கிறிஸ்துவுக்கும் அவருடைய உண்மையுள்ள அடிமைக்கும் உண்மைப்பற்றுறுதி காட்டுங்கள்
‘எஜமான் . . . தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான்.’ —மத்தேயு 24:45-47.
1, 2. (அ) நம்முடைய தலைவர் யார் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது? (ஆ) கிறிஸ்தவ சபையில் கிறிஸ்து மும்முரமாகத் தலைமை தாங்குகிறார் என்பதை எது காட்டுகிறது?
“நீங்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குத் தலைவராயிருக்கிறார்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:10, NW) பூமியில் இருக்கும் எவரும் அவர்களுக்குத் தலைவராக இருக்க மாட்டார் என்பதை இதன்மூலம் அவர் தெளிவுபடுத்தினார். பரலோகத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து மட்டுமே அவர்களுடைய தலைவராக இருப்பார். இந்த ஸ்தானத்தை கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவா, அவரை ‘மரித்தோரிலிருந்து எழுப்பி, . . . சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.’—எபேசியர் 1:19-23.
2 கிறிஸ்தவ சபையில், “எல்லாவற்றிற்கும் மேலான தலையாக” கிறிஸ்து பொறுப்பு வகிப்பதால், சபையில் நடக்கும் அனைத்து காரியங்களிலும் அவர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். சபையில் நடக்கிற எதுவுமே அவருக்குத் தெரியாமல் போவதில்லை. கிறிஸ்தவத் தொகுதிகளாக இருந்தாலும் சரி சபைகளாக இருந்தாலும் சரி, அவை ஒவ்வொன்றின் ஆன்மீக நிலையையும் அவர் உன்னிப்பாகக் கவனிக்கிறார். பொ.ச. முதல் நூற்றாண்டின் இறுதியில் அப்போஸ்தலன் யோவானுக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்துதலில் இது தெளிவாகத் தெரிகிறது. ஏழு சபைகளுக்கு இயேசு அனுப்பிய செய்தியில், அவர்களுடைய செயல்களையும் பலங்களையும் பலவீனங்களையும் தாம் அறிந்திருப்பதாக ஐந்து முறை அவர் குறிப்பிட்டார். அதற்கேற்றபடி அறிவுரையையும் உற்சாகத்தையும் அளித்தார். (வெளிப்படுத்துதல் 2:2, 9, 13, 19; 3:1, 8, 15) அவ்வாறே ஆசியா மைனரிலிருந்த பிற சபைகளின் ஆன்மீக நிலையையும், பாலஸ்தீனா, சிரியா, பாபிலோனியா, கிரீஸ், இத்தாலி போன்ற இடங்களைச் சேர்ந்த சபைகளின் ஆன்மீக நிலையையும்கூட அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். (அப்போஸ்தலர் 1:8) இன்றும் சபைகளைக் குறித்து கிறிஸ்து அதேவிதமாக அறிந்திருக்கிறாரா?
உண்மையுள்ள ஓர் அடிமை
3. கிறிஸ்துவை தலைக்கும் அவருடைய சபையை சரீரத்துக்கும் ஒப்பிடுவது ஏன் பொருத்தமாக இருக்கிறது?
3 உயிர்த்தெழுந்த இயேசு, தம் பரலோகத் தகப்பனிடம் ஏறிச் செல்வதற்கு சற்று முன்பு தம் சீஷர்களிடம் பின்வருமாறு கூறினார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” அதோடு, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றும் கூறினார். (மத்தேயு 28:18-20) அவர் தொடர்ந்து அவர்களுடைய தலைவராகச் செயல்பட்டு, அவர்களை மும்முரமாக வழிநடத்துவார். எபேசு, கொலோசெ சபைகளுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதங்களில் கிறிஸ்தவ சபையை, கிறிஸ்துவை தலையாகக் கொண்ட ஒரு “சரீரத்துக்கு” ஒப்பிட்டார். (எபேசியர் 1:22, 23; கொலோசெயர் 1:18) சபையை சரீரத்தோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் இந்த உருவகம், “தலையுடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை மட்டுமின்றி, தலையே பிற உறுப்புகளை வழிநடத்துகிறது என்ற கருத்தையும் அளிக்கிறது; அவை அவருடைய கருவிகளாகச் செயல்படுகின்றன” என பள்ளி, கல்லூரிகளுக்கான கேம்பிரிட்ஜ் பைபிள் (ஆங்கிலம்) என்ற விளக்கவுரை கூறுகிறது. கிறிஸ்து, 1914-ல் ராஜாவாக நியமிக்கப்பட்டதிலிருந்து எந்தத் தொகுதியைத் தம் கருவியாகப் பயன்படுத்தி வருகிறார்?—தானியேல் 7:13, 14.
