பூமியில் மிக மதிப்புவாய்ந்த பிள்ளை பிறப்பு உலகளாவிய பாதுகாப்பை முன்குறிக்கிறது
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ராஜாதிகாரம் அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதானபிரபு எனப்படும்.”—ஏசாயா 9:6, தி.மொ.
உலகளாவிய பாதுகாப்பு! “இந்த உலகத்தின் அதிபதி” [பிரபு, NEB] பிசாசான சாத்தானின் கீழ் இது நடக்கமுடியாதக் கனவே. (யோவான் 12:31) ஆனால் “சமாதானபிரபு” இயேசு கிறிஸ்துவின் கீழ் உலகளாவிய பாதுகாப்பு முழு நிச்சயமான நிகழ்ச்சியாகும். இந்தச் “சமாதானபிரபு”வின் பிறப்பையும் வாழ்க்கைப் போக்கையும் பற்றிய தீர்க்கதரிசனத்தில் யெகோவா இதைக் குறித்து நமக்கு உறுதியளிக்கிறார். ஏசாயா 9:6, 7-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ராஜாதிகாரம் அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதானபிரபு எனப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவன் ராஜ்யத்தையும் அவர் பலப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்கென அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்,”—தி.மொ.
2 எத்தகைய அதிசயமான தீர்க்கதரிசனம்! பூமியில் இந்த மிக மதிப்புவாய்ந்த பிள்ளை பிறப்பைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனத்தை ஆராய்வது உள்ளக்கிளர்ச்சியுண்டாக்கும். ஆனால் இதை முழுமையாய் மதித்துணருவதற்கு முன்னால் இந்தத் தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்ட சூழ்நிலைமைகளின்பேரில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அரசன் ஆகாஸின் கீழ் யூதா ராஜ்யம் இருந்த நாட்களின்போது, அது சர்வதேசக் கூட்டுச் சதிக்குரிய காலமாயிருந்தது. அந்த அரசன் யெகோவாவுக்கு உண்மையற்றவனாக இருந்தபோதிலும் யெகோவாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்க அனுமதிக்கப்பட்டான். தாவீதின் வம்ச பரம்பரையில் நித்திய ராஜ்யம் இருக்குமென யெகோவா தாவீதுடன் செய்த உடன்படிக்கையின் காரணமாக இந்தப் பொறுமை அவனிடம் காட்டப்பட்டது. யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் சிலாக்கியத்தைத் தாவீதுக்கு மறுத்தபோதிலும், கடவுள் அவனுக்கு அதற்குப் பதிலாக வேறொரு ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். இது தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பின்வரும் வார்த்தைகளில் அறிவிக்கப்பட்டது: “இப்போதும் தாம் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதை யெகோவா உனக்கு அறிவிக்கிறார். உன் வீடும் உன் ராஜ்யமும் என்றென்றுமாக உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் சிங்காசனம் என்றென்றுமாக நிலைபெற்றிருக்கும்.” (2 சாமுவேல் 7:11, 16, தி.மொ.) இந்தத் தெய்வீக வாக்கு அரசனாகிய தாவீதுக்கு அவ்வளவு மிகத் திருப்தியை அளித்ததனால் அதன் மகிமையான நிறைவேற்றத்தை அவன் ஆவலோடு எதிர்நோக்கினான்.
