துயரப்படுவோருக்கு ஆறுதலளியுங்கள்
‘[யெகோவா] என்னை அபிஷேகம் பண்ணி . . . துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்ய . . . அனுப்பினார்.’—ஏசாயா 61:1-3.
1, 2. நாம் யாருக்கு ஆறுதலளிக்க வேண்டும், ஏன்?
மற்றவர்கள் துன்பப்படுகையில் கரிசனை காட்டும்படி சகல விதமான ஆறுதலின் தேவனாகிய யெகோவா நமக்குக் கற்பிக்கிறார். “மனந்தளர்ந்தவர்களை உற்சாகப்படுத்து”ம்படியும், துக்கப்படும் அனைவருக்கும் ஆறுதலளிக்கும்படியும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:14, திருத்திய மொழிபெயர்ப்பு) தேவைப்படும் போதெல்லாம் அத்தகைய உதவியை சக வணக்கத்தாருக்கு நாம் அளிக்கிறோம். கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களையும் முன்பின் நம்மிடம் அன்பு காட்டாதவர்களையும்கூட நேசிக்கிறோம்.—மத்தேயு 5:43-48; கலாத்தியர் 6:10.
2 பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளை இயேசு கிறிஸ்து வாசித்து அவற்றை தமக்கே பொருத்திக் கொண்டார்: “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும் . . . துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் . . . அவர் என்னை அனுப்பினார்.” (ஏசாயா 61:1-3; லூக்கா 4:16-19) தங்களுக்கும் இந்தப் பொறுப்பு இருப்பதை நவீன நாளைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் வெகு காலத்திற்கு முன்பே புரிந்துகொண்டார்கள், அந்த வேலையில் “வேறே ஆடுகளும்” அவர்களுக்கு சந்தோஷமாக தோள்கொடுக்கிறார்கள்.—யோவான் 10:16.
3. “கடவுள் ஏன் பேரழிவுகளை அனுமதிக்கிறார்?” என ஜனங்கள் கேட்கையில் நாம் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்?
3 பேரழிவுகள் தாக்குகையில் ஜனங்கள் இடிந்துபோய் உட்கார்ந்துவிடுகிறார்கள், “கடவுள் ஏன் பேரழிவுகளை அனுமதிக்கிறார்?” என பெரும்பாலும் கேட்கிறார்கள். அக்கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதிலை பைபிள் தருகிறது. எனினும், பைபிளைப் பற்றி அறியாதவர்களால் அந்த பதிலை உடனடியாக புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களிலிருந்து அவர்கள் உதவியைப் பெறலாம்.a எனினும், மனிதர்கள் ஆறுதலைப் பெறும்படி கடவுள் விரும்புகிறார் என பைபிளில் ஏசாயா 61:1, 2-ல் சொல்லப்பட்டுள்ளது; முதலில் இது போன்ற வசனங்களைப் பார்த்ததே சிலருக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கிறது.
4. சோர்வில் சிக்கிய பள்ளி மாணவிக்கு போலந்திலுள்ள ஒரு சாட்சி எவ்வாறு உதவினாள், மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி உதவலாம்?