4. மல்கியாவின் தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் ஆன்மீக ஆலயத்தைச் சோதனையிட வந்தபோது எதைக் கண்டனர்?
4 ‘[உண்மையான] ஆண்டவராகிய’ யெகோவா, புதிதாய் அரச பொறுப்பேற்ற தம் மகனாகிய ‘உடன்படிக்கையின் தூதனுடன்’ தம் ‘ஆலயத்தை,’ அதாவது ஆன்மீக வழிபாட்டு ஸ்தலத்தை நியாயந்தீர்ப்பதற்காக, சோதனையிட வருவார் என்று மல்கியாவின் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது. ‘தேவனுடைய வீட்டை நியாயந்தீர்க்கும் காலம்’ 1918-ல் துவங்கியதாக அத்தாட்சிகள் காட்டுகின்றன.a (மல்கியா 3:1; 1 பேதுரு 4:17) கடவுளையும் அவரது உண்மை வணக்கத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைபாராட்டியவர்கள் நன்றாகச் சோதனையிடப்பட்டார்கள். நூற்றாண்டுகளாக, கடவுளை அவமதிக்கும் கோட்பாடுகளைப் போதித்து, முதல் உலகப் போரில் நடந்த படுகொலைகளுக்குப் பேரளவாக பொறுப்பு வகித்த கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானோரைக் கொண்ட உண்மையுள்ள தொகுதியும் பரீட்சிக்கப்பட்டது, நெருப்பில் இட்டு புடமிடப்பட்டதைப் போன்று தூய்மையாக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது. இதனால் “நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்” மக்களாக அவர்கள் ஆனார்கள்.—மல்கியா 3:3.
5. தம்முடைய ‘வந்திருத்தல்’பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தின்படி, உண்மையுள்ள ‘அடிமையாக’ நிரூபித்தவர்கள் யார்?
5 சீஷர்கள் தம்முடைய ‘வந்திருத்தலையும், இந்தக் காலப்பகுதியின் முடிவையும்’ கண்டுணர்ந்துகொள்ள உதவியாக ஒரு கூட்டு அடையாளத்தை இயேசு கொடுத்தார்; ஓர் “அடிமை” வகுப்பை அடையாளம் கண்டுகொள்வதும் அதில் உட்பட்டிருந்தது; இந்தத் தகவல் மல்கியாவின் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக இருந்தது. இயேசு பின்வருமாறு கூறினார்: “ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் [“அடிமை,” NW] யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:3, NW; 24:45-47) 1918-ல், ‘அடிமையை’ சோதிப்பதற்காக கிறிஸ்து ‘வந்தபோது,’ ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியானோரான உண்மையுள்ள சீஷர்களைக் கண்டார். அவர்கள் 1879 முதற்கொண்டு இந்தப் பத்திரிகையையும், பைபிள் அடிப்படையிலான மற்ற பிரசுரங்களையும் பயன்படுத்தி ‘ஏற்றவேளையிலே . . . போஜனங்கொடுத்து’ வந்திருந்தார்கள். தாம் கருவியாகப் பயன்படுத்தப்போகிற தொகுதியாக அல்லது ‘அடிமையாக’ கிறிஸ்து அவர்களை ஏற்றுக்கொண்டார். 1919-ல் தம்முடைய பூமிக்குரிய ஆஸ்திகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்.
கிறிஸ்துவின் பூமிக்குரிய ஆஸ்திகளை நிர்வகித்தல்
6, 7. (அ) இயேசு தம் உண்மையுள்ள ‘அடிமையைக்’ குறிப்பிட வேறு என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினார்? (ஆ) ‘விசாரணைக்காரன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
6 தம்முடைய வந்திருத்தல் சம்பந்தமான தீர்க்கதரிசனத்தில் பூமியில் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஓர் “அடிமை” பற்றி இயேசு குறிப்பிட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பு, வேறொரு சந்தர்ப்பத்தில் இதே “அடிமை” பற்றி பேசுகையில் சற்றே வித்தியாசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். அப்போது, இந்த அடிமையின் பொறுப்புகளை இயேசு பின்வருமாறு தெளிவுபடுத்தினார்: “பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் [“தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும்,” NW] அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 12:42, 44.