3 தாவீதுடன் செய்த இந்த உடன்படிக்கை பெரிய தாவீதின் குமாரனான, “சமாதானபிரபு” இயேசு கிறிஸ்துவில் அதன் நிறைவேற்றத்தை அடைகிறது. இந்தப் பூமியின் மேற்பரப்பில் வேறு எந்த ராஜரீக வம்சமும், அதன் ராஜாதிகாரப் பெருக்கத்துக்கு முடிவில்லாமலும் சமாதானத்துக்கு முடிவில்லாமலும் இருக்கும் ராஜ்யத்துக்கான இத்தகைய உடன்படிக்கையை ஒருபோதும் அனுபவித்து மகிழவில்லை. ஆனால் இந்த ராஜ்ய உடன்படிக்கை, சாத்தான் பிரபுவாக, அல்லது அதிபதியாக இருக்கும் இவ்வுலக ராஜ்யங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு சவாலை அளித்தது. ஆகவே பிசாசும் அவனுடைய பேய்களும், தாவீதின் வம்சத்தை அழிக்கவும், அவ்வாறு அது நிலையான வாரிசைக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை ஒழிக்கவும் முயற்சி செய்வதையே தங்கள் இலக்காக்கினர். சாத்தான், சீரியாவின் அரசன் ரேத்சீனையும் இஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யத்தின் அரசன் பெக்காவையும், அசீரியாவின் அரசனையும், தான் உடனடியாகப் பயன்படுத்துவதற்கேற்றக் கருவிகளாகக் கண்டான்.
ராஜ்ய உடன்படிக்கைக்கு எதிராகக் கூட்டுச் சதி
4 சாத்தானின் சதித்திட்டமென்ன? யூதாவின் அரசன் ஆகாஸைப் பயத்தினால் அசீரியா அரசனுடன் தகாத நேச ஒப்பந்தத்துக்குட்படும்படி வற்புறுத்துவது அவனுடைய நோக்கமாயிருந்தது. பிசாசு இதை எப்படிச் செய்யமுடியும்? இஸ்ரவேலின் அரசன் பெக்காவும் சீரியாவின் அரசன் ரேத்சீனும் தாவீதின் வம்சத்துக்கு விரோதமாய் ஒரு கூட்டுச் சதிக்குள் உட்படும்படி அவன் செய்வித்தான். தங்கள் சொந்த மனிதன், தபேயாலின் குமாரனைத் தங்கள் கைப்பாவை அரசனாக அமர்த்தும்படி ஆகாஸை யூதாவின் சிங்காசனத்திலிருந்து நீக்கும்படி அவர்கள் சதிசெய்தார்கள். இந்தத் தபேயாலின் குமாரன் யார்? இவன் தாவீதின் வம்ச பரம்பரையில் வந்தவனல்லவென்பது தனிப்பட கவனிக்கத்தக்கது. ஆகவே அதன் நிலையான வாரிசை “சமாதானபிரபு”வில் அது கண்டடையும் வரையில் ராஜ்யத்துக்குரிய கடவுளுடைய உடன்படிக்கையை இவன் மூலமாய்க் கடத்துவதற்கு இவன் உகந்த மனிதன் அல்ல. அவன், யூதாவின் சிங்காசனத்தில், கடவுளுடைய ஆளாக அல்ல, அவர்களுடைய ஆளாக இருக்க வேண்டும். இவ்வாறு பைபிள், தாவீதுடன் செய்யப்பட்ட யெகோவாவின் ராஜ்ய உடன்படிக்கை நடப்பில் இயங்கிக்கொண்டிருப்பதை நிறுத்திப்போடுவதற்குச் சாத்தான் எடுத்த முயற்சியை வெளிப்படுத்துகிறது.
