யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஏசாயா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
தீர்க்கதரிசியாக ஏசாயா தன்னுடைய வேலையை உண்மையோடு செய்துவருகிறார். இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்திற்கு எதிராக அவர் கூறிய பிரகடனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. இப்போது, எருசலேமின் எதிர்காலத்தைப்பற்றி அவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
எருசலேம் நகரம் அழிக்கப்படும், அதன் குடிமக்கள் கைதிகளாக நாடுகடத்தப்படுவார்கள். இருந்தாலும் அந்நகரம் பாழான நிலையிலேயே விடப்படாது. சில காலத்திற்குப்பின், அங்கே உண்மை வணக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இவையே, ஏசாயா 36:1–66:24-லுள்ள முக்கிய செய்திகள்.a இந்த அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ளவற்றைச் சிந்திப்பதன் மூலம் நாம் நன்மையடையலாம். ஏனெனில், இப்பகுதியிலுள்ள அநேக தீர்க்கதரிசனங்கள் நம் நாளிலே பெரிய அளவில் நிறைவேறிவருகின்றன அல்லது சீக்கிரத்திலே நிறைவேறும். ஏசாயா புத்தகத்தின் இப்பகுதியில், மேசியாவைக் குறித்த விறுவிறுப்பூட்டும் தீர்க்கதரிசனங்களும் உள்ளன.
“இதோ, நாட்கள் வரும்”
எசேக்கியா ராஜாவுடைய ஆட்சியின் 14-ம் வருடத்தில் (பொ.ச.மு. 732) அசீரியர்கள் யூதாவைத் தாக்குகிறார்கள். எருசலேமைப் பாதுகாப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். யெகோவாவின் ஒரே தூதன் 1,85,000 அசீரிய படைவீரர்களை வீழ்த்துகிறார். அத்துடன் அவர்களுடைய அச்சுறுத்தல் முடிவுக்கு வருகிறது.
எசேக்கியா நோயினால் பாதிக்கப்படுகிறார். அவருடைய ஜெபத்தை யெகோவா கேட்டு, அவரைக் குணமாக்குகிறார். இன்னும் 15 வருடங்கள் வாழ்வதற்கு அனுமதிக்கிறார். எசேக்கியாவை வாழ்த்துவதற்காக பாபிலோன் ராஜா அனுப்பிய ஆட்களிடம் மடத்தனமாக தன்னுடைய எல்லா பொக்கிஷங்களையும் காட்டுகிறார். அவரிடம் ஏசாயா மூலம் யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் . . . எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.” (ஏசாயா 39:5, 6) நூறு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.
வேதப்பூர்வ கேள்விக்குப் பதில்:
38:7, 8—எதன்மீது சாயை, அதாவது நிழல் பின்னோக்கி நகரும்படி செய்யப்பட்டது? பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்தியரும் பாபிலோனியரும் சூரிய கடிகாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, இது எசேக்கியாவுடைய தகப்பனான ஆகாஸ் வாங்கிய கடிகாரமாக இருந்திருக்கலாம். அல்லது, ‘சூரிய கடிகாரம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் நேர்பொருள் “படிகள்” என்பதால் அரமனையின் உள்ளே இருந்த படிக்கட்டுகளை இது குறிக்கலாம். ஒருவேளை அருகேயிருந்த ஒரு தூணின் நிழல் மெல்ல மெல்ல அந்தப் படிகளில் விழுந்திருக்கலாம்; அந்த நிழலை வைத்து நேரத்தைக் கணக்கிட்டிருக்கலாம்.
நமக்குப் பாடம்:
36:2, 3, 22. அரமனை விசாரிப்புக்காரனாயிருக்கும் பணியிலிருந்து செப்னா விலக்கப்பட்டபோதிலும், அப்பணியில் நியமிக்கப்பட்டவருக்கு சம்பிரதியாக, அதாவது செயலாளராக அவர் தொடர்ந்து அரமனையில் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டார். (ஏசாயா 22:15, 19) ஏதோவொரு காரணத்தினால், யெகோவாவின் அமைப்பில் நமக்கு இருந்த ஸ்தானத்தை இழந்துவிட்டோமானால், கடவுள் அனுமதிக்கும் வேறு பொறுப்பில் இருந்துகொண்டு அவருக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்தானே?