4 சிறியோருக்கும் பெரியோருக்கும் ஆறுதல் தேவை. போலந்தில், சோர்வில் சிக்கிய பருவ மங்கை தன் தோழியிடம் ஆலோசனை கேட்டாள். யெகோவாவின் சாட்சியான அந்தத் தோழி கனிவோடு அவளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாள்; அந்தப் பெண்ணின் மனதில் ஏராளமான கேள்விகளும் சந்தேகங்களும் இருந்ததை அறிந்துகொண்டாள். “ஏன் இன்று அக்கிரமம் இந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது? ஏன் மக்கள் துன்பப்படுகிறார்கள்? ஏன் பக்கவாதத்தால் என் தங்கை கஷ்டப்படுகிறாள்? ஏன் எனக்கு பலவீனமான இருதயம் உள்ளது?” என்றெல்லாம் கேட்டுவிட்டு, “இப்படி இப்படித்தான் நடக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார் என்று சர்ச் பதிலளிக்கிறது. அது உண்மையானால் கடவுள் இருப்பதை இனி நான் நம்ப தயாரில்லை!” என்றாள் அந்தப் பெண். யெகோவாவின் சாட்சியான அவளுடைய தோழி மனதுக்குள் யெகோவாவிடம் சுருக்கமாக ஜெபித்துவிட்டு இவ்வாறு சொன்னாள்: “என்னிடம் இதைப் பற்றி மனந்திறந்து கேட்டதற்கு ரொம்ப சந்தோஷம். நான் உனக்கு உதவுகிறேன்.” பிறகு, சிறுமியாக இருக்கையில் ஏகப்பட்ட கேள்விகள் தன் மனதைத் துளைத்ததையும், யெகோவாவின் சாட்சிகள் தனக்கு உதவியதையும் அந்தப் பெண்ணிடம் விளக்கினாள். “மனிதரைக் கடவுள் கஷ்டப்படுத்துவதில்லை என்பதை தெரிந்துகொண்டேன். அவர்களிடம் அவருக்குக் கொள்ளை அன்பு. அவர்களுக்கு நல்லது செய்யவே விரும்புகிறார், பூமியில் பெரிய மாற்றங்களை எல்லாம் சீக்கிரமாகவே செய்யப் போகிறார். வியாதி, வயோதிகப் பிரச்சினைகள், மரணம் ஆகியவை இனி இருக்கவே இருக்காது, கீழ்ப்படிகிறவர்கள் என்றென்றும் வாழலாம், அதுவும் இந்த பூமியிலேயே” என அவள் விளக்கினாள். வெளிப்படுத்துதல் 21:3, 4; யோபு 33:25; ஏசாயா 35:5-7; 65:21-25 ஆகிய வசனங்களை அந்தப் பெண்ணிடம் காட்டினாள். நெடுநேரம் உரையாடிய பிறகு அந்தப் பெண்ணின் முகத்தில் நிம்மதி ரேகை படர்ந்தது; “இப்போது நான் ஏன் உயிர் வாழ்கிறேன் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது” என சொன்னாள். “நாம் மீண்டும் சந்தித்து பேசலாமா?” என கேட்டாள். வாரத்தில் இருமுறை பைபிள் படிப்பு நடத்தப்பட்டது.
கடவுள் அளிக்கும் ஆறுதலின் உதவியோடு ஆறுதலளித்தல்
5. நாம் அனுதாபம் தெரிவிக்கையில் எது உண்மையான ஆறுதலளிக்கும்?
5 மற்றவர்களுக்கு ஆறுதலளிக்க முயலுகையில் அனுதாப வார்த்தைகள் அவர்களுக்கு அருமருந்தாய் இருக்கும். அவர்களுடைய நிலைமையைக் குறித்து நாம் ரொம்பவே கவலைப்படுவதை வார்த்தையிலும் தொனியிலும் தெரிவிக்க முயலலாம். ஆனால் அர்த்தமற்ற வார்த்தைகளை அலப்புவதால் இதை செய்ய முடியாது. ‘தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாவோம்’ என பைபிள் சொல்கிறது. (ரோமர் 15:4) இதை மனதில் வைத்து, பொருத்தமான சமயத்தில் கடவுளுடைய ராஜ்யத்தையும், தற்போதைய பிரச்சினைகளை அது தீர்க்கப் போகிற விதத்தையும் பற்றி பைபிளிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கலாம். பிறகு அந்த எதிர்பார்ப்பு ஏன் நம்பகமானது என்பதை விளக்கலாம். இப்படியாக அவர்களுக்கு நாம் ஆறுதலளிக்கலாம்.
6. பைபிள் அளிக்கும் ஆறுதலிலிருந்து ஜனங்கள் முழுமையாக பயனடைவதற்கு அவர்கள் எதைப் புரிந்துகொள்ளும்படி உதவ வேண்டும்?