5 இந்தப் பயமுறுத்தலுக்கு அரசன் ஆகாஸ் எவ்வாறு பிரதிபலித்தான்? அவனும் அவனுடைய ஜனங்களும் பயத்தால் நடுங்கினர். உலக வல்லரசாக எழும்பிக்கொண்டிருந்த அசீரியாவின் அரசனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதிலிருந்து அவனைத் தடுத்துத் திருப்புவதற்கு யெகோவா அவனுக்கு ஊக்கமூட்டும் ஒரு தகவலைக் கொடுத்தார். ஆகாஸை சந்தித்து ஏசாயா 7:4-9-ல் காணப்படுகிற பின்வரும் செய்தியை அவனுக்குக் கொடுக்கும்படி யெகோவா தம்முடைய தீர்க்கதரிசி ஏசாயாவை அனுப்பினார்:
6 “நீ பயப்படவேண்டாம், . . . சீரியர் எப்பிராயீமோடும் [இஸ்ரவேல் ராஜ்யத்தில் தலைமை வகிக்கும் பகுதி] ரெமலியாவின் மகனோடும் [பெக்கா] உனக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணி நாம் யூதாவுக்கு விரோதமாய்ப் போய் அதற்குத் திகில் விளைத்து நமக்கென அதைப் பிடித்துக்கொண்டு அதிலே தாபெயலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொல்லுகிறார்கள். யெகோவாவாகிய ஆண்டவரோ, அந்த ஆலோசனை நிலை நிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை; . . . நீங்கள் நம்பிக்கையற்றுப்போனால் நிலைநிற்கமாட்டீர்கள் என்று சொல்லுகிறார்.”
இந்தக் கூட்டுச் சதி தோல்வியடையுமென்பதற்கு அடையாளம்
7 இவ்வாறு யெகோவா, அந்தச் சதி செய்தவர்களின் தோல்வியை முன்னறிவித்தார். அந்நேரத்தில், உலகத்தைக் குலுக்கும் முக்கியத்துவத்தையுடைய தெய்வீகத் தீர்க்கதரிசனத்துக்கான காலம் வந்தது. எப்படியெனில் அது தாவீதுடன் செய்த ராஜ்ய உடன்படிக்கையில் ராஜரீக வாரிசுவைக் குறித்துக்காட்டினது. ஆனால் இந்தக் கவனிக்கத்தக்கத் தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு எது வழிநடத்தினது? யெகோவா, அரசன் ஆகாஸிடம் பேசினார். அவர் ஆகாஸிடம், அவன், தான் நினைக்கக்கூடிய ஏதாவது அற்புத அடையாளத்தைத் தம்மிடம் கேட்கும்படியும், பின்பு, தாவீதின் வம்சத்துக்கு விரோதமான அந்தக் கூட்டுச் சதியைக் கடவுள் முறித்துப்போடுவார் என்பதற்கு முழு பொறுப்புறுதியாக யெகோவா அதை நடப்பிப்பார் என்றும் கூறினார். ஆகாஸ் அத்தகைய அடையாளத்தைக் கேட்க மறுத்துவிட்டான். அடுத்தப்படி என்ன நடந்தது? ஏசாயா 7:14 நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறது: “ஆகவே ஆண்டவர் [யெகோவா, NW] தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, கன்னிகையானவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” இந்தப் பெயரின் அர்த்தம் “கடவுள் நம்மோடிருக்கிறார்” என்பதாகும். (தி.மொ.) இம்மானுவேலும் ஏசாயாவின் மற்ற இரண்டு குமாரரும் அடையாளங்களாகச் சேவிக்க வேண்டியிருந்ததால், தீர்க்கதரிசி ஏசாயா 8:18-ல் பின்வருமாறு கூறினான்: “இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும், . . . சேனைகளின் யெகோவாவாலே இஸ்ரவேலின் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.” (தி.மொ.) ஆகவே இம்மானுவேலின் பிறப்பு, கடவுளுடைய ராஜ்ய உடன்படிக்கைக்கும் அதின் வாரிசுக்கும் எதிரான கூட்டுச் சதியாளர் யாவரும் ஒழிந்துபோவார்கள், அவர்களுடைய எல்லா சதிகளும் தோல்வியடையும் என்பதற்கு நம்பத்தக்க அடையாளமாயிருந்தது!