37:1, 14, 15; 38: 1, 2. துயரமான சமயங்களில், யெகோவாவிடம் ஜெபிப்பதும் அவர்மீது முழு நம்பிக்கை வைப்பதும் ஞானமான செயல்.
37:15-20; 38:2, 3. அசீரியரின் அச்சுறுத்தலை எருசலேம் எதிர்ப்பட்டபோது, அதன் தோல்வியால் யெகோவாவின் பெயருக்கு நிந்தை ஏற்பட்டுவிடுமோ என எசேக்கியா மிகவும் கவலைப்பட்டார். உயிரைப் பறிக்கும் வியாதி தனக்கு வந்திருப்பதை அவர் அறிந்தபோது, தன் உடல் நலனைக் காட்டிலும் முக்கியமான ஒன்றைக் குறித்து அவர் கவலைப்பட்டார். தான் வாரிசின்றி இறந்துவிட்டால் தாவீதின் வழியில் தனக்கு அடுத்து ராஜாவாவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற வேதனையே அவருடைய மனதை துளைத்தெடுத்தது. அசீரியர்களுக்கு எதிராக யார் முன்னின்று போர் தொடுப்பார் என்பதையும் நினைத்து கவலைப்பட்டார். எசேக்கியாவைப் போல நாமும், நம்முடைய சொந்த இரட்சிப்பைவிட யெகோவாவுடைய பெயர் பரிசுத்தப்படுவதையும், அவருடைய நோக்கம் நிறைவேறுவதையும் முக்கியமானதாய்க் கருதுகிறோம்.
38:9-20. வாழ்க்கையில் யெகோவாவைத் துதிப்பதைவிட அதிமுக்கியமானது வேறெதுவும் இல்லை என்பதை எசேக்கியா பாடிய இப்பாடல் நமக்குக் கற்பிக்கிறது.
‘நீ கட்டப்படுவாய்’
எருசலேமின் அழிவையும், ஜனங்கள் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்படுவதையும் குறித்து முன்னறிவித்த உடனேயே எருசலேமும் அதன் ஜனங்களும் மீண்டும் நல்ல நிலைக்கு மாறப்போவதைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் உரைக்கிறார். (ஏசாயா 40:1, 2) ‘நீ [எருசலேம்] கட்டப்படுவாய்’ என ஏசாயா 44:28 குறிப்பிடுகிறது. பாபிலோனியரின் கடவுட்களான விக்கிரகங்கள், ‘சுமையை’ போல தூக்கிச் செல்லப்படும். (ஏசாயா 46:1) பாபிலோன் அழிக்கப்படும். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இவை அனைத்தும் நிறைவேறுகின்றன.
யெகோவா தம் ஊழியக்காரனை “ஜாதிகளுக்கு ஒளியாக” அளிப்பார். (ஏசாயா 49:6) பாபிலோனியரின் “வானம்,” அதாவது ஆட்சியாளர்கள் ‘புகையைப்போல் ஒழிந்துபோவார்கள்’; அதன் குடிமக்களோ “சாதாரண கொசுவைப்போல் சாவார்கள்” (NW); ஆனால், ‘சீயோன் குமாரத்தியோ, தன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடுவாள்.’ (ஏசாயா 51:6; 52:2) தம்மிடத்தில் வந்து தமக்குச் செவிகொடுப்பவர்களிடம் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.” (ஏசாயா 55:3) யெகோவா எதிர்பார்க்கிற நீதியின்படி வாழ்வது, ‘கர்த்தரில் மனமகிழ்ச்சியை’ காண்பதற்கு உதவுகிறது. (ஏசாயா 58:14) மறுபட்சத்தில், ஜனங்கள் செய்யும் தவறுகளோ ‘அவர்களுக்கும் அவர்களுடைய தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது.’—ஏசாயா 59:2.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
40:27, 28—“என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும்” இஸ்ரவேலர் ஏன் சொன்னார்கள்? ஏனெனில், தாங்கள் எதிர்ப்பட்ட அநீதிகள் யெகோவாவுக்கு மறைவாயிருந்தன அல்லது அவற்றை அவர் பார்க்கவில்லை என பாபிலோனிலுள்ள யூதர்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், பூமியைப் படைத்தவருக்கு பாபிலோன் நகரம் கண்ணுக்கெட்டாத ஓர் இடம் அல்ல; அவர் சோர்ந்துபோகிறவரும், இளைப்படைகிறவரும் அல்ல என நினைப்பூட்டப்பட்டது.
