டப்பட்டபோது மிகவும் வித்தியாசமான தொகுதியினராக இருந்தார்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, பாவம் நிறைந்த இந்த உலகில், கிறிஸ்து இயேசுவின் மீட்கும் பலியில் வைக்கும் அசைக்க முடியாத விசுவாசத்தால் அவர்கள் ‘நீதிமான்களாக்கப்பட்டிருந்தார்கள்.’ (ரோமர் 3:24; 5:1) பிறகு, பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர்களைப் போல அவர்கள் ஒரு ‘தேசத்தை’ அதாவது ஆவிக்குரிய தேசத்தை அல்லது செயல்படும் பிராந்தியத்தை சுதந்தரித்தார்கள்; அங்கே அவர்கள் ஆவிக்குரிய பரதீஸை அனுபவிக்கவிருந்தார்கள். (ஏசாயா 66:8) அந்தத் தேசத்தின் பரதீஸிய அழகு என்றுமே மங்காது; ஏனெனில், பூர்வ இஸ்ரவேலரைப் போலில்லாமல் தேவனுடைய இஸ்ரவேலர் ஒரு தேசமாக உண்மைத்தன்மையிலிருந்து விலகமாட்டார்கள். அவர்களுடைய விசுவாசமும், சகிப்புத்தன்மையும், வைராக்கியமும் கடவுளுடைய பெயருக்கு என்றென்றும் மகிமை சேர்க்கும்.
15 அந்த ஆவிக்குரிய தேசத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் புதிய உடன்படிக்கைக்கு உட்பட்டவர்கள். யெகோவாவின் சட்டம் அவர்கள் அனைவருடைய இருதயத்திலும் எழுதப்பட்டுள்ளது, மேலும் இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் யெகோவா அவர்களுடைய பாவங்களை மன்னித்திருக்கிறார். (எரேமியா 31:31-34) ‘குமாரர்களாக’ அவர்களை நீதிமான்களாக அறிவிக்கிறார், இப்பொழுதே பரிபூரணர்களாக இருப்பதைப் போல அவர்களோடு தொடர்பு கொள்கிறார். (ரோமர் 8:15, 16, 29, 30) வேறே ஆடுகளான அவர்களுடைய தோழர்களின் பாவங்களும் இயேசுவின் பலியின் அடிப்படையில் மன்னிக்கப்படுகின்றன; ஆபிரகாமைப் போன்ற விசுவாசத்தால் அவர்களும் கடவுளுடைய நண்பர்களாய் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” வேறே ஆடுகளான இந்தத் தோழர்கள் மற்றொரு மகத்தான ஆசீர்வாதத்தைப் பெற காத்திருக்கிறார்கள். ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பித்த பிறகு அல்லது உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, ஏசாயா 60:21 சொல்லர்த்தமாக நிறைவேறுவதைக் காண்பார்கள்; அந்த சமயத்தில் இந்த முழு பூமியும் பரதீஸாக மாறும். (வெளிப்படுத்துதல் 7:14; ரோமர் 4:1-3) அப்போது, “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11, 29.
அதிகரிப்பு தொடர்கிறது
16. என்ன மகத்தான வாக்குறுதியை யெகோவா கொடுத்தார், அது எவ்வாறு நிறைவேறியுள்ளது?
16 ஏசாயா 60-ம் அதிகாரத்தின் கடைசி வாக்குறுதியை அதன் கடைசி வசனத்தில் யெகோவா கொடுக்கிறார். அவர் சீயோனிடம், “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான் [“தேசமாவான்,” NW]; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” என்று கூறுகிறார். (ஏசாயா 60:22) நம் நாட்களில் யெகோவா தமது வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். 1919-ல் செயல்படும்படி திரும்ப நிலைநாட்டப்பட்டபோது அபிஷேகம் செய்யப்பட்டோர் எண்ணிக்கையில் குறைவாக, ‘சின்னவனாக’ இருந்தனர். கூடுதலான ஆவிக்குரிய இஸ்ரவேலர் வந்தபோதோ அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்தது. பிறகு அதிகரித்து வரும் எண்ணிக்கையான வேறே ஆடுகளும் அவர்களோடு சேர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். கடவுளுடைய மக்களிடையே நிலவும் சமாதானம், அதாவது ஆவிக்குரிய பரதீஸான அவர்களுடைய ‘தேசம்’ நேர்மை இருதயமுள்ள அநேகரை கவர்ந்திழுத்திருப்பதால் உண்மையிலேயே ‘சிறியவன் பலத்த ஜாதியாக’ மாறியிருக்கிறான். தேவனுடைய இஸ்ரவேலும் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஒப்புக்கொடுத்த ‘அந்நியரும்’ அடங்கிய இந்த ‘தேசத்தில்’ தற்போது, உலகிலுள்ள அநேக சுயாட்சி நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமானோர் உள்ளனர். (ஏசாயா 60:10) யெகோவாவின் ஒளியைப் பிரகாசிப்பதில் இதன் குடிமக்கள் அனைவரும் பங்குகொள்வதால் அவர்கள் அனைவரும் அவருடைய பார்வையில் அழகானவர்கள்.