6 நாம் அளிக்கும் ஆறுதலிலிருந்து ஒருவர் முழுமையாக பயனடைய வேண்டுமென்றால், மெய்க் கடவுள் யார், அவர் எப்படிப்பட்டவர், அவருடைய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நம்பகமானவை என்பவற்றை அவர் அறிந்திருக்க வேண்டும். யெகோவாவை வணங்காதவருக்கு உதவ முயலுகையில் பின்வரும் குறிப்புகளை விளக்குவது நல்லது. (1) பைபிளில் உள்ள ஆறுதலை மெய்க் கடவுளாகிய யெகோவா அளிக்கிறார். (2) யெகோவா அன்பானவர், சர்வ வல்லமையுள்ளவர், வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் அன்பின் கடவுள், அன்புள்ள தயவு நிறைந்தவர், உண்மையுள்ளவர். (3) கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்று அவரிடம் நெருங்கி வருகையில் கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான பலம் கிடைக்கும். (4) பலதரப்பட்டோர் எதிர்ப்படும் குறிப்பிட்ட பிரச்சினைகளை சமாளிக்க உதவும் வசனங்கள் பைபிளில் உள்ளன.
7. (அ) கடவுள் அளிக்கும் ஆறுதல் ‘கிறிஸ்துவினாலே பெருகுகிறது’ என்பதை கோடிட்டுக் காட்டுகையில் என்ன பலன் கிடைக்கலாம்? (ஆ) தன் மோசமான நடத்தையை எண்ணி வருந்துகிறவருக்கு நீங்கள் எப்படி ஆறுதலளிக்கலாம்?
7 ஏற்கெனவே பைபிளைப் பற்றி அறிந்தவர்கள் துயரப்படுகையில், சிலர் 2 கொரிந்தியர் 1:3-7-லுள்ள வசனங்களை அவர்களுக்கு வாசித்துக் காட்டி ஆவிக்குரிய ரீதியில் ஆறுதலை அளித்திருக்கிறார்கள். அப்படி செய்கையில் “கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது” என்ற வாக்கியத்தை அவர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். பைபிள் ஆறுதலின் ஊற்றுமூலம் என்பதையும் அதை அதிகளவு கற்றறிவது அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள இந்த வசனம் ஒருவருக்கு உதவலாம். மற்ற சமயங்களில் கலந்துரையாடுவதற்கும் அது அஸ்திவாரமாக அமையலாம். தான் செய்த தவறுகளுக்காகவே தற்போது கஷ்டம் அனுபவிப்பதாக ஒருவர் நினைத்து வருந்தலாம்; அப்போது, கண்டனம் செய்யும் வகையில் எதுவும் கூறாமல், 1 யோவான் 2:1, 2; சங்கீதம் 103:11-14 ஆகிய வசனங்கள் எந்தளவுக்கு ஆறுதலளிக்கின்றனவென அவரிடம் சொல்லலாம். இந்த விதங்களில், கடவுள் அளிக்கும் ஆறுதலின் உதவியோடு மற்றவர்களுக்கு உண்மையில் ஆறுதலளிக்கலாம்.
வன்முறையாலோ பொருளாதார கஷ்டத்தாலோ வாழ்க்கை சீர்குலைகையில் ஆறுதல்
8, 9. வன்முறையால் துன்பப்படுவோருக்கு பொருத்தமான விதத்தில் எவ்வாறு ஆறுதலளிக்கலாம்?
8 குற்றச் செயல் காரணமாக சமுதாயத்தில் தலைதூக்கும் வன்முறையால் அல்லது போர் கோரமுகம் காட்டுகையில் ஏற்படும் வன்முறையால் லட்சோப லட்சம் பேரின் வாழ்க்கை சீர்குலைந்து போகிறது. அவர்களுக்கு எப்படி ஆறுதலளிக்கலாம்?