8 இம்மானுவேல் என்று பெயரிடப்பட்ட அந்தக் குமாரனை யார் பிறப்பித்தாரென பைபிள் விவரப் பதிவு சொல்லுகிறதில்லை. அது ஒருவேளை தீர்க்கதரிசி ஏசாயவின் இரண்டாவது மனைவியான ஒரு யூதப் பெண்ணாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் அந்தப் பையன் நன்மை தீமை இன்னதென்று வேறுபடுத்திக் காண போதிய வயதுக்கு வளருமுன் தாவீதின் வம்சத்துக்கு எதிராகக் கூட்டுச் சதிசெய்யும் அந்த இரண்டு அரசர்களும் அழிவுக்குரிய முடிவுக்கு வருவார்கள் என்று இந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து கூறினது. (ஏசாயா 7:15, 16) இது உண்மையாய் நடந்தது. ஏசாயாவின் நாட்களிலிருந்து இம்மானுவேல் யாரென்பது நமக்கு நிச்சயமில்லாதிருப்பது ஒருவேளை, பெரிய இம்மானுவேல் பரலோகத்திலிருந்து அற்புத அடையாளமாகத் தோன்றுகையில், பின்வரும் சந்ததியின் கவனம் அவரைவிட்டு வேறு வழியில் திரும்பாதிருக்கச் செய்வதற்காக இருக்கலாம்.
9 நிச்சயமாகவே, ஆகாஸின் நாட்களில், இந்த அடையாளமும், கடவுளுடைய ராஜ்ய உடன்படிக்கைக்கு எதிரான உலகக் கூட்டுச் சதி கவிழ்க்கப்பட்டதும் சிறிய அளவான நிறைவேற்றமாக மாத்திரமே இருந்தது. எனினும் அந்த முதல் நிறைவேற்றம், அந்த அடையாளமும் உலகக் கூட்டுச் சதி கவிழ்க்கப்படுவதும் நம்முடைய நெருக்கடியான காலத்தில் பெரிய கருத்தில் நிறைவேற்றமடையுமென உறுதியளித்தது. இன்று நாம் ஒருக்காலும் இராத மிகப் பெரிய உலகக் கூட்டுச் சதியை நேருக்குநேர் எதிர்ப்படுகிறோம். எந்தக் கருத்தில்? நிலையான சமாதானத்தைக் கொண்டுவருவதற்குச் செய்திருக்கும் யெகோவாவின் ஏற்பாட்டை தேசங்கள் புறக்கணிப்பதிலும், “சமாதானபிரபு”வின் பிரதிநிதிகளை எதிர்ப்பதிலுமே. இந்தக் கூட்டுச் சதி உண்மையில் ராஜ்ய உடன்படிக்கையின் வாரிசாகிய “சமாதானபிரபு”வுக்கு எதிராகவே செய்யப்படுகிறது. இப்பொழுது இந்தத் தீர்க்கதரிசனத்தின் முடிவான நிறைவேற்றத்தைப் பற்றியதென்ன? நாம் இந்த அடையாளத்தைத் தெளிவாக அறிந்துகொண்டால், இந்த உலகக் கூட்டுச் சதியின் அவல அழிவு முன்னதாகவே செய்யப்பட்ட முடிவு என்பதை உணர்ந்து போற்றுவோம்.
“சமாதானபிரபு”வின் பிறப்பு
10 இந்தத் தீர்க்கதரிசனத்தின் முடிவான நிறைவேற்றத்தில், அடையாளமாகவும் ராஜ்ய உடன்படிக்கையின் வாரிசாகவும் அந்தப் பிள்ளையைப் பிறப்பித்தக் கன்னிகை அரசன் தாவீதின் பரம்பரையில் வந்த யூதக் கன்னிகை மரியாளே. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடப்படும், யெகோவா தேவன் “அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்,” “அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது,” என்று காபிரியேல் என்னும் தூதன் அவளுக்குச் சொன்னான். (லூக்கா 1:26-33) தேவாவியால் ஏவப்பட்ட சரித்திராசிரியனாகிய மத்தேயு இம்மானுவேலின் அடையாளத்தைத் தாவீதின் வம்சத்தோடு இணைக்கிறான். மத்தேயு 1:20-23-ல் நாம் வாசிப்பதாவது: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ளப் பயப்படாதே; அவளிடம் உற்பவித்திருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; தமது ஜனத்தின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவர் அவரே என்றான். இதோ, கன்னிகையானவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தர் [யெகோவா, NW] உரைத்தது நிறைவேற இதெல்லாம் நடந்தது. இம்மானுவேல் என்பதற்குக் கடவுள் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.”—தி.மொ.