7 இந்த அடிமை, விசாரணைக்காரன் என்பதாக இங்கே அழைக்கப்படுவதைக் கவனியுங்கள். “வீடு அல்லது பண்ணையின் நிர்வாகியை” குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காரத் தொகுதி, பைபிளில் உள்ள ஆர்வமூட்டும் குறிப்புகளை விளக்கும் அறிஞர்களின் தொகுதியாக மட்டுமே செயல்படாது. ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்,’ “தகுதியான காலத்திலே,” அதாவது, ஏற்றவேளையிலே போஷாக்கான ஆன்மீக உணவை அளிக்க வேண்டியதோடு, கிறிஸ்துவின் பணிவிடைக்காரர் அனைவரையும் வழிநடத்தவும் வேண்டியிருக்கும்; அதோடு, கிறிஸ்துவின் பூமிக்குரிய ‘ஆஸ்திகள் எல்லாவற்றையும்,’ அதாவது அவருடைய சபையையும் அதன் நடவடிக்கைகள் அனைத்தையும் நிர்வகிக்கிற பொறுப்பும் அந்தத் தொகுதிக்கு அளிக்கப்படும். கிறிஸ்துவின் ஆஸ்திகளில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன?
8, 9. எந்த ‘ஆஸ்திகளை’ மேற்பார்வை செய்யும்படி அடிமை வகுப்பார் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்?
8 கிறிஸ்துவைப் பின்பற்றுவோர், தொடர்ந்து தங்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பொருளாதார வசதிகள் பலவற்றைப் பயன்படுத்துகிறார்கள்; இவற்றை மேற்பார்வையிடுவது இந்த அடிமையின் பொறுப்புகளில் ஒன்றாகும். யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்கள், உலகெங்கிலும் வணக்கத்திற்கென ஒன்றுகூடி வருவதற்காகப் பயன்படுத்தப்படுகிற ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள் ஆகியவை இதில் அடங்கும். மிக முக்கியமாக, வாராந்தரக் கூட்டங்களின் மூலமாகவும் அவ்வப்போது நடக்கும் மாநாடுகளின் மூலமாகவும், விசுவாசத்தைப் பலப்படுத்தும் பைபிள் கல்வி புகட்டப்படுவதை இவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள். இந்தக் கூட்டங்களின்போது, பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் குறித்து விளக்கப்படுகிறது; பைபிள் நியமங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பது சம்பந்தமான காலத்துக்கேற்ற வழிநடத்துதலும் கொடுக்கப்படுகிறது.
9 ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தைப்’ பிரசங்கித்து, ‘சகல ஜாதிகளையும் [அதாவது, தேசத்தாரையும்] சீஷராக்கும்’ அதிமுக்கியமான வேலையை மேற்பார்வை செய்ய வேண்டிய பொறுப்பும் இந்த விசாரணைக்காரனுக்கு இருக்கிறது. இந்த முடிவு காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்று சபையின் தலைவரான கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரோ அதைச் செய்ய மக்களுக்குக் கற்பிப்பது இதில் உட்பட்டுள்ளது. (மத்தேயு 24:14; 28:19, 20; வெளிப்படுத்துதல் 12:17) பிரசங்கித்து, கற்பிக்கும் வேலையின் மூலமாக, அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரின் உண்மையுள்ள தோழர்கள் அடங்கிய ஒரு ‘திரள் கூட்டம்’ உருவாகியிருக்கிறது. ‘சகல தேசங்களில் இருந்தும் வந்த விரும்பப்பட்டவர்களான’ இவர்கள், நிச்சயமாகவே உண்மையுள்ள அடிமை மேற்பார்வை செய்யும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற ‘ஆஸ்திகளின்’ பாகமாக இருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9; ஆகாய் 2:7, NW.