9 உலகின் சண்டை சச்சரவுகளில் எந்தத் தொகுதியினரையும் சொல்லாலும் செயலாலும் ஆதரிக்காதிருக்க கிறிஸ்தவர்கள் கவனமாய் இருக்கிறார்கள். (யோவான் 17:16) ஆனால் பொருத்தமாகவே, இந்த மோசமான நிலைமைகள் என்றென்றும் நீடிக்காது என்பதை பைபிளிலிருந்து அவர்கள் காட்டுகிறார்கள். வன்முறையை விரும்புகிறவர்களைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார் என்பதை சங்கீதம் 11:5-லிருந்து அவர்கள் வாசித்துக் காட்டலாம் அல்லது பழிவாங்குவதை விட்டுவிட்டு தம்மீது நம்பிக்கை வைக்கும்படி கடவுள் உற்சாகப்படுத்துவதை சங்கீதம் 37:1-4-லிருந்து வாசித்துக் காட்டலாம். இப்போது பரலோகத்தில் ராஜாவாக இருந்து ஆளுகை செய்யும் பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்து வன்முறையால் துன்பப்படும் பழிபாவம் அறியாத அப்பாவிகளுக்காக எந்தளவுக்கு பரிதவிக்கிறார் என்பதை சங்கீதம் 72:12-14-லுள்ள வார்த்தைகள் காட்டுகின்றன.
10. போர்க் காலங்களில் வாழ்ந்திருந்தால் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் வசனங்கள் எப்படி உங்களுக்கு ஆறுதலளிக்கலாம்?
10 ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அடுத்தடுத்து நடந்த போர்களின் விளைவுகளை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், போரும் அதன் பாதிப்புகளும் சகஜமானவை என்றே எண்ணுகிறார்கள். அயல் நாட்டுக்கு ஓடிப்போனால் தங்கள் நிலைமை ஒருவேளை முன்னேறலாம் என்பதுதான் அவர்களுடைய ஒரே நம்பிக்கை. ஆனால் பெரும்பாலோருக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது; அப்படி தப்பி ஓட முயன்ற பலரும் தங்கள் உயிரையே பறிகொடுத்திருக்கிறார்கள். வேறு நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களின் நிலை என்ன? பெரும்பாலும் பிரச்சினைகளிலிருந்து ஓடி ஒளிய எல்லை தாண்டினாலும் வேறு பல பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ சங்கீதம் 146:3-6-ஐக் காட்டலாம்; அயல் நாடுகளுக்கு சென்று குடியேறுவதைக் காட்டிலும் அதிக நம்பகமான ஒன்றில் நம்பிக்கையை வைக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம். நிலைமையை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள மத்தேயு 24:3, 7, 14 அல்லது 2 தீமோத்தேயு 3:1-5-லுள்ள தீர்க்கதரிசனம் அவர்களுக்கு உதவலாம்; இந்த ஒழுங்குமுறை முடியும் காலத்தில் வாழ்வதே அப்படிப்பட்ட கஷ்டமான நிலைமைகளை அனுபவிப்பதற்குக் காரணம் என்பதை உணர்த்தலாம். சங்கீதம் 46:1-3, 8, 9; ஏசாயா 2:2-4 போன்ற வசனங்கள் சமாதானம் கொஞ்சும் எதிர்காலம் உண்மையிலேயே நிஜமானது என்பதில் நம்பிக்கை வைக்க அவர்களுக்கு உதவலாம்.
11. மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு எந்த வசனங்கள் ஆறுதலளித்தன, ஏன்?
11 மேற்கு ஆப்பிரிக்காவில் தொடர்ந்து போர் நடந்த காலத்தில், சரமாரியாக குண்டு மழை பொழிந்தபோது ஒரு பெண் தன் வீட்டிலிருந்து தப்பியோடினாள். அதன் பிறகு வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் பயம், வேதனை, தாங்க முடியாத ஏமாற்றம். பின்னர், வேற்று நாட்டில் வசிக்கையில் அவளுடைய கணவன் பாதிரியாக வேண்டும் என்ற ஆசையில் அவர்களுடைய திருமண சான்றிதழை எரித்து, வயிற்றில் பிள்ளையை சுமந்துகொண்டிருந்த அவளையும் பத்து வயது மகனையும் வீட்டிலிருந்து அனுப்பிவிட தீர்மானித்தான். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து பைபிள் அடிப்படையிலான கட்டுரைகளையும் பைபிளிலிருந்து பிலிப்பியர் 4:6, 7; சங்கீதம் 55:22 ஆகிய வசனங்களையும் அவளிடம் காட்டிய போதுதான் ஆறுதலடைந்தாள், வாழ்க்கைக்கு அர்த்தமிருப்பதைப் புரிந்துகொண்டாள்.