11 முன்னறிவித்த இம்மானுவேலின் இந்தப் பிறப்பு எப்பொழுது, எங்கே நடந்தது? மத்தேயு 2:6-ல் பின்வருமாறு மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டுள்ள மீகா 5:2-ன் வார்த்தைகள் எல்லா யூதருடைய கண்களையும் சரியான திசைக்குத் திருப்பின: “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்.” பொ.ச.மு. 2-ம் ஆண்டில் பெத்லகேம் நகரத்தில் “சமாதானபிரபு” பிறந்தார்; ஏசாயா 9:6, 7-ன் கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைய தொடங்கினது.
12 “சமாதானபிரபு” என்ற பட்டப் பெயரைக் கொண்டிருக்கப் போகிறவரின் பெற்றோராவதைக் கனமாகவும் மகிழ்ச்சியாகவும் நம்மில் எவர் கருதாதிருப்பர்? ஆகவே இது இந்தப் பிரபுவின் ராஜரீகத் தகப்பனுக்கு மிகுந்த மகிமையைக் கொண்டுவந்தது. உண்மையில், ஒருபோதும், முன் ஒருபோதுமே, ஒரு மனிதப் பிறப்பின்போது இத்தகைய மகிமையும் மேன்மை பகட்டொளியும் வாய்ந்த அதிசயமான அம்சங்கள் நடந்ததில்லை.
13 பெத்லகேமுக்கு வெளியிலிருந்த மேய்ச்சல் வெளிகளில் தங்கள் மந்தைகளைக் காவல்காத்துக் கொண்டிருந்தது மேய்ப்பர்களுக்கு யெகோவாவின் பிரகாசமான தூதன் தோன்றினான், “கர்த்தருடைய [யெகோவாவின், NW] மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது.” அப்பொழுது அந்தத் தூதன், தெய்வீகத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நிகழ்ந்த இந்தப் பிறப்பை அறிவித்துப் பின்வருமாறு கூறினான்: “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” இந்த மகிமை போதாதென்பதுபோல், திரளான தூதர்கள் மேலே வானங்களில் தோன்றி, புதிதாய்ப் பிறந்தக் குழந்தையின் தகப்பனைப் போற்றிப் புகழ்ந்து, ஒரே குரலில் சொல்வதுபோல்: “மேலே உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை; பூமியின்மீது நற்பிரிய மனிதருக்குள் சமாதானம்,” (NW) என்று சொன்னார்கள். கடவுளுடைய நற்பிரியத்தைக் கொண்டிருக்கும் மனிதர் எல்லாருக்கும் தெய்வீகச் சமாதானமிருக்கும் என்று தூதர்கள் முன்தீர்மானிக்கப்பட்ட “சமாதானபிரபு”வின் பிறப்பின்போது அறிவித்தது எவ்வளவு பொருத்தமாயிருந்தது.—லூக்கா 2:8-14.
14 “சமாதானபிரபு”வாக இருக்கப்போகிறவரின் பிறப்புக்கு வெகு காலத்துக்கு முன், தூதர்கள் ஒரு விசேஷித்தச் சந்தர்ப்பத்தின்போது, கடவுளைத் துதித்தார்கள். அது சிருஷ்டிப்பின்போது அவர் பூமிக்கு அஸ்திபாரமிடுகையிலாகும். (யோபு 38:4) வானவெளியிலிருந்து வானோடிகள் எடுத்த நம்முடைய பூமியின் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படியானால் சமீப காலங்கள் வரையில் தூதர்கள் மாத்திரமே பார்த்ததை நீங்கள் பார்த்தீர்கள். தேவதூதர்கள் அப்பொழுது எவ்வாறு பிரதிபலித்தார்கள்? யோபு 38:7-ல் பின்வருமாறு நமக்குச் சொல்லியிருக்கிறது: “அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.”