43:18-21—“முந்தினவைகளை நினைக்க வேண்டாம்” என சிறையிருப்பிலிருந்து வந்தவர்களிடம் ஏன் சொல்லப்பட்டது? கடந்த காலத்தில் அவர்களை விடுவிப்பதற்காக யெகோவா செய்த காரியங்களை அவர்கள் மறந்துவிட வேண்டுமென்ற அர்த்தத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை. மாறாக, அவர்கள் அனுபவிக்கப் போகிற ‘புதிய காரியத்தின்’ அடிப்படையில் தம்மைத் துதிக்கும்படி யெகோவா விரும்பினார். ஒருவேளை, நேரடிப் பாதையான வனாந்தரத்தின் வழியே அவர்கள் பத்திரமாக எருசலேமுக்குப் பயணம் செய்யவிருப்பது அப்புதிய காரியத்தில் ஒன்றாக இருக்கலாம். அதேபோல், “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைக்கும் ‘திரள் கூட்டத்தார்’ ஒவ்வொருவருக்கும் யெகோவாவை மகிமைப்படுத்துவதற்குப் புதிய காரணங்கள் இருக்கும்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
49:6—பூமியில் இஸ்ரவேலரிடத்தில் மட்டுமே மேசியா ஊழியம் செய்தபோதிலும், அவர் எப்படி “ஜாதிகளுக்கு ஒளியாக” இருக்கிறார்? இயேசுவின் மரணத்திற்குப்பின் நடந்தவற்றின் அடிப்படையில் அவர் அவ்வாறு இருக்கிறார். ஏசாயா 49:6-ஐ பைபிள் அவருடைய சீஷர்களுக்குப் பொருத்தி பேசுகிறது. (அப்போஸ்தலர் 13:46, 47) இன்று, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், திரள் கூட்டத்தாரின் உதவியோடு “ஜாதிகளுக்கு ஒளியாக” “பூமியின் கடைசிபரியந்தமும்” ஜனங்களுக்கு அறிவொளியூட்டுகிறார்கள்.—மத்தேயு 24:14; 28:19, 20.
53:10—தமது குமாரனை நொறுக்க யெகோவா சித்தமாயிருந்தார் என்பதன் அர்த்தம் என்ன? தமது அன்பு குமாரன் துன்பப்பட்டதைப் பார்த்தபோது பாசம் நிறைந்த, உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிற கடவுளான யெகோவா மிகுந்த வேதனை அடைந்திருப்பார். இருந்தாலும்கூட, இயேசுவின் மனமார்ந்த கீழ்ப்படிதலையும் அவருடைய எல்லாத் துன்பமும் மரணமும் தரவிருந்த நித்திய நன்மைகளையும் குறித்து அவர் மகிழ்ந்தார்.—நீதிமொழிகள் 27:11; ஏசாயா 63:9.
53:11—மேசியா எந்த அறிவினால் “அநேகரை நீதிமான்களாக்குவார்”? இயேசு, ஒரு மனிதனாகப் பூமிக்கு வந்து மரணம்வரை அநீதியை சகித்ததன் மூலம் பெற்ற அறிவை இது குறிக்கிறது. (எபிரெயர் 4:15) இவ்வாறு தன்னையே மீட்கும் பலியாக இயேசு கொடுத்திருக்கிறார். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் திரள் கூட்டத்தாரும் கடவுளுக்கு முன் நீதிமான்களாக ஆவதற்கு இது அவசியமாய் இருக்கிறது.—ரோமர் 5:19; யாக்கோபு 2:23, 25.