12. (அ) பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவோருக்கு வேதவசனங்கள் எப்படிப்பட்ட ஆறுதலளிக்கின்றன? (ஆ) வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆசியாவிலுள்ள சாட்சி எப்படி உதவினார்?
12 பொருளாதார சரிவு அநேகருடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. சில சமயங்களில் போரும் அதன் பாதிப்புகளுமே இதற்குக் காரணம். இன்னும் சில சமயங்களில் அரசாங்கத்தின் ஞானமற்ற திட்டங்கள், அதிகாரத்திலுள்ளவர்களின் பேராசை, ஊழல் ஆகியவை கைகோர்க்கையில் ஜனங்களின் சேமிப்புகள் கரைந்துவிடுகின்றன, அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை பறிகொடுக்கும் நிலைக்கு ஆளாகலாம். இன்னும் சிலரிடம் பெரும்பாலான வசதி வாய்ப்புகள் இல்லாதிருக்கலாம். கடவுளிடம் விசுவாசம் வைப்பவர்களுக்கு அவர் விடுதலையை உறுதியளிப்பதையும், நீதி நிறைந்த உலகில் தங்கள் பிரயாசத்தின் பலனை ஜனங்கள் அனுபவிப்பார்கள் என பைபிள் நம்பிக்கையளிப்பதையும் அறிகையில் இப்படிப்பட்ட அனைவரும் ஆறுதலடையலாம். (சங்கீதம் 146:6, 7; ஏசாயா 65:17, 21-23; 2 பேதுரு 3:13) ஆசிய நாடொன்றில் வாடிக்கையாளர் ஒருவர் அங்கு நிலவும் பொருளாதார நிலை குறித்து புலம்பியதை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் கேட்டார்; உலகெங்கும் நடக்கும் ஒரே விதமான சம்பவங்கள்தான் அங்கேயும் நடக்கின்றன என அந்த சாட்சி விளக்கினார். மத்தேயு 24:3-14; சங்கீதம் 37:9-11 ஆகியவற்றைக் காட்டி பேசியது முறைப்படி பைபிள் படிப்பு நடத்த வழிசெய்தது.
13. (அ) பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு பைபிளிலிருந்து எப்படி உதவியளிக்கலாம்? (ஆ) மோசமான நிலைமைகளே கடவுள் ஒருவர் இல்லையென காட்டுவதாக நினைப்பவர்களிடம் எப்படி நியாயம் காட்டிப் பேசலாம்?
13 பல ஆண்டுகளாக துன்பமனுபவிப்பவர்கள் அல்லது ஏராளமான பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்தவர்கள், இஸ்ரவேலரைப் போல் “மனச்சோர்வால்” செவிகொடுக்காதிருக்கலாம். (யாத்திராகமம் 6:9, NW) அப்படிப்பட்ட சமயங்களில், இன்றைய பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்கவும் அநேகரின் வாழ்க்கையை பாழாக்கிய இடறுகுழிகளைத் தவிர்க்கவும் பைபிள் உதவும் விதத்தை சிறப்பித்துக் காட்டுவது பயனளிக்கலாம். (1 தீமோத்தேயு 4:8ஆ) மோசமான நிலைமையில் தாங்கள் வாழ்வதைப் பார்த்து, கடவுள் ஒருவர் இல்லை அல்லது தங்கள்மீது அவருக்கு அக்கறையில்லை என சிலர் கருதலாம். கடவுள் உதவி அளித்திருக்கிறார், ஆனால் அநேகரோ அதை ஏற்க மறுத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்கு பொருத்தமான பைபிள் வசனங்களை எடுத்துக் காட்டி நீங்கள் விளக்கலாம்.—ஏசாயா 48:17, 18.
புயல்களாலும் பூமியதிர்ச்சிகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
14, 15. பேரழிவு ஒன்றால் அநேகர் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனபோது யெகோவாவின் சாட்சிகள் எப்படி அக்கறையோடு செயல்பட்டார்கள்?