15 ஒருபோதும் பூமியை மேன்மைப்படுத்தும் மிக மதிப்புவாய்ந்த பிறப்பு, கடவுளுடைய குமாரர்கள் ஒருமித்துத் துதிப்பாடலில், இன்னிசைவாய்த் தங்கள் குரல்களை ஒன்றுபட எழுப்புவதற்கு எவ்விதமும் குறைந்த முக்கியத்துவமுடைய சம்பவமல்ல. பூமிக்குரிய ஒரு தகப்பனுக்கு அவனுடைய முதற்பேறான குமாரனின் பிறப்பின்போது மகிழ்ச்சி தெரிவித்து வாழ்துதலைக் கூறுவதைப் போலவே, பூமியில் ஒருபோதுமிராத வண்ணம் நிகழ்ந்த இந்த மிக மதிப்புவாய்ந்த பிறப்புக்கும் பொறுப்புடைய பரலோகத் தகப்பனும் தம்முடைய பரலோகக் குடும்ப அங்கத்தினரால் பாடிப் புகழ்ந்து வாழ்த்தப்படுவதற்குத் தகுதியுடையவர். முற்றிலும் புதிய கூட்டு சூழ்நிலைமைகளில் தாம் முதல்தடவை தகப்பனானபோது, தெய்வீகர், அந்த மிக நேர்த்தியான அழகிய ஒன்றுசேர்ந்த இன்னிசைப்பாடலை எவ்வளவாய் மகிழ்ந்து அனுபவித்திருக்க வேண்டும்! முன் நிர்ணயிக்கப்பட்ட “சமாதானபிரபு”வின் பிறப்புக்கு ஒத்த ஒரு பிள்ளை பிறப்பு சர்வலோக சரித்திரம் முழுவதிலும் முன்னொருபோதும் இருக்கவில்லை.
“பெரிய வெளிச்சம்” பிரகாசிக்கிறது
16 இயேசு தம்முடைய வெளிப்படையான போதக ஊழியத்தைத் தொடங்கினபோது, ஏசாயா 9-ம் அதிகாரத்தின் மேலுமான தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்தது. இது அதன் முதல் இரண்டு வசனங்கள் சம்பந்தப்பட்டதாகும், அவற்றில், “இருள் நடக்கிற” ஜனங்கள்மேல் “பெரிய வெளிச்சம்” பிரகாசிக்குமென முன்னறிவித்திருந்தது. இந்த வசனங்களின் நிறைவேற்றத்தை மத்தேயு 4-ம் அதிகாரம் 13-லிருந்து 17-ம் வசனங்களில் தேவாவியால் ஏவப்பட்ட சரித்திராசிரியனாகிய மத்தேயு நமக்குப் பின்வருமாறு விளக்கியிருக்கிறான்: “[இயேசு] நாசரேத்தைவிட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் [நிழலின், NW] திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.”