56:6—“அந்நிய புத்திரர்” யார், அவர்கள் எவ்விதங்களில் ‘[யெகோவாவின்] உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்’? இயேசுவின் ‘வேறே ஆடுகளே’ இந்த “அந்நிய புத்திரர்.” (யோவான் 10:16) அவர்கள் அந்த உடன்படிக்கையோடு தொடர்புடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள், அதன் மூலமாகச் செய்யப்படுகிற ஏற்பாடுகளுக்கு முற்றிலும் ஒத்துழைக்கிறார்கள், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உட்கொள்கிற அதே ஆன்மீக உணவை உட்கொள்கிறார்கள், ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் அவர்களுக்குத் தோள்கொடுக்கிறார்கள். இவ்விதத்தில் அவர்கள் புதிய உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நமக்குப் பாடம்:
40:10-14, 26, 28. யெகோவா பராக்கிரமசாலியும் மென்மையுமானவர், சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் படைத்தவர், நம் புத்திக்கு எட்டாத அறிவுடையவர்.
40:17, 23; 41:29; 44:9; 59:4. அரசியல் கூட்டணிகளும் விக்கிரகங்களும் ‘மாயை.’ அவற்றை நம்புவது வீண்.
42:18, 19; 43:8. எழுத்தில் வடிக்கப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தையை அசட்டை செய்வதும் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாய் கொடுக்கப்படும் போதனைகளைக் கேட்காதிருப்பதும் ஆன்மீக ரீதியில் நம்மை குருடராகவும் செவிடராகவும் ஆக்குகிறது.—மத்தேயு 24:45.
43:25. யெகோவா தம் நிமித்தமாகவே நம்முடைய மீறுதல்களை துடைத்தழிக்கிறார். யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு ஒப்பிட, பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலையாக்கப்படுவதும் நித்திய ஜீவனை அடைவதும் இரண்டாம் இடத்தையே பெறுகின்றன.
44:8. நமக்கு யெகோவாவின் ஆதரவு இருக்கிறது, அவர் நிலையானதும் உறுதியானதுமான கன்மலையைப் போன்றவர். அவரே கடவுளென சாட்சி கொடுப்பதற்கு நாம் அஞ்சவே கூடாது!—2 சாமுவேல் 22:31, 32.
44:18-20. விக்கிரகாராதனை, நம் இருதயம் கறைபடிந்திருப்பதற்கு ஓர் அடையாளமாகும். நம் இருதயத்தில் யெகோவாவுக்குரிய இடத்தை வேறெதுவும் அபகரித்துவிடக் கூடாது.
46:10, 11. ‘தம் ஆலோசனையை நிலைநிற்க’ செய்வதற்கான திறமை, அதாவது தம் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவாவுக்கு இருக்கும் திறமை, அவரே கடவுள் என்பதற்கு மிகப்பெரிய நிரூபணமாகும்.
48:17, 18; 57:19-21. இரட்சிப்புக்காக யெகோவாவை நோக்கியிருந்து, அவரிடம் நெருங்கி வந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனம் செலுத்துவோமானால் வற்றாத நதியைப்போல நம் சமாதானத்துக்கு குறைவே இருக்காது, கடலின் அலைகளைப்போல நீதியான செயல்களை நாம் ஏராளமாய் செய்துகொண்டே இருப்போம். கடவுளுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்காதவர்களோ “கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள்.” அவர்களுக்குச் சமாதானம் இல்லை.
52:5, 6. மெய்க் கடவுள் சக்தியற்றவர் என்பதாக பாபிலோனியர் தவறாக முடிவு செய்தார்கள். இஸ்ரவேலரின் அடிமைத்தனத்திற்குக் காரணம் யெகோவா அவர்களை வெறுத்ததுதான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதேபோல், மற்றவர்களைத் துயரம் தாக்குகையில், அதற்கான காரணத்தைக் குறித்து தவறான முடிவெடுக்காதிருப்பது ஞானமானது.
52:7-9; 55:12, 13. ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் சந்தோஷமாக ஈடுபடுவதற்கு குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் உள்ளன. ஆன்மீகப் பசியில் வாடுவோருக்கு நம் பாதங்கள் அழகாகத் தெரிகின்றன. நாம் யெகோவாவைக் ‘கண்ணாரக் காண்கிறோம்,’ அதாவது அவரோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிறோம். நாம் ஆன்மீகச் செழுமையையும் அனுபவித்து மகிழ்கிறோம்.
52:11, 12. “[யெகோவாவின்] பாத்திரங்களை” சுமப்பதற்குத் தகுதிபெற, அதாவது பரிசுத்த சேவைக்கான ஏற்பாடுகளில் பங்குபெறுவதற்குத் தகுதிபெற நாம் ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்தமாய் இருக்க வேண்டும்.