14 புயல் காற்றால், பூமியதிர்ச்சியால், நெருப்பால், குண்டு வெடிப்பால் பேரழிவு ஏற்படலாம். அப்போது எங்கும் சோகமயமாக காட்சியளிக்கலாம். அப்படிப்பட்ட நாசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு ஆறுதலளிக்க என்ன செய்யலாம்?
15 தங்கள்மீது அக்கறையுள்ள ஒருவர் இருப்பதை மக்கள் அறிவது அவசியம். ஒரு நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலர் செய்வதறியாது ஸ்தம்பித்துவிட்டார்கள். அநேகர் குடும்ப அங்கத்தினரை, குடும்பத்திற்காக சம்பாதித்து வந்தவர்களை, நண்பர்களை இழந்து தவித்தார்கள்; சிலர் வேலையை பறிகொடுத்தார்கள், அநேகர் எவையெல்லாம் பாதுகாப்பளிக்கும் என நம்பினார்களோ அவற்றையெல்லாம் தொலைத்துவிட்டு நின்றார்கள். யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பகுதிகளில் இருந்தவர்களுக்கு உதவியளிக்க ஓடோடினார்கள்; கரிசனையுடன் அவர்களுடைய நலன் விசாரித்தறிந்து, மனவேதனைக்கு மருந்தாய் அமைந்த வசனங்களை பைபிளிலிருந்து வாசித்துக் காட்டினார்கள். பலரும் சாட்சிகள் காட்டிய அக்கறையை பெரிதும் போற்றினார்கள்.
16. எல் சால்வடாரின் ஒரு பகுதியை பேரழிவு தாக்கிய போது அங்கிருந்த சாட்சிகள் ஊழியம் செய்தது ஏன் அதிக பலனளித்தது?
16 எல் சால்வடாரில் 2001-ல் பெரும் பூமியதிர்ச்சிக்குப் பின்பு ஏற்பட்ட மண்சரிவில் பலர் பலியானார்கள். அதில், யெகோவாவின் சாட்சியாக இருப்பவரின் 25 வயது மகனும், அவன் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின் இரு தங்கைகளும் இறந்துவிட்டார்கள். அந்த இளைஞனின் அம்மாவும் அவனைக் கரம்பிடிக்கவிருந்த அந்தப் பெண்ணும் உடனடியாக வெளி ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள். இறந்தவர்களைக் கடவுள் எடுத்துக்கொண்டார் அல்லது அது கடவுளுடைய சித்தம் என அநேகர் அவர்களிடம் சொன்னார்கள். ஆனால் இந்த சாட்சிகள் நீதிமொழிகள் 10:22-ஐக் காட்டி நாம் வேதனைப்படுவதைக் கடவுள் விரும்புவதில்லை என விளக்கினார்கள். மனிதன் செய்த பாவத்தின் விளைவே மரணம், அது கடவுளுடைய சித்தமல்ல என்பதை ரோமர் 5:12-லிருந்து வாசித்துக் காட்டினார்கள். சங்கீதம் 34:18; சங்கீதம் 37:29; ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:3, 4 ஆகிய வசனங்களிலுள்ள ஆறுதலளிக்கும் செய்தியையும் காட்டினார்கள். அந்தப் பேரழிவில் இந்தப் பெண்கள் இருவருமே தங்கள் குடும்பத்தாரைப் பறிகொடுத்திருந்ததால் ஜனங்கள் உடனடியாக அவர்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்டார்கள், அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
17. பேரழிவின் போது எப்படிப்பட்ட உதவிகளை செய்யலாம்?