அடிமை வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஆளும் குழு
10. முதல் நூற்றாண்டில் எந்தத் தொகுதி தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பைப் பெற்றிருந்தது, இது சபைகளின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
10 உண்மையுள்ள அடிமை முக்கியப் பொறுப்புகளைக் கையாளுவதால், அநேக தீர்மானங்களை நிச்சயம் எடுக்க வேண்டியிருக்கும். கிறிஸ்தவ சபை ஆரம்பமான சமயத்தில், எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அடிமை வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்தனர். கிறிஸ்தவ சபை முழுவதற்கும் சேர்த்து தீர்மானங்களை எடுத்தனர். (அப்போஸ்தலர் 15:1, 2) முதல் நூற்றாண்டு ஆளும் குழுவினர், தாங்கள் எடுத்த தீர்மானங்களை, கடிதங்கள் வாயிலாகவும் பயணம் செய்யும் பிரதிநிதிகள் வாயிலாகவும் சபைகளுக்குத் தெரிவித்தனர். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இத்தகைய தெளிவான வழிநடத்துதலைப் பெற்றுக்கொண்டபோது சந்தோஷப்பட்டனர். ஆளும் குழுவுக்கு மனதாரக் கீழ்ப்படிந்தபோது சமாதானமும் ஒற்றுமையும் நிலவின.—அப்போஸ்தலர் 15:22-31; 16:4, 5; பிலிப்பியர் 2:2.
11. தமது சபையை வழிநடத்த கிறிஸ்து தற்போது யாரைப் பயன்படுத்துகிறார், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்ட இந்தத் தொகுதியை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
11 முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே, இன்றும் அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளைக் கொண்ட ஒரு சிறிய தொகுதி கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் ஆளும் குழுவாக பூமியில் செயல்படுகிறது. சபையின் தலைவராகிய கிறிஸ்து, தமது ‘வலதுகரமாகிய’ வல்லமையைப் பயன்படுத்தி, ராஜ்ய வேலையை மேற்பார்வையிடும் இந்த உண்மையுள்ள மனிதரை வழிநடத்துகிறார். (வெளிப்படுத்துதல் 1:16, 20) ஆளும் குழுவின் நீண்ட கால அங்கத்தினரும் சமீபத்தில் தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தவருமான ஆல்பர்ட் ஷ்ரோடர் தன்னுடைய வாழ்க்கை சரிதையில் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்: “ஆளும் குழுவினர் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒன்றுகூடி வருகிறார்கள். கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜெபம் செய்து, யெகோவாவுடைய ஆவியின் வழிநடத்துதலுக்காகக் கேட்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு விஷயத்தையும் கையாளவும், தீர்மானங்கள் எடுக்கவும் பெருமுயற்சி செய்கிறார்கள்.”b அபிஷேகம் செய்யப்பட்ட இந்த உண்மையுள்ளோரின் மீது நாம் நம்பிக்கை வைக்கலாம். முக்கியமாக, ஆளும் குழுவில் உள்ளவர்களைக் குறித்ததில் நாம் அப்போஸ்தலன் பவுல் கொடுத்த பின்வரும் ஆலோசனையைக் கடைப்பிடிக்க வேண்டும்: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், . . . அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள் [“பணிந்திருங்கள்,” பொது மொழிபெயர்ப்பு].”—எபிரெயர் 13:17.
உண்மையுள்ள அடிமைக்கு உரிய மரியாதை காட்டுதல்
12, 13. அடிமை வகுப்பாருக்கு மரியாதை காட்டுவதற்கு என்ன வேதப்பூர்வ காரணங்கள் உள்ளன?
12 உண்மையுள்ள அடிமை வகுப்பாருக்கு உரிய மரியாதை காட்டுவதன்மூலம், எஜமானராகிய இயேசு கிறிஸ்துவுக்கே நாம் மரியாதை காட்டுகிறோம்; உண்மையுள்ள அடிமைக்கு மரியாதை காட்ட இது ஒரு முக்கிய காரணம். அபிஷேகம் செய்யப்பட்டோரைக் குறித்து பவுல் பின்வருமாறு எழுதினார்: “அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான். நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்.” (1 கொரிந்தியர் 7:22, 23; எபேசியர் 6:6) ஆகவே, உண்மையுள்ள அடிமையும் அதன் ஆளும் குழுவும் அளிக்கிற வழிநடத்துதலுக்கு உண்மைப்பற்றுறுதியுடன் கீழ்ப்படியும்போது, அந்த அடிமையின் எஜமானரான கிறிஸ்துவுக்கே நாம் கீழ்ப்படிகிறோம். கிறிஸ்து தம்முடைய பூமிக்குரிய ஆஸ்திகளை நிர்வகிப்பதற்காகப் பயன்படுத்தும் கருவிக்கு உரிய மரியாதையைக் காட்டுவதன் மூலம், ‘பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று . . . [வெளிப்படையாக] அறிக்கைபண்ணுகிறோம்.’—பிலிப்பியர் 2:11.