58:1-14. பக்திமான்களைப் போலவும் நீதிமான்களைப் போலவும் காட்டிக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை. உண்மை வணக்கத்தாருடைய சொல்லும் செயலும் உண்மையான தேவபக்தியையும் சகோதர அன்பையும் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும்.—யோவான் 13:35; 2 பேதுரு 3:11.
59:15ஆ-19. மனிதன் செய்யும் காரியங்களை யெகோவா கவனிக்கிறார், தக்க சமயத்தில் அவர் நடவடிக்கை எடுக்கிறார்.
நீ ‘அலங்காரமான கிரீடமாய் இருப்பாய்’
பூர்வ காலத்திலும் சரி நம் காலத்திலும் சரி, மெய் வணக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டு ஏசாயா 60:1 இவ்வாறு சொல்கிறது: “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.” சீயோன், ‘யெகோவாவுடைய கையில் அலங்காரமான கிரீடமாய் இருக்கும்.’—ஏசாயா 62:3.
ஏசாயா தன் சக மனிதரின் சார்பாக யெகோவாவிடம் ஜெபிக்கிறார்; அவர்கள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருக்கும்போது மனந்திரும்புவார்கள். (ஏசாயா 63:15–64:12) உண்மை ஊழியர்களை பொய் ஊழியர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டிய பிறகு, தமக்குச் சேவை செய்பவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிப்பார் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி அறிவிக்கிறார்.—ஏசாயா 65:1–66:24.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
61:8, 9—“நித்திய உடன்படிக்கை” என்பது என்ன, “சந்ததி” யார்? இது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு யெகோவா செய்த புதிய உடன்படிக்கையாகும். அவர்களுடைய செய்தியை ஏற்றுக்கொள்கிற எண்ணற்றோரான ‘வேறே ஆடுகளே’ இந்த “சந்ததி” ஆவர்.—யோவான் 10:16.
63:5—கடவுளுடைய உக்கிரம் எப்படி அவரைத் தாங்குகிறது? கடவுளுடைய உக்கிரம் என்பது அவருடைய கட்டுப்பாட்டிலுள்ள ஓர் உணர்ச்சி, அதாவது அவருடைய நியாயமான கோபமாகும். அவருடைய உக்கிரம், நீதியான தீர்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு ஆதரவையும் தூண்டுதலையும் அளிக்கிறது.
நமக்குப் பாடம்:
64:6. அபூரண மனிதரால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. பாவநிவர்த்தி செய்யும் விஷயத்தில் அவர்களுடைய நீதியான செயல்கள், கறைப்பட்ட ஆடைகளைப் போலவே இருக்கின்றன.—ரோமர் 3:23, 24.
65:13, 14. யெகோவா தம் ஊழியர்களை ஆசீர்வதிக்கிறார், அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவாய் திருப்தி செய்கிறார்.
66:3-5. மாய்மாலத்தை யெகோவா வெறுக்கிறார்.
“மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்”
பாபிலோனில் அடிமைகளாய் வாழும் உண்மையுள்ள யூதர்களுக்கு, எருசலேமில் மீண்டும் உண்மை வணக்கம் ஆரம்பிக்கப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கும்! “நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்” என யெகோவா சொன்னார்.—ஏசாயா 65:18.
இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடியிருக்கிற ஒரு காலத்தில்தான் நாமும் வாழ்ந்து வருகிறோம். (ஏசாயா 60:2) இது ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலமாக’ இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1, NW) ஆகவே, பைபிளிலுள்ள ஏசாயா புத்தகத்தில் யெகோவா கொடுத்துள்ள இரட்சிப்பின் செய்தி நமக்கு பெரும் ஊக்கமூட்டுதலை அளிக்கிறது.—எபிரெயர் 4:12.
[அடிக்குறிப்பு]
a ஏசாயா 1:1–35:10 வரையான அதிகாரங்களை ஆராய்வதற்கு டிசம்பர் 1, 2006 காவற்கோபுரத்தில் “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—ஏசாயா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 8-ன் படம்]
அசீரியர்களிடமிருந்து இரட்சிப்படைவதற்காக எசேக்கியா ஜெபித்ததற்கு முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா?
[பக்கம் 11-ன் படம்]
‘சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன!’