17. ஏசாயா 60-ம் அதிகாரத்தை கலந்தாலோசித்தது உங்களை எவ்வாறு பாதித்துள்ளது?
17 ஏசாயா 60-ம் அதிகாரத்தின் முக்கிய குறிப்புகளை கலந்தாலோசித்தது உண்மையில் நம் விசுவாசத்தை பலப்படுத்தியுள்ளது. ஆவிக்குரிய சிறையிருப்பிற்குள் செல்லும் தம் மக்கள் திரும்பி வருவார்கள் என்பதை யெகோவா வெகு முன்னரே அறிந்திருந்ததை காண்பது ஆறுதலளிக்கிறது. நம் நாட்களில் உண்மை வணக்கத்தாரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும் என்பதை வெகு காலத்திற்கு முன்னரே யெகோவா முன்னுரைத்தது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதோடு, யெகோவா நம்மை கைவிடமாட்டார் என்பதை நினைவில் வைப்பதும் எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! ‘நித்திய ஜீவனிடம் சரியான மனச்சாய்வு உள்ளவர்களை’ அன்பாக வரவேற்க ‘அந்த நகரத்தின்’ கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்ற வாக்குறுதி எவ்வளவு அன்பான ஏற்பாடு! (அப்போஸ்தலர் 13:48, NW) யெகோவா தம் மக்கள்மீது தொடர்ந்து பிரகாசிப்பார். சீயோனின் பிள்ளைகள் தங்கள் ஒளியை இன்னும் பிரகாசமாக ஒளிரச் செய்வதால் அவள் தொடர்ந்து பெருமைப்படலாம். (மத்தேயு 5:16) தேவனுடைய இஸ்ரவேலோடு நெருக்கமான உறவில் நிலைத்திருக்கவும் யெகோவாவின் ஒளியைப் பிரகாசிக்கும் சிலாக்கியத்தை மதித்து அதைப் பாதுகாக்கவும் நாம் எப்போதையும்விட அதிக உறுதியாய் இருக்கிறோம் அல்லவா?
உங்களால் விளக்க முடியுமா?
• எதிர்ப்பைப் பொருத்தவரை நாம் எதைப் பற்றி நிச்சயமாக இருக்கலாம்?
• சீயோனின் பிள்ளைகள் எவ்வாறு ‘தேசங்களின் பாலைக் குடித்திருக்கிறார்கள்’?
• எந்த விதத்தில் ‘மரத்திற்கு பதிலாக செம்பை’ யெகோவா பயன்படுத்தியிருக்கிறார்?
• ஏசாயா 60:17, 21-ல் என்ன இரண்டு குணங்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன?
• ‘சிறியவன்’ எவ்வாறு ‘பலத்த ஜாதியாக’ ஆகியிருக்கிறான்?
[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு
2001/02-ம் வருடத்தில் நடந்த “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாடுகளில் கொடுக்கப்பட்ட பேச்சின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரைகளிலுள்ள தகவல் அடங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில், அந்தப் பேச்சின் முடிவில், ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு, தொகுதி இரண்டு என்ற புதிய பிரசுரத்தை பேச்சாளர் வெளியிட்டார். முந்தைய வருடத்தில், ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு, தொகுதி ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பிரசுரம் வெளியிடப்பட்டதால் ஏசாயா புத்தகத்திலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு வசனத்தையும் பற்றிய சமீபத்திய தகவலைப் பெற்றிருக்கிறோம். விசுவாசத்தை தூண்டுவிக்கும் தீர்க்கதரிசன புத்தகமாகிய ஏசாயாவை தெளிவாக புரிந்துகொள்ளவும் மதித்துணரவும் இந்த இரண்டு தொகுதிகளும் பெரும் உதவி அளிக்கின்றன.
[பக்கம் 15-ன் படங்கள்]
வன்முறைமிக்க எதிர்ப்பின் மத்தியிலும் ‘யெகோவா தமது மக்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார்’
[பக்கம் 16-ன் படங்கள்]
கடவுளுடைய மக்கள் சுத்தமான வணக்கத்தை முன்னேற்றுவிக்க தேசங்களிலுள்ள மதிப்புமிக்க வளங்களை உபயோகிக்கின்றனர்
[பக்கம் 17-ன் படம்]
அமைப்பு சார்ந்த முன்னேற்றத்தையும் சமாதானத்தையும் அளித்து யெகோவா தம் மக்களை ஆசீர்வதித்திருக்கிறார்