13 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் யெகோவாவின் “ஆவி” குடியிருக்கிற ‘ஆலயமாக’ பைபிளில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்; இவ்விதத்தில் அவர்கள் ‘பரிசுத்தமாயிருக்கிறார்கள்’; உண்மையுள்ள அடிமைக்கு நாம் மரியாதை காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். (1 கொரிந்தியர் 3:16, 17; எபேசியர் 2:19-22) பரிசுத்த ஆலயமாக விவரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுதியிடமே இயேசு தம் பூமிக்குரிய ஆஸ்திகளை ஒப்படைத்திருக்கிறார். இது, கிறிஸ்தவ சபையில் இருக்கும் சில உரிமைகளும் பொறுப்புகளும் இந்தத் தொகுதிக்கு மட்டுமே உரியது என்பதை அர்த்தப்படுத்துகிறது. இதன் காரணமாக, இந்த உண்மையுள்ள அடிமையிடமிருந்தும் அதன் ஆளும் குழுவிடமிருந்தும் வருகிற வழிநடத்துதலைப் பின்பற்றுவதும் ஆதரிப்பதும் தங்களுடைய பரிசுத்த கடமையென சபையார் அனைவரும் கருதுகிறார்கள். உண்மையில், எஜமானரின் ஆஸ்திகளைக் கவனித்துக் கொள்வதில் அடிமை வகுப்பாருக்கு உதவுவதை ‘வேறே ஆடுகள்’ ஒரு பெரிய பாக்கியமாகவே கருதுகிறார்கள்.—யோவான் 10:16.
உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரவளித்தல்
14. ஏசாயாவால் முன்னுரைக்கப்பட்டபடி, வேறே ஆடுகள் எவ்விதத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் பின்னால் நடந்து ‘கூலி வாங்காத வேலையாட்களாக’ அவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்?
14 அபிஷேகம் செய்யப்பட்ட ஆன்மீக இஸ்ரவேலருக்கு வேறே ஆடுகள் மனத்தாழ்மையுடன் கீழ்ப்படிவார்கள் என்பது ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்தது: “எகிப்தின் சம்பாத்தியமும் [“கூலி வாங்காத வேலையாட்களும்,” NW], எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசாயா 45:14) இன்று அடையாள அர்த்தத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட அடிமை வகுப்பு மற்றும் அதன் ஆளும் குழுவின் பின்னால் வேறே ஆடுகள் செல்கிறார்கள்; அவர்களுடைய தலைமையை ஏற்று நடக்கிறார்கள். பிரசங்கிக்கும் பொறுப்பை பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களுக்கு இயேசு அளித்தார். ‘கூலி வாங்காத வேலையாட்களாக,’ வேறே ஆடுகள் தங்களுடைய உழைப்பையும் பொருளையும் இந்த உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிப்பதற்கு மனப்பூர்வமாகச் செலவிடுகிறார்கள்.—அப்போஸ்தலர் 1:8; வெளிப்படுத்துதல் 12:17.
15. ஏசாயா 61:5, 6-ல் உள்ள தீர்க்கதரிசனம், வேறே ஆடுகளுக்கும் ஆன்மீக இஸ்ரவேலருக்கும் இடையிலுள்ள பந்தத்தை எப்படி முன்னறிவிக்கிறது?
15 அடிமை வகுப்பு மற்றும் அதன் ஆளும் குழுவின் வழிநடத்துதலின் கீழ் யெகோவாவுக்குச் சேவை செய்வதைக் குறித்து வேறே ஆடுகள் சந்தோஷப்படுகிறார்கள்; அதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்டோரை ‘தேவனுடைய இஸ்ரவேலராக’ அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். (கலாத்தியர் 6:16) ‘மறுஜாதியாராகவும்’ ‘அந்நிய புத்திரராகவும்’ இருக்கிற அவர்கள், ஆன்மீக இஸ்ரவேலரோடு சேர்ந்து சேவை செய்கிறார்கள். ‘கர்த்தருடைய ஆசாரியராகவும்’ ‘தேவனுடைய பணிவிடைக்காரருமாக’ இருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டோரின் வழிநடத்துதலின் கீழ் அவர்கள் சந்தோஷமாக ‘பண்ணையாட்களாகவும்’ ‘திராட்சத்தோட்டக்காரருமாக’ சேவை செய்கிறார்கள். (ஏசாயா 61:5, 6) ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்து, எல்லா தேசத்து மக்களையும் சீஷராக்கும் வேலையில் அவர்கள் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடுகிறார்கள். புதிதாகக் கண்டுபிடித்த செம்மறியாடு போன்ற ஜனங்களை அக்கறையோடு கவனிப்பதில் அடிமை வகுப்பாருக்கு அவர்கள் மனமுவந்த ஆதரவை அளிக்கிறார்கள்.
16. உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை உண்மைப்பற்றுறுதியோடு ஆதரிக்க வேறே ஆடுகளை எது தூண்டுகிறது?
16 காலத்துக்கேற்ற ஆன்மீக உணவை அளிப்பதற்கு உண்மையுள்ள அடிமை எடுக்கும் ஊக்கமான முயற்சிகளால் தாங்கள் பெரிதும் பயனடைந்திருப்பதை வேறே ஆடுகள் உணருகிறார்கள். உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மட்டும் இல்லையென்றால், விலையேறப்பெற்ற பைபிள் சத்தியங்களை தாங்கள் அறிந்திருக்க முடியாது என்பதை அவர்கள் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். அடிமை வகுப்பாரின் உதவியால்தான் யெகோவாவின் உன்னத அரசதிகாரம், அவருடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படுதல், ராஜ்யம், புதிய வானங்கள், புதிய பூமி, ஆத்துமா, இறந்தோரின் நிலை ஆகியவற்றைக் குறித்து அவர்கள் தெரிந்திருக்கிறார்கள். அதோடு, யெகோவா, அவருடைய மகன், பரிசுத்த ஆவி பற்றி தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். பூமியில் இந்தக் கடைசி காலத்தில் வாழும் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட ‘சகோதரர்கள்’ மீதுள்ள அவர்களது இதயப்பூர்வமான நன்றியுணர்வு, உண்மைப்பற்றுறுதி காரணமாக அன்புடன் ஒத்துழைக்கிறார்கள்.—மத்தேயு 25:40.
17. ஆளும் குழு எதைச் செய்வது அவசியமாக இருந்திருக்கிறது, அடுத்த கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
17 அபிஷேகம் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது; எனவே, கிறிஸ்துவின் ஆஸ்திகள் நிர்வகிக்கப்படுவதை மேற்பார்வை செய்வதற்கு ஒவ்வொரு சபையிலும் அவர்கள் இருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களிலும், மாவட்டங்களிலும், வட்டாரங்களிலும், சபைகளிலும் கண்காணிகளாக வேறே ஆடுகளைச் சேர்ந்த ஆண்களை ஆளும் குழு நியமிக்கிறது. கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் சேவை செய்யும் இந்தத் துணை மேய்ப்பர்களை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பது, கிறிஸ்துவுக்கும் அவருடைய உண்மையுள்ள அடிமைக்கும் நாம் காட்டுகிற உண்மைப்பற்றுறுதியோடு தொடர்புடையதாக இருக்கிறதா? இக்கேள்வி அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இவ்விஷயத்தைப் பற்றிய விரிவான கலந்தாலோசிப்பிற்கு, காவற்கோபுரம், மார்ச் 1, 2004 பக். 13-18 மற்றும் மார்ச் 1, 1993, பக்கம் 13-ஐக் காண்க.
b இப்பத்திரிகையின் மார்ச் 1, 1988 ஆங்கில இதழில், பக்கங்கள் 10-17-ல் அதைக் காணலாம்.
மறுபார்வைக்கு
• நம்முடைய தலைவர் யார், சபைகளில் நடப்பவற்றை அவர் அறிந்திருக்கிறார் என்பதை எது காட்டுகிறது?
• ‘ஆலயம்’ சோதனையிடப்பட்டபோது, யார் உண்மையுள்ள அடிமையாகச் செயல்படுவது தெளிவானது, என்ன ஆஸ்திகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன?
• உண்மையுள்ள அடிமையை உண்மைப்பற்றுறுதியோடு ஆதரிப்பதற்கு பைபிள் என்ன காரணங்களை அளிக்கிறது?
[பக்கம் 23-ன் படங்கள்]
பொருள் உடமைகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், பிரசங்க வேலை ஆகியவை ‘விசாரணைக்காரனால்’ மேற்பார்வை செய்யப்படும் ‘ஆஸ்திகளில்’ அடங்கும்
[பக்கம் 25-ன் படம்]
வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் பக்திவைராக்கியத்தோடு பிரசங்கிப்பதன்மூலம் உண்மையுள்ள அடிமை வகுப்பாரை ஆதரிக்கிறார்கள்