17 பேரழிவு தாக்குகையில் சரீரப்பிரகாரமான உதவி சிலருக்கு உடனடியாக தேவைப்படலாம். ஒருவேளை டாக்டரை அழைப்பது, மருத்துவமனைக்கு ஒருவரை கொண்டு செல்வது, அல்லது உணவும் உறைவிடமும் கொடுப்பதற்கு முடிந்தவற்றை எல்லாம் செய்வது போன்ற உதவிகள் தேவைப்படலாம். 1998-ல் இத்தாலியில் ஏற்பட்ட ஒரு பேரழிவில் யெகோவாவின் சாட்சிகள் “நடைமுறையான விதத்தில் செயல்பட்டு, துன்பப்படுகிறவர்களுக்கு மத பேதமின்றி உதவிக்கரம் நீட்டுகிறார்கள்” என்பதாக இதழியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். கடைசி நாட்களில் நிகழும் என முன்னுரைக்கப்பட்ட சம்பவங்கள் சில பகுதிகளில் தாளா துயரத்தை ஏற்படுத்துகின்றன. அப்பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகள் பைபிள் தீர்க்கதரிசனங்களைக் காட்டி மனித குலத்திற்கு உண்மையான பாதுகாப்பை கடவுளுடைய ராஜ்யம் அளிக்கும் என்ற பைபிள் வாக்குறுதியைக் காண்பித்து ஜனங்களுக்கு ஆறுதலளிக்கிறார்கள்.—நீதிமொழிகள் 1:33; மீகா 4:4.
குடும்பத்தில் ஒருவர் இறக்கையில் ஆறுதலளித்தல்
18-20. குடும்பத்தில் ஒருவர் இறக்கையில் ஆறுதலளிக்க நீங்கள் என்ன சொல்லலாம் அல்லது செய்யலாம்?
18 ஒவ்வொரு நாளும் அநேகர் தங்கள் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய ஒருவரை மரணத்தில் பறிகொடுத்து துக்கத்தில் துடிக்கிறார்கள். ஊழியம் செய்கையில் அல்லது அன்றாட அலுவலில் ஈடுபட்டிருக்கையில் அப்படி துக்கப்படுகிறவர்களை நீங்கள் சந்திக்கலாம். அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில் நீங்கள் என்ன சொல்லலாம் அல்லது என்ன செய்யலாம்?
19 அந்த நபர் மனக் கலக்கத்தில் இருக்கிறாரா? வீடு முழுக்க துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் இருக்கிறார்களா? நீங்கள் அநேக விஷயங்களைப் பேச விரும்பினாலும், விவேகம் முக்கியம். (பிரசங்கி 3:1, 7) அந்த சந்தர்ப்பத்தில், நம் வருத்தத்தைத் தெரிவித்து, (சிற்றேடு, பத்திரிகை, அல்லது துண்டுப்பிரதியென) பொருத்தமான பைபிள் பிரசுரத்தைத் தந்துவிட்டு சில நாட்கள் கழித்து, அவர்களுக்கு மேலுமாக உதவ முடியுமா என போய் பார்ப்பதே சிறந்தது. பொருத்தமான சமயத்தில், பைபிளிலிருந்து ஆறுதலான விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம். இது அவர்கள் துக்கத்தைக் குறைக்கும், புண்பட்ட மனதிற்கு மருந்தாகவும் அமையும். (நீதிமொழிகள் 16:24; 25:11) இயேசுவைப் போல, உங்களால் இறந்தவர்களை உயிரோடு எழுப்ப முடியாது. ஆனால் இறந்தவர்களின் நிலை பற்றி பைபிள் சொல்லும் தகவலை அவர்களுடன் உங்களால் பகிர்ந்துகொள்ள முடியும்; என்றாலும், தவறான கருத்துக்களை குறித்து விவாதிப்பதற்கான சமயமல்ல இது. (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் வாக்குறுதிகளை அவருக்கு வாசித்துக் காட்டலாம். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) அவற்றின் அர்த்தத்தை விளக்க பைபிளில் பதிவாகியுள்ள உயிர்த்தெழுதல் சம்பவம் ஒன்றைப் பயன்படுத்தலாம். (லூக்கா 8:49-56; யோவான் 11:39-44) அத்தகைய நம்பிக்கையை நமக்கு அளித்திருக்கும் அன்பான கடவுளின் குணங்களுக்கும் அவர்களுடைய கவனத்தை திருப்பலாம். (யோபு 14:14, 15; யோவான் 3:16) இந்தப் போதனைகள் உங்களுக்கு எப்படி உதவியிருக்கின்றன, அவற்றை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என விளக்கலாம்.