17 செபுலோனும் நப்தலியும் இஸ்ரவேலின் வடகோடியில் இருந்தன, கலிலேயா மாகாணத்துக்குள் அடங்கியிருந்தன. நப்தலி கலிலேயாக் கடலின் மேற்குக் கரையோரம் முழுவதையும் எல்லையாகக் கொண்டிருந்தது. ஆகவே அந்த நிலப் பகுதிகளில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் இயேசு, தம்முடைய சீஷர்களோடுகூட, அங்கே அவ்வளவு காலம் இருளில் உட்கார்ந்திருந்த ஜனங்களுக்கு வெளிச்சம் பிரகாசிக்கச் செய்தார். இயேசு, யோவான் 8:12-ல்: “நானே உலகத்துக்கு வெளிச்சம்; என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடக்கவே மாட்டான், ஜீவவெளிச்சத்தை அடைந்திருப்பான்,” என்று சொன்னார். (தி.மொ.) இவ்வாறு, “மரண நிழலின் நிலப்பகுதியில் உட்கார்ந்திருந்தவர்கள்” (NW) இயேசுவின் மூலமாய் “ஜீவ வெளிச்சத்தை” அடையக்கூடும்படி செய்யப்பட்டார்கள், எப்படியெனில் அவர் “அநேகரை மீட்கும் பொருளாகத்” தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். மனிதர் ஜீவனையடையக்கூடிய வழிவகையின்பேரில் வெளிச்சம் பிரகாசிக்கச்செய்ய யெகோவா அவரையே பயன்படுத்தினார்.—மத்தேயு 4:23; 20:28.
18 மரணத்திலிருந்தும் ஒடுக்குதலிலிருந்தும் விடுதலையை வாக்குக்கொடுத்த இந்தப் “பெரிய வெளிச்சம்” கலிலேயா மனிதருக்கு மாத்திரமேயென வரையறுக்கப்படவில்லை. அந்த அரசாங்கத்தின் பெருக்கத்துக்கு முடிவிராதென்று ஏசாயா முன்னறிவித்தான் அல்லவா? மேலும் “சமாதானபிரபு” வகிக்கும் பாகம் வல்லமை மிகுந்ததெனவும் ஏசாயா முன்னறிவித்தான் அல்லவா? ஆம், ஏசாயா 9:6, 7-ல் அவன் பின்வருமாறு சொல்லுகிறான்: “அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதானபிரபு எனப்படும். அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை.” “சமாதானபிரபு”வாக இருப்பதோடுகூட “அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா”வாகவும் இயேசு கிறிஸ்து வகிக்கும் பாகத்தைப் பின்வரும் கட்டுரையில் நாம் ஆலோசிப்போம்.. (w87 4/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ அரசன் ஆகாஸின் நாட்களில் என்ன கூட்டுச் சதி தோன்றியது?
◻ ஏசாயா 7:14-லுள்ள அடையாளத்தின் சிறிய அளவான நிறைவேற்றம் எது?
◻ அந்த அடையாளத்தின் முடிவான நிறைவேற்றம் எது?
◻ “சமாதானபிரபு”வின் பிறப்பு ஏன் பூமியில் மிக மதிப்புவாய்ந்த பிள்ளை பிறப்பு?
[கேள்விகள்]
1. யாரின்கீழ் உலகளாவிய பாதுகாப்பு நிச்சயமான நிகழ்ச்சியாகும், நமக்கு இது எப்படித் தெரியும்?
2. (எ) ஏசாயா 9:6, 7-லுள்ள தீர்க்கதரிசனம் எந்தச் சூழ்நிலைமைகளின்கீழ் கொடுக்கப்பட்டது? (பி) தாவீதின் வம்ச பரம்பரையில் நித்திய ராஜ்யம் இருக்குமென யெகோவா தாவீதுடன் செய்த உடன்படிக்கையை அவர் தவறாமல் நிறைவேற்றுவாரென்று நாம் எப்படி அறிகிறோம்?
3. (எ) தாவீதுடன் செய்த உடன்படிக்கை யாரிடம் நிறைவேற்றத்தைக் கண்டடைகிறது? இந்த உடன்படிக்கை எவ்வாறு தனித்தன்மை வாய்ந்தது? (பி) இந்த ராஜ்ய உடன்படிக்கையைக் குறித்து பிசாசு எதைத் தன் இலக்காக்கினான்?
4. தாவீதுடன் செய்த யெகோவாவின் ராஜ்ய உடன்படிக்கை நடப்பில் இயங்கிக்கொண்டிருப்பதை நிறுத்திப்போடுவதற்குப் பிசாசானவன் தன் முயற்சிகளை எப்படிச் செயல்படுத்தினான்?
5, 6. தாவீதின் வம்சத்துக்கு எதிரான இந்தக் கூட்டுச் சதிக்கு அரசன் ஆகாஸ் எவ்வாறு பிரதிபலித்தான்? ஊக்கமூட்டும் என்ன செய்தியை யெகோவா அவனுக்குக் கொடுத்தார்?
7. (எ) ஏசாயா 7:14-ல் உள்ள கவனிக்கத்தக்கத் தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு எது வழிநடத்தினது? (பி) இம்மானுவேலின் பிறப்பு எதற்கு நம்பத்தக்க அடையாளமாக இருந்தது? ஏசாயாவின் குமாரர்கள் என்னவாகச் சேவிக்க வேண்டும்?
8. (எ) அந்தப் பையன் இம்மானுவேலைப் பற்றி ஏசாயா 7:15, 16-ல் உள்ள தீர்க்கதரிசனத்தில் என்ன கூறியிருக்கிறது? அதன் பலன் என்ன? (பி) ஏசாயாவின் நாட்களிலிருந்து இம்மானுவேல் யாரென நிச்சயமில்லாமலே இருப்பதன் காரணம் என்னவாக இருக்கலாம்?
9. (எ) அந்த அடையாளம் நிறைவேறினதும் ராஜ்ய உடன்படிக்கைக்கு எதிராகச் செய்தக் கூட்டுச் சதி கவிழ்க்கப்பட்டதும் எதற்கு உறுதியளித்தது? (பி) ஒருக்காலமும் இராத மிகப் பெரிய உலகக் கூட்டுச் சதி எது?
10. (எ) ஏசாயா 7:14-ன் முடிவான நிறைவேற்றத்தில் அடையாளமாகவும் ராஜ்ய உடன்படிக்கையின் வாரிசாகவும் பிள்ளையைப் பிறப்பித்தவள் யார்? (பி) சரித்திராசிரியன் மத்தேயு எப்படி இம்மானுவேலின் அடையாளத்தைத் தாவீதின் வம்சத்தோடு இணைக்கிறான்?
11. முன்னறிவித்த இம்மானுவேலின் பிறப்பு எப்பொழுது, எங்கே நடந்தது?
12, 13. “சமாதானபிரபு”வின் பிறப்பு யாருக்கு மிகுந்த கனத்தைக் கொண்டுவந்தது? என்ன மகிமையும் மேன்மை பகட்டொளியும் வாய்ந்த அதிசயமான அம்சங்கள் இந்தப் பிறப்பின்போது நடந்தன?
14, 15. (எ) என்ன சம்பவங்கள் நடந்ததைக் குறித்து கடவுளின் பரலோகக் குமாரர்கள் யெகோவாவைத் துதித்தனர்? (பி) மனித சரித்திரம் முழுவதிலும் வேறு எந்தப் பிள்ளை பிறப்பும் ஏன் இதற்கு ஒத்திருக்க முடியாது?
16. ஏசாயா 9-ம் அதிகாரத்தின் மேலுமான நிறைவேற்றம் எப்பொழுது, எங்கே நிறைவேறினது?
17. செபுலோனிலும் நப்தலியிலுமிருந்த ஜனங்கள்மேல் இயேசு ஏன் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்ய முடிந்தது? இருளில் உட்கார்த்திருந்தவர்களுக்கு அந்த வெளிச்சம் எதைக் குறித்திருக்கும்?
18. (எ) இந்தப் “பெரிய வெளிச்சம்” கலிலேயாவின் ஜனங்களுக்கு மாத்திரமேயென ஏன் வரையறுக்கப்படவில்லை? (பி) அடுத்தக் கட்டுரையில் என்ன ஆலோசிக்கப்படும்?