20 துக்கத்தில் மூழ்கியவரை ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி அழைக்கலாம்; அங்கு அவர் மற்றவர்களை உண்மையிலேயே நேசிக்கிற, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிற ஆட்களுடன் அறிமுகமாகலாம். சுவீடனைச் சேர்ந்த ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்டவர்களுக்காக தேடிக் கொண்டிருந்ததாக சொன்னார்.—யோவான் 13:35; 1 தெசலோனிக்கேயர் 5:11.
21, 22. (அ) ஆறுதலளிக்க நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது? (ஆ) வேதவசனங்களை நன்கு அறிந்திருக்கும் ஒருவருக்கு நீங்கள் எப்படி ஆறுதலளிக்கலாம்?
21 கிறிஸ்தவ சபையிலுள்ள ஒருவரோ, கிறிஸ்தவராக இல்லாதவரோ துக்கத்தில் தவிப்பது உங்களுக்குத் தெரிய வரலாம்; அப்படிப்பட்ட ஒருவருக்கு சிலசமயங்களில் ஆறுதலாக என்ன சொல்வது அல்லது என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறீர்களா? பெரும்பாலும் பைபிளில் “ஆறுதல்” என மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை, சொல்லர்த்தமாக “ஒருவரை தன் பக்கம் வரவழைப்பதை” அர்த்தப்படுத்துகிறது. அப்படியென்றால் உண்மையில் நீங்கள் ஆறுதலளிப்பவர் என்றால், துக்கிப்பவரின் அருகிலிருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 17:17.
22 நீங்கள் ஆறுதலளிக்க விரும்புகிறவர் ஏற்கெனவே மரணத்தை, மீட்பின் பலியை, உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் சொல்வதை அறிந்தவராக இருந்தால் என்ன செய்வது? அதே விதமான நம்பிக்கையுள்ள நண்பர் அங்கிருப்பதே அவருக்குப் பெரும் ஆறுதலாய் இருக்கும். அவர் ஏதேனும் சொல்ல விரும்பினால் அதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். நீங்கள் ஏதேனும் பேச வேண்டும் என்பது அவசியமல்ல. பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுகையில், உங்கள் இருவரின் இருதயத்தையும் பலப்படுத்த கடவுளே சொல்லும் வார்த்தைகளாக அவற்றைக் கருதுங்கள். பைபிள் வாக்குறுதிகளில் உங்கள் இருவருக்குமே உறுதியான நம்பிக்கை இருப்பதைப் பற்றி பேசுங்கள். கடவுளுடைய இரக்கத்தை நாம் பிரதிபலிப்பதன் மூலமும், அவருடைய வார்த்தையிலுள்ள அருமையான சத்தியங்களை பகிர்ந்துகொள்வதன் மூலமும் ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாகிய’ யெகோவாவிடமிருந்து ஆறுதலையும் தைரியத்தையும் பெற துக்கிப்பவர்களுக்கு உதவலாம்.—2 கொரிந்தியர் 1:3.
[அடிக்குறிப்பு]
a புத்தகங்களில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, அதிகாரம் 8; வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல், பக்கங்கள் 393-400, 427-31; உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? (ஆங்கிலம்), அதிகாரம் 10 ஆகியவற்றையும், சிற்றேட்டில் கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்பதையும் காண்க.
உங்கள் பதிலென்ன?
• தங்கள் கஷ்டங்களுக்கு யாரை அநேகர் குற்றஞ்சாட்டுகிறார்கள், அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
• பைபிள் அளிக்கும் ஆறுதலிலிருந்து மற்றவர்கள் முழுமையாக பலனடைய நாம் என்ன செய்யலாம்?
• உங்கள் பகுதியிலுள்ளவர்கள் என்ன காரணங்களால் துக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு நீங்கள் எப்படி ஆறுதலளிக்கலாம்?
[பக்கம் 23-ன் படங்கள்]
பேரழிவு ஏற்படுகையில் மெய்யான ஆறுதலின் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
[படத்திற்கான நன்றி]
அகதிகள் முகாம்: UN PHOTO 186811/J. Isaac
[பக்கம் 24-ன் படம்]
நண்பர் அருகில் இருந்தாலே ஆறுதல்